பைபிளின் கருத்து
வருஷம் 2000 எந்த அளவிற்கு தனிச்சிறப்பு வாய்ந்தது?
மேற்கத்திய நாடுகளிலும் மற்ற அநேக நாடுகளிலும் பெரும்பாலோர், மதசம்பந்தமான எந்த முக்கியத்துவத்தையும் வருஷம் 2000-திற்கு அளிப்பதில்லை. உதாரணத்திற்கு யூதர்கள், முகமதியர், இந்துக்கள் ஆகியோர் தங்களுக்கென்று மதசம்பந்தமான காலண்டர் வைத்திருக்கின்றனர்; அவை மேற்கத்திய காலண்டரோடு ஒத்துப்போவதில்லை. தங்களுடைய மத மற்றும் பாரம்பரிய நாட்களுக்கு சீனர்கள் சந்திர காலண்டரை பின்பற்றுகின்றனர். ஆகவே, பூமியில் வாழும் கோடிக்கணக்கானோர், ஒருவேளை உலக ஜனத்தொகையில் பெரும்பான்மையர் எந்த ஒரு விசேஷ அர்த்தத்தையும் வருஷம் 2000-திற்கு அளிப்பதில்லை. a
கிரகோரியன் காலண்டரின்படி அடுத்த ஆயிரமாண்டில் காலடி எடுத்து வைக்க அணுகும்போது, மேற்கத்திய நாடுகளில் அநேகர் ஒருவித ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். சிலருக்கு இது வெறும் ஆர்வம் மட்டுமல்ல. அவர்கள் இந்த வருஷம் 2000-த்தை புதிய சகாப்தத்தின் ஆரம்பமாக, சரித்திரத்தில் ஒரு பெரிய திருப்புமுனையாக எண்ணுகிறார்கள். பைபிளில் தங்களுக்கு நம்பிக்கை இருப்பதாக உரிமைபாராட்டும் அநேகர் பைபிள் தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றத்தை வருஷம் 2000-த்துடன் தொடர்புபடுத்துகின்றனர். சிலர் மிகப்பெரிய அளவில் ஆவிக்குரிய வெளிக்காட்டுதல்களை எதிர்பார்க்கின்றனர். மற்றவர்கள் ஒரு பிரளயம் வரும் என்றும், அதுவே உலக முடிவு என்றும் பயப்படுகிறார்கள். பைபிள் இவற்றிற்கெல்லாம் ஏதாவது அடிப்படை ஆதாரத்தை அளிக்கிறதா?
யெகோவா, ஒரு டைம் கீப்பர்
பைபிளின் தேவன் “நீண்ட ஆயுசுள்ளவர்” என்று விவரிக்கப்படுகிறார். (தானியேல் 7:9) கிரகங்களின் சுழற்சி தொடங்கி உள் அணுக் கருத் துகள்கள்களின் இயக்கம் வரை, அவருடைய அநேக சிருஷ்டிப்புகளின் செயல்களிலிருந்து நேரத்தை அவர் மிகத்துல்லியமாக கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்று தெரிகிறது. அவருக்கே உரிய கால அட்டவணையை துல்லியமாக கடைப்பிடிக்கிறார். “குறிக்கப்பட்ட காலங்களை அவர் முடிவு செய்து, மனிதர்கள் குடியிருக்கும் எல்லைகளையும் நிர்ணயித்திருக்கிறார்” என்று பைபிள் சொல்கிறது. (அப்போஸ்தலர் 17:26, NW) யெகோவா துல்லியமான நேரப் பதிவாளராக இருக்கிறார்.
