உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w89 12/1 பக். 24-27
  • ஆறாவது உலக வல்லரசு—ரோம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஆறாவது உலக வல்லரசு—ரோம்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1989
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • ரோம படை
  • ரோமாபுரியின் சாலைகளும் பட்டங்களும்
  • பேரரசும் கிறிஸ்தவமும்
  • இராயர்கள்
  • ரோம பேரரசின் வீழ்ச்சி
  • இரு ராஜாக்களின் அடையாளம் மாறுகிறது
    தானியேல் தீர்க்கதரிசனத்திற்கு செவிசாயுங்கள்!
  • கிறிஸ்தவமண்டலம் எப்படி இந்த உலகத்தின் பாகமானது
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
  • இணங்கிவிடும் எந்த எண்ணமும் இல்லை!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
  • பூர்வ கிறிஸ்தவமும் அரசாங்கமும்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1996
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1989
w89 12/1 பக். 24-27

ஆறாவது உலக வல்லரசு—ரோம்

கிறிஸ்தவம் ஆரம்பமான சமயத்தில் ரோமானிய பேரரசு ஆட்சியில் இருந்தது. பண்டையகால ரோமாபுரியைப் பற்றிய கூடுதலான அறிவு, இயேசு பிரசங்கித்தப் போதிருந்த சூழ்நிலைமையையும் ஆரம்ப காலத்தில் அவருடைய சீஷர்கள் அப்போது அறியப்பட்டிருந்த உலகம் முழுவதிலும் கிறிஸ்தவத்தைப் பரப்புகையில் நிலவிய சமுதாய நிலையையும் புரிந்துகொள்ள உங்களுக்கு உதவி செய்யும்.

பைபிள் சரித்திரத்தின் ஆறாவது உலக வல்லரசாகிய ரோம், இயேசு பிறந்த போதும் அவருடைய அப்போஸ்தலர்கள் பிரசங்கித்த போதும் ஆட்சி செலுத்திக் கொண்டிருந்தது. இதற்கு முன்பிருந்த கிரேக்க உலக வல்லரசு கொய்னி அல்லது பொது கிரேக்க மொழியை சர்வ தேசீய மொழியாக ஆக்கிட, உலகின் அந்தப் பகுதி முழுவதிலும் கிறிஸ்தவ போதனை இம்மொழியில் கொண்டுச் செல்லப்பட்டது. இப்போது ரோமாபுரி, கிறிஸ்தவ சத்தியம் வேகமாக பரவுவதற்கு உதவியாயிருந்த நிலைமைகளையும் சாலைகளையும் அளித்தது.

இத்தாலியிலுள்ள லேட்டியமில் ஒரு சிறிய நகரமாக இருந்த ரோம், பூர்வ பைபிள் சரித்திரத்தின் மிகப் பெரிய உலக வல்லரசை நடத்திச் செல்லும் அளவுக்கு வளர்ந்தது. முதலாவதாக, அது இத்தாலிய தீபகற்பத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர விரிவடைந்தது. அது ஆப்பிரிக்காவின் வட கரையோரமிருந்த வலிமை வாய்ந்த கார்த்தேஜைக் கைப்பற்றியது. ஸ்பெய்னும் மக்கெதோனியாவும் கிரேக்க நாடும் அதன் கீழ் வந்தன. பின்னர் அது பொ.ச.மு. 63-ல் எருசலேமைக் கைப்பற்றி, பொ.ச.மு. 30-ல் எகிப்தை ரோம மாகாணமாக்கியது. இதன் புகழ் உச்சியில் வலிமை மிகுந்த இந்தப் பேரரசு பிரிட்டனிலிருந்து எகிப்து வரையாகவும், போர்ச்சுகலிலிருந்து பூர்வ பாபிலோன் தேசமாகிய மெசபொத்தோமியா வரையாகவும் பரந்து கிடந்தது. அது முழுவதுமாக மத்திய தரைக் கடலை சூழ்ந்துகொண்டு அதை மேர் நாஸ்ட்ரம் (நமது சமுத்திரம்) என்றழைத்தது.

