உங்கள் நாயிடம்—சிறார்கள் பாதுகாப்பாய் இருக்கிறார்களா?
தென் ஆப்பிரிக்காவிலிருந்து விழித்தெழு! நிருபர்
இரண்டு வயதான சிட்னி, கட்டிப் போடப்பட்டிருந்த, வலியத்தாக்கும் தன்மையுடைய ராட்வீலர் வகை நாய்க்கு மிக அருகில் நடமாடிக்கொண்டிருந்தான். அந்த நாய் அவனைத் தாக்கி, சிட்னியின் மண்டையைக் காயப்படுத்தி, அவனுடைய இடது பக்கத்துக் காது அடையாளம் தெரியாமல் போகுமளவுக்குக் கடித்துக் குதறிவிட்டது. உடலின் வேறு பாகத்திலிருந்து தோலை எடுத்துப் பொருத்தும் அறுவை மருத்துவத்தைத் தொடர்ந்து செய்ய வேண்டியிருக்கும்.
பாதுகாப்புக்கென்று நாய்களைப் பலர் வளர்ப்பதால், சிறார்களை நாய்கள் தாக்குவதைப் பற்றிய அறிக்கைகள் அதிகரித்து வருகின்றன. சிறார்களை கடித்திருப்பதாய் அறியப்பட்டிருக்கும் நாய்களில் சில, ராட்வீலர்கள், டாபர்மேன் பின்ஷர்கள், புல்மாஸ்டிஃப்கள், அல்சேஷன்கள் (ஜெர்மன் ஷெப்பர்டுகள்), புல்டெரியர்கள் ஆகியவையாகும். கடிபட்ட சிறார்களைப் பரிசோதித்ததில், அவர்களில் பெரும்பாலானவர்கள், தங்களுக்குப் பழக்கப்பட்ட நாய்களாலேயே தாக்கப்பட்டிருந்ததாக தென் ஆப்பிரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு சுற்றாய்வு காட்டியது. கிட்டத்தட்ட பாதிப்பேர், அக்கம்பக்கத்து வீட்டு நாய்களாலும், காற்பங்கினர், தங்கள் சொந்த நாய்களாலும் கடிபட்டிருந்தனர். தெரு நாய்கள் தாக்கியிருப்பது வெறும் 10 சதவீதத்தினரை மட்டுமே. கடிபட்டவர்கள் பெரும்பாலும், தங்களை அறியாமலேயே, ஒருவேளை அந்த நாயை ஏதோவொரு விதத்தில் கோபமூட்டியிருந்திருந்தனர். தெளிவாகவே, நாயின் சொந்தக்காரர்களும் பெற்றோர்களும் அடிப்படையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தால் நாயின் தாக்குதல்கள் பலவற்றைத் தவிர்க்கலாம்.
பிள்ளையைப் பழக்குவியுங்கள்
பெரியவர்களின் மேற்பார்வை இல்லாமல் சிறு குழந்தைகளையும் நாய்களையும் ஒன்றாக தனியே விட்டுவிடக் கூடாது என்று நாயைப் பழக்குவிப்போர் பலர் வலியுறுத்துகின்றனர். விலங்குகளை எப்படி நடத்த வேண்டும் என்று சிறு பிள்ளைகளுக்குத் தெரிவதில்லை. அவர்கள் கற்பிக்கப்பட வேண்டும். இவ்வாறு, பொறுப்புள்ள பெரியவர் யாரும் இல்லாவிட்டால், நாய்களையும் சிறு பிள்ளைகளையும் தனித்தனி இடத்தில் வைக்க வேண்டும் என்ற நியதியைப் பலர் கடைப்பிடிக்கின்றனர். சைல்ட்ப்ரூஃபிங் யுவர் டாக் என்ற புத்தகத்தில், பயிற்சியாளர் பிரையன் கில்காமன்ஸ் குறிப்பிடுவதாவது: “நாங்கள் கேள்விப்பட்டிருக்கும் சம்பவங்களிலிருந்து, பெரியவர்கள் ஜாக்கிரதையாய் இராதபோதுதான் பெரும்பாலான பிரச்சினைகள் நிகழ்கின்றன.”
