உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g97 6/8 பக். 28-29
  • உலகை கவனித்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலகை கவனித்தல்
  • விழித்தெழு!—1997
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • நகரத்தை விட்டு பண்ணைக்குச் செல்கின்றனர்
  • பால் உறுப்பை மாற்றிய ஊழியரை சர்ச் அங்கீகரிக்கிறது
  • மனிதரைப்போலவே கோலாவின் கைரேகைகள்
  • விவாகரத்து கற்றுக்கொள்ளப்படுகிறதா?
  • 500 வருடங்களுக்குப்பின் மன்னிப்பு
  • போலி மருந்துகள் உஷார்
  • மேலும் மேலும் பாதிரிமார் தொல்லைகள்
  • ஒரே பூண்டுமயம்
  • பெண்ணுக்கு குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை அதிகரிக்கிறது
  • மீன்பிடி சண்டைகள்
  • ‘வெள்ளைப் பூண்டுகளை எவ்வளவாய் நினைத்துப் பார்க்கிறோம்!’
    விழித்தெழு!—2005
  • பஞ்சத்தின் கொடுமையிலிருந்து பசுமைக்கு
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
  • அரவணைக்கத் தோன்றும் கோஆலாவினால் கவர்ந்திழுக்கப்பட்டு
    விழித்தெழு!—1992
  • உலகத்தைக் கவனித்தல்
    விழித்தெழு!—1991
மேலும் பார்க்க
விழித்தெழு!—1997
g97 6/8 பக். 28-29

உலகை கவனித்தல்

நகரத்தை விட்டு பண்ணைக்குச் செல்கின்றனர்

நகர வாழ்க்கையின் அழுத்தத்தாலும் தாளமுடியாத வேலைபளுவாலும் சோர்வடைந்தவர்களாய் ஒரு சிறிய ஆனால் எண்ணிக்கையில் அதிகரித்துவரும் ஜப்பானியர்கள் நகரத்தை விட்டு பண்ணைக்குச் செல்கின்றனர். இயற்கை சூழல்களில், எளிமையான வாழ்க்கை பாணியை கிராம வாழ்க்கை அள்ளித்தருகிறது என்பது உண்மைதான். ஆனால் அது சும்மா கிடைத்துவிடாது; அதற்காக நகரின் நடை உடை பாவனையை விட்டுக்கொடுத்து, பதிலுக்கு கிராமத்தின் நடை உடை பாவனைக்கு மாறவேண்டும். “புதிய விவசாயிகள் பலர் தங்களுடைய நிலையான சம்பளத்தையும், நகர வாழ்க்கையின் வசதிகளையும், ஒருவேளை பிரபலமான கம்பெனியில் பணிபுரியும் அந்தஸ்துகளையும்கூட விட்டுக்கொடுத்துவிட்டார்கள். [மேலும்], கிராம வாழ்க்கைக்கு மாறியவர்கள் தங்கள் செலவுகளை குறைக்க வேண்டியுள்ளது என ஒத்துக்கொள்கிறார்கள். சிலசமயங்களில், விவசாயத்திலிருந்து கிடைக்கும் வருமானத்தோடு, சில சின்ன சின்ன கூலிவேலைகள் செய்து வருமானம் ஈட்டவேண்டிய கட்டாயத்திற்குள் அவர்கள் இருக்கிறார்கள்” என்று ஏஷியாவீக் சொல்கிறது. ஆனால், கிராம வாழ்க்கைக்கு மாறியே தீரவேண்டும் என்று உறுதியோடு இருக்கும் நகரவாழ் மக்களுக்கு அதில் வெற்றியடைய உதவும் வகையில் வேளாண்மைத்துறை அமைச்சகம் ஒரு ஆரம்ப பண்ணை பள்ளிக்கூடத்தை நிறுவியுள்ளது.

