உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w88 10/1 பக். 21-31
  • சமாதான பலனைத் தரக்கூடிய சிட்சை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • சமாதான பலனைத் தரக்கூடிய சிட்சை
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1988
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • ஏன் இந்த உறுதியான நிலைநிற்கை?
  • தொடர்பை முற்றிலுமாகத் துண்டித்துக்கொள்ள வேண்டுமா?
  • உறவினர்களைப் பற்றியதென்ன?
  • நீதிமன்ற தீர்ப்பு
  • சிட்சை—நன்மைகள் பல
  • உறவினர் சபை நீக்கம் செய்யப்படுகையில் கிறிஸ்தவ உண்மைப்பற்றுறுதியைக் காட்டுங்கள்
    நம் ராஜ்ய ஊழியம்—2002
  • சபைநீக்கம் செய்யப்பட்டவரை எப்படி நடத்த வேண்டும்?
    ‘கடவுளது அன்புக்கு பாத்திரராய் இருங்கள்’
  • சபைநீக்கம் செய்வது ஒரு அன்பான செயல் என்று எப்படி சொல்கிறோம்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2015
  • பாசத்துக்குரிய ஒருவர் யெகோவாவைவிட்டு விலகும்போது
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2021
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1988
w88 10/1 பக். 21-31

சமாதான பலனைத் தரக்கூடிய சிட்சை

“எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும்; ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்.”—எபிரெயர் 12:11.

நீ ங்கள் சிறு பிள்ளையாய் இருந்த நாட்களைப் பின்னிட்டுப் பாருங்கள். உங்கள் பெற்றோர் உங்களைச் சிட்சித்த காரியத்தை நீங்கள் நினைவுபடுத்த முடிகிறதா? நம்மில் அநேகருக்கு நினைவிருக்கிறது. கடவுளிடமிருந்து வரும் சிட்சையைக் குறிப்பிடும்போது அப்போஸ்தலனாகிய பவுல் அதையே உதாரணமாக பயன்படுத்தினான். இதை நாம் எபிரெயர் 12:9-11-ல் வாசிக்கிறோம்.

2 கடவுள் அளிக்கும் தகப்பனைப் போன்ற சிட்சை நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையைப் பாதிக்கக்கூடும். இது பல வகைப்பட்டது. இதில் ஒன்றுதான், கடவுளுடைய தராதரத்தின்படி தொடர்ந்து வாழ விரும்பாத அல்லது வாழ மறுக்கும் ஒருவரைக் கிறிஸ்தவ சபையிலிருந்து நீக்கிவிடும் அவருடைய ஏற்பாடு. இவ்விதம் கடுமையாகச் சிட்சிக்கப்படும் ஒருவர் மனந்திரும்பி மீண்டும் திரும்பிவரக்கூடும். இந்த நடவடிக்கையினால் உண்மை தவறாத ஆட்களைக் கொண்டிருக்கும் சபையுங்கூட சிட்சை பெறுகிறது. எப்படியெனில், கடவுளுடைய உயர்ந்த தராதரத்துக்கு இசைவாக வாழவேண்டியதன் முக்கியத்துவத்தை அவர்கள் கற்றுக்கொள்கின்றனர்.—1 தீமோத்தேயு 1:20.

3 ‘ஆனால் ஒருவரை சபை நீக்கம் செய்வதும், அதைத் தொடர்ந்து அவரோடு பேசாமலிருப்பதும் கடுமையான செயலாக இருக்காதா?’ என்று ஒருவர் கேட்கக்கூடும். இப்படிப்பட்ட ஒரு கருத்து, அண்மையில், யெகோவாவின் சாட்சிகளின் பெற்றோரால் வளர்க்கப்பட்ட ஒரு பெண்ணை உட்படுத்திய ஒரு நீதிமன்ற வழக்கில் தலைதூக்கியது. அவளுடைய பெற்றோர் சபைநீக்கம் செய்யப்பட்டிருந்தனர். அவளோ சபை நீக்கம் செய்யப்பட்டில்லை, ஆனால் சபையிலிருந்து தான் விலகிக்கொள்வதாக கடிதம் எழுதிக்கொடுத்து தானே சுயமாகச் சபையிலிருந்து தொடர்பறுத்துக் கொண்டாள். இதற்கிணங்க, அவள் இனிமேலும் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரல்ல என்று சபைக்கு அறிவிக்கப்பட்டது. அவள் வேறு இடத்திற்கு இடமாறிச் சென்றுவிட்டாள். ஆனால் பல ஆண்டுகள் கழிந்து அவள் பழைய இடத்திற்கே திரும்பிவந்தாள். அப்பொழுது அங்கிருந்து சாட்சிகள் தன்னிடம் பேசாதிருந்ததைக் கண்டாள். எனவே இந்தக் காரியத்தின் பேரில் அவள் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தாள். விளைவு என்னவாயிருந்தது? இந்தக் காரியத்தைச் சரியாகப் புரிந்துகொள்வதற்கு, இது சம்பந்தப்பட்ட பொருளாகிய சபைநீக்கம் குறித்து பைபிள் என்ன சொல்லுகிறது என்பதைப் பார்ப்போம்.

ஏன் இந்த உறுதியான நிலைநிற்கை?

