சிலர் தங்கள் மதத்தை ஏன் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்
ஒருவர் தன்னுடைய மதத்தை மாற்றிக் கொள்வது போன்ற ஒரு தீவிரமான நடவடிக்கையை எடுப்பதற்கு, அவருக்கு நிச்சயமாகவே நல்ல காரணங்கள் இருக்க வேண்டும். நஷ்டங்கள் ஏதேனும் இருப்பின், நன்மைகள் அதைவிட மதிப்பில் உயர்ந்தவையாக இருக்க வேண்டும்.
உங்கள் சிருஷ்டிகரை அறிந்து கொண்டு அவரோடு ஓர் உறவை வளர்த்துக் கொள்வதை ஒரு நல்ல காரணமாக நீங்கள் கருதுவீர்களா? அநேகருக்கு இது அவ்விதமாக இருந்திருக்கிறது. எவரோ ஒருவருடன் ஓர் உறவை வளர்த்துக் கொள்வதற்கு அந்த நபரை நாம் நன்றாக அறிந்து கொள்வது அவசியமாகும். உதாரணமாக ஒரு சிறு பிள்ளை ஓர் அந்நியரை தெரிந்து கொள்ளும் வரையாக, அவரின் கைகளைப் பிடிக்க பயப்படக்கூடும். அதேவிதமாகவே நாமும்கூட கடவுளை நம்ப ஆரம்பிப்பதற்கு முன்பாக நாம் அவரை தெரிந்து கொள்வது அவசியமாகும். உண்மைதான், பெரும்பாலான மதங்கள், கடவுளாக வழிபடுவதற்கு ஒரு மைய உருவத்தைக் கொண்டிருக்கின்றன. ஆனால் பெரும்பாலான ஆட்களுக்குக் கடவுள் தெளிவாக வரையறை செய்யப்படாத ஆளுமையைக் கொண்ட ஒரு நிச்சயமில்லாத தொலை தூரத்திலுள்ளவராக இருப்பதும்கூட உண்மையல்லவா? ஆகவே நாம் அவரை எப்படி அறிந்து கொள்ள முடியும்?
நம்மைச் சுற்றியுள்ள பொருட்களை நாம் பார்க்கையில் பக்திப்பூர்வமான ஒரு பயம் நமக்கு ஏற்படுகிறது. நாம் அழகையும் புத்திக்கூர்மையையும், சக்தியையும் காண்கிறோம். இவை அனைத்தின் தொடக்கமும் அநேகரை திகைப்படையச் செய்வதாக உள்ளது. ஆனால் இதைத் தெளிவாக விளக்கும் புத்தகம் ஒன்று இருக்கிறது. இதுவே பைபிளாகும். இந்த அதிசயப் பொருட்கள் அனைத்தும் ஒரு பெயரையும் ஓர் ஆளுமையையும் கொண்ட ஒரு சிருஷ்டிகரால் உண்டாக்கப்பட்டது என்பதை அதன் பக்கங்களின் மூலமாக நாம் கற்றறிகிறோம். நாம் கவனமாக பைபிளைப் படிக்கையில், கடவுளுடைய ஆளுமை நமக்கு வெகு தெளிவாக தெரிய வருகிறது. நாம் அவரை அன்பும் அக்கறையுமுடைய ஒரு கடவுளாக காண்கிறோம். “தேவன் அன்பாகவே இருக்கிறார்” என்று பைபிள் சொல்கிறது. (1 யோவான் 4:8) அன்பிலும், ஞானத்திலும் நீதியிலும் வல்லமையிலும் முழுமையாக சமநிலையுள்ளவராக இருக்கும் மகத்துவமான அவருடைய ஆளுமையினிடமாக நாம் கவர்ந்திழுக்கப்படுகிறோம். நெருங்கிய ஓர் உறவு அதைப் பின்தொடருகிறது.
