யெகோவாவின் நாமம் எவ்வளவு மேன்மையானது
“எங்கள் ஆண்டவராகிய யெகோவா உமது திருநாமம் உலகெங்கும் எவ்வளவு மேன்மையானது.”—சங்கீதம் 8:1, 9. தி.மொ.
கடைசியாக பொ.ச. மு.1473-ல் இஸ்ரவேலர் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்துக்கு வந்து சேர்ந்தார்கள். ஆனால் சில வருடங்கள் நீடிக்கக்கூடிய தேவராஜ்ய யுத்தம் அவர்களுக்கு முன்னாலிருந்தது. ஏனென்றால் அவர்கள் மோசமான நடத்தையுள்ள குடிமக்களால் தீட்டுப்படுத்தப்பட்டிருந்த அந்த தேசத்தை சுத்திகரிக்க வேண்டியவர்களாக இருந்தார்கள். அந்த கானானியர்கள் உண்மையில் அவ்வளவு மோசமானவர்களாக இருந்தார்களா? ஆம், அவர்கள் நிச்சயமாகவே மோசமானவர்களாயிருந்தார்கள்! அவர்களுடைய விக்கிரகாராதனையும் ஒழுக்கங்கெட்ட வாழ்க்கை முறையும், யெகோவாவின் பார்வையில் அருவருப்பானதாகவும் கடவுளுடைய ஜனங்களுக்கு ஆபத்தாகவும் இருந்தது. ஆகவே கடவுள் தம்முடைய தீர்ப்பை நிறைவேற்ற, தம்முடைய பரிசுத்த ஜனமாகிய இஸ்ரவேலை, பயன்படுத்தப்போவதாக மோசேயை அறிவிக்கும்படியாகச் செய்தார். இவ்விதமாக, யெகோவா அந்த அசுத்தமான ஜாதிகளை தேசம் ‘கக்கிப் போடும்’படியாகச் செய்வார்.—லேவியராகமம் 18:1-30; உபாகமம் 12:29-32.
2 இன்றுகூட, அழிக்கப்படுவதற்கு பாத்திரமாக இந்த உலகம் அத்தனை மோசமாக இருக்கிறதா? என்பதாக நாம் கேட்கக்கூடும். ஆம், உலகிலுள்ள மத அமைப்புகளைப் பற்றி என்ன? இவைகள் சிருஷ்டிகராகிய யெகோவா தேவனை கனப்படுத்த தவறியிருப்பது விசனகரமான விஷயமாகும். கிறிஸ்தவமண்டலத்திலுள்ள ஆட்கள், “ஜீவத்தண்ணீரை” விட்டுவிட்டு, “தண்ணீர் நிற்காத தொட்டிகளாகிய வெடிப்புள்ள தொட்டிகளைத் தங்களுக்கு வெட்டிக்கொண்டிருக்கி”றார்கள். (எரேமியா 2:13) அவர்களுடைய மத நம்பிக்கைகளில் சத்தியத்தின் “தண்ணீர்” இல்லை. அவர்கள் உலகத்தின் யுத்தங்களையும் அரசியலையும் ஆதரிப்பதன் மூலமும், அதன் பாலின பழக்கங்களை ஒப்புக்கொள்வதன் மூலமும், தங்களை உலகத்தின் பாகமாக இருப்பதாக காண்பித்திருக்கிறார்கள். இயேசு சொன்னவிதமாகவே, “அவர்களுடைய கனிகளினாலே” அவர்கள் அறிந்துக்கொள்ளப்பட வேண்டியவர்களாக இருக்கிறார்கள்.—மத்தேயு 7:16, 17; கலாத்தியர் 6:7, 8-ஐ ஒப்பிடவும்.
3 உலகத்தின் ஒழுக்கங்களைப் பற்றி என்ன? சமீப ஆண்டுகளில், குறிப்பிடத்தக்கதாக கிறிஸ்தவ நாடுகள் என்றழைக்கப்படுகின்றவற்றில்தானே மிகப் பரந்த அளவில் கருச்சிதைவுகளும், பருவ வயதில் கர்ப்பந்தரித்தலும், முறிந்துபோன குடும்பங்களும் எண்ணிக்கையில் வேகமாக அதிகரித்திருக்கின்றன. சில தேசங்களில், விவாகங்களில் 50 சதவிகிதம் விவாகரத்தில் முடிவடைகின்றன. 1960-ம் ஆண்டுகளின் “பாலின புரட்சி” மற்றும் அவலமான பின்விளைவுகளையும் கொண்டு வந்திருக்கின்றது. இவைகளில் ஒன்றை, “91-க்குள் ஏய்ட்ஸ்க்கு பலியாகிறவர்களின் எண்ணிக்கை பத்து மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்ற முதல் பக்கதலைப்பின் கீழ் ஜூன் 13, 1986-ம் தேதி தி நியு யார்க் டைம்ஸ் குறிப்பிட்டிருந்தது. 1991-க்குள் ஏய்ட்ஸ் (Acquired Immune Deficiency Syndrome) நோயாளிகளின் எண்ணிக்கை ஐக்கிய மாகாணங்களில் மட்டும் 1,00,000-க்கு அதிகமாக இருக்கும் என்றும் வருடாந்தர மருத்துவ செலவு 1,600 கோடி ரூபாயாக இருக்கும் என்றும் கட்டுரை சுட்டிக் காட்டியது. இந்த கொடிய நோய் முக்கியமாக, ஓரின புணர்ச்சியினாலும், போதை மருந்தின் துர்ப்பிரயோகத்தினாலும், இரத்தமேற்றுதலினாலும் பரவுகிறது—இவை அனைத்துமே கடவுளுடைய கட்டளைகளை மீறுவதாக இருக்கின்றன.—1 கொரிந்தியர் 6:9, 10; கலாத்தியர் 5:19-21; அப்போஸ்தலர் 15:19, 20.
