உலகை கவனித்தல்
போப் சொன்னதை கார்டினல் விவரிக்கிறார்
பரிணாமக் கொள்கையானது “வெறும் ஊகம் அல்ல” என போப் ஜான் பால் கூறிய வார்த்தைகளை மேலும் விவரிப்பவராய், நியூ யார்க்கின் கார்டினலான ஓகான்னோர், ஆதாமும் ஏவாளும் மனிதன் மனுஷியாய் அல்லாமல் “வேறொரு ரூபத்தில்” இருந்திருக்கலாம் என்ற கருத்தைத் தெரிவித்திருக்கிறார். நியூ யார்க்கின் டெய்லி நியூஸ் செய்தித்தாள் அறிக்கையிட்டபடி, ஓகான்னோர் இப்படிச் சொன்னார்: ‘கத்தோலிக்க சர்ச் அறிவியல் ஆராய்ச்சியின் விளைவுகளை வரவேற்கிறது, உயிரியல் பரிணாமத்தைப் பொருத்ததிலும் இதுவே உண்மையாய் இருக்கிறது.’ செயின்ட் பாட்ரிக்ஸ் கத்தீட்ரலில் பேச்சு கொடுக்கையில் கார்டினல் இப்படிச் சொன்னார்: “நாம் ஆதாம் ஏவாள் என அழைக்கும் அந்த இரு நபர்களையும் கடவுள் வேறொரு ரூபத்தில் படைத்து, ஜீவசுவாசத்தை அவர்களுக்குள் ஊதி, ஆத்துமாவை அளித்தார் என்பது உண்மையாயிருக்குமா என்பது ஓர் அறிவியல்பூர்வமான கேள்வி.” இத்தாலிய பழமைவாத செய்தித்தாளான இல் ஜார்னாலெ-ல் வெளிவந்த தலையங்கம் இவ்வாறு ரத்தனச்சுருக்கமாக சொன்னது: “நாம் குரங்கிலிருந்து வந்திருக்கலாம் என போப் சொல்கிறார்.”
போப்பிற்கு ஆலோசனை
இத்தாலிய கத்தோலிக்க பத்திரிகை எழுத்தாளரான விட்டார்யோ மெஸ்ஸோரி, நவீன கத்தோலிக்க சர்ச்சின் மத குருமார் அளவுக்கதிகமாக பேசுகின்றனர் என நினைக்கிறார். அவர்கள் தங்களது செய்திகளை ‘எளிமையாகவும் சுருக்கமாகவும்’ அளிக்க வேண்டுமென அவர் ஆலோசனை தருகிறார். ஆடிஸ்டா என்ற கத்தோலிக்க நியூஸ் ஏஜென்ஸி அறிக்கை செய்த ஒரு பேட்டியில் அவர் இவ்வாறு சொன்னார்: “சர்ச்சின் எல்லா மட்டத்திலுள்ளவர்களும் கடந்த 20 நூற்றாண்டுகளைக் காட்டிலும் கடந்த 20 வருடங்களில் அதிகமாக பேசியிருக்கின்றனர் என்பதை விரைவான கணக்கீடு வெளிப்படுத்துகிறது. எவ்வளவு அதிகமாக பேசப்படுகிறதோ அவ்வளவு குறைவாக கேட்கப்படுகிறது. நான் ஏழு வருட ஓய்வைக் குறித்து முன்மொழிந்திருக்கிறேன், அச்சமயத்தில் துணை பாரிஷ் பாதிரி முதற்கொண்டு போப் வரை சர்ச்சை சேர்ந்த அனைவரும் அமைதலாய் இருக்க வேண்டும். . . . அதிகமாகிக்கொண்டே செல்கின்றன இந்த எல்லா பேச்சுக்களும் சுற்றறிக்கைக் கடிதங்களும் . . . அவற்றை நான் வாசிக்கிறேன், ஆனால் மற்றவர்கள் எத்தனைபேர் வாசிக்கின்றனர்? சில பத்தாண்டுகளுக்கு முன்பிருந்த போப்புகள் கடைப்பிடித்த பழக்கத்தையே மறுபடியும் கைக்கொள்வதன் தியாகத்தை நாம் செய்ய வேண்டும். அவர்கள் அதிகபட்சமாக மூன்று சுற்றறிக்கைக் கடிதங்களையே அளித்தனர்.”
