கிறிஸ்மஸ் நீங்கள் அதைக் கொண்டாட வேண்டுமா?
கிழக்கத்திய மற்றும் மேற்கத்திய முறை கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களுக்கிடையே உள்ள ஒற்றுமையையும் வேறுபாட்டையும் விளக்க ஜப்பானிய எழுத்தாளருக்கும் இங்கிலாந்திலுள்ள அவருடைய நண்பருக்குமிடையே பரிமாற்றம் செய்துகொள்ளப்படும் இரண்டு கடிதங்களின் வடிவில் இங்கே தகவல் சமர்ப்பிக்கப்படுகிறது. நான் கிறிஸ்மஸ் கொண்டாட வேண்டுமா என்ற கேள்விக்குப் பதிலளிக்க இந்தத் தகவல் உங்களுக்கு உதவி செய்யும்.
அன்புள்ள டேவிட்,
மறுபடியுமாக அவர்கள் இதை ஆரம்பித்துவிட்டார்கள். பிரதான ஆசாரியர்களைப் போல வியாபாரிகள் ஜனங்களை வழிநடத்திச் செல்கிறார்கள். ‘கிறிஸ்மஸ் தாத்தா’ விழாவின் முதல்வராக இருக்கிறார். கிறிஸ்மஸ் மரங்கள் கொண்டாட்டத்துக்கு அடையாளமாக காணப்படுகிறது. கிறிஸ்மஸ் கேக்குகளும், விளையாட்டுப் பொருட்களும் காணிக்கையாக செலுத்தப்படுகிறது. ஜப்பானில் வியாபாரிகள், கிறிஸ்மஸ் மதத்தைப் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள். கடந்த மூன்று அல்லது நான்கு பத்தாண்டுகளாக அவர்கள் தங்கள் பணியில் வெற்றி பெற்றே வந்திருக்கிறார்கள். ஜப்பானில் எண்ணற்ற ஆட்கள் இந்த “மதத்துக்கு”—குறைந்தபட்சம் வருடத்தில் இரண்டு நாட்களாவது மதம் மாறிவிடுகிறார்கள்!
இது என்னுடைய ஆவலை கிளறிவிட்டிருக்கிறது. முக்கியமாக கிறிஸ்தவர்களல்லாதவர்களாக இருக்கும் இத்தனை அநேக ஜப்பானியர்கள் ஏன் ஒரு “கிறிஸ்தவ” திருநாளைக் கொண்டாட வேண்டும் என்று அடிக்கடி நான் யோசித்ததுண்டு. ஐப்பானியர்கள் எப்பொழுது இந்த அளவுக்கு கிறிஸ்மஸை கொண்டாட ஆரம்பித்தார்கள்? இவை அனைத்துக்கும் பின்னாலிருப்பது என்ன?
ஜப்பானியர்களின் கிறிஸ்மஸின் ஆரம்பத்தைப் பார்க்கும்போது, இந்தச் சுவாரசியமான கதையை நான் தெரிந்துகொண்டேன். மேஜி சகாப்தத்தில் (1868-1912) பெரிய எழுத்தாளராக இருந்த சாஸிக்கி நட்சூமி, பிரபல கவியான ஷிக்கி மஸேக்காவுக்கு இங்கிலாந்திலிருந்து 1900 ஆண்டு முடிவில், இலண்டனின் கவர்ச்சியான கிறிஸ்மஸ் காட்சியை விவரித்து ஒரு கிறிஸ்மஸ் வாழ்த்துதலை அனுப்பி வைத்தார். கிறிஸ்மஸ் தினத்தில் ஒரு சிறிய கோயிலைப்பற்றி ஷிக்கி ஒரு கவிதையையும் கூட எழுதினார். நூற்றாண்டின் ஆரம்பத்தில் கிறிஸ்மஸ் ஜப்பானில் இன்னும் ஒரு புதுமையாகவே இருந்துவந்தது. ஆகவே ஜப்பானியர்கள் சரியாக தங்களுடைய முதல் கிறிஸ்மஸை எப்பொழுது கொண்டாடினார்கள்?
