மாணாக்கர் பேச்சுக்களைத் தயாரித்தல்
பள்ளியில் நாம் பெறும் ஒவ்வொரு நியமிப்பும் முன்னேறுவதற்கு வாய்ப்பளிக்கிறது. அதை சிரத்தையுடன் தயாரியுங்கள்; அப்போது, நீங்கள் படிப்படியாக முன்னேறுவது உங்களுக்கும் தெரியும், மற்றவர்களுக்கும் தெரியவரும். (1 தீ. 4:15) உங்கள் திறமைகளை இன்னும் முழுமையாக வளர்த்துக்கொள்ள பள்ளி உதவும்.
சபையாருக்கு முன்பாக பேசுவதற்கு பயமாக இருக்கிறதா? பள்ளியில் பங்கெடுக்க ஆரம்பித்து சிறிது காலம் ஆகியிருந்தாலும் இவ்வாறு பயப்படுவது சகஜம்தான். இருந்தாலும் பயத்தை முடிந்தளவு தணிப்பதற்கு சில விஷயங்கள் உதவும். வீட்டில் அடிக்கடி சத்தமாக வாசித்துப் பழகுங்கள். சபைக் கூட்டங்களில் அடிக்கடி பதில் சொல்லுங்கள். நீங்கள் பிரஸ்தாபி என்றால் வெளி ஊழியத்தில் தவறாமல் கலந்துகொள்ளுங்கள். மற்றவர்கள் முன் பேசுவதற்கு இப்படித்தான் அனுபவம் பெறுவீர்கள். அதோடு பேச்சை முன்னதாகவே தயாரித்துவிடுங்கள், சத்தமாக பேசிப் பழகுங்கள். நண்பர்கள் முன்பாகத்தான் பேசுவீர்கள் என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். எந்தப் பேச்சை கொடுப்பதற்கு முன்பும் யெகோவாவிடம் ஜெபம் செய்யுங்கள். பரிசுத்த ஆவிக்காக கேட்கும் தம் ஊழியர்களுக்கு அவர் சந்தோஷத்தோடு அதை அளிக்கிறார்.—லூக். 11:13; பிலி. 4:6, 7.
அளவுக்கு அதிகமாக எதிர்பார்க்காமல் நியாயமாக இருங்கள். நல்ல பேச்சாளராகவும் திறம்பட்ட போதகராகவும் அனுபவம் பெற காலம் எடுக்கும். (மீ. 6:8, NW) பள்ளியில் புதிதாக சேர்ந்திருந்தால், எடுத்தவுடன் சிறந்த பேச்சு கொடுக்க ஆசைப்படாதீர்கள். மாறாக, ஒவ்வொரு தடவையும் ஒரு ஆலோசனைக் குறிப்புக்குக் கவனம் செலுத்துங்கள். இந்தப் புத்தகத்தில் அக்குறிப்பு கலந்தாலோசிக்கப்பட்டிருக்கும் பகுதியை படியுங்கள். முடிந்தால் அங்கு கொடுக்கப்பட்டிருக்கும் பயிற்சியைச் செய்து பாருங்கள். சபையில் பேச்சு கொடுப்பதற்கு முன்பு அந்த ஆலோசனைக் குறிப்பை கடைப்பிடிப்பது சம்பந்தமாக உங்களுக்கு அனுபவம் கிடைக்கும். முன்னேறவும் முடியும்.
வாசிக்கும் நியமிப்பை எப்படி தயாரிப்பது
வாசிக்கும் நியமிப்பை தயாரிப்பதற்கு, சம்பந்தப்பட்ட தகவலிலுள்ள வார்த்தைகளை வாசிக்க கற்றுக்கொள்வது மட்டுமே போதாது. அந்தத் தகவலை தெளிவாக புரிந்துகொள்ள முயலுங்கள். பேச்சு நியமிப்புத் தாள் கிடைத்தவுடனேயே, இந்தக் குறிக்கோளை மனதில் வைத்து வாசியுங்கள். ஒவ்வொரு வாக்கியத்திலுள்ள குறிப்பையும் ஒவ்வொரு பாராவிலுள்ள கருத்தையும் புரிந்துகொள்ள முயலுங்கள். அப்போதுதான் எண்ணங்களை திருத்தமாகவும் பொருத்தமான உணர்ச்சியோடும் வெளிப்படுத்த முடியும். தேவைப்பட்டால், பழக்கம் இல்லாத வார்த்தைகளின் சரியான உச்சரிப்பைத் தெரிந்துகொள்ள, மொழியை நன்கு அறிந்தவரின் உதவியை நாடுங்கள். தகவலை நன்கு அறிந்துகொள்ளுங்கள். சிறு பிள்ளைகள் இதைச் செய்வதற்கு பெற்றோர் உதவ வேண்டியிருக்கலாம்.
