மற்றவர்கள் செய்யும் பாவங்களுக்கு உடன்பட வேண்டாம்
“வீணரோடே நான் உட்காரவில்லை, வஞ்சகரிடத்தில் நான் சேருவதில்லை.”—சங்கீதம் 26:4.
1. உடன் விசுவாசிகளுக்கு எழுதுகையில், யூதா தன்னுடைய நோக்கத்தை மாற்றிக் கொண்டது ஏன்?
பத்தொன்பது நூற்றாண்டுகளுக்கு முன்பாக, சீஷனாகிய யூதா, உடன் விசுவாசிகளுக்கு ‘பொதுவான இரட்சிப்பைக்’ குறித்து எழுத கருத்துள்ளவனாயிருந்தான். ஆனால் “பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக தைரியமாய்ப் போராடும்”படியாக அவர்களை துரிதப்படுத்துவது அவசியமாயிருப்பதை அவன் கண்டான். ஏன்? ஏனெறால் “பக்தியற்றவர்களாகிய” சிலர் சபையினுள்ளே பக்க வழியாய் நுழைந்து “தேவனுடைய கிருபையைக் காம விகாரத்துக்கேதுவாகப் புரட்டிக்” கொண்டிருந்தார்கள்.—யூதா 3, 4.
2. இரட்சிப்பைக் குறித்து சிந்திப்பது புத்துயிரளிப்பதாக இருந்தபோதிலும், அவ்வப்போது நாம் ஜெப சிந்தையோடு எதை ஆலோசித்துப் பார்க்க வேண்டும்?
2 பொதுவான இரட்சிப்பைக் குறித்து சிந்திப்பது எத்தனை புத்துயிரளிப்பதாக இருக்கிறது! அந்த செய்தியின் பேரில் தியானம் செய்தல் அதிகமான மனநிறைவை கொண்டு வருகிறது. அந்த இரட்சிப்பின் எல்லா ஆசீர்வாதங்களையும் எதிர்நோக்கியிருக்கையில் நாம் களிகூறுகிறோம். என்றபோதிலும், இரட்சிப்பைக் குறித்து பேசுவதற்கு பதிலாக, மற்ற வினைமையான காரியங்களைக் குறித்து சிந்திப்பதற்கான தேவையை நாம் எதிர்படும் சமயங்கள் இருக்கின்றன. திருத்திக்கொள்ளப்படாவிட்டால் இவை நம்முடைய விசுவாசத்தை அழித்து, ஜீவனுக்கான ஓட்டத்தில் நம்மை தோல்வியடையச் செய்துவிடும். தவறான நடத்தைக்கு எதிரான யூதாவின் எச்சரிக்கை உறுதியானதாயும் வலிமைமிக்கதாயும் இருந்தது போலவே, இன்று கிறிஸ்தவர்கள், நேரடியானதாகவும், மிகவும் பொருத்தமானதாகவும் இருக்கும் வேதப்பூர்வமான புத்திமதியை அவ்வப்போது ஜெபசிந்தையோடு ஆலோசித்துப் பார்க்க வேண்டும்.
நம்முடைய சொந்த பாவங்கள்
3. நமக்கு சிட்சை ஏன் தேவைப்படுகிறது? அது எவ்விதமாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்?
3 சங்கீதக்காரனாகிய தாவீது சொன்னான்: “நான் துர்க்குணத்தில் உருவானேன்; என் தாய் என்னைப் பாவத்தில் கார்ப்பந்தரித்தாள்.” (சங்கீதம் 51:5) நாம் அனைவருமே பாவிகளாக பிறந்திருக்கிறோம். (ரோமர் 5:12) அப்போஸ்தலனாகிய யோவான் எழுதினான்: “நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது.” (1 யோவான் 1:8) பாவிகளாக, நம்முடைய போக்கை திருத்திக்கொள்வதற்கு நமக்கு சிட்சை தேவைப்படும் சமயங்கள் இருக்கின்றன. இத்தகைய சிட்சை, யெகோவாவிடமிருந்து அவருடைய வார்த்தையாகிய பைபிள் மற்றும் அவருடைய அமைப்பின் மூலமாக வருகிறது. அவருடைய சிட்சை நம்மை திருத்தி அவருக்கு முன்பாக உத்தமமாய் நடக்க நமக்கு உதவி செய்கிறது. அப்போஸ்தலனாகிய பவுல் குறிப்பிட்ட விதமாகவே: “எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும்; ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்.” (எபிரெயர் 12:11) இத்தகைய சமாதான பலனை முன்னிட்டுப் பார்க்கையில் அதை நிச்சயமாகவே நாம் நன்றியுணர்வோடு ஏற்றுக்கொள்ள வேண்டும்.
