கத்தோலிக்க சர்ச்சும் பரிணாமமும்
இத்தாலியிலிருந்து விழித்தெழு! நிருபர்
லண்டனிலுள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபெயில் ஏப்ரல் 26, 1882-ல் சார்லஸ் டார்வினுடைய சவ அடக்கம் நடந்தது. இயற்கை வழித்தேர்ந்தெடுப்பு (natural selection) என்ற தன்னுடைய பரிணாமக் கோட்பாடு மூலம் ‘கடவுளை பதவியிறக்கியதாக’ குற்றம் சாட்டப்பட்ட மனிதனை புதைப்பதற்கு ஒரு சர்ச் மிகவும் பொருத்தமற்ற இடமாக இருக்கும் என்று சிலர் நினைக்கலாம். என்றபோதிலும் டார்வினுடைய கல்லறை நூறாண்டுகளுக்கும் மேலாக அங்கேயே இருக்கிறது.
டார்வினுடைய உயிரின தோற்றம் (ஆங்கிலம்) 1859-ல் பிரசுரிக்கப்பட்ட பிறகு, பரிணாமத்தினிடமாக இறைமையியலர்களின் மனநிலை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றமடைந்தது. “வெளிப்படையான போராட்ட” காலம், உருவக அர்த்தத்தில் எப்படி ஒரு “போர் நிறுத்த” காலத்திற்கு வழிநடத்தியது என்பதைப் பற்றி இறைமையியலர் கார்லொ மொலாரி இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் எழுதினார். பிறகு, 1900-களின் மத்தியில் “தற்காலிக போர் நிறுத்தம்” ஏற்பட்டது என்றும் கடைசியாக, இப்போது நிலவும் “சமாதானம்” ஏற்பட்டது என்றும் அவர் சொன்னார்.
டார்வினுக்கு முன்பு
நிச்சயமாகவே, பரிணாமத்தைப் பற்றிய கருத்தை முதலாவதாக டார்வின் ஆரம்பிக்கவில்லை. ஒரு உயிர்வகை மற்றொன்றாக மாறுவதைப் பற்றிய கோட்பாடுகளைப் பூர்வகால தத்துவ ஞானிகள் நம்பினர். முதல் நவீனகால பரிணாம ஆய்வுக்கட்டுரைகளுக்கான ஆதாரங்கள் 18-வது நூற்றாண்டின் இயற்கையியலர்கள் மத்தியில் காணப்படுகின்றன.
“பரிணாமம்” என்ற வார்த்தை அதிகமாக உபயோகிக்கப்படாதபோதிலும், 18 மற்றும் 19-வது நூற்றாண்டுகளின்போது அநேக கல்விமான்கள் வித்தியாசப்பட்ட பரிணாமக் கோட்பாடுகளை முன்வைத்தனர். டார்வினுடைய தாத்தாவான இராஸ்மஸ் டார்வின் (1731-1802) தன்னுடைய ஒரு புத்தகத்தில் அநேக பரிணாமக் கருத்துகளை வெளியிட்டிருந்தார்; கத்தோலிக்க சர்ச்சின் தடைசெய்யப்பட்ட புத்தகங்களின் பட்டியலில் அதுவும் ஒன்றாக இருந்தது.
ஏன் “வெளிப்படையான போராட்டம்” ஆரம்பமானது
மதகுருக்களின் அதிகாரத்தை குலைக்க டார்வினுடைய கோட்பாடு உதவியாக இருக்கும் என பாமர வர்க்கத்திலுள்ள சிலர் நினைத்தனர். ஆகவே ஒரு பயங்கரமான போராட்டம் தொடங்கியது. 1860-ல் ஜெர்மன் பிஷப்புகள் வலியுறுத்திக் கூறியதாவது: “நம்முடைய முன்னோர்கள் கடவுளால் நேரடியாக படைக்கப்பட்டனர். ஆகவே, மனிதன் தன்னுடைய சரீரத்தை பொருத்தவரையில் மற்றொரு அபூரணமான உள்ளியல்பிலிருந்து திடீரென்று உருமாறினான் என்று சொல்லத்துணியும் ஆட்களின் கருத்துகள் பரிசுத்த வேதாகமத்துக்கும் விசுவாசத்திற்கும் முற்றிலும் எதிரானது என்று நாங்கள் அறிவிக்கிறோம்.”
அவ்வாறே, பரிணாமத்தை எதிர்த்தும் படைப்பைப் பற்றிய ஆதியாகமப் பதிவை ஆதரித்தும், பிரான்ஸ் நாட்டு மருத்துவரான கொண்ஸ்டன்டன் ஷாம் மே 1877-ல் வெளியிட்ட ஒரு பிரசுரத்தை ஒன்பதாம் போப் பயஸ் புகழ்ந்து பேசினார். 1905-க்கும் 1909-க்கும் இடையில் பான்டிஃபிக்கல் பிப்ளிக்கல் கமிஷனால் வெளியிடப்பட்ட தொடர்ச்சியான கடிதங்களால் முதல் கட்டப் போராட்டம் ஒரு உச்சக்கட்டத்தை அடைந்தது. இவற்றுள் ஒன்றில், ஆதியாகமத்தின் முதல் மூன்று அதிகாரங்கள் சரித்திரப் பூர்வமானவை என்றும் அவை “உண்மையான சரித்திரம்” என ஒப்புக்கொள்ளவேண்டும் என்றும் அந்தக் கமிஷன் கூறியது.
