பைபிளின் கருத்து
பிள்ளைகள் தாங்களாகவே மதத்தைத் தெரிவு செய்ய வேண்டுமா?
பிள்ளை பிறக்கும் சமயத்திலிருந்து வளரிளமைப் பருவத்தை அடையும்வரை அதற்காக பெற்றோர் எல்லா தெரிவுகளையும் செய்கின்றனர். அதேசமயத்தில், பிள்ளையின் விருப்பத்தை முடிந்தபோதெல்லாம் கருத்தில்கொண்டு, எச்சமயத்தில் கண்டிப்பில்லாமல் தாட்சண்யம் காண்பிப்பதென்பதை ஞானமுள்ள ஒரு பெற்றோர் அறிந்திருக்கிறார்.
ஆயினும், பிள்ளையே தெரிவு செய்வதற்கு எந்தளவுக்கு உரிமை அளிப்பதென்பது பெற்றோருக்கு ஒரு சவாலாக இருக்கலாம். பிள்ளைகள் சரியான தெரிவுகள் செய்யலாம் என்பதும் போதுமானளவு சுதந்திரத்திலிருந்து நன்மை பெறலாம் என்பதும் உண்மையாக இருந்தாலும், துன்பத்தில் விளைவடையும் தவறான தெரிவுகளையும் அவர்கள் செய்யலாம் என்பதும் உண்மையாய் இருக்கிறது.—2 இராஜாக்கள் 2:23-25; எபேசியர் 6:1-3.
உதாரணத்திற்கு, பிள்ளைகள் சத்துள்ள உணவுகளைக் காட்டிலும் நொறுக்குத்தீனிகளையே பெரும்பாலும் தேர்ந்தெடுக்கின்றனர். ஏன்? ஏனெனில் சிறுவயதாகையால் அவர்களால் தாங்களாகவே சரியாக தீர்மானங்களெடுக்க முடிவதில்லை. பிற்பாடு தானாகவே சத்துள்ள உணவை தேர்ந்தெடுக்க ஆரம்பிப்பார்கள் என நினைத்து, இந்த விஷயத்தில், பெற்றோர் தங்களது பிள்ளைகளை போனால் போகட்டும் என்று சிறிதும் கட்டுப்பாடின்றி விட்டுவிடுவது ஞானமான காரியமாகுமா? இல்லை. அதற்கு மாறாக, பிள்ளைகளது எதிர்கால நலனை மனதில்கொண்டு பெற்றோர் அவர்களுக்காக தெரிவுகள் செய்ய வேண்டும்.
ஆகவே, உணவு, உடை, சிகையலங்காரம், ஒழுக்கம் ஆகியவற்றைக் குறித்து பொருத்தமாகவே பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்காக தெரிவுகள் செய்கின்றனர். ஆனால் மதத்தைப் பற்றியதென்ன? பெற்றோர் அதையும் அவர்களுக்காக தெரிவு செய்ய வேண்டுமா?
தெரிவு
பெற்றோர் தங்களது மத நம்பிக்கைகளை பிள்ளைகள்மீது திணிக்கக்கூடாதென்று சிலர் வாதாடலாம். உண்மையில், 160-க்கும் அதிகமான ஆண்டுகளுக்கு முன்பு, கிறிஸ்தவ நம்பிக்கைகளைப் பெற்றிருப்பதாக சொல்லிக்கொண்ட சிலர், “பிள்ளைகள் குறிப்பிட்ட ஏதோவொரு மத நம்பிக்கைமீது மட்டுமே தங்கள் மனதை ஊன்றவைக்காமலிருக்க வேண்டுமென்றால் அவர்களுக்கு மதத்தைக் கற்பிக்கக்கூடாது, ஆனால் அவர்களே ஒரு தெரிவை செய்யுமளவுக்கு வளர்ந்தபிறகும் ஒன்றைத் தெரிந்தெடுக்கும் வரையும் அவர்களது சொந்தப் போக்கில் விட்டுவிட வேண்டும்,” என்ற கருத்தை முன்னேற்றுவித்தனர்.
எனினும், இந்த எண்ணம் பைபிளின் கருத்தோடு ஒத்துப்போவதில்லை. பிறப்பிலிருந்தே மத நம்பிக்கைகளை பிள்ளைகளுக்கு ஊட்டி வளர்ப்பதன் அவசியத்தை பைபிள் வலியுறுத்துகிறது. நீதிமொழிகள் 22:6 இவ்வாறு சொல்கிறது: “பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்.”