4. சிட்சை எப்பொழுது கொடுக்கப்படலாம்? அதன் பலன் என்னவாக இருக்கக்கூடும்?
4 பெரிய தவறிற்கு வழிநடத்தக்கூடிய போக்கில் நாம் முதல் படியை எடுத்து வைத்தவுடன், யெகோவாவிடமிருந்து சிட்சை கொடுக்கப்படலாம். (கலாத்தியர் 6:1) மற்ற சமயங்களில் தவறான ஒரு போக்கினுள் நாம் முழுமையாக சென்றுவிட்ட பிறகு சிட்டை வரலாம். சபையிலுள்ள விபச்சாரக்காரனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படியாக அப்போஸ்தலனாகிய பவுல் கொரிந்தியர்களை பலமாக துரிதப்படுத்தியது போல, இத்தகைய சிட்சை கடுமையானதாக இருக்க வேண்டியதாக இருக்கலாம். (1 கொரிந்தியர் 5:1-5) எப்படியிருந்தாலும் தவறு செய்தவர் மனந்திரும்பி, குணப்பட்டு மிகவும் வினைமையான குற்றத்துக்கு வழிநடத்தக்கூடிய பாவமுள்ள ஆசைகளை விட்டுவிலகி சீரான ஒரு பாதையில் நடக்க வேண்டும் என்பதற்காகவே சிட்சை கொடுக்கப்படுகிறது. (அப்போஸ்தலர் 3:19 ஒப்பிடவும்) பூர்வ கொரிந்துவில் கடிந்துக்கொள்ளப்பட்ட நபர், நன்மையடைந்து சபையோடு ஒரு அன்பான கூட்டுறவுக்குள் திரும்ப கொண்டுவரப்பட்டது தெளிவாக தெரிவது போலவே, யெகோவாவின் ஊழியர்கள் இத்தகைய சிட்சைக்காக நன்றியுள்ளவர்களாய் இருக்கிறார்கள்.—2 கொரிந்தியர் 2:5-8.
5. வினைமையான பாவத்துக்குள் சிக்கிக்கொள்ளும் கிறிஸ்தவர்கள் பொதுவாக என்ன செய்கிறார்கள்?
5 யெகோவாவுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டவர்களாயிருக்கும் பெரும்பாலானோர், கடவுளுக்கு முன்பாக உத்தமமாய் நடக்க வேண்டியதன் அவசியத்தை நன்றாக அறிந்தவர்களாக இருக்கிறார்கள். வினைமையான ஒரு பாவத்துக்குள் சிக்கிக் கொள்வார்களேயானால் அவர்கள் தவறான போக்கிலிருந்து விரைவாக திரும்பி, நியமிக்கப்பட்ட மூப்பர்களிடம் சென்று, மெய்யான மனந்திரும்புதலுக்குரிய அத்தாட்சியைக் கொடுக்கிறார்கள். (யாக்கோபு 5:13-16) ஒப்பிடுகையில், வெகு சில யெகோவாவின் சாட்சிகளே ஒவ்வொரு வருடமும் சபைநீக்கம் செய்யப்படும் உண்மை, அவர்கள் தீமையை வெறுத்து, நன்மையைச் செய்ய விரும்புகிறார்கள் என்பதற்கு அத்தாட்சியாக இருக்கிறது.—சங்கீதம் 34:14; 45:7.
மற்றவர்களுடைய பாவங்கள்
6, 7. தவறு செய்யும் சிலர் எவ்விதமாக மற்றவர்கள் மீது செல்வாக்கு செலுத்த முயற்சிக்கிறார்கள்?
6 ஆனால் சரியானதை நேசிக்கிறவர்களாக காணப்படும் சிலர், அவர்களுடைய இருதயங்கள் அவர்களை ஏமாற்றிவிட அனுமதித்திருப்பதுபோல தோன்றுகிறது. ஏனென்றால் அவர்கள் தீமையை வெறுப்பதாக தெரியவில்லை. (சங்கீதம் 97:10; ஆமோஸ் 5:15) இதன் விளைவாக, பாவமுள்ள காரியங்களில் சிக்கிக்கொண்டு, சரியானதை செய்வதற்கான போராட்டத்தை அவர்கள் காத்துக்கொள்வதில்லை. சில சமயங்களில் அவர்கள் இன்னும் ஒரு படி மேல்சென்று தங்களுடைய பாவமுள்ள போக்கில் மற்றவர்களை ஈடுபடுத்த முயற்சிக்கிறார்கள். இத்தகைய ஆலோசனைகளை நாம் தள்ளிவிடுவது எவ்வளவு முக்கியமாக இருக்கிறது!—நீதிமொழிகள் 1:10-15 ஒப்பிடவும்.
