கிறிஸ்தவ—சமயச் சீர்திருத்தம் மாற்றத்தின் காலம்
“மாற்றத்திலும் மறுமதிப்பீட்டிலும் மூழ்கியிருந்த ஓர் சகாப்தம்.”
பதினாறாம் நூற்றாண்டு இங்கிலாந்தை ஜெ. ஜெ. ஸ்காரஸ்பிரிக் என்பவர் தாம் எழுதிய எட்டாம் ஹென்றியின் வாழ்க்கை சரிதையில் இவ்வாறுதான் விவரிக்கிறார். ஐரோப்பாவில் ஏற்பட்ட மத மறுமலர்ச்சி, பாரம்பரிய மதங்கள் சீர்திருத்தப்பட வேண்டுமென எண்ணம்கொள்ள சிலரைத் தூண்டியது.
மார்ட்டின் லூத்தரின் ஆட்சேபணைக்குரிய போதனைகளுக்கு இங்கிலாந்தில் ஆதரவாளர்கள் இருந்தனர். பைபிளை ஆதரித்து வைராக்கியமாக பிரசங்கித்த வைகிளிஃப்பின் சீடர்கள் கடும் இன்னல்களை சகித்தனர். 14-ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து அதன் போதனைகளை இங்கிலாந்து முழுவதும் பரப்பினர்.
1526-ம் வருடத்திற்குள் வில்லியம் டின்டேலின் கிரேக்க வேதாகமத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு இங்கிலாந்தையும் எட்டியிருந்தது. அது விநியோகிக்கப்படுவதை தடுக்க நினைத்த செல்வாக்குமிக்க எதிரிகளுடைய முயற்சிகளின் மத்தியிலும் இங்கிலாந்துக்குள் நுழைந்தது. உத்தரிக்கும் ஸ்தலம், அப்பமும் திராட்சை ரசமும் கிறிஸ்துவின் உடலாகவும் இரத்தமாகவும் மாறுதல், பாதிரிகளின் பிரமச்சரியம் போன்ற பாரம்பரிய கத்தோலிக்க போதகங்கள் பைபிள் ஆதாரமற்றவை என வெளிச்சம்போட்டு காட்டப்பட்டன.
ஆனால் அரசரின் குடும்ப விவகாரத்தில் ஏற்பட்ட குழப்பமே கிறிஸ்தவ சமயச் சீர்த்திருத்தம் எனும் எரிகிற கொல்லிக்கு எண்ணெய் வார்த்தது. எட்டாம் ஹென்றி, ஆரகனைச் சேர்ந்த தன்னுடைய கத்தோலிக்க மனைவி காத்தரீனை மணவிலக்கு செய்ய முயன்றார். ஏனென்றால், அரியணைக்கு ஆண் வாரிசை விரும்பினார். காத்தரீனின் ஆறு குழந்தைகளில், மேரி என்ற பெண் குழந்தையைத் தவிர அனைத்துமே இறந்து பிறந்தன அல்லது சிசுவிலேயே இறந்தன. அதுமட்டுமல்லாமல், இளமையும், இனிமையும் நிறைந்த ஆன் பொலீன்மீது ஹென்றி காதல் கொண்டு அவரை மணந்துகொள்ள விரும்பினார்.
கார்டினல் தாமஸ் வுல்சி ஹென்றியின் நெருங்கிய நண்பர், திறமைசாலியும்கூட. இவர் தன்னை அறியாமலேயே இச்சமயச் சீர்திருத்தத்திற்கு இன்னுமதிக தூண்டுதலை அளித்தார். ஹென்றியின் ஆளுகைக் காலம் துவங்கிய 1509-ல் இருந்தே வுல்சி ஏராளமான செல்வத்தையும் அதிகாரத்தையும் பெற்றார். படிப்படியாக, அரசருக்கு அடுத்த ஸ்தானத்திற்கு உயர்ந்தார். ஆனால் ஆணவத்துடன் அதிகாரம் செலுத்தி, வரிகளை உயர்த்தியதன் காரணமாக மக்களிடம் செல்வாக்கு பெறவில்லை. இதற்கும் மேலாக, சர்ச்சின் சட்டதிட்டங்களுக்கு கீழ்ப்படிய வேண்டிய அவசியமில்லை என அவர் கருதினதாக தோன்றியது. ஏனென்றால், முறைகேடாகப் பிறந்த இரண்டு பிள்ளைகளுக்கு தகப்பனானார்.