பைபிளின் ஒரு பகுதியை அல்லது காவற்கோபுர கட்டுரையை சபையில் வாசிக்க நியமிக்கப்பட்டிருக்கிறீர்களா? அந்தப் பகுதியை வாசித்துக் காட்டும்படி நன்கு வாசிக்க தெரிந்த ஒருவரிடம் நீங்கள் கேட்கலாம்; அவர்கள் வாசிக்கையில் உச்சரிப்புகளையும் (pronunciation), சேர்த்து வாசிக்கப்படும் சொற்களையும் (phrasing), அழுத்தங்களையும் (emphasis), குரல் வேறுபாடுகளையும் (modulation) கவனிப்பது மிகுந்த பயனளிக்கும். பிறகு இந்த பண்புகளை உங்கள் வாசிப்பில் கடைப்பிடிக்க முயலுங்கள்.
பேச்சை தயாரிக்க ஆரம்பிக்கையில், உங்களுக்கு நியமிக்கப்பட்டிருக்கும் பேச்சுப் பண்பின் பேரிலான பாடத்தை கவனமாக படிக்க தவறாதீர்கள். முடிந்தால் நியமிக்கப்பட்ட பகுதியை பலமுறை சத்தமாக வாசித்து பழகிய பிறகு அப்பாடத்தை மறுபார்வை செய்யுங்கள். அங்கு கொடுக்கப்பட்டிருக்கும் ஆலோசனைகளை முடிந்தளவு முழுமையாக கடைப்பிடிக்க முயற்சி செய்யுங்கள்.
இந்தப் பயிற்சி உங்கள் ஊழியத்திற்கு கைகொடுக்கும். வெளி ஊழியத்தில் மற்றவர்களிடம் வாசித்துக் காட்டுவதற்கு அநேக சந்தர்ப்பங்கள் உள்ளன. மக்களின் வாழ்க்கையை மாற்றும் வல்லமை கடவுளுடைய வார்த்தைக்கு இருப்பதால், அதை நல்ல விதமாக வாசிப்பது முக்கியம். (எபி. 4:12) ஓரிரு பேச்சு கொடுத்தாலே போதும், வாசிப்பதில் கரைகண்டுவிடலாம் என நினைக்காதீர்கள். பல வருட அனுபவம் பெற்ற ஒரு கிறிஸ்தவ மூப்பரிடம் அப்போஸ்தலனாகிய பவுல் பின்வருமாறு எழுதினார்: “பொது வாசிப்பை தொடர்ந்து சிரத்தையோடு செய்.”—1 தீ. 4:13, NW.
பேச்சுப் பொருளும் பேச்சு அமைப்பும்
பேச்சு அமைப்பு (setting) உட்பட்ட ஒரு நியமிப்பை பள்ளியில் பெற்றால் எவ்வாறு தயாரிப்பது?
மூன்று முக்கிய விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்: (1) உங்களுக்கு நியமிக்கப்பட்டிருக்கும் பேச்சுப் பொருள், (2) உங்கள் பேச்சு அமைப்பும் யாரிடம் பேசப் போகிறீர்கள் என்பதும், (3) உங்களுக்கு நியமிக்கப்பட்டிருக்கும் பேச்சு ஆலோசனைக் குறிப்பு.
நியமிக்கப்பட்டிருக்கும் பேச்சுப் பொருளின் பேரில் நீங்கள் தகவலை திரட்ட வேண்டும். ஆனால் அதில் மும்முரமாக மூழ்கிவிடுவதற்கு முன்பு, உங்கள் பேச்சு அமைப்பையும் யாரிடம் பேசப் போகிறீர்கள் என்பதையும் தீர யோசிக்க வேண்டும். ஏனென்றால் என்ன தகவலை, எப்படி கலந்தாலோசிக்கப் போகிறீர்கள் என்பது இவற்றையே சார்ந்திருக்கும். எப்படிப்பட்ட பேச்சு அமைப்பை பயன்படுத்தப் போகிறீர்கள்? அறிமுகமானவரிடம் நற்செய்தியை எப்படி பிரசங்கிப்பது என்பதை நடித்துக் காட்டப் போகிறீர்களா? அல்லது முன்பின் அறிமுகமில்லாதவரிடம் எப்படி பேசலாம் என காட்டப் போகிறீர்களா? நீங்கள் யாரிடம் பேசப் போகிறீர்களோ அவர் உங்களைவிட இளையவரா, மூத்தவரா? நீங்கள் பேச நினைக்கும் விஷயத்தில் அவருக்கு ஆர்வம் இருக்குமா? அதைப் பற்றி ஏற்கெனவே எந்தளவுக்கு அவருக்கு தெரியும்? உங்கள் பேச்சினால் என்ன குறிக்கோளை அடைய விரும்புகிறீர்கள்? இந்தக் கேள்விகளுக்கான பதில்கள், சிறந்த பேச்சைத் தயாரிப்பதற்கு தேவைப்படும் முக்கியமான வழிகாட்டுக் குறிப்புகளை அளிக்கும்.