4 உண்மையான கிறிஸ்தவர்களில் அநேகர் கடவுளுக்கும் அவருடைய நீதியான தராதரங்களுக்கும் உண்மைத் தவறாதவர்களாக ஆதரவு காண்பித்து வருகிறார்கள். (1 தெசலோனிக்கேயர் 1:2-7; எபிரெயர் 6:10) என்றபோதிலும், சில சமயங்களில் ஒருவர் சத்தியத்தை விட்டு வழிவிலகக்கூடும். உதாரணமாக, கிறிஸ்தவ மூப்பர்கள் உதவி செய்தும் மனந்திரும்பாதவராகக் கடவுளுடைய சட்டங்களை மீறக்கூடும். அல்லது பொய்க் கோட்பாடுகளைப் போதிப்பதன் மூலம் அல்லது தன்னைத்தானே சபையிலிருந்து தொடர்பறுத்துக்கொள்வதன் மூலம் விசுவாசத்தை மறுதலிக்கக்கூடும். அப்பொழுது என்ன செய்யப்பட வேண்டும்? இப்படிப்பட்ட காரியங்கள் அப்போஸ்தலர்கள் உயிரோடிருக்கும்போதே நிகழ்ந்தன; எனவே, இதைக் குறித்து அவர்கள் என்ன எழுதினார்கள் என்பதைக் கவனிப்போம்.

5 கொரிந்துவிலுள்ள ஒருவன் மனந்திரும்பாதவனாய் ஒழுக்கக்கேட்டில் தொடர்ந்தபோது, பவுல் சபைக்குச் சொன்னதாவது: “சகோதரனென்னப்பட்ட ஒருவன் விபசாரக்காரனாயாவது, பொருளாசைக்காரனாயாவது, விக்கிரகாராதனைக்காரனாயாவது, வெறியனாயாவது, கொள்ளைக்காரனாயாவது இருந்தால், அவனோடு கலந்திருக்கக்கூடாது; அப்படிப்பட்டவனுடனேகூடப் புசிக்கவுங்கூடாது.” (1 கொரிந்தியர் 5:11-13) இமனேயு போன்ற விசுவாசதுரோகிகளுக்கும் இதுவே நிகழக்கூடியதாயிருந்தது: “வேதப்புரட்டனாயிருக்கிற ஒருவனுக்கு நீ இரண்டொருதரம் புத்திசொன்ன பின்பு அவனைவிட்டு விலகு. அப்படிப்பட்டவன் நிலைதவறி, தன்னில்தானே ஆக்கினைத்தீர்ப்புடையவனாய்ப் பாவஞ்செய்கிறவனென்று அறிந்திருக்கிறாயே.” (தீத்து 3:10, 11; 1 தீமோத்தேயு 1:19, 20) சபையை மறுதலிக்கும் எவரையும் அவ்விதமாக அப்புறப்படுத்துவதும் பொருத்தமானதே: “அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்துபோனார்கள், ஆகிலும் அவர்கள் நம்முடையவர்களாயிருக்கவில்லை; நம்முடையவர்களாயிருந்தார்களானால் நம்முடனே நிலைத்திருப்பார்களே; எல்லாரும் நம்முடையவர்களல்லவென்று வெளியாகும்படிக்கே பிரிந்துபோனார்கள்.”—1 யோவான் 2:18, 19.

6 அப்படிப்பட்டவன் மறுபடியும் ஏற்றுக்கொள்ளப்படும்படிக்கு மனந்திரும்புவான் என்ற நம்பிக்கை இருக்கிறது. (அப்போஸ்தலர் 3:19) ஆனால், அதற்கிடையில் கிறிஸ்தவர்கள் அவனோடு கட்டுப்பட்ட அளவுக்குக் கூட்டறவு கொண்டிருக்கலாமா, அல்லது கண்டிப்பாகவே அவனைத் தவிர்க்க வேண்டுமா? அப்படியென்றால் ஏன்?

தொடர்பை முற்றிலுமாகத் துண்டித்துக்கொள்ள வேண்டுமா?

7 கிறிஸ்தவர்கள் தங்களை மக்களிடமிருந்து தனியே பிரித்து வைத்துக்கொள்வதில்லை. நாம் அயலகத்தாரோடும், உடன்வேலை செய்பவர்களோடும், பள்ளித் தோழர்களோடும், மற்றவர்களோடும் சாதாரணமாகத் தொடர்புடையவர்களாய் இருக்கிறோம், மற்றும் அவர்களில் சிலர் ‘விபசாரக்காரரும், பொருளாசைக்காரரும், கொள்ளக்காரரும், விக்கிரகாரதனைக்காரருமாக’ இருந்தாலும் அப்படிப்பட்டவர்களுக்கும் சாட்சி கொடுக்கிறோம். அவர்களை நாம் முற்றிலுமாய்த் தவிர்க்க முடியாது என்று பவுல் எழுதினான், ‘அல்லாவிடில் நாம் உலகத்தைவிட்டு நீங்கிப்போக வேண்டியதாயிருக்கும்.’ என்றபோதிலும் அப்படி வாழ்ந்த “சகோதரனென்னப்பட்ட ஒருவனுடைய” காரியத்தில் வித்தியாசமாயிருக்க வேண்டும் என்று அவன் கூறினான்: “சகோதரனென்னப்பட்ட ஒருவன் [அப்படிப்பட்ட வழிகளுக்குத் திரும்பிப் போனவனாயிருந்தால்] அவனோடே கலந்திருக்கக்கூடாது; அப்படிப்பட்டவனுடனே கூடப் புசிக்கவுங்கூடாது.”—1 கொரிந்தியர் 5:9-11; மாற்கு 2:13-17.

