மன்னித்து மறப்பதென்ன—சாமானியமா?
அது, வருடம் 1945. இரண்டாம் உலகப் போர் எனும் கடும் புயல் வீசி ஓய்ந்தது. அது நடந்து இப்போது ஐம்பதுக்கும் மேற்பட்ட வருடங்கள் உருண்டோடிவிட்டன. அது மனித சரித்திரத்திலேயே மிகவும் காட்டுமிராண்டித்தனமான ஒரு போர், எக்கச்சக்கமான பணத்தை விழுங்கிய ஒரு போர்.
இரண்டாம் உலகப் போர் ஆறு ஆண்டுகள் நீடித்தது. பொதுமக்கள் உட்பட சுமார் ஐந்து கோடி மக்களின் உயிரைக் குடித்தது. அப்போரால், உடலிலும் மனதிலும் உணர்ச்சியிலும் காயமுற்றவர்களின் எண்ணிக்கைக்கு அளவே இல்லை. இழைக்கப்பட்ட கொடுமைகளோ எண்ணற்றவை. நெஞ்சார நேசித்தவர்களின் இழப்பு தாள முடியாதவை. கொடுமைக்கு மேல் கொடுமை நடந்த அந்த வருடங்களில் வாழ்ந்த அநேகருக்கு, நெஞ்சைப் பிளக்கும் இவைபோன்ற நினைவுகள் ஆறாத மனப்புண்கள்.
யூதப் படுகொலையின்போது நாசிக்கள் இழைத்த கொடுமைகளின் நினைவுகளும் அநேகருடைய நெஞ்சைவிட்டு நீங்கவில்லை. அவர்கள் லட்சக்கணக்கான அப்பாவிகளை கொன்று குவித்தனர். ஐரோப்பாவிலும், ஆசியாவிலும் படையெடுத்த நாட்டினரின் அட்டூழியங்களோ ஏராளம். அவர்கள் பொதுமக்களை கொலை செய்தனர், கற்பழித்தனர், சூறையாடினர், பீதிக்குள்ளாக்கினர். அதுமட்டுமா, அநேகர் விமானத் தாக்குதல்களுக்கும்கூட பலியானார்கள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆகிய எண்ணற்ற அப்பாவிகளின் வாழ்க்கையை பாழாக்கி, காயப்படுத்தி, உயிரைப் பறித்தது. உலக முழுவதும் போர்க்களங்களில் போர் புரிந்த கோடிக்கணக்கான வீரர்கள் பட்ட கஷ்டங்களை விவரிக்க வார்த்தைகளே இல்லை.
ஆறாத மனப்புண்கள்
இரண்டாம் உலகப் போரின்போது ஏற்பட்ட குரூரமான செயல்களால் அவதிப்பட்ட எக்கச்சக்கமான ஆட்களுக்கு அது ஆறாத தழும்பை ஏற்படுத்தியுள்ளது. அவற்றைக் கண்டு, இன்றும் உயிரோடிருப்பவர்களுடைய மனதில், அவை கல்லில் எழுதிய எழுத்தைப் போல் பதிந்துவிட்டன. சகிக்க முடியாத அந்தக் கசப்பான நினைவுகளை அழித்துப் போடத்தான் நினைக்கிறார்கள். அந்தோ! முடியவில்லையே. சிலருக்கு, பீதியூட்டும் அச்சம்பவங்கள் திரும்பத் திரும்ப வரும் கொடுங்கனவைப் போல் சித்திரவதை செய்கின்றன.
பழிவாங்கத் துடிப்பதாலும், இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த நினைப்பதாலும் சிலர் அதை மறக்க விரும்புவதில்லை. அதோடு, நிகழ்ந்த அட்டூழியங்கள் பொதுமக்களின் மனதில் அழியாது இருந்தால்தான், அவை மீண்டும் நிகழாது என்ற பரவலான எண்ணமும்கூட இதற்குக் காரணம்.
ஒருசில வருடங்களுக்கு முன்பு, அதாவது 1994-95-ம் வருடங்களில், டி-தினம் (D day) (ஜூன் 1944-ல் நேச நாடுகள் நார்மன்டியின்மீது படையெடுத்த நாள்) மற்றும் இரண்டாம் உலகப் போரில் ஐரோப்பியர் வகித்த பங்கு முடிவடைந்ததற்குமான (மே 1945) 50-வது ஆண்டு நிறைவு விழாக்கள் கொண்டாடப்பட்டன. அந்த அட்டூழியங்களைக் கண்ணாரக் கண்டவர்களுக்கு அவற்றை மன்னித்து மறப்பது மிகவும் கடினம் என்பதை அந்தச் சூழ்நிலைகள் எடுத்துக் காட்டின. பெரும்பாலும், முன்னாள் எதிரிகளை சமரசம் செய்து வைப்பதற்கான எந்தவொரு முயற்சியும் கைகூடி வருவதில்லை. நார்மன்டியில் நடந்த நேசநாடுகள் படையெடுப்பின் நினைவு விழாவுக்கு ஜெர்மானியப் பிரதிநிதிகளை அழைக்க பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மறுத்துவிட்டனர்.
