உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g97 8/22 பக். 22-27
  • ரஷ்யாவில் யெகோவாவின் சாட்சிகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ரஷ்யாவில் யெகோவாவின் சாட்சிகள்
  • விழித்தெழு!—1997
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • ◆◊◆
  • ◆◊◆
  • ◆◊◆
  • ◆◊◆
  • ◆◊◆
  • யெகோவாவின் சாட்சிகளுடைய கொள்கைகளை ரஷ்ய சட்டமன்றக்குழு நிலைநிறுத்துகிறது
    விழித்தெழு!—1998
  • மத சுதந்திரம் ரஷ்யருக்கு பொக்கிஷம்!
    விழித்தெழு!—2000
  • இழுத்தடித்த வழக்கும் இனிய வெற்றியும்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2011
  • ரஷ்ய பத்திரிகைகள் யெகோவாவின் சாட்சிகளைப் புகழ்கின்றன
    விழித்தெழு!—1998
மேலும் பார்க்க
விழித்தெழு!—1997
g97 8/22 பக். 22-27

ரஷ்யாவில் யெகோவாவின் சாட்சிகள்

ஓர் இறையியலாளரின் கருத்து

ரோமில், முதல் நூற்றாண்டில் வாழ்ந்த யூத சமுதாயத் தலைவர்கள் கிறிஸ்தவத்தைக் குறித்து இப்படிச் சொன்னார்கள்: ‘எங்கும் இந்த மதபேதத்துக்கு விரோதமாய்ப் பேசுகிறதாக நாங்கள் அறிந்திருக்கிறோம்.’ அந்தத் தலைவர்கள் என்ன செய்தார்கள்? போற்றத்தக்க விதமாக, அப்போது வீட்டுக் காவலிலிருந்த அப்போஸ்தலனாகிய பவுலிடம் அவர்கள் சென்று இப்படிச் சொன்னார்கள்: “இதைக்குறித்து உன்னுடைய அபிப்பிராயம் என்னவென்று கேட்டறிய விரும்புகிறோம்.” (அப்போஸ்தலர் 28:22) அவர்கள் கிறிஸ்தவத்துக்கு எதிராக பேசினவர்களின் பேச்சைக் கேட்பதற்குப் பதிலாக, தகவலறிந்த ஒரு கிறிஸ்தவருக்குச் செவிகொடுத்தார்கள்.

மதிப்புக்குரிய ரஷ்ய இறையியலாளரான ஸிர்க்யே இவ்வான்யென்கா என்பவர் இதையேதான் செய்தார். ரஷ்யாவில் யெகோவாவின் சாட்சிகளைக் குறித்து பரவியிருக்கும் அநேக தவறான அறிக்கைகளை அவர் நம்பினாலும், செ. பீட்டர்ஸ்பர்கிற்கு அடுத்தாற்போலுள்ள சாட்சிகளின் கிளைக்காரியாலயத்திற்கு போன் செய்ய அவர் முடிவு செய்தார். அங்கு வருவதற்கும், கேள்விகள் கேட்பதற்கும், நேரடியாகவே சாட்சிகளை கவனிப்பதற்கும் தனக்குக் கிடைத்த அழைப்பை அவர் ஏற்றுக்கொண்டார்.

அக்டோபர் 1996-ல் திரு. இவ்வான்யென்கா வந்தபோது, யெகோவாவின் சாட்சிகளது ரஷ்ய கிளைக்காரியாலயத்தைச் சேர்ந்த சுமார் 200 அங்கத்தினர்களுக்கான குடியிருப்புக் கட்டிடங்கள் கட்டிமுடிக்கப்படும் தறுவாயில் இருந்தன. அடுத்த மூன்று நாட்களுக்கு, கட்டிட வேலை நடக்கும் இடத்தைப் பார்வையிடவும், டைனிங் அறையில் சாப்பிடவும், தனக்கு விருப்பமான எவரை வேண்டுமானாலும் பேட்டிகாணவும் அவருக்கு வாய்ப்பு தரப்பட்டது.

