உலகை கவனித்தல்
சர்ச் உறுப்பினர் குறைந்து வருதல்
ஐக்கிய மாகாணங்களில், கடந்த சுமார் 30 ஆண்டுகளாக, பாரம்பரிய புராட்டஸ்டன்ட் சர்ச்சுகளைச் சேர்ந்தவர்களாக வளர்க்கப்பட்டவர்களில் பாதிப்பேருக்கும் குறைவானோர் மட்டுமே தங்களுடைய சர்ச்சுப் பிரிவிலேயே வயதுவந்தவர்களாக நிலைத்திருப்பதாய் எண்ணப்படுகிறது. ஐக்கிய மாகாணங்களில் புராட்டஸ்டன்ட்டுகளாய் இருப்பவர்களில் 7.8 கோடி பேர் அதில் “அதிக ஈடுபாடு கொள்ளாதவர்களாய்” இருப்பதாகவே கணக்கிடப்பட்டுள்ளது. இது, அவர்கள் பாப்டிஸ்ட்டுகள், எப்பிஸ்கோப்பல்கள், மெத்தடிஸ்ட்டுகள், பிரிஸ்பிட்டேரியர்கள் போன்ற பிரிவினர்களாக, அல்லது வேறொரு புராட்டஸ்டன்ட் சர்ச்சின் உறுப்பினர்களாக இருப்பதாகத் தங்களை அடையாளப்படுத்திக்கொள்வதையும், ஆனால் உள்ளூர் சர்ச்சைச் சேராதவர்களாயும், அல்லது அதில் ஆஜராகாமல் இருப்பதையும் இது அர்த்தப்படுத்துகிறது.
எலும்பு வியாபாரிகள்
“அடிக்கடி போரால் பாதிக்கப்படும் காபூல் நகரில் வசித்துவரும் செய்வதறியாமல் திகைப்புற்ற மக்கள், கோழித் தீவனத்தில் பயன்படுத்துவதற்காக மனித எலும்புகளைத் தோண்டியெடுத்து விற்றுவருகின்றனர்” என்று ராய்ட்டர்ஸ் செய்திச் சேவை அறிக்கை செய்கிறது. விலங்குத் தீவனம், சோப்பு, சமையல் எண்ணெய் ஆகியவற்றைத் தயாரிப்பதற்கு, கால்ஸியம், பாஸ்பேட், கார்பனேட் சத்துக்களுள்ள எலும்பு பயன்படுத்தப்படுகிறது. சுமார் ஆறு கிலோ எடையுள்ள ஓர் எலும்புக்கூட்டிலிருந்து, ஏறக்குறைய 50 சென்ட்ஸ் பணம் கிடைக்கலாம்; அது, மிகவும் ஏழ்மையான அந்த நகரில், ஒப்பிடுகையில் மிக அதிக பணமாகும். “அது லாபம் தரும் வியாபாரம்” என்று 14 வயது ஃபேஸ்டீன் கூறுகிறான். “நான் பொதுவாக விலங்கின் எலும்புகளைச் சேகரித்தாலும், இங்கு எளிதில் கண்டுபிடிக்க முடிந்தது மனித எலும்புகளேயாகும்.” விசனகரமாக, ஆப்கானிஸ்தானத்தில் வருஷக்கணக்காக நடந்துவரும் உள்நாட்டுப்போர், தாதுச்சத்து நிறைந்த இந்த வியாபாரப் பொருளை எளிதில் கிடைக்கும்படி செய்திருக்கிறது.
நேரத்தோடு பலவற்றையும் காட்டும் கைக்கடிகாரங்கள்
ரியோ டி ஜனீரோவில், ஒரு பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் ஏமாற்றுவதற்கு டிஜிட்டல் கைக்கடிகாரங்களைப் பயன்படுத்தியதற்காக 77 மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை என்பதாக யூ குளோபூ என்ற செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. ஒரு தொலைபேசி பேஜரைப் போன்றே அந்தக் கைக்கடிகாரங்கள் வேலைசெய்தன. ஆனால், தொலைபேசி எண்களுக்குப் பதிலாக, தேர்வு வினாக்களுக்குரிய சரியான விடைகளை அவை அளித்தன. ஒவ்வொரு மாணவனும் அந்தக் கைக்கடிகாரங்களுக்காக 14,000 டாலர் வரை பணத்தைச் செலவிட்டான் என்பதாக அந்தச் செய்தித்தாள் கூறுகிறது. அக்கறைக்குரிய விதமாக, 1987 முதற்கொண்டே, இங்கிலாந்து, வேல்ஸ் ஆகிய தேசங்களைச் சேர்ந்த பள்ளித் தேர்வுக் கழகங்கள், கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட கைக்கடிகாரங்களைப் பயன்படுத்தும் எத்தர்களுக்கு கவனமாய் இருக்கும்படி ஆசிரியர்களை எச்சரித்தன.
