நேர்மையாயிருத்தல் என்பதன் அர்த்தம் என்ன?
நேர்மையாக இருத்தல் என்பது உண்மையாயிருத்தலை ஏய்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடாமலிருத்தலைக் குறிக்கிறது. மற்றவர்களுடன் கொள்ளும் தொடர்புகளில் பாரபட்சமின்றியிருத்தலையும், ஒளிவு மறைவற்றவராயும் மதிப்புக்குரியவராயும், ஏமாற்றாதவராயும் அல்லது தவறாக வழிநடத்தாதவராயுமிருத்தலை கேட்கிறது. நேர்மையுள்ள ஓர் ஆள் உத்தமமான ஒரு மனிதனாக இருப்பான். எல்லா சமயங்களிலும் நம்பகமானவனாக இருப்பான். அவன் தன் உடனாளியை ஒருபோதும் ஏமாற்றமாட்டான். நாம் எல்லாரும் அவ்வாறே நடத்தப்பட விரும்புகிறோம் அல்லவா? எனவே நேர்மை என்றைக்காவது காலத்துக்கு பொருத்தமற்ற ஒன்றாக ஆகிவிடக்கூடுமா?
மேற் சொல்லிய இந்த விளக்கங்களிலிருந்து உண்மை வணக்கத்தானென்று உரிமை பாராட்டக்கூடிய ஒருவன் ஏன் நேர்மையுள்ள ஆளாக இருக்க வேண்டும் என்பதை ஒரு கிறிஸ்தவனால் உடனடியாக காண முடிகிறது. (யோவான் 4:24) அவன் “சத்தியமுள்ள கடவுளாகிய யெகோவாவை தொழுது கொள்ளுகிறான்.” (சங்கீதம் 31:5; தீத்து 1:2) நியாயமாகவே, “உண்மையுள்ள மனிதர்” மட்டுமே அவரை பிரதிநிதித்துவம் செய்ய தகுதி பெறுகிறார்கள்.—யாத்திராகமம் 18:21, புதிய உலக மொழிபெயர்ப்பு ஒத்துவாக்கிய பைபிள், அடிக்குறிப்பு.
நேர்மை நமது வாழ்க்கையின் பல அம்சங்களை பாதிக்கிறது. எனவே, அப்போஸ்தலனாகிய பவுல் ஏன் பின்வருமாறு சொன்னான் என்பது புரிந்துகொள்ளத்தக்கதே. “நாங்கள் எல்லாவற்றிலும் யோக்கியமாய் [நேர்மையாய், NW] நடக்க விரும்புகிறோம்.” இது பேச்சிலும், வேலையிலும், குடும்ப விவகாரங்களிலும், வியாபார நடவடிக்கைகளிலும், அரசாங்கம் நம்மீது விதிக்கக்கூடிய சட்டப்பூர்வ தேவைகள் எதுவாயிருப்பினும் அவற்றில் நேர்மையாய் நடப்பதை உட்படுத்துகிறது.—எபிரெயர் 13:18.
நம்முடைய பேச்சில்
ஜனங்கள் உண்மையை பேச தவறும் அநேக சந்தர்ப்பங்கள்—அதில் எவ்வித தீங்குமில்லை என்றும் அது ஏற்றுக்கொள்ளப்படத்தக்கதே என்றும் கருதப்படக்கூடிய அநேக சந்தர்ப்பங்கள்—இருக்கின்றன. வேலை செய்யும் மணிநேரங்களைப் பற்றிய அறிக்கையில் ஏமாற்றுகிறார்கள். தங்களை அழைக்க வருபவர்களிடம் உண்மையற்ற காரியங்களைச் சொல்லும்படி பிள்ளைகளை தூண்டுகின்றனர். காப்புறுதி ஏஜெண்டுகளிடம் திருத்தமற்ற தகவல்களைக் கொடுக்கின்றனர். வேலையிலிருந்து விடுப்பு பெறுவதற்காக நோய் வாய்ப்பட்டிருப்பதாக பொய் சொல்லுகின்றனர். இங்கே நாங்கள் ஒரு சிலவற்றையே குறிப்பிட்டிருக்கிறோம்.