சாட்சிகளைக் குறித்து திரு. இவ்வான்யென்கா எழுதிய ஒரு கட்டுரை, மாஸ்கோ நியூஸ் என்ற பிரபல ரஷ்ய வாராந்தர செய்தித்தாளின் பிப்ரவரி 16-23, 1997 பிரதியில் பிரசுரிக்கப்பட்டது. “யெகோவாவின் சாட்சிகளைப் பார்த்து நாம் பயப்படவேண்டுமா?” என்று தலைப்பிடப்பட்ட அந்தக் கட்டுரை, பிப்ரவரி 20-26 தேதியிடப்பட்ட மாஸ்கோ நியூஸ் ஆங்கிலப் பிரதியிலும் வெளியிடப்பட்டது. ரஷ்யாவில் யெகோவாவின் சாட்சிகளது நடவடிக்கையைக் குறித்து தெரிந்துகொள்ள அநேக விழித்தெழு! வாசகர்களுக்கு ஆர்வம் இருப்பதால், நாங்கள் இங்கே, அனுமதியோடு, இந்தக் கட்டுரையின் பெரும்பாலான பகுதியை வழங்குகிறோம். திரு. இவ்வான்யென்கா, பின்வரும் இந்த அனுபவத்தைக்கொண்டு கட்டுரையை ஆரம்பித்தார்; இது தடித்த எழுத்துக்களில் காணப்பட்டது:

‘பிரிவினைக்காரரே, ரஷ்யாவை விட்டு வெளியேறுங்கள்!’ என்ற போஸ்டரை ஆட்டியபடி, ஷிரினோஃப்ஸ்கியின் LDPR கட்சியினர், யெகோவாவின் சாட்சிகளது கூட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். ‘இந்த அமைப்பை ஏன் உங்களுக்குப் பிடிக்கவில்லை?’ என நான் ஒரு ஆர்ப்பாட்டக்காரரைக் கேட்டேன். ‘கம்சட்காவில் மத மேகநோயின் எழுச்சி’ என்ற தலைப்பைக்கொண்ட ஒரு மெகாபோலிஸ்-எக்ஸ்பிரஸ் செய்தித்தாளை அவர் என்னிடம் கொடுத்தார். தங்களுடைய அமைப்பின் கஜானா பெட்டியை நிரப்புவதற்காக யெகோவாவின் சாட்சிகள் காமத் தரகர்களாக, விபச்சார கும்பல்களைக் கொண்டவர்களாய், மாலுமிகளிடையே பால்வினை நோயைப் பரப்புகின்றனர் என்பதாக அந்தச் செய்தித்தாள் சொன்னது. ‘அவர்களால் உங்களுக்கும்கூட நோய் வந்துவிட்டதா? இந்தத் தகவலை நீங்கள் நம்புகிறீர்களா?’ என நான் இரக்கத்தோடு கேட்டேன். ‘இப்போது பிரச்சினை அதுவல்ல’ என பதில் வந்தது. ‘சிக்கலே, இந்த அமெரிக்க மதத்தினர் ரஷ்யாவின் ஆன்மீகத்தையும் கலாச்சாரத்தையும் அழித்துவருவதுதான்; அதை நாம் நிறுத்தியே தீரவேண்டும்.’ ”

திரு. இவ்வான்யென்கா எழுதிய கட்டுரையின் ஆரம்பத்தில் இவ்வரி காணப்பட்டது: “ஸிர்க்யே இவ்வான்யென்கா, இறையியல் வல்லுநர், தத்துவ மாணாக்கர்.”

“அநேக ரஷ்யர்கள் யெகோவாவின் சாட்சிகளைக் குறித்து நல்ல அபிப்பிராயத்தைக் கொண்டில்லை என்பது உண்மையாய் இருந்தாலும், இதுபோன்ற நேர்மை அரிதே. இந்த அமைப்பைப் பற்றி வாயைத் திறந்தாலேபோதும், அதன் வெறுப்புண்டாக்கும் மத வெறி, அதன் அமெரிக்க தோற்றம், அதன் தலைவர்களிடையே சாதாரண அங்கத்தினர்கள் வைக்கும் அசைக்கமுடியாத நம்பிக்கை, உலக முடிவின்பேரில் நம்பிக்கை ஆகியவற்றைப் பற்றி அடுக்கடுக்காக விமர்சனங்கள் தொடருகின்றன. அநேகருக்கு, யெகோவாவின் சாட்சிகளென்றாலே பயம், அதேசமயத்தில் அவர்களைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆர்வமும் இருக்கிறது.

“இந்த மதம் உண்மையில் என்ன, அதைக் கண்டு நாம் பயப்படவேண்டுமா?

“இதை நானே தெரிந்துகொள்வதற்காக, செ. பீட்டர்ஸ்பர்கிலுள்ள குருர்ட்னோயா மாவட்டத்தைச் சேர்ந்த சோல்னெச்னோயா கிராமத்திற்குச் சென்றேன்; அங்குதான் யெகோவாவின் சாட்சிகளது ரஷ்ய நிர்வாக அலுவலகம் அமைந்திருக்கிறது.

