ஏசாயா புத்தகம் யெகோவாவை “இஸ்ரவேலின் பரிசுத்தராக” மகிமைப்படுத்துகிறது
ஏசாயா புத்தகம் யெகோவாவை “இஸ்ரவேலின் பரிசுத்தராக” குறிப்பிடத்தக்க விதத்தில் மகிமைப்படுத்துகிறது. இந்தச் சொற்றொடர் மொத்தமாக இருபத்தைந்து தடவைகள் அவருக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மேலுமாக, தேவனுடைய ஜனங்களுக்கு மீட்பைக் கொண்டுவரும் மேசியாவை அல்லது யெகோவாவால் அபிஷேகம் பண்ணப்பட்டவரை சந்தேகத்திற்கிடமில்லாத தெளிவோடு அது சுட்டிக் காண்பிக்கிறது
சரித்திர பின்னணி
ஏசாயா இந்தக் காரியங்களை, யூதாவின் ராஜாக்களாகிய உசியா, யோதாம் ஆகாஸ் மற்றும் எசேக்கியாவின் நாட்களில் கண்டதாக ஏசாயா 1:1 நமக்குத் தெரிவிக்கிறது. சோதனைக்குரிய சர்வதேசீய அழுத்தங்கள் நிறைந்த ஒரு காலமாக இது இருந்தது. பொய் மத சிந்தனைகளால் யூதாவின் ஜனங்கள் இந்தச் சமயத்தில் வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தார்கள். கிட்டத்தட்ட ஏசாயாவின் வாழ்க்கைப் பணியின் ஆரம்பத்தில், உசியா ராஜா ஆசாரியனின் பணிகளை மேட்டிமையோடு துணிந்து செய்ததற்காக ஒரு குஷ்டரோகியாக மரித்தான். (2 நாளாகமம் 26:16, 19-21) அவனுடைய குமாரனாகிய யோதாமின் ஆட்சி காலத்திலே ராஜா செம்மையானதைச் செய்த போதிலும், “ஜனங்கள் இன்னும் தங்களைக் கெடுத்துக் கொண்டிருந்தார்கள்” என்று தெரிகிறது.—2 நாளாகமம் 27:2; 2 இராஜாக்கள் 15:34.
அடுத்ததாக ஆகாஸ் ராஜா ஆட்சிக்கு வந்தான். இவன் பதினான்கு வருடங்கள் மனித பலி சடங்குகளோடுகூட பாகாலை வணங்கி, தேசத்துக்கு ஒரு கெட்ட முன்மாதிரியாக இருந்தான். “யெகோவாவுக்கு விரோதமாய் மிகவும் துரோகம்” பண்ணினான். (2 நாளாகமம் 28:1-4, 19) இந்தச் சமயத்தில்தானே சீரியாவின் ராஜாவும் இஸ்ரவேலின் ராஜாவும், கூட்டு சேர்ந்து கொண்டு எருசலேமை முற்றுகை போட்டார்கள். அப்பொழுது ஆகாஸ், ஏசாயா தீர்க்கதரிசியின் புத்திமதியை அசட்டைசெய்து, அசீரியா ராஜாவாகிய திகிலாத்பிலேசர் III இடமாக, இராணுவ உதவி கேட்டு அனுப்பினான். ( 2 இராஜாக்கள் 16:5-8; ஏசாயா 7:1-12) இப்படியாகச் செய்வதன் மூலம், ஆகாஸ் ‘இருதயத்தை யெகோவாவை விட்டு விலக்கிக்கொண்டு மாம்சமானதை தன் புயபலமாக்கிக் கொண்டான்.’ (எரேமியா 17:5) முக்கியமாக தன்னுடைய சொந்த ஆட்சியை விரிவாக்க வேண்டும் என்ற அக்கறையில்தானே அசீரியா இந்த ஒப்பந்தத்துக்கு ஒப்புக்கொண்டது. அசீரியப்படை சிரியாவின் தமஸ்குவை கைப்பற்றி மதசம்பந்தமாக விசுவாச துரோகம் செய்த இஸ்ரவேலருக்குச் சொந்தமான யோர்தானுக்கு அப்பாலுள்ள பிராந்தியத்தில் குடியிருந்தவர்களைச் சிறைபிடித்து கொண்டு போனது.—1 நாளாகமம் 5:26.
