உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g 10/09 பக். 6-9
  • ‘ஆறுதலின் கடவுள்’ தரும் உதவி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ‘ஆறுதலின் கடவுள்’ தரும் உதவி
  • விழித்தெழு!—2009
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • மனச்சோர்வுக்கு நிரந்தர முடிவு!
  • மனச்சோர்வடைந்தோருக்கு ஆறுதல்
    மனச்சோர்வடைந்தோருக்கு ஆறுதல்
  • மனச்சோர்வு ஏற்பட்டால் பைபிள் எனக்கு உதவுமா?
    பைபிள் தரும் பதில்கள்
  • மனச்சோர்வுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றிபெறுதல்
    விழித்தெழு!—1988
  • நான் ஏன் அவ்வளவு மனச்சோர்வடைகிறேன்?
    இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன் தரும் விடைகள்
மேலும் பார்க்க
விழித்தெழு!—2009
g 10/09 பக். 6-9

‘ஆறுதலின் கடவுள்’ தரும் உதவி

தாவீது ராஜா பல கவலைகளால் மிகுந்த ‘சஞ்சலம்’ அடைந்த ஒருவர். இருந்தாலும், கடவுள் மனிதர்களை முற்றும் முழுமையாகப் புரிந்துகொள்கிறார் என்பதில் அவருக்கு எவ்விதச் சந்தேகமும் இருக்கவில்லை. “கர்த்தாவே, நீர் என்னை ஆராய்ந்து, அறிந்திருக்கிறீர். என் உட்காருதலையும் என் எழுந்திருக்குதலையும் நீர் அறிந்திருக்கிறீர்; என் நினைவுகளைத் தூரத்திலிருந்து அறிகிறீர். என் நாவில் சொல் பிறவாததற்குமுன்னே, இதோ, கர்த்தாவே, அதையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர்” என்று அவர் எழுதினார்.—சங்கீதம் 139:1, 2, 4, 23, NW.

கடவுள் நம்மைப் புரிந்துகொள்கிறார் என்பதில் நாமும் நம்பிக்கையோடு இருக்கலாம்; அதுமட்டுமல்ல, மனச்சோர்வினால் நம் அபூரண உள்ளமும் உடலும் எந்தளவுக்குப் பாதிக்கப்படுகின்றன என்பதையும் அவர் புரிந்துகொள்கிறார். மனச்சோர்வுக்கு என்ன காரணம் என்பதையும், தற்போதைய சூழ்நிலையில் அதை எப்படிச் சமாளிக்கலாம் என்பதையும் அவர் அறிந்திருக்கிறார். அதோடு, மனச்சோர்வை எப்படி ஒரேயடியாக ஒழித்துக்கட்டப்போகிறார் என சொல்லியிருக்கிறார். நமக்கு உதவ அவரைவிடச் சிறந்தவர் வேறு யாரேனும் இருக்க முடியுமா? ஏனென்றால், கரிசனைமிக்க நம் “கடவுள், மனச்சோர்வடைந்தோருக்கு ஆறுதலும் உற்சாகமும் புத்துணர்ச்சியும் குதூகலமும் அளிக்கிறார்.”—2 கொரிந்தியர் 7:6, தி ஆம்ப்ளிஃபைட் பைபிள்.

ஆனால், வேதனையில் தவித்துக்கொண்டிருக்கும்போது கடவுள் எப்படித் தங்களுக்கு உதவ முடியுமென மனச்சோர்வடைந்தவர்கள் யோசிக்கலாம்.

கடவுள் மனச்சோர்வடைந்தோருக்குத் துணையாக இருப்பாரா?

மனச்சோர்வினால் தவிக்கிற தம் மக்களிடம் கடவுள் மிக நெருக்கமாக இருக்கிறார்; சொல்லப்போனால், ‘நொறுங்கிய நலிந்த நெஞ்சினரோடு நான் வாழ்கிறேன்; நொறுங்கிய உள்ளத்தினரை ஊக்குவிக்கவும் நலிந்த நெஞ்சினரைத் திடப்படுத்தவும் நான் குடியிருக்கின்றேன்’ என அவர் சொல்கிறார். (ஏசாயா 57:15, பொது மொழிபெயர்ப்பு) ‘உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்; நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார்’ என்பதை அறிவது எவ்வளவு ஆறுதலளிக்கிறது!—சங்கீதம் [திருப்பாடல்கள்] 34:18, பொ.மொ.

