பைபிள்—எல்லா மனிதவர்க்கத்துக்கும் ஒரு புத்தகம்
“இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும், பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும் ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள் சிங்காசனத்திற்கு முன்பாக நிற்கக் கண்டேன்.”
அது என்னவிதமான ஒரு கூட்டம்? மேலும் அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?
“தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்தி”ருக்கிறார்கள் என்பதாகப் பதிவு தொடர்ந்து சொல்கிறது. “அவர்கள் மகா சத்தமிட்டு: இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள்.” ஏதோ ஒரு உரிமைக் கோரும் அல்லது ஏதோ ஒரு காரணத்துக்காக ஆரவாரம் செய்யும் கட்டுப்படுத்த முடியாத ஒரு கும்பலாக இது இல்லை. மாறாக அப்பொழுதுதானே அதிகக் கிளர்ச்சியூட்டும் ஒரு அனுபவத்தைப் பெற்ற சந்தோஷமான மகிழ்ச்சி நிரம்பிய ஒரு கூட்டமாக இது இருக்கிறது. “இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள் . . . இவர்கள் இனி பசியடைவதுமில்லை, இனி தாகமடைவதுமில்லை . . . தேவன் தாமே இவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார்.”
எல்லா மனிதவர்க்கத்துக்கும் ஒரு செய்தி
அந்தச் சர்வ தேசீய “திரள் கூட்டம்” பைபிளின் கடைசி புத்தகமாகிய வெளிப்படுத்தின விசேஷம் 7-ம் அதிகாரத்தில் வசனங்கள் 9-17-ல் வருணிக்கப்பட்டிருப்பதைக் காணலாம், ஒரு காட்சியின் வாயிலாக, மனிதவர்க்கம் இனிமேலும் இனத்தாலும் மொழியாலும், தேசத்தாலும் பிரிந்திராமல், சமாதானத்திலும் ஒத்திசைவிலும் ஒன்று சேர்ந்து, பயத்திலிருந்தும் வறுமையிலிருந்தும் உண்மையான விடுதலையை அனுபவிக்கப்போகும் அந்தக் காலத்தைப் பற்றிய ஒரு காட்சியை நமக்குத் தருகிறது. உண்மையில் அதுவே எல்லா மனிதவர்க்கத்துக்கும் பைபிள் அளிக்கும் ஒரு ஈடிணையற்ற செய்தியாக இருக்கிறது.
‘ஆனால் என்ன விதத்தில் அந்தச் செய்தி ஈடிணையற்றதாக இருக்கிறது’? என்பதாக நீங்கள் ஒருவேளை கேட்கலாம். உலகம் முழுவதிலுமுள்ள ஆட்கள் சமாதானத்தையும் ஒற்றுமையையும் பற்றிப் பேசிக் கொண்டில்லையா? ஆம் அவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அரசியல், இன பொருளாதார மற்றும் மதசம்பந்தமான போராட்டங்களினால் தீவிரமாக்கப்பட்டுள்ள சர்வ தேசீய பதட்ட நிலையின் இந்தச் சகாப்தத்தில், நல்லறிவு படைத்த யார் உலக சமாதானத்தைப் பற்றி அக்கறையில்லாமலிருக்கிறார்? இப்படிப்பட்ட சர்வதேசீய போராட்டங்கள் நடப்பதற்கு வெகு காலத்துக்கும் முன்னும், மனிதவர்க்கம் உயிர்தப்பிப் பிழைத்தல் ஒரு பிரச்னையாக ஆவதற்கு வெகு காலத்துக்கு முன்னும் பைபிள், ஒரே அரசாங்கமாகிய கடவுளுடைய ராஜ்யத்தின் கீழ் எல்லா மனிதவர்க்கமும் சமாதானத்தையும் ஐக்கியத்தையும் அனுபவிக்கப்போகிற ஒரு காலத்தைப் பற்றிப் பேசியது.