4 யோசுவாவின் நாளில், யெகோவா வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை, சொல்லர்த்தமான யுத்தத்தின் மூலமாக சுத்திகரிக்கும்படியாக தம்முடைய பரிசுத்த ஜனத்தை அனுப்பினார். இன்று நம்முடைய யுத்தம் ஆவிக்குரியதாக இருக்கிறது. (2 கொரிந்தியர் 13:3, 4) சாட்சிகளாகிய நாம் கடவுளுடைய வார்த்தையை அசட்டை செய்கிறவர்களை ஒழித்துக்கட்ட வன்முறையான நடவடிக்கைகளை மேற்கொள்வது கிடையாது. யெகோவா அவர்களை தம்முடைய சொந்த நேரத்திலும் தம்முடைய சொந்த வழியிலும் ஒழித்துக் கட்டுவார். (உபாகமம் 32:41, 43) ஒழுக்கமுறை விதிகளை கடைபிடிக்காத ஆட்கள், ராஜ்யத்தின் நற்செய்தியை அறிந்துகொள்ளும்படியாகச் செய்வதன் மூலம் நாம் உண்மையான அன்பை அவர்களுக்கு காட்டக்கூடியவர்களாக இருந்தாலும், நாம் அவர்களோடு நெருங்கிய சகவாசம் வைத்துக்கொள்வதில்லை. (1 கொரிந்தியர் 15:33) நாம் கடவுளுடைய வார்த்தையை அவர்களோடு படித்து, ‘பாவங்கள் நிவிர்த்தி செய்யப்படும் பொருட்டு, மனந்திரும்பிக் குணப்படும்’படியாக நாம் அவர்களை உற்சாகப்படுத்தலாம்.—அப்போஸ்தலர் 3:19; மத்தேயு 21:31, 32; லூக்கா 5:27-32.
ராகாபும் அவளுடைய வீட்டாரும்
5 இஸ்ரவேலர் யோர்தான் நதியை கடப்பதற்கு முன்பாகவேகூட, யெகோவா எரிகோ பட்டணத்தின் மீது கவனம் செலுத்தும்படியாகச் செய்தார். யோசுவா, இஸ்ரவேலர் அனைவரையும் பிரதிநிதித்துவம் செய்த இரண்டு வேவுகாரர்களை அனுப்பிவைத்து அவர்களிடம் இவ்விதமாகச் சொன்னான்: “நீங்கள் போய் தேசத்தையும் எரிகோவையும் பார்த்து வாருங்கள்.” ஏன் எரிகோவை வேவு பார்ப்பது? அந்தப் பட்டணம் சிறியதாகவும், இஸ்ரவேலின் சேனையோடு ஒப்பிடுகையில் அற்பமாயும் இருந்தபோதிலும் அது கானானுக்குப் போகும் வழியாயிருந்தது. காரியங்கள் நடந்தேறியதைப் பார்க்கும்போது, வேவுகாரர்கள் அங்கிருந்தததுதானே எரிகோவிலிருந்தவர்களுக்கு, யெகோவாவின் பக்கமாகவா அல்லது அதற்கு எதிராகவா அவர்கள் இருக்கிறார்கள் என்பதை தெளிவாக உறுதி செய்துகொள்ள கொஞ்சம் வாய்ப்பளித்தது. “அவர்கள் [வேவுகாரர்கள்] போய், ராகாப் என்னும் பெயர் கொண்ட வேசியின் வீட்டுக்குள் பிரவேசித்து அங்கே தங்கினார்கள்.” (யோசுவா 2:1-7) ஆவிக்குரிய உதவிக்காக ஜெபித்துக்கொண்டிருக்கும் ஆட்களிடமாக இன்று அநேகமாக யெகோவாவின் சாட்சிகளை தேவதூதர்கள் வழிநடத்திச் செல்வதுபோலவே, தெய்வீக வழிநடத்துதலினால்தானே வேவுகாரர்கள் ராகாபினுடைய வீட்டுக்குச் சென்றார்கள் என்பதில் சந்தேகமில்லை! “யெகோவாவுடைய கண்கள் நீதிமான்கள் மேல் நோக்கமாயிருக்கிறது; அவருடைய செவிகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது.”—சங்கீதம் 34:15; 2 நாளாகமம் 16:9-ஐகூட பார்க்கவும்.