ஹென்றி மிக அவசரமாக நாடிய மணவிலக்கை வுல்சி பெற்றுத்தர தவறியதால் அவருக்கு முடிவுகட்ட தீர்மானிக்கப்பட்டது. அவருடைய வீழ்ச்சியை பிரபுக்கள் சூழ்ச்சி செய்தனர். பதவியிலிருந்து நீக்கப்பட்டவராக, 1530-ம் ஆண்டு ராஜதுரோக குற்றத்திற்காக விசாரணை செய்யப்படுவதற்கு சற்றுமுன் இறந்தார்.
இங்கிலாந்தில் பாதிரிகளுக்கு எதிராக மக்களின் மனநிலை வலுத்தது. “சர்ச்சிலிருந்து வேண்டாதவர்களை அகற்றி அடியோடு மாற்ற வேண்டும், ஒரு பைசாவுக்கும் உதவாத இச்சுமையை இந்தச் சமுதாயத்தால் இனிமேலும் சுமக்க முடியாது. மனித சக்தியை சக்கையாக பிழிந்தெடுத்து, பெருஞ்செல்வத்தை பயன்படுத்தாமல் முடக்கிப்போட்டு, அதிகத்தை வாரியெடுத்துக்கொண்டு கொஞ்சத்தையே திருப்பிக் கொடுத்து . . . இங்கிலாந்தின் பணத்தை ரோமுக்கு வாரியிறைத்த . . . இந்த மிகப்பெரிய அமைப்பு [இங்கிலாந்தின்] பொருளாதாரத்தையே சீரழித்துவிட்டது என்பதாக வாதிட்டனர்” என சரித்திர ஆசிரியர் ஸ்காரஸ்பிரிக் எழுதினார்.
கிராம்வெல்லின் சகாப்தம்
கடைசியாக, ஹென்றியின் முக்கிய ஆலோசகர் தாமஸ் கிராம்வெல், காண்டர்பரியின் புதிய தலைமை பிஷப்பான தாமஸ் கிரான்மர் ஆகியோரின் உதவியால் ஹென்றியின் திருமணச் சிக்கல்கள் “தீர்க்கப்பட்டன.” ஆங்கில சர்ச் ரோம சர்ச்சைவிட்டு பிரிந்தது. அரசர் ஆங்கில சர்ச்சின் தலைவரானார். 1533-ல் ஹென்றி-காத்தரீனின் திருமணத்தை கிரான்மர் சட்டப்படி செல்லாததாக்கினார். இதற்குள்ளாக, ஹென்றி ஆன் பொலீனை மணம் செய்திருந்தார்; அவரும் கருவுற்றிருந்தார். போப்பின் அதிகாரத்திலிருந்து இவ்வாறு விடுவிக்கப்பட்டது பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தியது.
சர்ச்சின்மீது கிராம்வெல்லுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டது. அவர் அரசருக்கு அடுத்த ஸ்தானத்தில் இருந்தார். படிப்படியாக, மடங்கள் ஒழிக்கப்பட்டன; அவற்றின் சொத்துக்கள் அரசுடைமை ஆக்கப்பட்டன; இதனால் அரசின் கஜானா நிரம்பி வழிந்தது. அதுமட்டுமல்லாமல், பைபிளை ஆங்கிலத்தில் அச்சிட்டு வெளியிடுவதிலும் கிராம்வெல் முக்கியப் பங்கு வகித்தார். ஏ. ஜி. டிக்கன்ஸ் தான் எழுதிய கிறிஸ்தவ சமயச் சீர்திருத்தம் என்ற ஆங்கில நூலில் இதைக் குறிப்பிடுகிறார்: “ஆங்கிலச் சர்ச்மீது பைபிளை திணிப்பதற்கான வற்புறுத்தல், அதற்கான அரசியல் முன்முயற்சியெடுத்தல், பிரசுரிப்பதற்கான திட்டமிடுதல், நிதியுதவி அளித்தல் ஆகியவற்றை அரசரின் துணை நிர்வாகியான தாமஸ் கிராம்வெல் செய்தார்.”
பைபிள் பொதுமக்களின் கைக்கு கிடைப்பது சுலபமானபோது, பாரம்பரிய மதத்தின்மீது மக்களுக்கு இருந்த அபிப்பிராயத்தை வெகுவாக பாதித்தது. டிக்கன்ஸ் எழுதினார்: “இயேசு கிறிஸ்து மற்றும் அவருடைய அப்போஸ்தலர்களுடைய ஆர்ப்பாட்டமில்லாத எளிமையோடு ஒப்பிடுகையில், மத்திப கால பிற்பகுதியில் இருந்த மறுமலர்ச்சி சர்ச்சின் மிகப்பெரிய சட்ட நிறுவனம், வற்புறுத்துகிற அரசாங்க அமைப்பு, குவிந்துகிடந்த சொத்துக்கள், எழில்மிகு கட்டடக்கலைகள் ஆகியவை நம்பமுடியாதளவுக்கு மாறுபட்டு நின்றன.”