திரிவுற்ற பார்வை
கண்ணாடி ஒன்றில் உற்றுப்பார்க்கும் பெரும்பாலானோர், பிரதிபலிக்கப்பட்ட பிம்பத்தைத் தங்களுடையதென்றே ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால், உடல் வடிவ சீர்குலைவு (body dysmorphic disorder) என்ற நிலையால் அவதியுறுபவர்கள், கண்ணாடியையே உற்றுப்பார்க்கையில், தங்களுடைய திரிவுற்ற பிம்பம் ஒன்றையே பார்க்கின்றனர். “அது, மக்கள் சரீரத்தின் ஒரு உறுப்பைப் பற்றியே அதிக கவனமாய்ச் சிந்தித்து, சாதாரணமாகவே இருக்கும் அந்தப் பிம்பத்தை, மிதமிஞ்சி வெறுப்பூட்டுவதாக இருப்பதாய்க் கற்பனை செய்துகொள்ளும் ஒரு நிலையாகும்” என்று கனடாவிலுள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவின் பத்திரிகையான த ப்ராவின்ஸ் குறிப்பிடுகிறது. கற்பனை செய்துகொள்ளப்பட்ட குறைபாடுகளைப் பற்றிய வேதனை, அந்தளவுக்கு அதிகமாய் இருக்கக்கூடும் என்பதால், இந்தச் சீர்குலைவால் அவதியுறும் சுமார் 25 சதவீதத்தினர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றனர் என்பதாக நியூ யார்க்கைச் சேர்ந்த மனநோய் நிபுணரான எரிக் ஹாலண்டர் கூறுகிறார்.
ஈ-மெய்ல் பிரார்த்தனைகள்
புலம்பலுடன் கூடிய பிரார்த்தனை செய்வதற்காக, யூத பக்தர்கள் வெகுகாலமாக எருசலேமிலிருக்கும் புலம்பல் சுவருக்கு (Wailing Wall) கூடிவந்திருக்கின்றனர். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், வழிபடுவோர், ஒரு சிறிய காகிதத்துண்டில் பிரார்த்தனைகளை எழுதிவைத்து, அதை அந்தச் சுவரின் இடுக்குகளில் செருகிவிடுவர். என்றாலும், இப்போது, உலகமுழுவதிலுமுள்ள யூதர்கள், இன்டர்நெட்டின் மூலமாக ஈ-மெய்ல் பிரார்த்தனைகளை அனுப்ப முடியும். கம்ப்யூட்டர்உவர்ல்ட் பத்திரிகையின்படி, வெர்ச்சுயல் ஜெருசலேம் வெப்-ஸைட் பணியாளர்கள், அப்படிப்பட்ட பிரார்த்தனைகளையெல்லாம் சேகரித்து, அவற்றை அச்சுப்பிரதியெடுத்து, அவற்றை புலம்பல் சுவருக்கு எடுத்துச்செல்கின்றனர்; அங்கே, “யூத பாரம்பரியத்தின்படி, கடவுள் அவற்றைக் கண்டெடுப்பார்.”