பின்னால், சமாரியா, பகுதி அனுப்ப தவறியபோது, அதுவும்கூட முற்றுகையிடப்பட்டு அதன் குடிமக்கள் சிறையாக கொண்டுபோகப்பட்டார்கள். (2 இராஜாக்கள் 16:9; 17:4-6; 18:9-12) இது பத்து கோத்திர ராஜ்யத்துக்கு ஒரு முடிவை கொண்டுவந்தது. யூதா இப்பொழுது எல்லா பக்கங்களிலும் புறஜாதி தேசங்களால் சூழப்பட்டிருந்தது. பின்னால் மேற்கில் அசீரிய அரசர்கள் இராணுவ நடவடிக்கைகளைத் தொடர்ந்து கொண்டிருந்து, யூதாவின் பட்டணங்களையும் சுற்றியிருந்த தேசங்களையும் தாக்கினார்கள். எருசலேமுங்கூட சரணடைந்துவிட வேண்டும் என்று சனகெரிப் வற்புறுத்தினான். ஆனால் எசேக்கியா ராஜாவின் கீழ் அங்கே நிலைமை மாறியது. எசேக்கியா யெகோவாவில் நம்பிக்கை வைத்தான். யெகோவா அவனோடேகூட இருந்தார்.—2 இராஜாக்கள் 18:5-7; ஏசாயா 36, 37 அதிகாரங்கள்.
உசியாவின் ஆட்சி காலத்தில் ஏசாயா தன்னுடைய தீர்க்கதரிசன ஊழியத்தை ஆரம்பித்தான். இவன், பொ.ச.மு. 829-ல் ஆட்சி செய்ய ஆரம்பித்தான். எசேக்கியாவின் ஆட்சி பொ.ச.மு. 716-ல் முடிவுக்கு வந்தது. என்றபோதிலும் தீர்க்கதரிசியாக ஏசாயாவின் ஊழிய ஆண்டுகள் அதைவிட குறுகினதாக இருக்க வேண்டும். “உசியா ராஜா மரணமடைந்த வருஷத்தை”க் குறிப்பிட்டு (பொ.ச.மு. 777) ஏசாயா அந்த அதிகாரத்தில் பதிவு செய்திருப்பவற்றை அந்தச் சமயத்தில் யெகோவாவிடமிருந்து பெற்றுக்கொண்டதாக ஏசாயா 6-ம் அதிகாரம் வசனம் 1 தெரிவிக்கிறது. அதற்கு முன்பாக உள்ள தகவலை அவன் இதற்கு முன்பாக பதிவு செய்திருக்க வேண்டும். பின்னர் அதிகாரம் 36 வசனம் 1, “எசேக்கியா ராஜா அரசாண்ட பதினாலாம் வருஷத்தை”ப் பற்றி குறிப்பிடுகிறது. (பொ.ச.மு. 732/731) அதற்குப் பின்பு ஏசாயா அவனுடைய புத்தகத்தை முடிக்க எவ்வளவு காலமானது என்பது நமக்குத் தெரியாது. அதற்குப்பின் விரைவில் அது முடிக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஏசாயா புத்தகத்தில் குறிப்பிட்ட பகுதிகளின் பொருளடக்கத்தில், காலத்தை நிர்ணயிக்க உதவிசெய்யும் மற்ற சில குறிப்புகளும் உள்ளன. உதாரணமாக பெக்கா என்னும் இஸ்ரவேலின் ராஜா, ஆகாஸ் ராஜாவின் நாட்களில் எருசலேமுக்கு விரோதமாக யுத்தம் பண்ண வந்தான் என்று அதிகாரம் 7 வசனம் 1 சொல்கிறது. ஆகாஸ் பொ.ச.மு. 762-லிருந்து 746 வரையாக ஆட்சி செய்தபோதிலும், பெக்காவின் ஆட்சி ஏறக்குறைய பொ.ச.மு. 