ஆதலால், பைபிள் காலக்கணக்கிற்கு விசேஷ கவனம் செலுத்துகிறது. அது ஒரு தொடர்ச்சியான பதிவை அளிப்பதால், பின்னோக்கி சீராக கணக்கிட்டு மனித சரித்திரத்தின் ஆரம்பத்தை எட்டுவதற்கு வழிசெய்கிறது. அப்படிப்பட்ட கணக்கின் மூலம் பொ.ச.மு. 4026-ல் தேவன் ஆதாமை சிருஷ்டித்தார் என்று சுட்டிக்காட்டுகிறது. கிட்டத்தட்ட 2,000 ஆண்டுகள் கழித்து ஆபிரகாம் பிறந்தார். இயேசுவின் பிறப்பிற்கு முன் இன்னொரு 2,000 ஆண்டுகள் கடந்து சென்றன.
பைபிள் காலக்கணக்கை ஆய்வு செய்யும் ஒருசிலர், தங்கள் விருப்பப்படி, எதிர்காலத்தில் சில குறிப்பிட்ட தேதிகளை சுட்டிக்காட்டும் சில தகவல்களை வடிவமைக்கின்றனர். ஒரு உதாரணத்திற்கு, தொடர்ச்சியாக, 2,000 ஆண்டுகள் ஆதாமையும் ஆபிரகாமையும் இயேசுவையும் பிரித்ததை ஆதாரமாகக்கொண்டு சிலர், இயேசுவின் பிறப்பிற்கு பின் 2,000 ஆண்டுகள் கழித்து அச்சுறுத்தும் நிகழ்ச்சிகள் ஏற்படுமென்று முன்னறிவிக்கின்றனர். பைபிளின் காலக்கணக்கின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டதாக உரிமை பாராட்டிய பட்டியல்களின் எண்ணிக்கையில் இதுவும் ஒன்று.
மனிதர்களுடைய காரியங்களில் யெகோவா தேவன் தலையிட்டு தீமைகளை நீக்கி ஒரு புதிய உலகை ஏற்படுத்துவதைக் குறித்து பைபிள் பேசுவது உண்மைதான். பைபிள் தீர்க்கதரிசனங்கள், “முடிவு காலம்,” “காரிய ஒழுங்குமுறையின் முடிவு,” ‘கடைசி நாட்கள்,’ “யெகோவாவின் நாள்” என்பதைப்பற்றி பேசுகின்றன. (தானியேல் 8:17; மத்தேயு 24:3, NW 2 தீமோத்தேயு 3:1; 2 பேதுரு 3:12, NW) ஆனால் பைபிளில் சொல்லப்பட்ட “முடிவிற்கும்” வருஷம் 2000-த்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. கிரகோரியன் காலண்டரால் கணக்கிடப்பட்ட இரண்டாவது ஆயிரமாண்டின் முடிவிற்கு, வேதவாக்கியங்களில் எவ்வித முக்கியத்துவமும் கொடுக்கப்படவில்லை.
“இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்?”
இயேசுவின் சீஷர்கள் தேவனுடைய கால அட்டவணையை தெரிந்துகொள்ள மிக ஆவலாக இருந்தார்கள் என்பது, அவர்கள் இயேசுவை பின்வருமாறு கேட்டதிலிருந்து தெரிகிறது: “இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்ல வேண்டும் என்றார்கள்.” (மத்தேயு 24:3) இன்று இருக்கும் அநேகர் எதிர்காலத்தைப்பற்றி இதே விதமான ஆர்வத்தை உடையவர்களாய் இருக்கின்றனர். இப்படிப்பட்ட முக்கியத்துவமுள்ள பைபிள் தீர்க்கதரிசனங்களையும் அவை நிறைவேறும் காலத்தையும் பற்றி அறிய அதிக ஆவலாக இருப்பது இயற்கையானதே. ஆனாலும், இந்த விஷயத்தில் தேவனுடைய உன்னதமான நிலையை ஏற்றுக்கொள்வதும், அதற்கு மதிப்புக் காட்டுவதும் ஞானமான செயல்.
