கிறிஸ்மஸ்—கிழக்கத்திய தேசங்களில் வாழ்பவர்களுக்கு விழாக் காலம்
மிகப் பெரிய கிறிஸ்மஸ் மரங்கள், பிரகாசமான விளக்குகள், பல வர்ண அலங்காரக் கொடிகள்—இவை ஒவ்வொரு வியாபார ஸ்தாபனங்களிலும் கடைகளிலும் காணப்படுகின்றன. கிறிஸ்மஸ் பாடல்கள் ஒலிப்பெருக்கிகளில் முழங்க, அதிகமாக வாங்குவதற்கு ஜனங்களை உற்சாகப்படுத்தும் அறிவிப்புகளும் செய்யப்படுகின்றன. கிறிஸ்மஸ் தாத்தாவின் அலங்கார உடை அணிந்த ஆண்களும் பெண்களும் வாடிக்கையாளர்களைக் கவர, இலவசமாக பொருட்களைக் கொடுத்துக்கொண்டு தெருவில் அங்குமிங்குமாக உலாவிக்கொண்டிருக்கிறார்கள். இது ஒரு “கிறிஸ்தவ” தேசத்தில் காணப்படும் காட்சியா? இல்லை. இது மக்கள்தொகையில் 1 சதவிகிதத்துக்கும் குறைவானவர்களே கிறிஸ்தவர்களென உரிமைப் பாராட்டும் ஜப்பானில்.
அதேவிதமாகவே, அருகிலுள்ள டைவான் தீவில் கிறிஸ்தவர்களும், கிறிஸ்தவர்களல்லாதவர்களுமாகிய இரு சாராருமே, பரம்பரை வழக்கப்படி பரிசுகளை வழங்கி, கிறிஸ்மஸ் கொண்டாடுகிறார்கள். மலேசியாவிலுள்ள சீனர்கள் சமூகத்தில் அவர்கள் வெடிகளை வெடித்து, “கிறிஸ்தவ” திருநாளுக்கு புதிய பரிமாண விழாக் கோலத்தை சேர்த்திருக்கிறார்கள்.
இவர்கள் ஏன் கிறிஸ்மஸ் கொண்டாடுகிறார்கள்? அவர்கள் கிறிஸ்மஸை நம்புகிறார்களா? அல்லது கிறிஸ்மஸின் களியாட்டுகளை அவர்கள் நம்புகிறார்களா? “புசித்து குடித்து களிப்பாயிரு” என்பதே கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களிலிருந்து அவர்கள் பெற்றுக்கொள்ளும் செய்தியாக இருப்பதை அத்தாட்சி காண்பிக்கிறது. அநேகர் 24 மற்றும் 25 தேதிகளில் “கிறிஸ்தவத்தை” அப்பியாசித்து, அடுத்த நாளே—தங்களுடைய சொந்த—புத்த மதம், ஷின்டோ மதம், தாவ் மதம் அல்லது வேறு ஒரு மதத்துக்குச் சென்றுவிடுகிறார்கள். ஆனால் பல்வேறு மத பின்னணியிலுள்ள ஆட்களும் எவ்விதமாக ஒரு “கிறிஸ்தவ” திருநாளில் பங்குகொள்ள முடியும்?
ஜப்பானிலுள்ள ஒரு சிறுவனிடம் கிறிஸ்மஸ் தாத்தாவை நம்புகிறானா என்பதாக கேட்டபோது, “நான் கிறிஸ்மஸ் தாத்தாவை நம்புகிறேன். ஏனென்றால் அவர் எனக்கு அநேக விளையாட்டு சாமான்களைக் கொடுக்கிறார்” என்று பதிலளித்தான். அவனுடைய பதில் கிழக்கத்திய தேசத்தில் வாழும் அநேகருடைய எண்ணத்தை பிரதிபலிக்கிறது. ‘திறந்த மனமுள்ளவர்களாயிருங்கள், மதத்தைக் குறித்து அதிகமாக கண்டிப்பாயிராதேயுங்கள். உங்களுக்கு அதிலிருந்து ஏதாவது கிடைப்பதாயிருந்தால் அதை அனுபவியுங்கள். ஆனால் அது உங்களுடைய வாழ்க்கையின் மற்ற அம்சங்களைப் பாதிக்காதபடிக்கு அதை அதற்குரிய இடத்தில் வையுங்கள்.’
இவர்களுடைய இந்த எண்ணம், ஒரு முக்கிய ஜப்பானிய செய்தித்தாள் நடத்திய சுற்றாய்விலிருந்து தெளிவாக தெரிய வருகிறது. கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்று: “ஓமியாமரி [பிள்ளைகளின் வளர்ச்சியைக் கொண்டாடுவதற்கு ஷின்டோ மதத்தினரின் ஒரு விழா] ஓஹிகன் [மரித்தவர்களை நினைவுகூருவதற்காக ஆண்டுக்கு இருமுறை செய்யப்படும் புத்தமத சடங்கு] மற்றும் கிறிஸ்மஸ் போன்ற மத நிகழ்ச்சிகளிலும் ஒரே நபர் பங்குகொள்வதை சாதாரணமாக இங்கே காண முடிகிறது. இது ஆட்சேபிக்கத்தக்கது என்பதாக நினைக்கிறீர்களா?” 19 சதவிகிதத்தினர் மாத்திரமே “ஆட்சேபிக்கத்தக்கது” என பதிலுரைத்தார்கள். கிறிஸ்தவர்களென தங்களை அழைத்துக்கொண்டவர்களின் மத்தியிலும்கூட 60 சதவிகிதத்தினர் மற்ற மதங்களின் பண்டிகைகளைக் கொண்டாடுவதில் தவறேதுமில்லை என்பதாக நினைத்தார்கள்.
இந்த மனோபாவம், விசித்திரமான மத சம்பந்தமான போக்குகளுக்கு காரணமாக இருக்கிறது. அநேகர் ஒன்றுக்கும் மேற்பட்ட மதங்களைப் பின்பற்றுவதாக தெரிவிக்கிறார்கள். கலாச்சார விவகாரங்களுக்கான ஏஜென்ஸியின் பிரகாரம், 1982-ன் முடிவில் ஜப்பானில், பல்வேறு மத தொகுதிகளைப் பின்பற்றுகிறவர்களின் மொத்த எண்ணிக்கை 20,70,80,000 ஆக இருந்தது. ஆனால் 1982-ல் ஜப்பானின் மக்கள்தொகை, 11,86,00,000 மட்டுமே இருந்தது. அப்படியென்றால், ஐப்பானில் மத உறுப்பினரின் எண்ணிக்கை, மொத்த மக்கள் தொகையில் 170 சதவிகிதமாக இருந்தது.
ஒரே கடவுளே உண்டு என்பதாக நம்பும் கலாச்சாரங்களிலுள்ள மக்கள் இது “கூடாத காரியம்” என்பதாக வியந்து கூறக்கூடும். ஆனால் மத சம்பந்தமாக நிலவி வரும் இதே இருமனப் போக்கு, மேற்கத்திய கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களிலும் கூட இருந்து வருகிறது. இது எவ்விதமாக இருக்கக்கூடும்? அவ்விதமாக இருக்குமானால், நீங்கள் கிறிஸ்மஸ் கொண்டாட வேண்டுமா? (w86 12/15)
[பக்கம் 3-ன் படம்]
ஜப்பானிலுள்ள மதங்களின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை: 20,70,80,000
ஜப்பானின் மொத்த மக்கள்தொகை: 11,86,00,000