◆◊◆

“முன்பு, இந்த இடத்தில் ஒரு கோடைகால பள்ளி அமைந்திருந்தது. 1992-க்குள்ளாக அந்த [ஆரம்பகால] கட்டிடம் பாழடைந்து கோரமாக காட்சியளித்தது; பிள்ளைகளுக்குப் பதிலாக பரதேசிகளும் கூட்டம் கூட்டமான எலிகளுமே இருந்தன. சந்தேகமில்லாமல், அப்பகுதி அவ்வாறு நாசமடைந்திருந்ததால்தான், காலவரையறை இன்றி பயன்படுத்தத்தக்க 17 ஏக்கர் நிலத்தை யெகோவாவின் சாட்சிகளால் வாங்க முடிந்தது. பழைய கட்டிடங்களை அவர்கள் புதுப்பித்தனர்; நான்கு-மாடி நிர்வாக கட்டிடம், 500 பேர் உட்காரத்தக்க ஒரு [ராஜ்ய மன்றம்], ஒரு டைனிங் ஹால் போன்ற புதிய கட்டிடங்களையும் அவர்கள் கட்ட ஆரம்பித்தனர். யெகோவாவின் சாட்சிகள், (விசேஷமாக பின்லாந்திலிருந்து வரவழைக்கப்பட்ட) புதிய புல் வகையையும் வெவ்வேறு வகையான அரிய மரங்களையும்கூட நடுகிறார்கள். வரும் கோடைகாலத்தில் வேலை முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிர்வாக அலுவலகத்தின் முக்கிய வேலை, பிரசங்க வேலையை ஒழுங்கமைப்பதும் யெகோவாவின் சாட்சிகளது உள்ளூர் சபைகளுக்கு பிரசுரங்களை அனுப்புவதுமே ஆகும். சோல்னெச்னோயாவில் அச்சகங்கள் இல்லை, ஆகவே ரஷ்ய பிரசுரங்கள் ஜெர்மனியில் அச்சிடப்பட்டு, பின் செ. பீட்டர்ஸ்பர்கிற்கு அனுப்பப்படுகின்றன; அங்கிருந்து அவை மற்ற பகுதிகளுக்கு விநியோகிக்கப்படுகின்றன. சுமார் 190 பேர் அந்த அலுவலகத்தில் வேலைபார்க்கின்றனர். அவர்கள் தாமாகவே முன்வந்து வேலைசெய்கின்றனர்; சம்பளம் இல்லாவிட்டாலும், தங்குவதற்கு இடம், உணவு, துணிமணி போன்ற அடிப்படை தேவைகள் அனைத்துமே அவர்களுக்கு கொடுக்கப்படுகின்றன.

“அலுவலகப் பணி, 18 மூப்பர்கள் கொண்ட ஒரு குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. வஸ்யில்யி கல்யின் என்பவர் 1992 முதற்கொண்டு நிர்வாக அலுவலகத்தின் ஒருங்கிணைப்பாளராய் பணியாற்றிவருகிறார். அவர் இவான-ஃப்ரான்கோஃப்ஸ்கில் பிறந்தவர். 1951-ல், நான்கு வயதாயிருக்கையில், அவரும் அவரது பெற்றோரும் சைபீரியாவிற்கு நாடுகடத்தப்பட்டனர் (1949 மற்றும் 1951-ல் சுமார் 5,000 குடும்பங்கள் யெகோவாவின் சாட்சிகளாக இருந்ததற்காக அதிகாரிகளால் துன்புறுத்தப்பட்டன). அவர் 1965-ல் முழுக்காட்டுதல் பெற்று, இர்குட்ஸ்க் பகுதியில் வாழ்ந்துவந்தார். மரத்தொழிற்சாலை ஒன்றில் மேற்பார்வையாளராகவும் பணியாற்றிவந்தார்.

“நிர்வாக அலுவலகத்தின் வாலண்டியர்கள் போக, ரஷ்யா, பின்லாந்து, ஸ்வீடன், நார்வே ஆகிய இடங்களிலிருந்து கட்டிடப் பணிக்காக வாலண்டியர்களாக வந்த 200-க்கும் அதிகமானவர்களும் சோல்னெச்னோயாவில் தங்கியிருக்கின்றனர்: அவர்களில் பெரும்பாலோர் தங்களது தினப்படி உத்தியோகத்திற்கு விடுப்பு எடுத்துவந்திருந்தனர். உக்ரேன், மால்டோவா, ஜெர்மனி, ஐக்கிய மாகாணங்கள், பின்லாந்து, போலந்து மற்றும் பிற நாடுகளிலிருந்தும் ஏகப்பட்ட யெகோவாவின் சாட்சிகள் வந்திருக்கின்றனர். (யெகோவாவின் சாட்களிடையே எந்த இன வேற்றுமையும் இல்லை. ஜார்ஜியா, ஆப்காஸ் குடியரசு, அஜர்பைஜன், அர்மீனியா ஆகியவற்றைச் சேர்ந்த வெவ்வேறு இனத்தவர் அலுவலகத்தில் ஒருசேர வாழ்ந்தாலும், இந்த நான்கு வருடங்களில் ஒரேவொரு சண்டைகூட இருந்ததில்லை.)