மனச்சோர்வடைந்தோர் எவ்வாறு கடவுளிடமிருந்து ஆறுதல் பெற முடியும்?

கடவுளை வணங்குகிறவர்கள், ‘ஜெபத்தைக் கேட்கிறவரான’ அவரை எந்நேரத்திலும் அணுக முடியும்; வேதனையான உணர்ச்சிகளையும் சூழ்நிலைகளையும் சமாளிக்க அவரால் உதவி செய்ய முடியும். (சங்கீதம் 65:2) மனதிலிருப்பதை அவரிடம் கொட்டிவிடும்படி நம்மை ஊக்கப்படுத்தி பைபிள் இவ்வாறு சொல்கிறது: “நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள்; எல்லாவற்றையும் குறித்து உங்கள் விண்ணப்பங்களை நன்றியுடன்கூடிய ஜெபத்தினாலும் மன்றாட்டினாலும் கடவுளுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்போது, எல்லாச் சிந்தனைக்கும் அப்பாற்பட்ட தேவசமாதானம் உங்கள் இருதயத்தையும் மனதையும் கிறிஸ்து இயேசுவின் மூலமாகக் காத்துக்கொள்ளும்.”—பிலிப்பியர் 4:6, 7.

நமக்கு அருகதையே இல்லாததால் நம் பிரார்த்தனைகளைக் கடவுள் கேட்பதில்லையென நினைக்கையில் என்ன செய்வது?

மனச்சோர்வின் காரணமாக, நாம் கடவுளைப் பிரியப்படுத்த எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் அது முழுமுயற்சி அல்லவென நாம் நினைக்கலாம். இருந்தாலும், நம் பரலோகத் தகப்பன் ‘நாம் மண்ணென்று நினைவுகூர்ந்து,’ நம்முடைய மென்மையான உணர்வுகளைப் புரிந்துகொள்கிறார். (சங்கீதம் 103:14) ‘நம்முடைய இருதயம் நம்மைக் கண்டனம் செய்தாலும்,’ “கடவுள் நம்மைக் கண்டனம் செய்வதில்லை என்று நம் இருதயத்திற்கு உறுதியளித்துக்கொள்ளலாம்; ஏனென்றால், கடவுள் நம் இருதயத்தைவிட உயர்ந்தவராகவும், எல்லாவற்றையும் அறிந்தவராகவும் இருக்கிறார்.” (1 யோவான் 3:19, 20) ஆகவே, சங்கீதம் 9:9, 10; 10:12, 14, 17; 25:17 போன்ற பைபிள் வசனங்களிலுள்ள வார்த்தைகளை உங்கள் பிரார்த்தனைகளில் நீங்கள் பயன்படுத்தலாம்.

என்ன சொல்லி பிரார்த்தனை செய்வதென்றே தெரியாதளவுக்கு நாம் கவலையில் மூழ்கிப்போயிருந்தால் என்ன செய்வது?

சிலசமயங்களில் மனம் வலியில் துடிப்பதால் வாயிலிருந்து வார்த்தைகள்கூட வராமல் போகலாம்; ஆனாலும் நம்பிக்கை இழந்துவிடாதீர்கள்! ‘கனிவும் இரக்கமும் உள்ள தகப்பனாகவும், எல்லா விதமான ஆறுதலின் கடவுளாகவும்’ இருப்பவர் உங்கள் உணர்ச்சிகளையும் தேவைகளையும் புரிந்துகொள்கிறார் என்ற நம்பிக்கையோடு தொடர்ந்து பிரார்த்தனை செய்யுங்கள். (2 கொரிந்தியர் 1:3) இந்தத் தொடர் கட்டுரைகளின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட மாரியா இவ்வாறு சொல்கிறார்: “சிலசமயங்களில், எனக்கு ஒரே குழப்பமாக இருக்கும், என்ன சொல்லி ஜெபம் செய்வதென்றே தெரியாது. ஆனாலும், கடவுள் என்னைப் புரிந்துகொள்கிறார் என்றும் எனக்கு உதவுகிறார் என்றும் எனக்குத் தெரியும்.”