பால் உறுப்பை மாற்றிய ஊழியரை சர்ச் அங்கீகரிக்கிறது

ஐக்கிய மாகாணங்களில், பிரஸ்பட்டரியன் (Presbyterian) ஊழியர் ஒருவர், பால் உறுப்பு மாற்றம் அறுவை சிகிச்சை செய்தபிறகு, தான் தொடர்ந்து ஊழியராக சேவிக்க அனுமதி பெற்றுக்கொண்டார். இந்த அதிகாரப்பூர்வமான அனுமதி, 49 வயதிருக்கும், எரிக் ஸுவென்சன் என்பவர் தன் பால் உறுப்பை அகற்றும் அறுவை சிகிச்சை செய்துகொண்ட பிறகு, பெருநகர் அட்லாண்டாவிலுள்ள (ஜார்ஜியா) பிரஸ்பட்டரியன் ஆட்சி குழுவிடம் தன்னுடைய பெயரை எரின் என்று மாற்றும்படி கேட்டுக்கொண்டபோது, அவருக்கு கொடுக்கப்பட்டது. “ ‘பிரஸ்பட்டரியன் ஆட்சி குழு ரொம்பவும் இக்கட்டில் மாட்டிக்கொண்டது;’ அப்படி இருந்தும் அது தீர்மானம் எடுத்தது; ‘பதவியைப் பறிக்கும் அளவுக்கு இறையியல் ரீதியிலோ ஒழுக்க ரீதியிலோ அடிப்படைக் காரணம் ஒன்றும் இல்லாமல் போனது’ என்று பிரஸ்பட்டரியன் ஆட்சி குழுவின் ஓர் அங்கத்தினரும், நீதி மற்றும் பெண்கள் விவகாரங்களைப் பார்த்துக்கொள்கிறவருமான ஆன் சாயர் என்பவர் சொல்கிறார்” என்பதாக த கிறிஸ்டியன் சென்சுரி அறிக்கை செய்கிறது. ஆனால், ஸுவென்சன் கோரிய விண்ணப்பத்திற்கு எதிராக ஓட்டுப்போட்ட டான் வேடு என்ற ஊழியர் இவ்வாறு கூறினார், “இறையியல் விஷயங்களைப் பற்றி மும்முரமாக ஒன்றும் விவாதிக்கவில்லை.”

மனிதரைப்போலவே கோலாவின் கைரேகைகள்

கோலா கரடியின் கைரேகைகளும் கால்விரல்ரேகைகளும் ஆச்சரியம் தரும்விதத்தில், மனிதனுடைய ரேகைகளைப்போலவே இருக்கின்றன என்கிறார் ஒரு ஆஸ்திரேலிய விஞ்ஞானி. ஆஸ்திரேலியாவிலுள்ள அடிலெய்ட் பல்கலைக்கழகத்தில் உயிரியலாளராகவும், தடய அறிவியல் நிபுணராகவும் இருக்கும் பேராசிரியர் மாச்சா ஹென்னபர்க் கூறுகிறார்: “எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப்பில் ஸ்கேன் செய்து பார்த்தால்கூட வித்தியாசம் தெரிவதில்லை.” இது வெறுமனே கோலா கரடியின் பாதங்கள் அமைப்பில் பொதுவாகவே காணப்படும் ஒற்றுமை அல்ல, ஆனால் அதனுடைய டெர்மட்டோகிளிஃபிக்ஸில் காணப்படும் ஒற்றுமையாகும். அதாவது அதனுடைய உள்ளங்கை உள்ளங்கால்களில் மெத்தென்று இருக்கும் பகுதியில் காணப்படும் குமிழ்ந்த பகுதிகளின் வடிவம், தோல் மடிப்புகள், சுருள்கள் ஆகியவை ஒரேமாதிரி காணப்படுகின்றன. மேலும் இதிலுள்ள விசேஷம் என்னவென்றால், மனிதர்களைப்போலவே, ஒரு கோலா கரடியின் கை கால் ரேகைகளைப்போல் இன்னோரு கோலா கரடிக்கு இருப்பதில்லை.

விவாகரத்து கற்றுக்கொள்ளப்படுகிறதா?

“சேர்ந்து குடும்பம் நடத்தும் பெற்றோர்களை உடைய தம்பதியரைவிட விவாகரத்து செய்த பெற்றோர்களை உடைய தம்பதியரின் மணவாழ்க்கை முறிந்துபோகும் அபாயம் அதிகம்” என்று அறிக்கை செய்கிறது ஆஸ்திரேலியாவின் த சிட்னி மார்னிங் ஹெரால்டு. அந்தச் செய்திதாள் கூறியபடி, அமெரிக்க நாடுகளிலுள்ள, நெபராஸ்கா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பால் அமாடோ என்பவர், “கல்யாணமான சுமார் 2,000 அமெரிக்கர்களை 12 வருடங்களாக தொடர்ந்து கவனித்து வந்தார்; விவாகரத்தான பெற்றோரின் பிள்ளைகள், ‘வளர்த்துக்கொள்ளும்’ உறவை-மேம்படுத்தும் திறமைகளும் நடத்தைகளும் ஒன்றுக்கும் உதவாதவையாக இருந்ததையும், அவை அவர்களுடைய மணவாழ்க்கையை முறிக்கும் சந்தர்ப்பங்களை மேலும் அதிகரித்ததையும்” அவர் கண்டார். த ஹெரால்டு குறிப்பிட்டதாவது: “தம்பதியர் இருவருக்கும் விவாகரத்தான பெற்றோர்கள் இருந்தால், இவர்களுடைய திருமணமும் முறிந்துபோகும் ஆபத்து, ஒன்றாக சேர்ந்து குடும்பம் நடத்திக்கொண்டிருக்கும் பெற்றோர்களை உடைய தம்பதியரைவிட 300 சதவிகிதம் அதிகம்.”

