வல்லமையை சரியாக பயன்படுத்துபவர்கள் சந்தோஷமுள்ளவர்கள்!
“யெகோவா நீடிய சாந்தமும், மிகுந்த வல்லமையுமுள்ளவர்; அவர் ஆக்கினையில்லாமல் தப்புவிக்கமாட்டார்.”—நாகூம் 1:3
புத்திக்கூர்மையுள்ள ஆட்கள் சரியான விதத்தில் பிரயோகிக்கக்கூடிய அநேக வித்தியாசமான வல்லமைகள் இருக்கின்றன. இயற்கையாக கிடைத்த வரத்தால் அல்லது சூழ்நிலைமைகளின் காரணமாக, ஏதாவது ஒரு வகையான குறிப்பிட்ட வல்லமையை நாம் உடையவர்களாக இருக்கலாம். ஆனால் மேன்மை பாராட்ட இது காரணமாயிருக்கிறதா? நிச்சயமாக இல்லை. எரேமியா 9:23-ல் நாம் என்ன வாசிக்கிறோம்? “ஞானி தன் ஞானத்தைக் குறித்து மேன்மை பாராட்ட வேண்டாம்; பராக்கிரமன் தன் பராக்கிரமத்தைக் குறித்து மேன்மை பாராட்ட வேண்டாம்; ஐசுவரியவான் ஐசுவரியத்தைக் குறித்து மேன்மை பாராட்ட வேண்டாம்.” ஏன் கூடாது? அப்போஸ்தலனாகிய பவுல் 1 கொரிந்தியர் 4:7-ல் நல்ல ஒரு பதிலைக் கொடுக்கிறான்: “உன்னை விசேஷித்தவனாகும்படி செய்கிறவர் யார்? உனக்கு உண்டாயிருக்கிறவைகளில் நீ பெற்றுக்கொள்ளாதது யாது? நீ பெற்றுக்கொண்டவனானால் பெற்றுக்கொள்ளாதவன் போல் ஏன் மேன்மை பாராட்டுகிறாய்?”
2 நமக்கிருக்கக்கூடிய வல்லமையைத் தவறாகப் பயன்படுத்துவதற்கு எதிராக நாம் ஏன் எச்சரிப்பாயிருப்பது அவசியமாயிருக்கிறது? ஏனென்றால், “மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகள் அவன் சிறுவயது தொடங்கிப் பொல்லாததாயிருக்கிறது.” (ஆதியாகமம் 8:21) நம் அனைவருக்குமே சுயநலம் நாடும் இந்தச் சுதந்தரிக்கப்பட்ட மனச்சாய்வு இருப்பதன் காரணமாக, நமக்கிருக்கும் எந்த வல்லமையையும் நாம் சரியாகப் பயன்படுத்துவதைக் குறித்து எப்பொழுதும் எச்சரிப்பாயிருப்பது அவசியமாக இருக்கிறது. கவிஞன் ஒருவன் ஒரு சமயம் இந்தக் கருத்தை இவ்விதமாக வெளியிட்டான்: “நிழல் போல் தொடரும் பொறுப்பின்றி பொக்கிஷமில்லை, இரகசியமாக மறைந்திருக்கும் கண்ணியின்றி வல்லமையுமில்லை.” ஆம் சுதந்தரித்துக்கொள்ளப்பட்டிருக்கும் அபூரணத்தின் காரணமாக வல்லமையைச் சுயநலத்துக்காகப் பயன்படுத்திக் கொள்வதற்கான மனச்சாய்வு எப்பொழுதும் இருக்கிறது.
யெகோவா—வல்லமையுள்ளவர் ஆனால் ஞானமுள்ளவரும் நியாயமானவரும்கூட
3 வேறு எவரைக் காட்டிலும் சிருஷ்டிகராகிய யெகோவா தேவனே, வல்லமையைப் பயன்படுத்துவதில் நமக்குச் சிறந்த, ஆம் பரிபூரண முன்மாதிரியாக இருக்கிறார். அழிப்பதற்காக தம்முடைய வல்லமையைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்கும் போதும் கூட அவர் அவசரப்படாமல், கோபங் கொள்ள தாமதிக்கிறவராக இருக்கிறார். (நாகூம் 1:3) கடவுளைக் காட்டிலும் வேறு எவருக்கும் அதிக வல்லமை கிடையாது. இந்தக் காரணத்துக்காகவே எல்லாம் வல்லவர், கடவுள் என்பதாக நாம் அவரைக் குறிப்பிடுகிறோம். பொருத்தமாகவே அவர் “சர்வ வல்லமையுள்ளவர்” என்ற பட்டப் பெயரினால் தம்மை அழைத்துக் கொள்கிறார். (ஆதியாகமம் 17:1) எல்லையில்லா பலம் அவருக்கு இருக்கிறது என்ற கருத்தில் அவர் முழு வல்மையுள்ளவராக இருக்கிறார் என்பது மாத்திரமல்லாமல் அவர் சர்வலோகத்தையும் சிருஷ்டித்திருப்பதால் அதன் பேரரசராக அவர் இருக்கும் ஸ்தானத்தில் அவருக்கு எல்லா அதிகாரமுமிருக்கிறது என்பதாலும் கூட அவருக்கு யாவருக்கும் மேலான வல்லமை இருக்கிறது. அதன் காரணமாகவே அவர் கையைத் தடுக்கவோ அல்லது அவரிடம் “என்ன செய்கிறீர்” என்று கேட்கவோ தகுதியுள்ளவன் ஒருவனும் இல்லை.—தானியேல் 4:35.
