பெண்ணுக்கும் அவள் செய்யும் வேலைக்கும் மதிப்பு
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன், லேமுவேல் என்பவர் குணசாலியான இல்லத்தரசியை அழகாய் வர்ணித்து எழுதினார். இது பைபிளில் நீதிமொழிகள் 31-ம் அதிகாரத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. குணசாலியென அவர் புகழ்ந்த அந்தப் பெண் சுறுசுறுப்பானவள் என்பதில் சந்தேகமில்லை. குடும்பத்தைக் கவனித்துக்கொண்டாள், சந்தையில் வியாபாரம் செய்தாள், நிலம் வாங்கி விற்றாள், வீட்டிலுள்ளோருக்கு துணிமணிகளை தைத்தாள், அதோடு வயல்களிலும் வேலைபார்த்தாள்.
இந்தப் பெண் அலட்சியம் செய்யப்படவில்லை. ‘அவள் பிள்ளைகள் அவளை பாக்கியவதி என்கிறார்கள்; அவள் புருஷன் அவளை புகழுகிறான்.’ அப்படிப்பட்ட மனைவி ஒரு பொக்கிஷம். “அவளுடைய விலை முத்துக்களைப் பார்க்கிலும் உயர்ந்தது” என பைபிள் சொல்கிறது.—நீதிமொழிகள் 31:10-28.
லேமுவேலின் காலம் முதற்கொண்டு, பெண்களின் வேலை மிகவும் கடினமாகியுள்ளது என்றுதான் சொல்லவேண்டும். 20-ம் நூற்றாண்டில் ஒரு பெண், மனைவியாக, தாயாக, ஆசிரியையாக, தனியொருத்தியாய் சம்பாதிப்பவளாக, விவசாயியாக என இந்த அனைத்து வேடங்களையும் ஒரேசமயத்தில் ஏற்க வேண்டியிருக்கிறது. எண்ணிலடங்கா பெண்கள், தங்கள் குழந்தைகள் பட்டினி கிடக்கக்கூடாதென்ற ஒரே காரணத்திற்காக மகத்தான தியாகங்களை செய்கின்றனர். இந்த எல்லா பெண்களையும் போற்றிப் புகழ்வது தகும் அல்லவா?
தனியொருத்தியாய் சம்பாதிப்பவளாக
குடும்பத்தை ஆதரிப்பதற்காக முன்பிருந்ததைக் காட்டிலும் இன்று அநேக பெண்கள் வெளியில் சென்று வேலை பார்க்க வேண்டியுள்ளது; சிலசமயங்களில் அவர்களது ஒரே சம்பாத்தியத்தில் குடும்பம் நடக்கிறது. பெண்களும் உலக பொருளாதார நெருக்கடியும் என்ற ஆங்கில புத்தகம் ஓர் அறிக்கையை குறிப்பிட்டது: “பெண்கள் அடுப்படிவரைதான் என சொல்லிவிடமுடியாது. உலகெங்கிலும் வெகு சில பெண்களே தாங்கள் ‘வெறுமனே இல்லத்தரசிகள்’ என சொல்வார்கள்.” பெண்களுக்கான வேலைகள் எவற்றிலும் வசீகரம் இல்லை. பத்திரிகைகளிலும் டிவி தொடர் நாடகங்களிலும் பெண்கள் சொகுசான ஆபீஸுகளில் நிர்வாகிகளாய் பணியாற்றுவதாய் காண்பிக்கப்பட்டாலும், உண்மையோ பொதுவாக வெகு வித்தியாசமாய் உள்ளது. உலகில் பெரும்பான்மையான பெண்கள், கட்டுப்படியாகாத வருமானத்திற்காக மணிக்கணக்கில் மாடாய் உழைக்கிறார்கள்.
