உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • be படிப்பு 15 பக். 131-பக். 134 பாரா. 4
  • சிறந்த தோற்றம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • சிறந்த தோற்றம்
  • தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
  • இதே தகவல்
  • உடையும் தோற்றமும்—ஏன் கவனம் தேவை?
    இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
  • தகுந்த உடை தேவபக்தியை காட்டுகிறது
    நம் ராஜ்ய ஊழியம்—2003
  • நீங்கள் உடுத்தும் விதம் கடவுளை மகிமைப்படுத்துகிறதா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2016
  • உன் உடையும் தோற்றமும் –உன்னைப் பற்றி பேசுகின்றன
    உன் இளமை அதை மிக நன்றாய்ப் பயன்படுத்துதல்
மேலும் பார்க்க
தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
be படிப்பு 15 பக். 131-பக். 134 பாரா. 4

படிப்பு 15

சிறந்த தோற்றம்

நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

நேர்த்தியாக, சுத்தமாக, அடக்கமாக உடை அணியுங்கள். நன்கு தலை வாரியிருக்க வேண்டும். உங்கள் தோரணை அக்கறையை வெளிப்படுத்த வேண்டும்.

ஏன் முக்கியம்?

உங்களுடைய கிறிஸ்தவ நம்பிக்கைகளையும் வாழ்க்கை முறையையும் பற்றிய மற்றவர்களுடைய அபிப்பிராயத்தை தோற்றம் பாதிக்கலாம்.

உங்களுடைய தோற்றம் உங்களைப் பற்றி நிறைய பேசுகிறது. யெகோவா இருதயத்தைப் பார்க்கிறார், மனிதரோ பொதுவாக தங்களுடைய ‘கண்களுக்கு என்ன தோன்றுகிறதோ’ அதை வைத்தே ஒரு முடிவுக்கு வருகின்றனர். (1 சா. 16:7, NW) நன்கு தலைவாரி, சுத்தமாக தோற்றமளிக்கும்போது, உங்களுக்கு சுயமரியாதை இருக்கிறது என பிறர் முடிவு செய்யலாம்; இதனால், நீங்கள் சொல்வதை செவிகொடுத்துக் கேட்பதற்கும் அவர்கள் அதிகமாக விரும்பலாம். தகுந்த விதத்தில் உடை உடுத்தியிருப்பது நீங்கள் பிரதிநிதித்துவம் செய்கிற அமைப்பையும், வழிபடும் கடவுளையும் பற்றி நல்ல அபிப்பிராயத்தை உண்டாக்கலாம்.

பின்பற்ற வேண்டிய நியமங்கள். உங்களுடைய தோற்றம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு பல சட்டதிட்டங்களை பைபிள் தருவதில்லை. ஆனால் நல்ல தீர்மானம் எடுப்பதற்கு உதவும் சமநிலையான நியமங்களைத் தருகிறது. நாம் “எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்”வதே இவை அனைத்திற்கும் அடிப்படையாக இருக்கிறது. (1 கொ. 10:31) நம்முடைய தோற்றம் சம்பந்தமாக என்னென்ன நியமங்கள் உள்ளன?

முதலாவதாக, உடலிலும் உடையிலும் சுத்தமாய் இருக்கும்படி பைபிள் நம்மை உற்சாகப்படுத்துகிறது. பூர்வ இஸ்ரவேலருக்கு கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாண சட்டத்தில், சுத்தம் சம்பந்தமாக கடைப்பிடிக்க வேண்டிய காரியங்களை யெகோவா சொல்லியிருந்தார். உதாரணமாக, ஆசாரியர்கள் ஆலய பணி செய்யும்போது, குறிக்கப்பட்ட சமயங்களில் குளித்து தங்களுடைய உடைகளை துவைக்க வேண்டியிருந்தது. (லேவி. 16:4, 24, 26, 28) கிறிஸ்தவர்கள் மோசேயின் நியாயப்பிரமாணத்தின்கீழ் இல்லை, ஆனால் அதில் அடங்கியுள்ள நியமங்கள் இன்றைக்கும் பயனுள்ளவை. (யோவா. 13:10; வெளி. 19:8) முக்கியமாக வணக்கத்திற்கு கூடிவரும்போது அல்லது வெளி ஊழியத்தில் பங்குகொள்ளும்போது, மற்றவர்கள் நம்மைக் கண்டு அருவருப்படையாதபடி நம்முடைய உடலும் உடையும் சுத்தமாக இருக்க வேண்டும். சபையார் முன்னிலையில் பேச்சு கொடுப்போர் அல்லது நடிப்புகளில் பங்கேற்போர் சிறந்த முன்மாதிரி வைக்க வேண்டும். நம்முடைய தோற்றத்திற்கு கவனம் செலுத்துவது யெகோவாவிற்கும் அவருடைய அமைப்பிற்கும் மரியாதையைக் காட்டுகிறது.

