படிப்பு 30
ஒரு பேச்சைக் கோர்வையாக விரிவாக்குதல்
1 கோர்வையான ஒரு பேச்சைப் பின்பற்றுவது கேட்போருக்கு எளிதாக இருக்கிறது. மறுபக்கத்தில், கோர்வை இல்லையென்றால், அவர்களுடைய கவனம் விரைவில் இழக்கப்பட்டுவிடும். தெளிவாகவே, இது நீங்கள் ஒரு பேச்சைத் தயாரிக்கும்போது முக்கியமான கவனத்துக்குத் தகுதியுள்ளதாக இருக்கும் ஒரு விஷயமாகும்; ஆகவே “இணைப்புகளின் மூலம் கோர்வை” என்பது உங்களுடைய கவனமுள்ள சிந்தனைக்குத் தகுதியுள்ளதாக பேச்சு ஆலோசனைத் தாளில் சேர்க்கப்பட்டிருக்கிறது.
2 கோர்வை என்பது உட்புறத்தே சேர்ந்து ஒட்டிக்கொண்டிருத்தல், உறுதியாக பற்றிக்கொண்டிருக்கும் பாகங்களைக் கூட்டி இணைத்து தர்க்கரீதியில் முழுமைபெறச் செய்தல் என்று பொருள்படும். சில சமயங்களில் பாகங்களை வெறுமனே தர்க்கரீதியான வரிசையில் ஒழுங்குபடுத்துவதன் மூலமாக பெரிய அளவில் இதை சாதிக்க முடிகிறது. ஆனால் பெரும்பாலான பேச்சுக்களில், பொருளை வெறுமனே எளிய முறையில் வகைப்படுத்துவதற்கும் அப்பால் இணைக்கப்படவேண்டிய பாகங்கள் இருக்கின்றன. இப்படிப்பட்ட சமயங்களில் கோர்வை என்பது ஒரு குறிப்பிலிருந்து மற்றொன்றுக்கு ஓர் இணைப்பைத் தேவைப்படுத்துகிறது. முன்சொன்னவற்றோடு புதிய கருத்துக்களுக்கு இருக்கும் உறவைக் காண்பிப்பதற்கு வார்த்தைகள் அல்லது சொற்றொடர்கள் பயன்படுத்தப்படுகின்றன, இவ்விதமாக இவை காலம் அல்லது நோக்குநிலையில் மாற்றம் காரணமாக ஏற்படும் இடைவெளிகளை நிரப்புகின்றன. இதுவே இணைப்புகளின் மூலம் கோர்வையாகும்.
3 உதாரணமாக, உங்கள் பேச்சின் முன்னுரை, பொருளுரை மற்றும் முடிவுரை ஆகியவை பேச்சின் வெவ்வேறு பாகங்களாக, ஒன்றிலிருந்து ஒன்று முற்றிலும் வேறானதாகவும், ஆனாலும் அவை இடையிணைப்புகளின் மூலமாக உறுதியாக ஒன்றுசேர்க்கப்பட வேண்டியவையாகவும் இருக்கின்றன. கூடுதலாக, பிரதான குறிப்புகள் விசேஷமாக எண்ணத்தின் உட்பொருளோடு மிகவும் நேரடியாக சம்பந்தப்பட்டில்லையென்றால் அவை ஒரு பேச்சில் ஒன்றாக பிணைக்கப்பட்டிருக்க வேண்டும். அல்லது சில சமயங்களில் வாக்கியங்களுக்கு அல்லது பாராக்களுக்கே இணைப்புகள் தேவையாக இருக்கின்றன.
