இரத்தமேற்றுதல் உண்மையிலேயே அவசியமா?
இந்தக் கேள்வி, செய்தித்தாள் கட்டுரை ஒன்றில் போன வருடம் நவம்பரில் வெளிவந்தது. நியூ யார்க், புரூக்ளினில் உள்ள லாங் ஐலண்ட் மருத்துவக் கல்லூரியில் சிறுநீரியல் துறைத் தலைவரான டாக்டர் சிரில் கோடெக் எழுப்பிய கேள்வியே இது. “இரத்தத்தை மருந்தாக பயன்படுத்துவது இன்று பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. ஏனென்றால், உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் பாதுகாப்புத் தரங்களை அது பூர்த்தி செய்வதில்லை. இரத்தம் உடலின் ஓர் உறுப்பு. இரத்தமேற்றுதல் என்பது உறுப்பு மாற்று அறுவைசிகிச்சைக்கு சமம்” என அவர் எழுதினார்.
“நோயாளிகளுக்கு அளிக்கப்படும் கடைசி சிகிச்சை முறை, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையே. இதனால், கடுமையான பின்விளைவுகள் ஏற்படுகின்றன. எனவே, உறுப்பு மாற்று அறுவைசிகிச்சைக்கு முன் சாத்தியமான மற்றெல்லா மாற்றுசிகிச்சை முறைகளைப் பற்றிய தகவல்கள் நோயாளிகளுக்கு சொல்லப்படுகிறது” என டாக்டர் கோடெக் தெரிவிக்கிறார். இரத்தமேற்றுதலின் “நன்மையை பற்றி பெரும் சந்தேகம் எழுந்துள்ளதால், அநேக அறுவை சிகிச்சையாளர்கள் ‘இரத்தமேற்றுதலை தவிர்த்தல்’ என்ற கோட்பாட்டை கடைபிடிக்கின்றனர். மருத்துவ காரணங்களுக்காக மட்டுமல்ல, சட்டம் சம்பந்தமான காரணங்களுக்காகவும் இதைத் தவிர்க்கின்றனர்” என அவர் கூறி முடிக்கிறார்.
எய்ட்ஸ் உட்பட பலவித உயிர்க்கொல்லி வியாதிகளால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதால், இரத்தமேற்றுவது பெரும் ஆபத்தானது. இரத்தத்தில் ஏதேனும் நோய்க்கிருமிகள் இருக்கின்றனவா என்பதை பரிசோதிக்கும் முறைகள் அநேக இடங்களில் நவீனப்படுத்தப்பட்டு உள்ளன. ஆனாலும், “இரத்த தானம் செய்யும் நபர்களை நோய்கிருமிகள் தொற்றியிருக்கலாம். அக்கிருமிகள் இரத்தப் பரிசோதனையில் கண்டுபிடிக்கும் அளவுக்கு வளர்ச்சியடையாமலும் இருக்கலாம். இந்த சந்தர்ப்பத்தில், அவரிடமிருந்து பெறும் இரத்தத்தால் நிச்சயம் அபாயம் உண்டு” என டாக்டர் கோடெக் சுட்டிக்காட்டுகிறார்.
“ஆக்ஸிஜனை உடலின் பல பாகங்களுக்கு எடுத்துச் செல்லும் உடலியல் முறையைப் பற்றி அதிகமதிகமாக மருத்துவர்களும் அறுவை சிகிச்சையாளர்களும் புரிந்துகொண்டிருக்கின்றனர். இதனால், முன்பு நினைத்திருந்தபடி ஹீமோகுளோபின் அந்தளவு அதிகமாக இருக்கவேண்டியதில்லை என்பதையும் இவர்கள் தெரிந்து வைத்திருக்கின்றனர். இதுவே, இரத்தமேற்றுதலுக்கு பதிலாக வேறொரு முறையை கண்டுபிடிப்பதை சாத்தியமாக்குகிறது. ஒரு வருடத்திற்கு முன்னாலும்கூட, இருதயம் மற்றும் ஈரல் மாற்று சிகிச்சையின்போது ஏற்பட்ட இரத்த இழப்பை ஈடு செய்ய, இரத்தம் அதிக அளவில் தேவைப்பட்டது. ஆனால், இப்போதோ இந்த இரண்டு சிகிச்சைகளுமே இரத்தமேற்றுதல் இல்லாமலே நடத்தப்படுகிறது” என மேலே குறிப்பிட்ட கேள்வியை எழுப்பிய டாக்டர் கோடெக் முடிவுரை அளிக்கிறார்.
“மிக விரைவில் இரத்தமேற்றுதல் முற்றிலுமாக நீக்கப்படும் சாத்தியம் இருக்கிறது. . . . இரத்தமேற்றுதல் ஆபத்தானதும், அதிக செலவை உட்படுத்தக்கூடியதும் ஆகும். அது மட்டுமல்ல, நோயாளிகள் விரும்பும் உயர்தர இரத்தத்தை இது கொடுப்பதுமில்லை.”