ஆரம்பத்திலிருந்து பொது மனித இனக் கருத்து
மனிதவர்க்கத்தின் எதிர்காலம் பற்றிய விஷயம் வரும்போது, பைபிள், அதன் ஆரம்பம் முதற்கொண்டே ஒரு பொதுவான கருத்தையே தெரிவிக்கிறது. “நீங்கள் பலுகிப் பெருகி பூமியை நிரப்பி அதைக் கீழ்ப்படுத்திக் கொள்ளுங்கள்” என்பதே ஆதாமுக்கும் ஏவாளுக்கும் அவர்களுடைய சிருஷ்டிகராகிய யெகோவா தேவனால் கொடுக்கப்பட்டிருந்த முதல் கட்டளையாக இருந்தது. (ஆதியாகமம் 1:28) ஆதாமும் ஏவாளும் ஒரு குறிப்பிட்ட இனத்தின் அல்லது தேசத்தின் மூதாதையர்களாக இருக்க வேண்டியவர்களாக இல்லை. மாறாக அவர்கள் மனித இனத்தின் மூதாதையர்களாக இருக்க வேண்டியவர்களாக இருந்தார்கள். அப்போஸ்தலனாகிய பவுல் பைபிளின் செய்தியை அத்தேனே பட்டணத்திலிருந்த கிரேக்கர்களுக்குக் கொண்டு வந்தபோது இந்த உண்மையை உறுதி செய்தான். கடவுள் “மனுஷ ஜாதியான சகல ஜனங்களையும் ஒரே இரத்தத்தினாலே தோன்றப் பண்ணி, பூமியின் மீதெங்கும் குடியிருக்கச்” செய்தார் என்பதாக அவர்களுக்கு அவன் சொன்னான்.—அப்போஸ்தலர் 17:26.
மனித இனம் முழுவதும் சகோதர சகோதரிகளாக இருக்கும் கருத்து பொதுவாக வெகு காலத்துக்கு முன்பிருந்தே ஜனங்களின் சிந்தனைக்கு அப்பாற்பட்டிருக்கிறது என்பதை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும். இன்றும் கூட, உலக அமைதி மற்றும் சகோதரத்துவத்தைப் பற்றிய எல்லா பேச்சு வார்த்தயின் மத்தியிலும், மனிதவர்க்கத்தை வாதித்துக்கொண்டிருக்கும் பிரிவினைகளை உண்டுபண்ணும் சக்திகளில் இனவெறுப்பும் தேசப்பற்றும் தொடர்ந்து இருந்து வருகிறதல்லவா? என்றபோதிலும் இந்த இன்னும் மற்றத் தடைகளையும் பைபிள் கடந்து செல்கிறது. அது எல்லா தேசங்களிலுமுள்ள ஜனங்களை ஒரு பெரிய குடும்பமாகவும் பூமியை, முழு மனித இனத்தின் ஒரு பெரிய வீடாகவும் பேசுகிறது. இந்தக் கருத்தில் இது உண்மையில் எல்லா மனிதவர்க்கத்துக்குமுரிய ஒரு புத்தகமாகும்.
ஆதாமும் ஏவாளும் யெகோவா தேவனுக்குத் தொடர்ந்து கீழ்ப்படிந்திருப்பார்களேயானால், முழு மனித இனமும் பூமி முழுவதிலும் மகிழ்ச்சியான ஒரு குடும்பமாக வாழும் எதிர்பார்ப்பு கைகூடிவந்திருக்கும். ஆனால் அது அவ்விதமாக நடக்கவில்லை. “ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்தது போலவும், எல்லா மனுஷரும் பாவஞ் செய்தபடியால் மரணம் எல்லாருக்கும் வந்தது” என்பதாகப் பைபிள் நமக்குச் சொல்கிறது.—ரோமர் 5:12.