சில வேளைகளில், மற்றவர்களிடம் நாம் சொல்ல விரும்புவதை எழுத்தில் எழுதிவிட வேண்டியதாயிருக்கிறது. வாய் மொழியாக ஒருபோதும் பொய்யே சொல்லாத சில தனியாட்கள், வரிக்காக வருமானத்தை அறிக்கை செய்வது அல்லது சர்வதேச எல்லைகளில் சுங்கவரி ஏஜண்டுகளிடம் பொருட்களைப் பற்றி வகைப்படுத்திய ஓர் அறிக்கையை எழுத்தில் சமர்ப்பிப்பது போன்றவற்றிற்கும் வரும்போது, சில காரணத்தை முன்னிட்டு அது வித்தியாசப்பட்ட ஒரு விஷயம் என்று உணருகின்றனர். இந்த ஏமாற்று வேலை எல்லா வரி செலுத்துபவர்களையும் பாதிக்கிறது. இது அயலான் மீதுள்ள உண்மையான அன்பாகுமா? கூடுதலாக, கிறிஸ்தவர்கள் “இராயனுக்குரியதை இராயனுக்கு செலுத்த வேண்டும்” என்ற கடமையின் கீழிருக்கிறார்களல்லவா?—லூக்கா 20:25; 10:27; அத்துடன் ரோமர் 13:1, 2, 7, 8-ஐயும் பாருங்கள்.
நாம் எதை பேசுகிறோமோ, அதில் நாம் நிச்சயமாகவே “சத்தியமுள்ள கடவுளை” பின்பற்ற விரும்புகிறோம். “பொய்க்குப் பிதா”வை அல்ல. (சங்கீதம் 31:5; யோவான் 8:44) பழி பாவங்களுக்கு அஞ்சாத மனிதர்கள் திரித்துக் காட்டுவதற்கும், ஏமாற்றுவதற்கும் வஞ்சகமாக பேசுவதற்கும் முயலக்கூடும். ஆனால் நம்முடைய அயலாரிடம் பொய் பேசுவது அவர்களை நேசிப்பதாகாது. அதோடு பொய்யர்களுக்கு மெய்யான எதிர்காலம் கிடையாது.—எபேசியர் 4:25; வெளிப்படுத்துதல் 21:27; 22:15.
வேலை செய்யுமிடத்தில்
நாம் பெற்றுக்கொள்ளும் சம்பளத்துக்காக அந்நாளிற்குரிய வேலையை நேர்மையாக செய்வது நியாயமான மற்றும் வேதப்பூர்வமான தேவையாக இருக்கிறது. (கொலோசெயர் 3:22-24) என்றபோதிலும் ஆயிரக்கணக்கான மணிநேர திருடர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அதிக நேர இடைவேளைகளை எடுத்துக்கொள்வது, வேலைக்கு கால தாமதமாக வருவது வேலை செய்யுமிடத்திலிருந்து சீக்கிரமாய் போய்விடுவது ஆகியவற்றின் மூலமும் வேலைக்கு வந்த பிற்பாடு தங்களுடைய சிகையலங்காரத்தில் அதிக நேரத்தை செலவிடுவது, உரிமை பெறாமல் சொந்த விவகாரங்களுக்கு நிறுவன தொலைபேசிகளை நீண்டநேரம் பயன்படுத்துவது, நிறுவன நேரத்தில் சொந்த அலுவல்களை செய்துகொள்வது மேலும் தூங்குவது, ஆகியவற்றின் மூலம் நிறுவனத்தின் நேரத்தை வீணடிக்கிறார்கள். அவர்களுடைய திருடுதல் ஒவ்வொருவருக்கும் பாதிப்பை அதிகரிக்கிறது.
தொழிலில் மற்ற வகையான திருட்டுகள் அங்குள்ள பொருட்களையும், சாதனங்களையும் தனிப்பட்ட உபயோகங்களுக்காக எடுத்துக்கொள்வதை உட்படுத்துகிறது. ஆனால் சிலர் நாங்கள் தேவைக்கு குறைந்த போதாத சம்பளத்தை பெறுவதால் அதை சரி செய்வதற்காக எடுப்பதை காட்டிலும் அதிகமாக ஒன்றையும் நாங்கள் எடுப்பதில்லையே என்று உரிமைப் பாராட்டுகின்றனர். இது கஞ்சத்தனமான எஜமானரிடம் தாங்கள் காரியங்களை ஈடு செய்துகொள்வதை போன்றிருப்பதாக கருதுகின்றனர்! ஆனால் மேலாளருக்கு அல்லது எஜமானருக்கு தெரியாமல், அல்லது அவருடைய அனுமதியில்லாமல் பொருட்களை எடுப்பதாக இருந்தால், அது உண்மையில் ஒருவகையான திருட்டாகும்.