இரண்டாவதாக, அடக்கத்தையும் தெளிந்த புத்தியையும் வளர்த்துக்கொள்ளும்படி பைபிள் நமக்கு புத்திமதி அளிக்கிறது. “ஸ்திரீகளும் மயிரைப் பின்னுதலினாலாவது, பொன்னினாலாவது, முத்துக்களினாலாவது, விலையேறப்பெற்ற வஸ்திரத்தினாலாவது தங்களை அலங்கரியாமல், . . . நாணத்தினாலும் [“அடக்கத்தினாலும்,” NW], தெளிந்த புத்தியினாலும், தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே நற்கிரியைகளினாலும், தங்களை அலங்கரிக்க வேண்டும்” என அப்போஸ்தலன் பவுல் கிறிஸ்தவ பெண்களை உந்துவித்தார். (1 தீ. 2:9, 10) ஆண்களும் தங்களுடைய உடை மற்றும் சிகை அலங்காரத்தில் அடக்கத்தையும் தெளிந்த புத்தியையும் காட்டுவது அவசியம்.

அடக்கமுள்ளவர் பிறரை அனாவசியமாக புண்படுத்துவதைக் குறித்து கவனமாக இருக்கிறார், தன்மீது மிதமீறிய கவனத்தையும் ஈர்ப்பதில்லை. தெளிந்த புத்தி விவேகத்தை அல்லது பகுத்துணர்வை பிறப்பிக்கிறது. இந்தக் குணங்களைக் காட்டுகிறவர் சமநிலையோடு இருக்கிறார், இது தெய்வீக தராதரங்களுக்கு மரியாதை காண்பிப்பதால் வருகிறது. இந்தக் குணங்களை வெளிப்படுத்துவது அழகாக உடை அணிவதை தடைசெய்வதில்லை, ஆனால் நம்முடைய தோற்றத்தைக் குறித்து கவனமாக இருப்பதற்கும் பகட்டான உடை மற்றும் சிகை அலங்காரத்தை தவிர்ப்பதற்கும் உதவுகிறது. (1 யோ. 2:16) வணக்கத்திற்காக கூடிவருகையிலும், வெளி ஊழியத்திலோ வேறெந்த காரியங்களிலோ ஈடுபடுகையிலும், நாம் இந்த நியமங்களைக் கடைப்பிடிக்க விரும்புகிறோம். நாம் அன்றாடம் அணியும் சாதாரண உடையும்கூட அடக்கத்தையும் தெளிந்த புத்தியையும் பிரதிபலிக்க வேண்டும். அப்போது பள்ளியிலோ வேலை செய்யும் இடத்திலோ சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதற்கு வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டங்களுக்கும் மாநாடுகளுக்கும் உடை உடுத்துகிற விதமாகவே எப்போதும் நாம் உடுத்துவதில்லை என்றாலும், நம்முடைய உடை நேர்த்தியாகவும் சுத்தமாகவும் அடக்கமாகவும் இருக்க வேண்டும்.

நாம் எல்லாருமே ஒரே மாதிரி உடை உடுத்துவதில்லை என்பது உண்மைதான். அப்படி உடுத்தும்படி நம்மிடம் எதிர்பார்க்கப்படுவதும் இல்லை. ஒவ்வொருவருக்கும் தனி ரசனை இருக்கிறது, அதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் பைபிளின் வழிநடத்துதல்களை எப்பொழுதும் பின்பற்ற வேண்டும்.