உயிரைப் பறிக்கும் திகில் விளையாட்டுகள்
பன்ஜீ ஜம்பிங், உதவிசாதனங்களின்றி மலையேறுதல், விண்ணில் சாகசம் புரிதல், பேஸ் ஜம்பிங் போன்ற திகில் விளையாட்டுகள் பிரான்ஸில் பிரபலமாகியிருக்கின்றன. ஏன் பிரான்ஸில் திகில் விளையாட்டுகள் இந்தளவுக்கு பிரபலமாகியிருக்கின்றன என அநேக நிபுணர்களிடம் பாரிஸ் செய்தித்தாளான ல மாண்ட் கேட்டது. ஒரு காரணம், விதிமுறைகளையும் ஒழுங்கையும் பயிற்சியையும் தேவைப்படுத்தும் பரம்பரை விளையாட்டுகள் இனியும் இன்றைய இளைஞர்களது மதிப்பீடுகளோடு ஒத்துப்போவதில்லை; ஏனெனில் இவர்கள் கட்டுப்பாட்டிற்கு பதிலாக சுதந்திரமாய் ஜாலியாக இருப்பதற்கே முக்கியத்துவம் கொடுக்கின்றனர் என புதுமை விளையாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் நிர்வாகியான ஆலான் லோரே சொன்னார். டாவிட் ல ப்ரடோன் என்ற பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த சமூகவியல் நிபுணரின்படி, “மிக ஆபத்தான விளையாட்டுகள் அதிகப் பிரபலமாகிவருவது, ஒழுக்க மதிப்பீடுகளின் குறைவின் விளைவாக இருக்கிறது. சொல்லப்போனால், உண்மையிலேயே நாம் எதற்காக வாழ்கிறோம் என்பது நமக்கு தெரிகிறதில்லை. வாழ்க்கை மதிப்புள்ளது என நம் சமூகம் நமக்குச் சொல்வதில்லை. ஆகவே, திகிலை நாடுவது . . . வாழ்க்கைக்கு அர்த்தமளிப்பதற்கான வழியாக புரிந்துகொள்ளப்படலாம்.” ஆனாலும், அதிகமதிகமான இளைஞர்கள் அவர்களது உயிரைப் பணயம் வைத்து இறக்கின்றனர்.
பூர்வீக அலெக்ஸாந்திரியாவுக்கு மீண்டும் செல்லுதல்
முதலில், பூர்வீக உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான, 2,200 ஆண்டு பழமையான கலங்கரை விளக்கத்தை எகிப்திலுள்ள அலெக்ஸாந்திரியா கரைக்கு சற்று அப்பால், தண்ணீருக்கடியில் கண்டுபிடித்ததாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அறிவித்தார்கள். இப்போது, “அலெக்ஸாந்திரியாவின் பழைய துறைமுகத்திற்கு கிழக்கே சுமார் ஆறு மீட்டர் [20 அடி] அளவு தண்ணீருக்குக் கீழ் அலெக்ஸாந்திரியாவின் பண்டைய அரசவையின் இடிபாடுகளை” கண்டுபிடித்திருப்பதாக அவர்கள் சொல்கின்றனர் என த வான்கூவர் சன் குறிப்பிடுகிறது. பிரான்சு நாட்டைச் சேர்ந்த கடல் தொல்பொருள் ஆராய்ச்சியாளரான ஃப்ராங்க் காடியோவின்படி, அவ்விடத்தில், மார்க் ஆன்டனியினுடைய வீடும் ஆலயமும், திராட்சரச ஜாடி, கருங்கல் தூண்கள், நடைபாதைத் தளங்கள் உட்பட க்ளியோபாட்ராவின் அரண்மனையின் இடிபாடுகளும், பூர்வ நகரின் மற்ற எஞ்சிய பகுதிகளும் இருக்கின்றன. “ஒரு நீண்ட அலைதாங்கியால் பாதுகாக்கப்பட்ட அழகிய துறைமுகம் 2,000 வருடங்களுக்குப் பிறகும் நல்ல நிலையில் ஆனால் தண்ணீருக்குள் இருப்பதை” ஆராய்ச்சியாளர்கள் கண்டதாக காடியோ சொன்னார். மகா அலெக்ஸாண்டரை முன்னிட்டே அலெக்ஸாந்திரியா என இது பெயரிடப்பட்டது; அவர் பொ.ச.மு. 332-ல் அந்த அற்புதமான துறைமுகத்தைப் பார்த்த பிறகு அங்கு ஒரு நகரம் அமைக்க வேண்டுமென தீர்மானித்தார். அது ஆதன்ஸ் மற்றும் ரோமாபுரி நகரங்களோடு போட்டியிட்ட நாகரிக மற்றும் வர்த்தக மையமாக ஆனது. புகழ்பெற்ற அலெக்ஸாண்டர் காலத்து நூல் நிலையமும் அங்குதான் இருந்தது. ஆனால் இடைக்காலத்திற்குள், பூர்வீக நகரின் பெரும்பாலான பகுதிகள் பூமியதிர்ச்சி மற்றும் தீயினால் சேதமடைந்தும், கடலில் மூழ்கியும் அழிந்துபோயின.
