பைபிளின் கருத்து
கல்வி கற்பதை பைபிள் ஆட்சேபிக்கிறதா?
“விவரம் தெரியாதவரே கல்வி கற்பதை வெறுப்பர்.” —பூப்ளியுஸ் சைரஸ், மாரல் சேயிங்ஸ், பொ.ச.மு. முதல் நூற்றாண்டு.
பைபிள் நம்மை “நடைமுறை ஞானத்தையும் சிந்திக்கும் திறமையையும் காத்துக்கொள்ள” துரிதப்படுத்துகிறது. (நீதிமொழிகள் 3:21, NW) அறிவின் ஊற்றுமூலரான யெகோவா, தம்மை வணங்குபவர்கள் கல்வி கற்றவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். (1 சாமுவேல் 2:3; நீதிமொழிகள் 1:5, 22) ஆனால் பைபிளில் பதிவு செய்யப்பட்ட சில வாக்கியங்கள் ஒருவேளை கேள்விகளை எழுப்புபவையாய் இருக்கலாம். உதாரணத்திற்கு, அப்போஸ்தலன் பவுல் தன் உயர் கல்வி உட்பட, தன்னுடைய பழைய வாழ்க்கையின் நாட்டங்களைக் குறித்து இவ்வாறு எழுதினார்: “நான் இவற்றையெல்லாம் வெறும் குப்பையாகக் கருதுகிறேன்.” (பிலிப்பியர் 3:3-8, டுடேஸ் இங்லீஷ் வர்ஷன்) தேவனால் ஏவப்பட்டு எழுதப்பட்ட இன்னொரு கடிதத்தில் அவர் இவ்விதம் வலியுறுத்துகிறார்: “இவ்வுலகத்தின் ஞானம் தேவனுக்கு முன்பாகப் பைத்தியமாயிருக்கிறது.”—1 கொரிந்தியர் 3:19.
அப்படியென்றால், கல்வி கற்பதை பைபிள் ஆட்சேபிக்கிறதா? உலகப்பிரகாரமான கல்வி கற்பதில் ஒரு கிறிஸ்தவனுக்கு எந்த அளவு நாட்டம் இருக்க வேண்டும்? சட்டம் எதிர்பார்க்கும் அளவிற்கு படித்தால் போதுமா அல்லது கூடுதலான கல்வி கற்க முயற்சி செய்ய வேண்டுமா?
முதல் நூற்றாண்டில் கல்வி
முதல் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள் வித்தியாசமான கல்வித் தகுதி உடையவர்களாயிருந்தனர். சில முக்கியமான ஆட்கள் கலிலேய அப்போஸ்தலர்களான பேதுருவையும் யோவானையும், ‘படிப்பறியாதவர்கள் பேதைமையுள்ளவர்கள்’ என்று கருதினார்கள். (அப்போஸ்தலர் 4:5, 6, 13) அப்படியென்றால் இவ்விருவரும் படிப்பறியாதவர்களா அல்லது பள்ளிக்குச் செல்லாதவர்களா? இல்லை. எருசலேமிலுள்ள மேற்கல்வி கற்றுக்கொடுக்கும் பள்ளிகளிலிருந்து அவர்கள் கல்வி அறிவைப் பெற்றுக்கொள்ளவில்லை என்பதையே இது அர்த்தப்படுத்துகிறது. கிறிஸ்தவத்தை தைரியமாக விளக்குபவர்களான இவ்விருவரும், பிற்காலத்தில் அவர்கள் எழுதியவற்றிலிருந்து நன்றாகப் படித்தவர்கள் என்பதும், புத்திசாலிகள் என்பதும் வேதாகமத்தை புரிந்துகொள்ளத்தக்க முறையில் விளக்கம் சொல்பவர்கள் என்பதும் தெள்ளத்தெளிவாகிறது. அவர்களுடைய படிப்பறிவானது நடைமுறை போதனையையும் உட்படுத்தியது; ஆகவே தங்களுடைய குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளையும் அவர்களால் கவனிக்க முடிந்தது. அவர்கள் லாபகரமாக இருந்திருக்கும் மீன் வியாபாரத்தில் கூட்டாளிகள்.—மாற்கு 1:16-21; லூக்கா 5:7, 10.
இதற்கு முற்றிலும் மாறாக சுவிசேஷங்களில் ஒன்றையும் அப்போஸ்தலருடைய புத்தகத்தையும் எழுதிய லூக்கா என்ற சீஷன் உயர் கல்வி படித்திருந்தார். அவர் ஒரு மருத்துவராக இருந்தார். (கொலோசெயர் 4:14) அவருக்கு மருத்துவப் பின்னணி இருந்தபடியால், தேவனால் ஏவப்பட்டு அவர் எழுதிய பதிவில் அவருடைய தனித்தன்மை தெளிவாகத் தெரிகிறது.—காண்க: லூக்கா 4:38; 5:12; அப்போஸ்தலர் 28:8.
