உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g97 5/22 பக். 21-23
  • “மழையில் இரைதேடும் கோழிக்கு . . . ”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “மழையில் இரைதேடும் கோழிக்கு . . . ”
  • விழித்தெழு!—1997
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • பெரும் சவால்
  • போற்றுதலோடு செவிசாய்த்தோர்
  • காட்டாற்றுப் பள்ளத்தாக்கு
    சொல் பட்டியல்
  • பயனுள்ள விளைவுகளைஉண்டுபண்ணத்துண்டுப்பிரதிகளை உபயோகித்தல்
    நம் ராஜ்ய ஊழியம்—1993
  • போர்க்கால கஷ்டங்கள் பிற்கால வாழ்க்கைக்கு கைகொடுத்தன
    விழித்தெழு!—2004
  • நற்செய்தியை அறிவிக்க துண்டுப்பிரதிகளைப் பயன்படுத்துங்கள்
    நம் ராஜ்ய ஊழியம்—2012
மேலும் பார்க்க
விழித்தெழு!—1997
g97 5/22 பக். 21-23

“மழையில் இரைதேடும் கோழிக்கு . . . ”

நைஜீரியாவிலுள்ள விழித்தெழு! நிருபர்

உலகம் முழுவதும் விநியோகிக்கப்பட்ட ராஜ்ய செய்தி எண் 34 துண்டுப்பிரதிகள் தென் நைஜீரியாவிலுள்ள எங்களது சிறு சபைக்கும் அனுப்பப்பட்டபோது, எங்கள் பிராந்தியத்தின் எல்லா பகுதிகளிலும் இந்தப் பிரதிகளை விநியோகிக்க வேண்டுமென நாங்கள் மிகவும் விரும்பினோம். அது ஒன்றும் அவ்வளவு சாமானிய வேலையாய் இல்லை. எங்கள் பிராந்தியத்தில் கசாவா கிழங்கு, கருணைக் கிழங்கு மற்றும் வேறு உணவுப்பொருட்களை உற்பத்தி செய்யும் பண்ணைகள் இருக்கின்றன. இந்தப் பண்ணைகள் வெப்பமண்டல மழைக்காட்டின் உள்ளுக்குள்ளே இருக்கின்றன. அங்கே செல்வது மிகவும் கஷ்டம்; ஆனாலும் முடியாத காரியமல்ல. என்னயிருந்தாலும், காட்டிலுள்ள விவசாயிகள் உட்பட எல்லா விதமான மக்களுக்கும் நற்செய்தியைப் பிரசங்கிக்க வேண்டுமென்பது கடவுளுடைய சித்தமல்லவா.—1 தீமோத்தேயு 2:3, 4.

ஆகவே, அக்டோபர் 16, 1995-ல் சுமார் மூன்றரை கிலோமீட்டர் தொலைவிலிருந்த ஆபாம்பாடா என்ற பண்ணைக்குச் செல்ல நாங்கள் 18 பேர் காலை 7:30 மணிக்குப் புறப்பட்டோம். செல்லும் வழியில் நாங்கள் ஒரு ஓடையைக் கடக்கவேண்டியதாய் இருந்தது. அதில் இடுப்பளவு தண்ணீர் இருந்தது.

அதே நாளில் இன்னொரு பண்ணைக்குச் செல்வதற்கு இதைவிட ஒரு பெரிய ஓடையைக் கடக்க வேண்டியதாயிருந்தது. இந்த முறை, வெறுமனே நான்கு சகோதரர்களும் ஒரு சகோதரியும்தான் ஓடையைக் கடந்தார்கள். மற்றவர்கள் அங்கேயே இருந்துவிட்டார்கள்.

அன்றைக்கு அநேகம் பேர் ஆர்வம் காண்பித்தார்கள். காட்டுப் பிராந்தியம் என நாங்கள் அழைத்த பகுதி எங்கள் சந்தோஷத்தை இருமடங்காக்கியது. நாங்கள் நடந்து செல்கையில், காட்டில் விளைந்த சில பழங்களை பறித்துச் சாப்பிட்டோம். நாங்கள் சந்தித்த விவசாயிகள், இவ்வளவு முயற்சி எடுத்து தங்களைச் சந்திக்க வந்ததற்காக எங்களைப் போற்றி நன்கு உபசரித்தார்கள்; தாகத்திற்கு ஆரஞ்சு பழங்களையும் கொடுத்தார்கள். நாங்கள் சுமார் 250 பேரை சந்தித்து, அவர்களுக்கு எங்களிடமிருந்த எல்லா துண்டுப்பிரதிகளையும் அளித்தோம்.