பெரும்பாலும், சிறார்களிடமிருந்து விலங்குகளுக்குப் பாதுகாப்பு தேவை! ஒரு குடும்பத்து நாய் ஒரு குழந்தையைக் கவ்வியபோது, உதவிக்காக கில்காமன்ஸ் அழைக்கப்பட்டார். குழப்பமடைந்த அந்த அப்பா, தன்னுடைய இரண்டரை வயது மகன், தூங்கிக்கொண்டிருந்த நாயிடம் ஓடிச்சென்று பலமாக ஓங்கி ஓர் உதை விட்டதை விளக்கிக் கூறினார். அந்த நாய்க்கு வலி உண்டாகவே, அந்த வலியை, அந்தக் குழந்தையைக் கவ்வினதன் மூலம் தீர்த்துக்கொள்ள முற்பட்டது என்பது தெளிவாய்த் தெரிகிறது. இந்தச் சூழ்நிலையில் அந்தக் குழந்தையைக் கடித்துவிடாமல், போற்றத்தக்க விதத்தில் அந்த நாய் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டது. இந்தப் பயிற்சியாளர் பெற்றோருக்குக் கூறும் ஆலோசனையாவது: “உங்கள் பிள்ளை, மற்றொரு பிள்ளைக்கு எதைச் செய்ய நீங்கள் அனுமதிக்க மாட்டீர்களோ, அதையே ஒரு நாய்க்கும் செய்ய அனுமதிக்காதீர்கள்.”
விலங்குகளிடம் தயவாய் நடந்துகொள்ள உங்கள் பிள்ளைக்குக் கற்பியுங்கள். ஒருபோதும் நாய்க்கு எரிச்சலுண்டாக்காமல் இருக்க அவனுக்குக் கற்பியுங்கள். சிறு பிள்ளைகளும் நாய்களும் ஒன்றாய் இருக்கும்போது வரப்போகிற எந்த ஆபத்தையும் அடையாளம் கண்டுகொள்ளும் அளவுக்கு பெற்றோர் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும். ஒரு பிள்ளையிடமிருந்து விலக, அல்லது ஒளிந்துகொள்ள அந்த நாய் முயலுவதை நீங்கள் கவனித்தால், அதை விரட்டிக்கொண்டு ஓடுவதிலிருந்து அந்தப் பிள்ளையைத் தடுத்துவிடுங்கள். அந்த நாய், தப்பிக்க வழியின்றி, பிள்ளை அதைப் பிடித்துக்கொள்ளுகையில், தன்னை தற்காத்துக்கொள்வதற்கான ஒரே வழி, குரைப்பது, உறுமுவது அல்லது கடித்துவிடுவதுதான். பெற்றோர் ஒரே விதமாகப் பயிற்சியளிக்க வேண்டும்; அப்போதுதான் அந்த நாயும் பிள்ளையும் பெற்றோர் தான் சொல்வது எதுவோ அதையே அர்த்தப்படுத்துகிறார் என்று புரிந்துகொள்வர்.
நாயை ஒதுக்கிவிடப்பட்டதாக நடத்தாதீர்கள். ஒரு நாயை வளர்த்துவரும் திருமணமான ஒரு தம்பதியர், தங்களுக்கு முதல் குழந்தை பிறந்தவுடன், அந்த நாயைப் புறக்கணித்துவிடவோ, அல்லது புழக்கடையில் விரட்டியடித்துவிடவோ நினைக்கலாம். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது அர்த்தமுள்ளதாய் இருக்கும் அதே சமயத்தில், பயிற்சியாளர் ரிச்சர்டு ஸ்டப்ஸ் ஆலோசனை கூறுவதாவது: “அந்த நாய் ஒதுக்கிவிடப்பட்டதாக நடத்தப்படக்கூடாது. மாறாக, அந்த நாய்க்கு வழக்கமாகச் செய்துவரும் பராமரிப்பை முடிந்த வரை தொடர்ந்து செய்துகொண்டு, அதற்கு நியாயமான கவனத்தையும் செலுத்த வேண்டும்.”