4 இடையிணைப்புக் கூற்றுகளின் உபயோகம். இணைப்பு வார்த்தைகள் அல்லது சொற்றொடர்களின் சரியான உபயோகத்தின் மூலமாக அடிக்கடி கருத்துக்களிடையே ஒரு பாலத்தைக் கட்டமுடியும். இவற்றில் சில: மேலும், கூடுதலாக, இன்னுமதிகமாக, இன்னும், அவ்வாறே, அதேவிதமாகவே, ஆகவே, இவ்விதமாக, இந்தக் காரணங்களுக்காக, எனவே, முன்னால் சொல்லப்பட்டதை முன்னிட்டு, ஆக, அப்படியானால், அதற்கிணங்க, இருப்பினும், மறுபக்கத்தில், மாறாக, நேர்மாறாக, முற்காலங்களில், சென்ற காலங்களில், போன்றவை. இப்படிப்பட்ட வார்த்தைகள் பலன்தரத்தக்கவிதமாக வாக்கியங்களையும் பாராக்களையும் இணைக்கின்றன.
5 இருப்பினும், இந்தப் பேச்சுப் பண்பு அநேகமாக இப்படிப்பட்ட எளிய இணைப்புகளைக்காட்டிலும் அதிகத்தைக் கேட்கிறது. ஒரே ஒரு வார்த்தை அல்லது சொற்றொடர் மட்டுமே போதுமானதாக இல்லாதபோது, கேட்போரை இடைவெளிக்கு அப்பால் அடுத்தப் பக்கத்துக்கு முழுமையாக வழிநடத்திச் செல்லக்கூடிய ஓர் இடையிணைப்பு தேவைப்படுகிறது. இது ஒரு முழு வாக்கியமாக அல்லது அதிக முழுமையாக வெளிப்படுத்தப்படும் இடையிணைப்பு எண்ணத்தின் சேர்ப்பாகவும் இருக்கலாம்.
6 இப்படிப்பட்ட இடைவெளிகளை இணைப்பதற்கு ஒரு வழி, முன்சொல்லப்பட்ட குறிப்பின் பொருத்தத்தை பின்தொடருவதனுடைய முன்னுரையின் பாகமாக ஆக்க முயற்சிப்பதாகும். அடிக்கடி நம்முடைய வீட்டுக்கு வீடு அளிப்புகளில் இது செய்யப்படுகிறது.
7 மேலுமாக, தொடர்ச்சியாக வரும் குறிப்புகள் மாத்திரமல்ல, ஆனால் சில சமயங்களில் பேச்சில் அதிக பரவலாக வெவ்வேறு இடங்களிலுள்ள குறிப்புகளும்கூட ஒன்றாகச் சேர்த்து இணைக்கப்பட வேண்டும். உதாரணமாக, பேச்சின் முடிவுரை முன்னுரையோடு இணைக்கப்பட வேண்டும். ஒருவேளை பேச்சின் ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு கருத்து அல்லது உதாரணம் உந்துவிப்பதற்கோ அல்லது பேச்சின் நோக்கத்துக்கு உதாரணம் அல்லது கருத்தினுடையத் தொடர்பை மேலுமாக காண்பிக்கும் வகையிலோ அது முடிவுரையில் பொருத்திக் காண்பிக்கப்படலாம். உதாரணம் அல்லது கருத்தின் ஏதோவொரு அம்சத்தை இவ்விதமாக மறுபடியும் அறிமுகப்படுத்துவது இணைப்பாக சேவித்து கோர்வைக்கு உதவுகிறது.
8 உங்கள் கேட்போருக்குப் போதுமான கோர்வை. இணைப்புகள் எத்தனை விரிவாக இருக்க வேண்டும் என்பது ஓரளவு உங்கள் கேட்போரால் தீர்மானிக்கப்படும். ஒருசில கேட்போருக்கு இடையிணைப்புகள் தேவையில்லை என்பது கிடையாது. மாறாக, ஒன்றோடொன்று சம்பந்தப்படுத்தப்பட போகிற கருத்துக்களில் பரிச்சயமில்லாதவர்களாக இருப்பதால் சில கேட்போருக்கு அதிகம் தேவைப்படுகிறது. உதாரணமாக யெகோவாவின் சாட்சிகள், தற்போதைய பொல்லாத காரிய ஒழுங்குமுறையின் முடிவைப் பற்றி பேசும் ஒரு வேதவசனத்தை ராஜ்யத்தைப் பற்றி பேசும் வசனத்தோடு உடனடியாக சம்பந்தப்படுத்திடுவர். ஆனால் ராஜ்யத்தை மனதின் ஒரு நிலை அல்லது உங்கள் இருதயத்திலிருக்கும் ஒன்று என்பதாக கருதிக்கொண்டிருக்கும் ஒருவருக்கு இந்தக் கருத்துத்தொடர்பு உடனடியாக கிரகித்துக்கொள்ளப்படமாட்டாது, ஆகவே இணைப்பைத் தெளிவுபடுத்த ஏதேனும் இடையிணைப்பு கருத்து அறிமுகப்படுத்தப்பட வேண்டும். நம்முடைய வீட்டுக்கு வீடு வேலை இப்படிப்பட்ட சரிப்படுத்தல்களை இடைவிடாமல் தேவைப்படுத்துகிறது.