நியமிக்கப்பட்ட பேச்சுப் பொருளின் பேரில் தகவல்களை எங்கிருந்து திரட்டுவீர்கள்? “ஆராய்ச்சி செய்வது எப்படி?” என்பதை இப்புத்தகத்தில் 33-38 பக்கங்களில் காண்பீர்கள். அதை வாசியுங்கள். பின்பு உங்களிடமுள்ள ஆராய்ச்சி சாதனங்களை பயன்படுத்துங்கள். கொஞ்ச நேரத்திற்குள் தேவைக்கு அதிகமாகவே தகவல் கிடைத்துவிடுவது சகஜம். என்னென்ன தகவல்கள் இருக்கின்றன என்பதை தெரிந்துகொள்ள போதுமானளவு வாசியுங்கள். இருந்தாலும், அவ்வாறு வாசிக்கும்போது நீங்கள் பயன்படுத்தப்போகும் பேச்சு அமைப்பையும் பேசப்போகும் நபரையும் மனதில் வையுங்கள். பொருத்தமான குறிப்புகளை கோடிட்டுக் கொள்ளுங்கள்.
முடிவாக குறிப்புகளை தேர்ந்தெடுத்து வரிசைப்படுத்துவதற்கு முன், உங்களுக்கு நியமிக்கப்பட்டிருக்கும் பேச்சு ஆலோசனைக் குறிப்பை பற்றிய தகவலை வாசியுங்கள். அந்தக் குறிப்பை கடைப்பிடிப்பது உங்கள் பேச்சு நியமிப்பின் முக்கிய குறிக்கோள்களில் ஒன்று.
உரிய நேரம் முடிந்தவுடன் மணி அடிக்கப்படும். ஆகவே அந்த நேரத்திற்குள் பேச்சை முடித்தால்தான், முடிவுரையை சொன்ன திருப்தி கிடைக்கும். இருந்தாலும் வெளி ஊழியத்தில் நேரம் ஒரு பெரிய பிரச்சினையல்ல. ஆகவே அதற்குத் தயாரிக்கும்போது, நேரத்தை மனதில் வைத்துக்கொள்வது நல்லது என்றாலும் திறம்பட்ட விதத்தில் கற்பிப்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பதே சிறந்தது.
பேச்சு அமைப்புகள் பற்றி. பக்கம் 82-ல் உள்ள ஆலோசனைகளை ஆராய்ந்து பாருங்கள். உங்கள் ஊழியத்திற்கு ஏற்ற நடைமுறையான ஒரு குறிப்பை தேர்ந்தெடுங்கள். நியமிக்கப்பட்ட தகவலை எதார்த்தமாக பயன்படுத்த உதவும் குறிப்பாகவும் அது இருக்க வேண்டும். நீங்கள் ஏற்கெனவே பள்ளியில் மாணாக்கராக அனுபவம் பெற்றிருக்கிறீர்கள் என்றால், ஊழியத்திற்கு தேவைப்படும் கூடுதலான திறமைகளைப் பெற்றுக்கொள்ளவும் வளர்த்துக்கொள்ளவும் இதை ஒரு வாய்ப்பாக கருதுங்கள்.
தேவராஜ்ய ஊழியப் பள்ளியின் கண்காணியே பேச்சு அமைப்பை நியமிக்கும்போது, அந்த சவாலை ஏற்றுக்கொள்ளுங்கள். பெரும்பாலான பேச்சு அமைப்புகள் சாட்சிகொடுப்பது சம்பந்தப்பட்டவையே. அந்த பேச்சு அமைப்புகளில் விவரிக்கப்பட்டிருக்கும் சூழ்நிலைகளில் நீங்கள் நிஜத்தில் சாட்சி கொடுத்ததே இல்லையென்றால், அதில் அனுபவம் பெற்ற பிரஸ்தாபிகளிடம் பேசி தெரிந்துகொள்ளுங்கள். முடிந்தால், பள்ளியில் பயன்படுத்தவிருக்கும் அமைப்புக்கு ஒப்பான நிஜ சூழ்நிலையில் ஒருவரோடு பேச்சிற்குரிய தகவலை கலந்து பேச முயலுங்கள். உங்கள் பயிற்சியின் முக்கிய குறிக்கோளை அடைய இது உங்களுக்கு உதவும்.