8 அப்போஸ்தலனாகிய பவுலின் எழுத்துக்களில், அப்படிப்பட்டவர்களைக் கிறிஸ்தவர்கள் எப்படி முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்பதை அழுத்திக் காண்பிக்கும் அதுபோன்ற ஆலோசனையைப் பார்க்கிறோம்: “கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல . . . ஒருவன் உங்களிடத்தில் வந்து இந்த உபதேசத்தைக் கொண்டுவராமலிருந்தால், அவனை உங்கள் வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும் அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள், அவனுக்கு வாழ்த்துதல் [கிரேக்கு, கெய்’ரோ] சொல்லுகிறவன் அவனுடைய துர்க்கிரியைகளுக்கும் பங்குள்ளவனாயிருக்கிறான்.”a—2 யோவான் 9-11.

9 அப்படிப்பட்ட உறுதியான நிலைநிற்கை ஏன் இன்றும் பொருத்தமாக இருக்கிறது? சரி, இஸ்ரவேலுக்குக் கடவுள் கொடுத்த பிரமாணத்தில் தொடர்பை முற்றிலுமாகத் துண்டித்துக்கொள்ளுதலை உட்படுத்தும் காரியத்தை சிந்தித்துப் பாருங்கள். வினைமையான அநேக காரியங்களில், வேண்டுமென்றே மீறினவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. (லேவியராகமம் 20:10; எண்ணாகமம் 15:30, 31) அந்தக் காரியம் சம்பவிக்கையில், மற்றவர்கள் நியாயப்பிரமாணத்தை மீறிய மரித்துப்போன அந்த நபருடன் இனிமேலும் பேசமுடியாது. (லேவியராகமம் 19:1-4; உபாகமம் 13:1-5;17:1-7) அந்தச் சமயத்தில் வாழ்ந்த உண்மைத்தவறாத இஸ்ரவேலர்கள் நம்மைப் போலவே உணர்ச்சி பொங்கிய சாதராண மக்களாக இருந்தபோதிலும், கடவுள் நீதியுள்ளவர், அன்புள்ளவர் என்பதையும் அவருடைய சட்டங்கள் தங்களுடைய ஒழுக்கம் மற்றும் ஆவிக்குரிய சுத்தத்தைப் பாதுகாத்தது என்பதையும் அறிந்திருந்தார்கள். எனவே தவறிழைப்பவர்களோடு முற்றிலுமாகத் தொடர்பைத் துண்டித்துக்கொள்ள வேண்டும் என்ற அவருடைய ஏற்பாடு அடிப்படையில் நல்லதும் சரியானதுமான காரியம் என்று அவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடும்.—யோபு 34:10-12.

10 அதுபோல நாமும், மனந்திரும்பாத பாவத்தைச் செய்த ஒருவன் சபையிலிருந்து நீக்கப்பட்டிருக்க, அவனோடு கூட்டுறவு கொள்வதை மறுப்பதற்கான கடவுளுடைய ஏற்பாடு நமக்கு ஞானமான ஒரு பாதுகாப்பு என்பது குறித்து நிச்சயமாயிருக்கலாம். “நீங்கள் புளிப்பில்லாதவர்களாயிருக்கிறபடியே, புதிதாய்ப் பிசைந்த மாவாயிருக்கும்படிக்கு பழைய புளித்த மாவைப் புறம்பே கழித்துப்போடுங்கள்.” (1 கொரிந்தியர் 5:7) அதே சமயத்தில், வேண்டுமென்றே தாங்களாகத் தொடர்பறுத்துக் கொள்கிறவர்களைத் தவிர்ப்பதன் மூலம், குற்றங்கண்டுபிடிக்கிற, மதித்துணர்வற்ற அல்லது விசுவாச துரோக எண்ணங்களிலிருந்து கிறிஸ்தவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள்.—எபிரெயர் 12:15, 16.

உறவினர்களைப் பற்றியதென்ன?

11 தவறிழைத்தவர்களை சபைநீக்கம் செய்வதைப் பற்றிய அவருடைய நீதியான சட்டத்தின்படி நடப்பது அடிக்கடி உறவினர்களை உட்படுத்துகிறது என்றும் அவர்களைப் பாதிக்கிறது என்றும் கடவுள் நிச்சயமாகவே அறிந்திருக்கிறார். முன்னால் குறிப்பிட்டதுபோல, தவறிழைத்த இஸ்ரவேலன் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டபோது, குடும்பக் கூட்டறவு இனிமேலும் கூடாததாகிவிட்டது. உண்மை என்னவெனில், ஒரு மகன் குடிவெறியனாகவும், போஜனப் பிரியனாகவும் இருந்தால், அவனுடைய பெற்றோர் தாமே அவனை நியாயாதிபதிகளுக்கு முன் கொண்டுசெல்ல வேண்டும், மற்றும் அவன் மனந்திரும்பாதவனாயிருந்தால், ‘தீமையை இஸ்ரவேலின் நடுவிலிருந்து விலக்கிப்போட’ அவனுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படுவதில் பெற்றோரும் ஒரு பங்கையுடையவர்களாக இருக்க வேண்டும். (உபாகமம் 21:18-21) இது அவர்களுக்கு எளிதான காரியமாக இருந்திருக்க முடியாது என்பதை நீங்கள் மதித்துணர முடியும். தவறிழைத்தவனின் சகோதரர்களும், சகோதரிகளும் அல்லது தாத்தா பாட்டிமார்களும் எப்படி உணர்ந்திருப்பார்கள் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள். என்றபோதிலும் தங்களுடைய நீதியுள்ள கடவுளுக்கு உண்மைத் தவறாதவர்களாய் இருப்பதைத் தங்களுடைய குடும்பப் பாசத்திற்கு முன்னால் வைப்பது அவர்களுடைய உயிரைப் பாதுகாக்கக்கூடியதாய் இருந்தது.

