நம்முடைய பயம் நிறைந்த காலங்களில், நீங்கள் யாரை உண்மையிலேயே நம்பலாம்?
“பிரபுக்களையும், இரட்சிக்கத் திராணியில்லாத மனுபுத்திரனையும் நம்பாதேயுங்கள்.”—சங்கீதம் 146:3
நாம் சிறு பிள்ளைகளாயிருந்தபோது நாம் பயந்த சமயங்களில் ஆறுதலுக்காகவும் பாதுகாப்புக்காகவும் நம்மைக் கவனித்துவந்த பெற்றோரிடமாகப் போனோம், ஏனென்றால் அவர்களை நம்பினோம். பெரியவர்களாக நாம் நம்ப முடிந்த ஆட்கள் நமக்குத் தேவை. விசேஷமாக இன்று இது உண்மையாக இருக்கிறது. காரணம், எத்தனையோ பயங்கரமான காரியங்கள் சம்பவிக்கின்றன. நம்முடைய காலங்களின்பேரில் கருத்து தெரிவிக்கும் விதத்தில் ஒரு ஜெர்மன் செய்தித்தாள் பின்வருமாறு கூறியது: “இதுவரை இருந்திராத அளவுக்கு உலகம் பயம் நிறைந்திருக்கிறது.” அவ்வப்போது அரசியல் தலைவர்களும், பத்திரிகை நிருபர்களும் மற்றவர்களும் மனிதவர்க்கம் இப்பொழுது எதிர்ப்படும் கடுமையான பிரச்னைகளின்பேரில் தங்களுடைய பயத்தைத் தெரிவித்திருக்கின்றனர்.
2 இப்படிப்பட்ட கூற்றுகள் நம்முடைய காலத்தைக் குறித்து இயேசு முன்னறிவித்த காரியங்களைப் பிரதிபலிக்கிறது. நம்முடைய காலம் “பூமியின் மேலுள்ள ஜனங்களுக்குத் தத்தளிப்பும் இடுக்கணும் உண்டாகும். . . . பூமியின்மேல் வரும் ஆபத்துகளுக்குப் பயந்து எதிர்பார்த்திருக்கிறதனால் மனுஷருடைய இருதயம் சோர்ந்துபோம்,” என்ற காரியங்களால் குறிக்கப்பட்டிருக்கும் என்று சொன்னார். (லூக்கா 21:25, 26) இந்தக் “கடைசி நாட்களில் கொடிய காலங்கள் வரும்.” அப்பொழுது மக்கள் ‘தற்பிரியராயும், உண்மையற்றவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், வஞ்சிப்பவர்களாயும்’ இருப்பார்கள் என்று பைபிள் முன்னறிவித்தது. இந்தக் கூற்றுகள் நமக்குக் காண்பிப்பதாவது, நம்முடைய சகாப்தத்தின் ஒரு பண்பு நம்பமுடியாதத் தன்மையாகும்.—2 தீமோத்தேயு 3:1-4.
நம்புந்தன்மை தணிகிறது
3 பயம் நிறைந்த இந்தக் காலங்களில் நாம் நம்பக்கூடிய, உண்மையாயிருக்கும் மற்றும் தேவையான சமயத்தில் உதவும் ஆட்கள் அதிமாகத் தேவைப்படுகின்றனர். ஆனால் தாங்கள் நம்பின ஆட்கள் தங்களைக் கைவிட்டதாக அநேகர் உணருகின்றனர். ஒரு தேசத்தின் செய்திப் பத்திரிகை ஒன்று பின்வருமாறு அறிக்கை செய்தது: “மக்கள் பெரும்பாலான பொது நிறுவனங்களை நம்புவதில்லை.” மிகக் குறைவாக நம்பப்படும் ஆட்கள் அரசியல் மற்றும் வர்த்தகத் தலைவர்கள். நம்பிக்கையின்மை குடும்ப வட்டாரங்களில் அதிகரித்திருக்கிறது. இதற்கு உயர்ந்துகொண்டுபோகும் விவாகரத்தின் எண்ணிக்கை அத்தாட்சியளிக்கிறது. சில நாடுகளில் ஒவ்வொரு மூன்று அல்லது இரண்டு விவாகங்களில் ஒன்று விவாகரத்தில் முடிவடைகிறது! ஒரு தேசத்தில் புதிய விவாகங்களில் 70 சதவிகிதம் பத்து வருடத்துக்குள்ளாக விவாகரத்தில் முடிவடைந்துவிடுகிறது! எனவே பிறரை நம்புவது வளர்ந்துவரும் ஓர் அவசரச் சிகிச்சைக்குரிய காரியமாகிவிட்டிருக்கிறது. அதன் இடத்தில் அவநம்பிக்கை அமர்ந்துவிட்டிருக்கிறது. “நான் இனிமேல் யாரையும் நம்பமாட்டேன்,” என்று ஒருவர் சொன்ன வார்த்தைகள் இனிமேலும் அசாதாரண வார்த்தைகளாயில்லை.