ஆயிர ஆண்டுக்காலம் எப்போது ஆரம்பிக்கிறது?
டிசம்பர் 31, 1999-ம் ஆண்டு நடுராத்திரி அன்று, புதிய ஆயிர ஆண்டுக்கால துவக்கத்தை உலகம் முழுவதிலுமுள்ள அநேக மக்கள் கொண்டாடுவர், அதற்கான ஆடம்பர கொண்டாட்டங்களுக்காக ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருக்கிறது. “இப்படிப்பட்ட எண்ணுள்ள ஒரு வருடத்தை” கொண்டாடுவது “இயல்பானாலும், சரியாக சொல்ல வேண்டுமானால், நாம் புதிய ஆயிர ஆண்டுக்காலத்தின் துவக்கத்தை அல்ல ஆனால் 2,000-மாவது வருடத்தை அல்லது சென்ற ஆயிர ஆண்டுக்காலத்தின் கடைசி வருடத்தை கொண்டாடிக்கொண்டிருப்போம்” என இங்கிலாந்திலுள்ள கேம்ப்ரிஜை சேர்ந்த ராயல் க்ரீன்விச் வானிலை ஆய்வுக்கூடம் சொல்கிறது. இயேசுவின் பிறப்பிலிருந்து சம்பவங்களை தேதியிட முயற்சித்த ஏழாம் நூற்றாண்டு சரித்திராசிரியரும் இறைமையியல் நிபுணருமான பிடி என்பவரால் தீர்மானிக்கப்பட்ட காலக்குறிப்பின்படி பொ.ச.மு.-லிருந்து பொ.ச.-விற்கு மாறிய கணக்கில்தான் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. பூஜ்ய வருடம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை, ஆகவே பொ.ச.மு. 1-ம் ஆண்டின் முதல் நாளிலிருந்து பொ.ச. 1-ம் ஆண்டு முதல் நாள்வரை ஒரு வருட காலம்தான் ஆகிறது. ஆகையால், முதலாம் ஆயிர வருடக்காலம் பொ.ச. 1-ம் ஆண்டின் முதல் நாளில் ஆரம்பித்து பொ.ச. 1000-ம் ஆண்டின் கடைசி நாள்வரை நீடித்தது. அதுபோல் இரண்டாம் ஆயிர வருடக்காலம் ஜனவரி 1, 1001-ம் ஆண்டு ஆரம்பமானது. “ஆகவே, புதிய ஆயிர வருடகாலம் ஜனவரி 1, 2001-ல் ஆரம்பமாகும் என்பது தெளிவாயிருக்கிறது” என ஆராய்ச்சியாளர்கள் சொன்னார்கள். எது எப்படியிருந்தாலும், கிரகரீ காலண்டரின் அடிப்படையில் மாத்திரமே கொண்டாட்டங்கள் நடத்தப்படும், இயேசுவின் சரியான பிறந்த ஆண்டின் அடிப்படையில் அல்ல; இயேசு வேறொரு சமயத்தில் பிறந்ததாக இப்போது தெரியவந்திருக்கிறது.