4 யெகோவா தேவன் சர்வ வல்லமையுள்ளவராக இருக்கும் காரணத்தால், அவரைக் கோபப்படுத்துவதற்கு நாம் பயப்படுவது ஞானமான போக்காக இருக்கிறது. ஆம், “யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; பரிசுத்தரின் அறிவே அறிவு.” (நீதிமொழிகள் 9:10) “அவரிலும் நாம் பலவான்களாக” இல்லாததன் காரணமாக, எந்த விதமான விக்கிரகாராதனையிலும் ஈடுபடுவதன் முலம் யெகோவா தேவனுக்கு எரிச்சலை மூட்டாதிருக்கும்படியாக பவுல் நம்மை எச்சரிக்கிறான். நிச்சயமாகவே நாம் அவரிலும் பலவான்கள் அல்ல! (1 கொரிந்தியர் 10:22) என்றபோதிலும் கடவுளுடைய நீதியுள்ள கட்டளைகளை வேண்டுமென்றே மீறுகிற அனைவரும், அவர்கள் யெகோவாவைக் காட்டிலும் பலவான்களைப் போல நடந்து கொள்கிறார்கள். பவுலின் இந்த வார்த்தைகள் இந்தக் குறிப்பின் முக்கியத்துவத்தைக் காண்பிக்கின்றன. “நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே.”—எபிரெயர் 12:29.
5 யெகோவா தேவன் மாத்திரம், தம்முடைய சர்வ வல்லமையைத் தம்முடைய மூன்று அடிப்படையான குணாதிசயங்களாகிய ஞானத்தோடும் நீதியோடும் அன்போடும் பரிபூரணமாக சமநிலைப்படுத்தவில்லையென்றால், இந்த உண்மைகள் ஆரோக்கியமற்ற பயம் அல்லது திகில் நிறைந்தவர்களாக நம்மை செய்திருக்கும். அழிப்பதற்காக அவர் தம்முடைய வல்லமையை உபயோகிக்கையில் அது எப்பொழுதும் இந்தக் குணாதிசயங்களுக்கு முரணாக இல்லாமல் அதற்கு ஒத்தே இருக்கிறது. உதாரணமாக, நோவாவின் நாளைய ஜலப்பிரளயம் உண்மையில் யெகோவாவின் வல்லமையின் பெரியதோர் வெளிக்காட்டாக இருந்தது. என்றபோதிலும் கடவுள் வல்லமையை நியாயமில்லாமல் அல்லது அன்பற்ற விதத்தில் பிரயோகித்தாரா? நிச்சயமாக இல்லை! மனிதவர்க்கம் தன் வழியை அவ்வளவாக கெடுத்துக்கொண்டதன் காரணமாக, கடவுள் பார்த்த காரியத்தின் பேரில், அவர் இருதயத்தில் புண்பட்டவராக உணர்ந்தார். (ஆதியாகமம் 6:5-11) ஜலப்பிரளயத்துக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்து வந்த அந்தப் பொல்லாத ஜனங்கள் கடவுளுடைய ஆசீர்வாதங்களைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டிருந்ததால் அவர்களை அழித்து பூமியைச் சுத்தம் செய்ய அவர் சரியாகவே நடவடிக்கை எடுத்தார். விசேஷமாக, அவர்கள் “நீதியைப் பிரசங்கித்தவனாகிய” நோவாவின் எச்சரிப்புக்களை அசட்டை செய்துவிட்டதன் காரணமாக அவர் அவ்விதமாகச் செய்தார்.—2 பேதுரு 2:5.