மீசே, யெகோவாவிடமாக இப்படிப்பட்ட கவர்ந்திழுக்கப்படும் ஓர் அனுபவத்தைக் கொண்டிருந்தாள். அவள் விளக்கினாள்: “சிறுமியாக இருந்தபோது, அநேக கடவுட்கள் இருப்பதாக எனக்குக் கற்பிக்கப்பட்டது. தண்ணீருக்கு ஒரு கடவுள், விருட்சங்களுக்கு ஒரு கடவுள், வீட்டுக்கு ஒரு கடவுள். அவைகளை நான் சந்தேகித்தப் போதிலும், ஒரே ஒரு மெய்க் கடவுள் இருக்க வேண்டும் என்று நான் நம்பினேன். புத்த-ஷின்டோ வணக்கத்தில் நான் கண்டிப்புடன் வளர்க்கப்பட்டது, கடவுளை, தவறான செயல்களுக்குத் தண்டனை விதித்த பயங்கரமான ஒருவராக நினைக்கும்படி என்னைச் செய்தது. சர்ச்சுக்குச் சென்று கிறிஸ்தவக் கடவுளைப் பற்றி கற்றறிய எனக்கு ஆசையிருந்த போதிலும், என்னுடைய புத்த மத பின்னணி என்னை தயங்கச் செய்தது. பின்னர், ஒரு பெண் என் வீட்டுக்கு வந்து என்னோடு பைபிளைப் படிக்க முன்வந்தாள். அந்த படிப்பின் மூலமாக, கடவுளுக்கு யெகோவா என்ற பெயர் இருப்பதை நான் கற்றுக் கொண்டேன். அவர் பயங்கரமான கடவுள் அல்ல, ஆனால் அன்புள்ளவர், தண்டிப்பதற்கு அல்ல ஆனால் உதவி செய்வதற்காக எப்பொழுதும் அவர் நம்மைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார் என்பதை தெரிந்து கொள்வதில் கிளர்ச்சியடைந்தேன். அந்தக் கடவுளை நான் சேவிக்க விரும்பினேன். ஆகவே நான் என் மதத்தை மாற்றிக் கொண்டேன்.” அவள் சுமார் 30 ஆண்டுகளாக கடவுளோடு மனநிறைவையளிக்கும் ஓர் உறவை அனுபவித்து களித்து வருகிறாள்.
விடுதலையையும் நம்பிக்கையையும் தரும் உறவு
கடவுளோடு ஓர் உறவை வளர்த்துக் கொள்வதன் மூலம், அநேகர் மறைமுகமான ஒரு நன்மையையும் பெற்றுக் கொண்டிருக்கின்றனர். மற்ற உறவுகள் அவர்களுடைய வாழ்க்கையில் குறைவான முக்கியத்துவத்தைப் பெற ஆரம்பிக்க, அடிமைப்படுத்தும் மனுஷனைப் பற்றிய பயத்திலிருந்தும், மெய்யான அர்த்தமும் மதிப்புமில்லாத சுமையான பழக்க வழக்கங்களிலிருந்தும் அநேகர் விடுதலையைப் பெற்றுக் கொண்டிருக்கின்றனர். ஆகவே அநேக குடும்பங்களை, வெளிப் பகட்டையும் பாரம்பரியங்களையும் காத்து வருவதற்காக எப்போதும் கடனில் நிலைத்திருக்கச் செய்யும் பாரமான செலவுகளிலிருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். “மனுஷனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும்” என்பதாக பைபிள் எச்சரித்து, கூடுதலாக அது, “யெகோவாவை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான்” என்பதாக உறுதியளிக்கிறது.—நீதிமொழிகள் 29:25.
பெற்றுக் கொள்ளப்படும் மற்றொரு விடுதலை, மரண பயத்திலிருந்து விடுவிக்கப்படுவதாகும். மேலே குறிப்பிடப்பட்ட மீசே சொல்கிறாள்: “எனக்கு 22 வயதாக இருந்தபோது எனக்கு விஷ ஜுரம் வந்தது. அரைகுறையான உணர்வோடு நான் படுத்துக் கொண்டிருக்கையில், நண்பர்களும் குடும்பத்தினரும் நான் மரிக்கப்போவதை எதிர்பார்த்து பேசிக் கொண்டிருந்தது என் காதுகளில் விழுந்தது. ஆனால் எனக்கு மரண பயமிருந்தது. என்னுடைய ஒரே எண்ணமானது நான் வாழ வேண்டும் என்பதாக இருந்தது. அதிர்ஷ்டவசமாக நான் உடல் நலம் தேறினேன். பின்னால், என்னுடைய பைபிள் படிப்பின் மூலமாக மரண பயத்திலிருந்து நான் விடுவிக்கப்பட்டேன். மரணம் என்பது வெறுமென உயிரற்ற நிலை என்பதை கற்றுக் கொண்டேன்.” பைபிள் சொல்வதாவது: “மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்.” (பிரசங்கி 9:5, 10) எவராவது மரிப்பாரேயானால், உயிர்த்தெழுப்பப்படும் அற்புதமான நம்பிக்கை அவருக்கு இருக்கிறது. ஏனென்றால் கடவுள் மரித்தோரை தம்முடைய நினைவில் உயிரோடே வைத்திருக்கிறார்.—யோவான் 5:28, 29.