கடவுள் நமக்கு எப்படிப் பதிலளிக்கிறார்?

கடவுள் இப்போதே நம் கஷ்டங்களையெல்லாம் தீர்த்துவிடுவாரென பைபிள் சொல்வதில்லை. என்றாலும், மனச்சோர்வு உட்பட “எல்லாவற்றையும்” சமாளிக்க அவர் நமக்குப் பலம் அளிப்பார். (பிலிப்பியர் 4:13) மார்ட்டினா இப்படிச் சொல்கிறார்: “ஆரம்பத்தில் நான் மனச்சோர்வடைந்தபோது, உடனடியாக என்னைக் குணப்படுத்தும்படி யெகோவாவிடம் கேட்டேன்; அதற்குமேல் என்னால் தாங்கிக்கொள்ளவே முடியாதென நினைத்து அப்படிச் செய்தேன். ஆனால் இப்போது, பலம் தரும்படி மட்டுமே தினமும் கடவுளிடம் கேட்கிறேன்.”

முக்கியமாக பைபிள் வசனங்கள், மனச்சோர்வைச் சமாளிக்கத் தேவையான ஆன்மீகப் பலத்தை அளிக்கின்றன. தினமும் பைபிளை வாசிப்பது கைமேல் பலன் தருவதை, 35 வருடகாலமாக மனச்சோர்வோடு போராடிக்கொண்டிருக்கும் சாரா தன் அனுபவத்தில் கண்டிருக்கிறார். அவர் இவ்வாறு சொல்கிறார்: “மருத்துவர்களின் உதவியை நான் உண்மையிலேயே பாராட்டுகிறேன். ஆனால், எல்லாவற்றிற்கும் மேலாக கடவுளுடைய புத்தகத்தை வாசிப்பதுதான் ஆன்மீகப் பயனையும் நடைமுறைப் பயனையும் அளிக்கிறதெனச் சொல்வேன். அதைத் தவறாமல் வாசிப்பதைப் பழக்கமாக்கியிருக்கிறேன்.”

மனச்சோர்வுக்கு நிரந்தர முடிவு!

இயேசு கிறிஸ்து இந்தப் பூமியில் வாழ்ந்தபோது, கடவுள் தந்த சக்தியால் கொடிய வியாதிகளைக் குணப்படுத்திக் காட்டினார். தீராத நோய்களையும்கூடத் தீர்த்து மக்களுக்கு நிம்மதியளிக்க அவர் விரும்பினார். அதுமட்டுமல்ல, மனக்குமுறலின் வலியை அவரே அனுபவித்திருந்தார். துடிதுடித்துச் சாவதற்கு முந்தைய இரவின்போது, “கிறிஸ்து . . . தம்மை மரணத்திலிருந்து காப்பாற்ற வல்லவரை நோக்கிக் கண்ணீர்விட்டுக் கதறி, மன்றாட்டுகளையும் விண்ணப்பங்களையும் ஏறெடுத்தார்.” (எபிரெயர் 5:7) அச்சமயத்தில் இயேசு நெஞ்சைப் பிழியும் வேதனையில் இருந்தார்; ஆனால், அவர் பட்ட பாட்டினால் நாம் இன்று பயனடைகிறோம்; ஏனென்றால், இப்போது அவர் “சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவி செய்ய வல்லவராக இருக்கிறார்.”—எபிரெயர் 2:18; 1 யோவான் 2:1, 2.

மனச்சோர்வுக்குக் காரணமான துயரங்கள் அனைத்தையும் கடவுள் துடைக்கப்போவதாக பைபிள் சொல்கிறது. அவர் இவ்வாறு சத்தியம் செய்கிறார்: “இதோ, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் சிருஷ்டிக்கிறேன்; முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை. நான் சிருஷ்டிக்கிறதினாலே நீங்கள் என்றென்றைக்கும் மகிழ்ந்து களிகூர்ந்திருங்கள்.” (ஏசாயா 65:17, 18) ‘புதிய வானம்’ என்பது கடவுளுடைய அரசாங்கம்; அது, ‘புதிய பூமிக்கு,’ அதாவது நீதியுள்ள மக்கள் சமுதாயத்திற்கு, பரிபூரணமான உடல்நலத்தையும் மனநலத்தையும் ஆன்மீகநலத்தையும் அளிக்கும். அப்போது எல்லாவித நோய்நொடிகளும் ஒரேயடியாக ஒழித்துக்கட்டப்படும். (g 7/09)