பெரும் சவால்

இரண்டு நாட்களுக்குப் பின்னர்தான் உண்மையிலேயே ஒரு பெரிய சவாலை எதிர்ப்பட்டோம். பன்னிரண்டு கிலோமீட்டர் தள்ளி ஓஷே அனாஸி என்ற பண்ணை இருந்தது; அங்கு அதுவரை பிரசங்க வேலை செய்யப்படவே இல்லை. சிலர் அங்கு செல்ல தயங்கினர். ஊராசி நதியைக் கடப்பது ஆபத்தானது, அதுமட்டுமல்ல எங்களில் அநேகருக்கு நீந்தத் தெரியாது. தண்ணீருக்கடியில், வெட்டப்பட்ட மரங்களுடைய கூர்மையான அடிபாகங்கள் இருந்ததன் காரணமாக அதில் நடந்துசெல்வதும் ஆபத்தாய் தோன்றியது. சேற்றுப் பகுதிகளும் வழுக்கலாக இருக்கும், அதில் விழுந்தால் அடிபட்டுவிடும். சில கையால் செய்யப்பட்ட பாலங்கள் பலமாக இல்லை. அங்கே பாம்புகளும் முதலைகளும் அட்டைப்பூச்சிகள் நிரம்பிய ஓடைகளும் இருந்தன.

எப்படியிருந்தாலும் போவதென்று எங்களில் பதினாறு பேர் தீர்மானித்தோம். சுமார் ஒன்றரை கிலோமீட்டர் நடந்துசென்று, வேகமான நீரோட்டமுள்ள ஆபத்தான ஊராசி ஆற்றைக் கடக்க ஒரு சிறு படகில் ஏறினோம். சிறு படகிற்குச் செல்ல நாங்கள் செங்குத்தான குன்று வழியாக இறங்கிவர வேண்டியதாயிருந்தது. அது மழைக் காலமாய் இருந்ததால், ஆறு பெருக்கெடுத்து ஓடும் நிலையில் இருந்தது. எல்லா இடமும் களிமண்தான்; எனவே மழைக் காலத்தில் மிகவும் வழுக்கும். படகிலிருந்து இறங்கியபோது, நடைபாதையானது ஒரு ஓடையாக மாறியிருந்ததை நாங்கள் கவனித்தோம்; சில இடங்களில் அது ஒரு மீட்டர் ஆழமாக இருந்தது. அப்போதுதான் உண்மையிலேயே தொல்லைகள் ஆரம்பமாயின.

இந்த ஓடைவழியே சுமார் அரை மணிநேரத்திற்கு நாங்கள் நடந்து சென்றோம். தரை அவ்வளவு வழுக்கலாக இருந்ததால் நாங்கள் அநேகம்பேர் அந்தச் சேற்றுத் தண்ணீரில் விழுந்தோம்; எங்கள் பைபிள்களும் பத்திரிகைகளும் துண்டுப்பிரதிகளும் முழுவதும் நனைந்தன. நாங்கள் நல்ல மூடில் இருந்தோம்; ஆகவே எவராவது விழுந்துவிட்டால் விழுந்தவரோடுசேர்த்து நாங்கள் அனைவருமே குலுங்கிக் குலுங்கி சிரித்தோம்.

ஒரு சிறிய ஓடையைக் கடந்தபோது அட்டைப்பூச்சிகள் எங்களது கால்களில் ஒட்டிக்கொண்டன. அட்டைப்பூச்சி ஒன்று ஒரு இளம் சகோதரியின் காலைப் பிடித்துக்கொண்டபோது அவர் வீ....ல் என்று கத்தினார். அட்டையை எடுத்துவிட்ட பின்னரும் அலறல் ஓயவில்லை. அதையும் நாங்கள் துணிச்சலான பயணத்தின் பாகமென நகைச்சுவையாக எடுத்துக்கொண்டு தொடர்ந்து பயணத்தை மேற்கொண்டோம்.