இரண்டாம் உலகப் போரில் நாசிக்கள் செய்த அட்டூழியங்களையும், அதை மன்னித்து மறப்பது எவ்வளவு கஷ்டம் என்பதையும் விளக்குபவராய் எழுத்தாளரான லாடிமிர் ஜான்காலாவிச் இவ்வாறு எழுதினார்: “இத்தகைய கொடூரமான குற்றத்தை பார்க்கையில், எவராக இருந்தாலும் இயல்பாக பொங்கி எழத்தான் செய்வர் . . . மறந்துவிடுவதா, அந்தப் பேச்சுக்கே இடமில்லை. நேசநாட்டு நியூரம்பர்க் டிரிபியூனலின் நீதிபதிகள் உத்தரவிட்டபடியே மூலை முடுக்குகளிலெல்லாம் சென்று குற்றவாளிகளை இழுத்துவந்து கொன்றுகுவிக்க வேண்டும்.” அவர் தொடர்ந்து இவ்வாறும் எழுதினார்: “இயேசு தம் தந்தையிடம் ஏறெடுத்த புனித லூக்காவின் சுவிசேஷத்திலுள்ள ஜெபத்தை மாற்றிச் சொல்வதற்கும்கூட நாம் தயங்கமாட்டோம். ஆண்டவரே, இவர்களுக்கு மன்னிக்காதீர், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறிந்திருக்கிறார்கள்.”—லூக்கா 23:34-ஐ ஒப்பிடுக.
வேதனைதரும் விஷயமென்னவென்றால், இது 1945-ம் வருடத்தோடு முடிந்துவிடவில்லை. இன்றைய தேதி வரைக்குமாக, விரல்விட்டு எண்ணமுடியாத அளவுக்கு நடக்கும் அட்டூழியங்கள் இவ்வுலகை ரத்தக்கறை படியச் செய்திருக்கின்றன. கம்போடியா, ருவாண்டா, பாஸ்னியா என்று அத்தகைய நாடுகளை அடுக்கிக்கொண்டே போகலாம். இந்த குரூரமான செயல்களின் விளைவு? கோடிக்கணக்கானோரின் உயிர் பறிக்கப்பட்டிருக்கிறது. ஏராளமான விதவைகளையும் அனாதைகளையும் உருவாக்கியிருக்கிறது. அவர்களுடைய வாழ்க்கையை சின்னாபின்னமாக்கியிருக்கிறது. திகிலூட்டும் நினைவுகளை விட்டுச் சென்றிருக்கிறது.
இந்த 20-ம் நூற்றாண்டில் நடந்த கொடுமைகளைப்போல வேறெந்த நூற்றாண்டிலும் நடக்கவில்லை என்பதில் துளியும் சந்தேகம் கிடையாது. இது இந்த சகாப்தத்தைப் பற்றி வெகு காலத்திற்கு முன்பே சொல்லப்பட்ட பைபிள் தீர்க்கதரிசனத்தை நினைப்பூட்டுகிறது. மனித இனம் “கொடுமையுள்ளவர்களாயும் நல்லோரைப் பகைக்கிறவர்களாயும்” இருப்பார்கள் என்ற வார்த்தையை அச்சுபிசகாமல் நிறைவேற்றியிருக்கிறது.—2 தீமோத்தேயு 3:1-5; வெளிப்படுத்துதல் 6:4-8.
நாம் என்ன செய்ய வேண்டும்?
காட்டுமிராண்டித்தனமான இத்தகைய செயல்கள் மக்களை வெவ்வேறு விதமாக பாதிக்கின்றன. ஆனால், நம்மைப் பற்றியென்ன? இதை நினைப்பதா, மறப்பதா? நினைப்பதென்பது, தீங்கிழைத்தவர்களின்மீது வன்மம் வைப்பதையோ, மன்னிப்பதற்கு பதிலாக, உள்ளூர வெறுப்பதையோ குறிக்கிறதா? மறுபட்சத்தில், மன்னிப்பது என்றால், கசப்பான நினைவுகளை அடியோடு மறக்கவேண்டும் என அர்த்தமா?
அன்றும் இன்றும் நடந்திருக்கும் குரூரமான குற்றங்களை மனித இனத்தைப் படைத்தவரான யெகோவா தேவன் எவ்வாறு கருதுகிறார்? போனால் போகட்டும் என்று அவர் குற்றவாளிகளை மன்னித்து விடுவாரா? அட்டூழியம் தாங்காது இறந்து போனவர்களின் சார்பாக அவர் ஏன் இன்னும் பழிவாங்கவில்லை? இத்தகைய கொடுமைகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைபெறுவதால், இவற்றுக்கு முடிவு வரும் என எதிர்பார்க்க முடியுமா? கடைசியில், சிக்கல் நிறைந்த இவ்விவகாரங்களை சர்வவல்லமையுள்ள கடவுள் எவ்வாறு சரிசெய்வார்?
[பக்கம் 4-ன் படம்]
படுகொலை செய்யப்பட்டவர்களின் பிள்ளைகள் அகதி முகாமில் குழுமியிருக்கின்றனர்
[படத்திற்கான நன்றி]
UN PHOTO 186797/J. Isaac
[பக்கம் 3-ன் படத்திற்கான நன்றி]
U.S. Navy photo