வருவாய் வித்தியாசம் விரிவடைகிறது
ஐக்கியநாட்டுச் சங்கத்தின் சமீபத்திய சமூக அபிவிருத்தி அறிக்கையொன்றின்படி, உலக வருவாயில் 83 சதவீதம், பணக்காரராய் இருக்கும் ஜனத்தொகையின் 20 சதவீதத்தினருக்குப் போய்ச்சேருகிறது. வேறு வார்த்தைகளில் சொன்னால், உலகின் 358 கோடீஸ்வரர்களின் பணத்தையெல்லாம் ஒன்றுசேர்த்துப் பார்த்தால், அது, மிகவும் ஏழைகளாய் இருக்கும் 240,00,00,000 மக்களின் வருமானத்துக்கு ஈடாகும். 1960-ல், தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் தொழிற்சாலைகள் மிகுந்த நாடுகளில் வாழும் மக்களின் சராசரி ஆண்டு வருமானம், வளர்ந்துவரும் நாடுகளில் உள்ள மக்களின் வருமானத்தைக் காட்டிலும், 5,700 டாலர் அதிகமாய் இருந்தது. என்றபோதிலும், 1993-ல், தொழில் முன்னேற்றமடைந்த நாடுகளில் வாழும் மக்களுக்கும், வளர்ந்துவரும் நாடுகளில் வாழும் மக்களுக்கும் இடையில், ஆண்டுக்கு சராசரி தனிவருமான வித்தியாசம், 15,400 டாலராக அதிகரித்திருந்தது.
முக்கியத்துவம் வாய்ந்த அறுவடை
“சீனாவின் கோதுமை வயல்களில், அந்நாட்டு வரலாற்றிலேயே முதல் முறையாக, இயந்திரங்கள் மனிதனை விஞ்சியிருக்கின்றன” என்று ராய்ட்டர்ஸ் செய்திச் சேவை அறிக்கை செய்தது. 8,00,000-க்கும் மேற்பட்ட அறுவடை இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன என்பதாக அது கூறியது. சீனாவில், பொ.ச.மு. 1300-க்கு முன்பு முதன்முதலாக கோதுமை அறிமுகப்படுத்தப்பட்டது; அப்போதிலிருந்து சிறிய குடும்பப் பண்ணைகளில் வெற்றிகரமாக—பெரும்பாலும் கையாலேயே—பயிர்செய்யப்பட்டிருக்கிறது. சீனாவின் ஜனத்தொகை, உலக ஜனத்தொகையில் 20 சதவீதத்துக்கு மேற்பட்டு இருப்பதாலும், ஆனால் வெறும் 7 சதவீத விளைநிலத்தையே உடையதாய் இருப்பதாலும், “இந் நாட்டு வயல்களில் இயந்திரமயமாக்குதலை அதிகரிக்க வேளாண்மை அதிகாரிகள் அதிக ஆவலுள்ளவர்களாய் இருக்கின்றனர்” என்று அந்த அறிக்கை கூறுகிறது.
குருமார் இன்சூரன்ஸில் சிரமங்கள்
தனிநபருக்கு ஏற்படும் தீங்குக்கு நஷ்ட ஈடாகக் கொடுக்கப்படும் தொகைகளுக்கு எதிராக தங்களைக் காத்துக்கொள்ள, பொதுக் கடன்பொறுப்பு இன்சூரன்ஸ் ஏற்பாட்டைப் பெரும்பாலான சர்ச்சுகள் கொண்டிருக்கின்றன. என்றாலும், ஐக்கிய மாகாணங்களிலிருக்கும் சில இன்சூரன்ஸ் கம்பெனிகள், குருமாரின், ‘பாலியல் தீய நடத்தைக்கான’ அப்படிப்பட்ட இன்சூரன்ஸ் பாலிஸியிலிருந்து தங்களை விலக்கிக்கொள்ள ஆரம்பித்திருக்கின்றன என்பதாக நேஷனல் அன்டர்ரைட்டர் அறிக்கை செய்கிறது. சர்ச்சின் பரஸ்பர இன்சூரன்ஸ் கம்பெனியின் பொது வழக்குரைஞரான ஜான் கிலீரி தெரிவித்ததாவது: “கடன் பொறுப்புப் பாலிஸிகள் பல . . . , பாலியல் தீய நடத்தையை உட்படுத்துவதில்லை; ஏனெனில் அது வேண்டுமென்றே செய்யப்படுவதால், உண்மையிலேயே ஒரு குற்றம்.” மேலும், இன்சூரன்ஸ் பாலிஸியில் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றங்கள், “மனிதனின் பேரழிவுகளால் ஏற்படும் மோசமான பொருளாதார நஷ்டம், ஒருவேளை இயற்கைப் பேரழிவுகளின் பாதிப்புகளைக் காட்டிலும் மோசமாய் இருக்கும்” என்று குறித்துக் காட்டுவதாக, பல்வேறு மதத் தொகுதிகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு வழக்குரைஞரான இளையவர் டோனால்ட் கிளார்க் கூறினார். 1984-லிருந்து, ஐக்கிய மாகாணங்களிலுள்ள பிரசித்திபெற்ற சர்ச் ஈட்டுறுதி அமைப்புகளில் ஒன்றான சர்ச் மியூச்சுவலில், பாலியல் தீய நடத்தை நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் 1,500 முதல் 2,000 வரையில் இருந்திருப்பதாக திரு. கிலீரி தெரிவித்தார்.