இந்த எல்லா சூழ்நிலைமைகளிலும் மெய் கிறிஸ்தவர்கள் பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்ட பின்வரும் அறிவுரையை பொருத்திப் பிரயோகிப்பார்கள்: “திருடுகிறவன் இனித் திருடாமல், குறைச்சலுள்ளவனுக்குக் கொடுக்கத்தக்கதாகத் . . . தன் கைகளினால் நலமான வேலைசெய்து, பிரயாசப்படக்கடவன்.”—எபேசியர் 4:28; அப்போஸ்தலர் 20:35.
என்றபோதிலும், உங்களுடைய எஜமானர், ஒரு நேர்மையற்ற செயலையோ அல்லது ஒரு சட்ட விரோதமான செயலையோ நடப்பிக்கும்படி சொல்லி அதை செய்யாமற் போனால் உங்களை வேலையை விட்டு நீக்குவதாக மிரட்டினால் அப்பொழுது என்ன? இதோ ஒரு சில உதாரணங்கள்: ஒரு மோட்டார் வாகனத்தில் புதிய சாமான் எதையும் பொருத்தாமலேயே பொருத்தினதாக சொல்லி வாடிக்கையாளரிடம் பணம் வசூலிக்க வேண்டும்; வாடிக்கையாளர்களிடம் அதிக விலையை வசூலிப்பதற்காக குறைந்த விலையுள்ள, மட்டரகமுள்ள விற்பனை பொருட்களை பெட்டிகளில் போட்டு வைக்க வேண்டும். அதே விலையுள்ள அல்லது குறைந்த விலையுள்ள ஒரு பொருளை புதியது என்றும் “குறைந்த விலை” என்றும் எழுதி வைக்க வேண்டும். அநேக தொழிலாளிகள் அது எஜமானரின் உத்திரவாதம் வேலையாளருடையது அல்ல என்று கருதுகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலைமையை எதிர்ப்படுகையில் யெகோவாவின் சாட்சிகள் என்ன செய்திருக்கின்றனர். டாரில். ஜே—— குறிப்பிடுவதாவது:
“ஒரு மளிகை கடையில் உற்பத்தி மேலாளராக பணிபுரிந்தபோது நிர்வாகிகள் என்னை அணுகி எந்த பொருளின் விலையையும் ஏற்றாமலேயே லாபத்தை அதிகரிக்கும்படி கேட்டார்கள். இதை சாதிப்பதற்கு சொல்லப்பட்ட யோசனைகள்: சில பொருட்களின் எடையை மிகைப்படுத்திக்காட்ட வேண்டும். பொருட்கள் கடனாக வழங்கப்பட்டிருப்பது போன்ற ‘போலி’ கடன் சீட்டுகளை பொருட்களை வழங்குபவரிடம் ஒப்படைப்பது—இவை சாதாரண வழக்கங்களே. ஆனால் நேர்மையற்றவை.”
டாரில் என்பவன் திரித்துக்கூறவும் ஏமாற்றவும் மறுத்துவிட்டான். (நீதிமொழிகள் 20:23) சில வாரங்கள் கழித்து அவன் வேலையிலிருந்து நிறுத்தப்பட்டான். தன்னுடைய வேலையில்லாமையின் பாதிப்புகளை தன் குடும்பத்தார் அனுபவிக்க அனுமதிப்பதன் மூலம் அவன் ஞானமற்றவனாக இருந்தானா? நேர்மையாக நடந்துகொண்டதற்காக அவன் மனவருத்தமடைந்தானா? இல்லை. ஏனெனில், என்ன நிகழ்ந்ததென்பதை உடன் விசுவாசி கேள்விப்பட்டபோது அவன் அவனுக்கு வேலை வாய்ப்பளித்தான். டாரில் சொல்வதாவது: “மூன்றிலிருந்து நான்கு வாரங்களுக்குள்ளாக நான் நேர்மையான முறையில் என்னையும் என் குடும்பத்தாரையும் ஆதரிக்க ஆரம்பித்துவிட்டேன். நான் யெகோவாவுக்கு என் உத்தமத்தைக் காத்துகொண்டதற்காக அவரால் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பதை ஒரு சிலாக்கியமாக கருதுகிறேன்.”