“ஆழக்குழியினின்று, யெகோவாவே, உமது திருநாமத்திற்கு அபயமிட்டேன்; என் சத்தம் கேட்டீர், எனது பெருமூச்சுக்கும் அபயக்குரலுக்கும் உமது செவியை அடையாதிரும். உமக்கு அபயமிட்ட நாளிலே கிட்டி வந்து பயப்படாதே என்றுரைத்தீரே.”—புலம்பல் 3:55-57, திருத்திய மொழிபெயர்ப்பு

“சோகமாயிருப்பவர்களிடம் ஆறுதலாகப் பேசுங்கள்”

பார்பராவால் மனச்சோர்வையும் அருகதையற்றவள் என்ற உணர்வையும் கொஞ்சமும் தாங்கிக்கொள்ள முடியாமல்போகும்போது, அவரும் அவரது கணவரும் ஜரார்ட் என்ற குடும்ப நண்பருக்குப் ஃபோன் செய்கிறார்கள். அவர் ஒரு கிறிஸ்தவக் கண்காணி. பார்பரா விக்கி விக்கி அழுதுகொண்டு, முன்பு சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லி வேதனைப்படும்போதெல்லாம் ஜரார்ட் பொறுமையாகக் கேட்கிறார்.

குற்றப்படுத்தாமலும் வாதாடாமலும் கண்டிக்காமலும் காதுகொடுத்துக் கேட்க ஜரார்ட் கற்றிருக்கிறார். (யாக்கோபு 1:19) பைபிளிலுள்ள அறிவுரையின்படியே, ‘சோகமாயிருப்பவர்களிடம் ஆறுதலாகப் பேச’ அவர் கற்றிருக்கிறார். (1 தெசலோனிக்கேயர் 5:14) பார்பரா அவரது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் யெகோவா தேவனுக்கும் மாணிக்கமாக இருப்பதை அவர் பொறுமையோடு எடுத்துச் சொல்லி நம்பிக்கை அளிக்கிறார். பொதுவாக, பைபிளிலிருந்து ஓரிரண்டு ஆறுதலான வசனங்களை வாசித்துக் காட்டுகிறார்; அவற்றில் சில வசனங்களை முன்பே வாசித்துக் காட்டியிருந்தாலும் அப்படிச் செய்கிறார். பின்பு, மறக்காமல் பார்பராவோடும் அவருடைய கணவரோடும் சேர்ந்து ஃபோனிலேயே ஜெபம் செய்கிறார்; இதனால் அவர்கள் எப்போதுமே மிகுந்த ஆறுதலைப் பெற்றிருக்கிறார்கள்.—யாக்கோபு 5:14, 15.

தான் ஒரு மருத்துவர் அல்ல என்பது ஜரார்டுக்கு நன்கு தெரியும்; ஆகவே, பார்பராவின் டாக்டர்களுடைய இடத்தைப் பிடிக்க அவர் முயலுவது கிடையாது. டாக்டர்கள் தரும் சிகிச்சை தவிர, பெரும்பாலான டாக்டர்கள் தராத சிலவற்றையும் பார்பராவுக்கு ஜரார்ட் தருகிறார்; அவைதான் இதமான வசனங்களும் ஆறுதலான ஜெபங்களும்.

‘சோகமாயிருப்பவர்களிடம் ஆறுதலாகப் பேச’

நீங்கள் இப்படிச் சொல்லலாம்: “உங்களைப் பற்றித்தான் நினைத்துக் கொண்டே இருந்தேன். உங்களுக்கு அவ்வப்போது சுகமில்லாமல் போய்விடும், அல்லவா? இப்போது எப்படி இருக்கிறீர்கள்?”

நினைவில் வைப்பதற்கு: மனச்சோர்வடைந்தவர் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தாலும் அனுதாபத்தோடு கேளுங்கள், அக்கறையோடு பேசுங்கள்.

