இளைஞர் கேட்கின்றனர் . . .
குண்டாவதைப் பற்றியே ஏன் பயந்துசாகிறேன்?
“என் மனசுக்குள்ள பெரிய போராட்டமே நடந்துகிட்டிருக்குது. ஒரு மனசு சாப்பிடுங்குது. ஆனா, ரொம்ப குண்டாயிடுவேனோங்கற பயத்துல இன்னொன்னோ சாப்பிட வேண்டாங்குது. இப்படி ரெண்டு மனசா நான் இருக்கேன்.”—ஜேமீ.
எதற்கு நீங்கள் ரொம்ப பயப்படுகிறீர்கள்? அநேக நங்கையர்களின் உதடுகள் உடனே உதிர்ப்பது: புஸ்ஸென்று ஊதிவிடுவதற்கு! அணு யுத்தத்துக்கோ, கேன்ஸருக்கோ, ஏன் பெற்றோரை இழப்பதற்கோ பயப்படுவதைவிட இந்த இளம் சிட்டுகள், குண்டாகி விடுவோமோ என்பதற்கே அதிகம் பயப்படுவதாக ஒரு கணக்கெடுப்பு அறிவிக்கிறது.
சில சமயங்களில், மொட்டுப் பருவத்தில் இருந்தேயும்கூட குண்டாகிவிடுவோமோ என்கிற கவலை ஆரம்பித்துவிடுகிறது. டீனேஜுக்கு முன்னரேயும், சின்னஞ் சிறுசுகள் கூட்டு சேர்ந்து “எடை பேச்சுகளில்”—தங்களுடைய உடலைப் பற்றியே வெறுப்பை வெளிப்படையாக பேசும் பேச்சுகளில்—கலந்து கொள்கின்றனரென டாக்டர். கேதரின் ஸ்டைனர்-அடார் குறிப்பிடுகிறார். இது வெறுமனே வெட்டிப் பேச்சல்ல என சான்றுகள் காட்டுகின்றன. 2,379 பெண்பிள்ளைகளை ஆய்வு செய்ததில், 40 சதவீதத்தினர் நிஜமாகவே எடையை குறைக்க முயற்சி செய்திருக்கின்றனர். ஆய்வில் கலந்து கொண்டவர்கள், ஒன்பது, பத்து வயது பொடிசுகளே!
காலப்போக்கில், இவர்களில் அநேகர், பாஷன் உணவுப் பழக்கத்தில் சிக்கிக் கொள்வர். இதைவிட மோசமானது என்னவெனில், இவர்களில் சிலர் 20 வயது ஜென்னாவின் பரிதாபமான நிலைக்கு போய்விடக்கூடும். 160 சென்டிமீட்டர் உயரமுள்ள, இந்த இளம்பெண்ணின் எடை எவ்வளவு தெரியுமா? நாற்பதே கிலோ! “எனக்கு சாப்பிடறதுக்கு இஷ்டமே இல்லை” என்று சொல்லுகிறாள் ஜென்னா. “எடையைக் குறைக்கறதுக்கு எனக்கு மூணு வருஷம் ஆச்சு. ஆனால், மறுபடியும் சாப்பிட ஆரம்பிச்சேன்னா ஒரே மாசத்துல குண்டாயிடுவேன்.”
ஜென்னாவின் எண்ணங்களை நீங்கள் ஓரளவு புரிந்துகொள்ள முடியும். பார்ப்பதற்கு நன்றாக “சிக்கென்று” இருப்பதற்காக எக்ஸ்ட்ரா எடையை குறைக்க வேண்டுமென நீங்களும் விரும்பியிருக்கலாம். உங்களுடைய தோற்றத்தைப் பற்றி நீங்கள் அக்கறையுடையவராய் இருப்பதில் தவறு ஏதுமில்லை. இருப்பினும், ஒல்லியாக இருக்க வேண்டுமென்கிற கட்டுக்கடங்கா ஆசை, அவளுடைய உயிருக்கே உலை வைத்தது. எப்படி?