“பிள்ளை” என மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் எபிரெய வார்த்தையானது, சிசுப் பிராயம் முதல் வளரிளமைப் பிராயம் வரை உள்ளடக்குகிறது. சிறு வயதிலேயே கற்றுக்கொள்வதன் அவசியத்தைக் குறித்து, அ.ஐ.மா.-வின் இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஜோசஃப் எம். ஹன்ட் இவ்வாறு சொன்னார்: “ஒரு பிள்ளையின் வளர்ச்சி முதல் நான்கு அல்லது ஐந்து வருடங்களின்போதுதான் மிக வேகமானதாக இருக்கிறது, மேலும் மிக எளிதில் மாற்றியமைக்கத்தக்க நிலையிலிருக்கிறது. . . . முதல் பிறந்தநாளுக்கு முன்பு [பிள்ளையின்] அடிப்படை திறமைகள் அநேகமாக 20 சதவீதம் வளர்ச்சியடைகின்றன, நான்கு வயதாவதற்கு முன்பு அநேகமாக பாதியளவு வளர்ச்சியடைகின்றன.” இது, பிள்ளைக்கு சிறு வயதிலேயே பெற்றோர் ஞானமான வழிநடத்துதல் அளித்து கடவுளுடைய வழிகளில் பயிற்றுவிப்பது முக்கியமானது என்ற பைபிளின் ஏவப்பட்டெழுதப்பட்ட ஆலோசனையை வெறுமனே வலியுறுத்துகிறது.—உபாகமம் 11:18-21.
தேவபயமுள்ள பெற்றோர் தங்கள் பிள்ளைகளில் யெகோவாவிற்கான அன்பை ஊட்டி வளர்க்க வேண்டுமென வேதவாக்கியங்கள் அறிவுரையளிக்கின்றன. உபாகமம் 6:5-7 இவ்வாறு சொல்கிறது: ‘நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக. இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக்கடவது. நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, [“பதியவைத்து,” NW] நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசு.’ “பதியவைத்து” என மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் எபிரெய வினைச்சொல், சாணைக்கல் போன்றவற்றின்மீது ஒரு கருவியை தீட்டுவதன் கருத்தை அளிக்கிறது. ஒருசில முறை தீட்டுவதன் மூலம் அக்கருவி கூர்மையாகாது, ஆனால் தளரா ஊக்கத்துடன் மறுபடியும் மறுபடியுமாக தீட்ட வேண்டும். தி நியூ இங்லிஷ் பைபிள் இந்த எபிரெய வினைச்சொல்லை “திரும்பத்திரும்பச்சொல்” என மொழிபெயர்த்திருக்கிறது. தெளிவாகவே, ‘பதியவைத்தல்’ என்பது மனதில் நிரந்தரமாக பதிய வைப்பதை அர்த்தப்படுத்துகிறது.—நீதிமொழிகள் 27:17-ஐ ஒப்பிடுக.
ஆகவே, உண்மையான கிறிஸ்தவ பெற்றோர் தங்களது மத நம்பிக்கைகளை பிள்ளைகளுக்கு புகட்ட வேண்டிய தங்களது கடமைக்கு ஆழ்ந்த கவனம் செலுத்த வேண்டும். பிள்ளைகளே தெரிவுசெய்துகொள்ளும்படி விட்டுவிடுவதன் மூலம் அவர்கள் இந்தப் பொறுப்பை தட்டிக்கழித்துவிட முடியாது. இது, தங்கள் ‘பிள்ளைகளை’ கூட்டங்களுக்கு அழைத்துச்செல்வதை உட்படுத்தும். அங்கே பெற்றோர் பிள்ளைகள் பக்கத்தில் உட்கார்ந்து, வேதவாக்கிய கலந்தாலோசிப்புகளுக்கு கவனம் செலுத்துவதாலும் அவற்றில் பங்கெடுப்பதாலும் ஒற்றுமையுள்ள ஒரு குடும்பம் அடையும் ஆவிக்குரிய நன்மையை அவர்கள் மதித்துணருவதற்கு உதவலாம்.—உபாகமம் 31:12, 13; ஏசாயா 48:17-19; 2 தீமோத்தேயு 1:5; 3:15.