வெகு தூரம் பரந்து கிடந்த ரோம பேரரசின் ஆட்சி எல்லை முழுவதிலுமாக அநேக இடிபாடுகளை இன்னும் காணமுடிகிறது. பிரிட்டனில் ஹேட்ரியனின் மதிலையும், ஸ்பெய்னிலுள்ள செகோவியாவில் மகத்தான கால்வாய் பாலத்தையும், ஆரஞ்சில் ரோம அரங்கத்தையும் ஆர்லெஸில் (தென் பிரான்ஸில் இரண்டையும்) வட்டரங்கத்தையும் நீங்கள் காணமுடியும். நீங்கள் ரோமுக்கு அருகேயுள்ள ஆஸ்டியா அன்டிக்காவின் அமைதியான இடிபாடுகளின் வழியாக நடந்து சென்று நேப்பில்ஸுக்கு தெற்கேயுள்ள பண்டைய பாம்பி நகரத்தைப் பார்த்து வியந்து நிற்கலாம். ரோம் நகரின் பெரிய கேளிக்கைக் கூடத்தில் கிளர்ச்சியடைந்து நின்ற கூட்டத்தைக் கற்பனைச் செய்து 35 ஆண்டுகளுக்கும் முன்னதாகவே இயேசு முன்னறிவித்தபடியே பொ.ச. 70-ல் எருசலேமும் அதன் ஆலயமும் அழிக்கப்பட்டதை நினைவுபடுத்தும் தீத்துவின் வளையத்தைக் காணலாம்.

பண்டைய ரோமாபுரியில் செல்வந்தர்கள் பெரிய குடும்பங்களையும், சில சமயங்களில் நூற்றுக்கணக்கில் வேலைக்காரர்களையும் அடிமைகளையும் உடையவர்களாக இருந்தனர். ஏழ்மையிலிருந்தவர்கள் அழுக்கான கோணலான தெருக்களிலிருந்த பல மாடி குடித்தன அறைகளில் நெருக்கப்பட்டிருந்தனர். வெகு சிலரையே நடுத்தர வகுப்பினர் என்று அழைக்க முடிந்தது. ஏழ்மையிலிருந்தவர்கள் ஆர்ப்பாட்டம் செய்வதைத் தடை செய்வதற்காக அரசு அவர்களுக்குத் தானிய உதவி தொகையையும் இலவச பொழுதுபோக்கையும் அளித்து வந்தது. மாகாணங்களுக்கு விதிக்கப்பட்ட வரிகள் இந்தச் செலவுகளுக்குப் பயன்படுத்தப்பட்டன.

ரோம படை

பிரசித்திப் பெற்ற ரோம படை பல பிரிவுகளைக் கொண்டதாக இருந்தது. ஒவ்வொரு பிரிவிலும் 4,500 முதல் 7,000 மனிதர்களைக் கொண்டிருந்த இது, தன்னில்தானே ஒரு முழு படையாக இருந்தது. அதன் படைத்தலைவன் பேரரசனுக்கு மாத்திரமே பதில் சொல்ல கடமைப்பட்டவனாக இருந்தான். ஒரு படைப்பிரிவு பொதுவாக நூறு ரோம வீரர்கள் கொண்ட வகுப்பாக பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு வகுப்பும் ஒரு நூற்றுக்கதிபதியின் கீழ் அல்லது புதிய உலக மொழிபெயர்ப்பு அழைக்கின்றபடி, ஒரு “படை அலுவலர்” தலைமையின் கீழ் இருந்தது. இயேசுவை மரணத்துக்குட்படுத்திய நான்கு போர்ச்சேவகர்களின் அதிகாரியான ஒரு நூற்றுக்கதிபதியே அவருடைய மரணத்தின்போது இருந்த சூழ்நிலைமைகளையும் அற்புதமான நிகழ்ச்சிகளையும் பார்த்து, “மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன்” என்றான். (மத்தேயு 27:54; யோவான் 19:23) கிறிஸ்தவனாக மாறிய முதல் விருத்தசேதனம் பண்ணப்படாத புறமதஸ்தனும் கொர்நேலியு என்ற ஒரு நூற்றுக்கதிபதியே.—அப்போஸ்தலர் 10:22.

