“இருளின் பள்ளத்தாக்கிலே” ஆறுதலைக் கண்டடைதல்
பர்ப்ரி சுவீஸர் என்பவரால் கூறப்பட்டது
சில நேரங்களில், என் வாழ்க்கை சுமுகமாக நடந்த சமயத்திலே “புல்லுள்ள இடங்களில்” இருப்பதைப்போல் உணர்ந்தேன். ஆனால் “இருளின் பள்ளத்தாக்கிலே” நடப்பது என்ன என்பதையும் அறிந்துகொண்டேன். யெகோவா நமது மேய்ப்பராயிருப்பதால் எப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்பட்டாலும் நம்மால் சமாளிக்க முடியும் என்பதில் முழு நம்பிக்கையுடன் இருக்கிறேன்.—சங்கீதம் 23:1-4.
நானும் என் கணவரும், 1993-ஆம் ஆண்டு எங்கள் இருவருக்கும் சுமார் 70 வயதிருக்கும்போது ஒரு துணிச்சலான செயலில் இறங்கினோம்; அதாவது பைபிள் போதகர்களின் தேவை அதிகம் இருந்த ஈக்வடார் என்ற இடத்திற்குச் செல்ல முடிவெடுத்தோம். நாங்கள் அமெரிக்கர்களாக இருந்தாலும் நன்றாக ஸ்பானிஷ் மொழி பேசுவோம், எங்களுக்கு சம்பாதித்து கொடுக்கவேண்டும் என்ற கடமையில்லை. ஈக்வடாரில் ‘மனிதர்களைப் பிடிப்பதற்கான’ நல்ல வாய்ப்பு இருப்பதாகக் கேள்விப்பட்டதால் அப்படிப்பட்ட இடங்களில் அதற்கான வலைகளை வீசலாம் என்று திட்டமிட்டோம்.—மத்தேயு 4:19.
ஈக்வடாரில் உவாட்ச் டவர் சொஸைட்டியின் கிளை அலுவலகத்தில் சில நாட்கள் சந்தோஷமாக இருந்துவிட்டு, மாச்சாலா என்ற நகரத்தில் குறிப்பிட்ட தேவையிருந்ததால் அங்கே செல்ல குயாக்குயில் பஸ் நிலையத்துக்கு வந்தோம். ஆனால் பஸ் நிலையத்திற்கு வந்தபின் என் கணவனாகிய ஃபிரட்டிற்கு திடீரென்று உடல் நலம் சரியில்லாமல் போனதால் பிரயாணத்தை தள்ளிப்போட முடிவு செய்தோம். கிளை அலுவலகத்திற்கு திரும்ப வருவதை தெரியப்படுத்த போன் பூத்திற்கு சென்றேன்; ஃபிரட் சாமான்களைப் பார்த்துக்கொண்டு அங்கேயே அமர்ந்திருந்தார். சில நிமிடங்களுக்குப்பின் திரும்பி வந்து பார்த்தபோது என் கணவரைக் காணவில்லை!
அதன்பின் ஃபிரட்டை உயிரோடு பார்க்கவேயில்லை. அந்தப் பஸ் நிலையத்திலேயே, நான் இல்லாத அந்தக் கொஞ்ச நேரத்தில் அவருக்கு பலத்த மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. நான் பரபரப்பாக அவரைத் தேடுவதை கவனித்த ஒரு பஸ் நிலைய அதிகாரி என்னிடம் வந்து அவரை மருத்துவமனைக்கு எடுத்து சென்றதாகக் கூறினார். நான் மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது அவர் ஏற்கெனவே இறந்து போனதைப் பற்றிக் கேள்விப்பட்டேன்.