7 சில சமயங்களில், தீமையை வெறுக்கிறவர்களாக காணப்படாத சிலர், அவ்வளவு மென்னயமாக பேசுவதால், அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருப்பவர்களின் இருதயங்களில், தவறானதை செய்வதற்கான அவா உருவாகக்கூடும். ஒழுக்கக்கேட்டில் ஈடுபடவோ கடவுளால் கண்டனம் செய்யப்படும் நடத்தையின் எல்லைக்கோட்டில் ஒரு செயலை நடப்பிக்கவோ உற்சாகப்படுத்தப்படலாம். அல்லது ஆவிக்குரிய விதத்தில் ஆபத்தானதாக இருக்கக்கூடிய ஒரு நிலைமையில் சிக்கிக்கொள்ள ஒரு நபர் துரிதப்படுத்தப்படலாம். இவ்விதமாக மற்றவர்களை இணங்க வைக்க, முயற்சிப்பவர்கள் நாம் பாவம் செய்கையில் யெகோவா இரக்கமுள்ளவராக இருக்கும் அன்புள்ள கடவுள் என்பதாக வாதாடுகிறார்கள். இதுபோன்ற இருதயத்தின் கிறுக்குள்ளத்தன்மை நிரந்தரமான சேதத்தை உண்டுபண்ணக்கூடும். (எரேமியா 17:9; யூதா 4) நிச்சயமாகவே நாம் ‘நம்முடைய காலை அவர்கள் பாதைக்கு விலக்க’ வேண்டும்.—நீதிமொழிகள் 1:15.
மற்றவர்களுடைய பாவங்களுக்கு உடன்படுவது
8. என்ன கேள்விகள் சிந்திக்கப்பட வேண்டியவையாக இருக்கின்றன?
8 ஆனால் ஒருவர் உற்சாகப்படுத்தும் நடத்தைப்போக்கு தவறு என்பதை நாம் உணருவதாக வைத்துக்கொள்வோம். நாம் அதை மறுத்துவிடுவதானது அந்த விஷயத்தில் கூடுதலான பொறுப்பிலிருந்து நம்மை கட்டாயமாகவே விடுவித்துவிடுகிறதா? தவற்றை உற்சாகப்படுத்துகிறவர்கள் அதில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதை நாம் அறிந்திருந்தோமேயானால் நாம் என்ன செய்ய வேண்டும்?
9. மற்றவர்களுடைய தவறுகளைப்பற்றி தெரிவிக்க சிலர் ஏன் தவறக்கூடும்? இது ஏன் வினைமையான ஒரு காரியமாகும்?
9 மற்றவர்கள் தவறுசெய்வதை அறிந்திருக்கும் சிலர், சபையை சுத்தமாக வைத்துக்கொள்வதற்கு முக்கிய உத்தரவாதமுள்ளவர்களிடம் எதையும் சொல்வதற்கு மனதில்லாதவர்களாக இருக்கலாம். ஏன்? ஒருவேளை காட்டிக் கொடுப்பவர்கள் என்பதாக கருதப்படுவதை அவர்கள் விரும்பாமலிருக்கலாம் அல்லது பொய்யான பற்றுறுதி உணர்வின் காரணமாக அவர்கள் அமைதியாக இருந்துவிடலாம் அல்லது இரகசியமாக வைத்துக்கொள்வதாக உறுதியளிப்பவர்களிடம் மட்டுமே அதைப்பற்றி பேசக்கூடும். இது மிகவும் வினைமையான காரியமாகும். ஏனென்றால் இது உண்மையில் மற்றவர்களுடைய பாவங்களுக்கு உடன்படுவதில் விளைவடையக்கூடும்.
10, 11. (எ) மற்றவர்களுடைய பாவங்களில் பங்குள்ளவனாயிருப்பதைப்பற்றி அப்போஸ்தலனாகிய யோவான் என்ன சொன்னான்? (பி) சபையின் அங்கத்தினர் ஒருவரின் தவறு நமக்கு தெரியவருமானால், நம்மைநாமே என்ன கேட்டுக்கொள்ளலாம்?
10 மற்றொரு நபரின் பாவத்தில் பங்குள்ளவனாயிருப்பது கூடிய காரியமாகும் என்பதை அப்போஸ்தலனாகிய யோவான் காண்பித்தான். அவன் எழுதினான்: “கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல, . . . ஒருவன் உங்களிடத்தில் வந்து இந்த உபதேசத்தைக் கொண்டுவராமலிருந்தால், அவனை உங்கள் வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும், அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள். அவனுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறவன் அவனுடைய துர்க்கிரியைகளுக்கும் பங்குள்ளவனாயிருக்கிறான்.” (2 யோவான் 9-11) “கிறிஸ்துவின் உபதேசத்திலிருந்து” பிரிந்து போன ஒருவர் கூட்டுறவுக்கொள்ள தகுதியுள்ள ஒருவராக இருக்கமாட்டார். அவருக்கு வாழ்த்துதலும்கூட சொல்லாதிருப்பதன் மூலம், விசுவாசமுள்ள ஒரு கிறிஸ்தவன் அவருடைய துர்க்கிரியைகளில் பங்குள்ளவனாக இருப்பதை தவிர்க்கிறவனாக இருப்பான்.