படைவகுப்பு போர்க் கொடிகளை, மரத்தினாலோ அல்லது உலோகத்தினாலோ செய்யப்பட்ட உருவங்களை அல்லது அடையாளங்களைக் கொண்டிருந்தன. நவீன கொடிகள் சேவிப்பது போன்ற அதே நோக்கத்தையே அவை சேவித்தன. அவை மனித உயிரைவிட மதிப்பு வாய்ந்தவையாகக் கருதப்பட்டன. என்சைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா சொல்வதாவது: “ரோம போர்க் கொடிகள், ரோமிலிருந்த ஆலயங்களில் மத சம்பந்தமான ஒரு பயபக்தியோடு காவல் செய்யப்பட்டன. போர்ச் சேவகர்களின் கடுமையான தாக்குதலுக்கு ஆர்வதைக் கூட்டுவதற்காக எதிரியின் அணிவரிசையில் போர்க் கொடியை வீசி எறியப்பட உத்தரவிட்டு, ஒருவேளை அவர்களுக்குப் பூமி உடைமையாக பெற்றிருந்ததில் மிகவும் பரிசுத்தமானதாக தங்களுக்கு இருந்த அந்தப் போர்க் கொடியை மீட்டுக் கொள்வதற்கு அவர்களைத் தூண்டிவிடுவது, ஒரு படைத்தலைவனுக்கு அசாதாரணமான காரியமாக இருக்கவில்லை.”

ரோமாபுரியின் சாலைகளும் பட்டங்களும்

ரோம் தனக்குக் கீழிருந்த தேசங்களை ஒன்று சேர்த்து உலக வல்லரசாக மாறியது. இந்தப் பேரரசின் எல்லாப் பகுதிகளுக்குள்ளும் செல்வதற்காக அது சாலைகளை அமைத்தது. மக்கள் பிரயாணம் செய்தார்கள்! பொ.ச. 33-ல் பெந்தெகொஸ்தே பண்டிகைக்காக எருசலேமுக்கு வந்திருந்த மக்கள் எங்கிருந்தெல்லாம் வந்திருந்தார்கள் என்ற பட்டியலைப் பாருங்கள்! அவர்கள் தூரத்தில் வடகிழக்கிலிருந்த மேதியாவிலிருந்தும், தூரத்தில் மேற்கே ரோமிலிருந்தும் வட ஆப்பிரிக்காவிலிருந்தும் இவற்றிற்கு இடையே இருந்த பல இடங்களிலிருந்தும் வந்திருந்தனர்.—அப்போஸ்தலர் 2:9–11.

ரோம கட்டட கலைஞர்களால் அமைக்கப்பட்ட சாலைகள் பல இன்றும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ரோமுக்குத் தெற்கே, ரோமுக்குள் செல்ல அப்போஸ்தலனாகிய பவுல் பயன்படுத்திய பண்டைய அப்பியுபுரம் ஓரமாக நீங்கள் பயணம் செய்யலாம். (அப்போஸ்தலர் 28:15, 16) ரோமாபுரி சாலைகள் “ரயில் பாதை கண்டுபிடிக்கப்படும் வரையாக நிலத்தில் பயணம் செய்வதற்கு எதையும் விஞ்சிவிடும் வசதிகளைக் கொண்டவையாக இருந்தன” என்பதாக சொல்லப்பட்டிருக்கிறது.—பைபிளுக்கு வெஸ்ட் மினிஸ்டரின் சரித்திர நிலப்படம்.