4 மனித சரித்திரத்திலேயே இதுவே மிகவும் பயம் நிறைந்த காலமாக இருப்பதன் காரணமாக, இன்று இந்தளவுக்கு அவநம்பிக்கையை அதிகமாகக் காண்கிறோம். இந்த நூற்றாண்டு பத்துகோடி மக்களின் உயிரைப் பலிவாங்கிய இரண்டு உலக மகா யுத்தகங்களையும் ஏராளமான மற்ற போர்களையும் பார்த்திருக்கிறது. இப்பொழுது அணு ஆயுதப் போர்த்தளவாடங்கள் பூமியில் அனைத்து உயிர்வாழ்வையும் அழித்துவிடுவதாக அச்சுறுத்தி வருகிறது. இது மிக இள வயதினராக இருப்பவர்களின் நம்புந்தன்மையையுங்கூட பாதித்திருக்கிறது. மருத்துவ பத்திரிகை ஒன்று பின்வரும் அறிக்கையைக் கொடுத்தது: “ஓர் அணு ஆயுதப் பேரழிவின் அச்சுறுத்தலால் அதிகமதிகமான சிறுவர்களும் தத்திச் செல்லும் குழந்தைகளுங்கூட பயப்படுகின்றனர். இப்பொழுது இளைஞர் பலர் மத்தியில் “வெறுப்பு, வருத்தம், எரிச்சல் மற்றும் உதவியிழந்த உணர்வு” காணப்படுகிறது. இளைஞரில் ஒருவன் சொன்னான்: “பெரியவர்களின் ஜனத்தொகையால் நாங்கள் பாதுகாப்பாக உணருவதில்லை. நாங்கள் இதுவரை இருந்திராதளவுக்கு வெறுப்புணர்வு கொண்ட தலைமுறையாக வளரக்கூடும்.”
5 இளைஞர்களின் அந்த மற்ற தொகுதியினர்—அவர்கள் பேசக்கூடுமானால்—பெரியவர்களால் பாதுகாக்கப்படுவதாக உணராதிருப்பது குறித்து என்ன சொல்லுவார்கள்? அவர்கள் பிறப்பதற்கு முன்பாகவே கருச்சிதைவால் கொல்லப்படுகிறவர்களைக் குறித்து பேசுகிறோம். உலகமுழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செய்யப்படும் கருச்சிதைவுகளின் எண்ணிக்கை ஏறக்குறைய 5.5 கோடி என்று ஒரு புள்ளிவிவரம் காண்பிக்கிறது. இது வெகுவாய் குற்றமற்ற, உதவியற்ற நிலையிலிருக்கும் மனிதவர்க்கத்தின் அந்தப் பகுதியினருக்கு இழைக்கப்படும் எப்பேர்ப்பட்ட துரோகச் செயல்!
6 வளர்ந்துவரும் மற்றொரு பயத்தின் காரணமாகவும் அவநம்பிக்கை அதிகரித்துவிட்டிருக்கிறது: குற்றச்செயலுக்கு இரையாகிவிடும் ஒரு பயம். தன்னுடைய தலையணையின்கீழ் துப்பாக்கியை வைத்துக்கொண்டு தூங்குவதாகச் சொன்ன ஒரு பெண் செய்ததைப் போலவே அநேகர் இன்று செய்கின்றனர். மற்றொரு பெண் சொன்னாள்: “நான் அதை எதிர்க்கிறேன். . . . என் பாட்டி தன்னுடைய அறையின் கதவுகளைத் தாளிட்டுக்கொள்ளவில்லை.” போர்ட்டோ ரிக்கோ தினசரி ஒன்று பின்வரும் அறிக்கையைச் செய்தது: “நாம்தாமே, சிறையிலிருக்கிறோம்,” ஆம், கம்பிகளால் அடைக்கப்பட்ட, பூட்டப்பட்ட நம்முடைய சொந்த வீடுகளில் சிறைப்பட்டிருக்கிறோம். இவை ஆதாரமிடப்பட்ட பயங்கள். உதாரணமாக, ஐக்கிய மாகாணங்களில் ஒவ்வொரு மூன்று பெண்களில் ஒருத்தி தன் வாழ்நாட்காலத்தில் ஒருமுறையாவது தாக்கப்படக்கூடும். அங்குள்ள அறுவைச் சிகிச்சை தலைமை நிபுணர் குறிப்பிட்டதாவது: “ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய நாற்பது இலட்சம் அமெரிக்க மக்கள் பயங்கரமான வன்முறைச் செயலுக்கு—கொலை, கற்பழித்தல், மனைவியை அடித்தல், சிறுவர்புணர்ச்சி, கொள்ளையடித்தல் போன்ற செயலுக்குப்—பலியாகிவிடுகின்றனர்.” இப்படிப்பட்ட குற்றச்செயல் அநேக நாடுகளில் சர்வசாதாரணமாகிவிட்டிருக்கிறது, இது மக்கள் மற்றவர்களை நம்பும் தன்மையை வெகுவாய்ச் சேதப்படுத்திவிட்டிருக்கிறது.
