801 ஃபிளைட் விபத்தில் தப்பினேன்
குவாமில் எங்கள் விமானம் தரையிறங்கத் தயாரானபோது நான் ஜன்னல் வழியே பார்த்தேன். ‘என்ன இப்படி இருக்கு, கொஞ்சம்கூட வெளிச்சமே இல்ல’ என்று எண்ணினேன். அது நடுராத்திரியாக இருந்தது என்னவோ உண்மைதான், கொட்டும் மழை காரணமாக தெளிவாக எதுவும் தெரியவில்லை. ஆனால் அந்தத் தீவின் விளக்குகள் எங்கே? விமான நிலையத்தின் பிரகாசமான ஓடுதளங்கள் எங்கே? என்னால் பார்க்க முடிந்ததெல்லாம் எங்கள் ஜம்போ ஜெட் விமானத்தின் மங்கலான விளக்குகளே.
விமானப் பணியாளர் ஒருவர், இறங்குவதற்கு முன்பு தயாராவதற்கான அறிவிப்பை எப்போதும்போல் செய்தார்; விமானத்தின் இறங்கும் சக்கரங்கள் தங்களுடைய இடத்தில் பொருந்திக்கொண்ட சத்தத்தைக் கேட்டேன். எங்களுடைய விமானம் தரையைத் தொட்ட மாத்திரத்தில் ஒரு பெரிய சத்தம் கேட்டது. விமானம் கட்டுப்பாடில்லாமல் குலுங்கியது, பயணிகள் தங்கள் இருக்கை கைப்பிடிகளை இறுகப் பற்றிக்கொண்டு, ‘என்ன ஆச்சு?’ என்று அலறினார்கள்.
பைலட் தவறாக கணித்ததன் விளைவாக சில நிமிடங்களில் எங்களது போயிங் 747 ஒரு மலையடிவாரத்தில் தடாலென மோதியது, அந்த இடம் விமான நிலையத்திலிருந்து ஐந்து கிலோமீட்டருக்கு முன்பாக இருந்தது. ஆகஸ்ட் 6, 1997 அன்று ஏற்பட்ட விமான விபத்தின் விளைவாக 228 பயணிகளும் விமான சிப்பந்திகளும் இறந்தனர். 26 பேர் மட்டுமே தப்பிப்பிழைத்தனர், அதில் நானும் ஒருவன்.
கொரியாவிலுள்ள சியோலில் நான் விமானத்தில் ஏறுவதற்கு முன் ஒரு விமானப்பயண ஊழியர் என்னுடைய இருக்கையை முதல் வகுப்பிற்கு மாற்றி, அங்கேயிருந்த கடைசி இருக்கையை எனக்கு நியமித்தார். ரொம்ப சந்தோஷப்பட்டு என் மனைவிக்கு டெலிபோனில் இதைத் தெரிவித்தேன், என் மனைவி சுன் டிக் என்னை குவாம் விமான நிலையத்தில் சந்திப்பதாக இருந்தது. இந்த இருக்கை மாற்றம் நான் கற்பனைகூட செய்து பார்க்க முடியாத பெரிய நன்மையில் விளைவடைந்தது.
விமான விபத்தும் அதை தொடர்ந்தவையும்
வெளிச்சம் மிகக்குறைவாக இருந்தமையால் வரவிருந்த ஆபத்தைப்பற்றி விமான சிப்பந்திகளுக்கு ஒன்றும் தெரியவில்லை போலும். எல்லாம் இமைப் பொழுதில் நடந்து முடிந்துவிட்டன! ஒரு சந்தர்ப்பத்தில் என்னை மிக மோசமான நிலையை எதிர்ப்பட தயார் செய்துகொண்டேன்; அதற்கு அடுத்ததாக எனக்குத் தெரிந்தது என்னவென்றால் என் சீட்டோடு பிணைக்கப்பட்ட நிலையில் தரையிலே கிடந்தேன். நான் சுயநினைவோடிருக்கிறேனா இல்லையா என்பதே எனக்குப் புரியவில்லை.
‘இதென்ன கனவா?’ என்று நினைத்தேன். கனவல்ல என்பது புரிந்தவுடன் விபத்தைக் கேள்விப்படும் என் மனைவி எவ்வாறு தாங்கிக்கொள்வாள் என்று எண்ணினேன். தான் ஒருபோதும் நம்பிக்கை இழக்கவில்லை என்பதை அவள் பிற்பாடு தெரிவித்தாள். விமான நிலையத்தில், ஏழு பேர் மட்டுமே தப்பினார்கள் என்று பேசிக்கொள்வதைக் கேட்டபோது, அந்த ஏழு பேரில் நான் ஒருவனாக இருப்பேன் என்று நம்பினாள்.
