உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g98 5/22 பக். 18-20
  • உங்கள் வாழ்வு வளம்பெற ஐந்து வழிகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உங்கள் வாழ்வு வளம்பெற ஐந்து வழிகள்
  • விழித்தெழு!—1998
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • வழி 1: தோட்டம் போடுங்கள்
  • வழி 2: மொத்தமாக வாங்குங்கள்
  • வழி 3: உணவைப் பதப்படுத்தும் கலையைக் கற்றுக்கொள்ளுங்கள்
  • வழி 4: சிறியளவில் பிராணிகளை வளர்க்கும் தொழிலை நடத்திப் பாருங்கள்
  • வழி 5: முறையான சுகாதாரத்தைக் காத்துக்கொள்ளுங்கள்
  • சுத்தம் ஏன் முக்கியம்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2009
  • சுத்தம் என்ற சவாலைச் சந்தித்தல்
    விழித்தெழு!—1989
  • நீங்கள் எவ்வாறு ஒரு குடும்பத்தை நிர்வகிக்கமுடியும்?
    குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம்
  • பாதுகாப்பாக உணவருந்துங்கள்
    விழித்தெழு!—1990
மேலும் பார்க்க
விழித்தெழு!—1998
g98 5/22 பக். 18-20

உங்கள் வாழ்வு வளம்பெற ஐந்து வழிகள்

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசிலிருந்து விழித்தெழு! நிருபர்

பண வீக்கம், நோய், ஊட்டச்சத்தின்மை, வறுமை ஆகிய பிரச்சினைகள் வளர்ந்துவரும் நாடுகள் எங்கும் பரவியுள்ளன. மனிதரின் நோக்குநிலையிலிருந்து காண்கையிலோ, இவை தீராத பிரச்சினைகள். வளர்ந்துவரும் நாட்டில் நீங்கள் வாழ்கிறீர்களென்றால், உங்கள் வாழ்வு வளம்பெற ஏதாவது செய்யமுடியுமா? ஆம், செய்ய முடியும்! பின்வரும் ஐந்து குறிப்புகள் நன்மை தருவதோடு மட்டுமல்லாமல் நடைமுறையானவையாகவும் இருப்பதை நீங்கள் காண்பீர்கள்.

வழி 1: தோட்டம் போடுங்கள்

“தன் நிலத்தைப் பயிரிடுகிறவன் ஆகாரத்தால் திருப்தியாவான்” என நீதிமொழிகள் 28:19-ல் பைபிள் கூறுகிறது. மிகச் சிறிய துண்டு நிலத்தில் எவ்வளவு அதிகத்தை விளைவிக்கலாம் என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியமடையலாம். 50 முதல் 100 சதுர மீட்டர் பரப்பளவுள்ள ஒரு துண்டு நிலத்தில் ஆறு உறுப்பினர் கொண்ட ஒரு குடும்பத்திற்குத் தேவையான காய்கறிகளை விளைவிக்கலாம் என ல ஸார்டண் பாட்டாஸே சூ லே டிராப்பிக்ஸ் (வெப்பமண்டல பிரதேசங்களில் காய்கறி தோட்டம்) என்ற தனது புத்தகத்தில், ஆசிரியர் ஹெங்க் வாயன்பெர்க் உறுதியாகக் கூறுகிறார்!

நீங்களே விளைவிக்க முடிகிற பொருட்களுக்காக ஏன் ஏகப்பட்ட பணம் செலவழிக்க வேண்டும்? மண்ணையும் சீதோஷ்ண நிலையையும் பொறுத்து, உங்கள் வீட்டைச் சுற்றி தோட்டம் போட்டு, அதில் வெண்டை, மிளகாய், பசலைக்கீரை, பார்ஸ்லீ, லெமன்கிராஸ், பச்சை வெங்காயம், மரவள்ளிக் கிழங்கு, பூசணி, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, கரும்பு, தக்காளி, வெள்ளரி, மக்காச்சோளம் ஆகியவற்றை விளைவிக்கலாம். குறைந்தபட்சம், அப்படிப்பட்ட தோட்டத்தில் உங்களுடைய குடும்பத்திற்குத் தேவைப்படும் காய்கறிகளையாவது போட்டுக் கொள்ளலாம், தேவையானதுபோக மீதமுள்ள காய்கறிகளை விற்கவும் செய்யலாம்.

உங்களுக்குப் போதுமான நிலம் இருந்தால், பலவித பழ மரங்களை நடுவதைப் பற்றியும் யோசிக்கலாமே. சில சந்தர்ப்பங்களில், ஒரே ஒரு மரத்திலிருந்து, உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் தேவைப்படுவதை விட அதிகத்தைப் பெறலாம். கம்போஸ்ட் உரம் தயாரிப்பதை—அழுகிய கரிமப்பொருட்களை மட்கவைத்து உரமாகப் பயன்படுத்துவதை—கற்றுக்கொள்வது உணவு உற்பத்தியை நீங்கள் மேம்படுத்த உங்களுக்கு உதவும். உணவையும் கூடுதல் வருமானத்தையும் அளிப்பதோடுகூட மரங்களால் வேறு பல நன்மைகளும் உண்டு. சரியான இடத்தில் நடப்பட்ட மரங்கள் நிழல் தரலாம், காற்றைச் சுத்தப்படுத்தலாம், உங்கள் சுற்றுப்புறத்தை இன்னும் அழகாயும் இனிதாயும் ஆக்கலாம்.