“கட்டுமானப் பொருட்களிலும் கருவிகளிலும் பெரும்பாலானவை ஸ்காண்டினேவிய நாடுகளால் வழங்கப்பட்டன; அவற்றில் அநேகம் உடன் விசுவாசிகளால் இலவசமாகவும் அளிக்கப்பட்டன. ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஒரு யெகோவாவின் சாட்சி 1993-ல் சோல்னெச்னோயாவிற்கு எடுத்துவந்த ஒரு புல்டோஸர் என்னிடம் காண்பிக்கப்பட்டது. அவர் அங்கிருந்த காலமெல்லாம் அதைப் பயன்படுத்தினார்; திரும்பிச் செல்வதற்குமுன் உடன் விசுவாசிகளுக்கு அதைக் கொடுத்துவிட்டார். கட்டிட பணியாளர்கள் சௌகரியமான சாப்பாட்டு விடுதிகளிலும் சிறு வீடுகளிலும் தங்கியிருக்கின்றனர். அவர்களது நாள் இப்படித்தான் கழியும்: காலை 7:00 மணி—காலைச் சிற்றுண்டி, ஜெபங்கள்; காலை 8:00 மணியிலிருந்து மாலை 5:00 மணிவரை வேலை; மதிய உணவுக்காக இடையில் ஒருமணிநேரம் இடைவெளி. சனிக்கிழமைகளில் அரை நாள் வேலை செய்கின்றனர்; ஞாயிற்றுக்கிழமை ஓய்வு.

“அவர்கள் நன்றாக சாப்பிடுகிறார்கள்; எப்போதுமே சாப்பாட்டுடன் பழவகைகள் பரிமாறப்படும். இவர்கள் எந்த விதமான விரதங்களையோ உணவில் கண்டிப்பான கட்டுப்பாடுகளையோ கடைபிடிப்பதில்லை. வேலை முடிந்த பிற்பாடு, அநேகர் சௌனா குளியலுக்குச் செல்கின்றனர்; பின் பீர் அருந்தியவாறு இசையைக் கேட்டுக்கொண்டு சுற்றுப்புறத்தில் ஆற அமர உட்கார்ந்திருக்கின்றனர். யெகோவாவின் சாட்சிகளிடையே குடிவெறியர்கள் இல்லை; ஆனால் அதேசமயத்தில் மது முற்றிலும் தடைசெய்யப்படுவதும் இல்லை. வைன், கோன்யாக், வாட்கா போன்றவற்றை மிதமாக குடிப்பதற்கு அவர்களுக்கு அனுமதி உண்டு. எனினும், யெகோவாவின் சாட்சிகள் புகை பிடிப்பதில்லை.

◆◊◆

“வாரத்திற்கு மூன்று முறை பைபிள்-படிப்பு வகுப்புகள் இருக்கின்றன; இவற்றிற்கு பெரும்பாலும் இளைஞர்கள் செல்கிறார்கள். ஆனாலும், 30-40 வருடங்களாக யெகோவாவின் சாட்சிகளாக இருந்திருப்பவர்களையும் அங்கு பார்ப்பது அரிதல்ல. வயதானவர்களில் கிட்டத்தட்ட அனைவருமே சிறைகளில் இருந்திருக்கின்றனர்; கட்டாய வேலை முகாம்களில் தள்ளப்பட்டிருக்கின்றனர்; நாடு கடத்தப்பட்டிருக்கின்றனர். அடக்குமுறை காலம் முடிவடைந்த பிறகு, அநேக டாக்டர்களும் வழக்கறிஞர்களும் என்ஜினியர்களும் ஆசிரியர்களும் தொழில் நிர்வாகிகளும் மாணாக்கர்களும் யெகோவாவின் சாட்சிகளானார்கள்.

“சபைகளில், எல்லா அங்கத்தினர்களும் சமமாக மதிக்கப்படும் ஒரு சூழ்நிலையைக் காத்துக்கொள்ள முயற்சி எடுக்கப்படுகிறது. உதாரணத்திற்கு, நிர்வாக அலுவலகத்தின் ஒருங்கிணைப்பாளர்கூட தனது நியமிக்கப்பட்ட நாள் வரும்போது, சாயங்காலங்களில் பாத்திரங்களைக் கழுவுகிறார். யெகோவாவின் சாட்சிகள் ஒருவரையொருவர் பெயர்சொல்லி அழைக்கின்றனர்; பெயரோடு ‘சகோதரர்’ அல்லது ‘சகோதரி’ என்பதையும் சேர்த்துச் சொல்கின்றனர்.