6 அந்த வேவுகாரர்கள் ஒரு வேசியின் வீட்டுக்குள் ஏன் பிரவேசித்தார்கள்? ஒழுக்கயீனமான காரணங்களுக்காக அல்ல, ஆனால் கானானில் உற்று கவனித்துக்கொண்டிருந்தவர்களுக்கு பொய்யான எண்ணத்தை உருவாக்குவதற்காகவே அவர்கள் அவ்விதமாகச் செய்தார்கள். வேவுகாரர்களிடம் ராகாப் பேசிய வார்த்தைகள், அவர்களில் அவளுக்கு எந்த ஒழுக்கக் கேடான அக்கறையும் இருக்கவில்லை என்பதை காண்பித்தன. அவர்கள் யெகோவாவின் ஊழியர்கள் என்பதை அவள் அறிந்தவளாய், யெகோவாவின் வணக்கத்தாளாக ஆக தான் ஊக்கமாக விரும்பியதைச் சொல்லக்கூடும். அவளுடைய வீட்டில் அவர்களை ஒளித்து வைப்பதன் மூலம் அவள் தன்னுடைய சொந்த உயிரையும்கூட ஆபத்திற்குள்ளாக்கினாள். கர்த்தருடைய “சகோதரர்களுக்கு” தயவை காண்பித்த இயேசுவின் உவமையிலுள்ள “செம்மறியாட்டைப்” போல அவள் இருந்தாள். (மத்தேயு 25:31-46) விவேகமாக செயல்படும்போது இன்று யெகோவாவின் சாட்சிகள் இதுபோன்ற அக்கறையுள்ள ‘சமாதான பாத்திரர்களை’ச் சந்தித்து அவர்களோடு பைபிளை படிக்க தயங்குவதில்லை.—லூக்கா 10:5-7.
7 ராகாப் யெகோவாவின் மகத்தான செயல்களை கற்றறிந்தாள். ஒளிந்துக்கொண்டிருந்த வேவுகாரர்களிடம் அவளால் இவ்விதமாக தன்னுடைய விசுவாசத்தை வெளியிட முடிந்தது: “யெகோவா உங்களுக்கு தேசத்தை ஒப்புக்கொடுத்தாரென்றும் உங்களைப் பற்றி எங்களுக்குத் திகில் பிடித்திருக்கிறதென்றும், உங்களைக் குறித்து தேசத்துக் குடிகள் எல்லாரும் சோர்ந்து போனார்களென்றும் அறிவேன்.” யெகோவாவின் மகத்தான செயல்களைக் குறித்து தான் கேள்விப்பட்டதைச் சொன்னப் பிறகு ராகாப் தொடர்ந்து இவ்விதமாகச் சொன்னாள்: “உங்கள் தேவனாகிய யெகோவாவே உயர வானத்திலும் கீழே பூமியிலும் தேவனானவர். இப்போழும் நான் உங்களுக்குத் தயவு செய்தபடியினால், நீங்களும் என் தகப்பன் குடும்பத்துக்குத் தயவு செய்வோம் என்று யெகோவாவின் பேரில் எனக்கு ஆணையிட்டு எனக்கு நிச்சயமான அடையாளத்தைக் கொடுக்க வேண்டும்.” (யோசுவா 2:9-13) ராகாபைப் போலவே இன்று கடவுளுடைய சத்தியத்தைக் கற்றுக்கொள்ளும் புதியவர்கள் “யெகோவாவின் நாளில்” நிறைவேற்றப்பட இருக்கும் நியாயத்தீர்ப்பைக் குறித்து இனிமேலும் பயப்பட வேண்டியதில்லை. (செப்பனியா 1:14-18) மாறாக, அவர்கள் உலகப்பிரகாரமான வழிகளை விட்டு விலகி இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ளும் வழியை அறிந்துகொள்ளும் பொருட்டு, யெகோவாவின் சாட்சிகளுடைய உதவியை நாட வேண்டும்.—சங்கீதம் 3:6-8; நீதிமொழிகள் 18:10.
8 வேவுகாரர்கள், ராகாபுக்கு கொடுத்த அடையாளம், “சிவப்பு நூல் கயிறாக” இருந்தது. வேவுகாரர்களை இறக்கிவிட்ட ஜன்னலிலே இந்தச் சிவப்பு நூல் கயிற்றை அவள் கட்ட வேண்டியவளாக இருந்தாள். (யோசுவா 2:17-21) ராகாப் இந்த அடையாளத்தை கட்டி வைப்பதன் காரணமாக, எரிகோ அழிக்கப்படுகையில் அவளுடைய வீடு அழிக்காமல் விடப்படும். அதே விதமாகவே இன்று ராகாபைப் போன்ற விசுவாசத்தைக் காண்பிக்கிறவர்கள் யெகோவாவின் ஒப்புக்கொடுக்கப்பட்ட முழுக்காட்டப்பட்ட வணக்கத்தாராக மீட்புக்குரியவர்களாகிறார்கள். வெளிப்படுத்தின விசேஷம் 7:9, 10, 14 அவர்களை “தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்திருக்கும்” “திரளான கூட்டமாகிய ஜனங்கள்” என்பதாக விவரிக்கிறது. இயேசுவின் பலியின் இரத்தத்தில் அவர்கள் விசுவாசத்தை அப்பியாசித்து, இதோடு கிறிஸ்தவ கிரியைகளை நடப்பிக்கிறார்கள். (ரோமர் 10:9, 10) யாக்கோபு 2:24, 25-ல் நாம் இவ்விதமாக வாசிக்கிறோம்: “ஆதலால், மனுஷன் விசுவாசத்தினாலே மாத்திரமல்ல, கிரியைகளிலேயும் நீதிமானாக்கப்படுகிறானென்று நீங்கள் காண்கிறீர்களே. அந்தப்படி ராகாப் என்னும் வேசியும் தூதர்களை ஏற்றுக்கொண்டு வேறு வழியாய் அனுப்பிவிட்டபோது, கிரியைகளினாலே அல்லவோ நீதியுள்ளவளாக்கப்பட்டாள்?”