பைபிளைப் படிக்கும் மற்ற அநேகர், அவர்கள் கற்றுக் கொண்டக் காரியங்கள், அவர்களுடைய வாழ்க்கைக்கு உண்மையான அர்த்தத்தையும் நம்பிக்கையையும் கொடுத்திருப்பதை அதேவிதமாகவே கண்டிருக்கிறார்கள். பைபிள் எழுதப்பட்டதற்கு ஒரு காரணம் “நாம் நம்பிக்கையுள்ளவர்களாகும்படி”யாகும். (ரோமர் 15:4) புத்த மதம் ஒரு சிருஷ்டிகரை அல்லது கடவுளைப் பற்றி எதுவும் கற்பிப்பதில்லை. தீமையும் வேதனையும் எப்போதும் இருந்து வந்திருக்கிறது என்றும் முடிவில்லாத மறுபிறப்பு சூழற்சிகளின் மூலமாக அவை என்றுமாக தொடர்ந்திருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. பெரும்பாலான மேற்கத்திய மதங்கள் நல்லவர்கள் தெளிவில்லாத ஓர் இடமாகிய பரலோகத்துக்குப் போவார்கள் என கற்பிக்கின்றன. ஆனால் அவர்கள் அங்கு என்ன செய்வார்கள் என்பதைப் பற்றியதில் அவர்கள் அவ்வளவு நிச்சயமாக இல்லை. வாழ்க்கைக்கு நம்பிக்கையை அல்லது அர்த்தத்தை கொடுக்காத இந்தச் சமய சித்தாந்தங்களுக்கு நேர் எதிர்மாறாக, மனிதன் பூமியின் பொறுப்பாளனாக, அதில் என்றுமாக வாழ்க்கையை அனுபவித்துக் களிப்பதற்காகவே உண்டாக்கப்பட்டான் என்பதாக பைபிள் கற்பிக்கிறது. (ஆதியாகமம் 2:15–17; ஏசாயா 45:18) ஆகவே உடைமைகளை சேகரித்துக் கொள்வதிலும் சுய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதிலுமே வாழ்நாளைக் கழித்துவிடாமல் கடவுளையும் மற்றவர்களையும் சுயநலமில்லாது சேவிப்பதில் அதைச் செலவிட வேண்டும் என்பதை நாம் காணமுடிகிறது.—பிரசங்கி 12:13; மத்தேயு 22:37–39.
சத்தியத்தையும் உண்மையான நண்பர்களையும் சம்பாதித்தல்
சிலர் மற்ற காரணங்களுக்காக தங்கள் மதத்தை மாற்றிக் கொள்ள வற்புறுத்தப்படுகிறார்கள். அவைகளில் மத சம்பந்தமான சத்தியத்தை தேடுவதற்கு ஓர் ஆசை இடம் பெறுகிறது. நிச்சயமாகவே முழுமையான சத்தியம் என்பதாக எதுவும் கிடையாது என்பதாக அநேக ஆட்கள் நினைத்து, பைபிள் சொல்கிறபடியே அவர்கள் ‘தேடாதிருக்கிறார்கள்.’—சங்கீதம் 10:4.
ஆனால் இப்படியாக தேடுகிறவர்களும் இருக்கிறார்கள். மத்திய ஜப்பானில் வாழ்ந்து வரும் சாக்கி சத்தியத்தைத் தேடி 25 ஆண்டு காலம் புத்த மதத்தில் ஒரு பிரிவிலிருந்து மற்றொன்றுக்குமாக போய்க் கொண்டிருந்தாள். அவளுக்கு ஒருபோதும் திருப்தி ஏற்படவில்லை. ஒவ்வொரு அமைப்பிலும் பொறுப்புள்ள ஸ்தானங்களுக்கு அவள் உயர்த்தப்பட்ட போது, அங்கு கண்ட வியாபார மனப்பான்மையினாலும், ஒழுக்கயீனத்தினாலும் தன்னல தேட்டத்தினாலும் இடறலடைந்தாள். புத்தர் வாழ்ந்து வந்த மற்றும் கற்பித்துவந்த வரலாறு புகழ்ப் பெற்ற இடங்களுக்குச் சென்று புத்த மதத்தின் ஆரம்பத்தை ஆராய அவள் இந்தியாவுக்கும்கூட பயணப்பட்டு வந்தாள். அந்த இந்து தேசத்தில் புத்த மதத்தில் சிறிதளவே அக்கறை இருப்பதுக் கண்டு வெகுவாக ஏமாற்றமடைந்தாள். பின்னர், யெகோவாவின் சாட்சிகளோடு கொண்டிருந்த உரையாடல்களில், அனைத்து மதங்களும் கடவுளிடமிருந்து வரவில்லை என்பதும் ஆனால் அவருடைய சத்துருவாகிய பிசாசாகிய சாத்தானிடமிருந்து வந்திருப்பதும் அவளுக்குச் சொல்லப்பட்டது.—1 கொரிந்தியர் 10:20.