நீங்கள் இப்படிச் சொல்லலாம்: “உடல்நலப் பிரச்சினைகள் மத்தியிலும் என்னவெல்லாம் செய்கிறீர்கள் என்பதைப் பார்க்க பார்க்க எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது (அல்லது, “உங்களிடம் உள்ள அருமையான குணங்களைப் பார்க்கும்போது அசந்துபோகிறேன்”). இன்னும் நிறைய செய்ய வேண்டுமென நீங்கள் ஆசைப்படுவீர்கள் என்பது உண்மைதான். ஆனால், இப்போதும்கூட யெகோவா உங்களை நேசிக்கிறார், பாராட்டுகிறார்; அவர் மட்டுமல்ல, நாங்களும்தான்.”

நினைவில் வைப்பதற்கு: கரிசனையும் பரிவும் காட்டுங்கள்.

நீங்கள் இப்படிச் சொல்லலாம்: “இந்த வசனத்தைப் படித்தபோது ரொம்ப உற்சாகமாக இருந்தது.” அல்லது “எனக்கு ரொம்பப் பிடித்த வசனத்தை இந்த முறை வாசித்தபோது உங்கள் நினைப்புதான் வந்தது.” பின்பு, அந்த வசனத்தை வாசியுங்கள் அல்லது சொல்லுங்கள்.

நினைவில் வைப்பதற்கு: புத்தி சொல்வதுபோல் பேசாதீர்கள்.

மனதை வருடும் இதமான வசனங்கள்

லரேன் என்பவர் ஏசாயா 41:10-ல் உள்ள யெகோவாவின் வாக்குறுதியிலிருந்து தெம்பைப் பெறுகிறார். அந்த வசனம் இவ்வாறு வாசிக்கிறது: “நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.”

ஆல்வரூ என்பவர் சங்கீதம் 34:4, 6-லுள்ள பின்வரும் வார்த்தைகளை அடிக்கடி வாசித்து ஆறுதல் பெறுவதாகச் சொல்கிறார்: “நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார். இந்த ஏழை கூப்பிட்டான், கர்த்தர் கேட்டு, அவனை அவன் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கி இரட்சித்தார்.”

நயோயா என்பவர் சங்கீதம் 40:1, 2-ஐ வாசிக்கும்போதெல்லாம் ஆறுதலடைவதாகச் சொல்கிறார். அதை நீங்களும் வாசியுங்கள்: “கர்த்தருக்காக பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என்னிடமாய்ச் சாய்ந்து, என் கூப்பிடுதலைக் கேட்டார். . . . என் அடிகளை உறுதிப்படுத்தி[னார்].”

நயோகோ என்பவருக்கு சங்கீதம் 147:3 தரும் உறுதி இதுதான்: யெகோவா “இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார், அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார்.”

யெகோவா தன்னை அக்கறையோடு கவனித்துக்கொள்வார் என நம்புவதற்கு, லூக்கா 12:6, 7-ல் உள்ள இயேசுவின் வார்த்தைகள் எலிஸ் என்பவருக்கு உதவின: “குறைந்த மதிப்புள்ள இரண்டு காசுக்கு ஐந்து சிட்டுக்குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆனால், அவற்றில் ஒன்றையும் கடவுள் மறப்பதில்லை. உங்கள் தலைமுடியும்கூட எண்ணப்பட்டிருக்கிறது. பயப்படாதீர்கள்; அநேக சிட்டுக்குருவிகளைவிட நீங்கள் மதிப்புமிக்கவர்கள்.”

மற்ற பைபிள் வசனங்கள்:

  • சங்கீதம் 39:12: “கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேட்டு, என் கூப்பிடுதலுக்குச் செவிகொடும்; என் கண்ணீருக்கு மவுனமாயிராதேயும்.”

  • 2 கொரிந்தியர் 7:6: கடவுள் ‘சோர்வடைந்தவர்களை ஆறுதல்படுத்துகிறார்.’

  • 1 பேதுரு 5:7: “[கடவுள்] உங்கள்மீது அக்கறையாக இருப்பதால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.”

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்