பைபிளின் கருத்து
கிறிஸ்தவர்கள் யுத்தத் தவிர்ப்புவாதிகளாக இருக்க வேண்டுமா?
“முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ சபைகள் எப்படி இருந்தனவோ அதேபோல் சர்ச்சுகளும் யுத்தத் தவிர்ப்புவாதத்திற்கு (pacifism) திரும்பவேண்டும்.” ஐரிஷ் எழுத்தாளர் ஹூபர்ட் பட்லர்.
இரண்டாம் உலகப்போருக்குப்பின், யுகோஸ்லாவியாவில் தனது விஜயத்தை முடித்துக்கொண்ட ஹூபர்ட் பட்லர், 1947-ல் தன் கட்டுரை ஒன்றில் மேற்கண்ட வார்த்தைகளை தைரியமாக எழுதினார். ஆனால், சென்ற ஆண்டுவரை அந்தக் கட்டுரை பிரசுரிக்கப்படவில்லை! “போரின் சமயத்தில் நடந்த பயங்கரமான குற்றச்செயலுக்கு சர்ச் தன் மறைமுக ஆதரவை தந்ததையும், அது கிறிஸ்துவின் போதனையிலிருந்து அதிக தூரம் வழிவிலகி சென்றதையும் கண்டு” அவர் திடுக்கிட்டார்.
பிரபலமற்ற கொள்கைகள் அல்லது தொகுதியினர் சார்பாக பேசுவதற்கு பட்லர் கொஞ்சமும் அஞ்சவில்லை. அவ்வாறு, அவர் தன் கருத்துக்களை வெளியிட்டபோது, வேறு எவரும் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. “மற்ற எல்லா மதப் பிரிவினரைக் காட்டிலும் கொஞ்சம்கூட சூதுவாதில்லாத, மாசில்லாத, அரசியல் சாராத மதப்பிரிவினர் நிச்சயம்” யெகோவாவின் சாட்சிகளே என்று தி ஐரிஷ் டைம்ஸ் விவரித்தது. இவ்விதம் விவரிக்கப்பட்ட யெகோவாவின் சாட்சிகளுடைய தைரியமான நிலைநிற்கையை, சர்ச்சுகளின் நடத்தையோடு பட்லர் வேறுபடுத்திக்காட்டியபோது தன் கருத்தை பயமின்றி தெரிவித்தார். “யுகோஸ்லாவியாவின் அறிக்கை” என்ற தன் கட்டுரையில் சாட்சிகளைப் பற்றி பட்லர் இவ்வாறு எழுதினார்: “போர் செய்தல் நியாயமே என்று காட்டிட அரசியல்வாதிகளும் மதவாதிகளும் வாதிட்ட எல்லாவிதமான பொய் வாதங்களையும் ஏற்க மறுத்துவிட்ட” யெகோவாவின் சாட்சிகள் போரில் ஈடுபட ஒத்துக்கொள்ளவில்லை. அதன் காரணமாக யுக்கோஸ்லாவியா அதிகாரிகள் அவர்களை விசாரணைக்கு உட்படுத்தினார்கள்.
ஆனால், யெகோவாவின் சாட்சிகளை யுத்தத் தவிர்ப்புவாதிகள் (Pacifists) என்று விவரிப்பது வேதப்பூர்வமாக சரிதானா? “யுத்தத் தவிர்ப்புவாதி” என்றால் அர்த்தம் என்ன என்று அறிந்துகொள்வதிலேயே இதன் தெளிவான விளக்கம் பெருமளவு சார்ந்துள்ளது. சொல்லி மாளாத பெரும் துன்பங்களை எதிர்ப்பட நேர்ந்தாலும் போரில் ஆயுதங்களை கையில் எடுக்க மறுத்துவிட்ட யெகோவாவின் சாட்சிகளது தைரியத்தை பாராட்டியபோது ‘யுத்தத் தவிர்ப்புவாதம்’ என்ற இந்த வார்த்தையை பட்லர் உபயோகித்தார். விசனகரமாக, போரில் மும்மூரமாக ஈடுபட்டுள்ள பலர், யுத்தத் தவிர்ப்புவாதியாக இருக்கும் ஒருவரை வெறும் “ஒரு கோழையாக அல்லது தேசத்துரோகியாக, தன் தேசத்திற்கு தான் ஆற்றவேண்டிய கடமையிலிருந்து பின்வாங்குபவனாக” நோக்குகிறார்கள். இந்த நோக்குநிலை சரிதானா?
