வனவிலங்குகளின் கொட்டாவி
யாவரறிய எவரேனும் கொட்டாவி விடும்போது, அவர் பண்பற்றவர்—அல்லது மிதமிஞ்சி சலிப்படைந்திருப்பவர்—என்று மக்கள் நினைக்கலாம். நன்னடத்தைக் கோட்பாடுகள் ஒருபுறமிருக்க, கொட்டாவி ஒரு பயனுள்ள நோக்கத்தை நிறைவேற்றுகிறது. கொட்டாவி நம் கட்டுப்பாட்டை மீறி நடைபெறும் மூச்சிழுத்தல் ஆகும். நாம் பொதுவாக நாள் முழுவதும் வேலைபார்த்துவிட்டு களைப்படைவதால் மாலையில் கொட்டாவி விடுகிறோம்; அல்லது காலையில் எழுந்தவுடன் கொட்டாவி விடுகிறோம். ஆழ்ந்து விடும் கொட்டாவி, நம் உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜனை அதிகரிக்க உதவுகிறது; கணநேரம் நமக்குப் புத்துயிரும் அளிக்கலாம். அது பொதுவாக விழித்தெழுவதன் ஒரு பாகமாய் இருக்கிறது.
ஆனால், விலங்குகளும்கூட கொட்டாவி விடுகின்றன என்று உங்களுக்குத் தெரியுமா? அவை, எப்பொழுதும் காற்று நன்றாக புகுவதற்காகவே கொட்டாவி விடுவதில்லை. அவை அவ்வாறு செய்வதற்கான காரணம், நம் கவனத்தைப் பெருமளவில் ஈர்க்கிறது. உதாரணமாக, குரங்குகள் ஒரு செய்தியைத் தெரிவிப்பதற்காக சில சமயங்களில் கொட்டாவி விடுகின்றன. வாயை விசாலமாய்த் திறந்து வைத்துக்கொண்டு, பற்களை பயங்கரமாய்க் காட்டுவது, அதற்குப் போட்டியான ஆண் குரங்கை அல்லது அதைக் கொன்று தின்னப்போகும் ஒரு விலங்கை கோபத்துடன் எச்சரிப்பதற்கு ஒரு வழியாய் சேவிக்கிறது. அவ்வாறு தெரிவிக்கும் செய்தி என்னவென்றால்: ‘நான் கடித்துக் குதறப் போகிறேன். என் அருகில் வந்துவிடாதே!’
ஆப்பிரிக்க சமவெளியைச் சேர்ந்த கொன்றுதின்னும் பூனைகள், இரையை வேட்டையாடி பிடிப்பதற்கு முன்பு பொதுவாக நெட்டிமுறிக்கின்றன. மனிதருக்கு ஏற்படுவதைப் போலவே, பூனைகளின் கொட்டாவி, உடல் இயக்கம் சார்ந்த—அதிகப்படியான காற்றை நுரையீரல்களுக்குள் எடுத்துக்கொள்ளும்—ஒரு வேலையாய் இருக்கிறது. இது இரத்தத்திலுள்ள ஆக்ஸிஜனின் அளவை அதிகரிக்கிறது; பிறகு இதயம் அந்த ஆக்ஸிஜனை உடலின் மற்ற பாகங்களுக்கு விரைவாக அனுப்புகிறது; இதன் மூலம் குறுகிய நேரத்திற்குள் அதிவேகமாய் இரைவிலங்கைத் துரத்திச் செல்லத் தேவைப்படும் உடனடி சக்தியை அளிக்கிறது.
ஏன், மீன்களும்கூட கொட்டாவி விட்டிருப்பதாய் காணப்பட்டிருக்கின்றனவே! சிலசமயங்களில் “விரைந்து செல்வதற்கு ஒரு முன் செயலாக கொட்டாவி விடும்” மீன்களைப் பற்றி விலங்குகளின் உலகிற்குள் என்ற ஆங்கில புத்தகம் கூறுகிறது. “ஒரு மீன், பரவசமடையும்போது, ஒரு விரோதியைப் பார்க்கும்போது, அல்லது உணவைப் பார்க்கும்போதுகூட கொட்டாவி விடலாம். இந்த எல்லா சந்தர்ப்பங்களிலும் உடனடி நடவடிக்கை தேவைப்படுகிறது.”
ஒருவேளை, உள்ளவற்றிலேயே மிகவும் மனங்கவருவதாய் இருப்பது, நீர் யானை, அல்லது பிகெமோத் விடும் கொட்டாவியே. இந்தப் பருத்த விலங்கினால், ஒரு குகை தெரிவதுபோன்று ஆச்சரியமூட்டும் வகையில், 150 டிகிரிக்கு தன் வாயைப் பிளக்க முடியும்! நீர் பருகச் செல்லும் சிறிய குளத்திலிருக்கும் எல்லா பிராணிகளிடமும், தலைவன் யார் என்பதைக் காட்ட ஒரு முதிய ஆண் நீர் யானைக்கு இந்தக் கொட்டாவி உதவுகிறது. அவன் ஆதிக்கம் செலுத்திவரும் நீர்ப்பகுதியின் எல்லைக்குள் தைரியமாய் நுழையும் ஏதேனும் விரோதிகளுக்கு பல்லைக் காட்டி எச்சரிப்பூட்டும் ஒரு செயலாகவும் அது இருக்கிறது.
ஆகவே, ஒரு சிங்கம் கர்ஜிப்பதைப் போன்ற கம்பீரக் காட்சியாய் தோன்றாவிட்டாலும், ஒரு கொட்டாவி—தூக்கத்தின் அறிகுறியான ஒரு கொட்டாவியாய் இருந்தாலும்சரி, பயமுறுத்தும் ஒரு கொட்டாவியாய் இருந்தாலும்சரி, அல்லது வெறுமனே சக்தியை அதிகரிக்கும் ஒரு கொட்டாவியாய் இருந்தாலும்சரி—ஒரு பயனுள்ள நோக்கத்தை நிறைவேற்றுகிறது. இது, விலங்கு சாம்ராஜ்யத்தை வடிவமைத்தவருடைய திகைப்பூட்டும் படைப்புத்திறனுக்கு மற்றும் ஓர் உதாரணம்!