**************
9 இதோடு நெருங்கிய தொடர்புடைய பேச்சு அம்சம், “தர்க்கரீதியில், கோர்வையாக விரிவாக்குதல்,” என்பதாகும். இதுவும்கூட ஆலோசனைத் தாளில் சேர்க்கப்பட்டிருக்கிறது. இணங்கவைக்கும் பேச்சுக்கு இது அடிப்படையான ஒரு தேவையாகும்.
10 தர்க்கம் என்பது என்ன? நம்முடைய நோக்கத்துக்காக தர்க்கம் என்பது சரியான சிந்தனை அல்லது நியாயமான விவாதத்தின் விஞ்ஞானம் என்பதாக நாம் சொல்லலாம். அது புரிந்துகொள்ளுதலை கொடுக்கிறது, ஏனென்றால் ஒரு தலைப்புப் பொருள் அதனுடைய சம்பந்தப்பட்ட பாகங்களில் விளக்கப்படும் வழிமுறையாக இது இருக்கிறது. தர்க்கம் என்பது அவை ஏன் ஒன்றாகச் செயல்பட்டு தொடர்புடையதாய் இருக்கின்றன என்பதைக் காண்பிக்கிறது. அதனுடைய விவாதமானது எல்லா பாகங்களும் ஒரு கிரமமாக ஒன்றுபட்டிருக்கும் வகையில் படிப்படியாக பின்தொடர்ந்து முன்னேறுமேயானால் விரிவாக்கம் கோர்வையாக இருக்கிறது. ஒருசில சாத்தியங்களைக் குறிப்பிட, தர்க்கரீதியில் விரிவாக்கம் முக்கியத்துவத்தின் வரிசையில், நிகழ்ச்சிகளின் காலக்கிரம அட்டவணையின் வரிசையில் அல்லது பிரச்சினையிலிருந்து பரிகாரத்துக்கு செல்வதாக இருக்கலாம்.
11 விவாதத்தை விரிவாக்குவதில் பின்பற்றக்கூடிய இரண்டு அடிப்படை முறைகள் இருக்கின்றன. (1) கேட்போர் முன்னால் உண்மையை நேரடியாக வைத்துவிட்டு, நிரூபிக்க உண்மைகளைக் காட்டுவது. (2) பிழையான நிலையைத் தாக்குதல் செய்யுங்கள், இது இடித்துத் தள்ளப்பட்டால் உண்மை தானாகவே விளங்கும். அப்படியென்றால் கலந்தாலோசிப்பின்கீழ் இருக்கும் உண்மைகளைச் சரியாகப் பொருத்துவதுதானே மீதமிருக்கிறது.
12 எந்த இரண்டு பேச்சாளர்களும் அப்படியே ஒரேமாதிரியாக விவாதிக்கமாட்டார்கள். ஒரே தலைப்புப் பொருளுக்கு வித்தியாசமான அணுகுமுறைகளின் ஒரு பூரண முன்மாதிரி நான்கு சுவிசேஷ எழுத்துக்களில் காணப்படுகிறது. இயேசுவின் நான்கு சீஷர்கள் அவருடைய ஊழியத்தைப் பற்றி தனித்தனியாக பதிவுகளை எழுதினார்கள். ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருக்கிறது, என்றாலும் எல்லாருமே நியாயமான, தர்க்கரீதியான அளிப்புகளை எழுதினார்கள். ஒவ்வொருவரும் குறிப்பிட்ட ஒரு நோக்கத்தை நிறைவேற்ற பொருளை விரிவாக்கினார்கள், ஒவ்வொருவரும் வெற்றியடைந்தார்கள்.