பழக்கமில்லாத நாய்களிடம் உங்கள் பிள்ளை எவ்வாறு நடந்துகொள்ளும் என்பதைப் பற்றி எண்ணிப்பாருங்கள். யாரோ ஒருவர் ஒரு நாயைத் தெருவில் உலாவக் கூட்டிக்கொண்டு சென்றுகொண்டிருப்பதை அவன் பார்க்கையில், என்ன செய்வான்? கட்டுப்படுத்த முடியாமல் ஓடோடிச் சென்று அந்த நாயைக் கொஞ்சுவானா? இவ்வாறு செய்யாதபடி அவனுக்குக் கற்பியுங்கள். நாயின் சொந்தக்காரருடைய அனுமதியை அவன் முதலில் பெற வேண்டும். பிறகு, அந்தச் சொந்தக்காரர் ஒத்துக்கொண்டால், அது மிரண்டுபோகாத வகையில், அந்த நாயிடம் மெல்லமெல்ல அருகில் செல்லலாம். சற்று தள்ளி நின்றுகொண்டு, அந்த நாயுடன் அமைதியாக பேசுவதன் மூலம் தன்னை அறிமுகம் செய்துகொள்ள வேண்டும். சிநேகப்பான்மையான நாய் உங்கள் பிள்ளையிடம் நெருங்கிவரும். எவருடைய கவனிப்புமின்றி இருக்கும் தெரு நாய்களைக் கண்டால் அவற்றினிடம் நெருங்காமல் இருப்பதே சிறந்தது.—பக்கம் 22-ல் உள்ள “நாய் பேசும் சரீர மொழி” என்ற பெட்டியைக் காண்க.
நாயைப் பயிற்றுவியுங்கள்
உங்கள் நாயை எப்பொழுதும் போற்றுங்கள்; நேர்மறையான வார்த்தைகளைப் பேசுங்கள். கற்றுக்கொள்வதை, தண்டனையோ அல்லது கொடூரமான வார்த்தைகளோ விரைவுபடுத்துவதில்லை; அதற்கு மாறாக எதிர்மறையான விளைவையே தரும். ஒரு நாயை, அழைக்கும்போது வருவதையும், “உட்காரு!” போன்ற அடிப்படை கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதையும் கற்றுக்கொள்ளும்படி செய்வது மிகவும் நல்லது. அந்த நாய் தன் எஜமானுக்குக் கீழ்ப்பட்டிருப்பதைக் கற்றுக்கொள்கிறது; இவ்வாறு செய்வது, கடினமான சூழ்நிலைகள் ஏற்படும்போது அந்த எஜமான், மேம்பட்ட விதத்தில் அதைக் கட்டுப்படுத்த முடியும். எளிய வார்த்தைகளும் சொற்றொடர்களும் மிகச் சிறந்தவை. அவற்றையே திரும்பத்திரும்பக் கூறுங்கள். உங்கள் நாய், நீங்கள் விரும்பிய செயலைச் செய்யும்போது, அதைப் போற்றுவது, தட்டிக்கொடுப்பது, அல்லது அதற்கு விருப்பமான தின்பண்டத்தைக் கொடுப்பது ஆகிய வெவ்வேறு விதங்களில் உடனடியாக அதை பாராட்டுங்கள். விரும்பும் அதே விளைவை மீண்டும் மீண்டும் பெறுவதற்கு, அந்தப் பாராட்டும் செயல், நாயின் செயலையடுத்து உடனே காட்டப்பட வேண்டும். அடுத்த முக்கியமான அம்சம், நாய் நன்றாக பழகிக்கொள்ளும் வரையில் அதைத் திரும்பத்திரும்பச் செய்யச் சொல்வது.
உங்களுக்கு ஒரு நாய் கிடைத்தால், அது குட்டியாக இருந்தாலோ, அல்லது பெரியதாக இருந்தாலோ, பிள்ளைகளுடன் பழக அதற்கு உதவி தேவை. சிறுவர்கள் பெரியவர்களைப் போல நடந்துகொள்வதில்லை. அவர்கள் கூச்சல்போடுபவர்களாகவும், துருதுருவென்று இருப்பவர்களாகவும், ஒரு நாயைக் கண்டதும் அதனிடம் ஓடோடிச்செல்ல முற்படுபவர்களாகவும் இருப்பதால், இந்நடவடிக்கைகள் அதை பயமுறுத்திவிடலாம். அப்படிப்பட்ட நிலையற்ற நடத்தையை உங்கள் செல்லப்பிராணி பழகிக்கொள்ளச் செய்வது நல்லது. சுற்றிமுற்றி பிள்ளைகள் இராவிட்டால், திடீர் சப்தத்துக்கு அந்த நாய் பழக்கமாகும்படி செய்யுங்கள். அந்தப் பயிற்சியை ஒரு விளையாட்டைப் போல் ஆக்குங்கள். அந்த நாயைப் பார்த்து, சத்தமாய் ஏதாவது ஒரு கட்டளை இடுங்கள், பிறகு அதனிடம் ஓடோடிச் செல்லுங்கள். பிறகு, உடனே உங்கள் நாயைத் தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்துங்கள். நீங்கள் போடும் சப்தத்தை படிப்படியாக அதிகரியுங்கள். ஒவ்வொரு முறையும் இறுதியில் உங்கள் செல்லப்பிராணியைக் கனிவுடன் கொஞ்சுங்கள். இந்த விளையாட்டை விரைவில் அது அனுபவிக்கும்.