9 வேவுகாரர்களை பாதுகாத்ததும், இரட்சிப்புக்காக மற்றவர்களை அவளுடைய வீட்டிலே சேர்த்துக்கொண்டதும் ராகாபினுடைய கிரியைகளாக இருந்தன. அதேவிதமாகவே, நவீன காலங்களில் அபிஷேகம் பண்ணப்பட்ட “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” “ஏற்ற வேளையிலே” ஆவிக்குரிய “போஜனத்தைக்” கொடுத்து உலகம் முழுவதிலும் ராஜ்ய பிரசங்கிப்பு வேலையை மேற்பார்வை செய்யும்போது, “திரள் கூட்டமான ஜனங்கள்” தொடர்ந்து உண்மையுடன் அவர்களை ஆதரித்து வருவதில் தங்களை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்கிறார்கள். (மத்தேயு 24:45-47) ராகாப் அவளுடைய பங்கில் தன்னுடைய தகப்பனுடைய குடும்பபத்தாருக்கு தைரியமாக சாட்சி கொடுத்தாள். இது ஆபத்து நிறைந்த ஒரு காரியமாக இருந்தது. ஏனென்றால் அவள் காட்டிக்கொடுக்கப்படக்கூடிய சாத்தியம் இருந்தது. (மத்தேயு 10:32-36-ஐ ஒப்பிடவும்) அதே விதமாகவே இன்று எதிர்ப்பு இருக்கும் அநேக தேசங்களில், சாட்சி கொடுப்பதில் யெகோவாவின் சாட்சிகள் தைரியமாக இருக்க வேண்டியவர்களாக இருந்திருக்கிறார்கள். இது மகத்தான கூட்டிச் சேர்ப்பிலும், அநேக சமயங்களில் முழு குடும்பங்கள் யெகோவாவின் மெய் வணக்கத்துக்காக தங்களுடைய நிலைநிற்கையை எடுப்பதற்கு மகா பாபிலோனிலிருந்து வெளி வருவதிலும் விளைவடைந்திருக்கிறது.—சங்கீதம் 73:28; 107:21, 22.
எரிகோ—அன்றும் இன்றும்
10 கிளர்ச்சியூட்டும் இந்த சம்பவங்களை வித்தியாசமான ஒரு கோணத்திலிருந்து பார்ப்போமாக. “எரிகோ இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக அடைக்கப்பட்டிருந்தது; ஒருவரும் வெளியே போகவுமில்லை, ஒருவரும் உள்ளே வரவுமில்லை.” இதுவே யெகோவாவின் நியாயத்தீர்ப்பின் பட்டயத்தின் கீழ் வந்த முதல் கானானிய பட்டணமாக இருந்தது. அந்த காரணத்துக்காக, கடவுளுக்கு நேர்ந்துக் கொள்ளப்பட்ட முதல் கனியாக, அது விசேஷித்த கவனத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டியதாக இருந்தது. யோசுவா இவ்விதமாக விளக்கினான்: “இந்தப் பட்டணமும் இதிலுள்ள யாவும் யெகோவாவுக்குச் சாபத்தீடாயிருக்கும்.”—யோசுவா 6:1, 17; யாத்திராகமம் 22:29; லேவியராகமம் 27:26-ஐ ஒப்பிடவும்.
11 இரத்த கறைபடிந்த இந்த 20-ம் நூற்றாண்டில் அக்கிரமத்தின் உச்சநிலையை அடைந்திருக்கும் பொய் மத உலகப் பேரரசாகிய மகா பாபிலோனுக்கு இது எவ்வளவு நன்றாக ஒத்திருக்கிறது! யெகோவாவின் சாட்சிகள் நுழையாதபடி அது அதன் கதவுகளை அடைத்து வைக்க முயற்சித்திருக்கிறது. ராகாபின் வார்த்தைகளில், கடவுளுடைய ஜனங்களைப் பற்றிய “திகில்” அவர்களை பிடித்திருக்கிறது. உதாரணமாக, நவம்பர் 12, 1985 தேதியிட்ட இத்தாலிய செய்தித் தாளாகிய லா ரிப்பப்ளிக்கா “யெகோவாவின் சாட்சிகளுக்கு எதிராக சர்ச்சின் அபாய அறிவிப்பொலி” என்ற தலைப்பை வெளியிட்டிருந்தது. யெகோவாவின் சாட்சிகளுடைய “தொல்லையை” ஒழிப்பதற்காக, ரோமன் கத்தோலிக்க போப்பாண்டவர் மன்ற உறுப்பினர் போலோக்னாவில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தைப் பற்றி கட்டுரை அறிக்கை செய்திருந்தது. போப் இதற்கு ஆதரவையும் ஊக்குவிப்பையும் தெரிவிக்கும் தந்தி செய்தி ஒன்றை அனுப்பி வைத்திருந்தார். பின்வரும் முழக்கம் முழங்கப்பட்டது: “ஏற்கெனவே அவர்கள் உலகம் முழுவதிலும் திரளான எண்ணிக்கையில் திரிந்து கொண்டிருக்கிறார்கள்.” “இப்பொழுது இந்த ஆபத்தை”ச் சந்திக்க “சர்ச் தன்னை ஆயத்தப்படுத்திக்கொள்ளும்” என்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அது மேற்கொள்ளுமா?—எரேமியா 1:17-19.