முன்னணியில் சிங்கப்பூர் மாணவர்கள்
உலகமுழுவதிலுமுள்ள கல்வித்தரத்தை ஒப்பிட, 90 நிமிட தேர்வு ஒன்றை வெவ்வேறான 41 நாடுகளைச் சேர்ந்த ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர். தேர்வு முடிவுகள் எதைத் தெரிவித்தன? கணிதத்திலும் அறிவியலிலும் மிகச் சிறந்து விளங்கும் மாணவர்களை சிங்கப்பூர் உருவாக்குவதாக, தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் குறிப்பிட்டுக் காட்டுகின்றன. சிங்கப்பூரை அடுத்து, கணிதத்தில் சிறந்து விளங்கும் முதல் பத்து நாடுகளில் வரிசையிலுள்ளவை, தென் கொரியா, ஜப்பான், ஹாங் காங், பெல்ஜியம், செக் குடியரசு, ஸ்லோவேக் குடியரசு, ஸ்விட்ஸர்லாந்து, நெதர்லாந்து, ஸ்லோவேனியா. அறிவியலில் மிகச் சிறந்த மதிப்பெண்கள் சிங்கப்பூர், செக் குடியரசு, ஜப்பான், தென் கொரியா, பல்கேரியா, நெதர்லாந்து, ஸ்லோவேனியா, ஆஸ்திரியா, ஹங்கேரி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்குக் கிடைத்துள்ளன. சுமார் 34,00,000 பேரை மட்டுமே கொண்ட ஒரு தேசம் உலகின் மற்ற தேசங்களனைத்தையும் விட முன்னணியில் இருப்பது எப்படி? ஒருவேளை கடின உழைப்பினால் அப்படி இருக்கலாம். வீட்டுப்பாடம் செய்வதில் சர்வதேச சராசரி மணிநேரம், 2 முதல் 3-ஆக இருக்கையில், சிங்கப்பூர் மாணவர்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 4.6 மணிநேரத்தை அதற்காக செலவிடுகின்றனர் என்பதாக ஏசியாவீக் பத்திரிகை அறிக்கை செய்கிறது.
வானிலிருந்து பணமா?
ஃப்ளாரிடாவைச் சேர்ந்த மியாமி நகருக்கு அருகிலுள்ள ஏழ்மையான இடமான ஓவர்டௌனில் வசிப்பவர்கள், வானிலிருந்து விழுந்ததைப்போல் தோன்றிய பணத்தைக் கண்டதும் அவர்களுக்கு ஒரே குஷியாகிவிட்டது. என்றபோதிலும், அவை வானிலிருந்து வந்த மன்னாவைப் போன்றதாய் இருக்கவில்லை. ஆனால், ஆயுதந்தாங்கிய டிரக் ஒன்று, அந்தப் பகுதியைவிட மேடான பகுதியில் இருந்த சாலையைக் கடந்தபோது, விபத்துக்குள்ளாகி, அதிலிருந்த 37 லட்சம் டாலர் ரொக்கப் பணத்தின் ஒரு பகுதியே கீழேயிருந்த வீதிகளில் வந்து விழுந்தது. 100 பேராவது அந்தப் பணத்தைப் பொறுக்க ஓடோடி வந்தனர் என்பதாகக் காவல் துறையினர் மதிப்பிடுகின்றனர்; ஆனால், அவர்களைவிட அதிகம் பேர் பொறுக்கியிருந்ததைப் போல் தோன்றுகிறது. “மியாமி காவல் துறை, திருட்டுக் குற்றம் சாட்டப்படாமலே, அந்தப் பணத்தைத் திருப்பிக்கொடுத்துவிடும்படி அதை வைத்திருப்பவர்களுக்கு 48 மணிநேர அவகாசம் கொடுத்தது” என்று த நியூ யார்க் டைம்ஸ் கூறுகிறது. ஆனால், பொதுமன்னிப்பு வழங்கும் கெடு முடிவடைவதற்குள்ளாக, மூன்று பேர் மட்டுமே தங்கள் கைவசமிருந்த எல்லா பணத்தையும் திருப்பிக்கொடுத்தனர். இன்னும் 5,00,000 டாலர் பணம் குறைவுபடுகிறது. “அட, அது மக்களின் வீட்டைத் தேடி வந்ததே, அதற்காக அவர்கள் என்ன செய்ய முடியும்?” என்று 18 வயது இளைஞன் ஒருவன் சொன்னதாக அறிக்கை செய்யப்படுகிறது.