இது சாக்கிக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் இது அவளை சிந்திக்கவும் இதைக் குறித்து ஆராயவும் செய்தது. மனிதவர்க்கத்துக்கு மதம் என்ன செய்திருக்கிறது (What Has Religion Done for Mankind?)a என்ற புத்தகத்தையும் மற்ற பைபிள் பிரசுரங்களையும் அவள் வாசித்தாள். ஜப்பானில் அப்பியாசிக்கப்படுகிறபடி, புத்த மதத்தில் ஆண்டுகளினூடே பல மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதையும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பைபிள் மாறாமலே இருந்திருப்பதையும் அவள் காண ஆரம்பித்தாள். கடைசியாக அவளுடைய ஆராய்ச்சிக்குப் பலன் கிடைத்தது. அவள் தேடிக் கொண்டிருந்த சத்தியத்தைக் கண்டுபிடித்துவிட்டாள். அவளுடைய சந்தோஷம், இயேசுவின் உவமையில் நிலத்தில் புதைத்திருக்கிற பொக்கிஷத்தைக் கண்டுபிடித்த மனுஷனுடையதற்கு ஒப்பாக இருந்தது: “அதைப் பற்றிய சந்தோஷத்தினாலே போய், தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று அந்த நிலத்தைக் கொள்ளுகிறான்.”—மத்தேயு 13:44.
மத சம்பந்தமான சத்தியத்தைக் கண்டுபிடித்திருப்பவர்கள் அதைத் தேடிக் கொண்டிருப்பவர்களிடமாக “இரக்கத்தைக்” காண்பிக்கிறார்கள். (1 பேதுரு 3:8) உண்மையில் அவர்களுடைய ஆர்வமும் உண்மையான அன்பும் ஆரம்பத்தில் அநேகரை பைபிளைப் படிக்கும்படியாக கவர்ந்திழுக்கிறது. “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால் அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்து கொள்வார்கள்” என்று இயேசு சொன்னார். (யோவான் 13:35) இப்படிப்பட்ட அன்பான சூழ்நிலைமையை இன்று எங்கே காணமுடியும்? டோக்கியோவின் தினசரி யோமியுரியில் (Daily Yomiuri) தன்னுடைய பத்தியில் எழுதுகையில் கோகிக்கோ நகோயா யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டத்துக்குச் சென்றிருந்த போது அவர் அன்பாக நடத்தப்பட்ட விதத்தைக் குறித்து குறிப்பிடுகிறார். “அவர்கள் புன்னகைத்தவிதம், ஏற்கெனவே ஒரு கூட்டத்தில் என்னை சந்தித்ததால் அடையாளங் கண்டு கொண்டு இப்பொழுது மறுபடியுமாக என்னைப் பார்ப்பதில் மகிழ்ச்சியை தெரிவிப்பது போல இருந்தது.” ஆனால் இது இவ்விதமாக இல்லை. “நான் அவர்களுடைய முகங்களை உற்றுப் பார்த்து, அவர்கள் முற்றிலும் அந்நியர்கள் என்பதை கண்டு கொண்டேன்.” இன்னும் மற்ற இரண்டு பேரும்கூட புன்னகைத்தப் போது “எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது” என்று நகோயா அதை நினைவுப்படுத்திச் சொல்கிறார். “அவர்களுடைய எந்த ஒரு கூட்டத்திலும் அந்நியர்களை அவர்கள் கண்டுபிடிக்கையில் அந்த ஜனங்கள் அப்படித்தான் புன்னகைச் செய்வார்கள்.”