பட்டினி கிடந்தே பாடைக்கு
அனோரெக்ஸியா நெர்வோஸா என்பது ஆபத்தான, சாப்பிடுவது தொடர்பாக ஏற்படும் மனநோய். ஜென்னா இந்தக் கொடிய வியாதியினால்தான் அவதிப்படுகிறாள். ஆரம்பத்தில் குறிப்பிட்டுள்ள ஜேமீயும் இதே ரகம்தான். சொல்லப்போனால், கொஞ்ச காலத்திற்கு முன் இந்த யுவதிகள் பட்டினி கிடந்தே சாகக் கிடந்தார்கள். இவ்விஷயத்தில் இவர்களுக்கு கூட்டாளிகளும் அநேகர். 100 இளம்பெண்களில் ஒருத்தி இந்நோயால் (அனோரெக்ஸியா) அவஸ்தைப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. அப்படியென்றால், கோடிக்கணக்கான வாலிபப் பெண்கள் இப்படி அவதிப்படுகின்றனர்—அவர்களில் உங்களுக்கு தெரிந்த ஒருவரும் இருக்கலாம்! a
இந்த மனநோய் எந்த அரவமுமின்றி மெதுவாக வளரும். ஒரு சில கிலோகிராம் எடையைக் குறைத்தால் நல்லது என்கிற எண்ணத்தில், தீங்கு ஏதுமில்லை எனத் தோன்றும் ஒரு உணவுப் பழக்கத்தை ஒரு இளம் பெண் ஆரம்பித்திருக்கலாம். அவளுடைய இலக்கை அடைந்தபோதிலும், அவள் திருப்தி அடைவதில்லை. கண்ணாடியில் தன்னைப் பார்க்கும்போது அவளுக்கு வெறுப்பாக இருக்கிறது, “இன்னும் குண்டாத்தான் இருக்கேன்!” என்று முடிவு செய்கிறாள். எனவே, இன்னும் கொஞ்சம் எடையை குறைக்க தீர்மானிக்கிறாள். இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம் என்று அதே வழக்கமாகி மனநோய் என்னும் களையை விதைத்து விடுகிறாள்.
சாப்பாட்டைக் குறைப்பவர்கள் எல்லாருமே இந்த நோயால் அவதிப்படுகிறவர்கள் என்று சொல்வதற்கில்லை. சிலர், உண்மையிலேயே எடையை குறைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். இவர்கள் சில கிலோகிராம் எடையை குறைப்பது நல்லதே. ஆனால், சில பெண்கள், தங்களுடைய உடல் பருமனைப் பற்றி உண்மைக்கு புறம்பான கருத்தை உடையவர்களாய் இருக்கின்றனர். நம்முடைய உடல் உருவத்தைப் பற்றி நாமே தவறான எண்ணத்தைக் கொண்டிருப்பது, வெவ்வேறாக நம் உருவத்தை மாற்றிக் காட்டும் கேளிக்கைக் கண்ணாடியில் பார்ப்பதோடு ஒப்பிடலாம் என்று FDA கன்ஸ்யூமர் பத்திரிகை குறிப்பிடுகிறது. “நீங்கள் சாதாரணக் கண்ணாடியில் உங்கள் உண்மையான உருவத்தைப் பார்க்கும்போது பலமடங்கு பருமனாக இருப்பதாக நினைத்துக்கொள்கிறீர்கள்” என அந்த பத்திரிகை கூறுகிறது.
எனவே, பசியில்லா உளநோயால் அவஸ்தைப்படும் ஓர் இளம் மங்கை, தான் குண்டாகிவிடுவேனோ என்ற பீதியிலேயே இருக்கிறாள். ஒடிந்து விழுந்துவிடுவதுபோல் ஒல்லியாக இருந்தாலும், இந்த பயம் அவளை ஆட்டிவைக்கிறது. தன்னையே வருத்திக் கொண்டு உடற்பயிற்சிகள் செய்து, எடை கூடிவிடாமல் பார்த்துக் கொள்வாள். எடை “ஏறிவிடாமல்” இருக்க, ஒரு நாளைக்கு ஆயிரத்தெட்டு தடவை எடையை சரி பார்த்துக் கொள்வாள். சாப்பிடும்போதும் எலிகொறிப்பது போல் கொஞ்சமே சாப்பிடுவாள் அல்லது சாப்பிடாமலேயே இருந்துவிடுவாள். “அம்மா எனக்கென்றே செய்த சாப்பாட்டை ஸ்கூலுக்கு எடுத்துக்கொண்டு போவேன். ஆனால், தினமும் அதைக் கொட்டிவிடுவேன்” என்று ஹெதர் கூறுகிறாள். “சாப்பிடாமலிருக்க பழகின பின்னாலே, சாப்பிடணும்னு நெனைச்சாலும் என்னால சாப்பிடமுடியல. ஏன்னா பசியே எடுக்கறதில்ல.”