6 சோதோம் கொமோராவில் குடியிருந்த ஜனங்கள் மனிதவர்க்கத்தின் ஒரு பாகமாக யெகோவாவின் கரங்களில் அனுபவித்துக் கொண்டிருந்த ஆசீர்வாதங்களைத் துர்ப்பிரயோகம் செய்வதன் மூலம் தங்களைப் படுமோசமான கீழ்த்தரமான பாவிகளாக நீரூபித்தபோது, அதன் குடிமக்கள் அழிக்கப்பட வேண்டும் என்று அவர் தீர்ப்பளித்தார். தம்முடைய நண்பனாகிய ஆபிரகாமிடமாக அவருக்கிருந்த கரிசனையை முன்னிட்டு, யெகோவா விசுவாசமுள்ள அந்த மனிதனுக்கு சோதோம் கொமோராவின் சம்பந்தமாக தம்முடைய நோக்கத்தைத் தெரியப்படுத்தினார். இது வல்லமையைப் பெரிதும் துர்ப்பிரயோகம் செய்வதாக இருக்கும் என்பதாக அபிரகாம் நினைத்தது போல தெரிகிறது. ஆகவே அவன் யெகோவாவிடம், “சர்வலோக நியாயாதிபதி நீதி செய்யாதிருப்பாரோ” என்று கேட்டான். ஆனால் ஆபிரகாம் ஏதோ தவறாகப் புரிந்துகொண்டு தவித்துக் கொண்டிருந்தான். கடைசியில், யெகோவாவின் தீர்ப்பு நிச்சயமாகவே நீதியானது என்பதை அவன் ஒப்புக்கொள்ள வேண்டியதாயிற்று. ஏனென்றால் அந்த இரண்டு பட்டணங்களில் பத்து நீதிமான்களையும் கூட காண முடியவில்லை. நிச்சயமாகவே தம்முடைய வல்லமையை நியாயமாக பயன்படுத்துவதற்கு யெகோவா தேவன் எவ்வளவு கவனமுள்ளவராய் இருக்கிறார் என்பதை இது காண்பிக்கிறது.—ஆதியாகமம் 18:17-33; ஏசாயா 41:8.
7 பின்னால், எகிப்தில் அநியாயமாக அடிமைத்தனத்திலிருந்த இஸ்ரவேலரை விடுவிப்பதற்கான சமயம் வந்தபோது, யெகோவா, பார்வோனுக்கு ஒத்துழைப்பதற்கு ஒரு சந்தர்ப்பத்தை அளித்தார். இதன் மூலம் பார்வோனும் அவனுடைய ஜனமும் கேட்டிலிருந்து தப்பித்திருக்கலாம். ஆனால் அந்த அரசன் இறுமாப்புடனும் பிடிவாதமாகவும் யெகோவாவின் வேண்டுகோளை ஏற்க மறுத்து விட்டான். ஆகவே கடவுள் எகிப்தின் மீது அவர் கொண்டுவந்த பத்து வாதைகளில், ஒன்றன் பின் ஒன்றாக தம்முடைய வல்லமையைப் பார்வோனுக்குக் காண்பித்தார். (யாத்திராகமம் 9:16) பார்வோன் இஸ்ரவேலரை போக அனுமதித்தப் பின்பு, அவர்களைப் பின்தொடருவதன் மூலம், தொடர்ந்து யெகோவாவை பிடிவாதமாக எதிர்த்தான். ஆகவே யெகோவா பார்வோனையும் அவனுடைய சேனையையும் சிவந்த சமுத்திரத்தில் அழிப்பதற்குத் தம்முடைய மகா வல்லமையை நியாயமாகவே உபயோகித்தார். (சங்கீதம் 136:15) ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் யெகோவா தம்முடைய உண்மையுள்ள ஊழியர்களைப் பாதுகாக்கவும்கூட, தம்முடைய மகா வல்லமையைப் பயன்படுத்தினார் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்: நோவாவும் அவனுடைய குடும்பமும், லோத்தும் அவனுடைய இரண்டு குமாரத்திகளும் மற்றும் இஸ்ரவேல் ஜனம்.—ஆதியாகமம் 19:16.
8 பல நூற்றாண்டுகளுக்குப் பின்பு எசேக்கியா ராஜாவின் காலத்தில், அசீரியா ராஜாவாகிய சனகெரீப் எருசலேமை கைப்பற்றப்போவதாக பயமுறுத்தியபோது யெகோவா தம்முடைய மகா வல்லமையை மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் நீதியான விதத்தில் விளங்கப் பண்ணினார். கடவுள் பயமுள்ளவனும் பற்றுமாறாதவனுமாகிய எசேக்கியா ராஜாவை தலைவனாகக் கொண்ட யெகோவாவின் ஜனங்கள் உதவிக்காக அவரிடம் மன்றாடினார்கள். அவர்கள் உண்மையுடன் அவரை சேவித்து வந்தார்கள். ஆகவே கடவுள் அவர்கள் சார்பாக செயல்பட்டார். மறுபட்சத்தில் சனகெரிப் ராஜாவின் தூதுவன் பின்வருமாறு பெருமையாக பேசியிருந்தான்: ‘எசேக்கியாவுக்குச் செவி கொடுக்காதீர்கள். யெகோவா உங்களை நிச்சயமாய்த் தப்புவிப்பார் என்று வாக்களிப்பதன் மூலம் அவன் உங்களை வஞ்சிக்க அனுமதியாதேயுங்கள் ஜாதிகளுடைய தேவர்களில் யாராவது தங்கள் தேசத்தை சனகெரிப்பின் கைக்குத் தப்புவித்ததுண்டோ? இந்தத் தேவர்களில் எவராலும் அவ்விதமாகச் செய்ய முடியாமல் போய்விட்டதால், யெகோவா உங்களை விடுவிப்பார் என்று நீங்கள் ஏன் கற்பனை பண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்?’ (ஏசாயா 36:13-20) இப்படிப்பட்ட பெருமையின் காரணமாக, கடவுள் தம்முடைய மகா வல்லமையைப் பிரயோகித்து ஒரே இராத்திரியில் 185,000 போர் வீரர்களைக் கொல்ல வேண்டியதாயிற்று. தேசங்களின் தேவர்களுக்கும் யெகோவாவுக்குமிடையே நிச்சயமாகவே வித்தியாசமிருக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டியதாயிற்று.
