அட்டூழியங்கள்—கடவுளின் தீர்வு?
அட்டூழியங்கள் நடக்காமல் தடுக்க முடியுமா? அதற்கு தீர்வு உண்டா? சரித்திரத்தை படிக்கும்போது, மனிதர்கள் அதற்கு தீர்வு காண முயன்று தோற்றுப் போயிருக்கிறார்கள் என்பது நமக்கு தெளிவாகிறது. உண்மையாக பார்த்தால், மனித தலைவர்கள் இந்த விஷயத்தை அணுகியிருப்பதில் மிகப் பெரிய முரண்பாடு, அல்லது வெளிப்படையான பாசாங்குத்தனம் தெரிகிறது.
உதாரணமாக, 1995-ம் வருடத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அது இரண்டாம் உலகப் போரின்போது நடந்த நாசிக்களின் யூதப் படுகொலை, அணுகுண்டு வெடிப்பு ஆகியவற்றின் 50-ம் ஆண்டு நிறைவாக இருந்தது. அந்த வருடத்தில், உலகின் பல்வேறு பாகங்களில் அதையொட்டி நடந்த நிறைவு விழாக்களில் உலகத் தலைவர்கள் கலந்து கொண்டனர். ஏன்? இந்த அட்டூழியங்கள் மீண்டும் நிகழ்வதை தாங்கள் கடுமையாக ஆட்சேபிக்கிறார்கள் என்று காட்டிக் கொள்வதற்காக. ஆனால், அத்தகைய நிகழ்ச்சிகளில், ஒருவித முரண்பாட்டை சிலர் கவனித்திருக்கின்றனர்.
பாசாங்குத்தனம்
பெரும் பிரசித்திபெற்ற இந்த விழாக்களில், மதத் தலைவர்களும், அரசாங்க பிரதிநிதிகளும் தங்களை நன்மைகளுக்காக பாடுபடுகிறவர்களாக காட்டிக்கொண்டனர். இல்லையென்றால், குறைந்தபட்சம் கெட்டது செய்பவர்கள் என மற்றவர்கள் எண்ணுவதை தவிர்க்கவாவது முயலுகின்றனர். ஆனாலும் கடந்தகால அட்டூழியங்களை கண்டனம் செய்யும் நாடுகள் தங்கள் கைவசம் ஆயுதங்களை குவித்து வைத்திருக்கின்றன. அதற்காக கோடிக்கணக்கான பணத்தை ஒதுக்கி வைத்திருக்கின்றன. அதே நேரத்தில், வறுமை, ஒழுக்க சீர்கேடு, சுற்றுப்புற தூய்மைக்கேடு ஆகிய மிக அவசியமான பிரச்சினைகளைக் கண்டுகொள்ளாமல் இருக்கின்றன. அதைப்பற்றி கேட்டால், எங்களிடம் போதுமான பணம் இல்லை என்ற ரெடிமேட் பதிலைச் சொல்கிறார்கள்.
சர்வாதிகாரிகள் செய்த அட்டூழியங்கள் எல்லாவற்றையும் கண்டும் காணாததுபோல இருந்து மௌனம் சாதித்த இந்த உலகின் மதங்கள் அதை மறைக்கும் வண்ணமாக சரித்திரத்தை எழுத முயலுகின்றன. அதோடு அத்தகைய நபர்களோடு அது வைத்திருந்த ரகசிய உறவையும் வெளிப்படுத்தாமல் அமுக்கி வைக்கின்றன. தங்களுடைய மதத்தை சேர்ந்தவர்கள் ஒருவரையொருவர் வெட்டிக் கொன்றபோது இவை கைகட்டிக் கொண்டு சும்மா நின்றிருந்தன. உதாரணமாக, இரண்டாம் உலகப் போரில், கத்தோலிக்கர் கத்தோலிக்கரைக் கொன்றனர். புராட்டஸ்டண்டினர் புராட்டஸ்டண்டினரைக் கொன்றனர். இதற்குக் காரணம்? அவர்கள் வெவ்வேறு நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்ததும் எதிரணியில் இருந்ததுமே. இரு சாராருமே தங்களை கிறிஸ்தவர்கள் என மார்தட்டிக் கொண்டனர். ஆனால், இயேசுவின் போதனைகளுக்கு நேர்விரோதமாக இருந்தவற்றையே செய்தனர். (மத்தேயு 26:52; யோவான் 13:34, 35; 1 யோவான் 3:10-12; 4:20, 21) இவர்கள் மட்டுமல்ல, மற்ற மதங்களைச் சேர்ந்தவர்களும் இப்படித்தான் செய்திருக்கிறார்கள். உலகின் பல்வேறு பாகங்களில், இத்தகைய மதங்களின் அங்கத்தினர்களால் இன்றும்கூட அட்டூழியங்கள் செய்யப்படுகின்றன.