சிறு பிள்ளைகள் நாய்களைக் கட்டிப்பிடித்து விளையாட ஆசைப்படுவர்; ஆனால், இவ்வாறு செய்யாமல் இருக்கும்படி அவர்களுக்குக் கற்பிக்க வேண்டும்; ஏனெனில் அவ்வாறு நெருங்கிய தொடர்புகொள்ளும்போது, தங்களை ஏதோ செய்ய வருவதாக எண்ணி சில நாய்கள் பயப்படும். அப்படியே உங்கள் நாயை சிறு பிள்ளைகள் கட்டிப்பிடித்து விளையாடினாலும், அதை ஏற்றுக்கொள்வதற்கான பயிற்சியை உங்கள் நாய்க்கு அளிக்கலாம். கொஞ்ச நேரத்துக்கு, உங்கள் நாயைக் கட்டிப்பிடித்து விளையாடிவிட்டு, அதற்குப் பிரியமான தின்பண்டத்தை அளித்து, அதைப் போற்றுங்கள். நீங்கள் கட்டிப்பிடித்து விளையாடும் நேரத்தைப் படிப்படியாக அதிகரியுங்கள். உங்கள் நாய் உறுமினாலோ, அல்லது கோபமாக குரைத்தாலோ, தகுதிவாய்ந்த ஒரு பயிற்சியாளரிடம் உதவியை நாடுங்கள்.
வலியத்தாக்கும் நாய்
சில நாய்கள் இயல்பாகவே வலியத் தாக்குபவையாய்த் தோன்றுகின்றன; அவை அதன் சொந்தக்காரர்களுக்கு ஓர் ஆபத்தாகவும் இருக்கலாம். ஆண் நாய்கள் வலியத்தாக்குதல் போன்ற இந்தப் பண்புகளை அதிகம் வெளிப்படுத்துகின்றன.
ஆதிக்கம் செலுத்த எண்ணும் நாய், குறிப்பாக முகம், கழுத்து போன்ற உணர்ச்சிமிக்க இடங்களில் தன்னைத் தொடவிடுவதில்லை. என்றாலும், மற்ற சந்தர்ப்பங்களில், அந்த நாய் உங்களிடம் நெருங்கி வரலாம், உங்களை மெதுவாகத் தள்ளிவிடலாம், அல்லது அதன் கால்களை உங்கள் மடியில் போடலாம், இவ்வாறு செய்வதன் மூலம், அது உங்கள் கவனத்தைக் “கேட்கிறது.” தனக்கே உரியதாகக் கருதும் இடத்தை அது காவல் காக்கலாம்; அதன் சொந்தக்காரர்களைக்கூட அந்த இடங்களுக்கு வரவிடுவதில்லை. பொம்மைகள் போன்ற பொருட்களைத் தான்தான் வைத்துக்கொள்ள வேண்டும் என்று பெரும்பாலும் காட்டலாம்; அவற்றுடன் மும்முரமாக விளையாடிக்கொண்டிருக்கையில் யாராவது அவற்றினிடம் நெருங்கி வந்தால் உறுமவோ, அல்லது அந்தப் பொம்மையைச் சவைப்பதை நிறுத்தவோ செய்யும்.
