கடவுள் மீது நம்பிக்கை—அது போதுமானதா?
நீங்கள் கடவுளை அல்லது ஒரு சர்வலோக ஆவியை நம்புகிறீர்களா? என்று கேட்டார் ஒரு பிரபல வாக்கெடுப்பு நடத்துபவரான ஜார்ஜ் காலப் என்பவர். ஒருவேளை ஒருசிலருடைய ஆச்சரியத்திற்கேதுவாய் 95 சதவிகிதமான பெரியவர்களும் (30 வயதுக்கு மேற்பட்டவர்கள்) 13-19 வயது இளம் பருவத்தினருமான இருசாராரும், ‘ஆம்’ என்று பதிலுரைத்தார்கள்! ஆனால் அவர்களுடைய நம்பிக்கை எந்தளவுக்கு செய்கையில் காட்டப்படுகிறது? வெளிப்படையாகவே வெகு கொஞ்சம். ஏனெனில் ஒரு சில வயது வந்த இளைஞரிடம் உங்கள் மத நம்பிக்கை உங்களுடைய அனுதின சிந்தனையையும் செயலையும் எந்தளவுக்கு பாதிக்கிறது என்று கேட்கப்பட்டபோது வெறும் 26 சதவிகிதமானோரே “மிக அதிகமாய்” என்று பதிலுரைத்தார்கள்a என்று திரு. காலப் அறிக்கை செய்தார்.—The Search for America’s Faith, ஜார்ஜ் காலப் மற்றும் டேவிட் பாலிஸ் என்பவர்கள் எழுதியது.
அப்படியானால் தெளிவாகவே, கடவுள் மீது கொண்டிருக்கும் வெறும் நம்பிக்கை போதுமானதல்ல. சீஷனாகிய யாக்கோபு எழுதினதாவது: “தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கிறாய், அப்படி செய்கிறது நல்லதுதான்; பிசாசுகளும் விசுவாசித்து நடுங்குகின்றன . . . . கிரியைகளில்லாத விசுவாசம் செத்தது.” (யாக்கோபு 2:19, 20) மறுபட்சத்தில் வெறும் விசுவாசிப்பது மட்டுமல்லாமல் அதைக் காட்டிலும் அதிகம் செய்த மனிதரைப்பற்றி பைபிள் சொல்லுகிறது. உதாரணமாக ஏனோக்கு, “தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருந்தான், [நடந்துக் கொண்டிருந்தான்., NW] (ஆதியாகமம் 5:24) ஏனோக்கிற்கும் அவனுடைய கடவுளுக்கும் இடையிலிருந்த உறவு இதனால் மிக நெருக்கமானதாக இருந்ததால் அது அவர்கள் ஒன்றாக சேர்ந்து நடந்ததை போன்று இருந்தது! ஆனால் இந்த தனித்தன்மை வாய்ந்த உறவை பெறும் தயவை ஏன் ஏனோக்கு பெற்றான்? ஒரு காரியமென்னவெனில், அதிர்ச்சியூட்டும் “தெய்வ பக்தியற்ற செயல்கள்” சர்வ சாதாரணமாக நடைபெற்று வந்த சீர்கேடடைந்த ஒரு மத சூழ்நிலையின் மத்தியில் அவன் வாழ்ந்துவந்தபோதிலும் ஏனோக்கு ஒரு நீதியின் மார்க்கத்தை பின்பற்றினான். தைரியத்துடனும் மற்றும் வெளிப்படையாகவும் தன் காலத்து ஜனங்களின் பொல்லாத செயல்களை வெளிப்படுத்திக் கொண்டிருந்தான்: “இதோ எல்லாருக்கும் நியாயத்தீர்ப்பு கொடுக்கிறதற்கும், அவர்களில் அவபக்தியுள்ளவர்கள் யாவரும் அவபக்தியாய் செய்துவந்த சகல அவபக்தியான கிரியைகளினிமித்தமும் தமக்கு விரோதமாய் அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடின வார்த்தைகளெல்லாவற்றினிமித்தமும், அவர்களை கண்டிக்கிறதற்கும், ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூடக் கர்த்தர் [யெகோவா, NW] வருகிறார்” என்று தீர்க்கதரிசனமுறைத்தான்.”—யூதா 14, 15.
கடவுளோடு நடப்பது ஏனோக்கை மிக ஆபத்தான நிலையில் வைத்தது. தங்களுக்கு எரிச்சலூட்டும் அவனுடைய தீர்க்கதரிசன முறைத்தலை நிறுத்திப் போட, சத்துருக்கள் அவனை கொலை செய்வதற்கு திட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள். என்றபோதிலும் அவன் யாருடன் நடந்து கொண்டிருந்தானோ அந்த கடவுள் தலையிட்டார். பைபிள் சொல்வதாவது: “விசுவாசத்தினாலே ஏனோக்கு மரணத்தை காணாதபடிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டான்; தேவன் அவனை எடுத்துக் கொண்டபடியினால் அவன் காணப்படாமற் போனான்.” ஆம் மரணத்தில் “கடவுள் அவனை எடுத்துக் கொண்டார்.” அவனுடைய சத்துருக்களின் கைகளில் அவன் கொடூரமான மரணத்தை அடையாதபடி வெளிப்படையாகவே அவனை காத்துக் கொண்டார்—எபிரெயர் 11:5, 13; ஆதியாகமம் 5:24; யோவான் 3:13 ஒப்பிட்டு பாருங்கள்.
“உண்மையான தேவனோடு நடந்தவர்களிலே” நோவா மற்றொரு மனிதனாக இருந்தான். ஏனோக்கை போன்று “நோவா நீதிமானாயிருந்தான். தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே அவன் தன்னை உத்தமனாக நிரூபித்தான்.” (ஆதியாகமம் 6:9) அவனுடைய நாட்களில் ஒழுக்கயீனமான நடத்தை பரவியிருந்தபோதிலும் மேலும் கொடுமை மட்டுக்கு மீறிய விதத்திலிருந்த போதிலும் அவன் அப்படிப்பட்டவனாயிருந்தான். நோவா தெய்வ பயத்தை வெளிக்காட்டி நீதியின் பிரசங்கியாக மேலோங்கி நின்றான். அதனால் தேவன் தாம் அந்த பண்டைய உலகத்தின் மீது ஜலப்பிரளயத்தை கொண்டு வந்தபோது அவனையும் அவன் குடும்பத்தாரையும் பாதுகாத்தார்!—2 பேதுரு 2:5; எபிரெயர் 11:7; ஆதியாகமம் 6:5, 11.
தம்முடன் நடப்பதற்கு கடவுள் இன்னமும் அழைப்பை கொடுக்கிறாரா? ஆம், நிச்சயமாகவே! அப்போஸ்தலனாகிய பவுல் சொன்னதாவது: நம்மில் ஒருவருக்கும் கடவுள் தூரமானவரல்லவே” ஆனால் நாம் அவரை “தேடினால் கண்டடைவோம்.” (அப்போஸ்தலர் 17:27) ஆனால் இதை நாம் எப்படி செய்வது? மேலும் கடவுளோடு நடத்தல் உண்மையில் எதை கேட்கிறது. (w85 9/1)
[அடிக்குறிப்புகள்]
a முப்பத்தொன்பது சதவிகிதமானோர் “ஓரளவுக்கு” என்றார்கள். 14 சதவிகிதமானோர் “வெகு அரிது” என்றார்கள். மற்றும் 12 சதவிகிதம் “இல்லவே இல்லை” என்றார்கள்.