758-ல் முடிவடைந்துவிட்டது. ஆகவே அந்த வருடத்துக்கு முன்பாக இந்தச் சம்பவம் நடந்திருக்க வேண்டும். மேலுமாக ஏசாயா 14:28 பெலிஸ்தியாவைப் பற்றிய பாரம் “ஆகாஸ் ராஜா மரணமடைந்த வருஷத்தில்” சொல்லப்பட்டதாக குறிப்பிடுகிறது. இது சுமார் பொ.ச.மு. 746-ல் இருந்திருக்கும். இந்தக் குறிப்புரைகள் கால ஓட்டத்தில் ஏசாயா புத்தகத்தின் சம்பவங்கள் நடந்தேறிய காலத்தை நிர்ணயிக்க உதவி செய்கிறது
எழுத்தாண்மையில் தனி முழுமை
நவீன காலங்களில், ஒரு சில பைபிள் விமர்சகர்கள், ஏசாயா புத்தகம் முழுவதும் ஏசாயாவால் எழுதப்படவில்லை என்பதாக வாதம் செய்திருக்கிறார்கள். 40-லிருந்து 66-வரையான அதிகாரங்கள் யூதர்களுடைய பாபிலோனிய சிறை வாசத்தின் முடிவில் வாழ்ந்து வந்த ஒரு அடையாளங் கண்டுணரப்படாத நபரால் எழுதப்பட்டது என்பதாக அவர்கள் வாதாடுகிறார்கள். மற்ற விமர்சகர்கள், புத்தகத்தின் கூடுதலான பகுதிகளைப் பிரித்தெடுத்து ஏசாயாவைத் தவிர வேறு ஒரு நபர் அவைகளை எழுதியிருக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவிக்கிறார்கள். ஆனால் பைபிள்தானே இந்த வாதங்களை ஒப்புக்கொள்வதில்லை.
ஆவியால் ஏவப்பட்டு கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தை எழுதியவர்கள் அதிகாரங்கள் 1-39 என தற்போது குறிப்பிடப்பட்டிருப்பவைகளையும் அதிகாரங்கள் 40-66 என்பதாக வகைப்படுத்தப்பட்டவைகளையும் “ஏசாயா தீர்க்கதரிசி” பதிவு செய்ததாகவே குறிப்பிடுகிறார்கள். இதே பெயரையுடைய இரு நபர்கள் இருந்ததாகவோ, புத்தகத்தின் ஒரு பகுதியை எழுதியவர் இன்னாரென்று தெரியாது என்றோ ஒருபோதும் அவர்கள் தெரிவிப்பதில்லை. (உதாரணமாக மத்தேயு 3:3 மற்றும் 4:14-16-ஐ ஏசாயா 40:3 மற்றும் 9:1, 2 ஒப்பிடவும்; மேலும் யோவான் 12:38-41-ஐ ஏசாயா 53:1 மற்றும் 6:1, 10 ஒப்பிடவும்) இதோடுகூட ஏசாயா புத்தகத்தின் பிற்பகுதியிலுள்ள தகவலை மேற்கோள் காட்டுகையில், இதை பதிவு செய்தவர் இன்னாரென்று தெரியாத ஒரு நபர் அல்ல, ஆனால், “ஏசாயா தீர்க்கதரிசியே பதிவு செய்ததை எண்ணற்ற மற்ற இடங்களிலும் கிறிஸ்தவ கிரேக்க வேதாகம எழுத்தாளர்கள் திட்டவட்டமாக குறிப்பிட்டிருக்கிறார்கள். (மத்தேயு 12:17-21-ஐ ஏசாயா 42:1-4 உடன் ஒப்பிடவும், ரோமர் 10:16-ஐ ஏசாயா 53:1-உடன் ஒப்பிடவும்) இயேசு கிறிஸ்து தாமே, நாசரேத்திலுள்ள ஜெப ஆலயத்தில் “ஏசாயா தீர்க்கதரிசியின் புஸ்தகத்தி”லிருந்து வாசிக்கையில் ஏசாயா 61:1, 2-லிருந்து வாசித்துக் கொண்டிருந்தார்.—லூக்கா 4:17-19.