9 இதற்குக் கொடுக்கப்படக்கூடிய அநேக உதாரணங்களில் இன்னும் சிலவற்றை சிந்தித்துப் பாருங்கள். யெகோவா மிரியாமை குஷ்டரோகத்தால் அடித்தபோது, அது யெகோவாவின் முழுவதும் நியாயமானதும் ஞானமுள்ளதுமான வல்லமையின் வெளிக்காட்டாக இருந்தது. கடவுளால் நியமிக்கப்பட்டிருந்த தன்னுடைய சகோதரனாகிய மோசேக்கு எதிராக இத்தனை துணிவாக பேசியதற்காக மிரியாம் இப்படிப்பட்ட தண்டனைக்குத் தகுதியுள்ளவளாகவே இருந்தாள். (எண்ணாகமம் 12:1-15) உசியா ராஜா லேவிய ஆசாரியர்களின் சொல்லைக் கேளாமல், பொன்னாலான தூப பீடத்தின் மேல் தூபங்காட்ட பரிசுத்த ஆலயத்தின் பரிசுத்த ஸ்தலத்திற்குள் துணிந்து பிரவேசித்த போதும் கூட இதுவே நடந்தது. யெகோவா ராஜாவை குஷ்டரோகத்தால் அடிப்பதன் மூலம் நியாயமாகவே தம்முடைய வல்லமையைக் காண்பித்தார். (2 நாளாகமம் 26:16-21) அவர்களுடைய பாவத்தின் அளவு ஒரே விதமாக இல்லாதது போலவே யெகோவாவின் தண்டனையும் ஒரே விதமாக இருக்கவில்லை: மிரியாமின் குஷ்டரோகம் சிறிது காலமே இருந்தது. ஆனால் உசியா குஷ்டரோகியாகவே மரித்தான். எல்லா சமயங்களிலும் யெகோவா தம்முடைய வல்லமையை ஞானமாக மற்றும் நியாயமான வழியில் பயன்படுத்த கவனமுள்ளவராகவும் தம்மை நேசிக்கும் உண்மையுள்ளவர்களைப் பாதுகாக்கவும், அக்கிரமக்காரரை அழிக்க வல்லமையுள்ளவராகவும் இருக்கிறார்.—சங்கீதம் 145:20.
இயேசு கிறிஸ்துவின் முன்மாதிரி
10 வல்லமையைப் பயன்படுத்தும் விஷயத்தில் கடவுளுடைய குமாரன், தம்முடைய பிதாவை உண்மையில் பின்பற்றிய மிகச் சிறந்த முன்மாதிரியாக இருந்தார். முற்காலத்திய நிகழ்ச்சிகளில் ஒன்று சாத்தான், மோசேயின் சரீரத்தைக் குறித்து அவரோடு தர்க்கித்த சமயமாகும். லோகோஸ் அவனை எளிதில் தூஷணமாய் குற்றப்படுத்தியிருக்கலாம். மாறாக அவர் யெகோவா தேவன் அவனைக் கடிந்துகொள்ள அனுமதித்தார்.—யூதா 8, 9.
11 சாத்தான் இயேசுவுக்கு வனாந்தரத்தில் கொண்டு வந்த முதல் சோதனை, வல்லமையைத் தவறாகப் பயன்படுத்தும் விஷயத்தோடு சம்பந்தப்பட்டதாக இருந்தது. சாத்தான் இயேசுவை அவருடைய மீமானிட வல்லமையைத் தன்னல நோக்கத்துக்காக கல்லுகளை அப்பங்களாக மாற்றுவதற்காக பயன்படுத்துமாறு சோதித்தான். இது மிகப் பெரிய ஒரு சோதனையாக இருந்தது. ஏனென்றால், இயேசு 40 நாட்கள் சாப்பிட்டிருக்கவில்லை. அவருக்குப் “பசியுண்டாயிற்று.” இயேசுவை சுயநலமான போக்கை மேற்கொள்வதற்கு அவரைக் கண்ணியில் சிக்க வைக்கும் வகையில் சாத்தான் இந்தச் சோதனையைச் சமர்ப்பித்தான். ஏனென்றால் அவன், “நீர் தேவனுடைய குமாரனேயானால் இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும்” என்று ஆரம்பித்தான். ‘ஏன், நான் நிச்சயமாகவே தேவனுடைய குமாரன் தான். அதை நிரூபிக்க நான் அந்தக் கல்லுகளை அப்பங்களாகும்படி செய்கிறேன்’ என்று இயேசு பதிலளிப்பார் என்று அவன் நினைத்தான் என்பதில் சந்தேகமில்லை. இயேசு சுயநலமாக அல்லது முட்டாள்தனமாகச் செயல்படும்படியாகத் தூண்டப்பட அல்லது சிக்கவைக்கப்படுவதற்குப் பதிலாக அவர் பின்வருமாறு பதிலளித்தார்: “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்.” (மத்தேயு 4:1-4) அவர் தேவனுடைய குமாரன் தானோ என்று மறைமுகமாக அவன் குறிப்பிட்ட சந்தேகத்தை அவர் அசட்டை செய்து கடவுள் அவருக்கு அளித்திருந்த வல்லமையைத் தவறாகப் பயன்படுத்த மறுத்துவிட்டார்.