யெகோவா, இந்த விஷயத்தைப் பற்றிய தம்முடைய எண்ணங்களைத் தம்முடைய குமாரன் மூலமாக தெரியப்படுத்தியிருக்கிறார்; இதற்கு நேரிடையான பதிலையும் கொடுத்திருக்கிறார். இயேசு பரலோகத்திற்கு போவதற்கு சற்று முன்பாக, அவருடைய சீஷர்கள் தேவனுடைய வாக்குறுதிகள் நிறைவேறும் காலத்தைப்பற்றி அவரிடம் கேட்டார்கள். அதற்கு இயேசு இவ்விதம் பதிலளித்தார்: “பிதாவானவர் தம்முடைய அதிகார எல்லையில் வைத்திருக்கிற காலங்களையும் வேளைகளையும் பற்றிய அறிவைப் பெறுவது உங்கள் உரிமை அல்ல.” (அப்போஸ்தலர் 1:7, NW) இதற்கு முன்பு ஒருமுறை இயேசு தம்முடைய சீஷர்களிடம் இவ்வாறு சொன்னார்: “அந்த நாளையும், அந்த மணிநேரத்தையும் குறித்து யாருக்கும் தெரியாது, பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார், ஆனால் பிதா மட்டுமே அறிவார்.”—மத்தேயு 24:36, NW.
பைபிள் தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றத்தை உட்படுத்தும், ‘காலங்களையும் நேரங்களையும் அறிந்துகொள்வது’ மனிதனுடைய அதிகார எல்லையில் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. அப்படிப்பட்ட தகவல்களை வெளியிட வேண்டாம் என்று தேவன் முடிவு செய்திருக்கிறார். (மத்தேயு 24:22-44, NW) தேவனுடைய சித்தத்திற்கு எதிராக, “அந்த நாளையும் மணிநேரத்தையும்” தெரிந்துகொள்வதால் அவருடைய நோக்கத்தை மாற்ற முடியுமா? அது நிச்சயமாகவே முடியாதது. (எண்ணாகமம் 23:19; ரோமர் 11:33, 34) பைபிள் இவ்விதம் குறிப்பிடுகிறது: “யெகோவாவின் ஆலோசனை நித்தியகாலமாக நிலை நிற்கும்.” (சங்கீதம் 33:11, NW) அவர் சர்வவல்லமையுள்ள தேவனாக இருப்பதால் எப்பொழுதும் வெற்றி அடைகிறார்.—ஏசாயா 55:8-11.
கடவுள், ‘காலங்களையும் வேளைகளையும் பற்றிய அறிவை . . . தம்முடைய அதிகார எல்லையில்’ வைத்திருக்கிறார் என்பதைத் தெரிந்த பிறகும் சிலர் ஊகிக்க விரும்புகிறார்கள். சிலர் தங்களைத் தாங்களாகவே அழிவின் தீர்க்கதரிசிகளாக்கி கொள்கின்றனர். இதன் காரணமாகவே அப்போஸ்தலனாகிய பவுல் தெசலோனிக்கே சபையில் உள்ளவர்களிடம், நாட்களைப் பற்றி ஊகிக்கிற ஆட்களுக்கு செவிகொடுக்கும் அபாயத்தைப் பற்றி குறிப்பாக ஆலோசனையை அளித்தார். அவர் இவ்விதம் எழுதினார்: ‘ஒரு ஏவப்பட்ட வார்த்தையினாலாவது அல்லது வாய் வழித் தகவல் மூலமாவது அல்லது எங்களிடத்திலிருந்து வந்ததாய்த் தோன்றுகிற ஒரு கடிதத்தினாலாவது யெகோவாவின் நாள் சமீபமாயிருக்கிறதாகச் சொல்லப்பட்டால், உடனே உங்கள் விவேகத்தை இழக்காமலும் பரபரப்படையாமலும் இருங்கள் என்று உங்களை நாங்கள் வேண்டிக்கொள்கிறோம். ஒருவனும் உங்களை எவ்விதத்திலும் ஏமாற்றக்கூடாது.’—2 தெசலோனிக்கேயர் 2:1-3, NW.