சில மத சீர்திருத்தங்களில் ஹென்றி ஆர்வம் காட்டினார். ஆனால் அவருடைய கொள்கைகள், உறுதியான மத நம்பிக்கைகளுக்குப் பதிலாக பெரும்பாலும் அரசியல் ஆதாயத்தாலேயே செல்வாக்கு செலுத்தப்பட்டன. தன்னுடைய அவையில் இருந்த இரண்டு எதிரணியினரைப் பற்றி அவர் நன்றாய் அறிந்திருந்தார். அதாவது, சீர்த்திருத்தவாதிகள் ஒரு பக்கம், பாரம்பரிய மதத்தை ஆதரித்த பழமைவாதிகள் மறுபக்கம். இருசாராரின் மீதுமுள்ள அதிகாரத்தை தன் கையில் வைத்திருப்பதற்காக, மிகவும் தந்திரமாக, இருசாராருக்கும் இடையில் சண்டை மூட்டிவிட்டார்.
1540-க்குள்ளாக சீர்திருத்தத்தின் பொற்காலம் கிராம்வெல்லின் வீழ்ச்சியால் தற்காலிகமாக தடைபட்டது. பழமைவாதிகளான அவருடைய எதிரிகள் அவரை துரோகி எனவும், சர்ச்சின் கோட்பாட்டுக்கு முரணானவர் எனவும் ஹென்றியை நம்பும்படிச் செய்தனர். எனவே அவர் எவ்வித விசாரணையும் இன்றி கொல்லப்பட்டார்.
சில காலங்களுக்கு, பழமைவாதிகளின் கை ஓங்கி இருப்பதைப் போன்று தோன்றியது. ஆனால் ஏற்கெனவே வேரூன்றிய சீர்திருத்தத்தை அவர்களால் களைந்தெறிய முடியவில்லை. அதோடு, சீர்திருத்தம் அதன் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ரோமன் கத்தோலிக்க விசுவாசத்தைக் கறைபடுத்திய மனிதரின் பாரம்பரியங்களையும் பொய் போதகங்களையும் அறவே நீக்குவதில் புராட்டஸ்டன்ட் சீர்திருத்தவாதிகள் தோல்வியுற்றனர்.
1543-ல் ஹென்றி தன்னுடைய ஆறாவதும் கடைசியுமான மனைவியாகிய காத்தரீன் பாரை திருமணம் செய்தபோது, சீர்திருத்தவாதிகள் உற்சாகமடைந்தனர். புதிய மத போதனைகளில் அவள் அதிக ஆர்வம் காட்டினாள். ஆனால் பழமைவாதிகள் போராடாமல் விட்டுக் கொடுப்பதற்கு தயாராக இல்லை. அவர்களுடைய சூழ்ச்சிகளும், அவையில் நடந்த சதித்திட்டங்களும் புதிய ராணிக்கு குழப்பத்தை உண்டுபண்ணின; அவளுடைய வாழ்க்கையில் கடும் போராட்டத்தை ஏற்படுத்தின. இது விழித்தெழு!-வின் மற்றொரு இதழில் சிந்திக்கப்படும்.
[பக்கம் 26-ன் படம்]
எட்டாம் ஹென்றியும் ஆன் பொலீனும்
[பக்கம் 26-ன் படம்]
ஆரகனைச் சேர்ந்த காத்தரீன்
[பக்கம் 26-ன் படம்]
வில்லியம் டின்டேல்
[பக்கம் 26-ன் படம்]
தாமஸ் கிராம்வெல்
[பக்கம் 26-ன் படம்]
தாமஸ் கிரான்மர்
[பக்கம் 26-ன் படம்]
தாமஸ் வுல்சி
[பக்கம் 27-ன் படத்திற்கான நன்றி]
தாமஸ் வுல்சி: The Story of Liberty, 1878 புத்தகத்திலிருந்து; டாப் சென்டர், பின்னணி வடிவமைப்பு, மற்றும் ஆன் பொலீனுடன் அரசர் எட்டாம் ஹென்றி: The Library of Historic Characters and Famous Events, Vol. VII, 1895 புத்தகத்திலிருந்து; ஆரகனைச் சேர்ந்த காத்தரீன், தாமஸ் கிரான்மர், மற்றும் தாமஸ் கிராம்வெல்: Heroes of the Reformation, 1904 புத்தகத்திலிருந்து.