திடீரென்று, ஒரு புதிய நாட்டில், தங்குவதற்கு ஒரு வீடுகூட இல்லாமல் இருப்பதையும் தாங்குவதற்கு சுமைதாங்கியாக இருந்த கணவனும் இல்லாமல் இருப்பதையும் உணர்ந்தேன். “தாங்குவதற்கு” என்று ஏன் சொல்கிறேனென்றால், ஃபிரட் எப்பொழுதும் தலைமை ஏற்று எல்லா காரியங்களையும் எங்கள் இருவருக்குமாக ஒழுங்கமைப்பார். எனக்கு தன்னம்பிக்கை கொஞ்சம் குறைவு, ஆகவே அவர் அவ்விதம் தாங்கி வழிநடத்துவதில் சந்தோஷப்பட்டேன். ஆனால் இப்பொழுதோ நானே தீர்மானங்களைச் செய்ய வேண்டும், என் வாழ்க்கையை ஒழுங்கமைக்க வேண்டும், அதே நேரத்தில் என் துக்கத்தையும் சமாளிக்க வேண்டும். இடி விழுந்ததைப்போன்ற உணர்ச்சி ஏற்பட்டது—‘இருளின் பள்ளத்தாக்கிலே’ விழுந்ததைப்போல் உணர்ந்தேன். இதை நானாகவே சமாளிக்கக் கற்று கொள்வேனா?
சத்தியத்தைக் கற்று வாழ்க்கையை எளிமையாக்குதல்
நானும் ஃபிரட்டும் முதன் முறையாக சந்தித்துக் கொண்ட போது இருவரும் ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்தைப் பெற்றிருந்தோம். எங்கள் இருவருக்கும் ஏற்பட்ட நட்பு ஒரு நல்ல உறவாக மலர்ந்தது, அதன்பின் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தோம். அ.ஐ.மா., வாஷிங்டனிலுள்ள சீயட்டில் என்ற இடத்தில் நாங்கள் சாதாரணமாக சர்ச்சுக்கு செல்பவர்களாக இருந்தோம். ஜேமி என்ற அருமையான இளம் பயனியர் (முழுநேர ஊழியர்) எங்களை வந்து சந்திக்கும்வரை, வாழ்க்கையில் மதத்தை அவ்வளவு முக்கியமானதாக நாங்கள் கருதவில்லை. எனக்கு அவளை மிகவும் பிடித்திருந்தபடியால் தன்னோடு பைபிளைப் படிக்க விருப்பமா என்று கேட்டவுடன் அதற்கு ஒப்புக்கொண்டேன்.
ஃபிரட்டிற்கும் விருப்பமிருந்தபடியால் ஜேமியின் பெற்றோர் அந்தப் படிப்பை நடத்த ஆரம்பித்தார்கள்; ஒரு வருடத்திற்கு பிறகு 1968-ல் நாங்கள் இருவரும் முழுக்காட்டப்பட்டோம். ஆரம்பத்திலிருந்தே நாங்கள் ராஜ்ய அக்கறைகளை முதலாவதாக எங்கள் வாழ்க்கையில் வைப்பதற்கு கவனமுள்ளவர்களாக இருந்தோம். (மத்தேயு 6:33) எங்களுக்கு பைபிள் படிப்பு நடத்திய தம்பதியரான லார்ன், ருடி நுஸ்ட் ஆகிய இருவரும் இந்த விஷயத்தில் நல்ல முன் மாதிரியாக இருந்தார்கள். நாங்கள் முழுக்காட்டுதல் எடுத்த கொஞ்ச நாட்களிலேயே, அவர்கள் ஐக்கிய மாகாணங்களின் கிழக்கு கடற்கரையோரத்தில் இருந்த ஒரு நகரத்தில் தேவை அதிகம் இருந்தபடியால் அங்கு சென்றுவிட்டனர். இது எங்கள் இருதயத்திலும் ஒரு ஆவலை விதைத்தது.