போரானாலும் சரி வன்முறையானாலும் சரி எதிர்த்தல்
வெப்ஸ்டர்ஸ் நைன்த்து நியூ காலிஜியேட் அகராதி, ‘சண்டையை, விசேஷமாக போரை வன்மையாகவும் தீவிரமாகவும் எதிர்க்கும்’ ஒருவரே யுத்தத் தவிர்ப்புவாதி என்று சொல்கிறது. இந்த அகராதி, “யுத்தத் தவிர்ப்புவாதம்” (“pacifism”) என்பதை “பிரச்சினைகளைத் தீர்க்கும் வழியாக போரையோ வன்முறையையோ நாடுவதை எதிர்த்தல், குறிப்பாக தார்மீக அல்லது மத அடிப்படையில் ஆயுதங்களை ஏந்த மறுத்துவிடுதல்” என்று வரையறுக்கிறது. ஆரம்பகால கிறிஸ்தவ சபையில் இருந்த விசுவாசிகளுக்கு இத்தகைய வரையறைகள் எப்படி பொருந்தும்?
உண்மைதான், அவர்கள் ‘தார்மீக மற்றும் மத அடிப்படையில் ஆயுதங்களை ஏந்த மறுத்துவிட்டார்கள். சண்டை, போர்’ என்ற எல்லாவற்றையும் தவிர்த்துவிட்டார்கள். ஏன்? ஏனென்றால், தம்மைப் பின்பற்றுவோர், “உலகத்தின் பாகமாக இல்லை” என்றும், “பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள்” என்றும் இயேசு கூறியதை அவர்கள் அறிந்திருந்தார்கள். (யோவான் 15:19, NW, மத்தேயு 26:52) பூர்வ சர்ச்சும் உலகமும் என்ற ஆங்கில புத்தகத்தில் ஒரு வரலாற்று ஆசிரியர் நம்மிடம் இவ்வாறு கூறுகிறார்: “மார்கஸ் அரேலியஸின் ஆட்சிவரையாவது [பொ.ச. 161-180], எந்த ஒரு கிறிஸ்தவரும் முழுக்காட்டுதலுக்குப்பின் ஒரு போர் சேவகனாக ஆகமாட்டார்.” பழமையில் புதிய உலகின் அஸ்திவாரங்கள் என்ற ஆங்கில புத்தகத்தில் மற்றொருவர் இவ்வாறு கூறுகிறார்: “போரிடுவது தவறு என்று பூர்வ கிறிஸ்தவர்கள் நினைத்தார்கள். பேரரசுக்கு போர்ச்சேவகர் தேவையென்றாலும்கூட படையில் அவர்கள் பணிபுரிய மாட்டார்கள்.”