12 பின்னால் இயேசு கிறிஸ்து அநேக ஸ்திரீகளையும் பிள்ளைகளையும் தவிர 5000 புருஷர்களுக்கு உணவளித்தப் பின்பு, யூதர்கள் அவரை ராஜாவாக்க விரும்பினார்கள். இந்த அளிப்பை அவர் ஏற்றுக் கொண்டிருந்தாரேயானால், அற்புதங்களின் மூலமாக ஜனங்களின் மீது செல்வாக்குச் செலுத்துவதற்கு அவருக்கிருந்த வல்லமையைத் தவறாகப் பயன்படுத்துவதாக இருந்திருக்கும். உலகப் பிரகாரமான அரசியலில் தாம் நடுநிலைமையைக் காத்துக்கொள்ள வேண்டும் என்பதையும் ராஜ்யத்துவத்தை யெகோவா தேவன் தமக்குக் கொடுப்பதற்குக் காத்திருக்க வேண்டும் என்பதையும் அவர் அறிந்திருந்தார். (யோவான் 6:1-15) இன்னும் பின்னால் ஜனக்கூட்டம் அவரை கைது செய்ய வந்தபோது, பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரை அனுப்பும்படியாகக் கேட்டுக் கொண்டு இதன் மூலமாக, கைது செய்யப்படுவதை அவர் தடுத்திருக்கலாம். என்றபோதிலும் அது வல்லமையைத் தவறாகப் பயன்படுத்துவதாக இருந்திருக்கும். ஏனென்றால் அவர் எதிர்க்காமலிருக்க வேண்டும் என்பது அவருடைய பிதாவின் சித்தமாக இருந்தது.—மத்தேயு 26:39, 53.
வல்லமையை தவறாகப் பயன்படுத்தாத மற்றவர்கள்
13 வல்லமையைத் தவறாகப் பயன்படுத்துவதற்கான சோதனையை எதிர்த்த அபூரண மனிதர்களில் நியாயாதிபதியாகிய கிதியோனைக் குறிப்பிட வேண்டும். அவன் மீதியானியரிடமிருந்து இஸ்ரவேலரை விடுவித்தப் பின்பு, ஜனங்கள் அவனைத் தங்களுக்கு ராஜாவாக்க விரும்பினார்கள். கிதியோன் இதை மறுத்து சரியாகவே பின்வருமாறு சொன்னான்: “நான் உங்களை ஆள மாட்டேன்; என் குமாரனும் உங்களை ஆளமாட்டான், யெகோவாவே உங்களை ஆளுவாராக” ஆம். நியாயாதிபதியாக அவனுடைய வாழ்க்கைப் பணியின் ஆரம்பத்தில் அவன் வெளிக்காட்டிய அதே அடக்கம் இன்னும் அவனிடமிருந்தது. கிதியோனின் பதில், இஸ்ரவேலர், ஒரு மனித அரசனைக் கொண்டிருப்பதைப் பற்றி யெகோவா தேவன் தாமே உணர்ந்த விதத்தைப் பிரதிபலிப்பதாக இருந்தது. சாமுவேல் தீர்க்கதரிசியின் காலத்தில் இஸ்ரவேலர் ராஜாவைக் கேட்ட போது, கடவுள் கொடுத்த பதிலில் இதை நாம் காணலாம்.—நியாயாதிபதிகள் 8:23; 6:12-16; 1 சாமுவேல் 8:7.