கிறிஸ்மஸ் கின்ஸாவில், மேஜியின் எட்டாவது ஆண்டிலேயே (1875) ஒரு பெண்கள் பள்ளியில் கொண்டாடப்பட்டது என்பதாக சில நிபுணர்கள் சொல்வதைத் தெரிந்துகொள்வதில் நீங்கள் அக்கறையுடையவராக இருக்கலாம். என்றபோதிலும், “1914 வரையாக கிறிஸ்மஸ் கொண்டாடும் பழக்கம் உண்மையில் ஜப்பானில் இல்லை” என்று கிறிஸ்தவ நூற்றாண்டு குறிப்பிடுகிறது. ஜப்பானியர்கள் அமெரிக்க போர் வீரர்களின் குடும்பங்களும் மிஷனெரிகளும் கிறிஸ்மஸ் கொண்டாடுவதை பார்த்த சமயமாக அது இருந்தது. இரண்டாவது உலகப் போரில் தோல்வியடைந்து, ஒரு ஆவிக்குரிய சூனியத்தில் விடப்பட்டவர்களாய், ஜப்பானியர்களை சந்தோஷப்படுத்த பொதுவாக ஏதோ ஒன்று தேவையாக இருந்தது.
கிறிஸ்மஸ் அந்தத் தேவையை பூர்த்தி செய்தது. உன்னால் கற்பனை செய்துபார்க்க முடிகிறபடியே, வியாபாரிகள் தங்கள் ஆண்டு முடிவு விற்பனைகளை அதிகரிப்பதற்காக நேரத்தை வீணாக்காமல் கிறிஸ்மஸ் அலங்கரிப்புகளைப் பயன்படுத்திக் கொண்டார்கள். கிறிஸ்மஸ் அலங்காரங்கள், “வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுப்பதில் ஒரு மந்திரம் போல செயல்பட்டது” என்கிறார் செய்தித்தாளில் குறிப்பிட்ட ஒரு பத்தியில் எழுதும் கெம்பி ஷிபா. “இது ஏனென்றால் இந்த அலங்காரங்கள் கவர்ச்சியாகவும் மகிழ்ச்சியூட்டுவதாகவும் இருந்தன” என்று மேலுமாக அவர் குறிப்பிடுகிறார்.
ஆனால் டேவிட், நீ இங்கிலாந்தில் வாழ்வதால், கிறிஸ்மஸ் பரிசுகள் வருவதற்கு வெகு முன்பாகவே ஆண்டு முடிவில் பரிசுகளைப் பரிமாற்றம் செய்துகொள்ளும் பழக்கம் ஜப்பானியர்களிடம் இருந்தது உனக்கு தெரியாதிருக்கலாம். சில்லறை வியாபாரிகளுக்கு டிசம்பர் மாதம் எப்பொழுதும் ஒரு வரப்பிரசாதமாக இருந்து வந்திருக்கிறது. ஆண்டு முடிவில் போனஸ் பெற்றுக்கொள்வதால் கனத்தப் பணப்பையையுடைய ஆட்கள், தாராளமாக செலவு செய்கிறார்கள். என்றபோதிலும் “இந்த [கிறிஸ்மஸ்] சூழ்நிலை ஆட்கள் உல்லாசமாக இருக்கவும், சாதாரணமாக வாங்குவதைவிட அதிகம் பரிசுகளை வாங்கும்படியாக தூண்டவும் செய்திருக்கிறது. ஆகவே தொடர்ந்து கிறிஸ்மஸ் அலங்கரிப்புகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது” என்பதாக திரு. ஷிபா விளக்குகிறார்.
இன்று பண்டகச் சாலை கடைகளும் சில்லரை வியாபாரிகளும், “கிறிஸ்மஸ்” ஆவியை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். விளையாட்டுப் பொருட்கள் உற்பத்தி செய்பவர்களும் ரொட்டி செய்பவர்களும் இந்தச் சமயத்தை அனுகூலப்படுத்திக்கொள்ள தங்கள் கவனத்தை ஒருமுகப்படுத்துகிறார்கள். டிசம்பர் மாதத்தில், கிட்டிலாண்ட் என்றழைக்கப்படும் ஜப்பானின் மிகப்பெரிய விளையாட்டு சாமான் கடையில் விற்பனை மற்ற மாதங்களைவிட நான்கு மடங்கு அதிகமாக உள்ளது. ஜப்பானில் ஒவ்வொரு ஆண்டும் தயாரிக்கப்படும் எல்லா கேக்குகளிலும் சுமார் 5-10 சதவிகிதத்தை “கிறிஸ்மஸ் கேக்குகள்” என்றே அழைக்கலாம்.