இவ்விதம் செல்லவேண்டும் என்ற ஆவல் ஏற்படுவதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. ஃபிரட் ஒரு பெரிய டிபார்ட்மென்ட் ஸ்டோரில் மேனேஜராக வேலை செய்து வந்தார். அந்த வேலை அதிக கவனத்தை தேவைப்படுத்தியது; வேறு எங்காவது சென்றால் தன்னுடைய வாழ்க்கையை எளிமையாக வைக்க உதவும் என்றும் சத்தியத்திற்கும் எங்களுடைய இரண்டு பிள்ளைகளுக்கும் அதிக கவனத்தை செலுத்த இயலும் என்றும் அவர் உணர்ந்தார். முந்தைய திருமணத்தின் மூலம் எனக்கு ஏற்கெனவே ஒரு மகள் இருந்தாள், அவளுக்கு தற்போது திருமணமாகிவிட்டது, அவளும் அவளுடைய கணவனும் சத்தியத்தை ஏற்றுக்கொண்டனர்; ஆகவே எங்களுடைய தீர்மானத்தின்படி சீயட்டிலைவிட்டு கிளம்புவது கடினமாக இருந்தது. ஆனால், அவர்கள் எங்களுடைய உள்நோக்கத்தைப் புரிந்துகொண்டபடியால் எங்கள் தீர்மானத்தை ஆதரித்தார்கள்.
ஆகவே, நாங்கள் 1973-ல் ஸ்பெய்னுக்குச் சென்றோம்; அந்தச் சமயத்தில் நற்செய்தியை பிரசங்கிப்பவர்களுக்கான தேவையும் சபையில் வழிநடத்தும் சகோதரர்களுக்கான தேவையும் அந்த நாட்டில் மிக அதிகமிருந்தது. சிக்கனமாக செலவு செய்து கவனமாக இருந்தால் எங்கள் சேமிப்பை வைத்து ஸ்பெய்னில் காலம் தள்ளமுடியும் என்றும் எங்களுடைய நேரத்தை முக்கியமாக ஊழியத்தில் செலவிட முடியும் என்றும் ஃபிரட் கணக்கிட்டிருந்தார். அதைத்தான் நாங்கள் செய்தோம். சீக்கிரத்திலேயே ஃபிரட் ஒரு மூப்பராக சேவை செய்ய ஆரம்பித்தார், 1983-ல் நாங்கள் இருவரும் பயனியர்கள் ஆனோம்.
நாங்கள் 20 வருடம் ஸ்பெய்னில் சேவை செய்தோம், அந்த மொழியைக் கற்றோம், அநேக நல்ல அனுபவங்களைப் பெற்றோம். அநேகமாக நானும் ஃபிரட்டும் ஒன்றாகவே பிரசங்கித்தோம், அநேக தம்பதியருக்கு பைபிள் படிப்பு நடத்தினோம் அவர்களில் பலர் இப்போது முழுக்காட்டப்பட்ட சாட்சிகளாக இருக்கின்றனர். ஸ்பெய்னில் சில ஆண்டுகளை கழித்தபின் எங்களுடைய இரண்டு பிள்ளைகளான ஹைடியும் மைக்கும்கூட பயனியர் ஊழியம் செய்ய ஆரம்பித்தார்கள். நாங்கள் பொருளாதார ரீதியில் ஒன்றுமில்லாதவர்களாக இருந்தாலும் இதுதான் என் வாழ்க்கையின் மிக சந்தோஷமான காலம். எங்கள் வாழ்க்கை எளிமையாக இருந்தது. நாங்கள் குடும்பமாக அதிக நேரத்தை ஒன்றாக செலவிட்டோம்; பைபிளில் சொல்லப்பட்ட விதவையின் வீட்டிலிருந்த எண்ணெயைப்போல, நாங்கள் கவனமாக பட்ஜெட் போட்டு செலவு செய்ததால் எங்களுடைய சேமிப்பு தீர்ந்து போகவில்லை.—1 இராஜாக்கள் 17:14-16.