யெகோவாவின் சாட்சிகள் உறுதியாக நம்புவது என்னவென்றால், எதிர்காலத்தைப் பற்றிய தேவனுடைய நோக்கங்கள், அவர் ஏற்கெனவே தீர்மானித்து வைத்திருக்கும் நேரத்தில், அதாவது அவர் நியமனம் செய்த அந்த நாள் மற்றும் மணிநேரம் வரையாக துல்லியமாக நிறைவேறும். (ஆபகூக் 2:3; 2 பேதுரு 3:9, 10) இந்த நிகழ்ச்சிகள் சமீப எதிர்காலத்தில் நடக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். (2 தீமோத்தேயு 3:1-5) ஆனால், நாங்கள் இப்பொழுது பெருகியிருக்கும் கருத்துக்களை ஊகிக்கவோ அல்லது ஆதரிக்கவோ தயாராகயில்லை. b யெகோவாவின் கால அட்டவணைக்கும், வருஷம் 2000, அல்லது 2001-வது வருடம் அல்லது மனிதனின் வேறு எந்த வருஷ தொடக்கத்திற்கும் எந்தவித தொடர்பும் கிடையாது.
[அடிக்குறிப்புகள்]
a இயல் நுட்ப விவரத்தின்படி கவனிப்போமென்றால், சாதாரணமாக அறியப்பட்ட மூன்றாவது ஆயிரமாண்டு ஜனவரி 1, 2001-ல் ஆரம்பமாகிறது. முதலாவது ஆயிரமாண்டு பூஜ்ய வருடத்தில் ஆரம்பமாகவில்லை, அதற்கு பதில் அது 1-ஆம் வருடத்தில் ஆரம்பமானது. ஆனால், பொது ஜனங்கள் “மூன்றாவது ஆயிரமாண்டு” என்ற பதத்தை வருஷம் 2000-த்துடன் தொடர்புபடுத்துகின்றனர். இந்தக் கட்டுரை வருஷம் 2000-ஐப்பற்றி ஜனங்களிடமுள்ள பிரபலமான எதிர்பார்ப்புகளிடமாக முக்கிய கவனத்தைச் செலுத்துகின்றது.
b செப்டம்பர் 1, 1997-ல் பிரசுரிக்கப்பட்ட காவற்கோபுர பத்திரிகையில், பக்கம் 22-ல் இவ்விதம் குறிப்பிடப்பட்டிருக்கிறது: “யெகோவாவின் நாள் எப்போது வரும் என்பதை அறிய யெகோவாவின் சாட்சிகள் மிகுந்த ஆவலோடு இருந்துவந்திருக்கிறார்கள். அவர்களுடைய மிகுந்த ஆவலில், அது எப்போது வரலாம் என்பதை ஊகித்து மதிப்பிட முயற்சிகள் செய்திருக்கிறார்கள். ஆனால், ‘நியமிக்கப்பட்ட காலம் எப்பொழுதென்று அறியாதபடியால்’ என்று குறிப்பிட்ட தங்களுடைய எஜமானுடைய, எச்சரிக்கையை கவனிக்காத இயேசுவின் பூர்வ சீஷர்களைப்போல், அவ்விதம் செய்ததில் தவறினார்கள். (மாற்கு 13:32, 33) உரிய காலத்திற்கு முற்பட்ட அவர்களுடைய எதிர்பார்ப்புகளின் நிமித்தமாக உண்மையுள்ள கிறிஸ்தவர்களை, பரியாசக்காரர் கேலி செய்திருக்கின்றனர். (2 பேதுரு 3:3, 4) எனினும், யெகோவாவின் நாள் நிச்சயமாக வரும், அவருடைய கால அட்டவணையின்படி வரும், என்று பேதுரு உறுதியளிக்கிறார்.”