ஜப்பானில் கிறிஸ்மஸ் காட்சியை வியாபார மனப்பான்மை ஆக்கிரமித்துக்கொள்வதன் காரணமாக சில ஆட்கள் எரிச்சலடைவதை நான் கவனித்தேன். உதாரணமாக, ஜப்பானில் நீண்ட காலமாக வாழ்ந்துவரும் ஒரு அமெரிக்க நாட்டவன் பின்வருமாறு குறிப்பிட்டதை தி டேய்லி யூம்மரி வெளியிட்டிருந்தது: “ஜப்பானியர்கள் ஏறக்குறைய எல்லா கிறிஸ்மஸ் வித்தைகளையும் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். ஆனால் எப்படியோ கிறிஸ்மஸ் ஆவி இங்கு இல்லை.” கிறிஸ்மஸின் மதசம்பந்தமான அம்சத்தைப் பற்றி அவர் பேசிக்கொண்டிருந்தார்.
இது கிறிஸ்மஸின் மதசம்பந்தமான பக்கத்தை ஆராயும்படி என்னைத் தூண்டியது. சர்ச்சுக்குப் போகிறவர்கள் கிறிஸ்மஸ் (டிசம்பர் 25) கிறிஸ்துவின் பிறந்த நாள் என்று சொல்கிறார்கள். இயேசு டிசம்பர் 25-ம் தேதி பிறந்தார் என்று நிரூபிக்க முடியாது என்பதை ஜப்பானிய மதங்களின் என்சைக்ளோபீடியாவில் நான் பார்த்தபோது எனக்கு எவ்வளவு ஆச்சரியமாக இது இருந்தது! என்சைக்ளோப்பீடியா சொல்கிறது: “இயேசு பிறந்த உண்மையான தேதி அறியப்படாதிருந்தபோதிலும், சுமார் மூன்றாவது நூற்றாண்டு முதற்கொண்டு கிறிஸ்மஸ் டிசம்பர் 25-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. . . . இது ஏறக்குறைய பனிக்கால கதிர் திருப்ப சமயமாக, கிறிஸ்தவத்துக்கு முந்தின காலங்களில் கொண்டாடப்பட்டு வந்த கதிரவனின் மறுபிறப்பு விழாவாக இருக்கிறது.” கதிரவனின் மறுபிறப்பா? இது இயேசுவின் பிறந்த நாளாக இருப்பதாக அல்லவா நான் நினைத்துக் கொண்டிருந்தேன்? ஆம், ஆரம்பத்தில் பனிக்கால கதிர் திருப்பமான புறஜாதிகளின் விழாவாக இருந்த ஒன்றை உண்மைக் கிறிஸ்தவர்கள் எவ்விதமாக கொண்டாட முடியும்? அது இயேசுவின் பிறந்த நாள் அல்ல, ஆனால் கதிரவனின் மறுபிறப்பு விழா. மேற்கத்திய தேசங்களில் சர்ச்சுக்குப் போகிறவர்கள் ஜப்பானியர்களைப் போலவே, அதேவிதமான ஒரு பழக்க வழக்கத்தைக் கொண்டிருக்கும்போது, ஜப்பானியர்கள் ஒரு “கிறிஸ்தவ” திருநாளைக் கொண்டாடுவதன் மூலம் விவஸ்தை கெட்டவர்களாக இருப்பதாக அவர்களை எவ்விதமாக குற்றஞ்சாட்ட முடியும்?
ஆகவே, டேவிட் இவற்றினால் வெகுவாக நான் மனம் குழம்பி போயிருப்பதால் இந்தக் கேள்விகளுக்கு உன்னால் பதிலளிக்க முடிந்தால், நான் மகிழ்ச்சியடைவேன்.
உன் நண்பன்
இக்கிரோ
அன்புள்ள இக்கிரோவுக்கு,
உங்கள் தேசத்தில் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தை விவரித்து எழுதிய உன் கடிதத்துக்கு நன்றி. மேற்கத்தியர்களாகிய எங்களுக்கு, கிழக்கத்தியர்கள் ஒரு மேற்கத்திய திருநாளை எவ்விதமாக கொண்டாடுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வது அதிக சுவாரசியமாக உள்ளது.