“ஒரு யெகோவாவின் சாட்சி பைபிள் போதனைகளை மீறி, மனந்திரும்ப மறுக்கும்போது சபைநீக்கம் செய்யப்படுகிறார்; இதுவே அவர்கள் அளிக்கும் மிகக் கடுமையான தண்டனை. அந்த நபர் அப்போதும் தொடர்ந்து கூட்டங்களுக்கு வரலாம், ஆனால் இனியும் தனது உடன் விசுவாசிகளால் வரவேற்கப்படமாட்டார். அதைக் காட்டிலும் சற்று கடுமை குறைந்த நடவடிக்கை, கடிந்துகொள்ளுதல் ஆகும்.

◆◊◆

“இவ்வளவு விதவிதமான ஆட்கள் இந்த மதத்தில் சேர்ந்திருப்பதன் இரகசியமென்ன என்பதைக் கண்டுபிடிக்க, யெகோவாவின் சாட்சிகளை நான் வெகு நேரம் கவனித்தேன். தங்களது குணாதிசயங்களில், கல்வியில், தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளில் வித்தியாசமாக இருந்தாலும், இந்த பாவமுள்ள உலகத்தோடு ஒத்துப்போகும் மதங்களோடு [சேர்ந்து யெகோவாவின் சாட்சிகள் வணக்கத்தில் ஈடுபடுவதில்லை]. அதிகாரத்தை குருட்டுத்தனமாக நம்ப வேண்டுமென எதிர்பார்க்கப்படும் இடங்களிலும், ஆதாரமற்ற நம்பிக்கைக்கு இடமளிக்கும் இடங்களிலும், குருமார், அடிபணியும் கூட்டத்தினர் என்ற பாகுபாடுள்ள இடங்களிலும் இருக்க அவர்கள் விரும்புவதில்லை.

“யெகோவாவின் சாட்சிகள், பைபிளுக்கு இசைய வாழ்க்கை நடத்துவதில் அசைக்கமுடியாத நம்பிக்கையுள்ளவர்களாக பேர்பெற்றிருக்கிறார்கள். அவர்கள் தங்களது ஒவ்வொரு அசைவிற்கும் ஏதாவதொரு பைபிள் நியமத்தை ஆதாரமாக அளிக்க முயலுகின்றனர் அல்லது பழைய ஏற்பாட்டிலிருந்தோ புதிய ஏற்பாட்டிலிருந்தோ ஒரு பகுதியை ஆதாரமாகக் குறிப்பிடுகின்றனர். பைபிள், சொல்லப்போனால் பைபிள் மட்டும்தான் எல்லா கேள்விகளுக்கும் பதிலளிக்கிறது என யெகோவாவின் சாட்சிகள் நம்புகின்றனர். அவர்களைப் பொருத்தமட்டும், பைபிள் ஒரு அரசமைப்பு, உரிமையியல் சட்டத்தொகுப்பு, சத்தியத்தின் மிக உயர்ந்த வெளிப்பாடு.

“இதன் காரணமாகவே, யெகோவாவின் சாட்சிகள், அரசாங்க சட்டத்தை இம்மி பிசகாமல் கடைபிடிப்பவர்களும், குறிப்பாக வரிப் பணத்தைக் கட்டுவதில் நேர்மை தவறாதவர்களுமான மக்களென உலகளாவிய விதத்தில் அறியப்பட்டிருக்கின்றனர். வரிச் சோதனை இலாகா தவறாமல் அவர்களை சோதிக்கிறது; ஆனால் ஒவ்வொரு முறையும் எந்தவிதமான தப்பிதங்களையும் கண்டுபிடிக்க முடியாமல் வாயடைத்துப் போகிறது. சந்தேகமில்லாமல், யெகோவாவின் சாட்சிகள் மற்ற அநேகரைப்போல் ஏதாவது சாக்கு சொல்லி வரி கட்டாமலிருக்கப் பார்க்கலாம்; ஆனால் வரிகளைச் செலுத்துவதில் நேர்மையாய் இருக்க வேண்டுமென பைபிள் சொல்வதால் இதுவே யெகோவாவின் சாட்சிகளுக்கு தெய்வ வாக்கு.

