கஷ்டத்திலும் கடவுளையே அண்டியிருக்க கற்றுக்கொண்டோம்
ரோஸி மேஜர் சொல்கிறார்
அது 1992-ம் வருட மார்ச் மாதம். நான் ஐந்து மாத கர்ப்பிணியாய் இருந்தேன். எனக்கு இது தலைப் பிரசவம். என் கால்கள் பயங்கரமாய் வீங்கியிருந்ததை என் மாமியார் கவனித்தார்கள். அதன்பிறகு நடக்கவிருந்தது யெகோவாவின் மீதிருக்கும் நம்பிக்கைக்கே பரீட்சையாய் இருக்கும் என்பதை அப்போது நானும் என் கணவர் ஜோயியும் நினைத்துக்கூட பார்க்கவில்லை.
ஒரு வாரத்திற்கு பின், என் ரத்த அழுத்தம் பயங்கரமாய் எகிறிவிட்டது. டெஸ்டுகளுக்காக ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகும்படி மகப்பேறியல் டாக்டர் சொன்னவுடன் பயந்தேன். எனக்கு ப்ரீஎக்லாம்ப்ஸியா (preeclampsia) என டெஸ்ட் ரிஸல்ட் காண்பித்தது. இது உயிருக்கே ஆபத்தான நோய். a
உடனடியாக சிசேரியன் செய்தால்தான் தாய், குழந்தை இருவர் உயிரையும் காப்பாற்ற முடியும் என டாக்டர் கண்டிப்பாக சொல்லிவிட்டார்கள். எனக்கும் என் கணவருக்கும் தலையில் இடியே விழுந்ததுபோல் இருந்தது. “குழந்தைக்கு இன்னும் 24 வாரம்கூட முழுசா ஆகலையே. வெளியே எடுத்துட்டா அது எப்படி பிழைக்கும்?” என படபடத்துப்போய் கேட்டேன். “சரி, இன்னும் கொஞ்ச நாள்வேணா பொறுத்துப் பார்க்கலாம்” என டாக்டர் அன்பாக சொன்னார்கள். “ஆனா உங்க நிலைமை மோசமாச்சுன்னா, வேறு வழியே இல்ல” என்றார். பதிமூன்று நாட்கள் சென்றன. என் நிலைமை மோசமாகிக்கொண்டே சென்றது. டாக்டர் என் கணவரை உள்ளே அழைத்தார். நெஞ்சை கல்லாக்கிக்கொண்டு டெலிவரி செய்துவிட முடிவு செய்தோம்.
பிரசவம்
டெலிவரிக்கு முந்தைய நாள், குழந்தை மருத்துவரான மாக்நேல் எங்களோடு பேசினார். குறைமாதக் குழந்தைக்கு மூளைக்கோளாறு இருக்கலாம், நுரையீரல்கள் வளர்ச்சியடையாததால் சரியாக செயல்படாதிருக்கலாம் என்றெல்லாம் இன்னும் பல சிக்கல்களை விளக்கினார். “எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம்” வேண்டுமென ஜெபம் செய்தேன். என்ன நடந்தாலும் தாங்கிக்கொண்டு சமாளிப்பதற்கு பலத்தையும் கேட்டு ஜெபித்தேன். (பிலிப்பியர் 4:7) அடுத்தநாள் காலையில் சிசேரியன் செய்யப்பட்டது. பாப்பா வெறும் 700 கிராம்தான் இருந்தாள். அவளுக்கு ஜோஆன் ஷெல்லி என பெயரிட்டோம்.