இதை மனதில் கொண்டு பார்க்கையில் எந்த இனமோ அல்லது தேசமோ வேறு ஒரு இனத்தை அல்லது தேசத்தை விட உயர்ந்ததாகவோ அல்லது தாழ்ந்ததாகவோ இல்லை. மறுபடியுமாக இங்கே பைபிள் எந்தத் தப்பெண்ணமும் அல்லது பாரபட்சமுமில்லாமல் எல்லா மனிதவர்க்கத்தையும் குறிப்பிட்டுப் பேசுகிறது. அது வெறுமென, “எல்லாரும் பாவஞ் செய்து தேவ மகிமையற்றவர்களானார்கள்” என்பதாகக் காண்பிக்கிறது. (ரோமர் 3:23) ஒரு சில இடங்களிலுள்ள ஆட்கள் பொருளாதாரத்தில் மேம்பட்டவர்களாக, மேம்பட்ட கல்வியைப் பெற்றவர்களாக இருந்தபோதிலும், எங்கே பார்த்தாலும் ஜனங்கள் ஒரே விதமான அடிப்படையான பிரச்னைகளை—வியாதி, வயோதிபம், அபூரணம் மற்றும் மரணம்—எதிர்படுவதை நாம் காண்பது உண்மையல்லவா?
எல்லா மனிதவர்க்கத்துக்கும் நன்மையைக் கொண்டு வரும் ஒரு வாக்கு
மனிதனின் நிலை மோசமாகி விட்டபோதிலும் மனிதன் எந்த நம்பிக்கையுமின்றி விடப்படவில்லை. நெருக்கடியான ஒரு கட்டத்தில் யெகோவா ஒரு வாக்குத்தத்தத்தோடு தலையிட்டார். ஆபிரகாமுக்குக் கடவுள் சொன்னார்: “உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும்.” (ஆதியாகமம் 22:18) தற்செயலாக, இந்த வாக்குத்தத்தம் உலகிலுள்ள மூன்று முக்கிய மதங்களினால்—யூத மதம், கிறிஸ்தவ மதம், மற்றும் இஸ்லாமிய மதம்—அவர்களுடைய நம்பிக்கைகளின் ஒரு பாகமாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. யெகோவா தேவன் பூர்வ இஸ்ரவேல் தேசத்தாரோடு உட்பட ஆபிரகாமோடும் அவனுடைய சந்ததியோடும் கொண்டிருந்த செயல் தொடர்புகளைப் பதிவு செய்வதன் மூலம் இந்த வாக்குத்தத்தத்தின் படிப்படியான நிறைவேற்றத்தைப் பைபிள் மாத்திரமே வெளிப்படுத்துகிறது.
ஆனால் இங்கேதானே அநேகர் எதிர்ப்பைத் தெரிவிக்கலாம். இது ஒரு தேசத்துக்கு விஷேச சலுகை அளிப்பது அல்லது ஒரு புறமாக சாய்வதாக இருக்கிறது என்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். இதன் அடிப்படையில், பைபிளை அல்லது எபிரேய வேதாகமத்தின் பெரும்பகுதியை வெறுமென ஒரு குலத்தின் கோட்பாடுகளின் தொகுதி என்பதாக அதைத் தள்ளிவிடுகிறார்கள். ஆனால் இது நியாயமானதாக இருக்கிறதா? யெகோவா ஏன் ஆபிரகாமில் அவ்வளவு நம்பிக்கை கொண்டு அவனுக்கு அந்த வாக்கைக் கொடுத்தார்?
பைபிள் விளக்குகிறது: “ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான். அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது. அவன் ‘தேவனுடைய சிநேகித’னென்னப்பட்டான்.” (யாக்கோபு 2:23) முகமதியர்களின் பரிசுத்த புத்தகமாகிய குரானும் கூட, ஆபிரகாம் கடவுளால் ஒரு நண்பனாக ஏற்றுக் கொள்ளப்படுவதற்குக் காரணம் அவனுடைய விசுவாசமாக இருந்தது என்பதைச் சுட்டிக் காண்பிப்பது அக்கறைக்குரியதாக இருக்கிறது. “அல்லாஹ்வுக்கு முழுமையாகத் தன்னைக் கீழ்ப்படுத்துகிறவனை விட வேறு எவன் அழகான மார்க்கத்தையுடையவனாக இருப்பான்? அவன் [மற்றவர்களுக்கு] நன்மை செய்து நேர்மையுள்ளவனான இப்ராஹீமின் விசுவாசத்தைப் பின்பற்றுகிறவனாக இருப்பான். அல்லாஹ் இப்ராஹீமைத் தன்னுடைய தோழராக எடுத்துக் கொண்டார்”—சூறா IV, வசனம் 125, பரிசுத்த குரான், M.H.ஷக்கீர் மொழிபெயர்த்தது.