சிகையலங்காரத்தையும் உடைகளையும்விட “இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே” அதிமுக்கியமான அலங்காரம் என அப்போஸ்தலன் பேதுரு காட்டினார். (1 பே. 3:3, 4) அன்பும் சந்தோஷமும் சமாதானமும் தயவும் உறுதியான ஆதாரமுள்ள விசுவாசமும் நம் இருதயத்தில் பொங்கி வழியும்போது, அவை உண்மையிலேயே கடவுளை கனப்படுத்தும் ஆவிக்குரிய ஆடைகளாக நமக்கு மாறிவிடும்.

மூன்றாவதாக, நம்முடைய தோற்றம் சீராக இருக்கிறதா என்பதற்கு கவனம் செலுத்தும்படி பைபிள் நம்மை உந்துவிக்கிறது. 1 தீமோத்தேயு 2:9 (NW) ‘சீரான உடையைப்’ பற்றி குறிப்பிடுகிறது. பெண்களுடைய ஆடையைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் இங்கு குறிப்பிட்டபோதிலும், இதே நியமம் ஆண்களுக்கும் பொருந்துகிறது. சீரான ஒன்று நேர்த்தியாகவும் ஒழுங்காகவும் இருக்கிறது. நாம் வசதிபடைத்தவர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், நேர்த்தியான தோற்றத்துடன் இருக்க முடியும்.

தோற்றத்தைப் பொறுத்தவரை முதலில் பிறருடைய கவனத்திற்கு வரும் அம்சங்களில் ஒன்று நம்முடைய தலைமுடி. அது நேர்த்தியாக, அல்லது சீராக இருக்க வேண்டும். உள்ளூர் பழக்கமும் பரம்பரை காரணிகளும் நாம் எப்படி சிகையலங்காரம் செய்கிறோம் என்பதை பாதிக்கின்றன. 1 கொரிந்தியர் 11:14, 15-ல் சிகையலங்காரத்தைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் தரும் அறிவுரையில் இவ்விரண்டு அம்சங்களையும் கருத்தில் கொண்டிருப்பது தெரிகிறது. என்றாலும், ஒருவர் எதிர்பாலாரை போல் காட்சியளிப்பதற்கு முயலுவதை அவருடைய சிகையலங்காரம் காட்டும்போது, அது பைபிள் நியமங்களுக்கு முரணாக இருக்கிறது.​—உபா. 22:5.

ஆண்களைப் பொறுத்தவரை, நேர்த்தியான தோற்றத்திற்கு நன்கு சவரம் செய்திருப்பதும் அவசியம். மீசை வைத்திருப்பது கண்ணியம் என பரவலாக கருதப்படும் இடங்களில், மீசை வைத்திருப்போர் அதை நேர்த்தியாக வெட்டிவிட வேண்டும்.

நான்காவதாக, நம்முடைய தோற்றம் உலக ஆசையையும் அதன் வழிகளையும் பிரதிபலிப்பதாக இருக்கக் கூடாது. அப்போஸ்தலன் யோவான் இவ்வாறு எச்சரித்தார்: “உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்.” (1 யோ. 2:15-17) பாவ இச்சைகள் பல இந்த உலகிற்கே உரிய தனிப்பண்புகள். அவற்றில் மாம்சத்தின் இச்சையையும் ஒருவருடைய ஜீவனத்தின் பெருமையையும் யோவான் குறிப்பிடுகிறார். அதிகாரத்திற்கு கீழ்ப்படியாத கலகத்தன போக்கிற்கும் பைபிள் கவனத்தை ஈர்க்கிறது. (நீதி. 17:11; எபே. 2:2) இந்த ஆசைகளும் மனப்பான்மைகளும் மக்களின் ஆடை அலங்காரங்களில் பெரும்பாலும் வெளிப்படுகின்றன. அதனால் அவர்களுடைய தோற்றம் அடக்கமற்றதாக, காமத்தைத் தூண்டுவதாக, பகட்டாக, பரட்டையாக, ஒழுங்கற்றதாக இருக்கலாம். யெகோவாவின் ஊழியர்களாகிய நாம் இப்படிப்பட்ட கிறிஸ்தவமற்ற பாணிகளை தவிர்க்கிறோம்.

