சிலிர்ப்பூட்டிய சந்திப்பு
தான் தத்தெடுக்கப்பட்டவன் என்று தெரியவந்தபோது, டேணா ஃபால்ட்ஸுக்கு எட்டு வயது. ஆண்டுகள் செல்லச்செல்ல, ‘என் அம்மா யார்? எப்படி இருப்பார்கள்? என்னைத் தத்தாக ஏன் கொடுத்தார்கள்? எனக்கு அண்ணன் தம்பிமார்களோ அக்கா தங்கைமார்களோ இருக்கிறார்களா?’ என்றெல்லாம் கேட்க ஆரம்பித்தான். பெற்ற தாயைக் கடைசியில் டேணா கண்டுபிடித்தது எப்படி என்பது பற்றியும் அதைத் தொடர்ந்துவந்த கிளர்ச்சியூட்டிய சந்திப்பைப் பற்றியும் வாசியுங்கள்.
ஆகஸ்ட் 1, 1966-ல் அ.ஐ.மா.-வைச் சேர்ந்த அலாஸ்காவிலுள்ள கெச்சிகன் என்னுமிடத்தில் நான் பிறந்தேன். என் அக்காவான ப்பம் என்னைவிட இரண்டு வயது பெரியவள். எங்கள் அப்பா இந்திய விவகாரங்கள் செயலகத்தில் ஒரு சமூக சேவகராயிருந்தார், எனவே அடிக்கடி மாற்றல் செய்யப்பட்டார். நாங்கள் அலாஸ்காவில் ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு இடமாற்றம் செய்துகொண்டே வந்தோம். பிறகு, அயோவா, ஓக்லஹாமா, அரிஜோனா, ஆரிகான் ஆகிய இடங்களில் நாங்கள் வசித்தோம்.
1975-ஆம் ஆண்டு கோடைகாலத்தில் விஸ்கான்ஸினிலிருந்த உறவினர்களை நாங்கள் சந்தித்துவந்தபோது, என் சித்தப்பா பெரியப்பா ஆகியோரின் மகன்கள் மற்றொரு சித்தப்பா மகனைக் கேலி செய்தார்கள். “அவன் தத்தெடுக்கப்பட்டவன், அதனால் உண்மையில் ஃபால்ட்ஸ் குடும்பத்தைச் சேர்ந்தவனல்ல” என்று அவர்கள் சொன்னார்கள். நாங்கள் வீடுதிரும்பிய பின்பு, அம்மாவிடம் இதைப் பற்றி நான் கேட்டேன். அவர்களுடைய முகம் அதிர்ச்சியால் மாறிவிட்டதைக் கண்டு ஆச்சரியப்பட்டேன். தத்தெடுத்தல் என்றால் என்ன என்று அவர்கள் விளக்கினார்கள். அன்று இரவு, நானும் என் அக்காவும்கூட தத்தெடுக்கப்பட்டவர்களே என்று அவர்களுடைய கண்ணிலிருந்து கண்ணீர் வடிய சொன்னார்கள்.
தத்தெடுத்தல் என்பது அப்போதைக்கு எனக்கு அவ்வளவு முக்கியமாய்த் தெரியவில்லை, கொஞ்சக்காலமாக, அதைப் பற்றி எப்பொழுதாவதுதான் நான் நினைத்துவந்தேன். எனக்கு அப்பாவும் அம்மாவும் இருந்தார்கள்; வாழ்க்கையோ சாதாரணமாய் இருப்பதாகவே தோன்றியது. குடும்பமாக ஓர் இடத்தில் நிலையாய்க் குடியேறிவிடுவதற்காக என் பெற்றோர் இடமாற்றம் செய்வதை நிறுத்தத் தீர்மானித்தனர். எனக்கு ஒன்பது வயதானபோது, நாங்கள் வாஷிங்டனிலுள்ள வான்கூவரில் குடியேறினோம். நானும் அப்பாவும் மிகவும் நெருக்கமாக இருந்தோம், அதே சமயத்தில் எனக்கு அம்மாவிடம் நெருக்கம் குறைவு. நான் சில சமயங்களில் சுதந்திரப்போக்குள்ளவனாகவும், கலகத்தனமுள்ளவனாகவும் இருந்தேன். இவ்வாறு இருந்ததால் அம்மாவுக்கு ஏற்பட்ட ஏமாற்றமே, எங்கள் இருவருக்கும் இடையில் இடைவெளியை ஏற்படுத்தினது போலும்.