500 வருடங்களுக்குப்பின் மன்னிப்பு

1496-ல் போர்த்துகல் அரசன் முதலாம் மானுவெல் தன் தேசத்திலுள்ள யூதர்களுக்கு ஓர் ஆணையைப் பிறப்பித்தார்: ரோமன் கத்தோலிக்க மதத்திற்கு மாறிவிடுங்கள் அல்லது தேசத்தைவிட்டு வெளியேறுங்கள். சுமார் 500 வருடங்களுக்குப்பின், 1988-ல் அரசாங்க மன்னிப்பை போர்த்துகல் கோரியது. சமீபத்தில், நடந்த நினைவுநாள் கொண்டாட்டத்தின்போது, இதற்கான பரிகாரத்தை போர்த்துகல் தேடிக்கொண்டது. அசோஸியேட்டட் பிரஸ் அறிக்கையின் பிரகாரம், போர்த்துகல் பிரெஸிடென்ட் ஜார்ஜ் சாம்பையூ பார்லிமென்டில் உரையாற்றியபோது இவ்வாறு கூறினார், நாட்டிலிருந்து வெளியேற்றியசெயல் ஒரு “கேடுகெட்ட, பயங்கரமான விளைவையுடைய காட்டுமிராண்டித்தனமான செயல்.” நீதித்துறையின் மந்திரி ஜோசே ஈத்வெர்டூ விர ஜார்டிங் என்பவர் நாட்டிலிருந்து வெளியேற்றிய செயலை, “நம் வரலாற்றின் கெட்ட காலம் மாசுபடிந்த பகுதி” என்று விவரித்தார். பல நூற்றாண்டுகளாக யூதர்களை “மிருகத்தனமாக கொடுமைப்படுத்தியதற்காக அவர்களுடைய உணர்ச்சிகளை மதிக்கும் வகையில்” அரசாங்கம் “மன்னிப்பு கோரவேண்டும்” என்று அவர் மேலும் கூறினார். இப்போது போர்த்துகல் மக்கள்தொகை சுமார் ஒருகோடி, அதில் யூதர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் சுமார் 1,000 பேர் மாத்திரமே உள்ளனர்.

போலி மருந்துகள் உஷார்

போலி மருந்துகள் வியாபாரம் நாளுக்கு நாள் பெருகி வருகிறது; அதன் விற்பனை ஆண்டொன்றுக்கு சுமார் 1,600 கோடி டாலரை எட்டுகிறது. லெ மோன்டு என்ற பாரீஸ் செய்தித்தாள் சொன்னபிரகாரம்: “ஒவ்வொரு வருடமும் உலகெங்கிலும் விற்கப்படும் மருந்துகளில் குறைந்தது 7 சதவிகிதம் போலியாக உள்ளது என்பதை உலக சுகாதார அமைப்பு (WHO) கணக்கிட்டது.” பிரேஸிலில் அதிகபட்சம் 30 சதவிகிதமாகவும், ஆப்பிரிக்காவில் 60 சதவிகிதமாகவும் இது இருக்கலாம். இந்தப் போலி மருந்துகள் உண்மையான மருந்திலிருந்து தரம் குறைந்து இருக்கின்றன. அவை முற்றிலும் உதவாதவையாக அல்லது நச்சுப்பொருட்கள் அடங்கியவையாகவும் இருக்கின்றன. லெ மோன்டு ஓர் உதாரணத்தை கொடுத்தது; அதன்படி நைஜரில், மூளை உறையில் ஏற்படும் வீக்க நோய்க்காக ஆயிரக்கணக்கானோருக்கு தடுப்பு மருந்து போடப்பட்டது; அம்மருந்து வெறும் தண்ணீரே என்ற உண்மை பிறகு தெரியவந்தது. நைஜிரியாவில் பிள்ளைகளுக்கு சிரப் (syrup) கொடுக்கப்பட்டது. அதில் உரைதல் தடுப்பு கலவை (antifreeze) கலந்திருந்ததால் 109 பிள்ளைகள் இறந்துபோனார்கள். “குறைந்த விலையில் கிடைப்பதால் மருத்துவமனைகளும் அடிக்கடி கள்ளச்சந்தையிலிருந்தே மருந்துகளை வாங்குகின்றன” என்பதாக அந்தச் செய்தித்தாள் குறிப்பிட்டது. பல நாடுகளிலுள்ள உடல்நல அதிகாரிகள் இதற்கு தீர்வு காணமுடியாமல் விழிபிதுங்கி நிற்கிறார்கள். திறமையற்ற அல்லது சீர்கெட்ட சட்ட நடவடிக்கையால் ஒன்றுமே செய்ய முடியாமல் இருப்பதுதான் இதற்கு காரணம்.