7 பின்தங்கிய நாடுகளில் பெரும்பான்மையான மக்கள் வறுமையில் வாடுகின்றனர். அதிலிருந்து அவர்களை எவரேனும் மீளச் செய்வார்கள் என்ற நம்பிக்கை எவருக்கும் இல்லை. அப்படிப்பட்ட ஒரு நாட்டின் ஜனாதிபதி சொன்ன பிரகாரம், ஒரு மாநிலத்தில் பிறக்கும் ஒவ்வொரு 1,000 குழந்தைகளில் 270 குழந்தைகள் ஒரு வயதை எட்டுவதற்குள்ளாகவே மரித்துவிடுகின்றனர். 100 வீடுகளுக்கு ஒரு வீட்டில்தான் தண்ணீர் இருக்கிறது. மற்றொரு நாட்டு அரசு சொல்லுகிறபடி, அதன் 60 சதவிகித பிள்ளைகள் அத்தியாவசிய தேவையின்றி இருக்கிறார்கள், மற்றும் கைவிடப்பட்ட 70 இலட்சம் பிள்ளைகள் “எழுதப்படிக்கத் தெரியாதவர்களும், பிரிந்து வாழ்கிறவர்களும் வேலைவாய்ப்பில்லாத புறக்கணிக்கப்பட்ட பிள்ளைகளாகவும் வளருகிறார்கள்.” ஐக்கிய மாகாணங்களில் வீடிழந்த இளைஞரின் எண்ணிக்கை 5,00,000 என்று கணக்கிடப்பட்டிருக்கிறது, ஆனால் உண்மையான எண்ணிக்கை அதைவிட உயர்ந்தது என்று சிலர் சொல்லுகின்றனர். அப்படிப்பட்ட இளைஞர்கள் தங்கள் பெற்றோரில், சமுதாயத்தில், சட்டம் மற்றும் ஒழுங்கில், அல்லது தலைவர்களின் வாக்குறுதிகளில் எந்தளவான நம்பிக்கை வைத்திருக்க முடியும்?
8 பொருளாதாரப் பிரச்னைகள் பணக்கார நாடுகளையும் தாக்குகிறது. 1930-களில் ஏற்பட்ட மகா பொருளாதார மந்தம் முதற்கொண்டு ஏற்பட்டிருக்கும் அதிகளவான வங்கிகளின் வீழ்ச்சி, அண்மையில் ஐக்கிய மாகாணங்களில்தான் அதிகம். பொருளியலர் ஒருவர் எழுதினதாவது: “வீழ்ச்சியுறுவதற்கு முன்பு “1920-களில் இருந்ததுபோலவே வலுவற்ற ஒரு வங்கி முறைதான் இன்று இதன் மொத்த பலன்.” உலக பொருளாதாரத்தில் “பலமான பெருஞ் சேதத்தை ஏற்படுத்த வல்ல ஒரு புயலைப்” பற்றிப் பேசினார். மற்றொருவர் சொன்னார்: “அவசர உணர்வு ஏற்படுவதற்குக் காரணம், சர்வதேசப் பொருளியல் முறையில் காணப்படும் இந்த அழுத்தங்கள் தோன்றும் நிலையில் இல்லை; அவை ஏற்கனவே வந்துவிட்டன.” இந்தப் பிரச்னையிலிருந்து தேசங்களை மீட்டு வழிநடத்துவதற்குப் பொருளியலர்கள் மீது நம்பிக்கை வைக்கலாமா? தங்களுடைய முன்னறிவிப்புப் பதிவுகள் “அநேகமாய்க் குழப்பத்தைப் பரப்புகின்றன என்பதில் சந்தேகம் ஏற்படாத அளவுக்குத் திகைக்க வைப்பதாயிருக்கிறது” என்று அவர்களில் ஒருவர் சொன்னார்.