நற்செய்தியைப் பிரசங்கிப்பதுதான் கிறிஸ்தவர்களுக்கு இருந்த பொறுப்பு. (மத்தேயு 24:14; 28:19, 20) கடவுளுடைய விரோதிகளுக்கு எதிராக போரிடவும் அவருடைய தண்டனைத் தீர்ப்பை நிறைவேற்றுகிறவர்களாக செயல்படவும் அவர்களுக்கு கடவுள் உத்தரவு தரவில்லை என்பதைப் புரிந்துகொண்டார்கள். (மத்தேயு 5:9; ரோமர் 12:17-21) பட்லர் குறிப்பிட்டதைப்போல், பெயரளவில் கிறிஸ்தவர்கள் என சொல்லிக்கொள்பவர்களே, ‘கிறிஸ்துவின் போதனையிலிருந்து அதிக தூரம் வழிவிலகி செல்வர்.’ நாடுகள் நடத்தும் போர்கள் என்னும் வலையில் நிச்சயம் சிக்கிக்கொள்பவர்களும் அவர்களே. அதன்பிறகு, பாதிரிமார் தங்கள் தங்கள் படைகளை ஆசீர்வதிக்கிறார்கள். பெரும்பாலும் போரிடும் இரு தரப்பிலிருந்தும் வெற்றிக்காக ஜெபிக்கிறார்கள். (ஒப்பிடுக: யோவான் 17:16; 18:36.) உதாரணத்திற்கு, கடந்த நூற்றாண்டுகளில் ரத்த ஆறுகளை ஓடவிட்ட பல போர்களில் புராட்டஸ்டண்டினரும் கத்தோலிக்கரும் ஈடுபட்டனர். அவற்றின் விளைவாக “மேற்கு ஐரோப்பாமீது வெறுப்புகள் [உமிழப்பட்டன], கடவுளின் கோபத்தைத் தீர்க்கவிருந்த கருவிகள் நாங்கள்தான் என்று இரு தரப்பினரும் சொல்லிக்கொண்டனர்” என்று கென்னத் கிளார்க் என்பவர் நாகரிகம் என்ற தன்னுடைய ஆங்கில புத்தகத்தில் எழுதுகிறார். இத்தகைய போர்களை நியாயம் என்று காட்டிடும் விவாதங்கள், “நிச்சயம், அரசாங்க அதிகாரிகளை பிரியப்படுத்தவேண்டும் என்ற ஒரு விருப்பத்திலிருந்தே உதயமாகின்றன. அத்தகைய விவாதங்கள் பூர்வ கிறிஸ்தவ கோட்பாட்டுக்கும் சுவிசேஷத்தின் உண்மையான அர்த்தத்திற்கும் எதிரானவை” என்று மெக்கிளன்டாக் மற்றும் ஸ்ட்ராங்கின் சைக்ளோப்பீடியா ஆஃப் பிப்லிக்கல், தியோலாஜிகல், அண்டு எக்லிஸ்டியாஸ்டிக்கல் லிட்ரெச்சர் சொல்கிறது.—யாக்கோபு 4:4.
ஒரேயடியாக போரை எதிர்க்கிறார்களா?
ஆனால், ‘பூர்வ கிறிஸ்தவ கோட்பாடும் சுவிசேஷத்தின் உண்மையான அர்த்தமும்’ நிஜமாகவே யுத்தத் தவிர்ப்புவாதம்தானா? முன்பு விவரித்தது போலவே, பூர்வ கிறிஸ்தவர்களை யுத்தத் தவிர்ப்புவாதிகள் என்று உண்மையில் வரையறுக்க முடியுமா? முடியாது! ஏன் முடியாது? ஒரு காரணம், போரிட கடவுளுக்கு உள்ள உரிமையை அவர்கள் அங்கீகரித்தனர். (யாத்திராகமம் 14:13, 14; 15:1-4; யோசுவா 10:14; ஏசாயா 30:30-32) மேலும், இஸ்ரவேல் தேசத்தார் இந்தப் பூமியில் கடவுளுக்கென்று ஒரே கருவியாக இருந்து சேவித்து வந்த காலத்தில் கடவுள் தமக்காக போரிடும்படி அவர்களை அனுமதித்தார். கடவுளின் அந்த உரிமையைப் பூர்வ கிறிஸ்தவர்கள் ஒருபோதும் சர்ச்சையாக எழுப்பவில்லை.—சங்கீதம் 144:1; அப்போஸ்தலர் 7:45; எபிரெயர் 11:32-34.