கோடிக்கணக்கான பெண்கள் வயலில் வேலை பார்க்கின்றனர்; பயிர் செய்து, குடும்பத்திற்குச் சொந்தமான துண்டு நிலங்களை உழுகின்றனர், அல்லது ஆடு மாடுகளை மேய்க்கின்றனர். இந்த உழைப்பால் உலகின் பாதி மக்களுக்கு படியளக்கிறார்கள்; அவர்களுக்கோ அதற்கான கூலி குறைவு அல்லது கூலியே இல்லை. “ஆப்பிரிக்காவில் 70 சதவீத உணவு பெண்களால் உற்பத்தி செய்யப்படுகிறது, ஆசியாவில் அதன் சதவீதம் 50-60, லத்தீன் அமெரிக்காவில் 30” என பெண்களும் சுற்றுச்சூழலும் என்ற ஆங்கில புத்தகம் அறிக்கை செய்கிறது.
அப்படியே பெண்கள் சம்பளத்துக்கு வேலை செய்தாலும், ஆண்களைக் காட்டிலும் குறைவான சம்பளத்தையே வாங்குகின்றனர்; இதற்கான ஒரே காரணம், அவர்கள் பெண்களாய் பிறந்திருப்பதே. இந்தப் பேதம் ஒரு தாய்க்கு—அதுவும் முக்கியமாக அவள் தனியொருத்தியாய் குடும்பத்தை தாங்கி நடத்தும்போது—ஜீரணிக்க முடியாத கசப்பான உண்மையாய் இருக்கிறது; இப்படிப்பட்ட தாய்மார்களே இன்று அதிகமதிகமாய் இருக்கின்றனர். ஆப்பிரிக்கா, கரிபியன், லத்தீன் அமெரிக்கா ஆகிய நாடுகளில் 30-லிருந்து 50 சதவீத குடும்பங்கள் ஒரு பெண்ணின் சுயசம்பாத்தியத்தையே நம்பியிருக்கின்றன என ஐக்கிய நாட்டு அறிக்கை ஒன்று கணக்கிட்டிருக்கிறது. அதிக வளர்ச்சியடைந்துள்ள நாடுகளிலும்கூட, குடும்ப பாரத்தைத் தாங்கி நடத்தும் பொறுப்பை அநேக பெண்கள் சுமக்கவேண்டியிருந்திருக்கிறது.
வளரும் நாடுகள் பெரும்பாலானவற்றில் காணப்படும் கிராமப்புற வறுமை இந்தப் போக்கை இன்னும் மோசமாக்குகிறது. குடும்பத்திற்கு தினமும் சோறு போட திண்டாடும் கணவன், அருகிலுள்ள நகருக்கோ வேறொரு நாட்டிற்கோகூட வேலை தேடி செல்ல தீர்மானிக்கலாம். குடும்ப பாரத்தை மனைவியிடம் விட்டுச்செல்லலாம். போன காரியம் கைகூடிவிட்டால், வீட்டிற்கு பணம் அனுப்புவான். ஆனால் அவனுக்கு நல்லெண்ணம் இருந்தாலும், பெரும்பாலும் அவ்வாறு தொடர்ந்து செய்ய முடிவதில்லை. அவனது குடும்பம் வறுமையின் எல்லைக்கே போகலாம்; இப்போது வயிற்றுப்பாட்டிற்கு அவர்கள் தாயையே நம்பியிருக்கிறார்கள்.
என்ன செய்தாலும் வறுமையையே சந்திக்கவேண்டியுள்ளதால், “பெண்ணின் மறுபெயர் வறுமை” என இந்நிலை பொருத்தமாகவே விளக்கப்படுகிறது; இது லட்சக்கணக்கான பெண்களுக்கு தாங்கமுடியாத சுமை. “பெண்கள் தலைமைதாங்கி நடத்தும் குடும்பங்கள், உலகம் முழுவதிலும் மூன்றில் ஒரு பாகம் என கணக்கிடப்பட்டுள்ளது; ஆண்கள் முன்னின்று நடத்தும் குடும்பங்களைக் காட்டிலும் அவை பல மடங்கு வறுமையில் உழலுகின்றன; மேலும் அப்படிப்பட்ட குடும்பங்களே இப்போது அதிகரித்துவருகின்றன” என பெண்களும் உடல்நலமும் என்ற ஆங்கில புத்தகம் விளக்குகிறது. ஆனாலும் உணவளிக்கவேண்டிய பெரும் பாடோடு மற்ற சவால்களையும் பெண்கள் எதிர்ப்படுகிறார்கள்.
