“மிகப் பிரபலமான விஞ்ஞான மோசடி”
பிரிட்டனிலுள்ள விழித்தெழு! நிருபர்
1912-ல் கண்டுபிடிக்கப்பட்ட பில்ட்டௌன் மனிதனே “இந்த நூற்றாண்டின் மிகப் பிரபலமான விஞ்ஞான மோசடி” என்று லண்டனின் த டைம்ஸ் சொல்லுகிறது. மானிட மரபினுடைய பரிணாமச் சங்கிலியாக கருதப்பட்ட ஒன்றில் விடுபட்டுப் போன ஒரு இணைப்பாக இருப்பதற்கு மாறாக, அந்த மண்டையோடு ஒரு நவீன மனிதனுடையது என்றும் அதன் கீழ்த்தாடை ஒரு ஒராங்குட்டன் மனிதக் குரங்கிற்கு சொந்தமானது என்றும் விஞ்ஞான சோதனைகள் நிரூபித்த பிற்பாடு, 1953-ல் இது இவ்வாறு அம்பலப்படுத்தப்பட்டது. இத்தகைய சாமர்த்தியமான மோசடியை யார் செய்திருக்கக்கூடும்?
இதன் எஞ்சிய பாகங்களைக் கண்டுபிடித்த வழக்குரைஞராகவும், அதிக அனுபவமற்ற நிலவியலாளராகவும் இருந்த சார்லஸ் டாஸன் என்பவரே பல ஆண்டுகளாகச் சந்தேகத்துக்குரியவராக கருதப்பட்டு வந்தார். இதில் சம்பந்தப்பட்டதாக கருதப்பட்ட மற்றவர்கள் தீவிர பரிணாமவாதியும், அறுவை மருத்துவ நிபுணர்களுக்கான ராயல் கல்லூரியின் முன்னாள் தலைவருமான சர் ஆர்தர் கித்; பிரிட்டிஷ் எழுத்தாளர் சர் ஆர்தர் கோனன் டாயெல்; மற்றும் பிரெஞ்சு பாதிரி பையர் டேயார் டா ஷர்டன் ஆகியோரே. ஆனாலும் நம்பத்தகுந்த ஆதாரங்கள் குறைவுபட்டதால் கடைசியில் டாஸன் பொறுப்பாளியாகக் கருதப்பட்டார்.
இப்போதோ, உண்மையான குற்றவாளியின் பெயர் தெரிந்துவிட்டது. அவன் தான் மார்டின் ஏ. சி. ஹின்டன், 1961-ல் இறந்த, லண்டனிலுள்ள இயற்கை சரித்திர மியூசியத்தின் முன்னாள் விலங்கியல் மேற்பார்வையாளர். ஒன்பது வருடங்களுக்கு முன்பு, ஹின்டனுக்கு சொந்தமானதாக இருந்த ஒரு கான்வாஸ் டிரங்கு பெட்டி மியூசியத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டது. அதனுள்ளே மிகவும் கவனமாக பகுத்தாராயப்பட்டிருந்த யானையின் பற்கள், புதைந்த நீர்யானையின் துண்டுப்பகுதிகள், மேலும் மற்ற எலும்பு துண்டுகள் இருந்தன. அவை எல்லாமே பில்ட்டௌன் எலும்புகளைப் போன்ற அதே அளவுகளில் இரும்பும் மாங்கனீசும் பூசப்பட்டிருந்தவையாக காணப்பட்டன. ஆனால் பற்களில் காணப்பட்ட குரோமியத்தைக் கண்டுபிடித்ததுதான் முடிவு செய்வதற்கு காரணமாயிருந்தது. இதுவும்கூட பூச்சு வேலையில் பயன்படுத்தப்பட்டிருந்தது.