என்றாலும், தோட்ட வேலையைப் பற்றி உங்களுக்கு ஒன்றுமே தெரியாவிட்டால் என்ன செய்வது? இதில் அனுபவமுள்ள நண்பர்களோ, அயலாரோ, பழகியவர்களோ உங்களுக்கு இருக்கிறார்களா? அப்படியானால் உங்களுக்குத் தேவைப்படும் உதவியையோ ஆலோசனையையோ அவர்களிடம் ஏன் கேட்டுப் பெற்றுக் கொள்ளக்கூடாது? தோட்ட வேலை பற்றிய புத்தகங்களை விலைகொடுத்தோ இரவலாகவோ வாங்கலாமே.—மே 8, 1975 விழித்தெழு! இதழில், “நீங்கள் காய்கறி தோட்டம் போட்டால் என்ன?” என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரையைக் காண்க.

வழி 2: மொத்தமாக வாங்குங்கள்

மாவு, அரிசி, எண்ணெய் ஆகியவற்றைச் சில்லரையாக வாங்குகிறீர்களா? அப்படியானால், உங்கள் பட்ஜெட்டில் பெரும்பகுதி வீணாகிவிடலாம். அதற்குப் பதிலாக, முடிந்தவரை, அப்படிப்பட்ட உணவுப்பொருட்களை மொத்தமாக வாங்கி, அதற்காகும் செலவை இரண்டு, மூன்று அல்லது அதற்கும் அதிகமான குடும்பங்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள். சீசனில் மட்டும் கிடைக்கும் காய்கறிகளையோ பழங்களையோ மொத்தமாக வாங்குவதும் பணத்தை மிச்சப்படுத்த உதவலாம். சில சந்தர்ப்பங்களில், மொத்த விலையிலும் பொருட்களை வாங்கலாம்.

வழி 3: உணவைப் பதப்படுத்தும் கலையைக் கற்றுக்கொள்ளுங்கள்

மொத்தமாக வாங்குவது, கெட்டுப்போகும் பொருட்களை எப்படி சேமித்து வைப்பது என்ற கேள்வியை எழுப்புகிறது. உணவுப்பொருட்களை வற்றல் போடுவது நன்கு அறிந்த நடைமுறையான வழியாகும். ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஏராளமான பெண்கள், பழங்கள், வெண்டை, அவரை, சுரை, பூசணி விதைகள், பூண்டுகள் ஆகியவற்றை வற்றல்போட்டு விற்பதன் மூலம் பணம் சம்பாதிக்கின்றனர். வற்றல்போடுவதற்கு விசேஷ வசதிகள் எதுவும் தேவையில்லை. வற்றல் போடவேண்டிய பொருளை ஒரு சுத்தமான பரப்பில் பரத்திப்போட்டோ, தொங்கவிட்டோ, ஈக்களை விரட்டுவதற்காக அதை ஒரு மெல்லிய துணியால் மூடிவிட வேண்டியதுதான். மிச்ச வேலையை காற்றும் வெயிலும் செய்து முடித்துவிடும்.—ஆகஸ்ட் 8, 1975 ஆங்கில விழித்தெழு!-வில் வெளிவந்த, “வசதிக் குறைவில் பிழைப்பு நடத்த முடியுமா?” என்ற கட்டுரையைக் காண்க.

வழி 4: சிறியளவில் பிராணிகளை வளர்க்கும் தொழிலை நடத்திப் பாருங்கள்

கோழிக்குஞ்சுகள், வெள்ளாடுகள், புறாக்கள் அல்லது மற்ற கால்நடைகளை நீங்களே வளர்க்க முடியுமா? அநேக இடங்களில் மாமிசம் சாதாரண மக்கள் வாங்க முடியாத பொருளாகி வருகிறது. ஆனால் மற்றவர்களிடமிருந்து கொஞ்ச உதவியை பெற்று, சிறியளவில் மந்தையை வளர்க்க கற்றுக்கொள்ளலாம். உங்களுக்கு மீன் என்றால் கொள்ளை பிரியமா? அப்படியானால், சிறிய குளம் அமைத்து அதில் மீன் வளர்க்க கற்றுக்கொள்ளலாம். மாமிசம், முட்டைகள், மீன் ஆகியவற்றில் உங்கள் குடும்ப ஆரோக்கியத்திற்குத் தேவையான இரும்புச்சத்து, கால்சியம், விட்டமின்கள், தாது உப்புக்கள், புரோட்டீன் ஆகிய சத்துக்கள் உள்ளன.