தாயாகவும் ஆசிரியையாகவும்
ஒரு தாய், தன் பிள்ளைகளது உணர்ச்சி சம்பந்தமான நலனின் பேரிலும் அக்கறை காண்பிக்க வேண்டும். அன்பையும் பாசத்தையும் பற்றி கற்றுக்கொள்ள பிள்ளைக்கு உதவுவதில் அவள் முக்கிய பங்கு வகிக்கிறாள்; இப்படிப்பட்ட பாடங்கள் அவனது சரீர தேவைகளை பூர்த்திசெய்வதுபோன்றே முக்கியமானவை. பிள்ளை நல்ல சமநிலை காக்கும் வாலிபனாய் வளரவேண்டுமானால் அன்பான, பாதுகாப்பான வளர்ப்புச் சூழல் தேவை. இதிலும் தாயே முக்கியமான பங்கு வகிக்கிறாள்.
வளரும் பிள்ளை என்ற ஆங்கில புத்தகத்தில், ஹெலன் பீ என்பவர் இப்படி எழுதுகிறார்: “அன்பான பெற்றோர், பிள்ளையின்மீது அக்கறை காண்பிக்கின்றனர், பாசத்தைப் பொழிகின்றனர், பெரும்பாலும் அல்லது எல்லா சமயங்களிலும் பிள்ளையின் தேவைகளுக்கு முதலிடம் கொடுக்கின்றனர், பிள்ளையின் நடவடிக்கைகளில் ஆர்வம் காண்பிக்கின்றனர், மேலும் பிள்ளையின் உணர்ச்சிகளை நன்கு புரிந்துகொண்டு கரிசனையோடு செயல்படுகின்றனர்.” கரிசனைமிக்க தாயிடமிருந்து அப்படிப்பட்ட பாசத்தை பெற்றிருக்கும் பிள்ளைகள் அவளுக்கு நிச்சயமாகவே போற்றுதலை காட்டவேண்டும்.—நீதிமொழிகள் 23:22.
அநேக தாய்மார், குழந்தையைப் பெற்றெடுத்த சமயத்திலிருந்தே அதற்கு தாய்ப்பாலூட்டுவதன் மூலம், பாசம் வளரும் சூழலை ஏற்படுத்துகிறார்கள். முக்கியமாய் ஏழ்மையான குடும்பங்களில் பச்சிளம் குழந்தைக்கு தாய் தரும் மதிப்புமிக்க பரிசு, தாய்ப்பாலே. (பக்கங்கள் 10, 11-ல் உள்ள பெட்டியைக் காண்க.) அப்போஸ்தலனாகிய பவுல், தெசலோனிக்கேயாவிலிருந்த கிறிஸ்தவர்களிடம் தனக்கிருந்த பாசத்தை, ‘குழந்தைகளுக்கு பாலூட்டி சீராட்டி வளர்க்கும் தாயின்’ பாசத்திற்கு ஒப்பிட்டு பேசியதாக பைபிள் சொல்வது ஆர்வமளிக்கிறது.—1 தெசலோனிக்கேயர் 2:7, 8, NW.
குழந்தைகளுக்கு பாலூட்டுவதும் சீராட்டுவதும் மட்டுமல்ல பெரும்பாலும் அவர்களது முக்கியமான ஆசிரியையாகவும் திகழ்கிறாள் தாய். “என் மகனே, உன் தகப்பன் புத்தியைக் கேள், உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே” என பைபிள் ஆலோசனை அளிக்கிறது; பிள்ளைகளுக்குப் போதிப்பதில் தாய்மார் வகிக்கும் பெரும் பங்கை அது மறைமுகமாய் குறிப்பிடுகிறது. (நீதிமொழிகள் 1:8) முக்கியமாய் தாயோ பாட்டியோதான், பேசவும் நடக்கவும் வீட்டு வேலைகள் செய்யவும் இன்னும் எத்தனையோ மற்ற காரியங்களை செய்யவும் பிள்ளைக்கு பொறுமையோடு கற்றுத்தருகிறார்கள்.