“போர் நிறுத்த”மும் “தற்காலிக போர் நிறுத்த”மும்
அறிஞர்கள் மத்தியில் டார்வினுடைய கோட்பாடு அதிக வரவேற்பை பெற்றதால், பிரான்ஸ் நாட்டவரான ஜெஸ்யுட் டெயார் டஷார்டன் போன்ற கத்தோலிக்க இறைமையியலர்கள் பரிணாமக் கோட்பாட்டாளர்களாக மாறினர். பழமைவாத பரிணாமவாதிகளுடைய கருத்துகளிலிருந்து டெயாரின் கருத்துகள் வித்தியாசப்பட்டபோதிலும், 1921-லிருந்து “உயிரியல் சார்ந்த பரிணாமம் . . . ஒரு உண்மையென வெகு நிச்சயமாயிருப்பதாக” அவர் கருதினார். கத்தோலிக்க விசுவாசத்திற்கும் பரிணாமவாதத்திற்கும் இடையே ஒப்புரவாதல் அதிக தெளிவானது.
1948-ல் மற்றொரு ஜெஸ்யுட் இவ்வாறு கூறினார்: “20 ஆண்டுகளுக்கும் மேலாக, சந்தேகத்திற்கிடமில்லாமல் உண்மையுள்ள கத்தோலிக்கர்களாக இருக்கும் இறைமையியலர்களைப் பொருத்தவரையில், குறிப்பிட்ட எல்லைகளுக்குள் வைக்கப்பட்டால் [பரிணாமத்திற்கும் கத்தோலிக்க விசுவாசத்திற்கும் மத்தியில்] ஒப்புரவாதல் சாத்தியமாகும் என்று கூறுகிறவர்களின் எண்ணிக்கையில் வேகமான அதிகரிப்பு இருந்திருக்கிறது.” ஏறக்குறைய அதே சமயத்தில், 1909-ல் ஆதியாகமப் பதிவை ஆதரித்து எழுதியவற்றில் அதிகமானதை பான்டிஃபிக்கல் பிப்ளிக்கல் கமிஷன் பின்வாங்கிக்கொண்டது.
பிறகு 1950-ல், பன்னிரண்டாம் பயஸ், ஹ்யுமானி ஜெனிரிஸ் என்ற தன்னுடைய சுற்றறிக்கை கடிதத்தில் கத்தோலிக்க அறிஞர்கள் பரிணாமக் கோட்பாட்டை ஒரு சாத்தியமான கோட்பாடாகக் கருதலாம் என்று கூறினார். என்றபோதிலும், போப் இவ்வாறு சொன்னார்: “ஆத்துமாக்கள் கடவுளால் நேரடியாக படைக்கப்படுகின்றன என்ற கருத்தை நாம் தொடர்ந்து வைத்துக்கொள்ளும்படி கத்தோலிக்க விசுவாசம் நம்மை கட்டாயப்படுத்துகிறது.”
இந்தப் போலி சமாதானம் ஏன் ஏற்பட்டது?
சில விதிவிலக்குகள் தவிர, வாடிகனின் இரண்டாம் திருச்சபை சீரமைப்புக் குழுவின் சமயத்திலிருந்து “பரிணாமக் கோட்பாடுகளுக்கான எதிர்ப்புகள் நிச்சயமாகவே மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கின்றன” என்று கார்லொ மொலாரி கூறுகிறார். அக்கறைக்குரிய விதமாக, அக்டோபர் 1996-ல் இரண்டாம் போப் ஜான் பால் இவ்வாறு கூறினார்: “இன்று, [பன்னிரண்டாம் பயஸின்] சுற்றறிக்கை பிரசுரிக்கப்பட்டு ஏறக்குறைய ஐம்பது வருடங்கள் கழித்து, பரிணாமக் கோட்பாடு வெறும் ஆதாரமற்ற கொள்கை அல்ல என்பதை ஏற்றுக்கொள்ளும்படி கூடுதலான அறிவானது நம்மை வழிநடத்தியிருக்கிறது. படிப்படியாக இந்தக் கோட்பாடு ஆராய்ச்சியாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பது உண்மையில் குறிப்பிடத்தக்கது.”
சரித்திராசிரியரான லுச்சொ வில்லெரி, போப்பின் வாக்கியத்தை “தீர்வான ஒப்புக்கொள்ளுதல்” என்று கூறினார். இத்தாலியின் பழமைவாத செய்தித்தாளான இல் ஜார்னலில் ஒரு தலைப்புச்செய்தி இவ்வாறு கூறியது: “நாம் குரங்குகளிலிருந்து வந்திருக்கலாம் என்று போப் சொல்கிறார்.” மேலும், போப் இதை ஒப்புக்கொண்டதால், “பரிணாமத்தை சர்ச் ஏற்றுக்கொண்டதை காட்டுகிறது” என்ற முடிவுக்கு டைம் பத்திரிகை வந்தது.