12 கிறிஸ்தவ மண்டலத்தினுடைய விளங்காத திருத்துவத்திலிருந்து கிழக்கத்திய மதங்களின் லட்சக்கணக்கான தெய்வங்கள் வரையாக, மகா பாபிலோன் குழப்பத்தை உண்டாக்கும் திரளான கடவுட்களை தன்னுள் கொண்டிருக்கிறது. யோசுவாவிடம் பொறுப்பை ஒப்படைப்பதற்கு முன்பாக மோசே இவ்விதமாக தெரிவித்திருந்தான்: “இஸ்ரவேலே கேள். நம்முடைய தேவனாகிய யெகோவா ஒருவரே யெகோவா.” இன்று யெகோவாவின் சாட்சிகள் மட்டுமே இந்த “ஒரே தேவனையும் பிதாவையும்” உயர்த்துகிறவர்களாக இருக்கிறார்கள். (உபாகமம் 6:4; எபேசியர் 4:6) யோசுவாவின் நாளிலும், இஸ்ரவேலின் மற்ற விசுவாசமுள்ள தலைவர்களின் நாட்களிலும் செய்ததுபோலவே, யெகோவா நமக்காக யுத்தம் பண்ணுவார்.—2 நாளாகமம் 20:5, 17; 32:7, 8; ஏசாயா 54:17.
நியாயத்தீர்ப்பின் நிறைவேற்றம்
13 எரிகோவை முற்றுகையிட யோசுவா முழுமையாக தயார் செய்தான். வனாந்தரத்தில் வளர்ந்து பெரியவர்களானவர்கள் விருத்தசேதனம் பண்ணப்பட்டார்கள். யெகோவாவிடம் முழு இருதயத்தோடு பக்தியாக இருப்பதற்கு தடையாக இருக்கக்கூடிய அனைத்தையும் அவர்கள் தள்ளி விடுவதை இது அடையாளப்படுத்தியது. (உபாகமம் 10:16; 30:5, 6) மீண்டுமாக பஸ்காவை அவர்கள் புசிக்க ஆரம்பித்தார்கள். அற்புதமாக அவர்களுக்கு அருளப்பட்ட மன்னா நிறுத்தப்பட்டபோது, ஜனங்கள் தேசத்தின் தானியத்தினால் ஊட்டமளிக்கப்பட்டார்கள். மேலுமாக, சந்தேகமின்றி, மனிதனாக பிறப்பதற்கு முன்பாக வார்த்தையாக இருந்த “யெகோவாவுடைய சேனையின் அதிபதி” யோசுவாவுக்குத் தோன்றி அவனுக்கு மறுபடியுமாக நம்பிக்கையூட்டினார். யோசுவா மனத்தாழ்மையோடு அவருடைய பிரசன்னத்தை ஏற்றுக்கொண்டான். உடனடியாகச் செய்யப்பட வேண்டிய வேலையில் தங்களை முழுமையாக அவர்கள் ஈடுபடுத்திக் கொண்டிருக்கும்போது, இவை அனைத்திலும், யெகோவாவின் நவீன நாளைய சாட்சிகள் அனுபவத்தில் இணையான சம்பவங்களை நம்மால் பார்க்க முடிகிறது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் தலைமையின் கீழ் “உண்மையும் விவேகமுமுள்ள” அடிமை வகுப்பு படிப்படியாக முன்னேறிச் சென்று கொண்டிருக்கும்போது, நம்முடைய ஆவிக்குரிய உணவு அதிக வித்தியாசப்பட்டதாகவும் ஊட்டமிக்கதாகவும் மாறியிருக்கிறது.—யோசுவா 5:1-15.
14 இப்பொழுது யுத்த காட்சியை கவனியுங்கள். யெகோவா விநோதமான சூழ்ச்சி முறைகளை செய்யும்படியாகச் சொல்லியிருந்தார்! யெகோவாவின் பிரசன்னத்தை பிரதிநிதித்துவம் செய்த பெட்டியை சுமந்துகொண்டு இஸ்ரவேலின் ஆசாரியர்கள் எரிகோவைச் சுற்றி ஒரு நாளுக்கு ஒரு முறையாக ஆறு நாட்கள் சுற்றி வருகிறார்கள். ஏழு ஆசாரியர் பெட்டிக்கு முன்பாக ஏழு கொம்பு எக்காளங்களைப் பிடித்துக்கொண்டு போகிறார்கள். இஸ்ரவேலின் யுத்த புருஷர் அதற்கு முன்னும் பின்னும் அணிவகுத்துச் செல்கிறார்கள். ஆனால் ஏழாம் நாளில் அவர்கள் ‘அதிகாலமே கிழக்கு வெளுக்கும்போது எழுந்திருந்து’ பட்டணத்தை ஏழுதரம் சுற்றி வந்தார்கள். அந்த எரிகோ பட்டணத்தார் எவ்வளவு திகிலடைந்திருக்க வேண்டும்!—யோசுவா 6:2-15.