கருணை மிகவும் தேவை
பெண்கள் தங்கள் குடும்பத்தாருக்கு அளிக்கும் மிகச் சிறந்த பரிசுகளில் ஒன்று கருணை. குடும்பத்திலுள்ள ஒருவர் சுகமின்றி படுத்துவிடும்போது, தாய் ஒரு நர்ஸாக ஆகிவிடுகிறாள்; அதேசமயத்தில் தனது மற்ற பொறுப்புகளையும் கவனித்துக்கொள்கிறாள். “உலகிலேயே, பிறரது உடல்நலத்தைப் பேணுவதில் பெரும் பங்கு வகிப்பது பெண்களே” என பெண்களும் உடல்நலமும் என்ற புத்தகம் விளக்குகிறது.
தன் கருணை உள்ளத்தால், தாய், பிள்ளைகளுக்கு உணவில்லாமல் போய்விடக்கூடாதே என்பதற்காக தான்தானே அரைவயிறு சாப்பிடுகிறாள். சில பெண்கள், ஊட்டச் சத்துக் குறைவுள்ளவர்களாய் இருந்தாலும் தாங்கள் உண்பதே போதுமானது என நினைப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டிருக்கின்றனர். பெண்கள் உணவில் பெரும் பகுதியை கணவருக்கும் பிள்ளைகளுக்குமே கொடுத்துக் கொடுத்து பழகிப்போயிருப்பதால், கொஞ்சமும் சக்தியில்லாமல் துவண்டு போகும்வரை, வயிறு நிரம்ப சாப்பிட்டுவிட்டதாகவே யோசித்துக்கொள்கின்றனர்.
சிலசமயங்களில் பெண் தன் கருணை உள்ளத்தின் காரணமாக சுற்றுச்சூழலில் அக்கறை காண்பிக்கிறாள். வறட்சி தாக்கும்போதும் நிலம் பாலைவனமாகும்போதும் காடுகள் அழிக்கப்படும்போதும் தானும் அவதிப்படவேண்டும் என்பதால் சுற்றுச்சூழலை பாதுகாப்பது அவளுக்கு அவசியமாய் படுகிறது. இந்தியப் பட்டணம் ஒன்றில், ஒரு மரத் தொழிற்சாலை தன் அருகிலிருந்த காட்டில் சுமார் 2,500 மரங்களை வெட்டப்போகிறது என்பதை தெரிந்துகொண்டவுடன் பெண்கள் ஆவேசம் அடைந்தனர். உணவிற்காகவும் விறகிற்காகவும் தீவனத்திற்காகவும் அம்மரங்கள் அப்பெண்களுக்கு தேவைப்பட்டன. மரம் வெட்டுவோர் வந்தபோதோ, பெண்கள் மரங்களைச் சுற்றி மனிதச்சங்கிலி அமைத்து அவற்றிற்கு பாதுகாப்பாய் நின்றுகொண்டிருந்தனர். ‘முதலில் எங்கள் தலைகளை வெட்டிவிட்டு பின் மரங்களை வெட்டுங்கள்’ என சொன்னார்கள். காடு பிழைத்துக்கொண்டது.