தொலைதூரம் பரவிக் கிடந்த பேரரசை நிர்வாகம் செய்வதில் ரோமர்கள் உள்ளூர் பழக்க வழக்கங்களை அநேகமாகக் கடைப்பிடித்தனர். இதன் காரணமாகவே பல்வேறு இடங்களிலுமிருந்த அதிகாரிகள் பல்வேறு பெயர்களாலும் பட்டங்களாலும் அறியப்பட்டிருந்தார்கள். நவீன கண்டுபிடிப்பும் பைபிளும் என்ற ஆங்கில புத்தகத்தில் “அங்கீகாரம் பெற்ற ரோம சரித்திராசிரியர்களும்கூட இந்த எல்லா இடைநிலை மக்களுக்கும் அவர்களுடைய சரியான வகுப்புப் பெயரை கொடுக்க முயற்சி எடுக்கவில்லை.” ஆனாலும் பைபிள் எழுத்தாளனாகிய லூக்கா இந்த விஷயத்தில் “மிகத் துல்லிபமாக எப்போதும் குறிப்பிடக் கூடியவராக இருந்திருக்கிறார்” என்று A. ரென்டல் ஷார்ட் சொல்லுகிறார். உதாரணமாக, லூக்கா, ஏரோதை “தேசாதிபதி” என்றும் ஏரோது அகிரிப்பாவை ஓர் “அரசன்” என்றும் தெசலோனிய அலுவல்காரர்களை “அதிகாரிகள்” என்றும் சீப்புருவின் ஆளுநரான செர்கியு பவுலை “அதிபதி” என்றும் அழைக்கிறான். (லூக்கா 3:1; அப்போஸ்தலர் 25:13; அப்போஸ்தலர் 17:6; அப்போஸ்தலர் 13:7, புதிய உலக மொழிபெயர்ப்பு குறிப்புரை பைபிளில் அடிக்குறிப்புகளைப் பார்க்கவும்.) இந்தப் பைபிள் எழுத்தாளன் சரியான பட்டப் பெயரை சரியான சமயத்தில் பயன்படுத்தினான் என்பதை உறுதி செய்வது இங்குமங்கும் சில சமயங்களில் கண்டெடுக்கப்படும் நாணயங்களும் கல்வெட்டுப் பொறிப்புகளுமே. இப்படிப்பட்ட கவனமும் திருத்தமானத்தன்மையும் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையையும் காலங்களையும் பற்றிய சரித்திர உண்மைகளை பைபிள் எத்தனை உண்மையாக பதிவு செய்திருக்கிறது என்பதற்கு கூடுதலான அத்தாட்சியாக இருக்கிறது.a

பேரரசும் கிறிஸ்தவமும்

செழித்தோங்கிய கிறிஸ்தவ சபை ஒன்று ரோமிலிருந்தது. இது பொ.ச. 33-ல் பெந்தெகொஸ்தே நாளில் எருசலேமில் கிறிஸ்தவத்தை ஏற்றுக் கொண்டு ரோமுக்குத் திரும்பியவர்களால் ஸ்தாபிக்கப்பட்டிருக்க வேண்டும். (அப்போஸ்தலர் 2:10) பைபிள் புத்தகமாகிய ரோமர், பொ.ச. 56-ம் ஆண்டு போல் இந்தச் சபைக்கு எழுதப்பட்டது. பின்னால், பவுல் ரோமுக்குச் சிறை கைதியாகத் திரும்பினான். அங்கே அவன் இரண்டாண்டுகளாக காவலில் வைக்கப்பட்டிருந்த வீட்டில் தன்னைக் காண வந்தவர்களுக்கு முழுமையாக சாட்சிக் கொடுத்தான். இதன் காரணமாக, அரசனுடைய மெய்க் காவல் படைவீரன் ராஜ்ய செய்தியைக் கற்றான், “இராயனுடைய அரமனையிலுள்ள”வர்களும்கூட கிறிஸ்தவர்களாக மாறினார்கள்.—பிலிப்பியர் 1:12, 13; 4:22.

