பனியிலிருந்து மின்சக்தி
ஆஸ்திரேலியாவிலிருந்து விழித்தெழு! நிருபர்
நியூ சௌத் வேல்ஸ், விக்டோரியா ஆகிய மாகாணங்களில் பரந்துவிரிந்திருக்கும் ஆஸ்திரேலியாவின் ஆல்ப்ஸ் மலை, ஆஸ்திரேலியாவின் கூரை என சில சமயங்களில் அழைக்கப்படுகிறது. ஸ்நோயீ ஆற்றின் ஊற்றுமூலமாக இருக்கும் ஸ்நோயீ மலைகள் இந்த ஆல்ப்ஸில்தான் இருக்கின்றன. இந்தக் கரடுமுரடான மலைப்பிரதேசத்தாலும், முதலில் குடியேறிய அதன் துணிச்சலுள்ள குதிரை வீரர்களாலும் தூண்டப்பட்டவராக ஏ. பீ. (பாஞ்சோ) பாட்டர்சன் ஒரு பாடல் இயற்றினார்; “ஸ்நோயீ ஆற்றிலிருந்து வந்த மனிதன்” என்ற திரைப்படத்தில் பின்னர் அந்தப் பாடல் சேர்க்கப்பட்டது.
என்றபோதிலும், இப்போதோ அந்தப் புராணக்கதைக் குதிரைவீரன் சென்ற ஆபத்தான மலைப்பாதை, மதகுகளைக்கொண்ட தொழில்நுட்ப அதிசயம் ஒன்று இருக்கும் இடமாகும்; அதுவே ஸ்நோயீ மலை நீர்மின் திட்டம். நீர்க்குழாய்களும், சுரங்கங்களும், அணைகளும், மின் உற்பத்தி நிலையங்களும் கொண்ட இந்தச் சிக்கலான பின்னலமைப்பை 1967-ல் அமெரிக்க பொறியியலாளர்கள் சங்கம், “நவீன உலகின் ஏழு தொழில்நுட்ப அதிசயங்களுள் ஒன்று” என மதிப்பிட்டது. ஆல்ப்ஸ் மலையின் இந்த ‘அதிசயத்தை’ காண நீங்கள் விரும்புகிறீர்களா? என்றாலும், முதலில் இது ஏன் கட்டப்பட்டது என்றும் யார் கட்டினார்கள் என்றும் நாம் பார்க்கலாம்.
தாகமுள்ள ஒரு நிலம்
ஆரம்பகால குடியேற்றக்காரர்களின் தண்ணீருக்கான தேவையே இந்தத் திட்டத்திற்கு காரணமாக இருந்தது; ஆனால், நீரிலிருந்து மின்சக்தி உற்பத்தி செய்வதற்கான எண்ணம் அவர்கள் மனதில் தோன்றவேயில்லை என்பது ஆச்சரியம்தான். ஆஸ்திரேலியாவின் மிகமுக்கிய வேளாண் நிலப்பகுதியாகிய மர்ரே-டார்லிங் நதிப்படுகையிலிருந்த, 19-வது நூற்றாண்டைச் சேர்ந்த விவசாயிகள் வறட்சியால் அதிகம் பாதிக்கப்பட்டதால் அதிக நம்பகமான தண்ணீர் மூலத்தைத் தேடினார்கள்.
ஸ்நோயீ ஆற்றில் தண்ணீர் இருந்தது என்று அவர்களுக்குத் தெரியும். ஆனால், ஆல்ப்ஸின் செழிப்பான மறுபக்கத்திலிருந்து ஸ்நோயீ ஆறு டாஸ்மன் கடலுக்குள் பாய்ந்தது. அது அநாவசியமாக வீணாவதுபோல் தோன்றியது. இந்தக் குளிர்ந்த சுத்தமான தண்ணீர் ஆல்ப்ஸின் உச்சியில் இருந்திருந்தால், நிலையற்றவையாக இருக்கும் மர்ரே, மரம்பிஜி ஆறுகளின் நீர் மூலத்திற்குள் திருப்பிவிடப்பட்டு வறட்சிக்கு எதிரான நூறு கோடி டாலர் பாதுகாப்பை விவசாயிகளுக்கு கொடுத்திருக்கும். ஆசையைத் தூண்டும் ஒரு கனவாக அது இருந்தது.