உடை உடுத்துவதிலும் சிகை அலங்காரம் செய்வதிலும் இந்த உலகை பின்பற்றுவதற்குப் பதிலாக, கிறிஸ்தவ சபையில் உள்ள ஆவிக்குரிய முதிர்ச்சி வாய்ந்த ஆண்கள் பெண்களுடைய சிறந்த முன்மாதிரியை பின்பற்றுவது எவ்வளவு சிறந்தது! ஒருநாள் சிறந்த பேச்சாளர்களாக பரிணமிக்கப் போகும் இளைஞர்கள் ஏற்கெனவே பொதுப் பேச்சு கொடுப்பதற்கு தகுதி பெற்றவர்களுடைய தோற்றத்தை கூர்ந்து கவனிக்கலாம். பல வருடங்களாக ஊழியத்தில் உண்மைத் தன்மையோடு கலந்துகொள்கிற ஆட்களுடைய முன்மாதிரியிலிருந்து அனைவரும் கற்றுக்கொள்ளலாம்.​—1 தீ. 4:12; 1 பே. 5:2, 3.

ஐந்தாவதாக, பொருத்தமானது எது என்பதை தீர்மானிக்கையில் ‘கிறிஸ்துவும் தமக்கே பிரியமாய் நடக்கவில்லை’ என்பதை மனதில் வைத்திருக்க வேண்டும். (ரோ. 15:3) கடவுளுடைய சித்தத்தை செய்வதே இயேசுவின் முக்கிய அக்கறையாக இருந்தது. சொந்த சௌகரியத்தை அல்ல, பிறருக்கு உதவி செய்வதையே இயேசு முதன்மையாக வைத்தார். குறிப்பிட்ட சில வகை உடை மற்றும் சிகையலங்கார பாணிகள் நாம் சேவை செய்யும் இடத்தில் வாழும் மக்களுக்கும் நமக்கும் இடையே ஒரு தடுப்புச்சுவராக இருந்தால் நாம் என்ன செய்ய வேண்டும்? கிறிஸ்து காண்பித்த தாழ்மையான குணத்தைப் பின்பற்றுவது ஞானமான தீர்மானம் எடுக்க நமக்கு உதவும். அப்போஸ்தலன் பவுல் பின்வரும் இந்த நியமத்தைக் கூறினார்: ‘நாங்கள் யாதொன்றிலும் இடறல் உண்டாக்குவதில்லை.’ (2 கொ. 6:3) அதனால் நாம் யாருக்கு சாட்சி கொடுக்கிறோமோ அவர்களுடைய கவனத்தை திசைதிருப்பும் சிகையலங்காரத்தையோ அல்லது ஆடைகளையோ துறந்துவிடலாம்.

நிற்கும் விதம். சிறந்த தோற்றம் என்பது தகுந்த விதத்தில் நிற்பதையும் உட்படுத்துகிறது. நம் ஒவ்வொருவருடைய தோரணையும் ஒரேமாதிரியாக இருப்பதில்லை என்பதும், குறிப்பிட்ட ஒரு பாணியை நாம் பின்பற்ற முயலுவதில்லை என்பதும் உண்மைதான். ஆனால் நேராக நிமிர்ந்து நிற்பது கண்ணியமான தோற்றத்தையும் நம்பிக்கையான மனநிலையையும் வெளிப்படுத்துகிறது என பைபிள் காட்டுகிறது. (லேவி. 26:13; லூக். 21:28) என்றபோதிலும், பல ஆண்டுகளாக குனிந்தே வேலை செய்ததால் அல்லது வயதாகிவிட்டதால் அல்லது சரீர பலவீனத்தால், ஒரு சகோதரனோ சகோதரியோ நேராக நிமிர்ந்து நிற்க முடியாமல் இருக்கலாம் அல்லது தாங்கலாக எதையாவது சார்ந்திருக்க வேண்டியதாக இருக்கலாம். ஆனால் எந்தப் பிரச்சினையும் இல்லாதவர்களோ, மற்றவர்களிடம் பேசும்போது ஓரளவுக்கு நேராக நிமிர்ந்து நிற்கும்படி பரிந்துரைக்கப்படுகிறார்கள், இல்லையென்றால் நீங்கள் அக்கறையற்ற அல்லது மன்னிப்பு கோரும் தோரணையில் பேசுவதுபோல் பிறருக்கு தோன்றும். அது போலவே, பேச்சாளருடைய பீடத்தில் எப்பொழுதாவது கைகளை ஊன்றுவதில் தவறில்லை என்றாலும், பீடத்தின் மீது சாயாமல் நிற்பதே பொதுவாக சபையாருடைய மனதில் நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்துகிறது.