அப்போஸ்தலன் பவுல் கிறிஸ்தவராவதற்கு முன்பாக யூத சட்டங்களில் போதிக்கப்பட்டார்; அக்காலத்தில் வாழ்ந்த மிகப்பெரிய அறிஞருள் ஒருவரான கமாலியேல் என்பவரிடத்தில் கல்வி பயின்றார். (அப்போஸ்தலர் 22:3) இன்று பல்கலைக்கழகத்தில் கல்வி கற்பதற்கு சமமாக பவுலுடைய கல்வியை ஒப்பிடலாம். மேலும், எதிர்காலத்தில் உயர்கல்வியை ஒருவர் படிப்பதாக இருந்தாலும், யூத கலாச்சாரத்தில் வாலிபர்கள் ஒரு தொழிலைக் கற்றுக்கொள்வது ஒரு மேன்மையான செயலாகக் கருதப்பட்டது. ஒருவேளை, பவுல் வாலிபனாக இருந்த சமயத்திலேயே கூடாரத்தொழிலைக் கற்றிருக்கவேண்டும். அவர் முழுநேர ஊழியத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள அந்தத் தொழில் உதவியாக இருந்தது.
தேவனைப்பற்றிய உன்னதமான அறிவின் மதிப்போடு ஒப்பிடும்போது, உலகப்பிரகாரமான கல்வி அவசியமாகவே இருந்தாலும், அதன் மதிப்பு குறைவே என்பதை பவுல் புரிந்துகொண்டார். இதன் காரணமாகவே பைபிள், தேவனைப்பற்றியும் அவருடைய குமாரனைப்பற்றியும் பெற்றுக்கொள்ளும் அறிவிற்கு மிக அதிக முக்கியத்துவத்தை அளிக்கிறது. ஆகவே உலகப்பிரகாரமான கல்வியின் உண்மையான நிலை என்ன என்பதை இன்றுள்ள கிறிஸ்தவர்கள் புரிந்து நடப்பது அவசியம்.—நீதிமொழிகள் 2:1-5; யோவான் 17:3; கொலோசெயர் 2:3.
கவனமாக இந்தக் காரியத்தை மதிப்பிடுவது
சில கிறிஸ்தவர்களுக்கு தங்களுடைய குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளை பூர்த்தி செய்ய உயர் கல்வியோ அல்லது தொழில் கல்வியோ உதவியாக இருந்திருக்கிறது. குடும்பத்தை கவனிப்பது பொருத்தமானது, ஏனென்றால் ‘தன் சொந்த வீட்டாரை பராமரிப்பது’ ஒரு பரிசுத்தக் கடமை. (1 தீமோத்தேயு 5:8, NW) இதைச் செய்வதற்கான திறமைகளை வளர்த்துக்கொள்வது ஒரு நடைமுறையான ஞானமாகும்.
ஆனால் இந்தக் குறிக்கோளுக்காக அடிப்படைக் கல்வியைவிட அதிகத்தைப் பெறவேண்டும் என்று நினைப்பவர்கள் இதனால் வரும் நன்மைகளையும் குறைகளையும் நிதானிக்கவேண்டும். எதிர்பார்க்கக்கூடிய நன்மை என்னவென்றால் அவர் ஒரு வேலையை பெற்றுக்கொள்ள தகுதியானவராய் ஆகவும் அதனால் வைராக்கியமாக கிறிஸ்தவ ஊழியத்தை தொடரவும், தன்னையும் தன் குடும்பத்தையும் பராமரிக்கவும் இயலும். இதோடுகூட, “குறைச்சலுள்ளவனுக்கு கொடுக்கத்தக்கதாகத் தனக்கு உண்டாயிருக்கும்படி” அவரால் பொருளாதாரத் தேவையிலிருப்பவர்களுக்கு உதவ முடியும்.—எபேசியர் 4:28.