15 யெகோவாவின் சாட்சிகள் இன்று பூமி முழுவதிலும் குறிப்பிடத்தக்க வகையில் இதற்கு இணையாக ஒன்றைச் செய்து வருவதை நாம் பார்க்கிறோம். சமீப ஆண்டுகளில் நம்முடைய ராஜ்ய நடவடிக்கையில் குறிப்பிடத்தக்க விஸ்தரிப்பு இருந்துவருகிறது. 1985 வரையாக ஐந்து வருடங்களில் பயனியர் அணியின் அதிகரிப்பு 134 சதவிகிதமாக இருந்திருக்கிறது. பயனியர்களின் சேனையும் மற்ற உண்மையுள்ள ராஜ்ய பிரஸ்தாபிகளும் அநேகமாக சொல்லர்த்தமான அர்த்தத்திலே, “அதிகாலமே” எழுந்து, யெகோவாவின் நியாயத்தீர்ப்பை அறிவிப்பதில் வைராக்கியத்தோடு பங்குகொள்கிறார்கள். கிறிஸ்தவ மண்டல மதங்களின் தலைவர்களுக்கு இந்த சாட்சிகள் “ஏராளமான பலத்த ஒரு ஜாதியாக” தோன்றுகிறார்கள். சத்தியம் அறிவிக்கப்படுகையில் எவ்விதமாக அநேக நேர்மையான ஆட்கள் அவர்களை விட்டுவிட்டு யெகோவாவுக்காக தங்களுடைய நிலைநிற்கையை எடுக்கிறார்கள் என்பதை கவனிக்கும்போது, குருமார்கள் “நடுங்கு”கிறார்கள்.—யோவேல் 2:1-3, 6.
16 கடைசியாக யோசுவா ஜனங்களிடம் பின்வருமாறு கட்டளையிடுகிறான்: “ஆர்ப்பரியுங்கள், பட்டணத்தை யெகோவா உங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்.” ஒரு பெரும் யுத்த கூக்குரல் முழக்கமாக கேட்கிறது. பூமி அதிர்கிறது—அற்புதங்களிலும் அற்புதமாக—எரிகோவின் அலங்கம் இடிந்து விழுகிறது. பட்டணத்தில் உயிரோடே இருக்கிற அனைத்தையும் சங்காரம் பண்ணுவதற்காக இஸ்ரவேலர் கீழ்ப்படிதலுடன் முன்னேச் செல்லுகிறார்கள். அதை அவர்கள் நெருப்பினால் சுட்டெரிக்கிறார்கள். ஆனால் பாருங்கள்! வெளிப்புற அலங்கத்தின் ஒரு சிறிய பகுதி மட்டும் விழாமல் நின்று கொண்டிருக்கிறது. அதனுடைய ஜன்னலில் ஒரு சிவப்பு நூல் கயிறு காணப்படுகிறது. ராகாபுக்கும் அவளுடைய தகப்பனின் குடும்பத்துக்கும் எந்த தீங்கும் ஏற்படாத வண்ணம் அவர்கள் வெளியே அழைத்துவரப்படுகிறார்கள். காலப்போக்கில், அவளுடைய விசுவாசத்துக்கு வெகுமதியாக, அவள் இஸ்ரவேலனாகிய சல்மோனின் மனைவியாகவும், இப்படியாக இயேசு கிறிஸ்துவுக்கு முன்னோளாகவும் ஆகும் வாய்ப்பை பெறுகிறாள்.—யோசுவா 6:16-26; மத்தேயு 1:5.
17 “யெகோவா யோசுவாவோடேகூட இருந்தார்; அவன் கீர்த்தி தேசமெங்கும் பரம்பிற்று.” அதேவிதமாகவே “மகா உபத்திரவம்” ஆரம்பமாகும்போது, மகா பாபிலோன் பாழாக்கப்பட்டு, அவளுடைய ஐசுவரியமும் மகிமையும் அழிக்கப்படுகையில், யெகோவாவின் மகிமையுள்ள நாமம் நிலைநாட்டப்படும்.—யோசுவா 6:27; வெளிப்படுத்தின விசேஷம் 17:16; 18:9, 10, 15-17; மத்தேயு 24:21, 22.
ஒரு விசுவாச துரோகி தவறுகிறான்
18 எரிகோவில் வெற்றி முழக்கம் கேட்கப்பட்ட பின்பு, சீக்கிரத்தில் ஆச்சரியமான ஒரு சம்பவம் நிகழ்ந்தது. சமீபத்திலிருந்த ஆயிப் பட்டணத்தை அழிக்க யோசுவா அனுப்பிய போர்படை முறிந்தோடியது. “ஜனங்களின் இருதயம் கரைந்து தண்ணீராய்ப் போயிற்று.” யோசுவா மிகவும் குழம்பியவனாய் யெகோவாவிடம் இவ்விதமாக ஜெபத்தில் புலம்பினான்: “ஆ, யெகோவாவாகிய ஆண்டவரே, . . . உமது மகத்தான நாமத்துக்கு என்ன செய்வீர்?”—யோசுவா 7:2-9.