“அவள் கைகளின் பலனை அவளுக்குக் கொடுங்கள்”
சம்பாதிப்பவளாக, தாயாக, ஆசிரியையாக, கருணையின் வடிவமாக என எல்லா உருவிலும் பெண் மரியாதைக்கும் மதிப்புக்கும் உகந்தவள்; அவள் செய்யும் வேலையும் அப்படித்தான். குணசாலியான இல்லத்தரசியை வாயார புகழ்ந்த ஞானவானான லேமுவேல், பெண்ணின் வேலையையும் சரி ஆலோசனையையும் சரி மதிப்புமிக்கதாய் கருதினார். உண்மையில், தன் தாய் தனக்கு போதித்த உபதேசத்தை வைத்தே அதில் பெரும்பான்மையானவற்றை அவர் எழுதினார் என பைபிள் விளக்குகிறது. (நீதிமொழிகள் 31:1) இவ்வாறு உயிரைக் கொடுத்து உழைக்கும் மனைவியையும் தாயையும் அலட்சியப்படுத்தக் கூடாது என்பதில் லேமுவேல் உறுதியாய் இருந்தார். “அவள் கைகளின் பலனை அவளுக்குக் கொடுங்கள்; அவளுடைய செய்கைகள் . . . அவளைப் புகழக்கடவது” என அவர் எழுதினார்.—நீதிமொழிகள் 31:31.
என்றாலும், லேமுவேல் அந்தக் கருத்துக்களை பதிவுசெய்தபோது, அவை வெறுமனே மனித சிந்தனையின் வெளிப்பாடாக இல்லை. அவை கடவுளது வார்த்தையான பைபிளில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது.” (2 தீமோத்தேயு 3:16) அந்தக் கருத்துக்கள் சர்வவல்லமையுள்ள தேவன் பெண்களை நோக்கும் விதத்தையே எடுத்துரைக்கின்றன; ஏனென்றால் நம் போதனைக்காக கடவுள்தான் அந்த வாக்கியங்களை பைபிளில் பதிவுசெய்யப்படும்படி ஏவினார்.
மேலும், கணவன்மார் மனைவிகளை ‘கனம் செய்யவேண்டும்’ என கடவுளது ஏவப்பட்ட வார்த்தை குறிப்பிடுகிறது. (1 பேதுரு 3:7) எபேசியர் 5:33-ல் கணவன்மாருக்கு இப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது: “உங்களிலும் அவனவன் தன்னிடத்தில் அன்புகூருவதுபோல, தன் மனைவியினிடத்திலும் அன்புகூரக்கடவன்.” இன்னும், எபேசியர் 5:25 (NW) சொல்கிறது: “கிறிஸ்து சபையில் அன்புகூர்ந்து தம்மைத்தாமே அதற்கு ஒப்புக்கொடுத்ததுபோல், புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்.” ஆம், கிறிஸ்து தம்மைப் பின்பற்றினவர்களை அந்தளவு நேசித்ததால் அவர்களுக்காக தம் உயிரைக் கொடுக்கவும் தயாராய் இருந்தார். கணவன்மார்களுக்கு என்னே ஓர் சிறந்த, சுயநலமற்ற முன்மாதிரி! இயேசு கடவுளது தராதரங்களைக் கற்பித்து அதன்படியே வாழ்ந்தார்; அவை நம் நன்மைக்காக பைபிளில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
இருந்தாலும், இத்தனை விதங்களில் பெண்கள் கடினமாய் உழைத்தாலும் அவர்களில் அநேகருக்கு அதற்கான பாராட்டு கிடைப்பதே இல்லை. இப்போது தங்கள் வாழ்க்கையை அவர்கள் எப்படி முன்னேற்றுவிக்கலாம்? அவர்களைக் கருதும் விதத்தில் ஏதாவது மாற்றம் ஏற்பட வாய்ப்பிருக்கிறதா? பெண்களுக்கான எதிர்காலம் என்ன?