விரும்பத்தகாத பதிவு
“உலகிலுள்ள மற்ற எந்த வளர்ந்த நாடுகளைக் காட்டிலும் ஐக்கிய மாகாணங்களில்தான் பாலியல் நோய்கள் மிக அதிகமாக காணப்படுகின்றன; இந்த நோய்களைத் தடுக்க எந்த விதமான திறம்பெற்ற தேசிய திட்டமும் இல்லை என உடல்நல நிபுணர் குழு சொல்கிறது” என்பதாக த நியூ யார்க் டைம்ஸ் அறிக்கை செய்தது. அறிவியல் தேசிய கழகத்தின் ஒரு பிரிவான மருத்துவ இன்ஸ்டிட்யூட் கமிட்டியின்படி, அமெரிக்கர்களைப் பாதித்திருக்கும் மிகப் பல பாலியல் நோய்கள் தடுக்க முடிந்தவை; ஆனாலும் புற்றுநோய் போன்ற பயங்கர உடல்நல கோளாறுகளையும் ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான மரணங்களையும் அவை தொடர்ந்து விளைவித்துக்கொண்டிருக்கின்றன. 18 மாத ஆராய்ச்சிக்குப் பின்னர், சிகிச்சைக்காகவும் மற்ற காரியங்களுக்காகவும் செலவிடப்பட்ட ஒவ்வொரு $43-க்கும் வெறுமனே $1 மட்டுமே இந்த நோய்களைத் தடுப்பதற்காக செலவிடப்பட்டதாக 16 அங்கத்தினர்கள் அடங்கிய குழு கண்டுபிடித்தது. நோயிருப்பதாய் ஒவ்வொரு வருடமும் புதிதாக கண்டுபிடிக்கப்படும் 1.2 கோடி மக்களில் கால் பாகத்தினர் வளரிளமைப் பருவத்தினர் என அவர்களது அறிக்கை சொல்கிறது. அக்கி, ஈரல் அழற்சி-B, கிளாமைடியா, வெட்டை நோய், மேக நோய் போன்ற நோய்களை சிகிச்சையளிக்காமல் விட்டுவிட்டால், மலட்டுத்தன்மை, பிறவிக் கோளாறுகள், கருச்சிதைவுகள், புற்றுநோய் மற்றும் மரணத்தையும் அவை விளைவிக்கலாம். பாலுறவினால் கடத்தப்படும் எய்ட்ஸ் நோயின் ஹெச்ஐவி வைரஸைச் சேர்க்காமல், மற்ற நோய்களுக்காக அந்த நாடு செலவிடும் குறைந்தபட்ச தொகையானது வருடத்திற்கு $1,000,00,00,000 ஆகும்.
சுத்தமான தென்துருவத்தைத் தேடி
கோடைக்கால வெப்பநிலை வெறுமனே -10 டிகிரி செல்ஸியஸாக இருக்கிறபோதிலும், தென்துருவத்திற்கு செல்வோரின் எண்ணிக்கை கடந்த பத்தாண்டுகளில் இரட்டிப்பாகியிருக்கிறது. பென்குவின்கள், நீர்நாய்கள், அதிசய 1.3 கோடி சதுர கிலோமீட்டர் பனிப்பரப்பு போன்றவற்றுடனுள்ள இந்தத் தென்கோடி கண்டத்தைச் சென்று பார்க்க பத்தாயிரம் பேர் விடுமுறை எடுத்து $9,000 செலவழித்தனர். ஆனால் அங்கு வேலைசெய்த தேசங்கள் விட்டுச்சென்ற குப்பைக்கூளங்களான காலியான குடிசைகள், எரிபொருள் டிரம்கள், குப்பை, பழைய கம்ப்யூட்டர்கள் போன்றவற்றைக் குறித்து அவர்கள் புகார் செய்கின்றனர் என லண்டனின் தி இண்டிப்பென்டென்ட் அறிக்கை செய்கிறது. இந்த இடத்திற்கான முதல் பயண வழிகாட்டியை பிரசுரித்தவரான இங்கிலாந்தின் கேம்ப்ரிஜிலுள்ள ஸ்காட் போலார் இன்ஸ்டிட்யூட்டைச் சேர்ந்த டாக்டர் பர்னார்ட் ஸ்டோன்ஹௌஸ், மாசுபடுத்துவோரைப் பற்றி இவ்வாறு சொன்னார்: “அவர்கள் கடந்தகாலத்தில் சுத்தப்படுத்துவதற்கு எந்த விதமான சிரமத்தையும் எடுத்துக்கொள்ளவில்லை, ஆனால் இப்போது சிரமம் எடுக்கும்படி கட்டாயப்படுத்தப்படுகின்றனர். குப்பைக் கூளங்களைப் பார்ப்பதற்காக தாங்கள் பணம் செலவு செய்துகொண்டு வரவில்லை என சுற்றுலாப் பயணிகளும் வருகையாளர்களும் குறைகூறிவந்திருக்கின்றனர்.”