இயேசு வாழ்ந்த காலத்தில், மதத் தலைவர்கள் மாய்மாலம் செய்தனர். இயேசு அவர்களை கண்டனம் செய்து இவ்வாறு சொன்னார்: “மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் தீர்க்கதரிசிகளின் கல்லறைகளைக் கட்டி, நீதிமான்களின் சமாதிகளைச் சிங்காரித்து: எங்கள் பிதாக்களின் நாட்களில் இருந்தோமானால், அவர்களோடே நாங்கள் தீர்க்கதரிசிகளின் இரத்தப்பழிக்கு உடன்பட்டிருக்கமாட்டோம் என்கிறீர்கள். ஆகையால், தீர்க்கதரிசிகளைக் கொலை செய்தவர்களுக்குப் புத்திரராயிருக்கிறீர்கள் என்று உங்களைக்குறித்து நீங்களே சாட்சிகளாயிருக்கிறீர்கள்.” (மத்தேயு 23:29-31) மதத் தலைவர்கள் தங்களை தெய்வ பக்தியுள்ளவர்கள் என மெச்சிக் கொண்டார்கள். ஆனால் உண்மையில் பாசாங்குக்காரர்களாக இருந்தார்கள். அவர்கள் இயேசுவையும் அவருடைய சீஷர்களையும் துன்புறுத்தினார்கள்.
பைபிளிருந்து கற்றுக்கொள்ளும் பாடங்கள்
சரித்திரத்திலிருந்தும்கூட பாடங்களைக் கற்றுக் கொள்ளலாம். ஆனால் பைபிள்தானே மிகப் பயனுள்ள பாடங்களின் ஊற்றுமூலமாக இருக்கிறது. அது சரித்திரத்தை விளக்கும் பொறுப்பை மனித தீர்ப்புக்கோ தப்பெண்ணத்துக்கோ விடுகிறதில்லை. மாறாக, அது சரித்திரத்தையும் எதிர்காலத்தையும் கடவுளுடைய நோக்குநிலையில் விளக்குகிறது.—ஏசாயா 55:8, 9.
வேதவசனங்கள், நல்ல சம்பவங்களையும் கெட்ட சம்பவங்களையும் எடுத்துரைப்பதோடு, நல்லவர்களையும் கெட்டவர்களையும் பற்றியும் சொல்கின்றன. பெரும்பாலும் கடவுளுடைய சித்தத்திற்கு இசைவான சரியான பாடத்தை இந்தப் பதிவுகளிலிருந்து நாம் கற்றுக் கொள்ளலாம். பூர்வ இஸ்ரவேல் மக்களின் சரித்திரத்தில் நடந்த சம்பவங்கள் பலவற்றை குறிப்பிட்டபிறகு, அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு முடித்தார்: “இவைகளெல்லாம் திருஷ்டாந்தங்களாக அவர்களுக்குச் சம்பவித்தது; உலகத்தின் முடிவுகாலத்திலுள்ள நமக்கு எச்சரிப்புண்டாக்கும்படி எழுதப்பட்டும் இருக்கிறது.” (1 கொரிந்தியர் 10:11) நடந்த சரித்திரத்திலிருந்து இயேசுவும்கூட தம்முடைய சீஷர்களுக்கு ஒரு பாடத்தை புகட்டினார்: “லோத்தின் மனைவியை நினைத்துக் கொள்ளுங்கள்.”—லூக்கா 17:32.
கடவுள் நினைப்பவையும் மறப்பவையும்
மனிதர்களுடைய செயல்களைப் பொறுத்து கடவுள் அவர்களை நினைவில் வைக்கவோ மறக்கவோ செய்கிறார் என்று நாம் பைபிளிலிருந்து கற்றுக் கொள்கிறோம். பாவம் செய்துவிட்டாலும்கூட, மனந்திரும்புகிறவர்களை மன்னிக்கிறதற்கு கடவுள் “தயை பெருத்திருக்கிறார்.” (ஏசாயா 55:7) துன்மார்க்கன் மனந்திரும்பி, ‘தன் பாவத்தைவிட்டுத் திரும்பி, நியாயமும் நீதியுஞ்செய்தால், . . . அவனுடைய எல்லாப் பாவங்களும் அவனுக்கு விரோதமாக நினைக்கப்படுவதில்லை.’—எசேக்கியேல் 33:14-16.
“தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே” என்று பவுல் எழுதினார். (எபிரெயர் 6:10) இவ்விதமாக, யெகோவாவின் மனதில் இடத்தைப் பெற்றவர்கள் அவரால் வெகுமதி அளிக்கப்படுவார்கள். பக்திமானாகிய யோபு இவ்வாறு வேண்டுதல் செய்தார்: “நீர் என்னைப் பாதாளத்தில் [மனிதவர்க்கத்தின் பொது பிரேதக்குழி] ஒளித்து, . . . என்னைத் திரும்ப நினைக்கும்படிக்கு எனக்கு ஒரு காலத்தைக் குறித்தால் நலமாயிருக்கும்.”—யோபு 14:13.
மறுபட்சத்தில், மோசேயிடம் அவர் சொன்னபடி, மனந்திரும்பாத கொடியவர்களின் பெயரை ‘தம் புஸ்தகத்திலிருந்து கிறுக்கிப்போடுவார்.’ (யாத்திராகமம் 32:33) ஆம், கொடியவர்களை கடவுள் என்றென்றுமாக மறந்துவிடுவார்.
இறுதி தீர்ப்பாளர்
கடவுளே சரித்திரத்திற்கு இறுதி தீர்ப்பாளராக இருக்கிறார். (ஆதியாகமம் 18:25; ஏசாயா 14:24, 27; 46:9-11; 55:11) அவருடைய மேன்மையான தீர்ப்பின்படி, மனிதருக்கு எதிராக இழைக்கப்பட்ட எண்ணற்ற அட்டூழியங்களை அவர் மறந்துவிடமாட்டார். அவருடைய நீதியுள்ள கோபம் பற்றியெரியும் நாளிலே இதற்குப் பொறுப்பாளிகளாயிருக்கும் மனந்திரும்பாத எல்லா மனிதர்களையும் அமைப்புகளையும் அவர் நியாயந்தீர்ப்பார்.—வெளிப்படுத்துதல் அதிகாரங்கள் 18, 19.
இவற்றுள் உலகெங்குமுள்ள எல்லா பொய் மதங்களும் அடங்கும். இந்தப் பொய் மதங்கள் பைபிளில் “மகா பாபிலோன்” என்ற அடையாளப் பெயரில் அழைக்கப்படுகிறது. அவளைப் பற்றி இவ்வாறு எழுதப்பட்டிருக்கிறது: “அவளுடைய பாவம் வானபரியந்தம் எட்டினது, அவளுடைய அநியாயங்களை தேவன் நினைவுகூர்ந்தார்.”—வெளிப்படுத்துதல் 18:2, 5.
தங்களுடைய மதத்தைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு இவை சரியான காரியங்களைச் செய்வதற்கு கற்றுக் கொடுத்திருக்க வேண்டும். அந்தோ! அவ்விதம் செய்யத் தவறிவிட்டன. எனவே, கடவுளுடைய வார்த்தை இந்த உலகின் எல்லா மதங்களைக் குறித்து இவ்விதம் சொல்கிறது: “தீர்க்கதரிசிகளுடைய இரத்தமும் பரிசுத்தவான்களுடைய இரத்தமும் பூமியில் கொல்லப்பட்ட அனைவருடைய இரத்தமும் அவளிடத்தில் காணப்பட்டது.” (வெளிப்படுத்துதல் 18:24, நேரெழுத்துக்கள் எங்களுடையவை.) இந்த மதங்கள், மனிதருக்கு மனிதர் அன்புகாட்ட வேண்டும், அவர்கள் வேறு மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அன்பு காட்டவேண்டும் என்பதை தங்கள் அங்கத்தினர்களுக்கு கற்றுக்கொடுக்க தவறிவிட்டதன் காரணமாக இரத்தப்பழி உள்ளவையாக இருக்கின்றன.
புதிய உலகம் சமீபம்!
