ராஜ்ய பிரஸ்தாபிகளின் அறிக்கை
மாநாட்டுப் பிரதிநிதிகள் போற்றப்படுகிறார்கள்
“நன்மைசெய், அதினால் உனக்குப் புகழ்ச்சி உண்டாகும்,” என்று அப்போஸ்தலனாகிய பவுல் ரோமர் 13:3-ல் சொன்னான். 1914-ல் பிரேஸிலில் நடந்த “ராஜ்ய அதிகரிப்பு” மாநாடுகளில் இது உண்மை என்று நிரூபித்துக் காட்டப்பட்டது.
உதாரணமாக, ஜோவோ பெஸோவா என்ற இடத்தில் நடந்த மாநாட்டுக்குப் பின்னர், அந்தக் கிளப் நிர்வாகி மாநாட்டுக் கமிட்டியிடம் பின்வருமாறு கூறினார்: “மாநாட்டை நேர்த்தியான முறையில் நடத்தியதற்காகவும் உங்களுடைய மற்றும் உங்கள் பிள்ளைகளுடைய நல்ல நடத்தைக்காகவும் என் பாராட்டுக்கள், வேறு எந்த ஒரு மத அமைப்பும் இப்படிப்பட்ட நல்ல நடத்தையை வெளிக்காட்டுவதில்லை. எங்கள் மன்றத்தை உங்களுக்கு வாடகைக்குக் கொடுக்கும்போது எங்களுக்கு எவ்வித கவலையும் கிடையாது. நீங்கள் எப்பொழுது வேண்டுமென்றாலும் எங்களுடைய இடத்தைப் பயன்படுத்திக்கொள்ள கிளப்பின் கதவுகள் எப்பொழுதுமே திறந்திருக்கிறது.”
இப்படிப்பட்ட போற்றுதலை மற்ற பலரும் தெரிவித்திருக்கிறார்கள்.
◻ “நான் பல ஆண்டுகள் ஏராளமான மக்கள் திரளோடு வேலை செய்திருக்கிறேன். ஆனால் நீங்களோ ஒழுங்காக அமைக்கப்பட்ட, சுத்தமான, மிகச்சிறந்த ஒத்துழைப்பைத் தரும் மக்களாக இருக்கிறீர்கள்.”—ரியோ டிஜெனிரோவில் மாரக்கனேஸினோ ஸ்டேடியம்.
◻ “உங்களுடைய இயக்கம் என்னைக் கவர்ந்துவிட்டது. இயேசு கிறிஸ்து இப்பொழுது வருவாரானால், அவர் உங்களுடைய மதத்தைதான் அங்கீகரிப்பார் என்று நம்புகிறேன்.”—ரியோ டிஜெனிரோ மாநாடுகள் ஒன்றுக்கு வேலையாக வந்திருந்த ஒரு தீயணைப்புத் துறையை சேர்ந்தவர்.
◻ “நீங்கள் எங்களுக்குக் [காவல்துறையினருக்குக்] கொஞ்சம்கூட தொல்லைக்கொடுக்க நினைப்பதில்லை. எல்லோரும் உங்களைப்போலிருக்க வேண்டுமென்று விரும்புகிறேன். அது அற்புதமாக இருக்கும். நான் விசில் ஊதினால், எந்த விவாதமுமின்றி கீழ்ப்படிவீர்கள் என்பது எனக்குத் தெரியும்.”—கியுரிட்டிபா மாநாட்டில் பணியாற்ற அனுப்பப்பட்ட ஒரு ஊர்திப் போக்குவரத்து காவல்பிரிவை சேர்ந்தவர்.
◻ “உங்களுடைய ஒழுங்கான நடத்தைக்கும் ஆச்சரியமான, மனப்பூர்வமான கட்டுப்பாட்டுக்கும் எங்கள் வாழ்த்துதலைத் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். உங்களுடைய எதிர்கால நிகழ்ச்சித் திட்டங்களும் வெற்றியடைய வாழ்த்துகிறோம். அதற்காக இந்த ஊராட்சியின் ஒத்துழைப்பு உங்களுக்கு எப்பெழுதும் உண்டு.”—சான்டோ ஆன்டரில் மாநகர் முதல்ர் (மேயர்) அலுவலகத்திலிருந்து மாநாட்டுக் கண்காணி பெற்ற கடிதம்.