மறுபட்சத்தில், நேர்மையுடனிருப்பதன் காரணமாக நீங்கள் ஒரு தொழிலை பெறக்கூடும். நன்கு அறியப்பட்ட சர்வதேச காப்புறுதி நிறுவனம் ஒன்றின் ஏஜண்டு ஒருவர், டொரன்டோ கானடா டவுனிலிருக்கும் வெற்றிகரமான கடை ஒன்றிற்கு பின்வருமாறு சிபாரிசு செய்தார்: “நீங்கள் உங்கள் தொழிலாளர்களுடைய திருட்டு பிரச்னையை தீர்க்க வேண்டுமானால் யெகோவாவின் சாட்சிகளை வேலைக்கு அமர்த்துங்கள்” என்று கூறினார். அந்த ஏஜண்டு விவரித்ததாவது: ‘நான் மற்றொரு பட்டணத்தில் எனது காப்புறுதி பயிற்சியை பெற்றுக்கொண்டிருந்த சமயம் அவர்களுடைய காப்புறுதி நிறுவன வாடிக்கையாளர்களில் ஒரு பெரிய சூப்பர் மார்க்கெட் கடையும் ஒன்றாக இருந்தது. அது இரவில் தங்கள் மளிகை சரக்குகளை திரும்பவும் அலமாரிகளில் அடுக்கி வைப்பதற்கு சாட்சிகளை மட்டுமே வேலைக்கு அமர்த்தியது என்பதை நான் கண்டுபிடித்தேன். மற்ற வேலையாட்களிடம் அவர்கள் மோசமான அனுபவத்தை அடைந்திருந்தார்கள். ஆனால் வேலை நேரத்திற்கு பிற்பாடு வந்து மறுபடியும் சரக்குகளை அடுக்குவதற்கு சாட்சிகளிடம் சாவியை கொடுத்தது முதற்கொண்டு அவர்கள் எதையும் இழக்கவில்லை.’
நேர்மையாயிருப்பதற்கு மற்ற வழிகள்
பணத்தை கடனாக வாங்கும் சமயத்தில் கடன் வாங்குபவர் பெரும்பாலும் தாழ்மையையும் மரியாதையையும் பிரதிபலிக்கிறார். திரும்பவும் தருவதற்கு உறுதியளிக்கும் வார்த்தைகளை கூறுகிறார். உதவிக்காக நன்றியும் சொல்லுகிறார். ஆனால் கடனை திருப்பித்தரும் நேரம் வரும்போது, சில கடன்காரர்கள் மனநிலையில் அதிசயிக்கத்தக்க விதத்தில் இரட்டை மனிதராக மாறிவிடுகின்றனர். கோபம், பகை, பணத்தை திரும்ப பெறுவதற்கு நச்சரிக்கிறார் என்ற குறைகளும் கொடுத்தவருக்கு இரக்கமில்லை என்ற கூற்றுகளும் சர்வ சாதாரணமாக வெளிவருகின்றன. தாராள மனமுள்ளவராய் கடன் கொடுத்தவர் கடன் வாங்கியவரின் கண்களில் இப்பொழுது அரக்கனாக மாறிவிட்டார்! என்றபோதிலும் பைபிள் சொல்வதென்னவெனில், ‘கடன் வாங்கி திருப்பித் தராதவன் துன்மார்க்கன்.’ (சங்கீதம் 37:21, NW; ரோமர் 13:8) நன்றி விசுவாசத்தை நடப்பித்துக் காட்டுவதற்கு ஒரு நாணயமான அளவு தொகையைத் திரும்ப செலுத்துவதற்கும்கூட எந்த ஒரு முயற்சியையும் ஒரு கடன்காரன் எடுக்கவில்லையென்றால் ஒருவேளை கடன் கொடுத்தவரிடம் பேசுவதற்கும்கூட எந்த ஒரு முயற்சியையும் அவன் எடுக்கவில்லையென்றால் அவனுடைய காரியத்தில் அந்த வசனம் உண்மையாக இருக்கும்.
குடும்ப வாழ்க்கையில், அநேக விஷயங்களில் நேர்மை அவசியமாக இருக்கிறது. குடும்பத்தலைவன் தன்னுடைய வருமானம் மற்றும் பண விஷயங்களைக் குறித்ததில் தன் மனைவியிடம் உண்மையுள்ளவனாக இருக்க வேண்டும். தங்களுடைய பாலுறவு நடவடிக்கைகளை தங்களுக்குள்ளாக மட்டுப்படுத்திக்கொள்ளும் காரியம் உட்பட இருவருமே நாணயமுள்ள ஆட்களாக இருப்பது அவசியம். பிள்ளைகள் தங்களுடைய கூட்டுறவு, பொழுது போக்கின் வகைகள், பெற்றோர் தங்களுக்கு குறிப்பிட்டிருக்கும் ஆசைகளுக்கு ஒத்திணங்கிபோதல் போன்ற காரியங்களில் உண்மையுள்ளவர்களாயும் கீழ்படிதலுள்ளவர்களாயுமிருப்பது அவசியம்.—எபேசியர் 5:33; 6:1-3.