“எனினும், பைபிள் நியமங்களை ஒருபோதும் விட்டுக்கொடுக்காத மனப்பான்மையே, யெகோவாவின் சாட்சிகளுக்கும் அரசாங்கத்திற்கும் சில கடும் மோதல்கள் ஏற்படுவதற்குக் காரணமாயிருக்கிறது. அரசியலில் சிறிதும் கலந்துகொள்ளாத அவர்களது நிலைநிற்கை, விரோதத்திற்கு முக்கிய காரணமாயிருக்கிறது; அந்த நிலைநிற்கை அவர்கள் ராணுவத்தில் கலந்துகொள்ள மறுப்பதிலிருந்து தெரிகிறது.

“தமது சீஷர்களும் தமது ராஜ்யமும் இவ்வுலகத்தின் பாகமாய் இல்லை என இயேசு சொன்ன வார்த்தைகளை யெகோவாவின் சாட்சிகள் சொல்லர்த்தமாக எடுத்துக்கொள்கின்றனர்; இந்தக் காரணத்திற்காகவே அவர்கள் அரசியலிலும் போரிலும், அது எங்கு எந்தக் காரணத்திற்காக நடந்தாலும் கலந்துகொள்ள மறுத்துவிடுகின்றனர். ‘ஹிட்லர் வாழ்க’ என கூக்குரலிடவும் ஹிட்லரின் ராணுவத்தில் சேரவும் யெகோவாவின் சாட்சிகள் மறுத்ததால் அவர்களில் ஆயிரக்கணக்கானோர் நாசி சித்திரவதை முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர்; அங்கு ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். சோவியத் யூனியனுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க மறுத்ததால் உயிரிழந்த ஒவ்வொரு ஜெர்மானிய யெகோவாவின் சாட்சியும், மகா புண்ணியத்தை செய்துவிட்ட நபராக ரஷ்யர்களால் கருதப்படுகிறார். ஆனாலும் அதேசமயத்தில், அநேக ரஷ்யர்கள், போர் ஆயுதங்கள் ஏந்தி இரண்டாவது உலகப் போரில் கலந்துகொள்ள மறுத்ததால் கொல்லப்பட்ட, அல்லது சமாதான காலங்களில் ராணுவத்தில் சேர மறுத்ததால் தீர்ப்பளிக்கப்பட்ட [ரஷ்ய] யெகோவாவின் சாட்சிகளுக்கு இரக்கம் காண்பிக்கும் மனப்பாங்கைப் பெற்றில்லை. ஆனால் இந்த இரு சந்தர்ப்பங்களிலுமே யெகோவாவின் சாட்சிகள் அரசாங்க தீர்ப்புகளுக்கு ஏற்றவாறல்லாமல், தங்களது மத நம்பிக்கைகளுக்கு ஏற்றவாறு நடந்துகொண்டனர்.

“கொஞ்ச நாட்களுக்கு முன்பு ஜப்பானில் இதேபோன்ற ஒரு பிரச்சினை எழும்பியது; அங்கு யெகோவாவின் சாட்சிகளாயிருந்த சில மாணாக்கர்கள் தற்காப்புக் கலைகளை கற்றுக்கொள்ள மறுத்ததால் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கப்படும் ஆபத்திலிருந்தார்கள். 1996-ல் ஜப்பான் உச்சநீதி மன்றம் இந்த மாணாக்கர்களின் உரிமைகளை ஆதரித்து ஆணை பிறப்பித்து, அதற்குப் பதிலாக வேறு பாடங்களைக் கற்றுக்கொள்வதற்கான அனுமதியளித்தது.

◆◊◆

“யெகோவாவின் சாட்சிகளைக் குறித்ததில், நவீன சிந்தனையாளர்களை ஆச்சரியத்தில் அமிழ்த்துவது எது? எல்லாவற்றிற்கும் மேலாக, உலக முடிவு சமீபித்திருக்கிறது என்பதை அவர்கள் ஓயாமல் பிரசங்கிப்பதே ஆகும் (அவர்கள் தெருவிலும் வீடு வீடாகவும் மிஷனரி ஊழியம் செய்கின்றனர்). சமீபத்தில், பிரசங்கிப்பவர்கள், ‘உலக முடிவைப்’ பற்றியும் பாவிகளுக்கு வரப்போகும் பரிதாபமான அழிவைப் பற்றியுமே அளவுக்கதிகமாக அழுத்திக் கூற வேண்டாமென்றும், அதற்குப் பதிலாக ‘பூமியில் பரதீஸில் நித்திய ஜீவனைப்’ பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை யெகோவா அவர்களுக்கு அளிக்கிறார் என்பதை கேட்பவர்களுக்கு விளக்குமாறும் மூப்பர்கள் ஆலோசனை கூறியிருக்கிறார்கள்.