12.கோராகின் காரியத்தை எண்ணிப் பாருங்கள். அவன் மோசேயின் மூலமாகக் கடவுள் தந்த வழிநடத்துதலை எதிர்த்த ஒரு தலைவனாக இருந்தான். தம்முடைய பரிபூரண நீதியின் கண்ணோட்டத்தில் கோராகு மரிக்க வேண்டும் என்பதையே யெகோவா காணக்கூடியவராயிருந்தார். ஆனால், உண்மைத்தவறாதிருந்த எல்லோரும் பின்வருமாறு சொல்லப்பட்டார்கள்: “இந்தத் துஷ்ட மனிதரின் சகல பாவங்களிலும் நீங்கள் வாரிக்கொள்ளப்படாதபடிக்கு, அவர்கள் கூடாரங்களை விட்டு விலகி, அவர்களுக்கு உண்டானவைகளில் ஒன்றையும் தொடாதிருங்கள்.” கடவுள் கொடுத்த எச்சரிப்பை ஏற்றுக்கொள்ளாதிருந்த உறவினர் அனைவரும் அந்தக் கலகக்காரருடன் மாண்டனர். ஆனால் கோராகின் உறவினரில் சிலரோ ஞானமாக யெகோவாவுக்கு உண்மைத்தவறாதவர்களாக இருப்பதைத் தெரிந்துகொண்டார்கள்; இது அவர்களுடைய ஜீவனைப் பாதுகாத்து எதிர்கால ஆசீர்வாதங்களுக்கு வழிநடத்தியது.—எண்ணாகமம் 16:16-33; 26:9-11; 2 நாளாகமம் 20:19.

13 கிறிஸ்தவ சபையோடு தொடர்பு துண்டிக்கப்படுதல் உடனடியாக மரணத்தை உட்படுத்தவில்லை. எனவே குடும்ப உறவு தொடர்ந்திருக்கிறது. இப்படியிருக்க சபை நீக்கம் செய்யப்பட்ட அல்லது சபையிலிருந்து சுயமாகத் தொடர்பறுத்துக் கொண்ட ஒருவன் வீட்டில் தன்னுடைய கிறிஸ்தவ மனைவியுடனும் பிள்ளைகளுடனும் வாழக்கூடும். கடவுளுடைய நியாயத்தீர்ப்புகளுக்கும் சபையின் நடவடிக்கைக்குமான மரியாதை, அவனுடைய நடத்தையினால் தங்களுக்கிடையே இருந்துவந்த ஆவிக்குரிய பந்தத்தை அவன் மாற்றிவிட்டிருக்கிறான் என்பதை மனைவியும் பிள்ளைகளும் மதித்துணரச் செய்யும். என்றபோதிலும், அவன் சபைநீக்கம் செய்யப்பட்டிருப்பது அவனுடைய இரத்த உறவை அல்லது விவாக உறவை முடிவுக்குக் கொண்டுவரவில்லையாதலால், சாதாரணமாக இருக்கும் குடும்ப பாச உறவும் செயல் தொடர்பும் தொடர்ந்திருக்கக்கூடும்.

14 சபை நீக்கம் செய்யப்பட்ட அல்லது தொடர்பறுத்துக்கொண்ட நபர் உடனடியாகக் குடும்ப வட்டாரத்திற்கு அல்லது வீட்டிற்கு வெளியே வாழும் ஓர் உறவினராக இருந்தால் நிலைமை வித்தியாசமாயிருக்கிறது. அந்த உறவினரோடு எந்தத் தொடர்பும் கொள்ளாமலிருப்பது கூடிய காரியமாயிருக்கலாம். தொடர்பைத் தேவைப்படுத்தும் சில குடும்ப விவகாரங்கள் இருந்தாலும், பின்வரும் தெய்வீக நியமத்திற்கு இசைவாக இது நிச்சயமாகவே மிகக் குறைந்தளவுக்கு வைக்கப்பட்டிருக்கும்: “சகோதரனென்னப்பட்ட ஒருவன் [எந்த ஒருவனும்] விபசாரக்காரனாயாவது பொருளாசைக்காரனாயாவது [அல்லது வினைமையான வேறு எந்த ஒரு பாவத்தைச் செய்தவனாயாவது] . . . இருந்தால், அவனோடு கலந்திருக்கக்கூடாது, அப்படிப்பட்டவனுடனேகூட புசிக்கவுங்கூடாது.”—1 கொரிந்தியர் 5:11.