இதனால் எதிர்பார்க்கக்கூடிய சில குறைகள் என்ன? தேவனிடத்திலும் பைபிளிடத்திலும் உள்ள விசுவாசத்தை அரித்தெடுக்கும் பாடங்களை ஒருவேளை எதிர்ப்படவேண்டியிருக்கலாம். கிறிஸ்தவர்களுக்கு பவுல் புத்திமதி கூறும்போது, ‘ஞானமென்று பொய்யாய்ப் பேர்பெற்றிருக்கிற கொள்கை’ மற்றும் ‘மனிதருடைய பாரம்பரியத்தினால் ஏற்பட்டிருக்கும் தத்துவமும் வெறுமையான மோசடியும்’ ஆகியவற்றைக்குறித்து கவனமாக இருக்கச் சொன்னார். (1 தீமோத்தேயு 6:20, 21; கொலோசெயர் 2:8, NW) நிச்சயமாகவே சில வகை படிப்புகள் ஒரு கிறிஸ்தவனுடைய விசுவாசத்தை குலைக்கலாம். ஆகவே அதிகப்படியான பயிற்சிகளும் படிப்பும் தேவை என்று நினைப்பவர்கள், இப்படிப்பட்ட அபாயகரமான பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என்பதைப் புரிந்துகொள்வது அவசியம்.
மோசே ‘எகிப்தியருடைய சகல சாஸ்திரங்களிலும் கற்பிக்கப்பட்ட’ போதிலும், அவர் பெற்றப் படிப்பிலே, பலகடவுள் வணக்கமும் கடவுளை அவமதிக்கும் போதகங்களும் உட்பட்டிருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை என்றாலும், அவர் உறுதியான விசுவாசத்தை காத்துக்கொண்டார். (அப்போஸ்தலர் 7:22) அதைப்போலவே தற்காலத்து கிறிஸ்தவர்களும் எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்தாலும் தவறான செல்வாக்கிற்கு அடிபணிந்துவிடக்கூடாது.
அதிக படிப்பைப் பெறுவதால் ஏற்படக்கூடிய இன்னொரு அபாயம் என்னவென்றால், அறிவு இறுமாப்பை உண்டுபண்ணும் அல்லது தற்பெருமையை பிறப்பிக்கும். (1 கொரிந்தியர் 8:1) அநேகர், படிப்பின் மூலம் அறிவைத் தேடுவதே சுயநல காரணங்களுக்காகத்தான், ஆகவே நல்லெண்ணத்தோடு அறிவைத் தேடுவதும்கூட, தான் மற்றவர்களைவிட மேன்மையானவர் என்ற நினைப்பு ஏற்படுவதற்கும் சுயமுக்கியத்துவத்திற்கும் காரணமாகலாம். இப்படிப்பட்ட மனோபாவங்களை தேவன் வெறுக்கிறார்.—நீதிமொழிகள் 8:13.
பரிசேயரை கவனியுங்கள். நன்கு அறியப்பட்ட இந்த மதத்தொகுதியினர் தங்களுக்கு மிக அதிகமாக ஏட்டறிவு இருப்பதாகவும் தாங்கள் உரிமைபாராட்டிய நீதியைக்குறித்தும் பெருமை அடித்துக்கொண்டனர். அவர்கள் ரபீக்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் பதிவுகளை நன்றாக அறிந்திருந்தனர்; படிக்காத சாதாரண ஜனங்களை மட்டமாக எண்ணினார்கள்; அவர்களை பேதைகள், வெறுக்கத்தக்கவர்கள், சபிக்கப்பட்டவர்கள் என்றும்கூட எண்ணினார்கள். (யோவான் 7:49) இதைத்தவிர அவர்கள் பண ஆசை உள்ளவர்கள். (லூக்கா 16:14) தவறான நோக்கத்திற்காக ஒருவர் கல்வியை நாடுவாரென்றால், படிப்பறிவு ஒருவரை அகந்தையுள்ளவராவதற்கும் பணப்பிரியராவதற்கும் வழிநடத்தும். ஆகவே எந்தவிதமான கல்வி மற்றும் எவ்வளவு காலத்திற்கு என்பதை ஒரு கிறிஸ்தவன் தீர்மானிக்க வேண்டுமென்றால், முதலாவதாக அவர் தன்னை இவ்விதம் கேட்டுக்கொள்வது அவசியம்: “என்னுடைய உள்நோக்கம் என்ன?”