மறுபடியுமாக இன்னொரு தேசத்திற்கு செல்வது
மறுபடியுமாக இன்னொரு நாட்டிற்கு செல்லலாமா என்று நாங்கள் 1992-ல் யோசிக்க ஆரம்பித்தோம். எங்களுடைய பிள்ளைகள் வளர்ந்துவிட்டார்கள், ஸ்பெய்னிலும் தேவை அந்தளவிற்கு இல்லை. ஈக்வடாரில் சேவை செய்த ஒரு மிஷனரியை எங்களுக்குத் தெரியும்; அவர் அந்தத் தேசத்தில் பயனியர்களுக்கும் மூப்பர்களுக்கும் தேவை அதிகமிருப்பதைப் பற்றி குறிப்பிட்டார். இன்னொரு புதிய தேசத்திற்கு சென்று எல்லாவற்றையும் புதிதாக ஆரம்பிப்பதற்கு எங்களுக்கு அதிக வயதாகிவிட்டதா? நாங்கள் அவ்விதம் நினைக்கவில்லை, ஏனென்றால் நாங்கள் இருவரும் திடகாத்திரமாக இருந்தோம்; பிரசங்க வேலையை மிகவும் நேசித்தோம். ஆகவே, இதைக் குறித்து ஈக்வடார் கிளை அலுவலகத்துக்குத் தெரிவித்து விட்டு புறப்படுவதற்காக திட்டமிட்டோம். வடக்கு ஸ்பெய்னில் சேவை செய்த எங்கள் மகள் ஹைடியும் அவளது கணவனான ஜ்வான் மான்வெலும் எங்களோடு சேர்ந்துகொள்ள ஆவலாக இருந்தார்கள்.
எங்களுடைய எல்லா காரியங்களையும் ஒழுங்குபடுத்திவிட்டு, கடைசியாக பிப்ரவரி 1993-ல் எங்கள் புதிய தேசத்திற்கு வந்து சேர்ந்தோம். ஈக்வடாரில் பயனியர் ஊழியம் செய்வதைக்குறித்து நாங்கள் இருவருமே மிக கிளர்ச்சியடைந்திருந்தோம், ஏனென்றால் இங்கு அநேகர் பைபிளைப் படிக்க ஆவலாக இருந்தனர். கிளை அலுவலகத்தில் கிடைத்த அனலான வரவேற்பிற்கு பிறகு தனிப்பட்ட தேவையிருப்பதாக சிபாரிசு செய்யப்பட்ட அநேக பட்டணங்களை பார்வையிட திட்டமிட்டோம். அந்தச் சமயத்தில்தான் என் கணவர் இறந்து போனார்.
“இருளின் பள்ளத்தாக்கிலே” வாழ்க்கை
முதலில் எனக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது, அதை என்னால் கடுகளவுகூட நம்ப முடியவில்லை. ஃபிரட் நோய் வந்து படுத்ததாக சரித்திரமே கிடையாது. நான் என்ன செய்ய வேண்டும்? எங்கே செல்லவேண்டும்? என்பதை என்னால் தெளிவாக சிந்திக்க முடியவில்லை.
என் வாழ்க்கையிலேயே மிகவும் கடினமான அச்சந்தர்ப்பங்களில் எனக்கு முன்பின் அறிமுகமில்லாத இரக்க குணமுள்ள ஆவிக்குரிய சகோதர சகோதரிகளின் ஆதரவால் ஆசீர்வதிக்கப்பட்டேன். கிளை அலுவலகத்திலிருந்த சகோதரர்கள் சவ அடக்க ஏற்பாடுகள் உட்பட எல்லாவற்றையும் கவனித்துகொண்டார்கள். சகோதரர் மற்றும் சகோதரி போனோ காட்டிய அன்பைப் பற்றி சொல்ல விரும்புகிறேன். நான் தனியாக இராதபடி அவர்கள் பார்த்துக்கொண்டனர், சகோதரி ஈடித் போனோ நான் தனிமையை உணரக்கூடாது என்பதற்காக பல இரவுகள் என் கட்டிலுக்கு அருகே படுத்துக் கொண்டார். உண்மையில் முழு பெத்தேல் குடும்பத்தினரும் இப்படிப்பட்ட அன்பையும் கரிசனையையும் எனக்கு காட்டினர்; நான் அன்பு என்னும் அனலான போர்வையால் போர்த்திப் பாதுகாக்கப்பட்டதைபோல் உணர்ந்தேன்.