அருகிலுள்ள மாவட்டமாகிய கேன்பராவை ஆஸ்திரேலியாவின் தேசிய தலைநகரமாக்க கூட்டரசு பாராளுமன்றம் 1908-ல் தெரிவு செய்தபோது, இந்தக் கனவு நனவாவது கூடியகாரியம்போல் தோன்றியது. இன்னும் கட்டப்படாத இந்த நகரத்தின் தேவைகளை நீர் மின்சக்தி பூர்த்தி செய்யுமா? மறுபடியும், ஸ்நோயீ மலைகளிடமாக கவனம் திரும்பியது.
நீரிலிருந்து மின்சக்தி எடுப்பதற்கென்றும் நீர்ப்பாசனத்திற்கென்றும் அநேக திட்டங்கள் முன்வைக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டன. பிறகு, 1944-ல் முதலாவது நீர்மின்-பாசன திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு, சீக்கிரத்தில் அங்கீகாரம் பெற்றது. இந்த இரட்டை திட்டத்தை வடிவமைத்து கட்டுவதற்கான பொறுப்புடன் கூட்டரசு அரசாங்கமானது, 1949-ல் ஸ்நோயீ மலைகள் நீர்மின் அதிகாரக் குழுவை நியமித்தது.
ஆனால் அனுபவமும் போதிய ஆட்பலமும் இல்லாத, விவசாயத்தை முழுமையாக நம்பியிருந்த ஒரு வளரும் நாடு, முன்பு செய்யப்பட்டிராத அளவு பெரிதும் சிக்கலானதுமான ஒரு திட்டத்தை எப்படி கையாள முடியும்?
பாழ்க்கடிப்பிலிருந்து பனிக்கு
குடியேற்றம் செய்வதே பதிலாக இருந்தது. இரண்டாம் உலக யுத்தத்தின் பாதிப்பிலிருந்து மீண்டுகொண்டிருந்த ஐரோப்பா, பாழ்க்கடிப்பும், வேலையில்லா திண்டாட்டமும், வீடுகள் இல்லாமலும் ஒரு கொடுங்கனவைப்போல இருந்தது. ஆகவே, இத்திட்டத்தில் வேலைசெய்ய தேவையான திறமையுள்ள ஐரோப்பியர்கள் விண்ணப்பிக்கும்படி, ஐக்கிய நாடுகள் உதவியுடன் ஆஸ்திரேலியா அழைப்புவிடுத்தது.
அதற்குப் பிரதிபலிப்பவர்களாய், 33 நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான வேலையாட்கள் ஐரோப்பாவின் பாழ்க்கடிப்புகளைவிட்டு ஆஸ்திரேலியாவிற்கு புறப்பட்டனர். அவர்கள், அத்திட்டத்தின் மொத்த வேலையாட்களில் மூன்றில் இரண்டு பங்காகவும், ஆஸ்திரேலியாவின் இனத்தொகுதியை எல்லா காலத்திற்கும் மாற்றப்போகிறவர்களாகவும் இருப்பர். ஸ்நோயீ என்ற தன் புத்தகத்தில் பிராட் காலிஸ் இவ்வாறு சொல்கிறார்: “முக்கியமாக பிரிட்டிஷ்காரர்களால் குடியேற்றப்பட்டிருந்த . . . ஒரு நாடு, ஏறக்குறைய ஒரே இரவில் உலகின் மிகப்பெரிய கதம்ப கலாச்சாரமானது. [ஆண்கள்]—எதிரியும், நண்பரும், ஒடுக்கியவரும், ஒடுக்கப்பட்டவரும்—ஒன்றாக வேலை செய்வதற்காக மலைகளுக்கு அனுப்பப்பட்டனர்.” ஒரு குழுவாக அவர்கள் ஒரே இரவில் இணையாதபோதிலும், காலப்போக்கில் இணைந்தனர்.