தனிப்பட்ட தீர்மானம்
முதல் நூற்றாண்டில் இருந்தது போலவே இன்றும் கிறிஸ்தவர்கள் மத்தியில் பல்வேறுபட்ட கல்வித் தகுதியுள்ளவர்கள் இருக்கிறார்கள். எதிர்பார்க்கக்கூடிய பள்ளிப்படிப்பை முடித்த பிறகு தங்களுடைய பெற்றோர்களின் வழிநடத்துதலின்கீழ் வாலிபர்கள் மேற்படிப்பை தெரிவு செய்யலாம். அதேபோல் வயதுவந்தவர்களும் தங்களுடைய குடும்பத்திற்குத் தேவையானவற்றை அளிப்பதற்காக பொருள்வளங்களை முன்னேற்றுவித்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் மேற்படிப்பு தேவை என்று நினைக்கலாம். a இப்பொழுது இருக்கக்கூடிய உயர்கல்வி முறைகள் தொழிற்கல்விக்கு பதில் புத்திசாலித்தனத்தை மேம்படுத்திக்கொள்வதற்கு அதிக முக்கியத்துவம் தருகின்றன. ஆகவே, அதிக நேரத்தை முதலீடு செய்து இப்படியொரு கல்வியை கற்ற பிறகும் பணியில் அமர்த்துபவர்கள் எதிர்பார்க்கும் திறமை தன்னிடத்தில் இல்லை என்பதை ஒருவர் உணரலாம். இதன் காரணமாகவே சிலர், வேலைச்சந்தையில் உடனடியாக நுழைய வேண்டும் என்ற நோக்கத்துடன் வாழ்க்கைத்தொழில் சார்ந்த அல்லது தொழில்நுட்பக் கல்லூரிகளில் படிப்பை தெரிவு செய்கிறார்கள்.
அப்படிப்பட்ட தீர்மானங்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் தனிப்பட்ட சொந்த தீர்மானமாக இருக்கவேண்டும். கிறிஸ்தவர்கள் இந்த விஷயத்தைக்குறித்து மற்றவர்களை குறைசொல்லவோ கண்டனப்படுத்தவோ கூடாது. யாக்கோபு எழுதினார்: “மற்றவனைக் குற்றப்படுத்துகிறதற்கு நீ யார்?” (யாக்கோபு 4:12) ஒரு கிறிஸ்தவன் உயர்கல்வி கற்கவேண்டும் என்று நினைப்பாரென்றால் அதற்கான தன் சொந்த உள்நோக்கம் என்ன என்பதை தெரிந்துகொள்வது நல்லது; தன்னலமான அல்லது பொருளாசையான ஆர்வம் தனக்கு இல்லை என்று நிச்சயப்படுத்திக்கொள்வது நலம்.
கல்வியைப்பற்றி சமநிலையான நோக்குநிலை இருக்கவேண்டும் என்று பைபிள் உற்சாகப்படுத்துகிறது என்பது தெளிவாகிறது. கடவுளுடைய வார்த்தையின் அடிப்படையில் கிடைக்கும் ஆவிக்குரிய கல்வியின் மிகப்பெரிய மதிப்பை கிறிஸ்தவ பெற்றோர் உணர்ந்து, உயர் கல்வியைக்குறித்து சமநிலையான புத்திமதியை தங்களுடைய பிள்ளைகளுக்கு அளிக்கிறார்கள். (2 தீமோத்தேயு 3:16) வாழ்க்கையின் உண்மைநிலையை உணர்ந்தவர்களாக, கல்வியின் மூலம் தங்களுடைய வளர்ந்த பிள்ளைகள் திறமைகளை வளர்த்துக்கொண்டு, எதிர்காலத்தில் தங்களையும் தங்களுடைய சொந்த குடும்பத்தையும் பராமரித்துக்கொள்வதற்கான தேவையை உலகப்பிரகாரமான கல்வி நிறைவேற்றும் என்று அதன் மதிப்பை அறிந்திருக்கிறார்கள். ஆகவே உயர்கல்வி பயில வேண்டுமா, எந்த அளவிற்கு போன்றவற்றை தீர்மானிக்க ஒவ்வொரு கிறிஸ்தவனும் யெகோவா தேவனுக்கான பக்தியின் அடிப்படையில் ஞானமாக சொந்தத் தீர்மானத்தை எடுக்கவேண்டும்; ஏனென்றால் அது, ‘இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது.’—1 தீமோத்தேயு 4:8.
[அடிக்குறிப்புகள்]
a இந்தப் பொருளில் அதிக தகவல்களைப் பெறுவதற்கு உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் பிரசுரிக்கப்பட்ட காவற்கோபுரம் பிப்ரவரி 1, 1993, பக்கங்கள் 10-21-யும் யெகோவாவின் சாட்சிகளும் கல்வியும் என்ற சிற்றேட்டையும் பார்க்கவும்.
[பக்கம் 20-ன் சிறு குறிப்பு]
“நடைமுறை ஞானத்தையும் சிந்திக்கும் திறமையையும் காத்துக்கொள்.” —நீதிமொழிகள் 3:21, NW
[பக்கம் 21-ன் சிறு குறிப்பு]
மேற்படிப்பு படிக்கவேண்டுமா என்பதை முடிவு செய்ய ஒரு கிறிஸ்தவன், “என்னுடைய உள்நோக்கம் என்ன?” என தன்னையே கேட்டுக்கொள்ளவேண்டும்