15 பேரப்பிள்ளைகளிடமாக தாத்தாபாட்டி கொண்டிருக்கும் பாசம் போன்ற உணர்ச்சிகளின் காரணத்தாலும் குடும்ப உறவுகளின் காரணத்தாலும் இது கடினமாயிருக்கும் என்பது புரிந்துகொள்ளத்தக்கது. என்றபோதிலும், பக்கம் 21-ல் குறிப்பிடப்பட்ட அந்தச் சகோதரி கூறினதுபோல, இது கடவுளுக்கு உண்மை தவறாதவர்களாக இருப்பதன் ஒரு பரீட்சையாக இருக்கிறது. சபை நீக்கம் செய்யப்பட்ட உறவினர் இப்படியாக ஏற்படுத்தியிருக்கும் வருத்தத்தையும் வேதனையையும் உணர்கிறவர்கள் கோராகின் சில உறவினர்கள் வைத்த முன்மாதிரியில் ஆறுதலையும் ஊக்கமூட்டுதலையும் காணக்கூடும்.—சங்கீதம் 84:10-12.b

நீதிமன்ற தீர்ப்பு

16 விசுவாசத்தை மறுதலித்து சபையிலிருந்து தொடர்பறுத்துக்கொள்வதைத் தெரிந்துகொண்ட பின்பு தன்னோடு பழைய கூட்டாளிகள் பேசவில்லை என்பதன் பேரில் கோபப்பட்ட ஒரு பெண்ணை உட்படுத்திய அந்த நீதிமன்ற வழக்கின் முடிவை அறிய நீங்கள் ஆவலாயிருக்கக்கூடும்.

17 அந்த வழக்கு விசாரிக்கப்படுவதற்கு முன், கூட்டரசு மாவட்ட நீதிமன்றம் அவளுக்கு எதிராகச் சுருக்கமாக ஒரு தீர்ப்பை வழங்கியது. சர்ச்சின் சிட்சிப்பு நடவடிக்கைகளில் நீதிமன்றங்கள் உட்படுவதில்லை என்ற கருத்தின் அடிப்படையில் அந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது. அவள் மறுபடியும் நீதிமன்றத்தில் முறையீடு செய்தாள். மேல் முறையீடுகளின் கூட்டரசு நீதிமன்றத்தின்c ஒருமுகத் தீர்ப்பு (ஐக்கிய மாகாணங்களின் சட்டத்தின்) பரந்த அடிப்படைகளைக் கொண்ட முதல் திருத்த உரிமைகளின் அடிப்படையில் வழங்கப்பட்டது: “விலக்கிவிடுதல் பழக்கம் யெகோவாவின் சாட்சிகளுடைய விசுவாசத்தின் ஒரு பாகமாக இருப்பதால், ஐக்கிய மாகாணங்களின் அரசமைப்பின் ‘உரிமை சுயாதீன’ ஏற்பாடு [அவள்] அதன்பேரில் வழக்கு தொடர்வதைத் தடை செய்கிறது. எதிர்வாதிகள் விலக்கும் செயல்முறையில் ஈடுபடும் வாய்ப்பை அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் பெற்றிருக்கின்றனர். இதற்கிசைவாக நாங்கள் மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்கிறோம்.”

18 நீதி மன்றத்தின் கருத்து பின்வருமாறு தொடர்ந்தது: “விலக்குதல் யெகோவாவின் சாட்சிகளால் செய்யப்பட்டு வரும் ஒரு செயல், இது தங்களுடைய வேத வசனங்களுக்குத் தாங்கள் அளிக்கும் விளக்கத்தைச் சார்ந்தது, அந்த வசனத்திற்கு மறு விளக்கம் அளித்திட எங்களுக்கு சுயாதீனமில்லை. . . . எதிர்வாதிகள் தங்களுடைய மத நம்பிக்கைளைப் பின்பற்றும் சுயாதீனமுடையவர்கள் . . . ஒரு சர்ச்சுக்கும் அதன் அங்கத்தினருக்கும் (அல்லது முன்னாள் அங்கத்தினருக்கும்) இடையேயுள்ள உறவை நீதிமன்றங்கள் பொதுவாக மிக நெருங்க ஆராய்வதில்லை. சர்ச்சுகள் தங்களுடைய அங்கத்தினரை அல்லது முன்னாள் அங்கத்தினரை சிட்சிக்கும்போது அதில் அவர்களுடைய எல்லை பரந்த ஒன்று. நாங்கள் [ஐ.மா. உச்ச நீதிமன்றத்தின் முன்னாள்] நீதிபதி ஜாக்சனின் கருத்தை ஒப்புக்கொள்கிறோம், அதாவது ‘குறிப்பிட்ட மத விசுவாசத்தையுடைய அங்கத்தினர்களை மட்டுமே உட்படுத்தும் மத நடவடிக்கைகளுக்கு சுதந்தரம் இருக்கிறது, இருக்க வேண்டும்—முழு சுதந்தரத்தைக் கொண்டிருக்குமளவுக்கு இருக்க வேண்டும்.’ . . . தான் விட்டுவிட தீர்மானித்த சர்ச்சின் அங்கத்தினர்கள், தாங்கள் இனிமேலும் அவளோடு தொடர்புகொள்ள விரும்பவில்லை என்ற தீர்மானத்துக்கு வந்துவிட்டனர். அந்தத் தெரிவைச் செய்வதற்குரிய சுயாதீனத்தை அவர்கள் பெற்றிருக்கிறார்கள் என்ற முடிவுக்கு வந்துள்ளோம்.”