இன்னொரு ஓடையைக் கடக்கும்போது, ஒரு சகோதரர் மற்றவர்களைப் போல் நீருக்குள் நடந்துசெல்லாமல் ஒரே தாவலில் தாண்டிவிட தீர்மானித்தார். தண்ணீரிலிருந்து தப்பித்த அவரால் சேற்றிலிருந்து தப்பிக்க முடியவில்லை. சேற்றில் தொப்பென வழுக்கி விழுந்தார். பின் தானாகவே எழுந்து, அடிபட்டிருக்கிறதா என பார்த்துக்கொண்டு, “ஒன்னுமில்லை, இதுவும் ஒரு அனுபவம்தான்” என்று சொன்னார். அப்போஸ்தலனாகிய பவுலும் ‘ஆறுகளால் வந்த மோசங்களை’ எதிர்ப்பட்டார் என்பதையும், ஒருவேளை எங்களைவிட அதிகக் கஷ்டப்பட்டார் என்பதையும் நாங்கள் நினைத்துப்பார்த்துக் கொண்டோம்.—2 கொரிந்தியர் 11:26.

ஆபத்தாய் தோன்றிய கையால் செய்யப்பட்ட பாலத்தின்மீது நாங்கள் சென்றோம்; ஆனால் எப்படியோ சமாளித்து எல்லாரும் அதைத் தாண்டிவிட்டோம். அதன் பிறகு தரை மிக மிக வழுக்கலாக இருந்ததால் விழுந்து விழுந்து எழுந்திருப்பது சர்வசாதாரணமாகிவிட்டது.

ஒழுங்கான பயனியராய் ஊழியம் செய்துவந்த சுமார் 70-வயது சகோதரர் ஒருவர் எங்களோடு இருந்தார். நாங்கள் நல்லபடியாக பிரயாணம் செய்துவர வாழ்த்துவதற்காக அன்றைய தினம் காலை அவரும் வந்திருந்தார். ஆனால் நாங்கள் யெகோவாவின் ஆசீர்வாதத்திற்காக ஜெபம் செய்த பிறகு, அவர் சொன்னார்: “நீங்கள் எல்லாரும் பிரசங்கம் செய்யப்போகும்போது நான் மாத்திரம் எப்படி இங்கே இருப்பது?” எங்களுடன் வருவதற்கு பிடிவாதமாய் இருந்தார்; யார் என்ன சொன்னாலும் அவர் கேட்பதாய் இல்லை. யெகோவா தன்னுடன் இருப்பாரென்று அவர் சொன்னார். ஆக அவரும் எங்களுடன் வந்தார்.

வழுக்கலான தரையில் அவர் பின்புறமாய் தொப்பென விழுந்தபோது, எவரும் சிரிக்கவில்லை. ஏதாவது காயம் ஏற்பட்டுவிட்டதா என கவலையோடு நாங்கள் கேட்டோம். “இல்லை. தரைக்கு அடிபட்டுவிடுமே என்றுதான் நிதானமாய் விழுந்தேன்” என்று அவர் சொன்னார். நாங்கள் நிம்மதியடைந்து சிரித்தோம்; ‘கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைவார்கள்’ என சொல்லும் ஏசாயா 40:31-ஐ நினைத்துக்கொண்டோம்.

போற்றுதலோடு செவிசாய்த்தோர்

ஒருவழியாக நாங்கள் அந்த இடத்திற்குப் போய் சேர்ந்தோம். அங்கிருந்தவர்களின் பிரதிபலிப்பு மிகவும் உற்சாகமளித்தது. ஒரு ஆள், நாங்கள் அவரது குடிசையை நோக்கி வருவதைப் பார்த்து பயந்துவிட்டார். ஆனால் நாங்கள் யார் என்பதைத் தெரிந்துகொண்ட பிறகு, “வெறுமனே எங்களுக்குப் பிரசங்கிக்க வேண்டுமென்பதற்காகவே இவ்வளவு பிரயாசப்பட்டு நீங்கள் வந்திருக்கிறீர்கள் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. அதற்காக உங்களை பாராட்டுகிறோம்” எனச் சொன்னார். “மழையில் இரைதேடும் கோழிக்கு இரையல்லவோ முக்கியம்” என்ற உள்ளூர் பழமொழியை நாங்கள் சொன்னோம். அந்த ஆளுக்குப் புரிந்துவிட்டது.