11 விசுவாச துரோகியின் விஷயத்தில் இவ்விதமாக இருப்பதன் காரணமாக, மற்றவர்களுடைய ஒழுக்கங்கெட்டச் செயல்கள் நம்முடைய கவனத்துக்கு வருகையில் அவர்களுடைய துர்க்கிரியைகளில் பங்குள்ளவர்களாக இருக்க நாம் விரும்ப மாட்டோம். அப்படியென்றால், சபையின் அங்கத்தினர் ஒருவர் ஒரு திருடனாக அல்லது குடிக்காரனாக மாறிவிட்டிருக்கிறான் என்பதை நாம் அறிந்திருந்தால் என்ன? யெகோவாவின் மன்னிப்பை நாடி, அவருடைய பாவத்தை மூப்பர்களிடமாக அறிக்கைச் செய்யும்படியாக நாம் அவரை உற்சாகப்படுத்த தவறினால், நாம் முழுவதுமாக குற்றமற்றவர்களாக இருக்கிறோமா? இல்லை. ஏனென்றால் கவலையுடன் கவனிக்கப்பட வேண்டிய ஒரு பொறுப்பு நமக்கிருக்கிறது.
தூய்மையும் பாதுகாப்பும் இன்றியமையாதது
12. சபையின் ஆவிக்குரிய தூய்மைக்காக ஏன் அக்கறையை காண்பிக்க வேண்டும்?
12 நாம் தனிப்பட்டவர்களாக, சபையின் ஆவிக்குரிய தூய்மைக்காக அக்கறையை காண்பிக்கிறவர்களாக இருக்க வேண்டும். நாடு கடத்தப்பட்டிருந்த யூதர்கள் பொ.ச.மு. ஆறாவது நூற்றாண்டில், பாபிலோனிலிருந்து புறப்பட இருந்த சமயத்தில் இது எவ்வளவு நன்றாக வலியுறுத்தப்பட்டிருந்தது! கடவுள் இவ்விதமாக கட்டளையிட்டிருந்தார்: “புறப்படுங்கள், புறப்படுங்கள், அவ்விடம் விட்டுப்போங்கள்; அசுத்தமானதைத் தொடாதிருங்கள்; யெகோவாவுடைய பாத்திரங்களைச் சுமக்கிறவர்களே, அதின் நடுவிலிருந்து [பாபிலோன்] புறப்பட்டு உங்களைச் சுத்திகரியுங்கள்.”—ஏசாயா 52:11.
13. யெகோவாவின் ஜனங்களை, தவறு செய்கிறவர்களிடமிருந்து பாதுகாப்பதைக் குறித்து நாம் அக்கறையுள்ளவர்களாய் இருக்க வேண்டும் என்பதை யூதா எவ்விதமாக காண்பித்தான்?
13 யெகோவாவின் ஜனங்களை தவறிற்குள் கவர்ந்திழுத்துச் செல்ல முயலும் ஆட்களிடமிருந்து அவர்களை பாதுகாப்பதைக் குறித்தும்கூட நாம் அக்கறையுள்ளவர்களாயிருக்க வேண்டும். யூதாவின் நாட்களிலிருந்த சில “பக்தியற்றவர்கள்” ‘தேவனுடைய கிருபையைக் காம விகாரத்துக்கேதுவாக புரட்ட முயற்சித்தார்கள். ஆனால் உண்மையுள்ள அந்த சீஷன், உடன் விசுவாசிகளை எச்சரித்து இவ்விதமாக அவர்களை பாதுகாக்க செயல்பட்டான். உண்மையற்ற இஸ்ரவேலர்கள், கீழ்ப்படியாத தேவதூதர்கள், இன்னும் மற்றவர்களின் திருஷ்டாந்தங்களை அவன் அவர்களுக்கு நினைவுபடுத்தினான். தேவ ஆவியால் ஏவப்பட்ட அவனுடைய கடிதத்தைப் படித்துப் பாருங்கள். சபையின் தூய்மை அச்சுறுத்தப்படுகையில் அல்லது கடவுளுடைய ஜனங்கள் அசுத்தமான உள்ளெண்ணங்களைக் கொண்ட ஒழுக்கங்கெட்ட ஆட்களிடமிருந்து பாதுகாக்கப்பட வேண்டிய சமயத்தில், உண்மை கிறிஸ்தவர்கள் முயற்சி எடுக்காமல் வெறுமென உட்கார்ந்திருக்கமுடியாது என்பதை நீங்கள் காண்பீர்கள்.