காதலும் கல்லூரியும்
நான் மேல்நிலைக் கல்வி படித்துக்கொண்டிருந்தபோது, ட்ரீனாவைச் சந்தித்தேன், கண்டதும் காதல் கொண்டோம். படிப்பை முடித்த பிறகு, ஆரிகானைச் சேர்ந்த கார்வாலிஸில் இருந்த ஆரிகான் அரசு பல்கலைக்கழகத்தில் கலைப் பயிற்சிபெற உதவித்தொகை பெற்றேன். மேல்நிலைக் கல்வி பயின்றுவந்த ட்ரீனா படிப்பை முடிக்க இன்னும் ஒரு வருடம் இருந்ததால், அவளுடன் இருப்பதற்காக வான்கூவருக்குப் போவதும் வருவதுமாக என் ஓய்வு நேரத்தைச் செலவிட்டேன். கல்லூரியில் அவ்வளவாய்க் கருத்தூன்றி கல்வி கற்கவில்லை, ஆனால் எப்படியும் தேறிவிடுவேன் என்று ஊகித்துக்கொண்டேன். என் முதல் ரிப்போர்ட் கார்டு என்னை விசனப்படுத்தியது—நான் எப்போதும் எடுத்த மதிப்பெண்களிலேயே மிகவும் மோசமான மதிப்பெண்களையுடையதாய் அது இருந்தது! எனக்குத் தர்மசங்கடமாகிவிட்டது. ஆனால் ட்ரீனாவைச் சந்திப்பதை நான் நிறுத்தவில்லை; அவ்வாறு சந்திக்கச் செல்லும்போது நான் படிப்பதற்காக என் புத்தகங்களையும் என்னுடன் எடுத்துச் சென்றேன்.
பிறகு, ஒருநாள், வான்கூவரிலிருந்து மோட்டார் சைக்கிளில் பள்ளிக்குத் திரும்பிச்செல்லுகையில், ஒரு பெரும் விபத்துக்குள்ளானேன். அதற்குப் பிறகு கொஞ்சக் காலத்துக்குள்ளாகவே, தெருவைக் கடப்பதற்காகப் போடப்பட்ட பாதையில் நடந்து போய்க்கொண்டிருக்கையில், ஒரு கார் மோதி, அதைவிட மோசமாகக் காயமடைந்தேன். நான் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தேன், ஆகவே கல்லூரிக்குச் செல்வதற்கான ஆசை அறவே அற்றுப்போனது.
மதத்தில் ஆர்வம்
காலப்போக்கில், நானும் ட்ரீனாவும் ஒன்றாய்ச் சேர்ந்து வாழ ஆரம்பித்தோம். கடவுளில் எங்களுக்கு நம்பிக்கை இருந்தது, ஆகவே அவரைப் பற்றி அறிந்துகொள்ள விரும்பினோம். என்றபோதிலும், சர்ச்சுகள் பாசாங்கு செய்பவையாய் இருந்தன என்று நாங்கள் உணர்ந்தோம். ஆகவே நாங்களாகவே பைபிளை வாசிக்க ஆரம்பித்தோம், ஆனால் எங்களுக்குத் தலையும் புரியவில்லை, வாலும் புரியவில்லை.
ஒருநாள், ஆரிகானைச் சேர்ந்த போர்ட்லண்டில் நான் வேலை பார்த்துக்கொண்டிருக்கையில், உடன் பணியாளர்கள் ஒருவரைக் கேலி செய்ய ஆரம்பித்தனர். நானோ, இதுவரை பார்த்த மனிதர்களிலேயே அவரை மிக அருமையானவராய் எண்ணினேன். ரேண்டி என்ற பெயர்கொண்ட அவர், அந்தத் தொல்லைகளை அமைதியாக பொறுத்துக்கொண்டார். அந்த நாளில் அதற்கப்புறம் நான் அவரிடம் கேட்டேன்: “நீங்க என்னவோ ஒரு ஊழியர்ன்னு நான் கேள்விப்படுறேனே, அது என்ன?”