ரோம பேரரசின் பழக்க வழக்கங்களையும் சட்டங்களையும் விதிமுறைகளையும் பைபிள் பதிவு செய்கிறது. அகுஸ்து ராயனுடைய கட்டளை யோசேப்பையும் மரியாளையும் பெத்லகேமுக்குக் கொண்டுவர, இயேசு இங்கே பிறந்தார். இராயன் கேட்கும் வரியை செலுத்துவது சரியானதே என்பதை இயேசு உறுதி செய்தார். யூத ஆசாரியர்கள் இயேசுவை மரணத்துக்குட்படுத்த இராயனிடம் விசுவாசம் வைத்திருப்பதாக பாசாங்கு செய்தார்கள். ரோம சட்டத்தின் கீழ் கிறிஸ்தவ அப்போஸ்தலனாகிய பவுல் தன்னுடைய வழக்குச் சம்பந்தமாக இராயனுக்கு அபயமிட்டான்.—லூக்கா 2:1–6; 20:22–25; யோவான் 19:12, 15; அப்போஸ்தலர் 25:11, 12.

ரோம போர் சேவகனின் போராயுதம்—அவனுடைய தலைச்சீரா, மார்க்கவசம், கேடயம், பாதரட்சை, பட்டயம்—சத்தியத்தின் மதிப்பு, இரட்சிப்பின் நம்பிக்கை, நீதி, விசுவாசம், நற்செய்தியைப் பிரசங்கித்தல், சாத்தானுடைய தாக்குதல்களுக்கு எதிராக உறுதியாக நிற்பதற்கு நமக்கு உதவிசெய்யும் தற்காப்புக்கான கடவுளுடைய வார்த்தை ஆகியவற்றை விளக்குவதற்குப் பயன்படுத்தப்பட்டது. (எபேசியர் 6:10–18; 1 தெசலோனிக்கேயர் 5:8) தீமோத்தேயுவை “இயேசு கிறிஸ்துவுக்கு நல்ல போர்ச் சேவகனாய்” இருக்கும்படியாக பவுல் சொன்னபோது, நல்ல கட்டுப்பாடுள்ள ஒரு போர்ச்சேவகனின் உதாரணத்தையே அவன் குறிப்பிட்டு பேசினான். (2 தீமோத்தேயு 2:3, 4) என்றபோதிலும் கிறிஸ்தவர்களின் போராட்டம் மாம்சத்துக்குரியதாக இல்லாமல் ஆவிக்குரியதாக இருந்தது. இதன் காரணமாகவே கிறிஸ்தவர்கள் ரோமப் படையில் சேவிக்க மறுத்தனர். கிறிஸ்தவமானது “நம்முடைய போர் ஆயுதங்களை—நம்முடைய பட்டயங்களை மண்வெட்டிகளாகவும் ஈட்டிகளை ஆக்கும் விவசாய கருவிகளாவும் மாற்றிவிட்டது” என்பதாக ஜஸ்டின் மார்டியர் (பொ.ச. 110-165) குறிப்பிட்டார். இராணுவ சேவையை மறுத்ததற்காக அநேக கிறிஸ்தவர்கள் உயிரிழந்தனர்.

இராயர்கள்

ரோமாபுரி இராயர்களின் கீழ் அதன் புகழ் உச்சியை எட்டியது. பைபிள் சரித்திரத்தில் அவர்கள் உட்பட்டிருப்பதன் காரணமாக இவர்களில் சிலரைப் பற்றிய முக்கிய உண்மைகளை விமர்சிப்பது பயனுள்ளதாக இருக்கும்.