14 என்றபோதிலும் ராஜா ஒருவர் தெரிந்து கொள்ளப்பட்டபோது, வல்லமையைப் பயன்படுத்துவதில் கட்டுப்பாடுடன் இருப்பதில் சவுல் ஆரம்பத்தில் ஒரு சிறந்த முன்மாதிரியாக இருந்தான். பேலியாளின் மக்களில் சிலர்: “இவனா நம்மை ரட்சிக்கப் போகிறவன் என்று சொல்லி . . . அவனை அசட்டைப் பண்ணினார்கள்; அவனோ காது கேளாதவன் போல இருந்தான்.” ராஜரீக வல்லமையோடு அவன் கடுமையாக நடந்து கொண்டிருந்திருக்கலாம். ஆனால் அவன் அவ்விதமாகச் செய்யவில்லை. அதே விதமாகவே சவுல் அம்மோனியர்களை முறியடித்தப் பின்பு, அவனுடைய ஜனங்களில் சிலர், சவுலை அசட்டைப் பண்ணினவர்களைப் பழிவாங்குவதற்கு இது நேர்த்தியான நேரம் என்பதாக நினைத்தார்கள். ஆகவே அவர்கள் அவனிடம்: “சவுலா நமக்கு ராஜாவாயிருக்கப் போகிறவன் என்று சொன்னவர்கள் யார்? அந்த மனுஷரை நாங்கள் கொன்று போடும்படிக்கு ஒப்புக்கொடுங்கள் என்றார்கள்.” ஆனால் சவுலுக்கு அந்த எண்ணமே இருக்கவில்லை. சவுல் சொன்னான்: “இன்றைய தினம் ஒருவரும் கொல்லப்படலாகாது; இன்று யெகோவா இஸ்ரவேலுக்கு இரட்சிப்பை அருளினார்” என்றான். சவுல் ஆரம்பத்தில் நல்ல மனப்பான்மையுடனும் அடக்கமாகவுமே இருந்தான் என்பதை நம்மால் காண முடிகிறது. (1 சாமுவேல் 9:21; 10:20-23, 27; 11:11, 12) அவன் தன்னுடைய ராஜரீக வல்லமையைத் தவறாகப் பயன்படுத்த ஆரம்பித்தது அதனால் மோசமான ஒரு முடிவுக்கு வந்தது எத்தனை விசனகரமானதாகும்.—1 சாமுவேல் 28:6; 31:3-6.
15 இஸ்ரவேலை நியாயந்தீர்த்த தீர்க்கதரிசியான சாமுவேலும் கூட ஒரு சிறந்த முன்மாதிரியை வைத்தான். கடவுள் சிறு வயது முதற்கொண்டு வல்லமையாக அவனைப் பயன்படுத்தி வந்தார். சாமுவேல் ஜனங்களை நியாயமாக நியாயந்தீர்த்து அவர்களுக்கு விடுதலையை வாங்கித் தருவதில் வெற்றியடைந்தான். தன்னல ஆதாயத்துக்காக அவன் தன்னுடைய ஸ்தானத்தை எப்போதாவது அனுகூலப்படுத்திக் கொண்டானா? நிச்சயமாக இல்லை. ஜனங்களிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு போகையில் அவன் பின்வருமாறு சொன்னான்: “இதோ, நீங்கள் எனக்குச் சொன்னபடியெல்லாம் உங்கள் சொற்கேட்டு உங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்தினேன் . . . இதோ இருக்கிறேன் யெகோவாவின் சந்நிதியிலும் அவர் அபிஷேகம் பண்ணி வைத்தவருக்கு முன்பாகவும் என்னைக் குறித்துச் சாட்சி சொல்லுங்கள். நான் யாருடைய எருதை எடுத்துக் கொண்டேன்? யாருடைய கழுதையை எடுத்துக் கொண்டேன்? யாருக்கு அநியாயஞ் செய்தேன்? யாருக்கு இடுக்கண் செய்தேன்? யார் கையில் பரிதானம் வாங்கிக் கொண்டு கண் சாடையாயிருந்தேன்?” இந்த எல்லா விஷயத்திலும் சாமுவேல் குற்றமில்லாதவனாக இருந்தான் என்பதை அவனுடைய ஜனங்கள் ஒப்புக்கொள்ள வேண்டியவர்களாக இருந்தார்கள். நியாய விசாரணை செய்யும் பதவியில் அவனுக்கிருந்த வல்லமையை அவன் தவறாகப் பயன்படுத்தவில்லை.—1 சாமுவேல் 12:1-5.
16 தாவீது வைத்த சிறந்த முன்மாதிரியையும் கூட நாம் கவனிக்கத் தவறிவிடக்கூடாது. இரண்டு தடவைகள் சவுல் ராஜா அவன் வல்லமையின் எல்லைக்கு உள்ளாக இருந்தான். அப்போது அவனை இவன் கொன்றிருக்கலாம். தாவீது பின்வருமாறு யோசித்திருக்கலாம்: “சவுல் என்னைக் கொன்றுபோட தீர்மானமாக இருக்கிறான். ஆகவே ஒன்று அவன் அல்லது நான்.” அல்லது பின்வருமாறு அவன் யோசித்திருக்கலாம்: “எதிர்கால இஸ்ரவேலின் ராஜாவாக சாமுவேல் என்னை அபிஷேகம் பண்ணியுள்ளபடியால், கடைசியாக இவ்விதமாகத் தான் இது நிறைவேற வேண்டும். ஏன் இப்பொழுதே கூடாது?” இல்லை தாவீது அவனுக்கு ராஜ்யத்தைக் கொடுப்பதற்கு யெகோவாவின் சமயம் வரும் வரையாக பொறுமையோடு காத்திருந்தான். (1 சாமுவேல் 24:1-22; 26:1-25) என்றபோதிலும் தாவீது ராஜாவான பின்பு இரண்டு சந்தர்ப்பங்களில் தன்னுடைய வல்லமையைத் தவறாகப் பயன்படுத்தியது வருத்தத்திற்குரியதாகும்: உரியாவின் மரணத்துக்குக் காரணமாயிருந்தது ஒரு சமயமாகும், இஸ்ரவேலின் சேனையை இலக்கமிட்டது மற்றொரு சமயமாகும்.—2 சாமுவேல் 11:15; 24:2-4, 12-14.
