பிரிவுத்துயர்
“முதல் குழந்தை பிறந்த அன்றைக்கே என் வீட்டுக்காரு சொன்னாரு, ‘இங்கே பாருமா கண்ணு, பிள்ளைங்கள நாம எப்படித்தான் வளர்த்தாலும், ஒருநாள் இல்லனாலும் ஒருநாள் அவங்க நம்மள விட்டு போகத்தான் போறாங்க.’ —நாமும் நம்முடைய பிள்ளைகளும்—பெற்றோரால் பெற்றோர்களுக்கு எழுதப்பட்ட ஒரு [ஆங்கில] புத்தகம்.
தங்களுடைய முதல் குழந்தை பிறக்கையில் பெரும்பாலான பெற்றோர் மகிழ்ச்சியடைகின்றனர், ஏன், சந்தோஷத்தின் உச்சிக்கேகூட சென்று விடுகின்றனர். பெற்றோராயிருத்தலினால் வரும் அசௌகரியங்கள், இம்சைகள், வேதனைகள், ஏமாற்றங்கள், கவலைகள் ஆகியவற்றின் மத்தியிலும் பிள்ளைகள் மகிழ்ச்சியின் ஊற்றாக இருக்க முடியும். ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, பைபிள் இவ்வாறு அறிவித்தது: “பிள்ளைகள் கர்த்தரிடமிருந்து வரும் பரிசு; அவர்களே நம் பேராசீர்வாதம்.”—சங்கீதம் 127:3, டுடேஸ் இங்லிஷ் வர்ஷன்.
இருப்பினும், சிந்திக்கவைக்கும் இந்த முன்னறிவிப்பையும் பைபிள் செய்கிறது: “புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு பிரிவான்.” (ஆதியாகமம் 2:24, NW) மேல்படிப்பு அல்லது வேலைவாய்ப்புக்காக, தங்களுடைய கிறிஸ்தவ ஊழியத்தை விரிவாக்க, திருமணம் செய்துகொள்ள என்று பல்வேறு காரணங்களுக்காக வளர்ந்த பிள்ளைகள் வீட்டை விட்டு செல்கின்றனர். ஆனால் சில பெற்றோர்களுக்கு, பிள்ளைகள் பிரிந்து செல்கிறார்கள் என்ற இந்த எதார்த்தமே ஜீரணிக்க முடியாததாய் இருக்கிறது. சுதந்திரமாக வாழ்வதற்காக பிள்ளைகள் எடுக்கும் முயற்சிகளை பெற்றோர் அனுமதிப்பதானது, ஒரு எழுத்தாளர் எழுதிய பிரகாரமாக, “அவமதிக்கப்பட்டதாக, புண்படுத்தப்பட்டதாக, நிலைகுலைவிப்பதாக, அச்சுறுத்தப்பட்டதாக, புறக்கணிக்கப்பட்டதாக [அவர்களை] உணரச் செய்கிறது.” இது, அடிக்கடி தீராத குடும்ப பிரச்சினைகளுக்கும் அமைதியின்மைக்கும் வழிநடத்துகிறது. பிள்ளைகள் வீட்டை விட்டு செல்லும் நாளை எதிர்கொள்ள தைரியமில்லாமல், சில பெற்றோர் தங்கள் பிள்ளைகளை வயதுவந்தவர்களாக வாழ்வதற்கு பழக்குவிக்க தவறுகிறார்கள். இவ்வித அசட்டையினால் வரும் விளைவு பயங்கரமாக இருக்கலாம்: அதாவது இச்செயல், வீட்டை நிர்வகிக்க கையாலாகாத, குடும்பத்தை பராமரிக்க இயலாத, வேலையைக்கூட பெற்றுக் காத்துக்கொள்ள முடியாத வயதுவந்தவர்களை உருவாக்குகிறது.
விசேஷமாக, ஒற்றைப் பெற்றோர் குடும்பங்களில் பிள்ளைகள் பிரிந்துபோவதன் துயர் மிகவும் கடுமையானதாக இருக்கலாம். ஒற்றைப் பெற்றோரான கேரன் இவ்வாறு சொல்கிறார்: “நானும் என் மகளும் ரொம்ப நெருக்கமா இருக்கிறோம்; எங்களுக்குள்ள உண்மையான நட்பு உருவாகிடுச்சு; நான் எங்க போனாலும் அவளையும் கூட்டிகிட்டு போனேன்.” சாதாரணமாக, ஒற்றைப் பெற்றோர் குடும்பங்களில் பெற்றோர்-பிள்ளை உறவு நெருக்கமாக இருக்கிறது. இத்தகைய நெருக்கத்தை இழந்துவிடுவோம் என்ற நினைப்பே தாங்க முடியாததாக இருக்கலாம் என்பது புரிந்துகொள்ளத்தக்கதே.
இருப்பினும், ஆரோக்கியமான குடும்பத்தின் தனியியல்புகள் (ஆங்கிலம்) என்ற புத்தகம் பெற்றோருக்கு இவ்வாறு நினைப்பூட்டுகிறது: “குடும்ப வாழ்க்கை என்பது இவ்வளவேதான்: உங்களையே கட்டிக்கொண்டு வளையவரும் சிறுகுழந்தையை அவனுக்குரிய அல்லது அவளுக்குரிய தனிநபராகும் வரை சீராட்டி பாராட்டி வளர்ப்பதே.” அது இவ்வாறும் எச்சரிக்கிறது: “பிள்ளைகள் பிரிந்து செல்வதை பெற்றோரால் அனுமதிக்க இயலாமல் போவதே குடும்பங்களில் அநேக பிரச்சினைகளை எழுப்புகிறது.”
உங்களைப் பற்றியதென்ன? நீங்கள் ஒரு பெற்றோரா? அப்படியென்றால், உங்கள் பிள்ளை உங்களைவிட்டு பிரிந்து செல்லும் அந்நாளை எதிர்ப்பட நீங்கள் தயாராகி விட்டீர்களா? உங்கள் பிள்ளைகளைப் பற்றியதென்ன? சொந்த காலில் நிற்பதற்கு நீங்கள் அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கிறீர்களா?