பொ.ச.மு. 44-ம் ஆண்டில் ஜுலியஸ் சீசர் கொல்லப்பட்டார். ஆக்டேவியன் கடைசியாக தனி அரசனான். பொ.ச.மு. 30-ல் ஆக்டேவியன் எகிப்தை வென்று அங்கிருந்த கிரேக்க தாலமி மரபு மன்னர்களின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தான். இது 300 ஆண்டுகளுக்கு முன்பாக மகா அலெக்ஸாந்தரின் காலம் முதற்கொண்டு இருந்து வந்த கிரேக்க உலக வல்லரசுக்கு இறுதியான முடிவைக் கொண்டு வந்தது.b

பொ.ச.மு. 27-ம் ஆண்டில் ஆக்டேவியன் பேரரசனானான். அவன் “உயர்ந்தவன், புனிதமானவன்” என்று பொருள்படும் “அகஸ்டஸ்” என்ற பட்டப் பெயரை தனதாக்கிக் கொண்டான். ஒரு மாதத்துக்கு அவன் தன் பெயரை மறுபெயராகச் சூட்டினான். ஜுலியஸ் சீசரின் பெயர் தாங்கிய மாதத்துக்கு இருப்பது போலவே அதே எண்ணிக்கையான நாட்களை தன் பெயர் தாங்கிய மாதமும் கொண்டிருப்பதற்காக பிப்ரவரியிலிருந்து ஒரு நாளைக் கடன் வாங்கினான். இயேசு பிறந்தபோது அரசனாக ஆண்ட அகஸ்டஸ், பொ.ச. 14-ம் ஆண்டு வரையாகவும் ஆட்சி புரிந்தான்.—லூக்கா 2:1.

அகஸ்டஸை தொடர்ந்து வந்த திபேரியு பொ.ச. 14 முதல் 37 வரை ஆட்சி புரிந்தான். திபேரியுவின் 15-ம் ஆண்டில் யோவான் ஸ்நானகன் பிரசங்கிக்க ஆரம்பித்தான். அவனுடைய ஆட்சியின் போதுதானே, இயேசு முழுக்காட்டப்பட்டு, தம்முடைய மூன்றரை ஆண்டு கால பூமிக்குரிய ஊழியத்தைச் செய்து பலியாக தம்முடைய உயிரை அளித்தார். அப்போது அறியப்பட்டிருந்த உலகம் முழுவதிலும் இயேசுவை பின்பற்றியவர்கள் கிறிஸ்தவத்தைப் பரப்பிய போது அவன் இன்னும் ஆண்டுக் கொண்டிருந்தான்.—லூக்கா 3:1–3, 23.

காலிகுலா என்ற செல்லப் பெயரால் அழைக்கப்பட்ட காயு பொ.ச. 37 முதல் 41 வரையாக ஆட்சி செய்தான். இவனை கிலவுதியு (பொ.ச. 41–54) தொடர்ந்து அரசாண்டு அப்போஸ்தலர் 18:1, 2-ல் குறிப்பிடப்பட்டபடியே ரோமிலிருந்து யூதர்களை வெளியேற்றினான். அவன் பின்னால் அவனுடைய மனைவியால் விஷம் வைத்துக் கொல்லப்பட, அவளுடைய இளைய மகன் நீரோ ஆட்சிக்கு வந்தான். பெரிய தீ ஒன்று பொ.ச. 64 ஜுலை மாதம் ரோம் நகரில் வீசியடிக்க, அது நகரின் ஒரு கால் பாகத்தை அழித்துப் போட்டது. தன் மீது ஏற்படக்கூடிய சந்தேகத்தை விலக்க, நீரோ இதற்கு கிறிஸ்தவர்களின் மீது பழியைச் சுமத்தினான். அந்தச் சமயத்தில் அவர்கள் “நாய்களால் கிழிக்கப்பட்டு அழிந்து போனார்கள்.” “பகல் வெளிச்சம் மறைந்த பின்பு, இரவுக்கு ஒளியூட்டுவதற்காக தீயில் எறியப்பட்டு சுட்டெரிக்கப்பட்டார்கள். நீரோ பொதுமக்கள் இக்காட்சியைக் காண தன்னுடைய தோட்டங்களை இதற்காகக் கொடுத்தான்” என்பதாக சரித்திராசிரியர் டாசிட்டஸ் சொல்கிறார். இந்தத் துன்புறுத்தலின் போது, எருசலேமிலிருந்து ரோம் வரையாகவும் ஒருவேளை ஸ்பெய்னிலும் கூட பிரசங்கித்து வந்திருந்த பவுல் இரண்டாவது முறை கைது செய்யப்பட்டான். அவன் சுமார் பொ.ச. 66-ல் நீரோவால் கொல்லப்பட்டிருக்க வேண்டும்.