அவற்றின் தலைமைத்துவத்தை வலுப்படுத்துவதற்காக, அப்படிப்பட்ட நாய்கள் தங்களுக்குத் தெரிந்த கட்டளைகளை வேண்டுமென்றே அசட்டை செய்யும். சிறுவர்களை முந்திக்கொண்டு தள்ளிவிடலாம்; அல்லது வாசலின் வழியே முதலில் நுழைந்து செல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கலாம். ஆட்களின் பின்பக்கமாய், மேலே ஏறவும் அவை விரும்பலாம். இது, “ஓர் ஆதிக்கச் செயலே” என்றும், “செக்ஸ் சம்பந்தமானதல்ல” என்றும் பிரையன் கில்காமன்ஸ் கூறுகிறார். இது “அந்த நாய், தான்தான் அந்த வீட்டுக்கு எல்லாமாய் இருப்பதாக நினைப்பதற்கான ஓர் அடையாளமாய் இருக்கிறது. அடுத்தபடியாக ஏதோ செய்யப்போகிறது என்பதை நாம் எதிர்பார்க்கலாம்” என்று அவர் எச்சரிக்கிறார். அந்த நாய், கவனிப்பை வற்புறுத்திக் கேட்பதாய், தன் எஜமானருடைய கையை தன் வாயால் கவ்வும் பழக்கத்தையும் வளர்க்கலாம்.
வலியத்தாக்கும் இப்படிப்பட்ட அடையாளங்களைக் கண்டுகொள்ளாமல் விடக்கூடாது. வலியத்தாக்கும் தன்மை தானாகவே போய்விடாது; அது அதிகரிப்பதையே எதிர்பார்க்கலாம்; வீட்டிலுள்ள சிறுவர்களும் ஆபத்தில் இருக்கலாம். அப்படிப்பட்ட நாயை, அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அதைக் காயடிப்பதை (neuter) பயிற்சியாளர்கள் பலர் சிபாரிசு செய்கின்றனர்; ஏனெனில் வலியத்தாக்கும் தன்மையைக் குறைக்க இது பொதுவாக உதவுகிறது.
யார் தலைவர் என்பதைக் காட்ட, வலியத்தாக்கும் ஒரு நாயிடம் சவால் விடுவது நல்லதல்ல. வலியத்தாக்கும் சண்டை அல்லது கொடூரமான சிட்சை ஆகியவை உண்மையில் ஆபத்தானதே. அதைவிட சாதுரியமான வழிகளில், யார் அந்த வீட்டுத் தலைவர் என்பது அந்த நாய்க்குக் காட்டப்படலாம்.
வலியத்தாக்கும் ஒரு நாய் தன்மீது கவனத்தை ஈர்ப்பதற்காக ஒவ்வொரு தடவையும் வரும்போது, நீங்கள் கவனம் செலுத்தினால், தான்தான் தலைவன் என்ற, அந்த நாயின் நம்பிக்கையை நீங்கள் உறுதிப்படுத்துகிறீர்கள். ஆகவே, அப்படிப்பட்ட நாய் உங்கள் கவனத்தை வற்புறுத்திக் கேட்டால், அதைக் கண்டுகொள்ளாதீர்கள். இதைக் கையாளுவதில் முழு குடும்பமும் ஒத்துழைக்க வேண்டும். அந்த நாய் முதலில் குழம்பிய நிலையில் இருக்கலாம், உங்களைப் பார்த்து குரைத்து உங்களைப் பரிதாபமாய்ப் பார்க்கலாம், அதற்கெல்லாம் இணங்கிவிடாதீர்கள். அது பின்னடித்துச் சென்று, ஒருவேளை, அதற்கென்று உள்ள மூலையில் படுக்கச் செல்கிறதென்றால், அந்தச் சமயத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டும். இந்த வகையில் உங்கள் நாய், நீங்களே தலைவர் என்றும், எப்பொழுது கவனம் செலுத்த வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானிக்கிறீர்கள் என்றும் கற்றுக்கொள்கிறது.
வலியத்தாக்கும் டக்-ஆஃப்-வார், சண்டை போடுதல் போன்ற விளையாட்டுகள், அந்த நாயின் ஆதிக்க மனப்பான்மைகளை வளர்க்கக்கூடுமென்பதால் அவற்றைத் தவிர்க்க வேண்டும். மாறாக, வலியத்தாக்கும் தன்மையற்ற விளையாட்டுகளை விளையாட வேண்டும்.