17 இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றியவர்களின் மத்தியில் அப்போஸ்தலனாகிய பவுல் இந்த விஷயத்தில் ஒரு சிறந்த முன்மாதிரியை வைத்தான். அவன் ஊழியஞ் செய்துவந்த சபைகள், அவனுக்கு உதவி கொடுக்க வேண்டுமென்று கேட்டிருக்கலாம். ஆனால் இதை அவன் அனுகூலப்படுத்திக் கொள்ளவில்லை. எபேசுவிலிருந்த மூப்பர்களிடம் அவன் பின்வருமாறு சொன்னான்: “ஒருவனுடைய வெள்ளியையாகிலும் பொன்னையாகிலும் வஸ்திரத்தையாகிலும் நான் இச்சிக்கவில்லை. நீங்கள் அறிந்திருக்கிறபடி எனக்கும் என்னுடனே கூட இருந்தவர்களுக்கும் வேண்டியவைகளுக்காக இந்தக் கைகளே வேலை செய்தது.” (அப்போஸ்தலர் 20:33, 34) கொரிந்துவிலிருந்த சபைக்கு எழுதுகையில் இந்தக் குறிப்பின்பேரில் அப்போஸ்தலன் இன்னும் அதிக வன்மையாக பேசினான். (1 கொரிந்தியர் 9:1-18) உலகப் பிரகாரமான ஒரு வேலையைச் செய்யாதிருக்க அவனுக்கு அதிகாரமிருந்தது. ஏனென்றால் எவன் தன் சொந்தப் பணத்தைச் செலவழித்து தண்டிலே சேவகம் பண்ணுவான்? போரடிக்கிற மாட்டை வாய் கட்டாயாக என்று மோசே சொல்லவில்லையா? “அப்படியிருந்தும் நான் இவைகளில் ஒன்றையும் அநுபவிக்கவில்லை” என்று பவுல் விளக்கினான். இதற்கு அவனுக்குக் கிடைத்த பலன்? “நான் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கையில் அதைப் பற்றி எனக்கு உண்டாயிருக்கிற அதிகாரத்தை முற்றிலும் செலுத்தாமல் கிறிஸ்துவின் சுவிசேஷத்தைச் செலவில்லாமல் ஸ்தாபிப்பதே எனக்குப் பலன்”.
18 ‘தங்கள் வல்லமையைத் துர்ப்பிரயோகம் செய்யாதவர்கள் சந்தோஷமுள்ளவர்கள்’ என்று உண்மையாகவே சொல்லப்படலாம். தம்முடைய சர்வ வல்லமையானது எப்பொழுதும் தம்முடைய மற்ற குணாதிசயங்களாகிய ஞானத்தினாலும் நீதியினாலும் அன்பினாலும் சமநிலைப்படுத்தப்பட அனுமதித்து இப்படிப்பட்ட ஒரு சிறந்த முன்மாதிரியை வைப்பதன் காரணமாக யெகோவா தேவன் என்ன நற்பெயரை உடையவராக இருக்கிறார். இதன் காரணமாகவே சங்கீதக்காரனாகிய தாவீதோடு சேர்ந்து நாமும் பின்வருமாறு சொல்லலாம்: “என் ஆத்துமாவே யெகோவாவை ஸ்தோத்திரி; என் முழு உள்ளமே அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி.” (சங்கீதம் 103:1) வல்லமையைச் சரியான விதத்தில் உபயோகிப்பதில் யெகோவாவின் முன்மாதிரியைப் பின்பற்றியிருக்கும் அனைவரும் நிச்சயமாகவே சந்தோஷமுள்ளவர்களாக இருக்கிறார்கள். நாம் அபூரண மனிதர்களாக இருந்த போதிலும், நாமும் கூட நமக்கிருக்கும் வல்லமையைச் சரியான விதத்தில் பயன்படுத்த முடியும் என்பதை வேதாகமத்திலிருந்து நாம் சிந்தித்த உதாரணங்கள் நிரூபிக்கின்றன. அவ்விதமாகச் செய்கையில், நாம் சுத்தமான மனசாட்சியை மட்டுமல்லாமல், கடவுளின் அங்கீகாரத்தையும் நம்முடைய உடன்மானிடரின் மரியாதையையும் பெற்றுக் கொள்ளலாம். (w86 8/15)
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ வல்லமையைத் தவறாகப் பயன்படுத்துவதன் சம்பந்தமாக புத்திமதி ஏன் அவசியமாயிருக்கிறது?