நேரடியாக விஷயத்துக்கு வரும்போது, கிறிஸ்மஸ் ஒரு புறமதத் திருநாள் என்பதாக நீ சொல்வது முற்றிலும் சரியே. ஏறக்குறைய எந்த ஆய்வு குறிப்புரையுமே, கிறிஸ்மஸ் பண்டிகை, சாட்டர்நேலியா என்ற புறமத கொண்டாட்டம் என்பதை, இது வேளாண்மை கடவுளாகிய சாட்டர்னுக்காக ரோமர்கள் அனுசரித்து வந்த கொண்டாட்டம் என்பதை உனக்குக் காண்பிக்கும்.
ஆம், ஜப்பானியர்களாகிய நீங்கள் கிறிஸ்மஸை உங்களுடைய புத்த மற்றும் ஷின்டோயிஸ கலாச்சாரங்களுக்குள் ஏற்றுக்கொண்டிருப்பதை போலவே, கிறிஸ்தவ மண்டல சர்ச்சுகள் புறமத கொண்டாட்டங்களைத் தங்களுடைய “கிறிஸ்தவ” பாரம்பரியத்துக்குள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஒரு விதத்தில் இது அதிக பாவமுள்ளதாக இருக்கிறது. ஏனென்றால், ஜப்பானியர்கள் கிறிஸ்மஸை ஒரு அந்நிய விழாவாக கொண்டாடுகையில், சர்ச்சுக்குப் போகிறவர்கள் சாட்டர்நேலியாவாகிய புறமத கொண்டாட்டத்தை ஒரு “கிறிஸ்தவ” கிறிஸ்மஸாக அனுசரித்து வருகிறார்கள்.
உண்மையில் இது ஒரு புறமத பழக்கமாக இருந்ததால், கிறிஸ்மஸை அரசாங்கமும் மதமும் கொண்டாடுவது இங்கிலாந்தில் ஒரு சமயம் தடை செய்யப்பட்டிருந்தது. இங்கிலாந்தை சீர்த்திருத்தவாதிகள் ஆட்சி செய்து வந்த காலமாக அது இருந்தது. வட அமெரிக்காவில் மாசச்சூசெட்ஸ் பே காலனியில், தங்களுடைய நம்பிக்கைகளின் காரணமாக இங்கிலாந்திலிருந்து வெளியேறிய சீர்த்திருத்தவாதிகள், கிறிஸ்மஸை தடைசெய்து, அந்தச் சமயத்தில் களியாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு அபராதம் விதித்தனர்.
ஆனால் கிறிஸ்தவத்தோடு புறமதங்களைக் கலப்பதைப் பற்றிய பைபிளின் கருத்தை நீ தெரிந்துகொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன். “அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக.” இப்படித்தான் அப்போஸ்தலனாகிய பவுல் 2 கொரிந்தியர் 6:14-16-ல் உற்சாகப்படுத்துகிறான். பின்னர் அவன் தொடர்ந்து 17-ம் வசனத்தில் ஏசாயா புத்தகத்திலிருந்து (52:11) மேற்கோள் காண்பிக்கிறான்: “ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய் அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று யெகோவா சொல்கிறார்.”
புறமதங்களில் ஆரம்பமான ஒரு விழாவை கொண்டாடிக்கொண்டே அவிசுவாசிகளிடமிருந்து, நம்மைநாமே எவ்விதமாக பிரித்து வைத்துக்கொள்ள முடியும்? இந்தக் கேள்வி, அநேக உண்மை மனதுள்ள கிறிஸ்தவர்களைக் கிறிஸ்மஸ் கொண்டாடும் பழக்கத்தைக் கைவிட்டுவிடும்படியாக தூண்டியிருக்கிறது. (நீ உன்னுடைய பைபிளைத் திறந்து மத்தேயு 15:3-6-ல் பதிவு செய்யப்பட்டுள்ள இயேசுவின் வார்த்தைகளை வாசிப்பது உனக்கு உதவியாக இருக்கும்.) என்றபோதிலும், இப்படிப்பட்ட கொண்டாட்டங்களைத் தவிர்ப்பதற்குக் கூடுதலான காரணங்கள் உண்டு.