14. தவறு செய்தவர் மூப்பர்களிடம் அறிக்கைச் செய்ய தவறுவாரேயானால், என்ன செய்வது என்பதை தீர்மானிக்க, சங்கீதம் 26:4 எவ்விதமாக நமக்கு உதவக்கூடும்?
14 என்றபோதிலும், கடவுளுடைய மன்னிப்பைத் தேடவும் மூப்பர்களிடமாக அறிக்கைச் செய்யவும் தவறு செய்தவரை நாம் உற்சாகப்படுத்தியும், அவர் இதை செய்யாமல் காலங்கடத்திக்கொண்டு அல்லது இந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதன் அவசியத்தை உணராதிருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். விஷயத்தை அப்படியே விட்டுவிடலாமா? அதில் சிச்கிக்கொள்ள தங்களுக்கு விருப்பமில்லை என்பதாக சிலர் வாதாடலாம். தவறு செய்தவரின் நட்பை இழந்துவிடும் அபாயத்தை அவர்கள் விரும்பாமலிருக்கலாம். மூப்பர்களிடம் சொல்வதன் மூலம், நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்ட ஆட்களாக கருதப்படுவதை அவர்கள் விரும்பாமலிருக்கலாம். ஆனால் இது தவறான விவாதமாக இருக்கிறது. சங்கீதக்காரனாகிய தாவீது சொன்னான்: “வீணரோடே நான் உட்காரவில்லை, வஞ்சகரிடத்தில் நான் சேருவதில்லை.” (சங்கீதம் 26:4) அப்படியென்றால், நிச்சயமாகவே நாம் “வஞ்சகருக்கு” உடந்தையாக ஆகவிரும்ப மாட்டோம்.
15. தவறு செய்தவர் அவருடைய குற்றத்தைக் குறித்து மூப்பர்களை அணுகுவதற்கு அவருக்கு போதிய அளவு காலத்தை நாம் கொடுத்தப் பிறகு, நம்முடைய உத்தரவாதத்தை லேவியராகமம் 5:1 எவ்விதமாக காண்பிக்கிறது?
15 ஆகவே தவறு செய்த நபர், அவருடைய குற்றத்தைக் குறித்து மூப்பர்களை அணுகுவதற்கு அவருக்கு போதிய அளவு காலத்தை நாம் கொடுத்துவிட்டப்பிறகு, அவருடைய பாவத்துக்கு உடன்படாதிருப்பது யெகோவாவுக்கு முன்பாக நம்முடைய உத்தரவாதமாக இருக்கிறது. அந்த நபர், மூப்பர்கள் விசாரிக்க தகுதியுள்ளதாக இருக்கும் வினைமையான ஒரு குற்றத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதை பொறுப்புள்ள கண்காணிகளிடம் நாம் தெரிவிப்பது அவசியமாக இருக்கிறது. இது லேவியராகமம் 5:1-ற்கு இசைவாக இருக்கும். அது இவ்விதமாகச் சொல்லுகிறது: “சாட்சியாகிய ஒருவன், இடப்பட்ட ஆணையைக் கேட்டிருந்தும், தான் கண்டதையும் அறிந்ததையும் தெரிவியாதிருந்து பாவஞ் செய்தால், அவன் தன் அக்கிரமத்தைச் சுமப்பான்.” நிச்சயமாகவே தவறு நடந்திருக்க வேண்டும் என்ற வெறும் ஊகத்தின் பேரில் அவசரப்பட்டு செயல்படுவதை நாம் தவிர்க்க வேண்டும்.
16. தன்னுடைய வினைமையான தவற்றை நியமிக்கப்பட்ட மூப்பர்களிடம் தெரியப்படுத்த மறுக்கும் ஒரு நண்பரிடமாக பற்றுறுதியுள்ளவராக இருப்பதைக் காட்டிலும் எது அதிக முக்கியத்துவமுள்ளதாக இருக்கிறது?
16 இன்றைய உலகில், பிறருடைய தவறுகளை மூடிமறைப்பது சாதாரண ஒரு பழக்கமாக இருக்கிறது. தவறுகளைப் பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டியவர்களிடம் அதை தெரியப்படுத்துவது என்ற நிலை வரும்போது அநேகர் ஒரு கல்சுவரைப் போன்று பேசாமல் இருந்துவிடுகிறார்கள். உடன் விசுவாசி ஒருவரின் வினைமையான பாவத்தைக் குறித்து நியமிக்கப்பட்ட மூப்பர்களிடம் தெரிவிப்பதற்கு, கிறிஸ்தவ ஆளுமையின் பலம் தேவையாக இருக்கிறது. ஆனால் யெகோவாவின் பிரியத்தை நாம் கொண்டிருக்க வேண்டுமானால், தனிப்பட்ட நட்புறவுகள், மற்றொரு நபரின் தவற்றிற்கு நம்மை குருடாக்கிவிட நாம் அனுமதிக்கக்கூடாது. வினைமையான ஒரு தவற்றைக் குறித்து குற்றவுணர்வுள்ளவராக இருந்து, நியமிக்கப்பட்ட மூப்பர்களிடம் விஷயத்தை தெரியப்படுத்த மறுக்கும் ஒரு நண்பரிடமாக பற்றுறுதியுள்ளவராக இருப்பதைக் காட்டிலும் கடவுளோடு நம்முடைய உறவே மிக அதிக முக்கியத்துவமுள்ளதாக இருக்கிறது.