[பக்கம் 10,11-ன் பெட்டி/படம்]
பெண் தன் நிலையை மேம்படுத்துவதற்கான மூன்று வழிகள்
கல்வி. உலகில் சுமார் 60 கோடி பெண்கள் படிப்பறிவில்லாதவர்கள்; அவர்களில் பெரும்பாலானோர் பள்ளிக்கூடத்துப் பக்கமே தலைவைத்துப் படுத்ததில்லை. நீங்களும்கூட ஒருவேளை அதிகம் படித்திருக்க மாட்டீர்கள், ஆனால் சொந்தமாய் படிக்க கற்றுக்கொள்ள முடியாது என்று அர்த்தமாகாது. அது சுலபமில்லைதான், ஆனாலும் அநேக பெண்கள் வெற்றிபெற்றிருக்கிறார்கள். “வளர்ந்தவர்கள் படிப்பறிவைப் பெற மதப்பற்று முக்கிய தூண்டுகோலாய் அமையலாம்” என பெண்களும் படிப்பறிவும் என்ற ஆங்கில புத்தகம் விளக்குகிறது. நீங்களே பைபிளை வாசிக்க தெரிந்துகொள்வது என்பது, படிக்கக் கற்றுக்கொள்வதற்காக கிடைக்கும் சிறந்த வெகுமதியாகும். ஆனால் இன்னும் மற்ற அநேக நன்மைகளும் உண்டு.
படிப்பறிவு பெறும் தாய் வாழ்க்கையில் பொருளாதார ரீதியில் அதிக முன்னேற்றம் அடைய வாய்ப்புகளைப் பெறுவது மட்டுமல்லாமல், உடல் ஆரோக்கியத்தை முன்னேற்றுவிக்கும் நல்ல பழக்கவழக்கங்களையும் கற்றுக்கொள்ளலாம். இந்தியாவின் கேரள மாநிலம் படிப்பறிவின் நன்மைகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டாய் திகழ்கிறது. வருமான விஷயத்தில் இம்மாநிலம் சராசரிக்கும் குறைவாகவே இருக்கிறபோதிலும், அங்குள்ள மகளிரில் 87 சதவீதத்தினர் படிப்பறிவுள்ளவர்கள். ஆர்வமளிக்கும் விதமாய், அதே மாநிலத்தில் சிசுக்களின் மரண விகிதம் இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்களைக் காட்டிலும் ஐந்து மடங்கு குறைவாக உள்ளது; இந்த மாநிலத்துப் பெண்கள் சராசரியாக 15 வருடங்கள் கூடுதலாக வாழ்கின்றனர்; எல்லா சிறுமிகளும் பள்ளிக்குச் செல்கிறார்கள்.
இயல்பாகவே, படிப்பறிவுள்ள தாய், பிள்ளைகள் படிப்பதற்கு ஒரு தூண்டுகோலாய் இருக்கிறாள்; இது சாதாரண சாதனையே அல்ல. சிறுமிகளுக்கு கல்வி அறிவு அளிப்பது மிகச் சிறந்த முதலீடு. வேறெவற்றிற்கும், குடும்ப ஆரோக்கியத்தை முன்னேற்றுவிக்கவும் பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் அந்தளவு வல்லமை இல்லை என ஐ.நா. பிள்ளைகள் நல அமைப்பின் (UNICEF) பிரசுரமான உலக பிள்ளைகளின் நிலை 1991 குறிப்பிடுகிறது. படிக்கவும் எழுதவும் திறமை இருந்தால், தாயாகவும் சம்பாதிப்பவளாகவும் மேம்பட்டு விளங்க அது உங்களுக்கு உதவும் என்பதில் சந்தேகமே இல்லை. a