ஆல்ப்ஸில் வாழ்க்கை
அந்தத் திட்டத்தின் ஆரம்பகாலத்தில் ஆல்ப்ஸில் பயணம் செய்வது அதிகக் கடினமாக இருந்தது. பனியாகவும் சேறாகவும் செங்குத்தாகவும் இருந்த, வளைந்து நெளிந்து செல்லும் பாதைகள் பயணத்தை அதிக மெதுவானதாக, முதுகெலும்பை முறிக்கும் அனுபவமாக ஆக்கின. உண்மையில், அந்த மலையின் சில பகுதிகள் அவ்வளவு செங்குத்தாகவும் கரடுமுரடாகவும் இருந்ததால் அங்கு கங்காருவைக்கூட பார்ப்பது அரிது. காலிஸ் கூறுகிறபடி, “உலகத்திலேயே, இருக்கை வார்கள் (seatbelts) அணிவதை கட்டாயமான ஒன்றாக ஆக்கிய முதல் அமைப்பு என்ற பெருமை” ஸ்நோயீ அதிகாரக் குழுவைத்தான் சேரும் என்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை.
அவர்களுடைய குடியிருப்புகளாகிய, கீழ்த்தளம் இல்லாத உபயோகிக்கப்பட்ட ராணுவ கூடாரங்கள், ரோட்டைப் போலவே வசதியற்றவையாக இருந்தன! கடைசியில், 100-க்கும் அதிகமான கூடாரங்களும் கூடார நகரங்களும் மலைகளில் திடீரென்று தோன்றின. அவற்றுள் ஒன்றான காப்ராமாரா—இன்று ஒரு கூடார நகரமாக இல்லை—ஆஸ்திரேலியாவிலேயே அதிக உயரத்தில் இருக்கும் நகரம் என்ற பெருமையுடையது.
இந்தக் கடினமான, மோசமான சூழ்நிலையில் வேலை செய்வதும் தூங்குவதுமே ஒரு சோதனையாக இருந்தது என்பதை உங்களால் கற்பனைசெய்து பார்க்கமுடியும். குளிர்கால பனிப்புயல் எலும்பையும் உறையச்செய்தது; கொளுத்தும் வெயிலின் கொடுமை ஒவ்வொரு அசைவையும் கடினமாக்கியது; சகிக்கமுடியாதளவு மேகம்போன்ற ஈக்களின் கூட்டங்கள், வியர்த்திருந்த முகங்களையும் முதுகுகளையும் மொய்த்தன. ஐரோப்பியர்கள் ஈக்களை எவ்வளவாய் வெறுத்தனர்!
ஆனாலும் அநேகர் இந்த சோதனையை சகித்தனர். யுத்தத்தின் விளைவாக உரமும் திடமும் பெற்றவர்களாயிருந்த இவர்கள், தங்களுடைய புதிய வாழ்க்கை முறையில் வெற்றியடைய திடதீர்மானமுள்ளவர்களாக இருந்தனர். அதன் விநோதமான மிருகங்களையும், பாம்புகளையும், மென்குரல் எழுப்புவதற்கு பதிலாக உச்சஸ்தாயியில் குரலெழுப்பும் பறவைகளையும் கொண்ட ஆஸ்திரேலியாவின் காட்டுப்பகுதியை அநேகர் விரும்ப ஆரம்பித்துவிட்டனர். சிறிது காலத்தில், கூடாரங்கள் எளிமையான மர வீடுகளாக மாறின; மனைவிகளும் குழந்தைகளும் வந்து சேர்ந்துகொண்டனர்.
ஆனால் வித்தியாசப்பட்ட அநேக மொழிகளைப் பற்றி என்ன செய்வது? மிகப்பெரிய இயந்திரங்களையும் துளையிடும் கருவிகளையும் அல்லது வெடி மருந்துகளையும் கொண்டு வேலை செய்யவேண்டிய ஆண்கள், தெளிவாக பேச்சுத்தொடர்பு கொள்ளமுடியாமல் இருப்பதைக் கற்பனை செய்துபாருங்கள்! அது பேரழிவுக்கு அழைப்புவிடுவதாக இருக்கும்; ஆகவே வேலை நேரத்திற்கு பிறகு, இலவச ஆங்கிலமொழி வகுப்புகளை அந்த அதிகாரக் குழுவானது ஏற்பாடு செய்தது. அடிப்படையான ஆங்கிலமொழி திறமை பெறுவதன் பேரிலேயே அவர்கள் தொடர்ந்து வேலையிலிருப்பது சார்ந்திருந்தது; ஆகவே அந்த வகுப்புகளை அதிகமானோர் தவறவிடவில்லை என்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை!