அனைவரும் கவனித்துப்பார்க்க வேண்டிய பிரச்னை
17. நம் மத்தியிலுள்ள சில வாலிபர்கள், மற்றவர்களுடைய பாவங்களுக்கு உடன்படுவதற்கு எதிராக விழிப்புள்ளவர்களாயிருக்க வேண்டும் என்பதை எது விளக்குகிறது?
17 மற்றவர்களுடைய பாவங்களுக்கு உடன்படும் பிரச்னை, சில சமயங்களில் நம் மத்தியிலுள்ள சில வாலிபர்களிடம் இருக்கிறது. கேடுண்டாக்கும் வகையில் சபையை பாதித்து, யெகோவாவின் வெறுப்பில் விளைவடையக்கூடிய காரியங்களை மற்றவர்கள் செய்கையில் அவர்கள் மெளனமாக இருந்து, தகவல் தெரிவிக்கப்பட வேண்டியவர்களிடம் சொல்ல மறுத்துவிடலாம். மற்றவர்களின் தவறுகளை மூடி மறைத்துவிடுவது உலகப்பிரகாரமான பள்ளி அமைப்புகளில் வெகு சாதாரணமாகக் காணப்படுகிறது. ஆனால் இந்த நோக்குநிலை சபைக்கு பரவும்போது, அநேக பிரச்னைகள் வரக்கூடும். தவறான நடத்தையில் ஈடுபட ஒன்றாக கூட்டுச் சேர்ந்துக்கொண்டு மூப்பர்களும் பெற்றோர்களும் இது போன்ற நடவடிக்கைகளை அறிந்து கொள்ளாதபடிக்கு அதை இரகசியமாக வைத்துக்கொள்ள ஒருவரோடொருவர் உறுதிசெய்து கொள்வதைப் பற்றிய அறிக்கைகள் இருந்திருக்கின்றன. ஒத்த வயதுள்ளவர்களிடமிருந்து வரும் அழுத்தங்களுக்கு இணங்கிவிடுவதும் பிறரால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்ற ஆசையும், தவறு கண்டுபிடிக்கப்படும்போது இந்த வாலிபர்களுக்கும் அவர்களுடைய பெற்றோர்களுக்கும் சபையிலுள்ள மற்றவர்களுக்கும் மனவேதனைகளை உண்டுபண்ணியிருக்கிறது. வெளியரங்கமாகாத இரகசியம் ஒன்றுமில்லை என்பதையும் அவருடைய அமைப்பை சுத்தமாக வைத்துக்கொள்ள உதவி செய்வது யெகோவாவுக்கு முன்பாக நம்முடைய அடிப்படையான உத்தரவாதமாக இருக்கிறது என்பதையும் நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.—லூக்கா 8:17.
18. தங்களுடைய பிள்ளைகள் தவறு செய்யும்போது கிறிஸ்தவ பெற்றோர் என்ன செய்ய வேண்டும்?
18 யெகோவாவின் ஊழியர்கள் அனைவருமே மற்றவர்களுடைய பாவங்களில் உடன்படாதபடிக்கு அதிக கவனமுள்ளவர்களாக இருக்க வேண்டும். சில பெற்றோர்கள், தங்களுடைய பிள்ளைகளை குற்றச்சாட்டிலிருந்து காப்பாற்றுவதற்காக அவர்களுடைய குற்றத்துக்கு நியாய நிரூபணம் செய்ய முயற்சிக்கிறார்கள். ஆனால் இந்த இளைஞர்கள் தவறு செய்கையில், அனைவரும் தங்களுடைய பிள்ளைகளுக்கு எதிராக இருக்கிறார்கள் என்பதாக கிறிஸ்தவ பெற்றோர்கள் நினைக்கக்கூடாது. மாறாக, தேவபக்தியுள்ள பெற்றோர், கடவுளுடைய வார்த்தையிலிருந்து வரும் தேவையான சிட்சையை பெற்றுக் கொள்ளவும், ஏற்றுக்கொள்ளவும், அதிலிருந்து நன்மையடையவும் தவறு செய்யும் தங்களுடைய பிள்ளைக்கு உதவி செய்ய வேண்டும்.