படுக்கையறையில் நாயைப் படுக்க விடாமல் இருப்பது நல்லது. படுக்கையறை ஒரு சிலாக்கியம் படைத்த இடம்; அங்குத் தூங்க விடுவது, அந்த வீட்டிலுள்ள பிள்ளைகளைவிட அந்த நாய் மேலானது என்ற எண்ணத்தை அதிகரிக்கலாம். மாறாக, நாயின் படுக்கையை சமையலறையிலோ, அல்லது அதற்கென்றுள்ள கூண்டிலோ போடலாம். எஜமான்கள் வலியத்தாக்கும் ஒரு நாயிடம் முதலில் கடிபடுவது பெரும்பாலும் தங்கள் படுக்கையறையில்தான்.
நீங்கள் முயற்சி செய்யும்போதாவது, அல்லது அதற்குப் பயிற்சியளிக்கும்போதாவது, அல்லது வேறெந்தச் சமயத்திலாவது, உங்கள் நாய் அதற்கிசைய செயல்படாமல், நீங்கள் பயமுறுத்தப்பட்டதாக உணர்ந்தால், புகழ்பெற்ற நாய் பயிற்சியாளர் ஒருவரின் உதவியைப் பெறுங்கள். உங்கள் கால்நடை மருத்துவர், பயிற்சிக்கென்று எவரையாவது சிபாரிசு செய்யலாம். முதலில் அவரிடம், அந்த நாய்க்கு அவர் அளிக்கவிருக்கும் பயிற்சி முறைகளைப் பற்றிப் பேசுங்கள்; அவரை நீங்கள் ஏற்பாடு செய்வதற்கு முன்னதாகவே, அவருடைய திறமைகளைக் குறித்து நீங்கள் திருப்தியாய் இருப்பதை நிச்சயப்படுத்துங்கள். பயிற்சியாளர் ரிச்சர்டு ஸ்டப்ஸ் எச்சரிப்பதாவது: “வலியத்தாக்கும் ஒரு நாய், ஒரு தொழில்முறைப் பயிற்சியாளருக்குக் கீழ்ப்படியும் அதே சமயத்தில், அதன் எஜமானிடமும் அதே விதத்தில்தான் நடந்துகொள்ளும் என்பதை நிச்சயமாய்ச் சொல்லிவிட முடியாது.” இக்கட்டான சூழ்நிலைகளில் தன் நாயைக் கட்டுப்படுத்த முடியும் என்று அந்த நாயின் எஜமான் நிச்சயமாய் இருக்க வேண்டும்.
சில நாய்கள் மிகச் சிறந்த பயிற்சிக்குப் பின்பும்கூட வலியத்தாக்குபவையாகவே இருக்கும்; அவற்றை வைத்திருப்பது அந்தக் குடும்பத்துக்கு ஆபத்தே. உங்களால் முடிந்த மிகச் சிறந்ததைச் செய்தபிறகு, அந்த நாயால் ஆபத்து ஏற்படாமல் இருக்க அந்த நாயை ஒழித்துக்கட்டுவதே மேல் என்று நீங்கள் உணரலாம். ஆலோசனைக்காக ஒரு கால்நடை மருத்துவரையோ, அல்லது ஒரு பயிற்சியாளரையோ அணுகுவது ஞானமானது. உங்கள் நாயை வேறு யாருக்காவது கொடுத்துவிடலாம்; ஆனால், உங்கள் நாயிடம் நீங்கள் கொண்டிருந்த பிரச்சினையைப் பற்றி அதன் புதிய எஜமானிடம் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறீர்கள்.
பயிற்சியாளர் பீட்டர் நெவல் ஆலோசனை கூறுவதாவது: “மிகக் கவனமான வழிகாட்டியுடனும், யார் தொடர்ந்து ஆபத்தில் இருப்பார் என்பதையும் எந்தளவுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதையும் பற்றிய மதிப்பீட்டுடனுமே, ஆதிக்கம் செலுத்த நினைக்கும் நாய்கள் வளர்க்கப்பட வேண்டும். குடும்பத்தில் அதிக ஆபத்துக்குள்ளாகும் நபருக்குப் பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கப்படமுடியாதபோது, அந்த நாயை கவனமாக தெரிந்தெடுக்கப்பட்ட புதிய எஜமானிடம் கொடுப்பதோ, அல்லது அதைக் கொன்றுவிடுவதோ மேல்.”