எங்களுடைய விமானம், நான்கு துண்டுகளாக உடைந்து கரடுமுரடான புதர்ப்பகுதியில் விழுந்தது. உடல்கள் நாலா பக்கமும் சிதறிக்கிடந்தன. விமானத்தின் சில பகுதிகள் எரிந்துகொண்டிருந்தன; வெடிக்கும் சத்தங்களையும் அதோடு சேர்ந்து புலம்பல்களையும் அழுகையையும் கேட்டேன். “காப்பாத்துங்க! காப்பாத்துங்க!” என்று குரல்கள் கெஞ்சின. என்னுடைய சீட், 1.8 மீட்டர் உயரத்திற்கு வளர்ந்திருந்த கோரைப்புல் நடுவே விழுந்திருந்தது; பயமுறுத்தும் நெருப்பின் ஒளியில் அருகேயிருந்த ஒரு உயரமான மலையைக் கண்டேன். அப்பொழுது இரவு 2 மணியிருக்கும், மழை தொடர்ந்து பெய்துகொண்டிருந்தது.
நான் பயங்கரமாக அதிர்ச்சி அடைந்திருந்தேன்; ஒரு இளம் பெண்ணின் மண்டையோட்டுத்தோல் உரிந்து அவளது பின்னந்தலையில் தொங்குவதைப் பார்க்கும்வரை, எனக்கும் காயம்பட்டிருக்கும் என்ற எண்ணம்கூட ஏற்படவில்லை. உடனடியாக என்னுடைய தலையைத் தொட்டுப்பார்த்தேன், இடது கண்ணுக்கு மேல் வெட்டு பட்டு ரத்தம்வடிவதை உணர்ந்தேன். என் உடல் முழுவதும் சிறு சிறு காயங்கள் ஏற்பட்டிருப்பதை கவனித்தேன். ஆனால் அவை ஏதும் பெரிய காயங்களாக இல்லை. ஆனால் என்னுடைய கால்களில் தாங்கமுடியாத வலியிருந்தது, ஆகவே என்னால் அசையக்கூட முடியவில்லை. இரண்டு கால்களும் உடைந்திருந்தன.
பிற்பாடு என்னை மருத்துவமனைக்கு எடுத்து சென்றபோது மருத்துவர்கள் என்னுடைய காயங்களை “மைனர்” என்று குறிப்பிட்டார்கள். தப்பிய மற்றவர்களது காயங்களோடு ஒப்பிடும்போது அவை மிகக்குறைவே. நொறுங்கிய பகுதிகளிலிருந்து ஒருவரை மீட்டபோது அவரது இரண்டு கால்களையும் காணவில்லை. மற்றவர்கள் மிக அதிகமாக தீப்புண்ணால் பாதிக்கப்பட்டார்கள்; இவ்விதம் பாதிக்கப்பட்ட தப்பியவர்களில் மூவர் சில வாரங்கள் மரண வேதனையை அனுபவித்தபின் செத்தார்கள்.
தீ ஜுவாலை ஏற்படுத்திய கவலை
எனக்கு ஏற்பட்டிருந்த காயங்களைக்குறித்து யோசிப்பதற்கு பதில் காப்பாற்ற யாரேனும் சீக்கிரம் வருவார்களா என்பதைப் பற்றி யோசித்தேன். எனக்கு விமானத்தில் முதல் முறை ஒதுக்கப்பட்ட சீட் மத்திய பகுதியில் இருந்தது; அந்தப் பாகங்கள் கிட்டத்தட்ட முற்றிலுமாக அழிந்து போயிருந்தன. அதில் பாக்கியிருந்தப் பகுதியில் தீப்பிடித்துக்கொண்டது; உள்ளே சிக்கிக்கொண்ட பிரயாணிகள் துடிதுடித்து செத்தார்கள். அவர்கள் உதவிக்காக அலறியதை என்னால் ஒரு நாளும் மறக்க முடியாது.