19. (எ) வினைமையான பாவங்களைக் குறித்ததில், விவாகமான கிறிஸ்தவ தம்பதிகள் எதைக் குறித்து எச்சரிக்கையுள்ளவர்களாக இருக்க வேண்டும்? (பி) தங்களில் ஒருவர் அல்லது உதவி ஊழியர்களில் ஒருவர் வினைமையான ஒரு பாவத்தை செய்துவிட்டிருந்தால், மூப்பர்கள் என்ன செய்ய வேண்டும்?
19 விவாகமான கிறிஸ்தவ தம்பதிகளும்கூட, ஒருவர் மற்றவரின் பாவங்களை மூடி மறைப்பதன் மூலம், கடவுளுடைய சட்டங்களை மீறி விடாதபடிக்கு கவனமுள்ளவர்களாக இருப்பது அவசியமாகும். வினைமையான ஒரு பாவத்தை மூடி மறைப்பதற்காக சூழ்ச்சி செய்து, அதில் தோல்வியடைந்த அனனியா மற்றும் சப்பீராளின் விஷயத்தை அவர்கள் மனதில் கொள்ள வேண்டும். (அப்போஸ்தலர் 5:1-11) மூப்பர்களும்கூட, அவர்களில் ஒருவர் சபைநீக்கம் செய்யப்படுவதில் விளைவடையக்கூடிய வினைமையான ஒரு பாவத்தை செய்திருப்பாரேயானால், தங்களில் ஒருவரையொருவரோ அல்லது உதவி ஊழியர்களையோ பாதுகாக்காதபடிக்கு விழிப்புள்ளவர்களாயிருக்க வேண்டும். பவுல் எடுத்துரைத்த நியமத்தை அவர்கள் பின்பற்ற வேண்டும். அவன் இவ்விதமாக எழுதினான்: “ஒருவன்மேலும் சீக்கிரமாய் கைகளை வையாதே; மற்றவர்கள் செய்யும் பாவங்களுக்கும் உடன்படாதே; உன்னைச் சுத்தவானாகக் காத்துக்கொள்.”—1 தீமோத்தேயு 5:22.
குற்றமற்றத்தன்மையை காத்துக்கொள்வது ஞானமான காரியம்
20. மற்றவர்களின் வினைமையான பாவங்களை மூடி மறைப்பதற்கு பதிலாக அல்லது அவற்றில் உடன்படுவதவதற்கு பதிலாக நாம் என்ன செய்ய வேண்டும்?
20 யெகோவாவின் ஊழியர்கள் இந்த உலகத்தின் மோசமான வழிகளில் பங்குகொள்ளவோ அல்லது அவற்றை பின்பற்றவோ கூடாது. காயுவுக்கு எழுதுகையில், அப்போஸ்தலனாகிய யோவான் இவ்விதமாகச் சொன்னான்: “பிரியமானவனே, நீ தீமையானதைப் பின்பற்றாமல், நன்மையானதைப் பின்பற்று, நன்மை செய்கிறவன் தேவனால் உண்டாயிருக்கிறான்; தீமை செய்கிறவன் தேவனைக் காணவில்லை.” (3 யோவான் 11) கடவுளுடைய நிச்சயமான வார்த்தையினால் வழிநடத்தப்பட்டு நன்மைச் செய்வது எவ்வளவு விரும்பத்தக்கதாக இருக்கிறது! ஆகவே, மற்றவர்களின் மோசமான பாவங்களை மூடி மறைப்பதற்கு அல்லது அதில் உடன்படுவதற்கு பதிலாக, குற்றமற்றவர்களும் கபடற்றவர்களுமாக சூடர்களைப்போல பிரகாசிக்க வேண்டும் என்பதே நம்முடைய தீர்மானமாக இருக்க வேண்டும். (பிலிப்பியர் 2:14, 15) தனிப்பட்டவர்களாக பிழையில்லாதவர்களாக இருந்து, அதே சமயத்தில், சபையை சுத்தமாக வைத்துக்கொள்வதற்கு கடவுளின் ஒவ்வொரு ஊழியனும் பொறுப்புள்ளவனாக இருக்கிறான். (2 பேதுரு 3:14) ஆனால் வேறொருவர் செய்திருக்கும் காரியத்தின் தகுதியுடைமையைக் குறித்து நீங்கள் மனகலக்கம் அடைந்தால் என்ன? நீங்கள் மூப்பர்களிடம் தாராளமாக பேசி, பின்பற்ற வேண்டிய சரியான போக்கைக் குறித்த அறிவுரைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
21. (எ) தம்முடைய சபையினிடமாக கிறிஸ்துவின் அன்பு நமக்கு எவ்விதமாக ஒரு முன்மாதிரியாக இருக்கிறது? (பி) மற்றவர்களுடைய தவற்றின் சம்பந்தமாக நாம் என்ன உத்தரவாதத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்?