தீயவை அனைத்தும் பூண்டோடு அழியும் காலம் நெருங்கிவிட்டது. (செப்பனியா 2:1-3; மத்தேயு 24:3, 7-14) அதற்கப்புறம், பூமியில் வாழும் மகிழ்ச்சியான குடிமக்களுக்கு ‘துக்கமில்லாத, அலறுதலில்லாத, வருத்தமில்லாத’ ஒரு காலம் வரவிருக்கிறது. (வெளிப்படுத்துதல் 21:3-5) இந்தப் பூமியை ஆட்சி செய்யும் பொறுப்பு மனிதர் கையிலிருந்து பறிக்கப்பட்டு, கடவுளுடைய பரலோக அரசாங்கத்திடம் கொடுக்கப்படும். அதை “சமாதானப் பிரபு” இயேசு கிறிஸ்து ஆளுவார். எனவே, குரூர செயல்களும் படுகொலைகளும் இனி ஒருபோதும் நிகழாது.—ஏசாயா 9:6, 7; தானியேல் 2:44; மத்தேயு 6:9, 10.
அச்சமயத்தில் சங்கீதம் 46:9-ல் உள்ள தீர்க்கதரிசனம் முழுமையாக நிறைவேற்றப்படும். “[கடவுள்] பூமியின் கடைமுனைமட்டும் யுத்தங்களை ஓயப்பண்ணுகிறார்.” அச்சமாதானம் என்றென்றும் நீடித்திருக்கும். ஏனென்றால், ஏசாயா 2:4-ல் இவ்வாறு முன்னுரைக்கப்பட்டுள்ளது: “ஜாதிக்கு விரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.” சங்கீதம் 37:11 இவ்வாறும் முன்னுரைக்கிறது: “சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.” ஆம், “மண்ணுலகம் முழுவதும் இளைப்பாறி அமைதியில் மூழ்கியிருக்கின்றது; மகிழ்ச்சியால் ஆர்ப்பரித்து ஆரவாரம் செய்கின்றது” என்று அப்போது நிச்சயமாகவே சொல்ல முடியும்.—ஏசாயா 14:7, பொ.மொ.
நீதியுள்ள புதிய உலகம் அருகில் இருக்கிறது என்பதை இவையெல்லாம் தெரிவிக்கின்றன. கடவுளுடைய பரலோக அரசாங்கம் ஆட்சி செய்யும் அந்தப் புதிய உலகில், மற்றொரு அதிசயமான சம்பவம் நடைபெறும். அதாவது, இறந்துபோனவர்கள் மீண்டும் உயிர் பெறுவார்கள்! கடவுளுடைய வார்த்தை இவ்வாறு உத்தரவாதமளிக்கிறது: “நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பது உண்[டு].”—அப்போஸ்தலர் 24:15.
பூமியில் உயிர் வாழ்கையில், இறந்துபோன ஆட்களை உயிர்ப்பித்ததன்மூலம் இயேசு இதை நடத்திக் காண்பித்தார். உதாரணமாக, ஒரு இளம் பெண்ணை அவர் உயிர்த்தெழுப்பியதைக் குறித்து பைபிள் பதிவு இவ்வாறு சொல்கிறது: “உடனே சிறுபெண் எழுந்து நடந்தாள். . . . அவர்கள் [கவனித்துக் கொண்டிருந்தவர்கள்] மிகுந்த ஆச்சரியப்பட்டுப் பிரமித்தார்கள்.” (மாற்கு 5:42) இதைப் போலவே, குரூரமாக கொல்லப்பட்டவர்களும், நீண்ட காலத்துக்கு முன்பு இறந்துபோன மற்றவர்களும் மறுபடியுமாக உயிரளிக்கப்பட்டு, பூங்காவனமான இந்தப் பூமியில் என்றென்றும் வாழும் வாய்ப்பை பெறுவார்கள். (லூக்கா 23:43) காலப்போக்கில், “முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை.”—ஏசாயா 65:17.
கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளின் திருத்தமான அறிவைப் பெற்றுக்கொண்டு அவருடைய சித்தத்தைச் செய்வதே நீங்கள் செய்யவேண்டிய ஞானமான செயல். அப்போதுதான், கடவுள் இந்த அட்டூழியங்களுக்கெல்லாம் என்றென்றைக்குமாக முடிவுகட்டி, பலியானவர்களை உயிர்ப்பிக்கும்போது, உங்களையும் நினைத்து, அநுக்கிரகம் செய்வார். ஏனென்றால், இயேசு சொன்னார்: “ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.”—யோவான் 17:3.
[பக்கம் 8, 9-ன் படங்கள்]
கடவுள் இந்தப் பூமியை அமைதி தவழும் பூங்காவாக மாற்றுவார்
[பக்கம் 10-ன் படங்கள்]
இறந்துபோனவர்களை உயிர்ப்பிப்பதன் மூலம் கடந்த காலத்தில் நடந்த அட்டூழியங்களின் பாதிப்புகளை கடவுள் நீக்குவார்