முதலில், ஹெதரைப் போன்றவர்கள், எடை குறைவதில் மட்டற்ற மகிழ்ச்சியில் பறக்கின்றனர். ஆனால், ஊட்டச்சத்து குறைந்தவுடன் பிற்காலத்தில் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்த நோயால் பாதிக்கப்பட்டவள், மந்தமாகவும் தூங்கிவழிகிறவளாகவும் ஆகிவிடுகிறாள். பள்ளிப்பாடங்களில் அவளால் கவனம் செலுத்த முடிவதில்லை. மாதவிலக்கும் நின்றுவிடலாம். b போகப்போக அவளுடைய நாடித்துடிப்பும் இரத்த அழுத்தமும் மிக ஆபத்துக்குரிய அளவுக்கு குறையலாம். இருப்பினும், இந்த நோயாளி எந்த ஆபத்தையும் சட்டை செய்வதில்லை. அவளுக்கு தெரிந்த ஆபத்தெல்லாம் ஒன்றே ஒன்றுதான். இவ்வளவு பிரயாசப்பட்டு குறைத்த எடையில் ஒரு கிலோகிராம்கூட ஏறிவிடக்கூடாது என்பதே அது!
இருப்பினும், அனோரெக்ஸியா மட்டுமே சாப்பாட்டுப் பழக்கத்தினால் உண்டாகும் ஒரே மனக்கோளாறல்ல; அதுமட்டுமின்றி, மிகப் பரவலாக இருக்கும் ஒன்றும் அல்ல இது. புலிமியா நெர்வோஸா என்பது பரவலாகக் காணப்படும் நோய். அனோரெக்ஸியாவால் பாதிக்கப்பட்ட பெண்களைவிட மூன்று பங்குக்கும் அதிகமானோரை இது தாக்குகிறது. புலிமியாவோடு சம்பந்தப்பட்டதுதான், வலுக்கட்டாயமாய் அதிகப்படியாக சாப்பிடுதல். இந்த நோய்களைப் பற்றி சற்று ஆராய்வோம்.
இரகசிய கொள்ளைநோய்
“திருட்டுத்தனமாக சாப்பிடுவதாக என்னுடைய தோழி ஒத்துக்கொண்டாள். பிறகு அதை அப்படியே வாந்தி எடுத்துவிடுவதாகவும், இரண்டு வருடங்களாக இப்படி செய்துவருவதாகவும் சொன்னாள்.” புலிமியா என்று அறியப்பட்ட சாப்பிடும் பழக்கக் கோளாறின் அறிகுறிகள் இவையே என விளக்கி, ஒரு பத்திரிகையின் மருத்துவ ஆலோசனைப் பகுதியில் ஒரு இளம்பெண் எழுதுகிறார்.
புலிமியா நோயாளிகள், கொஞ்ச நேரத்தில் நிறைய சாப்பாட்டை சாப்பிடுவர் அல்லது விழுங்கிவிடுவர். வயிற்றை காலியாக்க, சாப்பிட்டதை உடனே முயற்சி செய்து வாந்திப் பண்ணிவிடுவர். c இப்படிச் செய்வது இயற்கைக்கு முரணானதாக தோன்றலாம். இருப்பினும், “நீங்கள் எந்தளவிற்கு உண்பதிலும் பின்னர் அதை வெளியே தள்ளுவதிலும் பிஸியாக இருக்கிறீர்களோ, அந்தளவிற்கு இது மிகவும் சாதாரண பழக்கமாகிவிடுகிறது. ஆரம்பத்தில் இந்தப் பழக்கம் ஆபத்தானது இதை மாற்ற வேண்டும் என்று பயத்துடன் நினைப்பீர்கள். ஆனால் வெகு சீக்கிரத்திலேயே புலிமியா நோயின் பழக்கங்களை தொடர்ந்து செய்துகொண்டே இருப்பீர்கள்” என சமூக சேவகி நான்ஸி ஜே. கோலோட்னி எழுதுகிறார்.