தவறான இடத்தில் வைக்கப்பட்ட நன்னம்பிக்கை
9 உலகம் இந்த 20-ம் நூற்றாண்டிற்குள் பிரவேசித்தபோது நிலவிய நன்னம்பிக்கைக்கும் இந்த அனைத்து காரியங்களுக்கும் என்னே வித்தியாசம்! சமாதானத்தின் சில பத்தாண்டுகள் இருந்தன, மற்றும் சமாதானமும் செழுமையும் புதிய உச்சநிலைகளை அடையும் என்று உணரப்பட்டது. ஆனால் அந்த எதிர்பார்ப்பு 1914-ன் முதல் உலக மகா யுத்தத்தில் நொறுக்கப்பட்டது. பயங்கரமான இரண்டாம் உலக மகா யுத்தத்திற்குப் பின்பு, 1945-ல் ஐக்கிய நாடுகள் சாசனம் கையெழுத்தானது. போருக்குப் பின்பிருக்கப்போகும் உலக சமாதானம், செழிப்பு மற்றும் நீதி குறித்த அவர்களுடையத் தரிசனத்தை ஐக்கிய நாடுகள் எழுத்தில் விவரித்தது. அன்மையில் வெளிவந்த ஓர் அறிக்கை பின்வருமாறு சொன்னது: “கடைசிப் பத்திரம் ஒவ்வொரு கண்டத்தையும், இனத்தையும், மதத்தையும் பிரதிநிதித்துவஞ்செய்யும் 51 நாடுகளால் கையெழுத்தானது.” என்றபோதிலும் ஒரு மதத்தார் இதில் பிரதிநிதித்துவம் செய்யப்படவில்லை, பிரதிநிதித்துவம் செய்யப்பட விரும்பவுமில்லை. அவர்கள்தான் யெகோவாவின் சாட்சிகள். அந்தச் சமாதானத்துக்கும், செழிப்புக்கும், நீதிக்குமான அந்த வாக்குறுதிகள் இந்த உலகத்தின் எந்த ஒரு தேசத்தாலும் அல்லது ஐக்கிய நாடுகள் சங்கம் போன்ற எந்த ஒரு கூட்டு நிறுவனத்தாலும் நிறைவேற்றப்படாது என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள்.
10 அதே அறிக்கை பின்வருமாறு சொல்லுகிறது: ‘நாற்பது ஆண்டுகளுக்குப் பின்பு அந்த இலட்சியங்களையும் உண்மை நிலையையும் விமர்சித்துப் பார்ப்பது பொருத்தமானது. அத்தாட்சியோ வருந்தத்தக்கது. சமத்துவக் குறைவு, பாதுகாப்புக் குறைவு, கூடுதல் வன்முறை ஆகியவைதான் இன்றைய உண்மை நிலை. உணவு, தண்ணீர், உறைவிடம், உடல்நலம் மற்றும் கல்வி ஆகியவற்றின் குறைவை அனுபவிக்கும் மக்கள் தொகை அதிகமதிகமாய் வளர்ந்துகொண்டிருக்கிறது. இது 1945-ன் கனவில் இடம் பெறவில்லை.’ அது தொடர்ந்து கூறியது: ‘அச்சம் மற்றும் வறுமை இல்லாமல் எல்லாரும் வாழலாம் என்பதை உறுதிப்படுத்த நாடுகள் ஒன்று சேர்ந்து நாற்பது ஆண்டுகளுக்குப் பின்பு இந்த 1980-களின் உண்மை உலகம் மனிதவர்க்கத்தின் கால்பகுதியினர் கடுமையான வறுமையிலிருக்கும் உலகமாக இருக்கிறது. பசிபட்டினியால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை ஒரு நாளைக்கு 50,000-ஆக இருக்கிறது.’ அப்படியிருந்தும் இந்தத் தேசங்கள் போருக்காக மணிக்கு நூற்றைம்பது கோடி ரூபாய்க்கும் அதிகமாகச் செலவு செய்கின்றன.