டிசம்பர் 25-ம் தேதி இயேசுவின் பிறந்த நாளாக இல்லையென்றால், அவருடைய பிறந்த நாளாக அந்தத் தேதியை கொண்டாடுவது பொய்க்குச் சமமாக இருக்கிறது. நீ உன்னுடைய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கும் விதமாகவே, சத்தியத்தை நேசிக்கும் ஒரு கிறிஸ்தவன், மேலும் உண்மையுள்ளவனாக இருக்கும்படியாக கட்டளையிடப்பட்டிருக்கும் ஒரு கிறிஸ்தவன், எவ்விதமாக பொய்யை ஆதரிக்க முடியும்? (எபேசியர் 4:25) அந்தத் தேதி முதற்கொண்டு ‘கிறிஸ்மஸ் தாத்தா’ வரை கிறிஸ்மஸ் பொய்களால் நிறைந்திருக்கிறது. ஆனால் கிறிஸ்தவர்களோ வெளிப்படுத்தின விசேஷம் 22:15-ல் “பொய்யை விரும்பி அதின்படி செய்கிற யாவரும்” நித்திய ஜீவன் என்ற தெய்வீக ஆசீர்வாதமின்றி அழிந்துபோவார்கள் என்பதாகச் சொல்லப்படுகிறார்கள்.
அப்படியென்றால், மேற்கத்திய தேசங்களில், கிறிஸ்தவர்களென தங்களை அழைத்துக்கொள்பவர்கள் ஏன் கிறிஸ்மஸ் கொண்டாடுகிறார்கள்? உன்னுடைய தேசத்திலிருப்பது போலவே, வர்த்தகம் ஒரு காரணமாக இருக்கிறது. ஐக்கிய மாகாணங்களில், பின்வருமாறு புலம்பிய ஒரு பாப்டிஸ்ட் ஊழியரைப் பற்றி நான் வாசித்தேன்: “வியாபார அம்சமானது முற்றிலும் நீக்கப்பட்டு விடுமானால், பெரும்பாலான ஆட்கள் கிறிஸ்மஸை அனுபவித்ததாக உணர மாட்டார்கள். ஆனால் மத சம்பந்தமாக இதற்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் முற்றிலும் நீக்கப்பட்டு விட்டாலும் பெரும்பாலான ஆட்கள், வித்தியாசத்தைக் கவனிக்க மாட்டார்கள்.” இங்கிலாந்துக்கும் இந்த வார்த்தைகள் பொருத்தமாகவே உள்ளன.
பைபிள், வர்த்தகத்துக்கும், அது “மகா பாபிலோன்” என்றழைக்கும் ஒன்றுக்குமிடையே நெருங்கிய தொடர்பிருப்பதாக வெளிப்படுத்துவது அக்கறையூட்டுவதாக இருக்கிறது. “மகா பாபிலோனின்” வீழ்ச்சியை விவரித்தப் பின்பு பைபிள் (வெளிப்படுத்தின விசேஷம் 18:2, 11-19) சொல்கிறது: “பூமியின் வர்த்தகர்கள், தங்கள் சரக்குகளை . . . இனிக் கொள்வாரில்லாதபடியால், அவளுக்காக அழுது புலம்புவார்கள் . . . இப்படிப்பட்டவைகளைக் கொண்டு வர்த்தகம் பண்ணி, அவளால் ஐசுவரியவான்களானவர்கள் அவளுக்கு உண்டான வாதையினால் பயந்து தூரத்திலே நின்று அழுது துக்கிப்பார்கள்.”
“மகா பாபிலோனை” உன்னால் அடையாளங் கண்டுகொள்ள முடிகிறதா? ஆம், கிறிஸ்மஸைப் பற்றி பொய் போதகங்களைப் பரப்புவதன் மூலம் இங்கே இங்கிலாந்திலும் அங்கே ஜப்பானிலும் “பூமியின் வர்த்தகர்களுக்கு” ஏராளமான இலாபத்தைக் கொடுத்திருப்பது யார்? கிறிஸ்தவ மண்டல மதங்களே அல்லவா? ஆம், மகா பாபிலோன் என்பது கிறிஸ்தவ மண்டலம் உட்பட, பொய் மத உலக பேரரசை குறிக்கிறது என்பதை நான் என் பைபிள் படிப்புகளிலிருந்து கற்றுக்கொண்டிருக்கிறேன்.
நாம் என்ன செய்யவேண்டும் என்று நீ நினைக்கிறாய்? “மகா பாபிலோனைப்” பற்றிய பைபிள் பதிவு நாம் என்ன செய்யவேண்டும் என்பதை தீர்மானிக்க எனக்கு உதவி செய்தது. வெளிப்படுத்தின விசேஷம் 18:4 துரிதப்படுத்துகிறது: “என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும் அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள்.”