என்னுடைய சீட் விமானத்தின் முன்பகுதியிலிருந்தது. சிதைவுற்றப்பகுதிக்கு மிக அருகே நான் கிடந்தேன். திரும்பிப் பார்த்தபோது தீ ஜுவாலை தெரிந்தது. சீக்கிரத்தில் தீ என் பகுதிக்குப் பரவும் என்று பயந்தேன், நல்லவேளை அப்படி எதுவும் நடக்கவில்லை.
ஒருவழியாக மீட்கப்பட்டேன்!
நிமிடங்கள் ஆமை வேகத்தில் நகர்ந்தன. ஒருமணி நேரத்திற்குமேல் கடந்துவிட்டது. கடைசியாக மீட்புப்பணியாளர்கள் விபத்து நடந்த இடத்தை இரவு மூன்று மணியளவில் கண்டுபிடித்தனர். மலையுச்சியிலிருந்து, தாங்கள் கண்ட காட்சியைப்பற்றி அதிர்ச்சியுடன் அவர்கள் பேசிக்கொள்வது எனக்குக் கேட்டது. அவர்களில் ஒருவர் சத்தமாக இவ்விதம் கேட்டார்: “அங்கே யாராவது இருக்கீங்களா?”
“நான் இங்கதான் இருக்கேன், காப்பாத்துங்க!” என்று அலறினேன். மற்ற பயணிகளும் கூக்குரலிட்டனர். மீட்புப்பணியாளர்களில் ஒருவர் மற்றவரை “டெட்” என்று அழைத்தார். ஆகவே நான், “டெட், நான் இங்கே இருக்கேன். தயவுசெய்து வந்து எங்களுக்கு உதவுங்க!” என்று கத்தினேன்.
“நாங்க கீழே வறோம்! கொஞ்சம் பொறுமையாக இருங்க” என்று பதில் வந்தது.
அநேகர் தீ ஜுவாலையிலிருந்து தப்பிப்பதற்கு மழை உதவியது, ஆனால் அதே மழை, வழுக்கலான சரிவில் இறங்குவதை மிகவும் கடினமாக்கியது. இதன் காரணமாக மீட்பு பணியாளர்கள் தப்பிப்பிழைத்தவர்களிடம் வருவதற்கு இன்னொரு நீண்ட மணிநேரம் எடுத்தது. என்னைக் கண்டுபிடிப்பதற்கு அவர்கள் எடுத்துக்கொண்ட நேரம் எனக்கு யுகம்போல் தோன்றியது.
பிளேஷ் லைட்டுகளுடன் வந்த இரண்டு மீட்புப்பணியாளர்கள், “இதோ வந்துட்டோம். கவலைப்படாதீங்க” என்றார்கள். அவர்களோடு இன்னும் இருவர் சேர்ந்துகொண்டு என்னைத் தூக்குவதற்கு முயற்சி செய்தார்கள். இரண்டு பேர் என் கைகளையும் இரண்டுபேர் என் கால்களையும் பிடித்துக்கொண்டு தூக்கினார்கள். இவ்விதம் தூக்கிச் சென்றபோது வலியை தாங்கவே முடியவில்லை; ஏனென்றால் அவர்கள் சேற்றில் நடக்கும்போது வழுக்கிவிட்டது. சிறிது தூரம் நடந்தபின் அவர்கள் என்னை கீழே வைத்தனர். அவர்களில் ஒருவர் ஒரு தூக்குப்படுக்கையை எடுத்துவந்து ஒரு இராணுவ ஹெலிகாப்டருக்கும் அங்கிருந்து மலை உச்சியில் இருந்த ஆம்புலன்ஸுக்கும் என்னை அதில் வைத்து எடுத்துச் சென்றார்கள்.
கடைசியில் என் மனைவியை கண்டேன்!
என்னை எமர்ஜென்ஸி ரூமுக்கு எடுத்து செல்வதற்கு காலை 5:30 மணியாகிவிட்டது. எனக்கு பலத்த அடிபட்டிருந்தபடியால் போன் பேசுவதற்கு மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை. இதனால், நான் விபத்தில் தப்பிய செய்தியை காலை 10:30 வரை, அதாவது விமானம் நொறுங்கி சுமார் ஒன்பது மணிநேரம்வரை என் மனைவி கேள்விப்படவில்லை. தப்பிப்பிழைத்தவர்களின் பட்டியலில் என் பெயரைப் பார்த்ததை நண்பர் ஒருவர் அவளிடம் சொல்லியிருக்கிறார்.