13 இதன் சம்பந்தமாக ஆலோசகர் உங்கள் நோக்கத்தை கண்டுபிடித்து, நோக்கம் நிறைவேறியதா இல்லையா என்பதன் அடிப்படையில் உங்கள் எண்ணம் தொடரும் வரிசையை மதிப்பிட முயற்சிசெய்வார். குறிப்பாக உங்கள் பொருளை அறிமுகம் செய்து பின்னர் அதை முடிவுரையில் பொருத்தும் விதத்தில், உங்கள் நோக்கத்தை தெளிவாக்குவதன் மூலம் நீங்கள் அவருக்கும் உங்கள் கேட்போருக்கும் உதவிசெய்யலாம்.
14 நியாயமான வரிசையில் பொருள். முதலாவது, உங்கள் பொருளை அல்லது உங்கள் குறிப்புத்தாளை ஒழுங்குபடுத்துகையில், ஏதோவொரு முன்னேற்பாடான அடிப்படையும் போடாமல் எந்த ஒரு கூற்றையும் அல்லது கருத்தையும் உள்ளே கொண்டுவராதிருப்பதை நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள். உங்களை நீங்களே பின்வரும் இந்தக் கேள்விகளைக் கேட்டுக்கொள்ளுங்கள்: அடுத்து எதைச் சொல்வது அதிக இயற்கையான ஒரு காரியம்? இதுவரையாக வந்தபிறகு, கேட்கப்படக்கூடிய அதிக தர்க்கரீதியான கேள்வி என்னவாக இருக்கும்? இந்தக் கேள்வியை அடையாளங்கண்டுகொண்ட பிறகு, பின்னர் வெறுமனே அதற்கு பதிலளியுங்கள். “நீங்கள் ஏற்கெனவே சொல்லியிருக்கும் காரியத்திலிருந்து இந்தக் குறிப்பு இப்படியாக இருப்பதை என்னால் காணமுடிகிறது,” என்பதாக உங்கள் கேட்போர் எப்பொழுதும் சொல்லக்கூடியவர்களாக இருக்க வேண்டும். அஸ்திவாரம் எதுவும் போடப்படாவிட்டால், அப்பொழுது குறிப்பு பொதுவாக தர்க்கரீதியான வரிசையில் இல்லாதிருப்பதாக கருதப்படும். ஏதோவொன்று குறைவுபடுகிறது.
15 உங்கள் பொருளை வகைப்படுத்துவதில் இயற்கையாகவே ஒன்றையொன்று சார்ந்திருக்கும் அந்தப் பகுதிகளை நீங்கள் ஆலோசித்துப் பார்க்க வேண்டும். இப்படிப்பட்ட பகுதிகளின் தொடர்பைக் காண நீங்கள் முயற்சிசெய்து பின்னர் அதற்கேற்ப வகைப்படுத்த வேண்டும். இது ஏறக்குறைய ஒரு வீட்டைக் கட்டுவது போலிருக்கிறது. கட்டுகிற எவரும் முதலில் அஸ்திவாரத்தைப் போடாமல் சுவர்களை எழுப்ப முற்படமாட்டார். அல்லது சுவர்களைப் பூசி முடித்த பின்பு நீர்வசதிக்காக குழாய்களை அமைக்கமாட்டார். ஒரு பேச்சை படிப்படியாக உருவாக்கும்போதும் இப்படியே இருக்க வேண்டும். திடமான, கச்சிதமான, முழுமையான ஒன்றை உருவாக்குவதில் ஒவ்வொரு பாகமும் தன் பங்கை அளிக்க வேண்டும், ஒவ்வொன்றும் கிரமமாகவும், ஒவ்வொன்றும் அது தொடருகிற பகுதிக்கு தன் பங்கைக்கூட்டி, வரவிருப்பவற்றுக்கு வழியைத் தயார் செய்யவும் வேண்டும். உங்கள் பேச்சில் நீங்கள் சமர்ப்பிக்கும் உண்மைகளின் வரிசைக்கு எப்போதும் ஒரு காரணத்தைக் கொண்டிருக்க வேண்டும்.