உண்மைகளை வெளிப்படுத்தும்போது, லண்டனிலுள்ள, கிங்ஸ் கல்லூரியின் பேராசிரியரான ப்ரெயன் கார்ட்னர் இவ்வாறு சொன்னார்: “ஹின்டன் ஒரு நையாண்டியான குறும்புக்காரனாக அறியப்பட்டிருந்தான். . . . அவனுடைய நோக்கம் சில கடிதங்கள் மூலமாக தெரிய வந்தது.” கார்ட்னர் முடிக்கும்போது: “அது அவனுடைய வேலைதான் என்று நான் 100 சதவீதம் நிச்சயமாயிருக்கிறேன்” என்றார். ஹின்டன் தனக்கு தகுதியுள்ளதென்று நினைத்த வெளிப்படையான அங்கீகாரத்தையோ அல்லது பணத்தையோ தராமல் விட்ட தன்னுடைய மேலதிகாரி ஆர்தர் ஸ்மித் வுட்வர்டை பழிவாங்க முயற்சித்தான் என்று ஆதாரங்கள் சுட்டிக் காட்டுகின்றன. வுட்வர்ட் வெற்றிகரமாக ஏமாற்றப்பட்டார்; அது போலி என்று வெளிப்படுவதற்கு ஐந்து ஆண்டுகள் முன்பு, அவர் இறக்கும் அத்தருணம் வரை பில்ட்டௌன் மனிதன் உண்மையானதுதான் என்பதில் உறுதியாய் இருந்தார். வுட்வர்ட் தான் அதை நம்பியதாக வெளிப்படையாக தெரிவித்தவுடனேயே ஹின்டன் ஏன் தனது மோசடியை ஒத்துக்கொள்ளவில்லை என்ற ஒரு கேள்வியே பதிலளிக்கப்படாமல் எஞ்சியுள்ளது. பில்ட்டௌன் மனிதன் விஞ்ஞான உலகம் முழுவதிலுமாக அதிக வேகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதன் காரணமாக, ஹின்டன் வேறு வழியின்றி தன்னுடைய பொய்யோடுதான் வாழ்ந்தாக வேண்டுமென்று உணர்ந்திருக்கலாம் என்பதாகத் தெரிகிறது.
இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த மனிதர்கள் பில்ட்டௌன் எலும்புக்கூட்டுக்கு ஆதரவளித்ததால், பொதுமக்களும்கூட ஏமாற்றப்பட்டனர். உலகமுழுவதிலுமுள்ள மியூசியங்கள் இந்த எலும்புக்கூட்டின் படங்களையும் அதன் பிரதிகளையும் அதிகளவில் விளம்பரப்படுத்தின சமயத்தில், புத்தகங்களும் நாளிதழ்களும் இந்தக் கண்டுபிடிப்பை பற்றிய செய்தியை விரைவாகப் பரப்பிவிட்டன. ஹின்டனுடைய நையாண்டித்தனமான குறும்பின் கெடுதியான விளைவுகள் கணக்கிடமுடியாதவையாய் உள்ளன. பைபிளின் குறிப்பு எவ்வளவு பொருத்தமாயுள்ளது: “கொள்ளிகளையும் அம்புகளையும் சாவுக்கேதுவானவைகளையும் எறிகிற பைத்தியக்காரன் எப்படியிருக்கிறானோ, அப்படியே, தனக்கடுத்தவனை வஞ்சித்து: நான் விளையாட்டுக்கல்லவோ செய்தேன் என்று சொல்லுகிற மனுஷனும் இருக்கிறான்.”—நீதிமொழிகள் 26:18, 19.
[பக்கம் 31-ன் படம்]
கறுப்பு பகுதிகள் மனித மண்டையோட்டின் துண்டுகள்
முழு வெண்மையான பகுதி கலவையால் ஒன்றிணைக்கப்பட்டு உருவாக்கப்பட்டதைக் குறிக்கிறது
கறுப்பு பகுதிகள் ஒரு ஒராங்குட்டன் மனிதக் குரங்கின் தாடை மற்றும் பற்களின் துண்டுகள்