19 அப்பொழுது, யெகோவா இஸ்ரவேலரின் மத்தியில் ஒரு “சாபத்தீடான” செயல் செய்யப்பட்டிருப்பதை யோசுவாவுக்கு வெளிப்படுத்தினார். யூதா கோத்திரத்தில் வந்த ஆகானே குற்றவாளி என்பது கண்டுபிடிக்கப்பட்டது. எரிகோவின் கொள்ளையிலிருந்து அவன் “நேர்த்தியான” ஒரு பாபிலோனிய சால்வையையும் பொன்னையும் வெள்ளியையும் திருடிவிட்டிருந்தான். ஆகானை யெகோவா ‘கலங்கப்’ பண்ணினார். அவனும் அவனுடைய குடும்பபத்தாரும் கல்லெறியுண்டார்கள். பின்பு அவர்களும் அவர்களுடைய உடைமைகளும் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டன. யெகோவாவின் நியாயத்தீர்ப்பு நிறைவேற்றப்பட்டதற்கு நிலையான ஒரு அத்தாட்சியாக ஆகானின் மீதே ஒரு பெரிய கற்குவியல் எழுப்பப்பட்டு அது “ஆகோர் பள்ளத்தாக்கு” என்று அழைக்கப்பட்டது. இதன் பொருள், “கலக்கம், தொந்தரவு” என்பதாகும். மறுபடியுமாக யெகோவா யோசுவாவிடம், “நீ பயப்படாமலும் கலங்காமலும் இரு” என்று சொன்னார். யோசுவா மறுபடியுமாக ஒருபோதும் யுத்தத்தில் தோல்வியடையாதிருந்ததில் யெகோவாவின் நாமம் உயர்த்தப்பட்டது.—யோசுவா 7:10 -8:1.
20 நவீன நாளில் இதற்கு இணையாக சம்பவம் இருக்கிறதா? ஆம், இருக்கிறது. தேவராஜ்ய ஒழுங்கை அசட்டை செய்து, தங்களுடைய சொந்த வழியை நாடிச் செல்லக்கூடிய “கொடிதான ஓநாய்களை”ப் பற்றி அப்போஸ்தலனாகிய பவுல் எச்சரித்தான். 1919 முதற்கொண்டு, அவ்வப்போது, இப்படிப்பட்ட பேராசையுள்ள ஆட்கள் கடவுளுடைய ஜனங்கள் மத்தியிலே தோன்றியிருக்கிறார்கள். சமீப கால உதாரணத்துக்கு, 1970 ஆண்டுகளின் மத்திபத்தில் பிரபலமாக இருந்த சில மூப்பர்கள் மனநிறைவில்லாதவர்களானார்கள். இயேசுவின் அப்போஸ்தலர்களுடைய மாதிரியைப் பின்பற்றி, ராஜ்ய செய்தியை அறிவிக்க வீட்டுக்கு வீடு சென்று சாட்சி கொடுப்பது அவர்களுக்கு மதிப்புக் குறைவான ஒரு செயலாக இருந்தது. (அப்போஸ்தலர் 5:42; 20:20, 21, 29, 30) பாபிலோனிய போதகங்களுக்கு திரும்பிச்சென்று விடுவதே அவர்களுக்கு மேலானதாக தோன்றியது. மிகவும் தந்திரமாக அவர்கள், “கடைசி நாட்களை”ப் பற்றி சந்தேகங்களை எழுப்பி யெகோவாவின் சாட்சிகளுடைய வேலையை மந்தப்படுத்த முயற்சித்தார்கள். (2 பேதுரு 3:3, 4) கடைசியாக அவர்களை சபை நீக்கம் செய்ய வேண்டியதாயிற்று.—2 யோவான் 10, 11; பிலிப்பியர் 1:15-17; எபிரெயர் 6:4-8-ஐ ஒப்பிடவும்.
21 1979 ஜூலை 15 காவற்கோபுரம், நம்முடைய வீட்டுக்கு வீடு ஊழியத்துக்கான வேத ஆதாரத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் பற்றி தைரியமாக பேசியது. விசுவாசமுள்ள சாட்சிகள் படுசுறுசுறுப்பாக 1980-ம் ஆண்டுகளுக்குள் முன்னேறிச் சென்றார்கள். விசுவாச துரோகிகளின் ஒரு சிறிய எண்ணிக்கை, 1970-ம் ஆண்டுகளின் பிற்பகுதியின் போது வேலையின் வேகம் குறைவதற்கு காரணமாக இருந்தது. சுறுசுறுப்பாகச் செயல்படும் யெகோவாவின் சாட்சிகளின் அணியின் வருடாந்தர சராசரி 1 சதவிகிதத்துக்கும் குறைவாக ஆனது. என்றபோதிலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் வருடாந்தர அதிகரிப்பு சராசரியாக 6 சதவிகிதத்திற்கும் அதிகமாயிருக்கிறது. 1975-ல் இருந்த 21,79,256 ராஜ்ய பிரஸ்தாபிகளோடு ஒப்பிடுகையில், 1985-ல் உலகம் முழுவதிலும் ராஜ்ய பிரஸ்தாபிகளின் உச்சநிலை 30,24,131 ஆக இருந்தது. யெகோவா தொடர்ந்து தம்முடைய வேலையை தீவிரமாக நடப்பித்துக் கொண்டு வருகிறார்.—ஏசாயா 54:2, 3; 60:22.
22 . உண்மையாகவே, பூமி முழுவதிலும் யெகோவாவின் பெயர் மகிமையுள்ளதாக ஆகி இருக்கிறது! ஆனால் நாம் இப்பொழுது பார்க்கப் போகிற விதமாகவே யோசுவா புத்தகத்தின் மூலமாக அவர் நமக்கு இன்னும் அதிகத்தைச் சொல்லுகிறார்.”—ஏசாயா 42:8, 9. (w86 12/15)
யோசுவா புத்தகத்தில்—
◻ உலகத்தின் என்ன மாதிரியை நாம் இன்று காண்கிறோம்?