16 பொருத்தமான பொருளை மாத்திரமே பயன்படுத்துதல். நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு குறிப்பும் பேச்சோடு நெருக்கமாக இணைக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால், இது தொடர்பற்றதாக தோன்றும், இது பொருந்தாது; இது பொருத்தமற்ற பொருளாக இருக்கும், அதாவது, சிந்திக்கப்படும் விஷயத்தோடு சம்பந்தப்படாத அல்லது தொடர்பில்லாததாக இருக்கும்.
17 இருப்பினும், சம்பந்தப்படாததாக வெளியே தோன்றினாலும் அது வெற்றிகரமாக இணைக்கப்பட்டிருக்குமேயானால் அதை உங்கள் ஆலோசகர் மனம்போன போக்கில் பொருத்தமற்றது என்பதாக அழைக்கமாட்டார். குறிப்பிட்ட ஒரு நோக்கத்துக்காக இந்தக் குறிப்பை நீங்கள் பயன்படுத்த தெரிந்துகொண்டிருக்கலாம், இது தலைப்புக்குப் பொருத்தமாக இருந்து, பேச்சின் ஒரு பாகமாக்கப்பட்டு, தர்க்கரீதியான வரிசையில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தால் உங்கள் ஆலோசகர் அதை ஏற்றுக்கொள்வார்.
18 உங்கள் பேச்சைத் தயாரிக்கையில் பொருத்தமற்ற பொருள் எவ்விதமாக வேகமாகவும் சுலபமாகவும் அடையாளங்கண்டுகொள்ளப்பட முடியும்? இங்குதானே விஷய சம்பந்தமான ஒரு குறிப்புத்தாள் பலன்தரத்தக்கவகையில் உதவியாக இருக்கிறது. இது உங்கள் தகவலை வகைப்படுத்த உதவிசெய்கிறது. அட்டைகள் அல்லது அதுபோன்ற ஏதோவொன்றை பயன்படுத்த முயற்சிசெய்துபாருங்கள், சம்பந்தப்பட்ட எல்லா பொருளையும் ஒவ்வொரு அட்டையில் கொண்டிருங்கள். இப்பொழுது, சாதாரணமாக அவை எந்த வரிசைமுறையில் சமர்ப்பிக்கப்படும் என்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதைப் பொருத்து இந்த அட்டைகளை மறுபடியும் வகைப்படுத்துங்கள். தலைப்புப் பொருளுக்கு என்ன அணுகுமுறை பயன்படுத்தப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதற்கு மட்டுமல்லாமல், தலைப்புக்கு பொருத்தமற்றதாக இருக்கும் எதையும் அடையாளங்கண்டுகொள்ளவும்கூட இது உதவிசெய்யும். ஒரு வரிசையில் பொருந்தாத குறிப்புகள் விவாதத்துக்கு தேவையாக இருக்குமானால் அவ்விதமாக இருக்கும்பொருட்டு சரிப்படுத்தப்பட வேண்டும். ஆனால், அவை தேவையாக இல்லாவிட்டால், தலைப்புக்குப் பொருத்தமற்றதென நீக்கப்பட வேண்டும்.
19 கேட்போரையும் நோக்கத்தையும் மனதில்கொண்டு தயாரிக்கப்படும் உங்கள் பேச்சின் தலைப்பு ஒரு குறிப்பின் பொருத்தத்தைத் தீர்மானிப்பதை கட்டுப்படுத்துகிறது என்பதை இதிலிருந்து விரைவில் காணமுடியும். ஒருசில சந்தர்ப்பங்களில் உங்கள் கேட்போரின் பின்னணியைப் பொருத்து, உங்கள் நோக்கத்தை நிறைவேற்ற ஒரு குறிப்பு அத்தியாவசியமாக இருக்கலாம். அதேசமயத்தில் வித்தியாசமான கேட்போருக்கு அல்லது வித்தியாசமான ஒரு தலைப்பில் அது அவசியமற்றதாக அல்லது முற்றிலும் பொருத்தமற்றதாக இருக்கலாம்.