சில நாட்களுக்குள்ளாகவே என்னுடைய மூன்று பிள்ளைகளும் என்னிடம் வந்து சேர்ந்தனர், அவர்கள் அளித்த ஆதரவை வார்த்தையால் விவரிக்க முடியாது. பகலில் என்னைச் சுற்றி அநேக அன்பானவர்கள் இருந்தனர்; ஆனால் நீண்ட இரவு நேரங்களை சமாளிப்பது மிக கடினமாக இருந்தது. அப்பொழுதுதான் யெகோவா என்னை ஆதரித்தார். பயங்கரமாக தனிமை என்னை வாட்டும்போது ஜெபத்தில் யெகோவாவிடம் மன்றாடுவேன் அவர் எனக்கு ஆறுதலளிப்பார்.
நான் என்ன செய்யப்போகிறேன் என்ற கேள்வி சவ அடக்கத்திற்குப்பின் எழும்பியது. நான் ஈக்வடாரில் தங்க விரும்பினேன், ஏனென்றால் அதுவே நாங்கள் இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு, ஆனால் என்னால் தனியாக இருக்கமுடியும் என்று தோன்றவில்லை. ஆகவே ஹைடியும் ஜ்வான் மான்வெலும் எதிர்காலத்தில் ஈக்வடாருக்கு வரவேண்டும் என்று ஏற்கெனவே திட்டமிட்டிருந்ததை சற்றே மாற்றியமைத்து உடனடியாக அங்கு வரவும் நாங்கள் அனைவரும் சேர்ந்து ஊழியம் செய்யலாம் எனவும் முடிவெடுத்தோம்.
கிளை அலுவலகம் சிபாரிசு செய்த லாஹா என்ற பட்டணத்தில் ஒரு மாதத்திற்குள்ளாக நாங்கள் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தோம். எல்லாவற்றையும் திட்டமிடுவதிலும் புதிய வீட்டில் குடியேறி ஒழுங்கமைப்பதிலும் புதிய நாட்டில் பிரசங்கிப்பதிலும் சீக்கிரமே பிஸியாகிவிட்டேன். இப்படிப்பட்ட வேலைகள் என் வேதனையை சற்றே லேசாக்கின. அதோடுகூட ஃபிரட்டிடம் ஒட்டுதலாக இருந்த என் மகளோடு சேர்ந்து அழ முடிந்தது; அது என் உணர்ச்சிகளுக்கு ஒரு வடிகாலாக அமைந்தது.
சில மாதங்களுக்கு பிறகு நான் வழக்கமான வேலைகளில் ஈடுபட ஆரம்பித்தபோது அந்தப் பேரிழப்பைக் கடுமையாக உணர ஆரம்பித்தேன். நானும் ஃபிரட்டும் ஒன்றாக அனுபவித்த சில சந்தோஷமான சம்பவங்களை என்னால் நினைத்து பார்க்க முடியவில்லை, அவ்விதம் நினைப்பது மிக வேதனையளித்தது; என்னுடைய கடந்தகாலத்திற்கு மனதிலே தடை விதித்தேன்; எதிர்காலத்தைப்பற்றி ஒன்றும் எண்ண முடியாமல் எப்படியோ ஒவ்வொரு நாளையும் கடத்தினேன். ஆனால் ஒவ்வொரு நாளும் அர்த்தமுள்ள காரியங்களை குறிப்பாக பிரசங்க ஊழியத்தை செய்ய முயற்சி செய்தேன். அதுதான் நான் தொடர்ந்து வாழ்க்கையை நடத்த உதவியது.