“வெறுப்பூட்டும் மற்றொரு விஷயம், யெகோவாவின் சாட்சிகள் விசுவாசக் கலப்பை ஆதரிக்காததும் அனைத்து கிறிஸ்தவ பிரிவுகளும் ஐக்கியமாவதை நம்பாததுமே ஆகும். கிறிஸ்தவ உலகம் கடவுளுக்கும் பைபிளுக்கும் எதிராக துரோகம் செய்துவிட்டதாகவும் மற்ற எல்லா மதங்களும் தப்பிதமே உருவானவை எனவும் அவர்கள் நம்புகின்றனர். யெகோவாவின் சாட்சிகள் இந்த மதங்களை ‘வேசியான பாபிலோனோடு’ ஒப்பிடுகின்றனர்; பாபிலோனுக்கு ஏற்பட்ட கதியேதான் இவற்றிற்கும் ஏற்படுமென நம்புகின்றனர். வெவ்வேறு மதங்களின் அழிவு சமீபித்திருக்கிறது என்றும் அழிவில் தப்பிப்பிழைக்கும் ஒரே மதம், யெகோவாவின் சாட்சிகளால் பிரசங்கிக்கப்படும் மதம் என்றும் சமீபத்திய ‘விழித்தெழு!’ பிரதி ஒன்று குறிப்பிடுகிறது.

“யெகோவாவின் சாட்சிகள், மனசாட்சி சம்பந்தமான ஒவ்வொரு நபரது சுயாதீனத்தையும் மதிக்கின்றனர்.

◆◊◆

“யெகோவாவின் சாட்சிகளது போதனைகள் சமுதாயத்திற்கு ஒரு அச்சுறுத்தலாக இருக்கிறதா இல்லையா என்பதைக் குறித்து அநேக நாடுகள் ஏற்கெனவே கவலை தெரிவித்திருக்கின்றன. கனெட்டிகட் மாகாணத்தின் உச்சநீதி மன்றம், ஐக்கிய மாகாணங்கள் (1979), நியூ சௌத்வேல்ஸின் உச்சநீதி மன்றம், ஆஸ்திரேலியா (1972), பிரிட்டிஷ் கொலம்பியாவின் மாநில நீதிமன்றம், கனடா (1986) மற்றும் பிற நீதிமன்றங்கள், யெகோவாவின் சாட்சிகள் சமூகத்திற்கோ மக்களின் உடல்நலத்திற்கோ அவர்களது உணர்ச்சிகளுக்கோ ஒரு அச்சுறுத்தலாக இருப்பதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை என்பதாக அறிவித்திருக்கின்றன. யெகோவாவின் சாட்சிகளுக்கு மத உரிமை அளிப்பதை ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றம் (1993) ஆதரித்தது; கிரீஸிலும் ஆஸ்திரியாவிலும் அவ்வுரிமை மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இன்று யெகோவாவின் சாட்சிகள் 25 நாடுகளில் துன்புறுத்தப்படுகின்றனர் . . .

“யெகோவாவின் சாட்சிகள், பைபிள் சத்தியத்தினிடமாக கொண்டுள்ள ஈடுபாட்டிலும் சுயநலமின்றி தங்களது நம்பிக்கைகளின் சார்பாக வாதாட தயாராயிருப்பதிலும் மற்ற குடிமக்களுக்கு முன்மாதிரியாக கருதப்படலாம். ஆனால் இந்தக் கேள்வி எழும்புகிறது: வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் பைபிளை ஆதாரமாகக் கொண்டிருப்பதை இந்தளவுக்கு தீவிரமாகவும் விட்டுக்கொடுத்து இணங்கிவிடாத விதத்திலும் காண்பிக்கும் அமைப்புகளுக்கு, மனசாட்சி சம்பந்தமான சுயாதீனமளிக்கும் அரசமைப்பு சார்ந்த உத்தரவாதங்களை நமது சமூகம் கொடுக்கத் தயாராய் இருக்கிறதா?”

திரு. இவ்வான்யென்கா, இந்தக் கடைசி வரியில் ஒரு முக்கிய கேள்வியை எழுப்புகிறார். முதல் நூற்றாண்டில், பிரதிநிதியாக செயல்படுவதற்கு இயேசு கிறிஸ்துவால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அப்போஸ்தலனாகிய பவுல், நியாயமற்ற விதத்தில் “சிறைவாசம்” அனுபவித்தார். இவ்வாறு “நற்செய்திக்காக வாதாடி, அதை சட்டப்பூர்வமாக நிலைநாட்டுவதில்” தான் எடுத்த முயற்சிகளைக் குறித்து பவுல் தனது உடன் விசுவாசிகளுக்கு எழுதினார்.—பிலிப்பியர் 1:7, NW; அப்போஸ்தலர் 9:3-16.