மேலுமாக (பொ.ச. மு. முதல் அல்லது இரண்டாவது நூற்றாண்டில் எழுதப்பட்டதாக நம்பப்படும்) ஏசாயாவின் சவக்கடல் சுருளில், அதிகாரம் 39-ன் முடிவில், தீர்க்கதரிசனத்தில் எந்தவிதமான பிரிவும் இருந்ததாக கருதப்பட்டதைப் பற்றி, அதைப் பார்த்து எழுதியவருக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை என்பதற்கான அத்தாட்சி இருக்கிறது. 39-ம் அதிகாரத்தை எழுதிய பின் கடைசி வரியில் அதே பத்தியில் அவர் நாற்பதாவது அதிகாரத்தை எழுதியிருக்கிறார்.
ஏசாயா புத்தகம் முழுவதும் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட பகுதிகளாக அல்ல, ஆனால் மொத்தமாக ஒரே புத்தகமாகவே நூற்றாண்டுகளினூடே கடந்து வந்திருக்கிறது. ஏசாயா 39:6, 7-ல் பதிவு செய்யப்பட்டிருப்பது அதை தொடர்ந்து வருகிற காரியங்களுக்கு அதாவது, பாபிலோனின் நியாயத்தீர்ப்பு காலத்தைப் பற்றிய தீர்க்கதரிசனங்களுக்கு வழியைத் தயார் செய்வதற்கு, தெளிவாகவே ஒரு இணைப்பாக இருப்பதிலிருந்து அதிகாரம் 40, அதிகாரம் 39-ன் தொடர்ச்சியாக இருப்பது தெளிவாக இருக்கிறது.
ஏசாயா புத்தகத்தை ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்தாளர்கள் எழுதியிருக்க வேண்டும் என்று சொல்பவர்கள், கோரேசு என்ற பெயர் கொண்ட ஒரு அரசன், கைதிகளான யூதர்களை விடுவிப்பான் என்பதாக ஏறக்குறைய இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்கூட்டியே முன்னறிவிப்பது ஏசாயாவால் முடியும் என்பதாக நினைப்பதில்லை. இதனால், இது பின்னால், குறைந்தபட்சம் கோரேசு ஜாதிகளைக் கீழ்ப்படுத்த ஆரம்பித்தப் பின்பு எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். (ஏசாயா 44:28; 45:1) ஆனால் இந்த முழு புத்தகத்தின் சிறப்பை அவர்கள் கிரகித்துக்கொள்ள தவறிவிட்டிருக்கிறார்கள். ஏனென்றால் இந்தப் பகுதி தம்முடைய ஜனங்களுக்கு என்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே தெரிவிக்க கடவுள் திறமையுள்ளவராய் இருப்பதைப் பற்றி, அவருடைய முன்னறிவைப் பற்றியே குறிப்பாக பேசுகிறது. பாபிலோனை கைப்பற்றி, யூதர்களை விடுவிக்கப்போகிறவராக இருந்த, இன்னும் பிறவாத ஒரு நபரின் பெயரை இந்தத் தீர்க்கதரிசனம் சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே பதிவு செய்தது. இதன் நிறைவேற்றம், அது தேவனிடமிருந்து வந்தது என்பதை நிச்சயமாகவே நிரூபிப்பதாக இருக்கும். அது எதிர்காலத்தைப் பற்றிய ஏசாயாவின் மதிப்பீடாக இல்லை. ஆனால் அவன்தானே எழுதிய பிரகாரம் “யெகோவா சொல்லுகிறதாக” இருந்தது. (ஏசாயா 45:1) ஏசாயாவின் அந்தப் பகுதியை கோரேசின் காலத்திலிருந்த வேறொருவர் எழுதியதாகச் சொல்வதும்கூட விமர்சகர்களின் பிரச்னையை தீர்த்துவிடாது. ஏன் தீர்த்துவிடாது? ஏனென்றால் புத்தகத்தின் இந்தப் பகுதி இன்னும் தூர எதிர்காலத்தில இயேசு கிறிஸ்துவாகிய மேசியாவின் பூமிக்குரிய வாழ்க்கையிலும் ஊழியத்திலும் நடக்க இருந்த சம்பவங்களின் விவரங்களையும்கூட முன்னறிவித்தது. இந்தத் தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றம், ஏசாயாவின் தீர்க்கதரிசனம் எத்தர்களுடைய எழுத்துக்களின் ஒரு தொகுப்பு அல்ல, ஆனால் இது தேவ ஆவியால் ஏவப்பட்டது என்பதாக அதை முத்திரை போடுகிறது.