19 மேல்வழக்கு நீதிமன்றம் ஒப்புக்கொண்டதாவது, தன்னுடைய முன்னாள் கூட்டாளிகள் தன்னுடன் பேசாமலிருப்பதைத் தெரிந்துகொண்டது அந்தப் பெண்ணுக்கு வருத்தத்தை ஏற்படுத்தினபோதிலும், “புலப்படாத அல்லது உணர்ச்சி சம்பந்தமான காயங்களிலிருந்து குணப்படுவதற்கு அவளை அனுமதிப்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கு ஒவ்வாத வகையில், யெகோவாவின் சாட்சிகள் மத சுயாதீனத்தைக் கொண்டிருப்பதற்குத் தடை விதிப்பதாக இருக்கும் . . . எல்லா குடிமக்களும் அனுபவிக்கும் மதக் கொள்கையில் வித்தியாசத்தைக் கொண்டிருக்கும் உரிமையைப் பாதுகாப்பதற்கு அவள் படும் கஷ்டத்தைச் சமுதாயம் பொறுத்துக்கொள்வதையே மத சுயாதீனம் சம்பந்தமாக அரசியலமைப்புச் சட்டம் சார்ந்த உத்தரவாதம் தேவைப்படுத்துகிறது.” இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்ட சமயத்திலிருந்து ஒரு விதத்தில் இதற்கு கூடுதல் மதிப்பு ஏற்பட்டிருக்கிறது. எப்படி? அந்தப் பெண் பின்னால் இந்த வழக்கை தேசத்தின் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்தாள், அநேகமாகத் தனக்கு சாதகமாயிராத தீர்ப்பை மாற்றுவதற்காக இதைத் செய்திருக்கக்கூடும். ஆனால் நவம்பர் 1987-ல் ஐக்கிய மாகாணங்களின் உச்சநீதிமன்றம் அப்படிச் செய்ய மறுத்தது.

20 எனவே, சபை நீக்கம் செய்யப்பட்ட அல்லது சபையிலிருந்து தொடர்பறுத்துக்கொண்ட நபர் விலக்கப்பட்டிருப்பதற்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து யெகோவாவின் சாட்சிகளிடமிருந்து இழப்பீடு அல்லது நஷ்டஈடு பெறமுடியாது என்பதை இந்த முக்கிய வழக்கு உறுதிசெய்தது.d கடவுளுடைய வார்த்தையில் நாம் அனைவரும் வாசிக்கக்கூடிய பரிபூரண வழிநடத்துதலுக்குச் சபை பிரதிபலித்து, அதைப் பொருத்தி வந்திருப்பதால், அந்த நபர் தன்னுடைய சொந்த செயலால் விளைந்திருக்கும் இழப்பைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

சிட்சை—நன்மைகள் பல

21 சபை நீக்கம் குறித்து கேள்விப்படும் சில வெளியாட்கள், கிறிஸ்தவ சபை அங்கத்தினர்களுடன் இனிமேலும் உரையாட முடியாத, தவறிழைத்த அந்த நபருக்கு உடனிரங்குகின்றனர். ஆனால் அப்படிப்பட்ட பரிவிரக்கம் தவறான காரியத்துக்குக் காண்பிக்கப்படும் ஒன்றல்லவா? தவறிழைத்தவரும் மற்றவர்களும் பெறக்கூடிய நன்மைகளைச் சற்று சிந்தித்துப் பாருங்கள்.

22 உதாரணமாக பக்கம் 21-ல் சபைநீக்கம் செய்யப்பட்ட தன்னுடைய சகோதரி மார்கரெட்டோடு ‘எல்லாவிதமான கூட்டுறவையும் முழுமையாகத் துண்டித்துக்கொள்ளும்’ லினெட்டின் தெரிவைக் கவனித்தோம். அவளும் அவளுடைய உறவினரும் ‘யெகோவாவின் வழியே சிறந்த வழி என்று நம்பினார்கள்.’ உண்மையிலேயே அவ்வாறாக இருக்கிறது!

23 லினெட்டின் சகோதரி பின்னால் ஒரு சமயம் அவளிடம் பின்வருமாறு சொன்னாள்: ‘சபைநீக்கத்தை நீ இலேசாகக் கருதியிருந்தால், நான் திரும்ப நிலைநாட்டப்படுவதற்கான படியை இவ்வளவு சீக்கிரமாக எடுத்திருக்க மாட்டேன் என்று நினைக்கிறேன். அன்பானவர்களிடமிருந்தும் சபையுடன் நெருங்கிய தொடர்பு கொள்வதிலிருந்தும் முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டிருப்பது மனந்திரும்புவதற்கு ஒரு பலமான விருப்பத்தை என்னில் உருவாக்கியது. நான் யெகோவாவை விட்டு விலகும் என்னுடைய நடத்தைப்போக்கு எந்தளவுக்குத் தவறானது என்றும் எந்தளவுக்கு வினைமையானது என்றும் உணர்ந்தேன்.’

24 மற்றொரு சம்பவம், லாரியின் பெற்றோர் சபைநீக்கம் செய்யப்பட்டனர். இருந்தாலும் அவள் சொல்வதாவது: ‘அவர்களோடு எனக்கு இருந்த கூட்டுறவு நின்றுவிடவில்லை, ஆனால் கூடிக்கொண்டேயிருந்தது. காலம் செல்லச்செல்ல நான் அதிகமதிகமாகச் செயலற்றவளாகிவந்தேன். கூட்டங்களுக்குங்கூட செல்லக்கூடாது என்ற நிலைக்கு வந்துவிட்டேன்.’ பின்பு அவள் ஜனவரி 1 மற்றும் பிப்ரவரி 1, 1982 காவற்கோபுரம் (தமிழ்) பத்திரிகைகளில் வெளிவந்த தகவல்களைப் படித்தாள். அவை 1 கொரிந்தியர் 5:11-13 மற்றும் 2 யோவான் 9-11-லுள்ள ஆலோசனையை அழுத்தமாய் விளக்கின. “என் மீது ஒரு விளக்கு ஒளி திருப்பப்பட்டதுபோன்று இருந்தது,” என்று எழுதுகிறாள். ‘நான் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியிருப்பதை அறிந்தேன். மத்தேயு 10:34-36-லுள்ள கருத்தை நல்ல விதத்தில் புரிந்துகொள்ள முடிந்தது. என்னுடைய தீர்மானம் என்னுடைய குடும்பத்திற்கு ஜீரணிக்க அவ்வளவு எளிதாக இல்லை, ஏனென்றால் என்னுடைய மகனுக்கு 5 வயது, ஒரே பையனாதலால் அவனை அவர்கள் அவ்வளவு அதிகமாக நேசித்தார்கள்.’ அப்படிப்பட்ட கூட்டுறவை இழப்பது மார்கரெட்டின் இருதயத்தைத் தொட்டதுபோல், அவளுடைய பெற்றோரின் இருதயத்தையும் தொடுவதாயிருக்கும் என்று நம்புகிறோம். என்றாலும், உட்பட்டிருந்த சிட்சை லாரிக்கு உதவியது: ‘நான் மீண்டும் வெளி ஊழியத்தில் இறங்கியிருக்கிறேன். என்னுடைய மாற்றத்தின் காரணத்தால் என் விவாகமும் குடும்பமும் பலமாயிருக்கிறது, நானும் அப்படியே.’