அனோரெக்ஸியாவும் புலிமியாவும் ஒரே “நாணயத்தின் இருபக்கங்கள்” என அழைக்கப்படுகின்றன. வித்தியாசமான அறிகுறிகளைக் கொண்டிருந்தாலும், இரண்டுமே சாப்பாட்டின்மேல் நோயாளிக்கு ஏற்பட்ட கருத்து வெறியால் விளைவன. d இருந்தாலும், அனோரெக்ஸியாவைப் போலின்றி, புலிமியாவை இரகசியமாக வைத்திருப்பது சுலபம். ஒரேயடியாக விழுங்குவது எடையை இழக்காமல் இருக்கவும், உடனே அதை வாந்தி பண்ணுவது குண்டாகாமல் இருக்கவும் நோயாளிக்கு உதவுகிறது. எனவே, பெரும்பசி நோயால் பாதிக்கப்பட்டவர் குண்டாயும் இருப்பதில்லை; ஒட்டடைக்குச்சி போலும் இருப்பதில்லை. அவளுடைய சாப்பிடும் பழக்கமும் மற்றவர்களுக்கு சாதாரணமாகத்தான் தோன்றும். “ஒன்பது வருடங்களாக, தினந்தோறும் நான்கு, ஐந்து தடவை சாப்பிடுவதும் அதை உடனே வாந்திப்பண்ணுவதுமாக இருந்தேன். . . . எனக்கிருந்த புலிமியா வியாதியைப் பற்றி யாருக்குமே தெரியாது. ஏனெனில், சராசரி உடல் எடையோடு சந்தோஷம், திறமை என்ற பொய்ப்போர்வையில் அதை பத்திரமாக ஒளித்து வைத்திருந்தேன்” என்று லின்ஸி எனும் பெயருடைய பெண்மணி கூறுகிறாள்.
இருப்பினும், வலுக்கட்டாயமாக அதிகமாக சாப்பிடும் நோயால் அவதிப்படுகிறவர் வித்தியாசப்படுகிறார். புலிமியாவால் அவதிப்படுகிறவரைப் போன்றே இவரும் ஒரே நேரத்தில் நிறைய சாப்பிடுவார். “சாப்பிட்ட சாப்பாட்டை உடனே வெளிக்கொணரும் பழக்கம் இல்லாததால், இவர் கூடுதல் எடை என்ற நிலையிலிருந்து அதிக பருமன் என்ற நிலையிலோ அல்லது குண்டானவராகவோ இருப்பார்” என த நியூ டீனேஜ் பாடி புக் குறிப்பிடுகிறது.
ஆரோக்கியத்தின் எதிரிகள்
சாப்பிடும் பழக்கத்தில் இருக்கும் இந்த மூன்று கோளாறுகளுமே ஒருவருடைய ஆரோக்கியத்தின் படுகுழிகள். அனோரெக்ஸியா, மிகக் கடுமையான ஊட்டச்சத்துக் குறைவை ஏற்படுத்துகிறது. அநேக சமயங்களில்—சிலருடைய கணிப்பின்படி, கிட்டத்தட்ட 15 சதவீதத்தினருடைய விஷயத்தில்—மரணத்தில்கூட விளைவடைந்திருக்கிறது. சாப்பிட்டதை உடனே வாந்திப்பண்ணினாலும் சரி அப்படி செய்யாவிட்டாலும் சரி, கட்டுப்பாடில்லாமல் சாப்பிடுதல் ஆரோக்கியத்திற்கு கேடு. மட்டுக்குமீறிய பருமன் நாளடைவில், உயிருக்கே ஆபத்தான நீரிழிவு, சில விதமான கேன்ஸர், இருதய சம்பந்தமான நோய்களை வருவிக்கும். வேண்டுமென்றே வாந்திப்பண்ணுதல் உணவுக்குழாயை கிழித்துவிடும். மலமிளக்கிகளையும் சிறுநீரிறக்க ஊக்கிகளையும் துர்ப்பிரயோகம் செய்வதும் உச்சக்கட்டமாக மாரடைப்பில் போய் முடியும்.
இருப்பினும், சாப்பிடும் பழக்கத்தில் இருக்கும் கோளாறில் கவனிக்க வேண்டிய மற்றொரு அம்சமும் உண்டு. அனோரெக்ஸியா, புலிமியா, கட்டுப்பாடின்றி அதிகம் சாப்பிடுதல் இந்த மூன்று கோளாறுகளாலும் அவஸ்தைப்படுகிறவர்கள், பொதுவாகவே சந்தோஷமில்லாமல்தான் இருக்கிறார்கள். சுயமரியாதை இழந்தவர்களாக இருக்கின்றனர். கவலையும் மன உளைச்சலும் அவர்களை வதைக்கிறது. அவர்களுக்கு உதவி தேவை என்பது தெள்ளந்தெளிவாக தெரிகிறது. தங்களுடைய எடையைப் பற்றிய வெறிப்பிடியில் இருந்து விடுபட, இப்படிப்பட்ட கோளாறு உடையவர்களுக்கு எப்படி உதவலாம்? இத்தொடரில் பிறகு வரும் கட்டுரை ஒன்றில் இந்த கேள்வி சிந்திக்கப்படும்.