11 பல நூற்றாண்டுகளாகத் திறந்திருந்த வாய்ப்புகளுக்குப் பின்னான இந்த இருண்ட பதிவைக் கவனிக்குமிடத்து, இந்தப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான மனிதரின் வாக்குறுதிகளை நாம் நம்ப முடியுமா? ஒரு பெரியக் கப்பல் தலைவனின் வார்த்தைகள் எந்தளவுக்கு நம்பத்தகுந்ததாக இருந்ததோ அந்தளவில்தானே இப்படிப்பட்ட வாக்குறுதிகளும் இருக்கின்றன. அந்தக் கப்பல் தலைவன் சொன்னான்: “ஒரு பெரிய கப்பலில் நீர் உள்ளே கசிந்து அமிழ்ந்துவிடும் எந்த ஒரு நிலைமையையும் நான் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. . . . நவீன கப்பற்கட்டும் தொழில் வளர்ச்சி மிஞ்சிவிட்டது.” அந்தக் கப்பலின் ஒரு மாலுமி ஒரு பயணியிடம் பின்வருமாறு சொன்னான்: “இந்தக் கப்பலைக் கடவுள்கூட அமிழ்த்திட முடியாது.” என்றபோதிலும் அந்தக் கப்பல் டைட்டானிக் 1912-ல் 1,500 பேருடன் கடலில் அமிழ்ந்தது. 1931-ல் ஐக்கிய மாகாணங்களின் தேசிய கல்வி நிறுவனம் சொன்னதாவது, கல்வியின் மூலம் “குற்றச் செயல் 1950-க்குள் முழுமையாய் நீக்கப்பட்டிருக்கும்.” 1936-ல் பிரிட்டிஷ் பத்திரிகை எழுத்தாளர் ஒருவர் எழுதினதாவது: “1960-க்குள் உணவு, உடை மற்றும் உறைவிடத்திற்கான செலவு காற்றுக்கு ஈடாக ஆகிவிடும்.” இன்றைய உண்மை நிலைகள் அந்த வாக்குறுதிகளைப் பொய்யாக்கிவிட்டன என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் அல்லவா?
முழு நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்
12 எனவே, இந்தப் பயம் மிகுந்த காலங்களில் நமக்கு உதவும் ஒரு நம்பிக்கைக்கான ஊற்றுமூலம் நிச்சயமாய்த் தேவைப்படுகிறது. அது மனித ஊற்றுமூலமாய் இருக்கமுடியாது. மனிதவர்க்கம் தன்னை மிகப் பெரிய பிரச்னைக்குள் கொண்டுவந்துவிட்டிருப்பதால் அதிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முடியாத நிலையிலிருக்கிறது. முழு நம்பிக்கைக்குப் பாத்திரமான அந்த ஊற்றுமூலம் மனிதரின் சிருஷ்டிகராகிய யெகோவா தேவன். இந்த உலகம் ஏன் இந்த நிலைமையில் இருக்கிறது, எங்கே போய்க் கொண்டிருக்கிறது, இதைக் குறித்து தாம் என்ன செய்யப் போகிறார் என்பதை அவர் அறிவார். இந்தத் தகவலை அவர் நமக்காக, நம்முடைய வழிநடத்துதலுக்காகக் கொடுத்திருக்கும் அந்தப் புத்தகத்தில், பைபிளில், வெளிப்படுத்தியிருக்கிறார். அதைக் குறித்து 2 தீமோத்தேயு 3:16, 17 சொல்லுகிறதாவது: “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ்செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக அவைகள் உபதேசத்துக்கும் கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும் நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.”
13 அந்த அழுத்தந்திருத்தமான கூற்றுகளைக் கவனியுங்கள். கடவுளுடைய வார்த்தை சீர்த்திருத்துகிறது. எது சீரானது அல்லது சரியானது என்று சொல்லுகிறது. அது நம்மை முழுமையாகத் தேறினவர்களாயிருக்கச் செய்கிறது. நற்கிரியைகளைச் செய்ய நம்மை முழுமையாகத் தகுதியுள்ளவர்களாக்குகிறது. உண்மைதான், பைபிள் என்னவாக இருக்கிறதோ, அப்படியாக அதை அநேகர் ஏற்றுக்கொள்வதில்லை—கடவுளுடைய வார்த்தையாக ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால் யெகோவாவின் சாட்சிகள் ஏற்றுக்கொள்கிறார்கள். (1 தெசலோனிக்கேயர் 2:13) பல கோடி பால்வீதி மண்டலங்களையும், கோடாகோடி நட்சத்திரங்களையும் கொண்ட இந்தச் சர்வலோகத்தைப் படைத்தவர் ஒரு புத்தகத்தின் ஊற்று மூலராக இருக்க முடியும் என்று நாம் மதித்துணருகிறோம். அதே சமயத்தில், சத்தியத்தைத் தேடுகிறவர்களின் நன்மைக்காக அது திருத்தமாகக் காக்கப்படும்படிச் செய்யும் திறமையும் அவரிடம் இருக்கிறது.—1 பேதுரு 1:25.