சொல்லப்பட்ட எல்லாவற்றிலிருந்தும் உண்மைக் கிறிஸ்தவன் ‘அநியாயத்தை’—துன்மார்க்கச் செயல்கள் நேர்மையின்மை, பொய் பேசுதல், ஏமாற்றுதல், மோசடி செய்தல், ஒழுக்க சீர்க்குலைவுகள் ஆகியவற்றுடன் இணைந்த கெட்ட கனிகளை விட்டு விலக வேண்டும்.—2 தீமோத்தேயு 2:19; ரோமர் 2:21-24.
பலன்களும் நன்மைகளும்
நாணயமும் பாரபட்சமின்மையும் மற்றவர்களுடன் உண்மையான தொடர்புகளும் நேர்மையை ஊக்குவிக்கின்றன. இவ்வாறாக, உறுதியான நம்பிக்கையும் நம்பகமான தன்மையும் நிறைந்த சூழ்நிலைமை உருவாகின்றன. இது ஆரோக்கியமான ஒரு மனநிலைக்கும் நல்லுறவுக்கும் வழிநடத்துகிறது. நம்பிக்கைக்குரிய வாழ்க்கைக்கு ஏற்றதோர் சூழ்நிலையையும், சந்தேகம், அவநம்பிக்கை, மற்றவர்களைப் பற்றிய பயம் ஆகியவை பிறப்பிக்கக்கூடிய எதிர்வாத விளக்கங்களுக்காக நேரத்தையும் சக்தியையும் செலவிட அவசியமில்லாத சூழ்நிலையையும் உண்டாக்குகிறது.—ஏசாயா 35:8-10-ஐ ஒப்பிட்டுப் பாருங்கள்.
நேர்மை ஒரு சுத்தமான மனசாட்சியை கொண்டிருக்க உதவி செய்கிறது. ஏற்கத் தகுந்த விதத்தில் “ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியம் செய்வதற்கு” இவை அத்தியாவசியமானது. (எபிரெயர் 9:14; 1 தீமோத்தேயு 1:19) அது மன சமாதானத்தை கொடுக்கிறது, நிம்மதியான இரவு தூக்கத்தைத் தருகிறது. எவ்வித சங்கட உணர்ச்சியுமில்லாமல் நீங்கள் மற்றவர்களை எதிர்ப்பட முடியும். நேர்மையுடனிருத்தல் தவறிழைப்பில் பிடிபட்டுவிடுவோமோ என்ற அரித்துத்தின்னும் பயத்தை நீக்குகிறது. இந்த முறையில் நாம் மனித கண்ணியத்தையும் சுயமரியாதையையும் காத்துக்கொள்ளுகிறோம். அப்படியானால், இது எவ்வாறு நம் காலத்துக்கு பொருந்தாத ஒன்றாகவும் நடைமுறைக்கு சாத்தியமற்ற ஒன்றாகவும் இருக்கக்கூடும்?
எனவே நாம் நேர்மையுள்ள ஆட்களாக இருந்தால், நமக்கும் மற்றவர்களுக்கும் அநேக தற்கால பலன்களும் நன்மைகளும் இருக்கின்றன. இருப்பினும், எல்லாவற்றிற்கும் மேலாக, நாம் நேர்மையுடனிருப்பதற்கு காரணம் அது மேம்பட்ட ஒரு கொள்கை என்பதனாலோ அல்லது நேர்மையுடனிருக்க வேண்டும் என்று நமக்கு கட்டளையிடப்பட்டிருப்பதனாலோ மட்டுமல்ல, ஆனால் நம்முடைய தகப்பனாகிய யெகோவாவை நாம் நேசிப்பதன் காரணமாக அப்படி இருக்க வேண்டும். அவருடன் நாம் நமது அருமையான உறவை காத்துக்கொள்ளவும் அவருடைய அங்கீகாரத்தை பெறவும் விரும்புகிறோம். அயலார் மீது நமது அன்பை வெளிக்காட்டுவதற்காகவும் நாம் நேர்மையுடனிருக்க விரும்புகிறோம். ஆகவே இதை எளிய முறையில் சொல்ல வேண்டுமானால் உண்மை கிறிஸ்தவனாக இருத்தல் என்பது நேர்மையாயிருப்பதைக் குறிக்கிறது.