“உண்மைதான், நான் ஒரு ஊழியர்,” என்று அவர் சொன்னார்.
“எந்த மத அமைப்பில?” என்று நான் கேட்டேன்.
“நான் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவன்.”
“யெகோவாவின் சாட்சிகள்னா யார்?”
“உண்மையாவே கேக்குறீங்களா?” என ஆச்சரியத்துடன் கேட்டார்.
“ஆமாம்.” “யெகோவாவின் சாட்சிகள்னா யார்? நான் தெரிந்துகொள்ளலாமா?” என்று கேட்டேன்.
“ஹூம்,” என்று புன்னகைத்துவிட்டு, “நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். சாப்பாட்டு நேரத்தில் நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?” என கேட்டார்.
அதுவே, சாப்பாட்டு நேர பைபிள் கலந்தாலோசிப்புகள் பலவற்றின் ஆரம்பமாக இருந்தது. ஓர் இரவில் அவர்களைப் பற்றி ட்ரீனாவிடம் சொன்னேன். “யெகோவாவின் சாட்சிகளோடு நீங்க பேசாதீங்க!” என்று அவள் எச்சரித்தாள். “அவங்க வினோதமானவங்க! அவங்க கிறிஸ்தவங்களே இல்ல. அவங்க கிறிஸ்மஸ் கொண்டாடுறதில்ல.” மேலும் யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி அவள் கேள்விப்பட்டிருந்த வேறு விஷயங்களையும் அடுக்கிக்கொண்டே போனாள்.
“உண்மைக்கு மாறான ஏராளமான விஷயங்களை யாரோ உனக்குச் சொல்லியிருக்கிறாங்க,” என்று நான் சொன்னேன். வெகுநேரம் பேசினபிறகு, முழு உண்மையும் அவளுக்குத் தெரியவில்லை என்பதை அவள் நம்பும்படி செய்ய என்னால் முடிந்தது. அதன் பிறகு, ரேண்டியிடம் என்னைக் கேள்விகள் கேட்க வைத்தாள். தெளிவான வேதப்பூர்வமான பதில்கள் பலவற்றோடு நானும் திரும்புவேன். கடைசியில், “இதெல்லாம் பைபிளில் இருந்தது எனக்குத் தெரியவே தெரியாது. ஆனால் அவங்க வினோதமானவங்கன்னுதான் இன்னும் எனக்குத் தோணுது. நீங்க அவரோடு பைபிளைப் பற்றி பேசிட்டே இருக்கணும்னா இருங்க, எனக்கு ஒண்ணும் கவலை இல்ல; ஆனால் வீட்டுக்கு வந்ததும் அதையெல்லாம் என்னிடம் சும்மா சொல்லிக்கிட்டே இருக்காதீங்க” என்று ட்ரீனா சொல்லிவிட்டாள்.
துயரமான காலப்பகுதி
நான் பைபிளிலிருந்து எதைப் படித்துவந்தேனோ அதை நம்பினேன், ஆனால் என்னால் அதற்கேற்றபடி வாழத்தான் முடியாது என்று நினைத்தேன். நானும் ட்ரீனாவும் அடிக்கடி சண்டைபோட்டுக்கொண்டே இருப்பதாகத் தோன்றியது. ஆகவே நானும் என் நண்பன் ஒருவனும் எங்கள் காதலிகளை விட்டுச்சென்று ஓக்லஹாமாவில் ஒரு புதிய வாழ்வை ஆரம்பிக்கத் தீர்மானித்தோம். நான் வேலையிலிருந்து விடுப்பு பெறுவதற்கான ஏற்பாட்டைச் செய்தேன். சீக்கிரத்தில், என் நண்பனும் நானும் டெக்ஸஸ் எல்லைப் பகுதியிலிருந்த ஒரு சிறிய நகரில் ஓர் அடுக்கு மாடி வீட்டில் குடியேறினோம். ட்ரீனா இல்லாத வெறுமையை சீக்கிரத்திலேயே நான் உணர ஆரம்பித்தேன், ஆனால் எப்படியோ நான் வாழ்வை அனுபவிக்கப் போவதாகத் தீர்மானித்தேன்.