◻ யெகோவா தேவன் தம்முடைய வல்லமையைச் சரியாகப் பயன்படுத்துகிறார் என்பதை என்ன உதாரணங்கள் காண்பிக்கின்றன?
◻ வல்லமையைத் தவறாகப் பயன்படுத்தாதபடிக்கு இயேசு கவனமுள்ளவராக இருந்தார் என்று ஏன் சொல்லப்படலாம்?
◻ தங்களுடைய வல்லமையைத் துர்ப்பிரயோகம் செய்யவில்லை என்பதை எந்த எபிரேய வேதாகமப் பாத்திரங்கள் காண்பிக்கின்றன?
◻ வல்லமையைப் பயன்படுத்துவதில் அப்போஸ்தலனாகிய பவுல் எவ்விதமாக தன்னை ஒரு சிறந்த முன்மாதிரியாக காண்பித்தான்?
[கேள்விகள்]
1. ஒரு நபர் ஏதோ ஒரு வகையான வல்லமையை உடையவராக இருப்பது, ஏன் மேன்மை பாராட்டிக் கொள்ள காரணமாயிருக்காது?
2. வல்லமையைப் பயன்படுத்துவது என்பது வரும்போது நாம் ஏன் எச்சரிப்பாயிருப்பது அவசியமாயிருக்கிறது?
3. யெகோவாவில் என்ன விதமான வல்லமை நிலை பெற்றிருக்கிறது?
4. யெகோவாவுக்குப் பயப்படுவது ஏன் ஞானமான போக்காக இருக்கிறது?
5. யெகோவாவின் சர்வ வல்லமையுள்ளத் தன்மையின் காரணமாக அவரைப் பற்றி நாம் ஆரோக்கியமற்ற பயத்தைக் கொண்டிருப்பது ஏன் அவசியமில்லை?
6. சோதோம் கொமோராவோடு யெகோவாவின் செயல் தொடர்புகள் எதைக் காண்பிக்கின்றன?
7. யெகோவாவின் அழிவுண்டாக்கும் வல்லமையின் வெளிக்காட்டைக் காண பார்வோன் ஏன் தகுதியுள்ளவனாக இருந்தான்?
8. யெகோவா சனகெரீப்போடு நடந்துகொண்ட விதமாக நடந்துகொண்டதற்கு என்ன நல்ல காரணம் இருந்தது?
9. யெகோவா தாம் எவ்விதமாக தம்முடைய வல்லமையைப் பயன்படுத்துகிறார் என்பதில் கவனமுள்ளவராக இருக்கிறார் என்பதைக் காண்பிக்க வேறு என்ன உதாரணங்கள் குறிப்பிடப்படலாம்?
10, 11. இயேசு வல்லமையைச் சரியாகப் பயன்படுத்துவதைக் குறித்து அக்கறையுள்ளவராக இருந்தார் என்பதை என்ன நிகழ்ச்சிகள் காண்பிக்கின்றன?
12. இயேசு தாம் வல்லமைக்குப் பேராசையுள்ளவராக இல்லை என்பதை மேலும் எவ்விதமாக காண்பித்தார்?
13, 14. (எ) கிதியோன் வல்லமைக்குப் பேராசையுள்ளவனாக இல்லை என்பதைக் காண்பித்த என்ன சிறந்த முன்மாதிரியை வைத்தான்? (பி) சவுல் முதலில் ராஜாவான போது என்ன ஒரு நல்ல முன்மாதிரியை வைத்தான்?
15, 16. (எ) நியாயாதிபதியான சாமுவேல், நியாயவிசாரணை பதவியில் தனக்கிருந்த வல்லமையைப் பயன்படுத்தியதன் சம்பந்தமாக என்ன அத்தாட்சியைக் கொடுக்கக்கூடியவனாக இருந்தான்? (பி) அதேவிதமான என்ன முன்மாதிரியை தாவீது ராஜா வைத்தான்?
17. பவுல் தான் ஒருபோதும் பேராசையுள்ளவனாக இருக்கவில்லை என்பதையும் தன்னுடைய அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தவில்லை என்பதையும் எவ்விதமாகக் காண்பித்தான்?
18. (எ) யெகோவா வல்லமையைச் சிறப்பாகப் பயன்படுத்துவதைக் குறித்து நாம் எவ்விதமாக உணர வேண்டும்? (பி) இந்த விஷயத்தில் அவரைப் பின்பற்றுகிறவர்கள் சந்தோஷமுள்ளவர்கள் என்று ஏன் சொல்லப்படலாம்?
[பக்கம் 22, 23-ன் படம்]
யெகோவாவின் முக்கியமான குணாதிசயங்கள் பரிபூரணமாக சமநிலைப்படுத்தப்பட்டுள்ளன
யெகோவா நியாயமாகவே தம்முடைய வல்லமையை விளங்கப் பண்ணினார்
[பக்கம் 23-ன் படம்]
ஜலப்பிரளயத்தில்
சோதோம் கொமோராவில்
சிவந்த சமுத்திரத்தில்
அன்பு
வல்லமை
நீதி
ஞானம்