“இந்த இடத்தில் பிரசங்கம் செய்யப்படுகிறதென்றால், இரட்சிப்பு எங்களை வந்தடைந்துவிட்டதென்று அர்த்தம்” என மற்றொரு விவசாயி சொன்னார். அநேகம்பேர் கேள்விகள் கேட்டனர், நாங்களும் பதிலளித்தோம். எங்களை மறுபடியும் வரச் சொன்னார்கள், நாங்களும் வருவதாக வாக்களித்தோம்.

ஓஷே அனாஸியில் நாங்கள் சுமார் 112 துண்டுப்பிரதிகளை அளித்தோம்—எங்களிடம் இருந்ததே இவ்வளவுதான். மொத்தத்தில், கிட்டத்தட்ட 220 பேருக்கு நாங்கள் சாட்சிகொடுத்தோம்.

திரும்பிச் செல்லுகையில், எங்களுக்கு வழி மறந்துவிட்டது. மறுபடியும் பண்ணைக்குப் போகும் வழியைக் கண்டுபிடிக்க ஒன்றரை மணிநேரங்கள் எடுத்திருக்கும், இருட்டாகிக்கொண்டே சென்றது. நாங்கள் யெகோவாவிடம் மௌனமாக ஜெபம் செய்துவிட்டு பயணத்தைத் தொடர தீர்மானித்தோம்; ஆக, பயமுறுத்தும் ஓடையில் இடுப்பளவு நீருக்குள் நாங்கள் நடந்து செல்ல வேண்டும்.

ஓடையைக் கடந்த பிற்பாடு வழியைக் கண்டுபிடித்துவிட்டோம், ஐந்தில் நான்கு பகுதி தூரத்தை கடந்துவிட்டோம் என்பதை எங்களாலேயே நம்ப முடியவில்லை. நாங்கள் தொலைந்துவிட்டதாய் யோசித்த வழி உண்மையில் குறுக்கு வழியாக இருந்ததால் குறைந்தபட்சம் சுமார் ஒரு மணிநேரத்திற்கு முன்னதாகவே நாங்கள் வந்துசேர்ந்துவிட்டோம்! சந்தேகமில்லாமல், நாங்கள் எல்லாரும் சந்தோஷத்தோடு யெகோவாவிற்கு நன்றி சொன்னோம். சூரியன் அஸ்தமிக்கையில், களைப்பாகவும் பசியோடும், அதேசமயத்தில் மிகுந்த சந்தோஷத்தோடும் நாங்கள் வீடு திரும்பினோம்.

பின்பு நாங்கள் அந்த அனுபவங்களைக் குறித்துப் பேசிக்கொண்டபோது ஒரு சகோதரி இப்படிச் சொன்னார்: “அந்த இடத்தைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். ஆகவே, விழப்போகிறேன் என்பது நான் ஏற்கெனவே எதிர்பார்த்த ஒன்றுதான். நற்செய்தியை பிரசங்கிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்குத்தான் நான் அங்கு போனேனே தவிர, உலகிலுள்ள பொன்னையும் வெள்ளியையும் கொட்டிக் கொடுத்திருந்தால்கூட நான் அங்கு போயிருக்க மாட்டேன்!” ஒரு சகோதரர் சொன்னார்: “ஒருவழியாக, நற்செய்தி ஓஷே அனாஸியை எட்டிவிட்டது!”

[பக்கம் 23-ன் படங்கள்]

ஒரு பாலத்தைக் கடக்கையில்

அட்டைப்பூச்சிகள் நிரம்பிய அநேக ஓடைகளை நாங்கள் கடந்துசென்றோம்

இந்த ஆபத்தான தடத்தின் கீழ்தான், ஊராசி ஆற்றைக் கடக்க ஒரு படகில் நாங்கள் ஏறினோம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்