டெக்ஸஸில் 19 வயதே மது அருந்துவதற்கான சட்டப்பூர்வ வயது என்று எனக்குத் தெரிந்தது, ஆகவே என் நண்பன் எங்கோ வெளியூர் சென்றிருந்த சமயத்தில், பிரசித்தி பெற்ற ராக்-அன்-ரோல் பார் ஒன்றில் குடித்து மகிழ்வதற்காக ஒரு நாள் இரவில் டெக்ஸஸின் எல்லையைக் கடந்து சென்றுவிட்டேன். நான் நிஜமாகவே அதிகம் குடித்துவிட்டேன், என் காரைச் சேதப்படுத்திவிட்டேன், பிறகு சிறையில் போடப்பட்டேன். சமயம் வந்தபோது, என் அப்பாவிடம் தொடர்புகொள்ள முடிந்தது, அவர் என்னைச் சிறையிலிருந்து ஜாமீனில் மீட்டார். மேலும், மறுபடியும் ட்ரீனா என்னை ஏற்றுக்கொண்டதற்கு நான் எவ்வளவு நன்றியுடன் இருந்தேன்! என் பழைய வேலைக்குத் திரும்பிச் சென்றேன், திரும்பவும் ரேண்டியுடன் பைபிள் கலந்தாலோசிப்புகளை ஆரம்பித்தேன்.
என் வாழ்வைக் கட்டுப்படுத்துதல்
நான் முதல் முறையாக யெகோவாவின் சாட்சிகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்ததிலிருந்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகியிருந்தன; நான் பைபிள் படிப்பில் அதிகம் ஈடுபட தீர்மானித்தேன். இப்போது எனக்கு 20 வயது ஆகியிருந்தது. இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் நான் குறிப்பிட்டிருந்த விஷயமான, என்னைத் தத்தெடுத்தது பற்றிய கேள்விகள் என்னை விடாது தொந்தரவு செய்ய ஆரம்பித்தன. ஆகவே என்னைப் பெற்ற தாய் யாரென்று அறிந்துகொள்ள வலைவீசித் தேட ஆரம்பித்தேன்.
நான் பிறந்த அலாஸ்காவிலிருந்த ஆஸ்பத்திரிக்குத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, எவ்வாறு தேடுவது என்று கேட்டேன். என்ன செய்யவேண்டும் என்று தெரிந்துகொண்ட பிறகு, என் பிறப்புச் சான்றிதழின் மூலப் பிரதியின் ஒரு நகலைப் பெற்றேன். என் தாயின் பெயர் சான்ட்ரா லி ஹெர்ஷ் என்று கண்டுபிடித்தேன்; ஆனால் என் தந்தையைப் பற்றிய பதிவு அதில் இல்லை. நான் பிறந்தபோது சான்ட்ராவுக்கு 19 வயதே ஆகியிருந்தது. ஆகவே, அவர்கள் பயமுறுத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும், திருமணமாகாமலே கர்ப்பமான பெண்ணாக இருந்ததால், சங்கடமான தீர்மானத்தை எடுத்திருந்திருக்க வேண்டும் என்றும் நானாகவே ஊகித்துக்கொண்டேன். என் தாயைக் கண்டுபிடிப்பதற்குத் தேவையான தகவல் என் பிறப்புச் சான்றிதழில் போதியளவாய் இருக்கவில்லை.
அதே சமயத்தில், ரேண்டியுடன் பைபிள் படிப்பு படித்துக் கொண்டிருந்ததன் விளைவாக, நான் மெய் மதத்தைக் கண்டுபிடித்துவிட்டேன் என்று உறுதியுடன் இருந்தேன். ஆனால் அசுத்தப்படுத்தும் புகையிலை உபயோகத்தை விட்டுவிடுவதில் திரும்பத்திரும்ப தவறினேன். (2 கொரிந்தியர் 7:1) யெகோவாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமற்றவனாக நான் உணர்ந்தேன். பிறகு, ராஜ்ய மன்றத்திலிருந்த ஒரு சாட்சி என்னிடம் சொன்ன ஒரு விஷயம் எனக்கு உண்மையிலேயே உதவினது. நாம் தவறும்படி செய்வது சாத்தானே என்றும், சிலர் அவ்வாறு விட்டுவிடுவதன் மூலமாக நித்திய ஜீவனைப் பெறுவதில் தோற்றுப்போய்விடுவது விசனகரமானது என்றும் அவர் குறிப்பிட்டார். “நாம் யெகோவாமேல் நம் பாரங்களை வைத்துவிட வேண்டும்,” என்றும், “துன்பங்கள் ஏற்படும்போது நமக்கு உதவி செய்வதற்காக முற்றிலும் அவரில் சார்ந்திருக்க வேண்டும்” என்றும் அவர் சொன்னார்.—சங்கீதம் 55:22, NW.