14 நம்முடைய பயம் நிறைந்த காலங்களில் நம்புந்தன்மை குறித்து கடவுளுடைய வார்த்தை நமக்கு என்ன சொல்லவிருக்கிறது? அதன் குறிப்புகள் உண்மையில் நிலவும் காரியங்களுக்கு முழு அளவில் ஒத்திருக்கின்றன. எரேமியா 10:23 திருத்தமாகக் கூறுகிறது: “யெகோவாவே, மனுஷனுடைய வழி அவன் வசத்தில் இல்லையென்றும், தன் நடையை நடத்துவது நடக்கிறவன் வசத்தில் இல்லையென்றும் அறிவேன்.” சங்கீதம் 146:3 சரியாகச் சொல்லுகிறது: “பிரபுக்களிலும், இரட்சிக்கத் திராணியில்லாத மனுப்புத்திரனிலும் நம்பிக்கை வையாதேயுங்கள்.”—தி.மொ.
15 நம்மிலுங்கூட நாம் நம்பிக்கை கொள்ளக்கூடாது என்று கடவுளுடைய வார்த்தை எச்சரிக்கிறது, ஏனென்றால் மனிதர்கள் அபூரணர். (ரோமர் 5:12) எரேமியா 17:9 குறிப்பிடுவதாவது: “எல்லாவற்றைப் பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது,” இதனிமித்தமாக நீதிமொழிகள் 28:26 பின்வருமாறு அறிக்கைச் செய்கிறது: “தன் இருதயத்தை நம்புகிறவன் மூடன். ஞானமாய் நடக்கிறவனோ இரட்சிக்கப்படுவான்.” இரட்சிப்பை அளித்திடும் இந்த ஞானத்தை நாம் எங்கே காணலாம்? நீதிமொழிகள் 9:10 பதிலளிக்கிறது: “யெகோவாவுக்குப் பயப்படுவதே ஞானத்தின் ஆரம்பம், பரிசுத்தரை அறியும் அறிவே உணர்வாம்.” (தி.மொ.) ஆம், சிருஷ்டிகருடைய ஞானம் மட்டுமே நம்மை இந்தப் பயம் நிறைந்த உலகில் நம்மை வழிநடத்திச் செல்ல முடியும். எனவே நீதிமொழிகள் 3:5, 6 பின்வரும் அறிவுரையை வழங்குகிறது: “உன் உணர்வில் சாயாதே, உன் முழு நெஞ்சோடும் யெகோவாவை நம்பு, உன் எல்லா வழியிலும் அவரை நினை; அப்பொழுது உன் பாதையை நேராக்குவார்.”—தி.மொ.
உலக மதங்களைக் கடவுள் நோக்கும் விதம்
16 இந்த உலக மதங்கள் சிக்கிக்கொண்டிருக்கும் மரணத்துக்கேதுவான கண்ணியை நாம் தவிர்ப்பதற்குக் கடவுளிடமிருந்து வரும் இந்த ஞானம் நமக்கு உதவும். தாங்கள் மதப் பற்றுடையவர்களாய் இருப்பதால் தங்களை நீதிமான்களாக எண்ணிக்கொண்டிருக்கின்றனர். லூக்கா 18:9-ல் விவரிக்கப்பட்டிருக்கும் அதே மனநிலை கொண்டவர்கள்: “தங்களை நீதிமான்களென்று நம்பி மற்றவர்களை அற்பமாயெண்ணின சிலரைக் குறித்து அவர் ஒரு உவமையைச் சொன்னார்.” தான் ஒரு பாவியல்ல என்று ஒரு பரிசேயன் கடவுளுக்கு நன்றிசெலுத்தினான், ஆனால் ஒரு ஆயக்காரனோ, “தேவனே, பாவியாகிய என்மேல் கிருபையாயிரும்,” என்று மன்றாடினான். இயேசு சொன்னார்: “அவனல்ல [பரிசேயன் அல்ல], இவனே [இந்தப் பாவியே] நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப் போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஏனெனில் தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்பவான்.”—லூக்கா 18:10-14.