மாலை சுமார் 4 மணியளவில், கடைசியாக என் மனைவிக்கு என்னை பார்க்க அனுமதியளிக்கப்பட்டபோது என்னால் உடனடியாக அவளை அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. வலி தெரியாமல் இருப்பதற்காக கொடுக்கப்பட்ட மருந்துகளால் என் புலனுணர்வுகள் அவ்வளவு தெளிவாக இல்லை. “உயிரோட இருக்கீங்களே அதுக்கே உங்களுக்கு தேங்க்ஸ்” என்பதே அவள் பேசிய முதல் வார்த்தைகள். அதற்கு என்ன பதில் சொன்னேன் என்பது எனக்கு ஞாபகம் இல்லை; ஆனால், பிறகு இவ்விதம் பதில் சொன்னேன் என்பதாகச் சொன்னார்கள்: “எனக்கு தேங்க்ஸ் சொல்லாதே. யெகோவாவிற்கு தேங்க்ஸ் சொல்லு.”
முன்னுரிமைகளை வரிசைப்படுத்துதல்
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றபோது அனுபவித்த வலி எனக்கு புதிதல்ல; ஏற்கெனவே பழக்கப்பட்ட ஒன்றுதான். 1987-ஆம் ஆண்டு கொரியாவிலிருந்து குவாம் சென்ற ஒரு வருடத்திற்குள், கட்டட வேலை நடக்கும்போது நான்காவது மாடியின் பால்கனியிலிருந்து கீழே தவறி விழுந்து, என் இரண்டு கால்களும் உடைந்துவிட்டன. அதுதான் என் வாழ்க்கையின் திருப்புமுனை. யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராகிய என் அக்கா என்னை பைபிளைப் படிக்கும்படி பலமுறை கூறுவார். நான் குணமடைவதற்காக ஆறு மாதம் காத்திருந்த சமயத்தில் இதை என்னால் செய்ய முடிந்தது. இதன் விளைவாக அந்த வருடமே என் வாழ்க்கையை யெகோவா தேவனுக்கு ஒப்புக்கொடுத்து அதை முழுக்காட்டுதல் மூலம் வெளிப்படுத்தினேன்.
விமான விபத்து நடந்தது முதல் எனக்கு மிகவும் பிடித்த ஒரு வசனத்தை சிந்தித்துக்கொண்டு இருக்கிறேன், அது இவ்விதம் சொல்கிறது: “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்.” (மத்தேயு 6:33) நான் விமான விபத்திலிருந்து குணமடைந்து வரும்போது என் வாழ்க்கையை மறுபடியுமாக மதிப்பிட எனக்கு வாய்ப்பு கிடைத்தது.
உயிர் எவ்வளவு மதிப்புமிக்கது என்பதை ஃபிளைட் 801-ன் விபத்து, என் மனதில் மிக பலமாகவும் மிக ஆழமாகவும் பதியவைத்தது. நானும்கூட மிக எளிதாகக் கொல்லப்பட்டிருக்கலாம்! (பிரசங்கி 9:11) என்னுடைய உடலை சரிசெய்ய பல ஆபரேஷன்கள் செய்யப்பட வேண்டியிருந்தன, குணமடைவதற்காக கிட்டத்தட்ட ஒரு மாதம் மருத்துவமனையில் கழிக்கவேண்டியிருந்தது.
இப்பொழுது நான், நம்முடைய மகத்தான சிருஷ்டிகர் கொடுத்த உயிரைப் போற்றுகிறேன் என்பதை அவருக்குக் காட்ட விரும்புகிறேன்; அதோடு சேர்த்து பூமியில் பரதீஸில் மனிதர்கள் நித்தியமாக வாழ்வதற்காக அவர் செய்திருக்கும் ஏற்பாட்டை போற்றுவதையும் காட்ட விரும்புகிறேன். (சங்கீதம் 37:9-11, 29; வெளிப்படுத்துதல் 21:3, 4) இப்படிப்பட்ட போற்றுதலைக் காட்டுவதற்கு மிகச்சிறந்த வழியானது என் வாழ்க்கையில் தொடர்ந்து ராஜ்ய அக்கறைகளை முதலாவது இடத்தில் வைப்பதே என்று உணர்கிறேன்.—அளிக்கப்பட்டது.
[பக்கம் 23-ன் படத்திற்கான நன்றி]
US Navy/Sipa Press