பைபிளை பிரசங்கிப்பதும் போதிப்பதும் எனக்கு எப்பொழுதும் பிடித்தமான வேலை; ஈக்வடாரில் செவிசாய்க்கும் பண்பு ஜனங்களிடத்தில் இருப்பதால் இந்த வேலை சந்தோஷத்தை ஏற்படுத்தியது. இங்கே, வீட்டுக்கு வீடு ஊழியத்தில் ஈடுபட ஆரம்பித்த சமயத்தில் ஒரு திருமணமான இளவயது பெண்ணை சந்தித்தேன்; அவள் இவ்விதம் சொன்னாள்: “பைபிளைப் பற்றி கட்டாயம் தெரிந்துகொள்ள நான் விரும்புகிறேன்!” அவளோடுதான் முதல் பைபிள் படிப்பை ஈக்வடாரில் ஆரம்பித்தேன். இப்படிப்பட்ட அனுபவம் என்னுடைய கவனத்தை திசை திருப்பி, என்னுடைய துக்கத்தில் மூழ்கிவிடாமல் இருக்க உதவியது. யெகோவா என்னுடைய வெளி ஊழியத்தை மிக அதிகமாக ஆசீர்வதித்தார். ஒவ்வொருமுறை வெளியே சென்று நற்செய்தியை பிரசங்கித்த போதும் ஒரு அருமையான அனுபவம் கிடைத்ததைப்போல் இருந்தது.
சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு பயனியராக தொடர்ந்து சேவை செய்தது மகத்தான ஆசீர்வாதமே. இது நான் ஒப்புக்கொண்ட கடமையை நிறைவேற்றவும் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஆக்கப்பூர்வமான காரியங்களை செய்யவும் உதவியது. விரைவில் ஆறு பைபிள் படிப்புகளை நடத்திவந்தேன்.
என்னுடைய ஊழியத்தில் எவ்வளவு சந்தோஷப்படுகிறேன் என்பதை விவரிக்க, சமீபத்தில் பைபிள் போதகங்களுக்கு உண்மையான ஆவலை காட்டிய ஒரு நடுத்தர வயது பெண்ணைப் பற்றி சொல்ல விரும்புகிறேன். நான் அவருக்கு ஒரு வசனத்தை காண்பித்தால் முதலாவது அவர் அதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள விரும்புகிறார், அதன்பின் அதை அவருடைய வாழ்க்கையில் பொருத்தி பயன்படுத்த விருப்பமுள்ளவராக இருக்கிறார். முன்பு ஒரு ஒழுக்கங்கெட்ட வாழ்க்கையை வாழ்ந்தவராக இருந்தாலும் சமீபத்தில் திருமணமின்றி தன்னோடு சேர்ந்து வாழும்படி ஒருவர் அவரை அழைத்தபோது அதை முழுமையாக நிராகரித்தார். வேதப்பூர்வமான தராதரங்களைக் கடைப்பிடிப்பதில் உறுதியாக நின்றதைக் குறித்து தான் மிகவும் சந்தோஷப்பட்டதாகக் குறிப்பிட்டு அதன் விளைவாக தான் ஒருபோதும் அடைந்திராத சமாதானத்தை இப்பொழுது தன் மனதில் அனுபவிப்பதாக என்னிடம் கூறினார். இப்படிப்பட்ட படிப்புகள், என் இருதயத்தை சந்தோஷப்படுத்தி, என்னாலும் பிரயோஜனமிருக்கிறது என்று எண்ண வைக்கின்றன.