17அந்தப் பரிசேயன் கடவுளுக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்தவில்லை. மாறாக, தன்னுடைய சொந்தத் தராதரத்தின் அடிப்படையில் தான் நீதிமான் என்பதாக உணர்ந்தான். ஆனால் கடவுள் அவ்விதம் நோக்கவில்லை. (மத்தேயு 23:25-28) கடவுளுடைய வார்த்தை ஏசாயா 66:2-ல் சொல்லியிருக்கும் காரியத்தைப் பிரதிபலித்தது அந்த மனத்தாழ்மையுள்ள பாவிதான்: “சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு, என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப் பார்ப்பேன்.” அந்த யூத மதத் தலைவர்கள் கடவுளுடைய வசனத்துக்கு நடுங்கவில்லை. அவர்கள் அசட்டை செய்தார்கள். தாங்கள் விரும்பியதையே செய்தார்கள் மற்றும் அவற்றைக் கடவுள் அங்கீகரித்ததாகவும் நினைத்தார்கள். என்றபோதிலும், இயேசு அவர்களிடம் பின்வருமாறு சொன்னார்: “பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படிச் செய்கிறவனே பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.”—மத்தேயு 7:21-23.
18 முதல் நூற்றாண்டிலிருந்த அந்த மதத் தலைவர்கள் கடவுளை நம்பவில்லை. மாறாக, கடவுளுடைய பிரமாணங்களை மீறின பாரம்பரியங்களில்தான் தங்களுடைய நம்பிக்கையை வைத்தனர். (மத்தேயு 15:3, 9) எனவே இயேசு அவர்களிடம்: “உங்களுடைய வீடு உங்களுக்கு பாழாக்கிவிடப்படும்.” (மத்தேயு 23:38) அவர்களுடைய யூத மதத்தைக் கடவுள் நிராகரித்துவிட்டார் என்பதற்கு அத்தாட்சியாக நம்முடைய பொது சகாப்தம் 70-ம் ஆண்டில் அவர்களுடைய தேசிய தலைநகராயிருந்த எருசலேமும் அவர்களுடைய ஆலயமும் ரோம சேனையால் பாழக்கப்பட்டது. இன்றைய நிலை எவ்விதத்திலும் வித்தியாசமாயில்லை. உலக மதங்கள் தங்களுடைய சொந்த வணக்க தராதரங்களை வைத்திருக்கின்றன, அவை கடவுளுடைய தராதரங்களுக்கு இசைவாயிருப்பதில்லை. ஆக அவர்கள் அவருடைய சித்தத்தைச் செய்வதில்லை, ஆனால் தங்களுடைய சொந்த சித்தத்தையே செய்கிறார்கள். எனவே கடவுளுடைய பார்வையில் அவர்கள் அக்கிரமச் செய்கைக்காரர்களாகக் கருதப்படுகின்றனர். (தீத்து 1:16) இந்த மதங்கள் அனைத்தையும் கடவுள் கைவிட்டுவிட்டார் என்பதற்கு அத்தாட்சியாக, முதல் நூற்றாண்டில் எருசலேமும் அதன் ஆலயமும் ரோம சேனையால் அழிக்கப்பட்டதுபோல், அவை இந்த உலக தேசங்களால் பாழக்கப்படும்.—வெளிப்படுத்துதல், அதிகாரங்கள் 17, 18.
19 உலக மதங்களைப் பற்றிய இந்த நிர்ணயிப்பு அதிகக் கடுமையானதா? கடவுளுடைய நியாயத்தீர்ப்பு சீக்கிரத்திலேயே அவர்களுக்கெதிராக வரும் என்பது குறித்து நாம் எப்படி நிச்சயமாயிருக்கலாம்? கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள ஒரு மதம் என்ன செய்ய வேண்டும்? தம் பக்கமாகத் திரும்பி தம்முடைய சட்டங்களுக்குத் தங்களைக் கீழ்ப்படித்திக்கொள்ளும் உண்மை மனமுள்ள ஆட்களை யெகோவா பாதுகாப்பார் என்பதற்கு ஏதாவது சரித்திர முன்நிகழ்ச்சிகள் உண்டா? இந்தக் கேள்விகளின்பேரில் பின்தொடரும் கட்டுரை குறிப்புகளைக் கொண்டிருக்கும். (w88 4⁄15)
விமர்சனக் கேள்விகள்
◻ நம்முடைய காலத்தில் அவநம்பிக்கைக்குக் காரணம் என்ன?
◻ இந்த உலகின் நன்னம்பிக்கை ஏன் தவறாக வழிநடத்தப்பட்டது?
◻ நாம் யாரை முழுமையாக நம்பலாம்? அவர் நமக்கு என்ன வழிகாட்டியைக் கொடுத்திருக்கிறார்?
◻ நாம் ஏன் நம்மில் அல்லது மற்ற மனிதர்களில் நம்பிக்கை வைக்கக்கூடாது?