அதிகாரங்கள் 40 முதல் 66 வரையாக உள்ள, அதிகாரங்களை ஏசாயா எழுதியதை மறுதலிப்பவர்கள் அதே காரணங்களுக்காகவே, பாபிலோனின் வீழ்ச்சியைப் பற்றி பேசும் 13-ம் அதிகாரத்தை அவன் எழுதியதையும் மறுதலிக்கிறார்கள். என்றபோதிலும் 13-ம் அதிகாரத்தின் ஆரம்ப வார்த்தைகள் பின்வருமாறு இருக்கிறது: “ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா பாபிலோன் மேல் வரக் கண்ட பாரம்.” “ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா” அதிகாரம் 1-ல் முதல் வசனத்தில் வரும் அதே ஏசாயாவாகவே இருக்க வேண்டும்.
பைபிளின் மற்ற பகுதிகளோடு பின்னிய தொடர்பு
ஏசாயாவின் எழுத்துக்கள், பைபிளின் அநேக மற்ற பகுதிகளோடு விரிவாக இணைத்து பின்னப்பட்டுள்ளது. ஏசாயாவின் காலத்துக்கு ஒரு நூற்றாண்டு அல்லது அதற்கும் அதிகமான பின்பு, இராஜாக்களின் புத்தகத்திலுள்ள பதிவை எரேமியா எழுதினான். 2 இராஜாக்கள் 18:13-20:19 வரையாக பதிவு செய்யப்பட்டிருப்பவை, ஏசாயா அதிகாரங்கள் 36-39-ல் காணப்படுகிற அதே காரியமாக இருப்பதை கவனிப்பது அக்கறையூட்டுவதாக இருக்கிறது. ஏசாயா எழுதிய அதே விஷயங்களை மற்ற தீர்க்கதரிசிகளும்கூட எழுதியிருப்பது மட்டுமல்லாமல், மற்ற பைபிள் எழுத்தாளர்கள் ஏசாயாவின் புத்தகத்தை குறிப்பாக அநேக இடங்களில் மேற்கோள் காண்பித்திருக்கிறார்கள்.