◻ ராகாபைப் பற்றிய பதிவிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
◻ தீவிரமாக்கப்பட்ட நம்முடைய நடவடிக்கை எதற்கு இணையாக இருப்பதை நாம் காண்கிறோம்?
◻ எரிகோவின் அழிவு எதற்கு முன்னிழலாக இருக்கிறது?
◻ ஆகானின் பாவம் கையாளப்பட்ட விதத்திலிருந்து சுட்டிக்காட்டப்படுவது என்ன?
[கேள்விகள்]
1. யெகோவா ஏன் தேசம் கானானியரை கக்கிப் போடும்படியாகச் செய்தார்?
2. உலகத்தின் மத அமைப்புகள் என்ன “கனிகளைப்” பிறப்பித்திருக்கின்றன?
3. உலகம் கடவுளுடைய கட்டளையை மீறியதன் விளைவு என்னவாக இருந்திருக்கிறது?
4. (எ) யோசுவாவின் நாளில் இஸ்ரவேலர் செய்த யுத்தத்திலிருந்து நம்முடையது எவ்விதமாக வித்தியாசப்படுகிறது? (பி) உலகப் பிரகாரமான ஆட்களோடு நாம் எந்த அளவு சகவாசம் வைத்துக்கொள்ள வேண்டும்? ஏன்?
5, 6. வேவுகாரர்கள் எரிகோவுக்கும் ராகாபின் வீட்டுக்கும் போக காரணமென்ன? (பி) இன்று உதவிக்கான கூக்குரலுக்கு யெகோவா எவ்விதமாக பதிலளித்திருக்கிறார்? (சி) ராகாப் எவ்விதமாக தன்னை “சமாதான பாத்திரமாக” காண்பித்தாள்?
7. (எ) யெகோவாவில் ராகாப் எவ்விதமாக விசுவாசத்தை வெளிப்படுத்தினாள்? (பி) புதியவர்கள் இன்று என்ன மனநிலையை காண்பிக்க வேண்டும்? அவர்கள் எவ்விதமாகச் செயல்பட வேண்டும்?
8. ராகாப் “சிவப்பு நூல் கயிற்றை” தன்னுடைய ஜன்னலில் வைத்ததற்கு இணையாக இன்று இருப்பது என்ன? (பி) ராகாப் ஏன் நீதியுள்ளவளாக்கப்பட்டாள்? என்ன விளைவோடு?
9. (எ) ராகாபின் கிரியைகள் என்னவாக இருந்தன? (பி) இன்று தைரியமாக சாட்சி கொடுத்ததன் விளைவு என்னவாக இருந்திருக்கிறது?
10. எரிகோ என்ன விசேஷமான கவனத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டியதாக இருந்தது?
11. (எ) முனைப்பாகத் தெரியும் என்ன இனையான சம்பவத்தை இன்று நாம் கவனிக்கிறோம்? (பி) மகா பாபிலோனின் “திகிலுக்கு” ஒரு உதாரணத்தைக் கொடுக்கவும்.
12. (எ) “தேவனைப்” பற்றிய மகா பாபிலோனின் கருத்து எவ்விதமாக சத்தியத்திலிருந்து வேறுபட்டதாக இருக்கிறது? (பி) யெகோவா ஏன் தம்முடைய சாட்சிகளுக்காக யுத்தம் பண்ணுவார்?
13. (எ) எரிகோவின் முற்றுகைக்கு வழிநடத்திய சம்பவங்கள் யாவை? (பி) இன்று இதற்கு இணையாக நாம் கவனிப்பது என்ன?
14. எரிகோவை முற்றுகையிட யெகோவா என்ன விநோதமான சூழ்ச்சிமுறைகளை கட்டளையிடுகிறார்?
15. யெகோவாவின் சாட்சிகளுடைய நடவடிக்கையில் என்ன இணையான போக்கு காணப்படுகிறது?
16. (எ) எரிகோவின் வீழ்ச்சியை என்ன அற்புதங்கள் தனிப்படுத்திக் காட்டுகின்றன? (பி) ராகாபின் விசுவாசத்துக்கு அவள் எவ்விதமாக பலனளிக்கப்படுகிறாள்?
17. இந்த அற்புதங்கள் எதற்கு முன்நிழலாக இருக்கின்றன?
18. (எ) ‘ஜனங்களின் இருதயம் கரைந்துபோக’ காரணம் என்ன? (பி) அந்த நெருக்கடிக்கு யோசுவா எவ்விதமாக பிரதிபலித்தான்?
19, 20. (எ) ஆகானின் அறிவற்ற நடத்தையை யெகோவா எவ்விதமாக கையாண்டார்? (பி) இதற்கு இணையாக நவீன காலங்களில் என்ன கவனிக்கப்படலாம்?
21. (எ) 1970-ம் ஆண்டுகளின் பிற்பகுதியில் வேலையின் வேகம் குறைந்ததற்கு காரணம் என்னவாக தோன்றுகிறது? (பி) அந்த சமயம் முதற்கொண்டு, வேலையை தீவிரமாக நடப்பிக்க எது உதவியிருக்கக்கூடும்?
22. யோசுவா புத்தகத்திற்கு நாம் கூடுதலாக கவனம் செலுத்தும்போது, யெகோவாவின் நாமத்தைக் குறித்து நாம் எதை போற்ற வேண்டும்?