வழி 5: முறையான சுகாதாரத்தைக் காத்துக்கொள்ளுங்கள்

உங்கள் குடும்ப ஆரோக்கியத்திற்கு சுகாதாரமும் முக்கியம். சுத்தமற்ற சூழ்நிலைகள், எலிகளையும், ஈக்களையும், கரப்பான் பூச்சிகளையும் வரவேற்கும்; இவற்றால்தான் எல்லாவித நோய்களும் வருகின்றன. முறையான சுகாதாரத்தைக் காத்துக்கொள்வதற்கு நேரமும் முயற்சியும் தேவை. ஆனால், சுத்தத்திற்கென நீங்கள் செலவு செய்யும் பணம், மருந்துக்கும் மருத்துவத்துக்கும் நீங்கள் செலவு செய்வதைக் காட்டிலும் குறைவு. சுத்தத்தைக் காக்கும் தராதரங்கள் ஆளுக்கு ஆளும், நாட்டுக்கு நாடும் ஓரளவு வேறுபடலாம். என்றாலும், எல்லா இடத்துக்கும் பொருந்தும் ஒரு சில பொதுவான நியமங்கள் உள்ளன.

உதாரணமாக, கழிப்பிட வசதிகளை எடுத்துக்கொள்ளுங்கள். கிராமப்புறங்களில், கழிவுப்பொருட்கள் அசிங்கமாகவும், மூடப்படாமலும் அப்படியே விடப்பட்டுள்ளன; இவையே சுகவீனத்துக்கும் நோய்க்கும் முக்கிய காரணங்கள். உள்ளூர் சுகாதார பணியாளர்கள், ஒரு சுகாதாரமான கழிப்பிடத்தை அல்லது வெளியிடத்தை குறைந்த செலவில் கட்டுவது எப்படி என்பது பற்றிய குறிப்புகளைத் தரலாம்.

உங்கள் வீட்டின் நிலை என்ன? அது சுத்தமாகவும் ஒழுங்காகவும் இருக்கிறதா? துர்நாற்றமின்றி இருக்கிறதா? உங்கள் சமையலறை எப்படி இருக்கிறது? அது ஒழுங்காகவும் சுத்தமாகவும் வைக்கப்பட்டிருக்கிறதா? உங்கள் ஆரோக்கியத்துக்கு, உணவுப்பொருட்கள் சுத்தமாகவும் சரியான முறையில் சமைக்கப்பட்டதாகவும் இருக்க வேண்டும். கிருமிகளும் ஒட்டுண்ணிகளும் தூய்மையற்ற நீரில் ஏராளமாய் பெருகுகின்றன. ஆகவே நீரை வடிகட்டி அல்லது கொதிக்க வைத்து பயன்படுத்துங்கள். சாப்பாட்டுப் பாத்திரங்களை கொதிநீரில் அலசுங்கள், உணவுப்பொருட்களைத் தொடுவதற்கு முன்பு உங்கள் கைகளை நன்றாக கழுவுங்கள். சுத்தமான, மூடியுள்ள பாத்திரங்களில் நீரை சேமித்து வையுங்கள்.

உங்கள் சுகாதாரத்தைக் காக்கவேண்டுமானால், நாய்கள், பூனைகள், கோழிக்குஞ்சுகள், வெள்ளாடுகள் ஆகியவை சமையலறையில் நடமாடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்; அதேபோல், உணவுப்பொருட்கள் கெட்டுப்போகாமல் இருக்கவேண்டுமானால், எலிகள், சுண்டெலிகள் ஆகியவை சட்டிப் பானைகளின் மேல் ஓடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஓர் எளிய எலிப்பொறி இந்தப் பிரச்சினையைத் தீர்த்துவிடலாம்.—“சுத்தம் என்ற சவாலைச் சந்தித்தல்” என்ற கட்டுரையை, நவம்பர் 8, 1989 தேதியிட்ட விழித்தெழு! பத்திரிகையில் காண்க.

இறுதியாக, மனிதகுலத்தின் பிரச்சினைகள் அனைத்தையும் கடவுளுடைய ராஜ்யம் மட்டுமே முழுமையாக நீக்கும். (மத்தேயு 6:9, 10) என்றாலும், அதுவரை, உங்கள் வாழ்வு வளம்பெற இந்த எளிய குறிப்புகள் உங்களுக்கு உதவலாம்.

[பக்கம் 18-ன் படங்கள்]

ஒரு தோட்டம் போடுங்கள்

[பக்கம் 19-ன் படங்கள்]

மொத்தமாக வாங்குங்கள்

[பக்கம் 19-ன் படங்கள்]

வற்றல் போடும் கலையைக் கற்றுக்கொள்ளுங்கள்

[பக்கம் 20-ன் படங்கள்]

சிறியளவில் பிராணிகளை வளர்க்கும் தொழிலை நடத்திப் பாருங்கள்

[பக்கம் 20-ன் படங்கள்]

முறையான சுகாதாரத்தைக் காத்துக்கொள்ளுங்கள்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்