25 சபைநீக்கம் செய்யப்பட்டு பின்னால் திரும்ப நிலைநாட்டப்பட்ட ஒருவரின் உணர்வுகளைச் சிந்தித்துப் பாருங்கள். சேண்டி எழுதினாள்: ‘கடிந்துகொள்ளுதல் மற்றும் சபைநீக்கம் பேரில் [மேலே குறிப்பிடப்பட்டுள்ள] அதிக உதவியான போதனை மிகுந்த கட்டுரைகளுக்கு நான் தங்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். தம்முடைய அமைப்பு சுத்தமாக வைத்துக்கொள்ளப்படுவதைப் பார்க்குமளவுக்கு யெகோவா தம்முடைய மக்களை நேசிக்கிறார் என்பது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். வெளியாட்களுக்குக் கடுமையானதாகத் தோன்றக்கூடிய காரியம் அவசியமானதும் உண்மையிலேயே செயல்படுத்தவேண்டிய அன்பான செயலாகவும் இருக்கிறது. நம்முடைய பரமபிதா அன்புள்ளவரும் மன்னிக்கிறவருமான ஒரு கடவுளாயிருப்பதற்கு நான் நன்றியுள்ளவளாயிருக்கிறேன்.’

26 குற்றமிழைக்கும் மனந்திரும்பாத ஒருவர் சபையிலிருந்து புறக்கணிக்கப்பட வேண்டியதை எதிர்பார்க்கும் நம்முடைய கடவுள், பாவம் செய்த அந்த நபர் மனந்திரும்பி மாற்றமடைந்து வருவாரானால் அவர் சபையில் திரும்ப நிலைநாட்டப்படலாம் என்று அன்பாய் எடுத்துக் காண்பிக்கிறார். (சபையிலிருந்து தொடர்பறுத்துக்கொண்ட நபருங்கூட அதுபோல திரும்ப தான் சபையின் பாகமாவதற்கு விண்ணப்பிக்கலாம்.) அதற்குப் பின்பு அவர் கிறிஸ்தவர்களின் ஆறுதலைப் பெறக்கூடும், இவர்கள் அவர் பேரிலிருக்கும் தங்களுடைய அன்பை உறுதி செய்வார்கள். (2 கொரிந்தியர் 2:5-11; 7:8-13) உண்மையிலேயே இது பவுல் சொன்ன விதமாக இருக்கிறது: “எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும், ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்.”—எபிரெயர் 12:11. (w88 4⁄15)

[அடிக்குறிப்புகள்]

a யோவான் இந்த இடத்தில் கெய்’ரோ என்ற பதத்தைப் பயன்படுத்தினான், இது “வணக்கம்” போன்ற வாழ்த்துலாக இருந்தது. (அப்போஸ்தலர் 15:23; மத்தேயு 28:9) அவன் ஆஸ்ப’ஜோமேய் (வசனம் 13-ல் பயன்படுத்தப்பட்டிருப்பதுபோல்) என்ற வார்த்தையைப் பயன்படுத்தவில்லை, இது “கரங்களால் அணைத்தல், இப்படியாக வாழ்த்துதல், வரவேற்பளித்தல்” என்று பொருள்படுகிறது, மற்றும் அதிக அனல்கொண்ட வாழ்த்துதலை, கட்டியணைத்து வாழ்த்துதலையுங் குறித்திருக்கக்கூடும். (லூக்கா 10:4; 11:43; அப்போஸ்தலர் 20:1, 37; 1 தெசலோனிக்கேயர் 5:26) எனவே 2 யோவான் 11-ல் கொடுக்கப்பட்டிருக்கும் ஆலோசனை, அப்படிப்பட்டவர்களுக்கு “வணக்கம்” கூட சொல்லக்கூடாது என்பதை அர்த்தப்படுத்தக்கூடும்.—ஆங்கில காவற்கோபுரம், ஜூலை 15, 1985 பக்கம் 31-ஐ பாருங்கள்.

b உறவினர் ஒருவர் சபைநீக்கம் செய்யப்படுவதன் பேரில் ஒரு கலந்தாலோசிப்புக்கு தமிழ் காவற்கோபுரம் பிப்ரவரி 1, 1982 பக்கங்கள் 19-25-ஐப் பார்க்கவும்.

c 819 F.2d 875 (9th Cir. 1987).

d வெவ்வேறு ஆட்கள் வழக்குத் தொடர்ந்தபோதிலும், யெகோவாவின் சாட்சிகளுடைய பைபிள் சார்ந்த விலக்குதல் நடவடிக்கைக்கு எதிராக எந்த ஒரு நீதி மன்றமும் தீர்ப்பளித்ததில்லை.