ஆரோக்கியம். ஒரு தாயாக—அதுவும் முக்கியமாய் கர்ப்பமாயிருக்கும்போதோ பாலூட்டும்போதோ—உங்களை நீங்களே கவனித்துக்கொள்ள வேண்டியது அவசியம். உங்கள் உணவு பழக்கத்தை முன்னேற்றுவிக்க முடியுமா? ஆப்பிரிக்காவிலும் தென் மற்றும் மேற்கு ஆசியாவிலும் உள்ள கர்ப்பவதிகளில் மூன்றில் சுமார் இரண்டு பங்கினர் இரத்த சோகையால் அவதிப்படுவதாய் கிளினிக் ரிஸல்டுகள் காட்டுகின்றன. இரத்த சோகை உங்கள் சக்தியையெல்லாம் உறிஞ்சிவிடுவது மட்டுமல்லாமல், பிள்ளைப்பேற்றின் ஆபத்துக்களையும் அதிகரிக்கிறது; அதுமட்டுமன்றி மலேரியாவும் எளிதில் தாக்குகிறது. கறியோ மீனோ கிடைக்காதிருக்கலாம் அல்லது விலை அதிகமாயிருக்கலாம்; ஆனால் முட்டைகளும் இரும்புச் சத்து நிறைந்த பழவகைகளும் காய்கறிகளும் கிடைக்குமே. சத்துள்ள உணவு வகைகளை மூடநம்பிக்கையின் காரணமாக சாப்பிடாமல் இருக்காதீர்கள்; உள்ளூர் பழக்கவழக்கங்களின் காரணமாக அரைவயிறாய் உண்ணாதீர்கள். b
தாய்ப்பாலூட்டுவது உங்களுக்கும் உங்கள் பிள்ளைக்கும் சிறந்தது. தாய்ப்பால் மலிவானது, அதிக சுத்தமானது, வேறெதைக் காட்டிலும் அதிக சத்துள்ளது. தாய்மார்கள் குழந்தைக்கு முதல் நான்கிலிருந்து ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் ஊட்டினால் ஒவ்வொரு வருடமும் பத்து லட்சம் பிள்ளைகள் இறப்பதைத் தவிர்க்கலாம் என UNICEF கணக்கிடுகிறது. ஆனால், தாய்ப்பால் மூலம் பரவும் வியாதி தாய்க்கு இருந்தால், வேறேதாவது மாற்று உணவை கொடுப்பதே பாதுகாப்பானது.
உங்கள் வீட்டின் சமையலறை நன்கு காற்றோட்டமுள்ளதாய் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். “சமைக்கும்போது, புகையும் சமையல் நச்சு வாயுக்களும் உடல்நலத்திற்கு பயங்கரமான கேடு விளைவிக்கலாம்” என பெண்களும் உடல்நலமும் என்ற புத்தகம் எச்சரிக்கிறது.
எவ்வளவு அழுத்தங்கள் வந்தாலும்சரி புகையிலையை புகைக்காதீர்கள். முன்னேற்றமடையும் உலகில் எங்கும் நிறைந்துள்ள சிகரெட் விளம்பரங்கள் பெண்களை குறிவைக்கின்றன; புகைப்பது நாகரிகமானது என சொல்லி அவர்களைத் திருப்திப்படுத்த முயற்சிக்கின்றன. இதைவிட பொய் வேறேதாவது இருக்க முடியுமா? புகைப்பது உங்கள் பிள்ளைகளுக்கு தீங்கிழைத்து உங்கள் உயிரையே பறிக்கலாம். புகைபிடிப்பவர்களில் கால் பங்கினர் புகையிலைக்கு அடிமையாவதன் காரணமாக இறுதியில் சாகின்றனர் என கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், முதன்முறையாக சிகரெட் புகைக்க ஆரம்பிக்கும் ஒருவர் வெகு விரைவில் புகையிலைக்கு அடிமையாகிவிடலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
சுகாதாரம். உங்களது முன்மாதிரியும் சுகாதாரத்தின் பேரில் நீங்கள் அளிக்கும் ஆலோசனையும் உங்கள் குடும்பத்தின் உடல்நலத்திற்கு இன்றியமையாதவை. வாழ்க்கையின் உண்மைகள் என்ற ஆங்கில பிரசுரம், நல்ல சுகாதாரத்திற்கு பின்வரும் அடிப்படை செயல்கள் தேவையென குறிப்பிடுகிறது:
• கழிவறைக்கு சென்று வந்த பின்னரும் உணவைத் தொடும் முன்னரும் உங்கள் கைகளை சோப்பு போட்டு கழுவுங்கள். உங்கள் பிள்ளைகள் சாப்பிடுவதற்கு முன் கைகளைக் கழுவுகிறார்களா என்பதை கவனியுங்கள்.