21 யெகோவாவின் அமைப்பிடமாக நம்முடைய அன்பு, இயேசு கிறிஸ்து தம்முடைய ஆவிக்குரிய மணவாட்டியாகிய சபையினிடமாக கொண்டிருந்த அன்பைப் போன்று இருக்க வேண்டும். அவர் “சபையில் அன்புகூர்ந்து, தாம் அதைத் திருவசனத்தைக் கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும் கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதை நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.” (எபேசியர் 5:25-27) அதேவிதமாகவே யெகோவாவின் அமைப்பினிடமாக நம்முடைய அன்பு, அதை சுத்தமாக வைத்துக்கொள்ள நம்மால் இயன்றதைச் செய்யும்படியாக நம்மை தூண்ட வேண்டும். கடவுளையோ அவருடைய அமைப்பையோ கனவீனப்படுத்தும் எதையும் ஒருபோதும் செய்யாமலும், சபையில் மற்றவர்களுடைய குற்றங்களை புறக்கணித்து விடாமலும் இருப்போமாக. மாறாக, தவறு செய்கிறவர்களை, அவர்களுடைய நடத்தையை திருத்திக்கொண்டு மூப்பர்களின் உதவியை நாடும்படியாக உற்சாகப்படுத்துவோமாக. நியாயமான ஒரு காலத்துக்குள் இதை அவர்கள் செய்ய தவறினால், நியமிக்கப்பட்ட கண்காணிகளிடம் தெரிவிக்க வேண்டிய நம்முடைய உத்தரவாதத்தை ஏற்றுக்கொள்வோமாக. இவ்விதமாக, மற்றவர்களுடைய பாவங்களில் உடன்படுவதையும், அவர்களுடைய தவறான நடத்தைக்கு ஓரளவு காரணமாக இருப்பதையும் நாம் தவிர்க்கிறவர்களாக இருப்போம்.
22. (எ) இரட்சிப்படைய நாம் என்ன செய்ய வேண்டும்? (பி) என்ன கேள்விகள் இன்னும் பதிலளிக்கப்பட வேண்டும்.
22 நம்முடைய பொதுவான இரட்சிப்பு ஒப்பிடப்பட முடியாத பொக்கிஷமாக இருக்கிறது. அதை அடைய, நாம் தொடர்ந்து யெகோவாவுக்கு முன்பாக உத்தமமான வழியில் நடக்க வேண்டும். ஆகவே அவ்விதமாகச் செய்வதற்கு, ஒருவருக்கொருவர் உதவி செய்து, மற்றவர்களுடைய பாவங்களுக்கு ஒருபோதும் உடன்படாதிருப்போமாக. இந்த முயற்சிகளில் நமக்கு உதவி செய்ய யெகோவா, அன்பாக அமைப்பு சம்பந்தமாக ஒரு ஏற்பாட்டை செய்திருக்கிறார். இந்த விஷயத்தில் நியமிக்கப்பட்ட மூப்பர்கள் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறார்கள். ஆனால் அவர்கள் எவ்விதமாக யெகோவாவையும் அவருடைய குமாரனாகிய நல்ல மேய்ப்பனையும் பின்பற்றுகிறார்கள்? ஜீவனுக்குப் போகும் வழியில் நமக்கு மூப்பர்கள் என்ன உதவியை செய்யக்கூடும். பின்வரும் கட்டுரை இந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும். (w85 11/15)
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ சிட்சையை நீங்கள் எவ்விதமாக கருத வேண்டும்?
◻ உடன் விசுவாசி ஒருவர் தான் ஒரு வினைமையான பாவத்தை செய்துவிட்டதாக உங்களிடம் சொல்வாரேயானால், என்ன செய்யும்படியாக நீங்கள் அவரை துரிதப்படுத்த வேண்டும்?
◻ தவறு செய்தவர், தன்னுடைய பாவத்தை நியமிக்கப்பட்ட மூப்பர்களிடம் அறிக்கை செய்யவில்லை என்பதை நீங்கள் அறிந்திருந்தால் நீங்கள் என்ன செய்யவேண்டும்?
◻ நாம் மூப்பர்களாகவோ, விவாகத்துனைவர்களாகவோ, அல்லது பிள்ளைகளாகவோ இருந்தாலும்சரி, மற்றவர்களுடைய பாவங்களில் உடன்படுவதை எவ்விதமாக நாம் தவிர்க்கலாம்?
[பக்கம் 12-ன் படம்]
மற்றவர்களுடைய பாவங்களில் பங்குள்ளவனாக இருப்பதற்கு எதிராக அப்போஸ்தலனாகிய யோவான் எச்சரித்தான்