பெற்றோரின் பொறுப்பு
சத்துள்ள உணவு என பிள்ளையிடம் வெறுமனே சொல்வதுதானே அந்தப் பிள்ளை அதை ஆர்வத்தோடு சாப்பிடும் என்று அர்த்தப்படுத்தாது. இவ்வாறு, பிள்ளையின் ருசிக்கு ஏற்ப, ஞானமுள்ள ஒரு தாய்க்கு இந்த அத்தியாவசிய உணவுப் பொருட்களை முடிந்தளவு சுவைமிக்கதாய் சமைக்க தெரியும். மேலும், பிள்ளையால் எந்தளவுக்கு ஜீரணிக்க முடியும் என்பதைக் கருத்தில் கொண்டு அதற்கேற்ப அவள் உணவை சமைக்கிறாள் என்பதில் சந்தேகமில்லை.
அதேவிதமாக, முதலில் ஒரு பிள்ளை மத போதனையை ஏற்றுக்கொள்ளாமலிருக்கலாம், அதுமட்டுமில்லாமல் அந்தக் காரியத்தை நியாயப்படுத்தி பேச எடுக்கும் முயற்சி பலனற்றுப்போவதை பெற்றோர் உணரலாம். எனினும், பைபிளின் கட்டளை தெளிவாயிருக்கிறது—பெற்றோர் தங்கள் பிள்ளைகளை சிசுப் பருவத்திலிருந்தே பயிற்றுவிக்க தங்களால் ஆனதை செய்ய வேண்டும். ஆகவே, ஞானமான பெற்றோர் பிள்ளைகளின் கிரகிக்கும் திறமையைக் கருத்தில்கொண்டு மத போதனையை அவர்களுக்குப் பிரியமான விதத்தில் அளிப்பதன் மூலம் அதை அவர்களுக்கு சுவையுள்ளதாக்குகின்றனர்.
அன்புள்ள பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கைக்குத் தேவைப்படும் அத்தியாவசிய காரியங்களை அளிக்க வேண்டியதன் பொறுப்பை நன்கு உணருகின்றனர். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பிள்ளையின் தேவைகளை பெற்றோரைவிட வேறு எவரும் அதிக நன்றாக தெரிந்துவைத்திருக்க முடியாது. இதற்கேற்ப, சரீரப்பிரகாரமாகவும் ஆவிக்குரிய பிரகாரமாகவும் தேவைகளை கவனித்துக்கொள்ள வேண்டிய முக்கிய பொறுப்பை பைபிள் பெற்றோரிடம் ஒப்படைக்கிறது, முக்கியமாக தந்தைக்கு அளிக்கிறது. (எபேசியர் 6:4) இவ்வாறு, வேறு எவரிடமாவது இந்தப் பொறுப்பை ஒப்படைப்பதன் மூலம் பெற்றோர் தங்களது பொறுப்பிலிருந்து நழுவிவிடக்கூடாது. பெற்றோர் தங்களுக்கு அளிக்கப்படும் உதவியை பிரயோஜனப்படுத்திக்கொண்டாலும், மத போதனையை அளிக்கும் பெற்றோருக்கான பொறுப்பை இது நிறைவு செய்வதாய் மட்டுமே இருக்கும், அதிலிருந்து அவர்களை விடுவிக்காது.—1 தீமோத்தேயு 5:8.
ஒவ்வொரு நபரும், வாழ்க்கையில் ஏதோவொரு சமயத்தில், தான் எந்த மத நம்பிக்கைகளைப் பின்பற்றுவார் என்பதைத் தீர்மானிப்பார். கிறிஸ்தவ பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு மத போதனையை சிறுவயதிலிருந்தே அளிப்பதற்கு தனிப்பட்ட பொறுப்பை ஏற்றுக்கொண்டு, நியாயமான நியமங்களின் அடிப்படையில் சீர்தூக்கிப் பார்ப்பதெப்படி என்பதன்பேரில் போதனை அளிக்க நேரத்தை செலவிட்டால், பிற்பாடு வாழ்க்கையில் அந்தப் பிள்ளை செய்யப்போகும் தெரிவு பெரும்பாலும் சரியானதாகவே இருக்கும்.—2 நாளாகமம் 34:1, 2; நீதிமொழிகள் 2:1-9.
[பக்கம் 26-ன் படத்திற்கான நன்றி]
The Doré Bible Illustrations/Dover Publications, Inc.