ஒழுங்கான ரீதியில் உள்ளூரில் கூடிவருவதன் காரணமாக, ஒருவரையொருவர் அறிந்து கொள்வதிலிருந்து உள்ளக்கனிவும் அன்பும் ஏற்படுவதில்லை. மாறாக, பைபிளை ஒழுங்காக படிப்பதாலும் அதனுடைய நியமங்களை தங்களின் வாழ்க்கையில் பொருத்திப் பிரயோகிப்பதாலுமே இது ஏற்படுகிறது. அயல் நாடுகளில் யெகோவாவின் சாட்சிகளுடைய 1985–1986 “உத்தமத்தைக் காத்துக் கொள்பவர்கள்” மாவட்ட மாநாட்டுக்கு அழைக்கப்பட்டிருந்த அநேகர், அங்கிருந்த சாட்சிகள் அவர்களுக்குக் காண்பித்த அன்பினாலும் உபசரிப்பினாலும் வெகுவாக கவரப்பட்டார்கள். பிலிப்பைன்ஸில் நடைபெற்ற மாநாட்டுக்கு ஜப்பானிலிருந்து சென்றிருந்த ஓர் இளம் தம்பதி சொன்னார்கள்: “கடைசி பாட்டுக்காக நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அவரவர் தங்களின் சொந்த மொழியில் பாடிய போது நாங்கள் அனைவரும் வெகுவாக கிளர்ச்சியடைந்து விட்டோம். உண்மையில் சர்வ தேசீய சகோதரத்துவத்தின் பாகமாயிருப்பது எதை அர்த்தப்படுத்துகிறது என்பதை நாங்கள் முதல்முறையாக உணர்ந்தோம்.”
கடைசியாக, பைபிளைப் படித்து அதைப் பின்பற்றியதன் விளைவாக தங்கள் வாழ்க்கையில் செய்திருக்கும் பெரும் மாற்றங்களைப் பற்றி அநேகர் உங்களுக்குச் சொல்லக்கூடும். ஓநாய்களிலிருந்து ஆடுகள் எத்தனை வித்தியாசப்படுகிறதோ அவ்விதமாகவே வித்தியாசமான ஆளுமைகளை முற்காலத்தில் கொண்டிருந்தவர்கள் இப்பொழுது கிறிஸ்தவ மாநாட்டில் ஒருவரோடொருவர் சமாதானத்தோடே அனுசரித்து வாழ்கிறார்கள். (ஏசாயா 11:6) சிலர் மனம் போன போக்கில் செல்பவர்களாக, நட்புணர்வற்றவர்களாக, முற்கோபிகளாக, பயங்கரமானவர்களாகவும்கூட இருந்திருக்கிறார்கள். மற்றவர்களுக்கு மனத்தளர்ச்சிப் பிரச்னை இருந்திருக்கிறது. இன்னும் மற்றவர்கள் உள்நோக்கு சிந்தனையுள்ளவர்களாகவும் தன்னலம் கருதுகிறவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். அநேகருக்கு மேற்கொள்ள வேண்டிய கெட்ட பழக்க வழக்கங்கள் இருந்திருக்கின்றன. ஆனால் ஊக்கமான முயற்சியும் கடவுளைப் பிரியப்படுத்த வேண்டும் என்ற ஆவலும் இணைந்ததால் அவர்களால் தீவிரமான மாற்றங்களைச் செய்ய முடிந்திருக்கிறது.
உங்களைப் பற்றி என்ன? மாற்றங்களைச் செய்வதற்கு மேல் கூறப்பட்ட காரணங்களில் ஏதாவது ஒன்று உங்களைக் கவர்ந்திழுக்கிறதா? அப்படியென்றால் பைபிளை ஊக்கமாகப் படிக்கும்படியாக நாங்கள் உங்களை உற்சாகப்படுத்துகிறோம். பொய் மதங்கள் அனைத்துமே பைபிளின் கடவுளோடு மோதும் திசையிலிருக்கின்றன. முந்தையக் கட்டுரையில் குறிப்பிடப்பட்ட விமானியைப் போலவே உங்களுடைய உயிரையும் உங்களுக்கு அன்பானவர்களின் உயிர்களையும் பாதுகாத்துக் கொள்ள நீங்கள் தீவிரமான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியிருக்கலாம். “கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும் வழி விசாலமுமாயிருக்கிறது,” மேலும் “அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர், ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும் வழி நெருக்கமுமாயிருக்கிறது” என்பதாக இயேசு சொன்னார். (மத்தேயு 7:13, 14) ஆம் நீங்கள் “விரிவும் விசாலமுமான வழியில்” நடந்து கொண்டிருந்தால், உங்கள் மதத்தை மாற்றிக் கொள்வதற்கு உங்களுக்கு நல்ல காரணமிருக்கிறது! (w88 6⁄1)
[அடிக்குறிப்புகள்]
a உவாட்ச் டவர் பைபிள் அண்டு டிராக்ட் சொஸையிட்டியால் பிரசுரிக்கப்பட்டது.
[பக்கம் 5-ன் படம்]
என்னுடைய கண்டிப்பான புத்த-ஷின்டோ வளர்ப்பு கடவுளை பயங்கரமான ஒருவராக நினைக்கும்படிச் செய்தது
[பக்கம் 7-ன் படம்]
‘ஜீவனுக்குப் போகிற வழி இடுக்கமும் நெருக்கமுமாயிருக்கிறது’