அறுவை சிகிச்சையின்போது நோயாளிகள் அனலாக வைக்கப்படுதல்
ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை நடைபெறும் அறைகள், காற்றால் பரவும் பாக்டீரியாவின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகக் குளிர்ச்சியாக வைக்கப்பட்டிருப்பது, நோய் தொற்றும் அபாயத்தை மூன்று மடங்கு அதிகரிப்பதாய், கலிபோர்னியா பல்கலைக்கழக உணர்வகற்றலியலரான (anesthesiologist) டேனியல் செஸ்லரால் நடத்தப்பட்ட புதிய ஆய்வு ஒன்று உறுதியுடன் கூறுகிறது. “உண்மையில் காயத்தில் நோய் தொற்றச்செய்வது, காற்றில் மிதந்துவரும் பாக்டீரியா அல்ல; ஆனால், நோயாளியின் தோலிலும், உடலின் உட்புறத்திலும் பாக்டீரியாவை எதிர்க்கும் சக்தி குறைவுபடுவதே” என்று டாக்டர் செஸ்லர் கூறுகிறார். குளிர்ச்சியாக வைக்கப்பட்டிருக்கும் அறுவை சிகிச்சை அறைகள், ஒரு நோயாளியின் உடல் வெப்பநிலையை இரண்டரை டிகிரி செல்ஸியஸ் வரையிலாவது குறைக்கலாம். குறைந்த உடல் வெப்பநிலை, நோய்தொற்றை எதிர்ப்பதற்கு அத்தியாவசியமாயிருக்கும், ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும் இரத்த ஓட்டத்தைக் குறைக்கிறது. “நோய்த்தடுப்பாற்றலுக்குப் பொறுப்பான செல்களும் என்ஸைம்களும், உடல் குளிர்ச்சியாய் இருக்கும்போது சரியாய் வேலை செய்வதில்லை” என்று செஸ்லர் கூறுகிறார். அறுவை சிகிச்சையின்போது, உடல் அனலான நிலையில் வைக்கப்பட்ட நோயாளிகள், குறைந்த நோய்த்தொற்று வீதத்தை உடையவர்களாய் இருந்ததுடன், அவ்வாறு அனலாக வைக்கப்படாத நோயாளிகளைக் காட்டிலும் கிட்டத்தட்ட மூன்று நாட்கள் குறைவாகவே ஆஸ்பத்திரியில் தங்கியிருந்தனர் என்பதாக செஸ்லரும் அவருடைய கூட்டாளிகளும் கண்டறிந்தனர்.
பொதுமக்கள் நலனுக்காக அல்ல
ஜப்பானில், அரசு அதிகாரிகள் தங்களுடைய நலனுக்காகவே உழைத்துவருவதாக, வாக்களித்தவர்களில் 49 சதவீதத்தினர் கூறினர் என்பதாக மைனிச்சி டெய்லி நியூஸ் அறிக்கை செய்கிறது. பதில் சொன்னவர்களில் 7 சதவீதத்தினர் மட்டுமே, மேலதிகாரிகள் “பொது மக்கள் நலன்” கருதி உழைப்பதாக எண்ணினர்; அவர்கள் நாட்டுக்கென உழைப்பதாக 3 சதவீதத்தினர் மட்டுமே கூறினர். தங்கள் மேலதிகாரிகள் கடினமாகவோ, உள்ளப்பூர்வமாகவோ உழைப்பவர்களாக ஜப்பானியர்களில் வெகு குறைவானோரே கூறினர். ஜப்பானின் உயர் மட்ட அரசு ஊழியர்கள் சிலரை உட்படுத்திய எண்ணற்ற ஊழல்கள் அம்பலமான ஓராண்டுக்குப் பின்பு, கடந்த டிசம்பரில் அந்தச் சுற்றாய்வு நடத்தப்பட்டது.