நாம் அக்கறையுள்ளவர்களாயிருக்கும் மற்ற பேரரசர்களில் வெஸ்பாசியனும் (பொ.ச. 69–79) டைட்டசும் (பொ.ச. 79–81) டைட்டசின் சகோதரன் டாமிட்டியனும் (பொ.ச. 81–96) அடங்குவர். வெஸ்பாசியனின் ஆட்சியில் டைட்டசின் தலைமையில் எருசலேம் அழிக்கப்பட்டது. இவர்கள் கிறிஸ்தவர்களை அதிகாரப்பூர்வமாக துன்புறுத்துவதை மீண்டும் தொடர்ந்தனர். பாரம்பரியத்தின்படி இந்தத் துன்புறுத்தலின் போது தானே வயது சென்றவனாயிருந்த அப்போஸ்தலனாகிய யோவான் பத்மு தீவில் நாடுகடத்தப்பட்டிருந்தான். அங்கே அவனுக்கு இந்தப் பொல்லாத மனித காரிய ஒழுங்கின் முடிவைப் பற்றியும் அதற்குப் பதிலாக கடவுளுடைய நீதியான பரலோக ராஜ்யத்தைப் பற்றிய கிளர்ச்சியூட்டும் காட்சியும் கொடுக்கப்பட்டது. இதை யோவான் பைபிள் புத்தகமாகிய வெளிப்படுத்துதலில் பதிவு செய்து வைத்திருக்கிறான். (வெளிப்படுத்துதல் 1:9) அடுத்த பேரரசனாகிய நெர்வாவின் ஆட்சி காலத்தில் பொ.ச. 96–98-ல் யோவான் விடுவிக்கப்பட்டிருக்க வேண்டும். அவன் தன்னுடைய சுவிசேஷத்தையும் மூன்று நிருபங்களையும் ட்ராஜன் (பொ.ச. 98–117) ஆட்சி செய்ய ஆரம்பித்த போது எழுதி முடித்தான்.

ரோம பேரரசின் வீழ்ச்சி

நான்காவது நூற்றாண்டில், பேரரசன் கான்ஸ்டன்டைன், ஒரே “கத்தோலிக்க” அல்லது சர்வலோக மதத்தின் கீழ் மக்களை ஐக்கியப்படுத்த தீர்மானித்தான். புறமத பழக்கவழக்கங்களுக்கும் கொண்டாட்டங்களுக்கும் கிறிஸ்தவ பெயர்கள் கொடுக்கப்பட்டன. ஆனால் அதே பழைய ஊழலே தொடர்ந்தது. பொ.ச. 325-ம் ஆண்டில் நைசீயா நகரத்தில் நடைபெற்ற முதல் கிறிஸ்தவ திருச் சபைக் கூட்டத்தில், இவன் கலந்து கொண்டு திருத்துவ கோட்பாட்டை ஏற்றுக் கொண்டான். மெய்க் கிறிஸ்தவனாக இருப்பதற்குப் பதிலாக கான்ஸ்டன்டைன் தன்னுடைய மூத்த மகன் க்ரிஸ்பசையும் தன் சொந்த மனைவி ஃபாஸ்டாவையும் கொல்லக்கூடியவனாக இருந்தான்.