மேலும் மேலும் பாதிரிமார் தொல்லைகள்

நவம்பர் 1996-ல், “பாதிரிமாரின் பாலியல் நடவடிக்கைகளின் பேரில் தெளிவான, கட்டுப்படுத்தும் தராதரங்களை நியமிக்க” சர்ச்சுகளை அழைப்பித்து சுமார் 40 எஸ்கோபேலியன் பிஷப்புகள் ஓர் அறிக்கையில் கையெழுத்திட்டார்கள் என்று கிறிஸ்டியானிட்டி டுடே என்ற பத்திரிகை அறிவிக்கிறது. பாதிரிமாரை உட்படுத்தும் பல பிரச்சினைகள் சர்ச்சை பிடித்து உலுக்குகின்றன. “பாலியலைப் பற்றி சர்ச்சின் கோட்பாடு தெளிவற்று இருப்பதுதான்” இதற்கான காரணம் என்று பழமைவிரும்பிகள் சொல்கிறார்கள். உதாரணத்திற்கு, நியூ யார்க் புரூக்லினிலுள்ள எஸ்கோபேல் சர்ச்சின் பாதிரி ஒருவர் ஓரினப்புணர்ச்சியில் ஈடுபட்டதை ஒத்துக்கொண்டு அவர் பதவியிலிருந்து விலகிக்கொண்டார். எஸ்கோபேலியன்கள் ஐக்கியத்தின் நிர்வாக இயக்குநராக இருக்கும் டாட் வெட்செல் என்பவர் கூறியதாவது: “சர்ச்சு ஒரேயொரு மோசடியையா எதிர்ப்படுகிறது, அது எக்கச்சக்கமாக எதிர்ப்பட்டுக்கொண்டிருக்கிறது; அவற்றுள் இது மிகவும் அதிர்ச்சிதருவதாக இருந்தது.” முன்பு ஒருமுறை, திருமணம் ஆகாத ஓரினப்புணர்ச்சி செய்த உதவி மதகுருவை (deacon) நியமனம் செய்வதைப் பற்றி ஓய்வுபெற்ற பிஷப் வால்டர் ரைட்டர் வித்தியாசமான கருத்தைத் தெரிவித்தபோது, அவர்மீது குற்றஞ்சாட்டிய சர்ச்சின் பெயர் பரவலாக அடிபட்டது. “திருமணத்தில் மட்டும் உடலுறவு கொள்ளுவதை மட்டுப்படுத்தும் ‘முக்கியமான கோட்பாடு’ ஏதும் இல்லை என்பதால் பதவி நியமனத்தை ரத்து செய்ய முடியாது என்று எஸ்கோபேல் விசாரணை மன்றம்” கூறியதும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.