சங்கீதக்காரன் சொல்வதாவது: “கர்த்தாவே [யெகோவாவே, NW] யார் உம்முடைய கூடாரத்தில் தங்குவான்? யார் உம்முடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம்பண்ணுவான்? உத்தமனாய் நடந்து, நீதியை நடப்பித்து, மனதாரச் சத்தியத்தைப் பேசுகிறவன்தானே. . . . தன் தோழனுக்கு தீங்கு செய்யாமலும்” இருக்கிறான். (சங்கீதம் 15:1-3) யெகோவாவின் வணக்கத்தாராக நாம் நேர்மையான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருவோமானால், அவர் நியாயமாக இந்த அநியாயமான ஒழுங்குமுறையை அழிக்கையில், “மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலம்” இருக்கையில் அவருடைய “விருந்தினராக” நித்தியமான ஆசீர்வாதத்தை அனுபவித்து மகிழும் ஆட்களில் நாமும் இருப்போம். அப்போது நாம் காலத்துக்கு பொருத்தமற்ற ஆட்களாக இருக்க மாட்டோம்.—வெளிப்படுத்துதல் 21:1-5. (w88 2⁄15)
[பக்கம் 7-ன் பெட்டி]
நேர்மையுள்ள செயல்கள் நம் காலத்துக்கு பொருந்தாத ஒன்றல்ல
இக்காலத்திலும் ஆட்கள் தங்கள் அயலானைப் பற்றி அக்கறையுள்ளவர்களாக இருக்கிறார்களா? ஆம், நேர்மையுள்ள செயல்களை அபூர்வமான செய்தி போலவும், அவை குறிப்பிடத்தக்கவை என்பதாகவும் செய்தித்தாள்கள் அறிக்கை செய்தபோதிலும் அவர்கள் அவ்வாறு இருக்கிறார்கள்.
அ.ஐ.மா., இன்டியானா, ஃபோர்ட் வேய்னியில் உள்ள காவல் துறையினர் பூட்டப்படாத கார் ஒன்றில் விலையுயர்ந்த டி.வி. ஒன்றை பொருத்தி வைப்பதன் மூலம் திருடர்களை வசீகரிக்க முயன்றார்கள். என்ன நிகழம் என்பதைக் காண பல வாரங்கள் அவர்கள் கண்காணித்தார்.
“நாங்கள் கண்டது என்னவெனில் ஜனங்கள் கார் பக்கமாக நடந்து போவார்கள். உள்ளே எட்டிப் பார்த்து, டி.வி.-யைக் காண்பார்கள். கதவைத் திறந்து கதவின் உட்புறத்திலிருக்கும் பூட்டு பொத்தானைக் கீழே அழுத்தி, பூட்டப்படாத கதவை பூட்டிவிட்டு சென்றுவிடுவார்கள்.” இவ்வாறு செய்வதன் மூலம் அவர்கள் நேர்மையை காண்பித்தார்கள்.
பைபிள் போதனைகளின் நன்மை பயக்கும் பாதிப்பின் விளைவாக, காணாமற்போன பணம் திரும்ப கிடைத்ததைப்பற்றி கானடாவின் செய்தித்தாள் தலையங்கங்கள் சொல்லுகின்றன.
“நல்ல சமாரியர்கள் காணாமற்போன பணத்தைத் திரும்ப கொடுப்பதன் மூலம் விடுமுறை கழிப்பவர்களின் விடுமுறையைக் காக்கின்றனர்.”
—The Windsor Star
“நேர்மைவாதி 421 டாலர்களைத் திருப்பித் தருகிறான்.”
—The Spectator
“இழந்துவிட்ட 983 டாலர்களை மீண்டும் பெற்றதானது வியாபாரியின் விசுவாசத்தைத் திரும்ப நிலைநாட்டுகிறது.”