ஐந்து நாட்களுக்கு பிறகு வீடு திரும்பினேன், வெறும் கையோடு. என் செல்ல மகள் ஹாஸ்பிட்டல் ஸ்பெஷல் இன்ஃபன்ட் கேர் யூனிட்டில் உயிரோடு போராடிக்கொண்டிருந்தாள். இரண்டு வாரங்களுக்குப் பிற்பாடு ஜோஆனுக்கு நிமோனியா வந்துவிட்டது. அவள் குணமடைந்தபோது எவ்வளவோ நிம்மதியடைந்தோம். ஆனால் அதுவும் நிலைக்கவில்லை. ஒருசில நாட்களுக்குள் குடலில் இன்ஃபெக்ஷன் ஏற்பட்டது. ஆகவே அவளை இன்டென்சிவ் கேர் யூனிட்டில் வைத்தார்கள். ஆறு நாட்களுக்குள் ஓரளவு குணமடைந்தாள். அவளது எடையும்கூட கொஞ்சம் கூடியது. எங்களுக்கு தலைகால் புரியவில்லை! ஆனால் சந்தோஷம் நீடிக்கவில்லை. ஜோஆனுக்கு ரத்தசோகை இருந்ததாக டாக்டர் மாக்நேல் சொன்னார். அவளது சிவப்பணுக்களின் உற்பத்தியை தூண்ட, செயற்கை ஹார்மோன் எரித்ரோபாய்ட்டினை (EPO) கொடுப்பதைக் குறித்து பேசினார். இங்கே பஹாமாஸிலுள்ள யெகோவாவின் சாட்சிகளது கிளைக்காரியாலயம், நியூ யார்க்கின் ப்ரூக்ளினிலுள்ள ஹாஸ்பிடல் இன்ஃபர்மேஷன் சர்விஸஸின் பிரதிநிதிகளோடு தொடர்புகொண்டது. விரைவில் அவர்கள் EPO-வைப் பற்றிய லேட்டஸ்ட் தகவல்களை டாக்டர் மாக்நேலுக்கு அளித்தார்கள். அவரும் சிகிச்சையை ஆரம்பித்தார்.
பிரச்சினைகள் ஓயவில்லை
என்னாகுமோ ஏதாகுமோ என பயந்து பயந்தே பல வாரங்கள் ஓடின. குடலில் இன்ஃபெக்ஷனோடு ஜோஆன் போராடிக்கொண்டிருந்தாள். வலிப்புகள் ஏற்பட்டு அவ்வப்போது ஆப்னியா வந்துவிடும், அதாவது சுவாசம் நின்றுவிடும். ரத்தப் புரதம் (hemoglobin) குறைவாயிருந்தது, அதோடு நுரையீரல் அறைகள் நிமோனியாவும் (bronchial pneumonia) அவளை பாடாய் படுத்தியது. இதில் ஏதாவது ஒன்று அவளது உயிருக்கு உலை வைத்துவிடுமோ என நடுங்கினோம். ஆனால் ஜோஆனின் நிலை கொஞ்ச கொஞ்சமாய் முன்னேறியது. மூன்றாம் மாதமும் ஆஸ்பத்திரியிலேயே இருந்தாள். அப்போது அவள் எடை, வெறும் 1.4 கிலோ. ஆனால் முதன்முறையாக சப்ளிமண்டெரி ஆக்ஸிஜன் இல்லாமல் சொந்தமாய் சுவாசித்துக்கொண்டிருந்தாள். ரத்த புரோதமும் நார்மலாகிக்கொண்டு வந்தது. இன்னொரு 500 கிராம் எடை கூடினால் வீட்டிற்கு கொண்டு செல்லலாம் என டாக்டர் சொன்னார்.
மூன்று வாரங்களுக்குப் பிற்பாடு ஜோஆனுக்கு பயங்கரமாய் மூச்சு அடைத்துக்கொண்டது. காரணம் என்னவென்று டெஸ்டுகளில் கண்டுபிடிக்க முடியவில்லை. அதன்பின் அடிக்கடி இப்படி சுவாசம் அடைத்துக்கொண்டது. அதுவும் அவளுக்கு பாலூட்டியவுடனேயே ஏற்பட்டது. ஒருவழியாக அதற்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டது. அவளுக்கு gastroesophageal reflux. அவள் சாப்பிட்டவுடன் அவளது உணவுக்குழாய் மூடிக்கொள்ளாததால் வயிற்றிற்கு சென்றதெல்லாம் மீண்டும் தொண்டைக்கு வந்தது. ஆகவே மூச்சடைப்பு ஏற்பட்டு சுவாசம் நின்றது.