“அவளைவிட்டு வெளியே வருவது” அதாவது பொய்யான கருத்துக்களை ஆதரித்து அவற்றை வளர்க்கும் மதத்திலிருந்து வெளியே வருவது என்பது என் பங்கில் தீர்க்கமான நடவடிக்கையைத் தேவைப்படுத்தியது. கிறிஸ்மஸோடு இரண்டற கலந்துவிட்டிருக்கும் எல்லா பழக்க வழக்கங்களிலிருந்தும் விடுபட்டு வருவது சுலபமாக இருக்கவில்லை. இங்கே கிறிஸ்மஸ் என்பது ஒரு சமுதாய மற்றும் மதசம்பந்தமான திருநாளாக இருக்கிறது. மற்றவர்களிலிருந்து வித்தியாசமாக இருக்க என்னுடைய எல்லா தைரியத்தையும் ஒருங்கே திரட்டிக்கொள்ள வேண்டியதாக இருந்தது: நீதிமொழிகள் 29:25-ல் நான் கண்ட வார்த்தைகள் எனக்குப் பிரயோஜனமாக இருந்தது: “மனுஷனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும்; யெகோவாவை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான்.”
யெகோவாவின் சாட்சிகளுடைய உதவியால், இவற்றை நான் கற்றுக்கொண்டேன். இங்கிலாந்திலுள்ள ஆயிரக்கணக்கான ஜனங்கள் இதே நடவடிக்கையை எடுத்து கிறிஸ்மஸ் கொண்டாட்டம் உட்பட, எல்லா பொய் மத பழக்க வழக்கங்களையும் கொண்ட மகா பாபிலோனிலிருந்து வெளியே வந்துவிட்டார்கள். ஆனால் இது, நாம் இயேசு கிறிஸ்துவை கனம் பண்ணுவதில்லை என்று அர்த்தமாகாது. வருடத்துக்கு ஒரு முறை மாத்திரமே “கிறிஸ்மஸ் ஆவி”யை காண்பிப்பதன் மூலமாக அல்ல, வருடம் முழுவதிலும் கிறிஸ்துவினுடையதைப் போன்ற ஆவியை வெளிக்காட்டுவதன் மூலம் நாம் அவரை கனம் பண்ணுகிறோம்.
உன் உண்மை நண்பன்
டேவிட்
(அவர்கள் வளர்க்க முயற்சி செய்யும் கிறிஸ்துவினுடையதைப் போன்ற ஆவியைப்பற்றி தெரிந்துகொள்ள, எபேசியர் 4:20-24; பிலிப்பியர் 2:1-6; கொலோசெயர் 3:1-14 பார்க்கவும்.—பதிப்பாசிரியர்) (w86 12/15)
[பக்கம் 4-ன் சிறு குறிப்பு]
வியாபாரிகள் பிரதான ஆசாரியர்களைப் போல இருக்கிறார்கள். ‘கிறிஸ்மஸ் தாத்தா’ விழாவின் முதல்வராக இருக்கிறார்
[பக்கம் 5-ன் சிறு குறிப்பு]
வியாபாரிகள் தங்கள் ஆண்டு முடிவு விற்பனைகளை அதிகரிப்பதற்காக கிறிஸ்மஸை பயன்படுத்திக் கொண்டார்கள்
[பக்கம் 5-ன் சிறு குறிப்பு]
இது கிறிஸ்மஸின் மதசம்பந்தமான பக்கத்தை ஆராயும்படி என்னைத் தூண்டியது
[பக்கம் 6-ன் சிறு குறிப்பு]
“ஆகையால் நீங்கள் . . . அவளைவிட்டு வெளியே வாருங்கள். . . . அசுத்தமானதைத் தொடாதீர்கள்”
[பக்கம் 6-ன் சிறு குறிப்பு]
“பூமியின் வர்த்தகர்கள், தங்கள் சரக்குகளை . . . இனிக் கொள்வாரில்லாதபடியால், அவளுக்காக அழுது புலம்புவார்கள்”
[பக்கம் 7-ன் சிறு குறிப்பு]
“மனுஷனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும்; யெகோவாவை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான்.”