20 இதைக் கருதுகையில், உங்கள் நியமிப்பில் பொருளை விரிவாக்குதல் எத்தனை முழுமையாக இருக்க வேண்டும்? உங்கள் நியமிப்பில் உள்ளடங்கிய ஒவ்வொரு குறிப்பையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக தர்க்கரீதியில் கோர்வையாக விரிவாக்குதல் தியாகம் செய்யப்படக்கூடாது. ஆனால் மாணாக்கர் பேச்சுக்கள் பள்ளி ஏற்பாட்டின் அறிவூட்டும் பாகமாக இருப்பதன் காரணமாக நடைமுறைக்கு ஏற்ப அதிகத்தை சேர்த்துக்கொள்வதை அனுமதிக்கும் ஒரு பேச்சு அமைப்பைத் தேர்ந்தெடுப்பது மிகச் சிறந்ததாக இருக்கும். இருந்தபோதிலும், உங்கள் தலைப்பை விரிவாக்குவதற்கு முக்கிய குறிப்புகளாக இருக்கும் அந்தக் கருத்துக்கள் சேர்க்கப்படாமல் விடப்படமுடியாது.
21 முக்கிய கருத்துக்கள் விட்டுவிடப்படாதிருத்தல். ஒரு கருத்து முக்கிய கருத்தா இல்லையா என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்? அதில்லாமல் உங்கள் பேச்சின் நோக்கத்தை உங்களால் நிறைவேற்ற முடியவில்லையென்றால் அது அத்தியாவசியமாகும். இது தர்க்கரீதியில் கோர்வையாக விரிவாக்குவதில் விசேஷமாக உண்மையாய் இருக்கிறது. உதாரணமாக, ஒப்பந்தக்காரர் ஒருவர் உங்களுக்கு இரண்டு மாடி வீட்டைக் கட்டிவிட்டு படிக்கட்டை விட்டுவிடுவாரேயானால் நீங்கள் எப்படி சமாளிக்க முடியும்? அப்படியே, ஒருசில அத்தியாவசிய குறிப்புகள் விடப்பட்ட பேச்சு, விரிவாக்கத்தில் தர்க்கரீதியாகவும் கோர்வையாகவும் இருக்கமுடியாது. ஏதோவொன்று குறைவுபடுகிறது, கேட்போரில் சிலரை இழந்துபோவோம். ஆனால் ஒரு பேச்சு கோர்வையாகவும் தர்க்கரீதியிலும் விரிவாக்கப்பட்டிருந்தால் இது சம்பவிப்பதில்லை.
[கேள்விகள்]
1-3. ஒரு பேச்சில் கோர்வை என்ன பங்கை வகிக்கிறது, இது எவ்வாறு முயன்று அடையப்பெறலாம்?
4-7. இடையிணைப்பு கூற்றுகளின் உபயோகம் என்பதன் பொருள் என்ன?
8. கோர்வைக்காக இடையிணைப்புகளின் உபயோகத்தை கேட்போர் எவ்விதமாக பாதிக்கின்றனர்?
9-13. தர்க்கரீதியில் விரிவாக்குதல் என்பது என்ன, ஒரு விவாதத்தை விரிவாக்குவதற்கு என்ன இரண்டு அடிப்படை வழிகள் இருக்கின்றன?
14, 15. நாம் பொருளை நியாயமான வரிசையில் கொண்டிருப்பது ஏன் அவ்வளவு முக்கியம் என்பதைக் காட்டவும்.
16-20. தன்னுடைய பேச்சில் பொருத்தமான பொருளை மாத்திரமே கொண்டிருப்பதை ஒருவர் எவ்வாறு நிச்சயப்படுத்திக்கொள்ளலாம்?
21. முக்கிய கருத்துக்கள் விட்டுவிடப்படாதிருத்தல் ஏன் அத்தியாவசியமானது?