இஸ்ரவேலர்களைப் பற்றி என்ன? ஆபிரகாமுக்குக் கடவுள் வாக்குக் கொடுத்து 400-க்கும் மேற்பட்ட ஆண்டுகள் ஆன பின்பு, மோசே அவர்களிடம் பின்வருமாறு சொன்னான்: “சகல ஜனங்களிலும் நீங்கள் திரட்சியான ஜனமென்று யெகோவா உங்கள் பேரில் அன்பு வைத்து உங்களைத் தெரிந்து கொள்ளவில்லை; நீங்கள் சகல ஜனங்களிலும் கொஞ்சமாயிருந்தீர்கள். யெகோவா உங்களில் அன்பு கூர்ந்ததினாலும் உங்கள் பிதாக்களுக்கு இட்ட ஆணையைக் காக்க வேண்டும் என்பதினாலும்.”—உபாகமம் 7:7, 8.
ஆகவே ஆபிரகாமோ அல்லது இஸ்ரவேலரோ ஒரு உயர்ந்த இனத்தை அல்லது தேசத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள் என்பதாலோ அல்லது மற்ற ஆட்களைவிட வேறு எந்த விதத்திலும் அவர்கள் மேம்பட்டவர்களாக இருந்தார்கள் என்பதாலோ அல்ல மாறாக விசுவாசம் மற்றும் நீதியான கிரியைகளின் அடிப்படையில் காண்பிக்கப்பட்ட கடவுளுடைய அன்பும் தகுதியற்றத் தயவாலுமே ஆகும். அப்போஸ்தலனாகிய பேதுரு பின்வருமாறு சொன்னபோது இந்தக் குறிப்பைச் சொல்லுகிறான்: “எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன்.”—அப்போஸ்தலர் 10:34, 35.
இதன் காரணமாகவே யெகோவா தேவன் ஒரு காலம் வரையாக இஸ்ரவேல் தேசத்தாரோடு மாத்திரமே செயல் தொடர்பு கொண்டிருந்த போதிலும், அவர் எல்லா மனிதவர்க்கத்தின் நலனையும் உண்மையில் கருத்தில் கொண்டிருந்தார். இஸ்ரவேலரோடு அவருடைய செயல் தொடர்புகள் பைபிளில் பதிவு செய்யப்பட்டிருப்பதற்குக் காரணம், தேசாபிமான ஆவியை வளர்க்கவோ அல்லது ஒரு ஜாதியை மற்றொன்றுக்கு மேலாக உயர்த்தவோ இல்லை. மாறாக, தேவ வசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும், ஆறுதலினாலும் நாம் நம்பிக்கையுள்ளவர்களாகும்படிக்கு முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது.” (ரோமர் 15:4) எல்லா மனிதவர்க்கமும் மறுபடியுமாகச் சமாதானத்திலும் ஒத்திசைவிலும் ஐக்கியப்பட்டிருப்பார்கள் என்ற நம்பிக்கையை நிறைவேற்றுவதில் கடவுளுடைய அன்பையும் பொறுமையையும் இந்தச் சம்பவங்கள் உயர்த்திக் காண்பிக்கின்றன. இந்த நம்பிக்கை எவ்விதமாக கைகூடிவர இருக்கிறது?