ஒரே பூண்டுமயம்

பூண்டு அதிகமாக தருவிப்பதை குறைக்கும் வகையில் சில புதிய உத்திகளை தைவான் அரசாங்கம் எடுத்துள்ளது. பொதுமக்களுக்கு “அதிகமாக பூண்டை உண்ணும்படி” அதிகாரிகள் ஊக்கம் தருகிறார்கள் என்ற செய்தியை சௌவுத் சைனா மார்னிங் போஸ்ட் குறிப்பிடுகிறது. வேளாண்மை கழகத்தின் தைவானி அதிகாரி மிஸ்டர் கூ டெயா விளக்கம் தந்தார்: “உண்மையில் இவ்வருடம் நாங்கள் ஏராளமாக பூண்டை பயிர்செய்துவிட்டோம்.” நுகர்வை அதிகரிக்க முயற்சிசெய்யும் வகையில், பூண்டுகளைப் பற்றி சமையல் குறிப்புகள் அடங்கிய சிறுபுத்தகங்களை அரசாங்கம் வெளியிடுகிறது. ஆனால், “எல்லா பூண்டையும் பொதுமக்களை உண்ணவைக்க முடியாது” என்பதை மிஸ்டர் கூ ஒத்துக்கொள்கிறார் என்று கூறுகிறது அந்தச் செய்தித்தாள்.

பெண்ணுக்கு குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை அதிகரிக்கிறது

1960-களில் சராசரி பிரேஸில் குடும்பத்தில், ஒவ்வொரு வீட்டிலும் 6.1 பிள்ளைகள் என்ற கணக்கில் இருந்தனர்; இன்று சராசரியாக 2.5 என்ற கணக்கில் பிள்ளைகள் இருக்கிறார்கள். ஏன் இந்தத் திடீர் குறைவு? நடைமுறையான பொருளாதார ஆராய்ச்சி நிலையம் (Applied Economy Research Institute) நடத்திய ஆய்வின்படி, “40% திருமணமான பெண்கள் [பிரேஸிலில்] குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துள்ளனர்” என்ற ஒரு காரணத்தை ஜெர்னல் டொ பிரேஸில் குறிப்பிடுகிறது. மேலும், பெண்கள் இளம் வயதிலேயே அறுவை சிகிச்சை செய்துகொள்வது ஒரு பொதுவான வழக்கமாக உருவாகியுள்ளது. உதாரணத்திற்கு, பத்து வருடங்களுக்குமுன் குடும்பக்கட்டுப்பாடு செய்துகொள்ளும் பிரேஸில் நாட்டு பெண்களின் சராசரி வயது 34; இன்றோ அது 29. அந்த ஆய்வு மேலும் குறிப்பிட்டதாவது, “குழந்தையைப் பிரசவிக்கும்போதுதான் குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சைகள் அநேகம் நிகழ்கின்றன” விசேஷமாக, ஸிசரியன் பிரசவத்தின்போது அவ்வாறு நடக்கின்றன. இதற்கு நேர்மாறாக, வெறும் 2.6 பிரேஸில் நாட்டு ஆண்கள் மாத்திரம் குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துகொள்கிறார்கள்.

மீன்பிடி சண்டைகள்

மீன் கிடைப்பது குறைந்து வருவதால், மீன் கிடைக்கும் இடம் தேடி மீன்பிடிக்கும் படகுகள் பல விரைந்தோடுகின்றன. இது “மீன்பிடிக்க வரும் படகுகளுக்கும் உள்ளூர் கடற்படைக்கும் சண்டை மூளுவதில் போய் முடிந்துள்ளது” என்று குறிப்பிடுகிறது யு.எஸ்.நியூஸ் & உவர்ல்டு ரிப்போர்ட். 1990-ல் உலகெங்கிலும் உள்ள மீன்பிடிக்கும் படகுகளின் எண்ணிக்கை சுமார் முப்பது லட்சத்தை எட்டியது; இது 1970-ல் இருந்ததைவிட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு ஆகும். மேலும் மீன் இருக்கும் இடத்தைக் காட்டும் கருவிகள், இராட்சத இழுவை வலைகள் (trawl nets) போன்ற மீன்பிடிக்கும் நவீன கருவிகள் மீனவர்களின் திறமையை நிறையவே அதிகரித்துள்ளன. “கடைசியில் இது, கரையோர நாடுகளின் அரசாங்கங்களுக்கும் வெளிநாட்டிலிருந்து வரும் மீன்பிடிக்கும் படகுகளுக்கும் இடையே சண்டையில்போய் முடிகிறது,” ஏனென்றால் அந்த அரசாங்கங்கள் தங்களுடைய மீன் இருப்பை பாதுகாக்க முயலுகிறார்கள். போட்டா போட்டி போடும் மீன்பிடிக்கும் படகுகளுக்கு இடையே கடலில் மூண்ட பெரும் சண்டையின் விளைவாக கடந்த இரண்டு வருடங்களில் மாத்திரம் எட்டு மீனவர்கள் மாண்டார்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்