சபையாரைப் பார்த்து பேசும் சந்தர்ப்பத்தில்
நீங்கள் ஒரு ஆணாக இருந்தால், சபையாரைப் பார்த்து பேச்சு கொடுக்க வேண்டியிருக்கலாம். சுருக்கமான இந்தப் பேச்சுக்களைத் தயாரிக்கும்போது மனதில் வைக்க வேண்டிய அடிப்படை குறிப்புகள், இருவர் பேசி நடிக்கும் பேச்சுக்களுக்கென மேலே சிபாரிசு செய்யப்பட்ட அதே குறிப்புகள்தான். யாரிடம், எப்படி பேசுகிறீர்கள் என்பதில் மட்டுமே வித்தியாசம் உண்டு.
சபையிலுள்ள அனைவருமே நன்மை பெறும் விதத்தில் பேச்சைத் தயாரிப்பது எப்போதுமே நல்லது. கூடிவந்திருக்கும் பெரும்பாலோருக்கு ஏற்கெனவே அடிப்படை பைபிள் சத்தியங்கள் தெரியும். உங்களுக்கு நியமிக்கப்பட்டிருக்கும் பேச்சுப் பொருளை அவர்கள் நன்கு அறிந்திருக்கலாம். அதை எந்தளவு அறிந்திருக்கிறார்கள் என்பதை கருத்தில் கொள்ளுங்கள். உங்கள் பேச்சின் மூலம் ஏதாவது ஒரு விதத்தில் அவர்களுக்கு பயனளிக்க முயலுங்கள். உங்களையே இப்படி கேட்டுக்கொள்ளுங்கள்: ‘யெகோவாவை நானும் சபையாரும் இன்னும் அதிகம் போற்றுவதற்கு தூண்டும் விதத்தில் நான் எப்படி பேச்சை தயாரிக்கலாம்? கடவுளுடைய சித்தத்தை புரிந்துகொள்ள உதவும் என்ன தகவல்கள் பேச்சில் இருக்கின்றன? மாம்ச இச்சைகளில் ஊறிப்போயிருக்கும் இந்த உலகத்தில் ஞானமுள்ள தீர்மானங்களை எடுக்க எப்படி இந்தத் தகவல் எங்களுக்கு உதவும்?’ (எபே. 2:3) இந்தக் கேள்விகளுக்கு திருப்தியான பதில் வேண்டுமானால், ஆராய்ச்சி செய்வது அவசியம். பைபிளைப் பயன்படுத்தும்போது வசனங்களை வாசிப்பதோடு நிறுத்திக் கொள்ளாதீர்கள். அவற்றை நியாயங்காட்டி விளக்குங்கள், அவற்றின் அடிப்படையில் நாம் எவ்வாறு முடிவுகளை எடுக்கலாம் என்பதை காட்டுங்கள். (அப். 17:2, 3) அளவுக்கு அதிகமான விஷயங்களை சொல்லாதீர்கள். ஞாபகத்தில் வைக்க சுலபமாக இருக்கும் விதத்தில் தகவலை அளியுங்கள்.
என்ன தகவலை சொல்வீர்கள் என்பது மட்டுமல்ல அதை எப்படி சொல்வீர்கள் என்பதையும் முன்கூட்டியே தயாரிக்க வேண்டும். இதன் அவசியத்தை குறைவாக எடைபோட்டு விடாதீர்கள். உங்கள் பேச்சை போதியளவு சத்தமாக பேசிப் பழகுங்கள். வெவ்வேறு பேச்சுப் பண்புகளின் பேரிலுள்ள ஆலோசனைகளை படித்து கடைப்பிடிக்க நீங்கள் எடுக்கும் முயற்சி, உங்கள் முன்னேற்றத்திற்கு பெரிதும் கைகொடுக்கும். நீங்கள் அனுபவமில்லாதவராக இருந்தாலும்சரி அனுபவமுள்ளவராக இருந்தாலும்சரி நன்கு தயாரியுங்கள்; அப்போதுதான் உங்கள் பேச்சிற்குப் பொருத்தமான உணர்ச்சியோடும் நம்பிக்கையோடும் பேச முடியும். பள்ளியில் ஒவ்வொரு முறை பேச்சு கொடுக்கும்போதும், யெகோவா கொடுத்த பரிசாகிய பேச்சுத் திறனை அவரை மகிமைப்படுத்தும் விதத்தில் பயன்படுத்த வேண்டுமென்ற குறிக்கோளை மனதில் வையுங்கள்.—சங். 150:6.