அக்டோபர் மாத ஆரம்பத்தில், குழந்தைகள் வார்ட்டில் ஜோஆனுக்கு ஏதோவொரு வைரஸ் தொற்றிக்கொண்டது. அங்கிருந்த குறைமாதக் குழந்தைகள் அந்த வைரஸால் செத்துக்கொண்டிருந்தன. அந்த பலவீனமான நிலையில் என் கண்மணிக்கு மறுபடியும் ஆப்னியா மிகக் கடுமையாய் தாக்கியது. இந்த முறை நீண்ட நேரம் அவள் மூச்சுவிடவில்லை. டாக்டர்கள் என்ன செய்துபார்த்தும் பயனளிக்கவில்லை. குழந்தை மருத்துவர், அவள் இறந்துவிட்டதாக சொல்லவிருந்த கட்டம் பார்த்து, திடீரென மூச்சுவிட ஆரம்பித்தாள். ஆனால் சுவாசிக்க ஆரம்பித்ததும் ஆரம்பிக்காததுமாய் உடனடியாக வலிப்புகள் ஏற்பட்டன. மறுபடியுமாக ரெஸ்பிரேட்டரில் வைக்கப்பட்டாள். இனி அவளை பார்க்கவே முடியாது என நினைத்தோம். ஆனால் ஆண்டவன் புண்ணியத்தில் என் தங்கம் பிழைத்துக்கொண்டாள். யெகோவாவிற்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை.
யெகோவாவையே முற்றிலும் சார்ந்திருக்க கற்றுக்கொண்டோம்
ஜோஆன் பிறப்பதற்கு முன் துறைமுகத்துக்கு அருகே படகிலிருந்து விழுந்துவிட்டதுபோல் இருந்தது. எப்படியாவது நீந்திச்சென்று கரையேறிவிடும் நிலை. ஆனால் இப்போதோ கண்ணுக்கு எட்டிய தூரம்வரை நிலப்பகுதியே இல்லாத நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தோம். நடந்ததையெல்லாம் நினைத்துப் பார்க்கையில், அவள் பிறப்பதற்கு முன் சிலசமயம் நாங்கள் எங்கள்மீதே அதிகம் சார்ந்திருந்தோம் என சொல்லலாம். ஆனால் ஜோஆன் பிறந்த பிறகு, மனிதசக்திக்கு மிஞ்சிய சூழ்நிலைகளில் யெகோவாவை நம்பியிருக்க கற்றிருக்கிறோம். இயேசு கொடுத்த அறிவுரைக்கு இசைவாக, அந்தந்த நாளை அன்றன்றைக்கு சமாளிக்க கற்றிருக்கிறோம். (மத்தேயு 6:34) சிலசமயம் என்ன ஜெபிப்பது என்றுகூட எங்களுக்குத் தெரியாது. இருந்தாலும் யெகோவாவை சார்ந்திருக்க கற்றுக்கொண்டோம். இப்போது பைபிள்பூர்வமான ஞானத்திற்காகவும் ‘இயல்புக்கு அப்பாற்பட்ட வல்லமைக்காகவும்’ யெகோவாவிற்கு நன்றி சொல்கிறோம். ஏனெனில் விவரிக்க முடியாத கஷ்டங்களை சமாளிக்க உதவியிருப்பது இவையே.—2 கொரிந்தியர் 4:7.
இக்கட்டான சமயங்களில், உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது எனக்கு கஷ்டமாக இருந்திருக்கிறது. எப்போதும் என் செல்லத்தின் நினைவேதான். என் கணவர் ஜோயி, ஆவிக்குரிய சமநிலையோடு இருக்க உறுதுணையாய் இருந்தார். இதற்காக நான் அவருக்கு எவ்வளவோ கடமைப்பட்டிருக்கிறேன்.
பாப்பா வீடு திரும்புகிறாள்
பாப்பாவின் உடல்நிலை மெதுமெதுவாய் தேறியது. ஒருநாள் ஆக்ஸிஜன் டியூபையே வாயிலிருந்து பிடுங்கி எறிந்துவிட்டாள். இனி அவளை வீட்டிற்கு எடுத்துச்செல்லலாம் என டாக்டர் மாக்நேல் சொன்னார். எங்களுக்கு ஏகப்பட்ட குஷி! அதேசமயம் அதற்கு எங்களையே தயார்படுத்திக்கொண்டோம். அவளுக்கு எப்படி ட்யூப் வழியாய் உணவளிப்பது என கற்றுக்கொண்டோம். ரெஸ்பிரேட்டரை பொருத்தினோம். இதய-நுரையீரல் மானிட்டரை வாடகைக்கு எடுத்தோம். அவசரத் தேவையின்போது மூச்சு நின்றுவிட்டால் என்ன செய்வது என்பதற்கு பயிற்சியும் பெற்றோம். இறுதியாக அக்டோபர் மாதம் 30-ஆம் தேதி, 1992 அன்று என் பட்டுப் பாப்பாவின் வருகையால் வீடு களைகட்டியது. அவள் தன் வாழ்நாளில் 212 நாட்களை ஸ்பெஷல் இன்ஃபன்ட் கேர் யூனிட்டில் தொலைத்திருந்தாள், நாங்களும்தான்.