• கழிப்பறையை பயன்படுத்துங்கள், அதை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள், மூடி வையுங்கள். இதை செய்ய முடியாத சந்தர்ப்பத்தில், வீட்டிற்கு எவ்வளவு தொலைவில் முடியுமோ அவ்வளவு தொலைவு சென்று மலம் கழியுங்கள்; உடனடியாக அதை மண்ணால் மூடிவிடுங்கள்.—உபாகமம் 23:12, 13-ஐ ஒப்பிடுக.
• வீட்டு உபயோகத்திற்கு சுத்தமான தண்ணீரைப் பயன்படுத்த முயற்சி செய்யுங்கள். இதற்காக, கிணறுகளை நன்கு மூடி வையுங்கள். தண்ணீரை சுமந்து செல்ல சுத்தமான பாத்திரங்களைப் பயன்படுத்துங்கள்.
• சுத்தமான குடிநீர் கிடைக்காதென்றால், தண்ணீரை கொதிக்க வையுங்கள். பின் குடிப்பதற்கு முன் அதை ஆறவிடுங்கள். கொதிக்க வைக்காத தண்ணீர் பார்ப்பதற்கு சுத்தமாக தெரிந்தாலும், அதில் ஒருவேளை கிருமிகள் இருக்கலாம்.
• சமைக்காத உணவுப் பொருட்களில் கிருமிகள் அதிகம் இருக்க வாய்ப்பு உண்டு என்பதை ஞாபகத்தில் வையுங்கள். பச்சையாய் சாப்பிட வேண்டிய உணவுப் பதார்த்தங்களை சாப்பிடுவதற்கு முன் கழுவ வேண்டும். பின் முடிந்தளவு சீக்கிரமாய் சாப்பிட்டுவிட வேண்டும். மற்ற உணவுப் பொருட்களை, முக்கியமாய் ஆட்டுக்கறி, பன்றிக்கறி போன்றவற்றை முழுமையாய் சமைக்க வேண்டும்.
• உணவை சுத்தமாகவும் மூடியும் வைத்திருங்கள், அப்போதுதான் பூச்சிகளோ மிருகங்களோ அதை அண்டாது.
• குப்பைகளை எரித்துவிடுங்கள் அல்லது புதைத்துவிடுங்கள். c
[அடிக்குறிப்புகள்]
a இன்னும் அதிகமான விவரங்களுக்கு விழித்தெழு! ஏப்ரல் 8, 1995, பக்கங்கள் 6-11-ஐக் காண்க.
b யெகோவாவின் சாட்சிகள், பைபிள் கல்வி புகட்டும் ஏற்பாட்டின் பாகமாக, இலவச படிப்பறிவு வகுப்புகளையும் நடத்துகின்றனர்.
c சில நாடுகளில், மூடநம்பிக்கையால் பெண்கள் கர்ப்பமாயிருக்கையில் மீனை, முட்டையை அல்லது கோழியை சாப்பிடுவதில்லை; அப்படி சாப்பிட்டால் பிறவாத குழந்தைக்கு தீங்கு ஏற்படும் என நம்பப்படுகிறது. சிலசமயங்களில், வீட்டிலுள்ள ஆண்கள் சாப்பிட்டு முடித்த பிற்பாடுதான், மிஞ்சியிருக்கும் உணவை பெண் சாப்பிடவேண்டுமென்ற சம்பிரதாயம் இருக்கிறது.
[பக்கம் 8-ன் படம்]
மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த அநேக பெண்கள் அலுவலகங்களில் வேலை பார்க்கின்றனர்
[பக்கம் 8, 9-ன் படம்]
அநேக பெண்கள் இப்படிப்பட்ட சூழலில் வேலைசெய்ய வேண்டியுள்ளது
[படத்திற்கான நன்றி]
Godo-Foto
[பக்கம் 9-ன் படம்]
தாய்மார்கள் வீட்டில் ஆசிரியைகள்