நீதியின் அடிப்படையில் இந்தப் பூமியிலிருந்து பொல்லாத ஆட்களை நீக்கிவிட கடவுளுக்கு உரிமை மாத்திரம் அல்ல, ஆனால் ஒரு பொறுப்பும் இருக்கிறது. தங்கள் வழிகளை மாற்றி திருந்திவிடுமாறு பல தீய ஆட்களுக்கு கடவுள் பொறுமையோடு கொடுக்கும் அழைப்புக்கு ஒருநாளும் அவர்கள் செவிகொடுப்பதில்லை. (ஏசாயா 45:22; மத்தேயு 7:13, 14) கடவுள் தீமையை பொறுத்துக்கொள்வதற்கும் ஓர் எல்லை இருக்கிறது. (ஏசாயா 61:2; அப்போஸ்தலர் 17:30) ஆகவே, கடைசியாக இந்தப் பூமியிலிருந்து தீய ஆட்களை கடவுள் வலுக்கட்டாயமாக நீக்கிவிடுவார் என்பதை கிறிஸ்தவர்கள் ஒத்துக்கொள்கிறார்கள். (2 பேதுரு 3:9, 10) “தேவனை அறியாதவர்களுக்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும் நீதியுள்ள ஆக்கினையைச் செலுத்தும்படிக்கு, கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதரோடும், ஜுவாலித்து எரிகிற அக்கினியோடும், வானத்திலிருந்து வெளிப்படும்போது அப்படியாகும்” என்பதாக பைபிள் தீர்க்கதரிசனம் முன்னுரைக்கிறது.—2 தெசலோனிக்கேயர் 1:6-9.
இந்தப் போரை, ‘சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில் நடக்கும் யுத்தம்’ அல்லது அர்மகெதோன் என்று பைபிளின் கடைசி புத்தகம் விவரிக்கிறது. (வெளிப்படுத்துதல் 16:14, 16) இந்தப் போரை இயேசு கிறிஸ்து முன்நின்று வழிநடத்திக்கொண்டு போவார் என்றும், அவர் “நீதியாய் நியாயந்தீர்த்து யுத்தம்பண்ணுகிறார்” என்றும் அது சொல்கிறது. (வெளிப்படுத்துதல் 19:11, 14, 15) இயேசு கிறிஸ்து மிகப் பொருத்தமாகவே, “சமாதானப்பிரபு” என்று அழைக்கப்படுகிறார். (ஏசாயா 9:6) ஆனால் அவர் யுத்தத் தவிர்ப்புவாதி அல்ல. கடவுளின் கலகக்கார விரோதிகளைப் பரலோகத்திலிருந்து நீக்கிவிட அவர் ஏற்கெனவே பரலோகத்தில் போரிட்டார். (வெளிப்படுத்துதல் 12:7-9) ‘பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுப்பதற்காக’ அவர் வெகுவிரைவில் மற்றொரு போரை தொடுக்கப்போகிறார். ஆனால், பூமியில் அவரைப் பின்பற்றும் நபர்கள் அந்தத் தெய்வீக நியாயத்தீர்ப்பில் பங்கேற்க மாட்டார்கள்.—வெளிப்படுத்துதல் 11:17, 18.
உண்மை கிறிஸ்தவர்கள் அமைதியை விரும்புகிறார்கள். இந்த உலகில் இராணுவ, அரசியல், மற்றும் இன கலவரங்கள் மூளும்போது அவர்கள் முழுமையாக நடுநிலைமை வகிக்கிறார்கள். ஆனால், வெளிப்படையாக சொல்லவேண்டுமென்றால், அவர்கள் யுத்தத் தவிர்ப்புவாதிகள் அல்ல. ஏன்? ஏனென்றால், இந்தப் பூமியில் கடவுளுடைய சித்தத்தை அமல்படுத்தும் ஒரு போரை, அதாவது கடவுளுடைய சர்வலோக பேரரசாட்சியின் பேரில் எழுந்த விவாதங்களை தீர்த்துவிடும் ஒரு போரை, அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் எல்லா விரோதிகளையும் நீக்கிவிட்டு மறுபடியும் அமைதியை என்றுமாக நிலைநிறுத்தப்போகும் ஒரு போரை அவர்கள் வரவேற்கிறார்கள்.—எரேமியா 25:31-33; தானியேல் 2:44; மத்தேயு 6:9, 10.
[பக்கம் 22-ன் படத்திற்கான நன்றி]
பரிகசிக்கப்படும் கிறிஸ்து/ The Doré Bible Illustrations/Dover Publications, Inc.