சமாதானத்துக்கு ஒரு நிர்வாகம்
“காலங்கள் நிறைவேறும் போது விளங்கும் நியமத்தின்படி பரலோகத்திலிருக்கிறவைகளும் பூலோகத்திலிருக்கிறவைகளுமாகிய சகலமும் கிறிஸ்துவுக்குள்ளே கூட்டப்பட வேண்டுமென்று தமக்குள்ளே தீர்மானித்திருந்த தம்முடைய [கடவுளுடைய] தயவுள்ள சித்தத்தின் இரகசியத்தை எங்களுக்கு அறிவித்தார்” என்பதாகப் பவுல் விளக்கினான். (எபேசியர் 1:9, 19) இந்த “நியமம்” (நிர்வாகம், NW) என்ன?
இந்த வார்த்தை அடிப்டையில் “ஒரு வீட்டின் நிர்வாகம்” என்று பொருள்படும் oi·ko·no·mi’a, என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே மனிதவர்க்கமானது அரசியலாலும், இனத்தாலும், பொருளாதாரத்தாலும், மதத்தாலும் பிரிந்திருந்தபோதிலும் பிரிவினைகளை உண்டு பண்ணும் சக்திகளை ஒழித்து உலகமனைத்திலும் கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கம் முழுவதையும் மறுபடியுமாக ஒரு மகிழ்ச்சியுள்ள குடும்பமாக ஒன்றாகச் சேர்க்க கடவுள் திட்டமிட்டிருக்கிறார். இதை அவர் தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மேசியானிய ராஜ்யத்தின் மூலமாகக் செய்து முடித்திடுவார்.—தானியேல் 2:44; ஏசாயா 9:6, 7 பார்க்கவும்.
இன்று உலகமெங்கும் பரவியுள்ள பதட்ட மற்றும் பிரச்னைகளின் மத்தியிலும் உலகம் முழுவதிலுமுள்ள லட்சக்கணக்கான ஆட்கள், சமாதானம் மற்றும் ஒத்திசைவைப் பற்றிய பைபிளின் செய்தியை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ள, ஒருவரும் எண்ணக்கூடாத அந்தத் “திரளான கூட்டமாகிய ஜனங்களாக” இவர்கள் வெளியே வந்திருக்கிறார்கள். அடையாள அர்த்தத்தில், இவர்கள் கடவுளுடைய சிங்காசனத்துக்கு முன்பாக ஏற்கெனவே குருத்தோலைகளை அசைத்து தங்களுடைய துதியைச் செலுத்தி “சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிற” யெகோவா தேவனுக்கும் “ஆட்டுக்குட்டியானவராகி”ய இயேசு கிறிஸ்துவுக்கும் தங்களின் கீழ்ப்படிதலைக் காண்பித்து வருகிறார்கள்.—வெளிப்படுத்தின விசேஷம் 7:9, 10.
அந்தச் செய்தி உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறதா? உங்களுடைய இனம், தேசம் அல்லது மொழி என்னவாக இருந்த போதிலும், இப்பொழுது பைபிளின் செய்தியை ஆராய்ந்து அதை ஏற்றுக் கொள்வதன் மூலம், நீங்கள் சர்வ தேசீய “திரள் கூட்டத்தை” சேர்ந்து கொள்ளலாம். அவர்களோடு சேர்ந்து நீங்கள் நம்பிக்கையோடு பின்வருமாறு சொல்லலாம்: “அவருடைய [கடவுளுடைய] வாக்குத்தத்தத்தின் படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்.”
ஆம் பைபிள் உங்களுக்குரிய ஒரு புத்தகமாக இருக்கக்கூடும். (w86 4/15)
[பக்கம் 5-ன் படம்]
ஆதாமும் ஏவாளும் மனித இனத்தின் மூதாதையர்களாக இருக்க வேண்டியவர்களாக இருந்தார்கள்
[பக்கம் 7-ன் படம்]
சொந்த தேசத்தை விட்டு புறப்பட்டு, விசுவாசத்தினாலும் நீதியுள்ள கிரியைகளினாலும் கடவுளுடைய தயவைச் சம்பாதித்துக் கொண்ட ஆபிரகாம்