லாட்டரிகள் சர்ச்சுகளையும் மிஞ்சுகின்றன
அமெரிக்கர்கள் சர்ச்சுகளுக்கு அளிக்கும் நன்கொடையைக் காட்டிலும் லாட்டரிகளுக்கே அதிகம் செலவழிக்கின்றனர் என அஸோஸியேட்டட் பாப்டிஸ்ட் ப்ரெஸ் சொல்கிறது. க்ரிஸ்டியன் சென்ச்சுரி-ல் வெளிவந்த அறிக்கையின்படி, ஐ.மா. கணக்கெடுப்புக் குழு அறிக்கையை அமெரிக்கா மற்றும் கனடா நாட்டு சர்ச்சுகளின் வருடாந்தர புத்தகத்தோடு (ஆங்கிலம்) ஒப்பிட்டுப்பார்த்தால், 1994-ல், அமெரிக்கர்கள் அரசாங்க லாட்டரிகளுக்காக $2,660 கோடி செலவழித்திருந்தாலும் சர்ச்சுகளுக்கு வெறும் $1,960 கோடி மட்டுமே நன்கொடையாக அளித்திருந்தனர் என்பது தெரியவருகிறது.
கொசுக்களுக்கு அல்ல
ராத்திரியில் பூச்சிகளை கவர்ந்து சத்தத்துடன் மின்னாற்றலால் கொல்லுவதற்காக திறந்தவெளியில் தொங்கவிடப்படும் கருவிகளான பூச்சி மின்கொல்லிகள் கொசுக்களைக் கொல்வதில்லை. “இந்தக் கருவிகள் பிரயோஜனமற்றவை” என பூச்சியியல் பேராசிரியரான ஜார்ஜ் பி. க்ரேக் Jr. சொல்கிறார். பெரும்பாலான கொசுக்கள் வெளிச்சத்தால் கவரப்படுவதில்லை; கடிக்கும் பெண் கொசுக்கள் உணவுக்காக அம்மோனியா, கார்பன்டையாக்ஸைடு, மற்றும் கொசு மின்கொல்லிகளால் வெளியேற்ற முடியாத மற்ற தோல் கழிவுப்பொருட்களையே தேடுகின்றன. இவற்றை காணமுடியாததால், அவை அந்தக் கருவியைவிட்டு பறந்துசெல்கின்றன. அதுமட்டுமல்லாமல், மின்கொல்லிகளால் கொசுக்களைக் கொல்ல முயற்சிப்பது “சமுத்திரத்தை டீஸ்பூன்களால் சுத்தம்செய்ய முயற்சிப்பதைப்” போன்றது என டாக்டர் க்ரேக் சொல்கிறார். ஒரு பெண் கொசுவினால் ஒருசில மாதங்களிலேயே 60,000-க்கும் அதிகமான பெண் கொசுக்களை பிறப்பிக்க முடியும். ஓர் சராசரி இரவில் மின்கொல்லியால் சாகடிக்கப்பட்ட பூச்சிகளில் வெறுமனே 3 சதவீதம்தான் பெண் கொசுக்களாய் இருந்தன என மூன்று மாத ஆராய்ச்சி ஒன்று வெளிப்படுத்தியது. மின்கொல்லிகள், “வீட்டு-பொழுதுபோக்கு சாமான்களோடு சேர்த்து விற்கப்படவேண்டும், தோட்டச் சாமான்களோடு அல்ல” என க்ரேக் சொல்கிறார்.