இத்தனை அநேக இடையூறுகள் மத்தியிலும் 25 ஆண்டுகள் கழித்து—1949 முதல் 1974 வரை—அந்தத் திட்டம் சரியான சமயத்திலும் பட்ஜெட்டுக்குள்ளும் முடிந்தது. அதற்கு செலவான 82 கோடி டாலர் தொகையானது, ஒப்பிடுகையில் இன்று குறைவானதாக தோன்றினாலும் அன்று அவ்வாறு இல்லை; முக்கியமாக, யுத்தத்திற்கு பிறகு காலூன்றி நிற்க கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த, 80 லட்சம் மக்களே கொண்ட ஒரு நாட்டிற்கு அது நிச்சயமாகவே குறைவானதாக இல்லை.
இந்த சாதனையைக் கொண்டாட, 1999-ம் ஆண்டில் 50-வது ஆண்டு விழாவுக்காக அந்த அதிகாரக் குழு திட்டமிடுகிறது. கண்டுபிடிக்கப்பட்டால், அந்தத் திட்டத்தில் வேலைசெய்த அனைவரும் மறுபடியும் ஒன்றுசேரும் ஒரு நிகழ்ச்சியையும் அது உள்ளடக்கும். “இவர்கள், இந்த உலகத்தின் பொறியியல் அதிசயங்களில் ஒன்றைக் கட்ட உதவிசெய்து, ஆஸ்திரேலியாவின் சரித்திரத்தையே மாற்றியவர்கள். அவர்களுக்கு நன்றிசொல்ல விரும்புகிறோம்” என தற்போதைய ஆணையராக இருப்பவர் சொல்கிறார்.
அத்திட்டத்தின் உருவளவும் கொள்ளளவும்
தண்ணீரின் சக்தி (ஆங்கிலம்) என்ற சிற்றேட்டின்படி, “இத்திட்டம் 3,200 சதுர கிலோமீட்டர் [1,200 சதுர மைல்] பரப்பளவில் செயல்பட்டு, 80 கிமீ [50 மைல்] நீர்க்குழாய்களையும் 140 கிமீ [87 மைல்] சுரங்கங்களையும் 16 பெரிய அணைகளையும் கொண்டது.” 53,000 கோடி லிட்டர் தண்ணீரை கொள்ளக்கூடிய சிட்னி துறைமுகத்தைவிட 13 மடங்கு அதிகமாக—ஏழு லட்சம் கோடி லிட்டர் தண்ணீரை—இந்த அணைகள் தேக்கிவைக்க முடியும்; இதில் யூகம்பீன் ஏரியே முக்கிய நீர்த்தேக்கமாகும். ஒரு வருடத்தில் 6,400 கிகாவாட்-மணி மின்சக்தியை உற்பத்தி செய்திருக்கும் ஏழு மின் உற்பத்தி நிலையங்களும், சிட்னி, மெல்போர்ன், கேன்பரா உட்பட தென்கிழக்கு ஆஸ்திரேலிய முக்கிய நிலப்பகுதியின் மின்சார தேவையில் 17 சதவீதம் வரை பூர்த்தி செய்யக்கூடியவை.
அன்றாடம் அதிகளவு தேவை ஏற்படும்போது அனல்மின் நிலையங்களுக்கு உதவும் சமயங்கள் தவிர, பொதுவாக மற்ற சமயங்களில் விசைப்பொறி உருளைகள் 24 மணிநேரமும் ஓடிக்கொண்டிருப்பதில்லை. திடீரென்று அதிகரிக்கும் தேவைகளை பூர்த்திசெய்வதில் உடனடியாக செயல்படக்கூடிய காரணத்தால், உச்ச அளவு தேவை ஏற்படும் சமயங்களில் நீர்மின் சக்தியே அதிக பிரயோஜனமானது. நிலக்கரியை எரித்து மின் உற்பத்தி செய்யும் நிலையம், மின்சாரம் உற்பத்திசெய்ய பல மணிநேரம் எடுக்கும். அதேசமயம், இரண்டு அல்லது மூன்று நிமிடத்திற்குள் இதன்மூலம் உற்பத்தி செய்துவிடலாம்.