◻ “எங்களுடைய ஹோட்டல் அறைகளைப் பயன்படுத்திய மற்றவர்களுடைய நடத்தைக்கும் உங்களுடைய நடத்தைக்கும் ஏராளமான முரண்பாடு. உங்களுடைய மக்கள் அறைகளில் வைக்கப்பட்டிருந்த எல்லா காரியங்களையும் சுத்தமாக, அதனதன் இடத்தில் வைத்திருந்தனர். மற்றும் அவர்களுடைய நடத்தையில் மற்றவர்களிடம் குற்றமற்ற மரியாதையையும் மதிப்பையும் காண்பித்தனர்.”—நோவோ ஹாம்பர்கோவில் ஒரு ஹோட்டல் நிர்வாகி.
◻ “உங்களுக்கு நல்ல சம்பளம் கிடைத்திருக்குமே.”—சோரொகாபாவில் மாநாட்டுக்கு ரொட்டி சப்ளை செய்த ஒரு ரொட்டிக் கடைக்கார முதலாளி, அங்கிருந்த சகோதரர்களின் கடினமான உழைப்பைப் பார்த்து இப்படியாக சொன்னார். அவர்களெல்லோருக்கும் சம்பளம் கொடுக்கப்படவில்லை, அவர்கள் மனமுவந்து பணியாற்றும் ஆட்கள் என்பதைக் கேள்விப்பட்ட அந்த முதலாளி, அவர்களுடைய ஊக்கமான உழைப்பையும் தியாகத்தையும் பார்ப்பதற்காக தன் கடைக்குச் சென்று சிப்பந்திகளனைவரையும் அரங்குக்குக் கூட்டிக்கொண்டு வந்தார்!
பிரேஸிலில் நடந்த மாநாடுகள், செய்தித்துறையினர் கவனத்திற்கும் வந்தது. டிரிபியுனா டா பாஹியா பின்வருமாறு அறிக்கை செய்தது: “பைபிளைக் கையில் வைத்துக்கொண்டு மனிதவர்க்கம் எதிர்படும் வன்முறைக்கும் வஞ்சகத்திற்கும் விளக்கத்தைக் காண அதில் வசனங்களைப் பார்க்கும் சாட்சிகள் அரசியல் பேசுவதில்லை, சமூக விவகாரங்களில் தலையிடுவதில்லை, நேரடியான தேர்தல்களைக் குறித்து அவர்களுக்கு ஒன்றும் தெரியாது. மனிதர் யார் ஆட்சி செய்தாலும், அவர் சமநிலையுள்ளவராக இருக்கமாட்டார், ஏனென்றால் கடவுள் ஒருவரே உலகத்தைப் பரிபூரணமாக ஆள முடியும் என்பது அவர்களுடைய நியாயமான கருத்து. . . . ஒரு புதிய உலகம் வருகிறது என்பதுதான் இந்த விசுவாசத்திற்கு ஆதாரம்; பைபிளைத் தளாரதவர்களாய்ப் படிப்பதும் கெட்ட பழக்கவழக்கங்களை மாற்றி தூய்மையான இருதயத்தைக் கொண்டிருப்பதன் மூலம் மட்டுமே அதில் பிரவேசிக்க முடியும்.”
யெகோவாவின் சாட்சிகள் பரிபூரணமாக இருப்பதாக உரிமைப்பாராட்டுவதில்லை, ஆனால் கடவுளுடைய ராஜ்யம் ஒரு பரிபூரண ஒழுங்குமுறையைக் கொண்டுவரும் என்று அவர்கள் நம்புகிறார்கள். என்றபோதிலும் அவர்கள் 1 பேதுரு 2:12-லுள்ள பைபிள் புத்திமதியை வாழ்க்கையில் பொருத்தி பிரயோகிக்க முயற்சிக்கிறார்கள்: “புறஜாதிகள் . . . உங்கள் நற்கிரியைகளைக் கண்டு அவற்றினிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை மகிமைப்படுத்தும்படி நீங்கள் அவர்களுக்குள்ளே நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துக் கொள்ளுங்கள்.” (w85 11/1)