என் சந்தோஷத்தைக் காத்துக்கொள்ளுதல்
சீஷராக்கும் வேலை எனக்கு அதிக சந்தோஷத்தை தந்தாலும் துக்கம் உடனடியாக மறைந்துவிடவில்லை. என்னைப் பொருத்தவரை துக்கம் இடையிடையே தலைகாட்டி என்னை பாதிக்கும். என் மகளும் மருமகனும் பெரும் ஆதரவாயிருந்தார்கள், ஆனால் சில நேரங்களில் சந்தோஷமான சமயங்களை தங்கள் மத்தியில் அனுபவிக்கையில் நான் என்னுடைய மிகப்பெரிய இழப்பை உணர்கிறேன். என் கணவனுடைய இழப்பை மிக அதிகம் உணர்வதற்கு நாங்கள் இருவரும் மிக அன்னியோன்யமாக இருந்தது மட்டுமே காரணமல்ல; அநேக காரியங்களுக்கு நான் அவரையே சார்ந்திருந்தேன் என்பதே முக்கிய காரணம். சில சமயங்களில் அவரிடம் பேச முடியவில்லையே, அவரிடம் ஆலோசனை கேட்க முடியவில்லையே அல்லது ஒரு வெளி ஊழிய அனுபவத்தை அவரிடம் பகிர்ந்துகொள்ள முடியவில்லையே என்பதைப் போன்ற சூழ்நிலை, எனக்கு கட்டுப்படுத்தமுடியாத துக்கத்தையும் வெறுமையையும் ஏற்படுத்தும்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் எனக்கு உதவியது எது? நான் யெகோவாவிடம் ஊக்கமான, ஆக்கப்பூர்வமான ஏதாவதொன்றை நினைப்பதற்கு உதவி செய்யும்படி ஜெபம் செய்கிறேன். (பிலிப்பியர் 4:6-8) அவர் நிச்சயமாகவே எனக்கு உதவுகிறார். நானும் ஃபிரட்டும் சந்தோஷமாக அனுபவித்த சில சமயங்களைப்பற்றி சில ஆண்டுகளுக்கு பிறகு என்னால் பேசமுடிகிறது. இதிலிருந்து, காயம் மெல்ல மெல்ல ஆறுகிறது என்பது புரிகிறது. சங்கீதக்காரனாகிய தாவீதைப்போல் நான் ஒரு “இருளின் பள்ளத்தாக்கிலே” நடந்ததை உணர்கிறேன். ஆனால் எனக்கு ஆறுதலளிக்க யெகோவா அங்கே இருந்தார், உண்மையுள்ள சகோதரர்கள் சரியான வழியிலே என்னை வழிநடத்தினார்கள்.
நான் கற்றுக்கொண்ட பாடங்கள்
எப்பொழுதும் ஃபிரட்டே எல்லாவற்றையும் தலைமையேற்று செய்ததால் என்னால் எதையாவது சுயமாக செய்ய முடியும் என்று நான் நினைத்ததே இல்லை. ஆனால், யெகோவாவின் உதவியோடும் குடும்பத்தாரின் உதவியோடும் சகோதரர்களின் உதவியோடும் சமாளித்தேன். சில காரியங்களில் முன்பிருந்ததைவிட அதிக பலமடைந்திருக்கிறேன். யெகோவாவிடம் முன்பிருந்ததைவிட அதிகமாக ஜெபத்தில் அணுகுகிறேன்; நானே சுயமாக தீர்மானங்களை எடுக்கக் கற்றுக்கொள்கிறேன்.
தேவை அதிகம் இருக்கும் இடத்தில் சேவை செய்யவேண்டும் என்ற விருப்பத்தில் நானும் ஃபிரட்டும் ஸ்பெய்னில் 20 ஆண்டுகள் சேவை செய்ததை நினைத்து சந்தோஷப்படுகிறேன். இந்த ஒழுங்குமுறையில் நாளை என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது, ஆகவே வாய்ப்பு இருக்கும்போது யெகோவாவிற்கும் குடும்பத்திற்கும் நம்மால் இயன்ற அனைத்தையும் செய்யவேண்டும். அவ்வாறு உருண்டோடிய வருடங்கள் எங்களுடைய வாழ்க்கையையும் திருமணத்தையும் அதிக வளமுள்ளதாக்கின, மேலும் இப்படிப்பட்ட இழப்பிற்கு அவை என்னை தயாராக்கின என்றுதான் நான் நம்புகிறேன். ஃபிரட் இறப்பதற்கு முன்பே பயனியர் ஊழியம் செய்வது என் வாழ்க்கையின் ஓர் அங்கமாக இருந்ததால், அது என் தற்போதைய வாழ்க்கையின் நிஜத்தை ஏற்றுக்கொள்ள போராடும்போது ஒரு நோக்கத்தை எனக்கு அளித்தது.