ஸ்நோயீ திட்டம் எவ்வாறு செயல்படுகிறது
அத்திட்டம், “உலகத்திலேயே மிக சிக்கலானதும், பல்நோக்குடையதும், பல நீர்த்தேக்கமுள்ள நீர்திட்டம் என்ற தனிச்சிறப்புடையது” என அந்த அதிகாரக் குழு சொல்கிறது. ஒன்றாக இணைந்த இரண்டு பகுதிகளை அது உள்ளடக்கும்—ஸ்நோயீ-மர்ரே மற்றும் ஸ்நோயீ-ட்யூமட் திட்டங்கள்.
மலையினூடாக செல்லும் ஒரு சுரங்கம் வழியாக, ஸ்நோயீ ஆற்றின் தண்ணீரை ஐலண்ட் பெண்ட் அணையிலிருந்து கீஹை அணைக்கு ஸ்நோயீ-மர்ரே திட்டம் திருப்பிவிடுகிறது; இந்த அணை கீஹை ஆற்றிலிருந்தும் தண்ணீரைப் பெறுகிறது. தண்ணீர் இங்கிருந்து, 820 மீட்டர் கீழ்நோக்கிப் பாய்ந்து மர்ரேயின் இரண்டு மின் உற்பத்தி நிலையங்களுக்கு வந்துசேர்கிறது. அதே சமயம், ஆஸ்திரேலியாவின் மிக உயர்ந்த மலையான கோஸியுஸ்கோவுக்கு அருகிலிருக்கும் ஸ்நோயீ ஆற்று ஊற்றுமூல தண்ணீரை கதாகா மின் உற்பத்தி நிலையம் உபயோகிக்கிறது. கதாகாவிலிருந்து, ஐலண்ட் பெண்டில் இருக்கும் முக்கிய சுரங்க அமைப்பிற்குள் தண்ணீர் வந்து விழுகிறது. ஐலண்ட் பெண்ட்-யூகம்பீன் ஏரி சுரங்கம் உட்பட அநேக சுரங்கங்கள், தண்ணீரை இருவழிப்பாதையாக செல்ல அனுமதிப்பதால் இத்திட்டத்தின் வளைந்துகொடுக்கும் தன்மை அதிகரிக்கிறது.
ஸ்நோயீ-ட்யூமட் திட்டத்தில் யூகம்பீன் ஏரி, தூமா அணை, ஹாப்பி ஜாக் அணை, ட்யூமட் குளம் அணை ஆகியவற்றிலிருந்து தண்ணீர் மதகுகள் வழியாகவும் நான்கு மின் உற்பத்தி நிலையங்கள் வழியாகவும் கீழ்நோக்கிப் பாய்ந்து, மரம்பிஜி ஆற்றின் கிளையாக இருக்கும் ட்யூமட் ஆற்றில் போய் சேர்கிறது. ட்யூமட் 3 என்ற மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையம் இங்குதான் இருக்கிறது; அதன் ஆறு மதகுகள் ஒவ்வொன்றும் இரட்டை மாடிபஸ் ஒன்றை வைக்கும் அளவுக்கு பெரியது!
அதிக வேலையில்லாத சமயங்களில், இத்திட்டம் ஜின்டாபைன் ஏரியிலிருந்து யூகம்பீன் ஏரிக்கு தண்ணீரை மேல்நோக்கி பம்ப்பு செய்கிறது; தால்பிங்கோ நீர்த்தேக்கத்திற்கு பம்ப்பிங் நிலையமாகவும் சேவிக்கும் ட்யூமட் 3 மின் உற்பத்தி நிலையத்திலிருந்தும் இவ்வாறு செய்யப்படுகிறது. ஆனால் தண்ணீரை மேல்நோக்கி பம்ப்பு செய்வதால் ஏன் மின்சாரத்தை வீணாக்க வேண்டும்? ஆச்சரியகரமாக, லாபத்திற்காகவே. மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து பெறப்பட்ட மலிவான, அதிக வேலையில்லா நேரத்திய சக்தியில் இந்தப் பம்ப்புகள் இயங்குகின்றன. பிறகு, உச்ச அளவு தேவையுள்ள சமயங்களில் தண்ணீர் மீண்டும் திறந்துவிடப்பட்டு, உற்பத்தி செய்யப்படும் நீர்மின்சக்தி லாபத்திற்கு மீண்டும் அந்தக் கிரிட்டுக்கு விற்கப்படுகிறது. என்றபோதிலும், தண்ணீரின் பெரும்பகுதி—ஒவ்வொரு வருடமும் இரண்டு லட்சம் கோடி லிட்டர்—எந்தச் செலவுமின்றி மேற்கத்திய ஆறுகளுள் விடப்படுகிறது.