கான்ஸ்டன்டைன் தன் அரசாங்கத்தை பைசான்டியத்துக்கு மாற்றி அதன் பெயரை முதலில் புதிய ரோம் என்றும் பின்னர் கான்ஸ்டான்டிநோப்பில் (கான்ஸ்டன்டைனின் நகரம்) என்றும் அதற்குப் பெயரிட்டான். ஐரோப்பாவும் ஆசியாவும் கூடும் இடமாகிய போஸ்போரசிலிருந்த இந்த நகரம் கிழக்கே 11 நூற்றாண்டுகளாக அது 1453-ல் ஓட்டோமான் துருக்கியர் கைகளில் வீழ்ச்சியடையும் வரையாக ரோம பேரரசின் தலைநகரமாக இருந்தது.

பொ.ச. 476-ல் ரோம பேரரசின் மேற்கத்திய ஆட்சிப் பகுதி வீழ்ச்சியுற்றது. பேரரசன், ஜெர்மானிய இனத்தைச் சேர்ந்த படைத்தலைவனான ஓடோசிர் அரசனால் பதவியிலிருந்து விலக்கப்பட்டான். சிங்காசனம் நிரப்பப்படாமலிருந்தது. சார்லிமாக்னி பின்னால் மேற்கத்திய பேரரசை நிலைநாட்ட முற்பட, பொ.ச. 800-ம் ஆண்டில் அவன் மூன்றாவது போப் லியோவால் பேரரசனாக முடிசூட்டப்பட்டான். பின்னர், பொ.ச. 962-ல், ஜெர்மானிய தேசத்தினுடைய தூய ரோம பேரரசின் அரசனாக முதலாவது ஓட்டோவை பன்னிரண்டாவது போப் ஜான் முடிசூட்டினார். தூய ரோம பேரரசு என்ற இப்பட்டம் 1806-ல் தானே கைவிடப்பட்டது.

என்றபோதிலும், அதற்குள் பைபிள் சரித்திரத்தின் ஏழாவதும் கடைசியானதுமான உலக வல்லரசு எழும்பிக் கொண்டிருந்தது. முன்னுரைக்கப்பட்டபடி, அதுவும்கூட ஒழிந்து போக, அதன் இடத்தை நிரந்தரமான அரசாங்கமாகிய கடவுளின் பரலோக ராஜ்யம் எடுத்துக் கொள்ளும்.—வெளிப்படுத்துதல் 17:10; தானியேல் 2:44. (w88 5⁄1)

[அடிக்குறிப்புகள்]

a வேதவாக்கியங்கள் எல்லாம் தேவாவியால் ஏவப்பட்டெழுதப்பட்டது (All Scripture Is Inspired of God and Beneficial) என்ற ஆங்கில புத்தகத்தில் பக்கங்கள் 340–1 பார்க்கவும்.

b இவ்விதமாக, ரோம ஆட்சியின் போது இந்த உலக வல்லரசுகளைக் குறித்து தேவதூதனால் சொல்லமுடிந்தது: “அவைகள் ஏழு ராஜாக்களாம்; இவர்களில் ஐந்து பேர் விழுந்தார்கள் [எகிப்து, அசீரியா, பாபிலோன், மேதிய–பெர்சியா மற்றும் கிரீஸ்], ஒருவன் இருக்கிறான் [ரோம்], மற்றவன் [ஆங்கிலோ–அமெரிக்க வல்லரசு] இன்னும் வரவில்லை.”—வெளிப்படுத்துதல் 17:10.

[பக்கம் 25-ன் வரைப்படம்]

(For fully formatted text, see publication)

ரோம பேரரசின் ஆட்சிப் பரப்பு

பிரிட்டன் நாடு

அட்லாண்டிக் பெருங்கடல்

ஸ்பெய்ன்

கால்

இத்தாலி

ரோம்

கிரீஸ்

மத்தியதரைக் கடல்

எகிப்து

கருங்கடல்

காஸ்பியன் கடல்

எருசலேம்

ஐபிராத்து

டைக்ரிஸ்

[பக்கம் 26-ன் வரைப்படம்]

ரோமுக்குச் செல்லுகையில் பவுல் பயணம் செய்த அப்பியுபுர பாதை

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்