நாய்களைச் செல்லப்பிராணிகளாக வைத்திருப்பதிலிருந்து சிறுபிள்ளைகள் உணர்ச்சிப்பூர்வமாக அதிகத்தைக் கற்றுக்கொண்டு பயனடையலாம். பொறுப்பான மேற்பார்வையை அளிப்பதன் மூலம், செல்லப்பிராணிகளைப் பற்றிய தங்கள் பிள்ளைகளின் நினைவுகள் அனைத்தும் இனியவையாய் இருக்கப்போவதை நிச்சயித்துக்கொள்வதில் பெற்றோர் உதவி செய்கின்றனர்.
[பக்கம் 22-ன் பெட்டி]
நாய் பேசும் சரீர மொழி
வலியத்தாக்கும் நாயின் குறிப்பிட்ட நடத்தை, சிநேகப்பான்மையற்ற தன்மைகளை வெளிப்படுத்துகிறது. நாயினுடைய இந்தச் சரீர மொழியைப் புரிந்துகொள்ள உங்கள் பிள்ளைக்குக் கற்பிப்பதன் மூலம், ஆபத்தான சூழ்நிலைகளைத் தவிர்க்க அவனுக்கு நீங்கள் உதவலாம்.
• வலியத்தாக்கும் நாய், தன்னைப் பெரிய தோற்றமுடையதாய்க் காட்ட முயலும். அதன் கழுத்தின் பின்புறமுள்ள மயிர் சிலிர்க்கலாம். அந்த நாய், தன் வாலை மேல்நோக்கி விறைப்பாய் வைத்துக்கொண்டு, உறுமவோ, குரைக்கவோ செய்யலாம். அந்த நாய் பரபரப்படைந்து, வேகவேகமாய் விறைப்பாக வாலை ஆட்டினால், அது சிநேகப்பான்மைக்கான அடையாளமில்லை. இந்த நாயைத் தொந்தரவு செய்யாமல் விட்டுவிட வேண்டும்.
• பயந்த நாய், தன் தலையையும் காதுகளையும் கீழே தொங்கவிட்டுக்கொண்டும், அதன் வாலைத் தளர்த்தியோ அல்லது அதன் கால்களுக்கு இடையில் வைத்தோ பதுங்கலாம். இந்த நாயிடம் நெருங்கிச் சென்றால், பயத்தின் காரணமாக அது வலியத்தாக்கும் தன்மையுள்ளதாய் ஆகலாம். அதைத் தொந்தரவு செய்யாமல் விட்டுவிட வேண்டும்.
• சாவகாசமாய் இருக்கும் நாய் தன் தலையை மிகவும் உயர்த்தியோ மிகவும் தாழ்த்தியோ வைத்திராமல், வாயைத் திறந்து வைத்துக்கொண்டு, வாலைக் கீழே தொங்கவிடாமல் அதன் பின்புற மட்டத்திற்கும் சற்று கீழாக வைத்துக்கொண்டு இருக்கும். வால் ஆட்டிக்கொண்டிருப்பது, சிநேகப்பான்மையாய் இருக்கிறது என்பதற்கான ஓர் அடையாளம். இந்த நாயுடன் சிநேகப்பான்மையாய் இருப்பது ஆபத்தல்ல.
(பிரையன் கில்காமன்ஸ், சேரா உவில்ஸன் ஆகியோரால் எழுதப்பட்ட சைல்ட்ப்ரூஃபிங் யுவர் டாக் என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.)
[பக்கம் 23-ன் பெட்டி]
நாயிடம் பாதுகாப்பாய் இருத்தல்
1. சிறு பிள்ளைகளையும் நாய்களையும் மேற்பார்வை செய்யுங்கள்.
2. ஒருபோதும் நாய்க்கு எரிச்சலுண்டாக்காமல் இருக்க உங்கள் பிள்ளைக்குக் கற்பியுங்கள்.
3. முன்பின் தெரியாத நாயைக் கொஞ்சுவதற்கு முன்பு அதன் எஜமானுடைய அனுமதியைக் கேளுங்கள்.
4. அடிப்படையான கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய உங்கள் நாயைப் பயிற்றுவியுங்கள்.
5. கட்டிப்பிடித்து விளையாடுவதற்குப் பழக்கமாகும்படி உங்கள் நாயைப் பயிற்றுவியுங்கள்.
6. வலியத்தாக்கும் தன்மையுள்ள விளையாட்டுகளைத் தவிருங்கள்.