அது சுத்தமான மின்சக்தியா?
ஆம். ஏனென்றால் தண்ணீர், மாசுபடுத்தாத, எந்தக் கழிவுப்பொருளும் இல்லாத, மீண்டும் புதுப்பிக்கப்படக்கூடிய வளமாகும். பார்க்க சகிக்காத புகைப்போக்கிகளோ, குளிரூட்டும் டவர்களோ ஆல்ப்ஸின் அழகைக் கெடுப்பதில்லை. ஆகவே, பனிக்காலத்தில் இந்த ஆல்ப்ஸ் மைதானத்தில் பனிச்சருக்கு விளையாடுவோரும், கோடைகாலத்தில் அதன் மலைப்பாதைகளில் சந்தோஷத்திற்காக நடந்துசெல்லும் ஆயிரக்கணக்கானோரும் தங்களுக்கு கீழே இருக்கும் குழாய்கள், மின்சக்தி நிலையங்கள் போன்றவற்றை அறியாதிருக்கின்றனர்.
கூடுதலாக, இத்திட்டத்தால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், அனல்மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்பட்டால், ஒவ்வொரு வருடமும் 50 லட்சம் மெட்ரிக் டன் கூடுதல் கரியமில வாயு வளிமண்டலத்தில் சேர்க்கப்படும்.
என்றபோதிலும், சுற்றுச்சூழல்—முக்கியமாக ஸ்நோயீ ஆறு—எந்த அபாயமும் ஏற்படாமல் தப்பிக்கவில்லை. அதிகமான தண்ணீர் திசைதிருப்பி விடப்படுவதால், முந்தைய நாட்களோடு ஒப்பிடுகையில் அதன் நீரோட்டம் மிகவும் குறைந்திருக்கிறது. கூடுதலாக, இத்திட்டத்தின் பெரிய அணைகள் சில புல்வெளிகளை மூழ்கடித்திருக்கின்றன; மேலும் அதன் புதிய, உயர்ந்த நீர்மட்டத்தின் அளவானது ஆதாமினபை, ஜின்டாபைன் போன்ற நகரங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டியதில் விளைவடைந்தது.
மறுபட்சத்தில், ஸ்நோயீ திட்டம் அதிக நம்பகமானதாக இருந்திருக்கிறது; அந்த அதிகாரக் குழுவின் முதல் ஆணையருடைய ஞானமான அறிவுரையாகிய, “நன்மதிப்பும் மரியாதையும் சாதனையின் விளைவாக வருகின்றன, பிரச்சாரத்தினால் அல்ல” என்பதன் அத்தாட்சியாக இது இருக்கிறது.
[பக்கம் 16-ன் படம்]
மேலிருந்து பார்க்கையில், ஸ்நோயீ திட்டத்தில் மிகப்பெரியதாக இருக்கும் ட்யூமட் 3 மின் நிலையம்
[பக்கம் 16-ன் படம்]
16-19 பக்கங்களிலுள்ள எல்லா ஃபோட்டோக்களும்: Snowy Mountains Hydro-electric Authority
[பக்கம் 18-ன் படம்]
வேலைசெய்பவர்கள் கடினமான வாழ்க்கை சூழ்நிலையில் சகித்திருக்க வேண்டியிருந்தது
[பக்கம் 18-ன் படம்]
ஒரு குழுவாக இணைய, வேலைசெய்பவர்கள் ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது
[பக்கம் 19-ன் படம்]
மலைகளுக்குள் சுரங்கங்களை கட்டுவதையும் இத்திட்டம் உட்படுத்தியது