◻ இந்த உலகத்தின் மதங்களைக் கடவுள் எவ்விதம் நோக்குகிறார்?
[கேள்விகள்]
1. நம்முடைய காலத்தைக் குறிப்பிட்டுக் காட்டும் தன்மை யாது? இது என்ன தேவைப்படுகிறது என்பதைக் காண்பிக்கிறது?
2. இந்தத் தலைமுறையிலிருக்கும் பயமும் அவநம்பிக்கையும் எவ்விதம் முன்னறிவிக்கப்பட்டது?
3. நம்புந்தன்மை நம்முடைய சகாப்தத்தின் அவசரத் தேவையாக இருக்கிறது என்பதற்கு என்ன அத்தாட்சி இருக்கிறது?
4. அநேக இளம் ஆட்கள் எப்படி பயத்தால் பாதிக்கப்படுகின்றனர்?
5. அவர்கள் பேசக்கூடுமானால், பேரளவில் குற்றமற்ற, உதவியற்ற இளைஞர்களில் அந்த மற்ற தொகுதியினர் எப்படி உணரக்கூடும்?
6. குற்றச் செயல் எப்படி நம்முடைய காலத்தின் அவநம்பிக்கையை அதிகரித்திருக்கிறது?
7. மோசமான பொருளாதார நிலைமைகள் ஏன் அவநம்பிக்கைக்குக் காரணமாயிருக்கிறது?
8. (எ) பணக்கார நாடுகளின் நிலையான தன்மையும் பூகோள அளவான பொருளாதாரமும் எப்படி அச்சுறுத்தப்படுகிறது? (பி) பொருளாதாரப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண நிபுணர்கள் எந்தளவுக்கு நம்பப்படலாம்?
9. (எ) இந்த நூற்றாண்டின் திருப்பத்தில் நிலவிய நம்பிக்கையான மனநிலைக்கு என்ன ஏற்பட்டுவிட்டது? (பி) யெகோவாவின் சாட்சிகள் ஏன் 1945-ம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் சாசனத்தில் கையெழுத்திட விரும்பாமலிருந்திருக்கக்கூடும்?
10. 1945-ல் ஐக்கிய நாடுகளின் கனவோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் இன்றைய உண்மை நிலை என்னவாக இருக்கிறது?
11. மேன்மையான ஓர் உலகத்தை உருவாக்குவதன் சம்பந்தமான மனிதரின் வாக்குகள் எந்தளவுக்கு நம்பக்கூடியவையாய் இருக்கின்றன?
12. நாம் யாரை முழுமையாக நம்பலாம்? அவர் நமக்கு என்ன வழிகாட்டியைக் கொடுத்திருக்கிறார்?
13. பைபிளைக் குறித்து யெகோவாவின் சாட்சிகள் எதை மதித்துணருகிறார்கள்?
14. பைபிள் எவ்விதத்தில் இன்றைய உண்மை நிலைகளுக்கு இசைவாய்ப் பேசுகிறது?
15. நம்புவது குறித்து பைபிள் நமக்கு என்ன ஆலோசனை கொடுக்கிறது?
16. இயேசுவின் காலத்திலிருந்த பரிசேயனைப் போன்று உலக மதங்கள் என்ன தவறான எண்ணத்திலிருக்கின்றன?
17. பரிசேயர்களைப் போன்ற மதங்களின் முயற்சிகளைக் கடவுள் எவ்வாறு நோக்குகிறார்?
18. தம்மை வணங்குவதாக உரிமைபாராட்டியும் அவருடைய பிரமாணங்களுக்கு இசைவாய் நடவாத மதங்களைக் கடவுள் எப்படி நியாயந்தீர்ப்பார்?
19. மதத்தைக் குறித்து என்ன கேள்விகள் எழுப்பப்படலாம்?
[பக்கம் 13-ன் படம்]
தான் நீதிமானாக இருப்பதாய் அந்தப் பரிசேயன் நினைத்துக் கொண்டான் ஆனால் அந்தப் பாவமுள்ள மனிதன் மனத்தாழ்மையுடன் கடவுளுடைய இரக்கத்துக்கு மன்றாடினான்
[பக்கம் 15-ன் படம்]
முதல் நூற்றாண்டில் ரோம சேனை எருசலேமை அழித்த அந்த சமயத்தில் கடவுள் யூத மதத்தைக் கண்டனம் செய்ததுபோல, தம்முடைய சித்தத்தைச் செய்யாத மதங்களைக் கடவுள் கண்டனம் செய்கிறார்