ஃபிரட் இறந்தபோது எல்லாமே முடிந்துவிட்டதைப்போல் தோன்றியது. ஆனால் அது உண்மையில்லை. எனக்கு யெகோவாவின் சேவையில் செய்ய அதிகமிருந்தது, மேலும் நான் அநேகருக்கு உதவ வேண்டிய அவசியம் இருந்தது. என்னைச் சுற்றி இருக்கும் அநேகர் இன்னும் சத்தியத்தை வாஞ்சிப்பதால் நான் எப்படி அதை நிறுத்த முடியும்? இயேசு சொன்னதுபோல் மற்றவர்களுக்கு உதவுவதால் நன்மையடைகிறேன். (அப்போஸ்தலர் 20:35) வெளி ஊழியத்தில் எனக்கு கிடைக்கும் அனுபவங்கள் நல்ல எதிர்பார்ப்பை கொண்டிருக்கவும் சிலவற்றை திட்டமிட்டு செய்யவும் எனக்கு உதவுகின்றன.
சில நாட்களுக்கு முன்பாக எனக்கு நன்கு அறிமுகமாகியிருந்த தனிமை உணர்ச்சி என்னை அலைகழித்தது. ஆனால், ஒரு பைபிள் படிப்பிற்கு செல்வதற்காக வீட்டைவிட்டுக் கிளம்பியவுடன் எனக்குள் சந்தோஷம் பொங்குவதை உணர்ந்தேன். இரண்டு மணிநேரத்திற்கு பிறகு திருப்தியுடனும் கட்டியெழுப்பப்பட்ட உணர்வுடனும் திரும்பினேன். சங்கீதக்காரன் சொல்வதுபோல் நாம் சில சமயங்களில், ‘கண்ணீரோடே விதைக்கிறவர்களாக’ இருப்போம், ஆனால் இந்த நம் முயற்சியை யெகோவா ஆசீர்வதிப்பார், பிறகு நாம், ‘கெம்பீரத்தோடே அறுக்கக்கூடும்.’—சங்கீதம் 126:5, 6.
கொஞ்ச காலத்திற்கு முன்பாக உயர் ரத்த அழுத்தம் காரணமாக என் அட்டவணையை சற்று மாற்றியமைத்து இப்போது தொடர்ந்து துணைப் பயனியர் ஊழியம் செய்கிறேன். திருப்திகரமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன், ஆனால் இந்த ஒழுங்குமுறையில் என்னுடைய இழப்பை முழுமையாக மறந்து இயல்பான வாழ்க்கைக்குத் திரும்புவேன் என்ற நம்பிக்கை எனக்கில்லை. என் மூன்று பிள்ளைகளும் முழுநேர ஊழியம் செய்வது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக ஃபிரட்டை புதிய உலகில் சந்திப்பதற்கு மிக ஆவலோடு காத்திருக்கிறேன். என்னால் ஈக்வடாரில் செய்யமுடிந்த வேலையைக் குறித்து சொல்கையில் அவர் கிளர்ச்சியடைவார் என்பதில் சந்தேகமில்லை—ஆம் எங்கள் திட்டம் உண்மையில் பலனளித்தது.
சங்கீதக்காரனுடைய வார்த்தைகள் தொடர்ந்து என் வாழ்க்கையில் உண்மையாக இருக்கவேண்டும் என்று ஜெபம் செய்கிறேன். “என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்.”—சங்கீதம் 23:6.
[பக்கம் 23-ன் படம்]
ஈக்வடாரிலுள்ள லாஹா நகரில் சான் லூக்காஸ் என்ற இடத்தில் ஊழியம் செய்தல்