ஏசாயா புத்தகத்திலிருந்து மிகவும் குறிப்பிடத்தக்க வகையிலும் அடிக்கடியும் மேற்கோள் காண்பிக்கப்படும் தீர்க்கதரிசனங்களில், மேசியாவைப் பற்றிய விவரங்களைச் சொல்லும் தீர்க்கதரிசனங்கள் இடம் பெறுகின்றன. இவைகளில் பெரும்பாலானவற்றை ஆவியால் ஏவப்பட்டு கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தை எழுதியவர்கள் குறிப்பாக மேற்கோள் காண்பித்து அவற்றைப் பொருத்தியிருக்கிறார்கள். உதாரணமாக ஏசாயா 7:14 அவர் ஒரு கன்னிகையிடமிருந்து பிறப்பார் என்பதாக தீர்க்கதரிசனம் சொன்னது. (மத்தேயு 1:23) ஈசாவின் குமாரனாகிய தாவீதின் வம்ச வழியில் அவர் பிறப்பார் என்பது முன்னறிவிக்கப்பட்டிருந்தது. (ஏசாயா 9:7; 11:1, 10; லூக்கா 1:32, 33; ரோமர் 15:8, 12); யெகோவாவின் இந்தப் பிரதிநிதிக்கு முன்பாக வழியை ஆயத்தம் பண்ணுவதற்காக வனாந்தரத்திலே ஒருவர் கூப்பிடுவார். (ஏசாயா 40:3; மாற்கு 1:1-4) அவருடைய வேலை ஏசாயா 61:1,2-ல் பதிவு செய்யப்பட்டிருந்தது. (லூக்கா 4:17-21) அவருடைய ஊழியத்தின் பலனாக கலிலேயாவிலுள்ள மக்கள் ஒரு பெரிய வெளிச்சத்தைக் காண்பார்கள் என்பதாக முன்னுரைக்கப்பட்டிருந்தது. (ஏசாயா 9:1, 2; மத்தேயு 4:13-16) அவர் நம்முடைய நோய்களை சுமப்பார் என்றும் (ஏசாயா 53:4; மத்தேயு 8:16, 17); அவர் விசுவாசிக்கப்படமாட்டார் என்றும் (ஏசாயா 53:1; யோவான் 12:37, 38); வீதிகளில் அவருடைய சத்தம் கேட்கப்படுவதில்லை என்றும் (ஏசாயா 42:1-4; மத்தேயு 12:14-21); அவர் இடறுதலின் கல்லாக தள்ளப்படுவார், ஆனாலும் மூலைக்கல்லாவார் என்றும் (ஏசாயா 8:14, 15; 28:16; 1 பேதுரு 2:6-8); அவர் அடிக்கப்பட்டு கண்டனம் செய்யப்பட்டாலும் தன் மீது குற்றஞ் சுமத்தியவர்களுக்கு முன்பாக வாயை திறவாதிருப்பார் என்றும் (ஏசாயா 50:6; 53:7, 8; யோவான் 19:3, 9; மாற்கு 14:53-65; 15:1-15); அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்படுவார் என்றும் (ஏசாயா 53:12; மத்தேயு 26:55, 56; 27:38); பாவங்களை நீக்கி கடவுளோடு அநேகர் ஒரு நீதியான நிலைநிற்கையை பெற்றுக்கொள்வதற்கான வழியைத் திறந்து வைப்பதற்காக அவர் பலிக்குரிய மரணத்தை அடைவார் என்றும் (ஏசாயா 53:5, 8, 11, 12; ரோமர் 4:25); ஐசுவரியவான்களோடே அடக்கம் பண்ணப்படுவார் என்றும் (ஏசாயா 53:9; மத்தேயு 27:57-60; யோவான் 19:38-42) முன்னறிவிக்கப்பட்டிருந்தது. மேசியாவின் அடையாளத்தை தெளிவுபடுத்த இயேசு கிறிஸ்துவும் அவருடைய அப்போஸ்தலர்களும் அடிக்கடி ஏசாயாவிலிருந்து மேற்கோள் காண்பித்திருப்பதை கவனிப்பது அக்கறையூட்டுவதாக உள்ளது.
ஆவியால் ஏவப்பட்டு எழுதிய மற்ற பைபிள் எழுத்தாளர்கள் ஏசாயா தீர்க்கதரிசனத்திலிருந்து மேற்கோள் காண்பித்திருக்கும் அனைத்தும் இதில் இடம் பெறவில்லை. ஆனால் ஏசாயா, இங்கு உயர்த்திக் காண்பிக்கப்பட்டிருக்கும் இந்தச் சில தீர்க்கதரிசனங்களுக்காகவே மிகப் பிரபலமாக அறியப்பட்டிருக்கிறான். இந்தத் தீர்க்கதரிசனங்களும் புத்தகத்தின் மீதமுள்ள எல்லா பகுதிகளும், இஸ்ரவேலின் பரிசுத்தராகிய யெகோவாவை, தம்முடைய அபிஷேகம் பண்ணப்பட்ட குமாரனின் மூலமாக இந்த இரட்சிப்பை தம்முடைய ஜனங்களுக்கு அளிக்கும் ஒருவராக மகிமைப்படுத்துகிறது.