சுத்தமான பொருட்கள். நம்முடைய தோற்றம் மட்டுமல்ல, வெளி ஊழியத்தில் பயன்படுத்தும் பொருட்களும் சுத்தமாக, நேர்த்தியாக இருக்க வேண்டும்.

உங்களுடைய பைபிளைப் பாருங்கள். பைபிள் பழையதானதுமே புதிய ஒன்றை வாங்குவதற்கு நம் எல்லாருக்கும் வசதி இருக்காது. என்றபோதிலும், எவ்வளவு காலத்திற்கு நம்முடைய பைபிளை பயன்படுத்தியிருந்தாலும், அது கவனமாக கையாளப்பட்டிருப்பதை காட்ட வேண்டும்.

ஊழியப் பையில் பொருட்களை எப்படி வேண்டுமானாலும் அடுக்கி வைக்கலாம், ஆனால் அது பார்ப்பதற்கு நேர்த்தியாக இருக்க வேண்டும். ஒரு பிரஸ்தாபி வீட்டுக்காரருக்கு ஒரு வசனத்தை வாசித்துக் காட்ட முயன்றபோது அல்லது ஒரு சகோதரர் சபையாருக்கு பேச்சு கொடுத்துக் கொண்டிருந்தபோது பைபிளிலிருந்து சில காகிதங்கள் விழுவதை நீங்கள் எப்பொழுதாவது கவனித்திருக்கிறீர்களா? அப்பொழுது உங்களுடைய கவனம் திசை திருப்பப்பட்டது அல்லவா? பைபிளில் காகிதங்களை வைப்பது கவனச் சிதறலுக்கு காரணமாக இருப்பதால், அவற்றை வேறொரு இடத்தில் வைப்பது நல்லது. சில கலாச்சாரங்களில், பைபிளையோ அல்லது மத சம்பந்தமான மற்ற பிரசுரங்களையோ தரையில் வைப்பது மிகவும் மதிப்புக்குறைவாக கருதப்படுகிறது என்பதையும் மனதில் வையுங்கள்.

சிறந்த தோற்றம் நமக்கு முக்கியமான ஒன்று. மற்றவர்கள் நம்மை எப்படி நோக்குகிறார்கள் என்பதை இது பாதிக்கிறது. ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக, “நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய உபதேசத்தை எல்லாவற்றிலும் அலங்கரி”ப்பதற்கு நாம் விரும்புவதால் அதற்கு தகுந்த கவனம் செலுத்துகிறோம்.​—தீத். 2:9.

உங்கள் தோற்றத்தை சரிபாருங்கள்

  • எல்லாம் சுத்தமாக இருக்கிறதா?

  • உங்களுடைய தோற்றம் அடக்கத்தையும் விவேகத்தையும் வெளிக்காட்டுகிறதா?

  • அனைத்தும் சீராக இருக்கிறதா?

  • உங்களுடைய சிகை நேர்த்தியாக இருக்கிறதா?

  • உங்களுடைய தோற்றம் உலக ஆசையை எவ்விதத்திலாவது வெளிப்படுத்துகிறதா?

  • உங்களுடைய தோற்றம் யாரையாவது இடறலடையச் செய்யலாம் என நினைப்பதற்கு நியாயமான காரணம் இருக்கிறதா?

பயிற்சி: தினமும் நீங்கள் எந்த நடவடிக்கையில் ஈடுபட திட்டமிட்டாலும், பக்கம் 132-ல் கொடுக்கப்பட்டுள்ள “உங்கள் தோற்றத்தை சரிபாருங்கள்” என்ற பட்டியலை வைத்து ஒரு வாரத்திற்கு உங்களையே நீங்கள் சரிபாருங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்