—The Toronto Star
இந்தக் காரியங்களில் காணாமற்போன பணத்தைத் திருப்பிக் கொடுத்தவர்கள் யெகோவாவின் சாட்சிகளாயிருந்தனர். முதல் சந்தர்ப்பத்தில், வீட்டுக்கு வீடு ஊழியத்தில் ஈடுபட்ட இரண்டு இளம் சாட்சிகள் ஒரு பணப்பையை கண்டெடுத்து, அதை ஒரு பெண்ணிடம் திருப்பிக் கொடுத்தார்கள். அவள் சொன்னதாவது: “இந்தப் பையன்கள் இலட்சத்தில் ஒருவர் என்று நான் நினைக்கிறேன். . . . மனித இயல்பில் அது உண்மையிலேயே உனது விசுவாசத்தை நிலைநாட்டுகிறது.” அவள் வெளியூர் பெண்ணாக இருந்ததனால் அந்தப் பணத்தை இந்த இளைஞர்கள் தங்களிடமே வைத்துக்கொள்வது சுலபமானதாக இருந்திருக்கும், ஆனால் அவர்கள் சொன்னதாவது: “அது ஒன்றுமேயில்லை, நாங்கள் மற்றொருவருக்கு ஒரு நல்ல காரியத்தையே செய்துகொண்டிருந்தோம்.”
இரண்டாவது அறிக்கையும்கூட ஒரு பயனியர் சம்பந்தப்பட்டது. “ஆனால் சோதனை அவர் [கண்டெடுத்தவர்] மனதில் எந்த சந்தேகத்தையும் ஏற்படுத்தவில்லை” என்று அந்தச் செய்தித்தாள் அறிக்கை செய்தது. அதைக் கண்டெடுத்தவர், தான் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் என்றும், “நாங்கள் நேர்மையுள்ளவர்களாய் இருக்க வேண்டுமென்று பலமாக நம்புகிறோம்” என்றும் குறிப்பிட்டார்.
மூன்றாவது விஷயத்தில், பணத்தை காணாமற் போட்டுவிட்ட அந்த நபர், “மனித குலத்தின் பேரிலிருந்த தன் விசுவாசத்தை ஏறக்குறைய இழந்துவிட்டிருந்ததாக அறிக்கைச் செய்தார்.” அந்தப் பணமிருந்த பழுப்பு நிறப் பையைக் கண்டெடுத்த அந்தச் சாட்சியின் கணவர் நிருபரிடம், “பைபிள் நியமங்களால் வழிநடத்தப்பட்டதே அதைத் திருப்பிக் கொடுப்பதை என் மனைவிக்கு சுலபமாக்கினது” என்று குறிப்பிட்டார்.
மற்றொருவருடைய விஷயத்தில், வீட்டுக்கு வீடு ஊழியம் செய்து கொண்டிருந்த இரண்டு சாட்சிகள் காணாமற்போன ஒரு சம்பள உறையை கண்டெடுத்தார்கள். அதை அவர்கள் உள்ளூர் போலீஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றபோது, பணம் காணாமற் போனதைக் குறித்து எங்களுக்கு எந்தத் தகவலும் வரவில்லையே என்று அந்தக் காவல்துறை அதிகாரி சொன்னார். அப்பொழுது இவ்வாறு கண்டெடுக்கப்பட்டிருக்கிறது என்று உள்ளூர் வானொலியில் அறிவிப்பு செய்யலாமே என்று சாட்சி யோசனைக் கூறினார். அந்தக் காவல் துறை அதிகாரி திகைத்துப் போனார். அவர் சொன்னதாவது: “இந்தப் பணத்தை இழந்தவரிடம் திருப்பித் தருவதற்கு நீங்கள் இவ்வளவு முயற்சி எடுக்கிறீர்களே, நீங்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள்?” என்று கேட்டார். சாட்சிகள் பதில்சொன்னபோது அந்தக் காவல்துறை அதிகாரி: “அப்படித்தான் நான் நினைத்தேன். ஏனெனில், இப்படிப்பட்ட நேர்மையான முயற்சி எடுப்பவர்கள் நீங்கள் ஒருவர் மட்டுமே” என்றார்.