நான் கேட்க வேண்டியிருந்தது அதுவேதான்! அவர் சொன்னதை நான் கடைப்பிடிக்க ஆரம்பித்தேன், அடிக்கடி யெகோவாவின் உதவிக்காகவும் ஜெபித்தேன். சீக்கிரத்தில், புகையிலை உபயோகத்தை விட்டுவிட்டேன். நானும் ட்ரீனாவும் திருமணம் செய்துகொண்டோம், நானும் ஒழுங்காக பைபிள் படிப்புகளில் கலந்துகொண்டேன். தக்க சமயத்தில், ட்ரீனாவும் படிக்க ஆரம்பித்தாள். ஜூன் 9, 1991-ல் யெகோவாவுக்கு நான் ஒப்புக்கொடுத்திருந்ததைத் தண்ணீர் முழுக்காட்டுதலினால் அடையாளப்படுத்திக் காட்டினேன். அதற்குப் பிறகு இரண்டு வாரத்துக்குள்ளாகவே, எங்கள் முதல் மகள், பிரியனா ஜின் பிறந்தாள்.
அப்பாவுடன் என் உறவு
நானும் என் அப்பாவும் மிக நெருக்கமாய் இருந்தோம். அவர் மிகவும் தயவானவராகவும், நான் ஏமாற்றமடைந்த சந்தர்ப்பங்களிலெல்லாம் என்னை உற்சாகப்படுத்தினவராகவும் இருந்தார். ஆனாலும், எனக்கு சிட்சை தேவைப்பட்டபோது அவர் உறுதியாக இருந்தார். ஆகவே, 1991-ன் ஆரம்பப் பகுதியில், சாகடிக்கும் நுரையீரல் புற்றுநோய் அப்பாவுக்கு இருந்ததை நான் அறியவந்தபோது மிகவும் சங்கடமாய் இருந்தது. அச் சமயத்தில் அப்பாவும் அம்மாவும் மொன்டானாவைச் சேர்ந்த ஹேமல்டனுக்கு மாறிச்சென்றிருந்தார்கள். அவரைப் பார்ப்பதற்கும் அம்மாவிற்கு உணர்ச்சிப்பூர்வ ஆதரவு அளிப்பதற்கும் நாங்கள் அடிக்கடி அங்குப் பயணம் செய்துவந்தோம்.
நாங்கள் சந்திக்கச் சென்றுவந்தபோது, இருப்பதெல்லாம் இந்த வாழ்க்கைதானா? என்ற புத்தகத்தை அப்பாவுக்குக் கொடுக்க முடிந்தது. அதை வாசிப்பதாக உறுதியுடன் கூறினதோடு, தன் குடும்ப நலனைப் பற்றி தான் கவலைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். நான் கடைசியாகப் பார்க்கச் சென்றிருந்தபோது, நான் அவருடைய மகனாக இருப்பதை எண்ணி எவ்வளவாய்ப் பெருமைப்பட்டார் என்றும் என்னை எவ்வளவாய் நேசித்தார் என்றும் கூறினார். பிறகு, கண்ணீர் பீறிட்டு வந்தபோது, தன் தலையை ஜன்னல் பக்கமாய்த் திருப்பிக்கொண்டார். நான் அங்கிருந்து வெளியேறுவதற்கு முன்பு பல தடவை நாங்கள் ஒருவரையொருவர் கட்டித்தழுவிக்கொண்டோம். அப்பா நவம்பர் 21, 1991-ல் இறப்பதற்கு முன்பு, அந்தப் புத்தகத்தில் மூன்றில் ஒரு பாகத்தை வாசித்திருந்தார்.