இன்று யெகோவாவின் சாட்சிகள், திரு. இவ்வான்யென்காவைப்போல் தங்களது நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனிக்க அனைவரையும் வரவேற்கின்றனர். மக்கள் அதைச் செய்தால், சாட்சிகளுக்கு எதிரான அறிக்கைகள், பூர்வீக கிறிஸ்தவர்களுக்கு எதிரான அப்படிப்பட்ட அறிக்கைகளைப்போலவே உண்மையற்றவை என்பதை அறிந்துகொள்வார்கள் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம். சிறப்பான விதத்தில், “நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்” என்று இயேசு சீஷர்களுக்கு கொடுத்த ‘புதிதான கட்டளைக்கு’ சாட்சிகள் கீழ்ப்படிகிறார்கள்.”—யோவான் 13:34, 35.

[பக்கம் 23-ன் பெட்டி]

எம்என் ஃபைல்

(மாஸ்கோ நியூஸ் செய்தித்தாளின் ஃபைல்களிலிருந்து எடுக்கப்பட்ட கீழ்க்கண்ட தகவல் ஸிர்க்யே இவ்வான்யென்கா எழுதிய கட்டுரையோடு சேர்த்து பிரசுரிக்கப்பட்டது.)

“ரஷ்யாவைச் சேர்ந்த யெகோவாவின் சாட்சிகள், 233 நாடுகளில் இயங்கிக்கொண்டிருக்கும் ஓர் உலகளாவிய கிறிஸ்தவ அமைப்பின் பாகமாக இருக்கிறார்கள்; அந்த அமைப்பில் 54 லட்சம் அங்கத்தினர்கள் இருக்கிறார்கள். நியூ யார்க்கின் ப்ரூக்ளினிலுள்ள ஆளும் குழுவினது ஆவிக்குரிய வழிநடத்துதலை யெகோவாவின் சாட்சிகள் பின்பற்றுகின்றனர். யெகோவாவின் சாட்சிகளது நவீன-நாளைய அமைப்பு, 1870-ல் சார்ல்ஸ் டேஸ் ரஸல் என்பவரால் பென்ஸில்வேனியாவிலுள்ள பிட்ஸ்பர்க்கில் துவங்கப்பட்ட ஒரு பைபிள் படிப்பு வகுப்பிலிருந்து உருவானது. அந்த அமைப்பு ரஷ்யாவிற்கு 1887-ல் வந்தது. முதல் ரஷ்ய யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரான ஸிம்யான் கஸ்லிட்ஸ்கி, 1891-ல் மாஸ்கோவிலிருந்து சைபீரியாவிற்கு நாடு கடத்தப்பட்டார். அந்த அமைப்பு தாக்குப்பிடித்த துன்புறுத்தலின் மத்தியிலும், 1956-ல் சோவியத் யூனியனில் 17,000 யெகோவாவின் சாட்சிகள் இருந்தனர். மார்ச் 1991-ல்தான், ‘மத உரிமையின்பேரில்’ சட்டம் பிறப்பிக்கப்பட்ட பிறகு, ரஷ்யாவில் யெகோவாவின் சாட்சிகள் அங்கீகரிக்கப்பட்டனர். இன்று ரஷ்யாவில் சுமார் 70,000 அங்கத்தினர்களைக் கொண்ட 500-க்கும் அதிகமான தொகுதிகள் இருக்கின்றன. (125 மொழிகளில் 2 கோடி பிரதிகள் அச்சிடப்படும்) ‘காவற்கோபுரம்’ மற்றும் (81 மொழிகளில் 1.8 கோடி பிரதிகள் அச்சிடப்படும்) ‘விழித்தெழு!’ பத்திரிகைகளை இந்த அமைப்பு விநியோகிக்கிறது.”

[பக்கம் 23-ன் படம்]

ரஷ்யாவிலுள்ள கிளைக்காரியாலயத்தின் ஒரு பகுதி

[பக்கம் 24-ன் படம்]

ரஷ்ய கிளைக்காரியாலய குடும்பம் பைபிள் படிப்பிற்காக ஒன்றுகூடும் ராஜ்யமன்றம்

[பக்கம் 25-ன் படம்]

சாட்சிகள் குடும்பமாக ஒன்றுசேர்ந்து படிக்கின்றனர்; சந்தோஷமாக ஓய்வுநேரத்தைக் கழிக்கின்றனர்

[பக்கம் 26-ன் படம்]

அவர்கள் பைபிள் அறிவை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்கின்றனர்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்