வீட்டுக்கு வீடு ஊழியம் செய்கையில் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரான W.K.—— என்பவரிடம் அதிக அபூர்வமான ஒரு விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த வீட்டிலிருந்த மனிதனும் அவனுடைய மனைவியும் சுகவீனமாக இருந்தார்கள். ஆனால் அந்த நாளன்று அவர்கள் வங்கியில் பணம் கட்ட வேண்டியதாக இருந்தது. அப்போது அவர்கள் சாட்சியிடம் நீங்கள் அதைச் செய்யக்கூடுமா என்று கேட்டார்கள். ஒத்துக்கொண்டதும், 2,000 டாலர் (ரூ.35,000) தொகையை அவரிடம் கொடுத்து வங்கியில் கட்ட சொன்னார்கள். வங்கியிலிருந்து திரும்பியவுடன் சாட்சி அவர்களிடம், “என்னை யார் என்று தெரியாமலேயே எப்படி நீங்கள் அவ்வளவாய் நம்பக்கூடும்?” என்று கேட்டார். அதற்குக் கிடைத்த விடை: “யெகோவாவின் சாட்சிகள் மட்டுமே நம்பிக்கைக்குரியவர்கள் என்பது எங்களுக்கு தெரியும், எல்லாருக்குமே தெரியும்.”
யெகோவாவின் சாட்சிகள் தவிர எல்லா தேசங்களிலும் நிச்சயமாகவே நேர்மையுள்ள மற்ற ஆட்கள் இருக்கிற போதிலும், விசேஷ கவனத்தை பெறும் அளவுக்கு போதிய ஆட்கள் இருப்பது அபூர்வமாக தோன்றுகிறது. நேர்மை பற்றிய பைபிள் போதனைகள் பயனுள்ள மற்றும் நடைமுறையான விளைவுகளை உண்டுபண்ணுகிறது என்பதற்காக ஆ, நாம் எவ்வளவாய் நன்றியுள்ளவர்களாயிருக்கலாம்!
[பக்கம் 7-ன் பெட்டி]
உங்கள் நேர்மைக்கு ஏற்படும் சவாலை நீங்கள் எதிர்த்து சமாளிக்கக்கூடுமா?
நாம் வாழக்கூடிய இந்த உலகம் சரியானதை செய்வதற்காக நம்முடைய மன உறுதிப்பாட்டையும் தீர்மானத்தையும் எதிர்த்து சவால்விடுகிறது. மற்றவர்களுக்கு இழப்பு நேரிட்டாலும் அதைப் பொருட்படுத்தாமல் நாம் நம்மை முதன்மையான இடத்தில் வைப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதத்தில் அது அமைக்கப்பட்டிருக்கிறது.
நேர்மை இன்றும்கூட மிகச் சிறந்த கொள்கையே என்பது நீங்கள் கொண்டிருக்கும் மனமார்ந்த கருத்தா? அழுத்தங்கள் உங்களை பரிசோதிக்குமானால் உங்களை நேர்மையுள்ளவராக காத்துக்கொள்வதற்கு உங்களுடைய மன உறுதி போதிய பலமுள்ளதாக இருக்கிறதா? உதாரணமாக, பின்வரும் சூழ்நிலைகளின் கீழ் நீங்கள் என்ன செய்வீர்கள்?
◻நீங்கள் பல மாதங்களாக வேலையில்லாமல் இருக்கிறீர்கள், இப்பொழுது, உங்களுடைய கடன்களைத் தீர்த்துக்கொள்வதற்கும், அதுபோக செலவுக்கு கையில் மீதமான பணம் இருக்கும் அளவுக்கு ஒரு பெருந் தொகையை நீங்கள் கண்டுபிடித்தால்?
◻உங்களுடைய பள்ளியில் நடைபெறும் ஒரு முக்கியமான பரீட்சையில் நல்ல மார்க்குகளை பெறுவதற்கு ஒரே வழி, பரீட்சையில் ஏமாற்றுவதாகும். அந்த மார்க்குகளைப் பெறுவதே உங்களுடைய வளமான எதிர்காலத்தை நிருணயிக்கும் என்றால்?
◻ஒரு விஞ்ஞானியாக அங்கீகாரம் பெறுவதற்கு, உங்களுடைய ஆராய்ச்சியின் மெய் செய்திகளை நீங்கள் சற்று “மாற்றியமைத்தால்” மட்டுமே உங்களுடைய அறிக்கை பிரசுரிக்கப்படும் என்றால்?
◻உங்களுடைய விடுமுறையைக் கழிக்க நீங்கள் இன்னொரு நாட்டிற்கு போகிறீர்கள். அங்கே அதிக விலையுயர்ந்த ஒரு பொருளை நியாயமான விலைக்கு வாங்குகிறீர்கள். ஆனால் சொந்த நாட்டு எல்லைக்கு வந்தவுடன், அதை அறிக்கை செய்தால் அதிக உயர்வான சுங்கவரி செலுத்த வேண்டியதாக இருக்குமானால்?