[அடிக்குறிப்புகள்]
a அனோரெக்ஸியா ஆண்களையும் பாதிக்கிறது. இருப்பினும், இந்நோயால் அவதிப்படுகிறவர்கள் பெரும்பாலும் பெண்களே. எனவே, இதனால் அவதிப்படுகிறவர்களை பெண்பாலில் குறிப்பிடுகிறோம்.
b சராசரி எடையைவிட குறைந்தபட்சம் 15 சதவீதம் குறைந்தும், மூன்று அல்லது அதற்கும் அதிகமான மாதங்கள் மாதவிலக்கு நின்றும் இருந்தால், ஒரு பெண் அனோரெக்ஸியாவால் அவதியுறுவதாக மருத்துவ ரீதியாக சொல்லப்படலாம்.
c மலமிளக்கிளை அல்லது சிறுநீரிறக்க ஊக்கிகளை பயன்படுத்துதலே, சாப்பிட்டதை வெளியே கொணரும் மற்ற வழிகள்.
d நோயாளிகளில் அநேகர் அனோரெக்ஸியா, புலிமியா ஆகிய இரண்டு நோய்களின் அறிகுறிகளை மாறிமாறி கொண்டிருப்பர்.
[பக்கம் 14-ன் பெட்டி]
உடல் தோற்றம் பற்றிய தவறான எண்ணம்
காரணமே இல்லாமல் கன்னியர் பலர், தங்களுடைய எடையைப் பற்றி மனதை போட்டு அலட்டிக் கொள்கின்றனர். ஓர் ஆய்வில், 5 முதல் 17 வயதுக்குட்பட்ட பெண்பிள்ளைகளில் 58 சதவீதத்தினர் தாங்கள் குண்டாக இருப்பதாக நினைத்தனர்; ஆனால் உண்மையில் 17 சதவீதத்தினரே அப்படி இருந்ததாக அந்த ஆய்வு குறிப்பிடுகிறது. மற்றொரு ஆய்வில் 45 சதவீத பெண்கள், தாங்கள் மிகவும் பெருத்திருப்பதாக கற்பனை செய்துகொண்டனர், ஆனால் உண்மையில் அவர்கள் சாதாரண எடையையும்விட குறைவாக இருந்தனர் என்று அந்த ஆய்வு தெரியப்படுத்தியது! கனடா நாட்டு பெண்களில் 70 சதவீதத்தினர் தங்களுடைய எடையைப் பற்றித்தான் ரொம்ப கவலைப்படுகின்றனர். மேலும், 40 சதவீதத்தினர் எடையை குறைப்பதும் மறுபடியும் எடைகூடுவதும் போன்ற நிலையற்ற சாப்பாட்டு பழக்கத்தை உடையவராய் இருக்கின்றனர் என்றும் அந்நாட்டு ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
உடல் தோற்றத்தைப் பற்றிய தவறான கருத்தால், உண்மையில் பிரச்சினையே இல்லாத ஒன்றை பற்றி சில யுவதிகள் அதிகம் அலட்டிக்கொள்கின்றனர். “எடையை குறைப்பதற்காக மாத்திரைகளை சாப்பிடுவாள் என்னுடைய தோழி ஒருத்தி. அனோரெக்ஸியாவால் அவஸ்தைப்படும் சிலரை எனக்கு தெரியும்” என்று 16 வயது கிறிஸ்டின் சொல்கிறாள். மேலும், “அவர்களைப் பார்த்தப்பின், கற்பனையில்கூட யாருமே அவர்கள் குண்டாக இருப்பதாக சொல்லவே முடியாது” என அவள் கூறுகிறாள்.
“நீங்கள் விரும்புகிறதுபோல் ஒல்லியாக இல்லை என்பதாலோ அல்லது ‘மற்றவர்கள்’ செய்கிறார்களே என்றோ சாப்பாட்டை குறைத்து டயட்டில் இருக்காதீர்கள். மாறாக, அதிக எடையோடு பருமனாக இருக்கிறீர்களா அல்லது உங்கள் வயதிற்கும் உயரத்திற்கும் இருக்க வேண்டிய அளவைவிட அதிகமாக உடலில் கொழுப்பு இருக்கிறதா என்பதை முதலில் ஒரு டாக்டரிடமோ அல்லது ஊட்டச்சத்து நிபுணரிடமோ கேளுங்கள்” என FDA கன்ஸ்யூமர் பத்திரிகை நல்ல நோக்கத்தோடு சிபாரிசு செய்கிறது.
[பக்கம் 15-ன் படம்]
காரணமே இன்றி அநேகர் தங்களுடைய எடையைப் பற்றி அதிகம் கவலைப்படுகின்றனர்