நினைவிற்கொள்ள வேண்டிய குறிப்புகள்

◻ சபை நீக்கம் எவ்வழிகளில் சிட்சையின் ஒரு வகையாக இருக்கக்கூடும்?

◻ சபைநீக்கம் செய்யப்பட்டவர்களிடமாக ஒரு கிறிஸ்தவனின் நடத்தை உலகிலுள்ள பாவிகளிடமாக அவனுடைய நடத்தையிலிருந்து ஏன் வித்தியாசப்படுகிறது?

◻ உறவினன் ஒருவன் சபைநீக்கம் செய்யப்பட்டாலும் என்ன வேதப்பூர்வமான வழிநடத்துதலை மனதிற்கொள்ள வேண்டும்?

◻ சபையிலிருந்து தொடர்பறுத்துக்கொண்ட ஒரு நபர் தொடுத்த வழக்கில், மேல்முறையீடு நீதிமன்றம் ஒன்று என்ன முடிவுக்கு வந்தது?

◻ சபைநீக்கம் குறித்த சில தனிப்பட்ட கூற்றுகளிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

[கேள்விகள்]

1, 2. (எ) எபிரெயர் 12:1-ன்படி கடவுள் அன்பாக அளிப்பது என்ன? (பி) சிட்சைக்கு ஓர் உதாரணம் என்ன இருக்கிறது? அதன் பலன் என்னவாக இருக்கக்கூடும்?

3. சபைநீக்கம் என்ற எண்ணத்திற்குச் சிலர் எவ்வாறு பிரதிபலிக்கின்றனர்?

4. சபையில் இடையிடையே சிலருக்கு என்ன நேரிடுகிறது? (கலாத்தியர் 6:1; யூதா 23)

5, 6. (எ) வினைமையான பாவங்களைச் செய்யும் மனந்திரும்பாத ஆட்களுடன் தொடர்பு குறித்து நமக்கு என்ன ஞானமான ஆலோசனை இருக்கிறது? (மத்தேயு 18:17) (பி) நாம் எதிர்ப்படும் கேள்விகள் என்ன?

7. இரண்டு வகை பாவிகள் சம்பந்தமாக நம்முடைய நடத்தை எப்படி வித்தியாசப்படும்?

8. விலக்குதல் பேரில் அப்போஸ்தலனாகிய யோவான் என்ன ஆலோசனை கொடுத்தான்?

9, 10. (எ) இஸ்ரவேலில் நியாயப்பிரமாணத்தை மீறிய மனந்திரும்பாத ஆட்களுக்கு என்ன நடந்தது? ஏன்? (பி) மனந்திரும்பாத பாவத்துக்குச் சபையிலிருந்து விலக்கப்பட்ட ஆட்களுடன் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கான இந்த ஏற்பாட்டைக் குறித்து நாம் இப்பொழுது எப்படி உணர வேண்டும்? (2 பேதுரு 2:20-22)

11, 12. (எ) தவறிழைத்த ஒருவன் சபையிலிருந்து துண்டிக்கப்பட்டபோது இஸ்ரவேல் உறவினரில் அது என்ன பாதிப்பையுடையதாயிருந்தது? (பி) கீழ்ப்படிதலின் நன்மைகளை எடுத்துக் காட்டுடன் விளக்குங்கள்.

13. உடன் வாழும் தன்னுடைய குடும்ப அங்கத்தினரில் ஒருவர் சபைநீக்கம் செய்யப்பட்டிருந்தால், அல்லது சபையிலிருந்து தொடர்பறுத்துக் கொண்டால் உண்மைதவறாத கிறிஸ்தவர்கள் எவ்வாறு பிரதிபலிக்க வேண்டும்?

14. உடன் வாழாத வேறு இடத்தில் வாழும் நம்முடைய குடும்ப வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் சபைநீக்கம் செய்யப்பட்ட அல்லது சபையிலிருந்து தொடர்பறுத்துக்கொண்ட உறவினராயிருந்தால் அவரோடு நம்முடைய தொடர்பு குறித்ததில் எந்த தெய்வீக ஆலோசனை செல்வாக்குச் செலுத்த வேண்டும்?

15. அப்படிப்பட்ட காரியங்கள் சம்பவிக்கும்போது உறவினர்கள் எவ்வாறு தங்களுடைய உணர்ச்சிகளின் செல்வாக்கைக் கட்டுப்படுத்த முடியும்? (சங்கீதம் 15:1-5; மாற்கு 10:29, 30)

[பக்கம் 21-ன் சிறு குறிப்பு]

“[சபைநீக்கம் செய்யப்பட்ட என்னுடைய சகோதரி] மார்கரெட்டுடனிருந்த அனைத்து கூட்டுறவையும் நாங்கள் முழுமையாக துண்டித்துக்கொள்ளுதல் யெகோவாவின் ஏற்பாட்டிற்கு எங்கள் உண்மை தவறாமையின் பரீட்சையாக இருந்தது. யெகோவாவின் வழியே மிகச் சிறந்த வழி என்பதை நாங்கள் உண்மையிலேயே நம்புகிறோம் என்பதைக் காண்பிக்க எங்கள் குடும்பத்துக்கு இது ஒரு வாய்ப்பைக் கொடுத்து.”—லினெட்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்