ஆரம்பத்திலிருந்தே, உறவினர்களும் யெகோவாவின் சாட்சிகளும் எங்களுக்கு பக்கபலமாக இருந்தார்கள். உண்மையில் அவர்கள் யெகோவா தந்த ஈவு. வீட்டிற்குவந்து எல்லாவற்றையும் சுத்தம்செய்தார்கள், சமைத்துக்கொடுத்தார்கள், ஹாஸ்பிட்டல் போக உதவினார்கள், ஜோஆனை அவ்வப்போது கவனித்துக்கொண்டார்கள், இதனால் என்னால் கொஞ்சம் தூங்க முடிந்தது. இதுவரை பார்த்திராத அழகிய குணங்களை அவர்களிடம் கண்டோம். உதாரணத்திற்கு, கஷ்டங்களின்போது தங்களுக்கு உதவிய ஆவிக்குரிய கருத்துக்களை சிலர் எங்களோடு பகிர்ந்துகொண்டார்கள்.
இன்று எங்கள் வாழ்க்கை
ஜோஆனுக்கு அரும்பாடுபட்டு சிறந்த மருத்துவ சிகிச்சை அளித்தோம். அவளுக்கு 19 மாதங்கள் ஆனபோது, மூளைச் சேதத்தால் சிறுபிள்ளை வாதம் தாக்கியிருப்பதை அறிந்துகொண்டோம். அதன்பின் செப்டம்பர் 1994-ல், உணவுக்குழாய் கோளாறுக்கு (gastroesophageal reflux) பெரிய அறுவை சிகிச்சை நடந்தது. 1997-ல் ஜோஆனுக்கு உயிருக்கே ஆபத்தான வலிப்புகள் ஏற்பட்டன. நல்லவேளையாக, உணவு கட்டுப்பாட்டினால் வலிப்புகள் நின்றுவிட்டன. இப்படி பல பிரச்சினைகளால் அவளது வளர்ச்சி குன்றியிருக்கிறது. இப்போது அவள் ஒரு ஸ்பெஷல் ஸ்கூலில் படிக்கிறாள். நல்ல முன்னேற்றம் செய்கிறாள். அவளால் நடக்க முடியாது, பேச்சும் சரியாக வராது. ஆனால் எல்லா கிறிஸ்தவ கூட்டங்களுக்கும் வீட்டுக்கு வீடு ஊழியத்திற்கும் தவறாமல் எங்களோடு வருகிறாள். சந்தோஷமாக இருக்கிறாள்.
எல்லா சோதனைகளின்போதும் யெகோவா எங்களுக்கு அதிக ஆறுதல் அளித்திருக்கிறார். எதிர்பாரா கஷ்டங்களின்போதும் யெகோவாவின்மீது சார்ந்திருந்து அவரில் ‘மகிழ்ச்சியாயிருப்பதே’ எங்கள் தீர்மானம். (ஆபகூக் 3:17, 18; பிரசங்கி 9:11, NW) கடவுள் வாக்குறுதியளித்திருக்கும் பரதீஸிய பூமிக்காக ஆவலாய் காத்திருக்கிறோம். அப்போது எங்கள் செல்லக் கண்மணி பூரண சுகமடைவாள்.—ஏசாயா 33:24.
[அடிக்குறிப்புகள்]
a ப்ரீஎக்லாம்ப்ஸியா தாக்கும்போது, கர்ப்பவதியின் ரத்தக் குழாய்கள் சுருங்கி, ரத்தவோட்டம் குறைவுபடுகிறது. அவளது உறுப்புகளுக்கும் நஞ்சுக்கொடிக்கும் சிசுவுக்கும்கூட போதிய ரத்தம் செல்வதில்லை. இந்நோயிற்கான காரணம் அறியப்படாதபோதிலும் அது பரம்பரை வியாதி என்பதற்கு ஓரளவு அத்தாட்சி உண்டு.
[பக்கம் 18-ன் படம்]
எங்கள் கண்மணி ஜோஆன்
[பக்கம் 20-ன் படம்]
அங்கத்திலே குறையிருந்தாலும் ஆனந்தம் குறையாத அன்புச்செல்வம்