கத்தோலிக்க தலைவர்கள் மத்தியில் “பரிணாமவாதத்தினிடமாக கொஞ்சம் தளர்த்தப்பட்ட மனப்பான்மை” காணப்படுவதற்கு என்ன காரணம்? பரிணாமவாத போதனையுடன் ரோமன் கத்தோலிக்க சர்ச் ஏன் சமரசமானது?
அநேக கத்தோலிக்க இறைமையியலர்கள் பைபிளை “தேவ வசனமாக” அல்ல மாறாக “மனுஷர் வசனமாக” கருதுகின்றனர் என்பது தெளிவாக தெரிகிறது. (1 தெசலோனிக்கேயர் 2:13; 2 தீமோத்தேயு 3:16, 17) “ஆதியிலே மனுஷரை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் என்பதை . . . நீங்கள் வாசிக்கவில்லையா?” என்று சொல்வதன்மூலம் படைப்பைப் பற்றிய ஆதியாகமப் பதிவு துல்லியமானது என்று கூறிய கடவுளுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து சொன்னதைவிட நவீனகாலப் பரிணாமவாதிகளுடைய வார்த்தைக்கே கத்தோலிக்க சர்ச் அதிக முக்கியத்துவத்தைக் கொடுக்கிறது. (மத்தேயு 19:4, 5) யாருடைய கருத்து அதிக முக்கியத்துவமுடையது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
[பக்கம் 13-ன் பெட்டி]
யெகோவாவின் சாட்சிகளும் பரிணாமமும்
முதல் மானிட ஜோடியை கடவுள் நேரடியாக சிருஷ்டித்து, “அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார்” என்ற கிறிஸ்துவின் போதனையை யெகோவாவின் சாட்சிகள் தொடர்ந்து ஆதரித்து வந்திருக்கின்றனர். (மத்தேயு 19:4; ஆதியாகமம் 1:27; 2:24) 1886-ல் ஆயிரவருட ஆட்சி (பின்னர் வேதாகமங்களில் படிப்புகள் என்று அழைக்கப்பட்டது [ஆங்கிலம்]) என்ற புத்தகத்தின் முதல் தொகுதியில் டார்வினுடைய கோட்பாட்டு, “நிரூபிக்கப்பட முடியாத கோட்பாடு” என்று அழைக்கப்பட்டது; 1898-ல் பரிணாமக் கோட்பாட்டிற்கு எதிராக பைபிள் (ஆங்கிலம்) என்ற சிறுபுத்தகமும் பைபிளின் படைப்பு பற்றிய விவரிப்பை ஆதரித்தது. புதிய சிருஷ்டிப்பு (1904, [ஆங்கிலம்]), படைப்பு (1927, [ஆங்கிலம்]) போன்ற புத்தகங்களும் மேலும் உவாட்ச்டவர், த கோல்டன் ஏஜ் ஆகியவற்றில் பிரசுரிக்கப்பட்ட ஆரம்பகால கட்டுரைகளும் பைபிளின் சிருஷ்டிப்பு விவரப்பதிவை ஆதரித்தன.
1950-ல் பன்னிரண்டாம் போப் பயஸ் தன்னுடைய சுற்றறிக்கை கடிதமாகிய ஹ்யுமானி ஜெனிரிஸ்-ஸை வெளியிட்ட சமயத்தில், பரிணாமத்திற்கு எதிராகப் புதிய உலகம் (ஆங்கிலம்) என்பதை யெகோவாவின் சாட்சிகள் பிரசுரித்தனர். பைபிளின் விவரிப்பாகிய படைப்பு பற்றிய விஞ்ஞானப்பூர்வ மற்றும் சரித்திரப்பூர்வ ஆதாரத்தையுடைய இந்தச் சிறுபுத்தகம், “பைபிளுக்கும் பரிணாமத்திற்கும் மத்தியில் ஒப்புறவுசெய்ய” நினைத்த சில பாதிரிகளின் முயற்சியைக் கண்டித்தது. மனிதன் வந்தது பரிணாமத்தினாலா படைப்பினாலா? (1967, [ஆங்கிலம்]) என்ற புத்தகமும் 1985-ல் பிரசுரிக்கப்பட்ட உயிர்—அது எவ்வாறு இங்கு வந்தது? பரிணாமத்தின் மூலமா படைப்பின் மூலமா? என்ற ஆங்கிலப் புத்தகமும் காவற்கோபுரம், விழித்தெழு! போன்ற பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்ட மேலுமான கட்டுரைகளும் பைபிளின் படைப்பு விவரத்தை ஆதரிக்கின்றன.
இவ்வாறாக, ‘நாம் அல்ல, [கடவுளே] நம்மை உண்டாக்கினார்’ என்பதற்கான ஏராளமான அத்தாட்சிகளை அறிந்துகொள்வதற்கு யெகோவாவின் சாட்சிகள் அநேகருக்கு உதவியிருக்கின்றனர்.—சங்கீதம் 100:3.