அப்பாவின் மரணத்துக்குப் பிறகும், அதைத் தொடர்ந்து நாங்கள் வாஷிங்டனைச் சேர்ந்த மோசஸ் லேக் நகருக்குச் சென்ற பிறகும், என் கடந்த காலத்தைப் பற்றி அறிந்துகொள்ள நான் இன்னும் அதிக ஆவலாய் இருந்தேன். ஆனால் அந்தத் தேடுதலுக்காக நான் அவ்வளவு காலத்தைச் செலவழித்த போதிலும், ஆவிக்குரிய அக்கறைகளை நாங்கள் உதாசீனம் செய்யவில்லை. ட்ரீனா ஜூன் 5, 1993-ல் முழுக்காட்டுதல் பெற்றாள். அதற்குப் பிறகு ஆறு மாதம் கழித்து, எங்கள் இரண்டாவது மகளான ஸியெரா லின்னைப் பெற்றாள்.
என்னைப் பெற்ற தாயை நான் எப்படி கண்டுபிடித்தேன்
நான் விடாமல் அலாஸ்காவின் சட்டத் துறையிலிருந்து தகவல் பெறக் கோரிவந்தேன். வெவ்வேறு துறைகளுக்கு கடிதத்துக்கு மேல் கடிதம் எழுதுவதும், நானாகவே கம்ப்யூட்டர் மூலம் தேடிப்பார்ப்பதுமாக இருந்தேன். அவற்றால் பிரயோஜனம் இருந்ததாக தெரியவில்லை. பிறகு, கிட்டத்தட்ட 1995-ன் முடிவில், எனக்கு செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனை, இதய சீர்குலைவு இருப்பதை வெளிப்படுத்தியது. எனக்கு 29 வயதே ஆகியிருந்தது. என் மருத்துவரும் என் மருத்துவப் பின்னணியைப் பற்றிய பதிவைத் தெரிந்துகொள்ள விரும்பினார்.
அந்த மருத்துவர், என்னைத் தத்தெடுத்தது சம்பந்தமான கோப்புகளிலிருக்கும் தகவலே என் உடல் நலத்துக்கு தேவைப்படும் மிக முக்கியமான அம்சமாய் இருக்கக்கூடும் என்பதை அழுத்திக் காட்டும் விதத்தில் ஒரு முழுமையான, துல்லியமான வேண்டுகோளை எழுதினார். தக்க சமயத்தில், எங்களுக்கு ஒரு பதில் கிடைத்தது. அதில், கோப்புகளைத் திறக்க வேண்டிய அளவிற்கு எனக்கு மருத்துவத் தேவை ஏற்பட்டிருப்பதாகத் தான் உணரவில்லை என்று தெரிவித்த ஒரு நீதிபதியின் உத்தரவு அடங்கியிருந்தது. நான் நிலைகுலைந்துவிட்டேன். ஆனால் ஒருசில வாரம் கழித்து, இரண்டாவது நீதிபதியிடமிருந்து ஒரு கடிதம் வந்துசேர்ந்தது. என்னைத் தத்தெடுத்தது பற்றிய கோப்புகளை நான் பார்க்கலாம் என்று ஒரு நீதிமன்ற ஆணை அங்கீகாரம் அளித்திருந்தது. அதை வாசித்தபோது, அவ்வளவாய் நான் கிளர்ச்சியடைந்ததால், நிஜமாகவே நாற்காலியைவிட்டு குதித்தெழுந்தேன்!
என்னைத் தத்தெடுத்தது பற்றிய உண்மையான கோப்புகள் 1996 ஜனவரி ஆரம்பத்தில் வந்து சேர்ந்தன. அதில், என்னைப் பெற்ற தாயின் சொந்த ஊரும், குடும்பப் பின்னணியும் பற்றிய குறிப்புகள் அடங்கியிருந்தன. உடனே, சான்ட்ராவின் பெயரையும் சொந்த ஊரையும் வைத்து கம்ப்யூட்டரின் மூலம் தேடிப்பார்த்தேன். அப்போது, பட்டியலிடப்பட்டிருந்த ஆறு தொலைபேசி எண்களைக் கண்டுபிடித்தேன். ட்ரீனாவே அந்த எண்களுக்கு ஃபோன் செய்யும்படி நானும் ட்ரீனாவும் முடிவுசெய்தோம். மூன்றாவது முறை ஃபோன் செய்தபோது, சான்ட்ரா என்பது தன் சகோதரனின் மகள் என்பதாக ஒரு பெண் சொன்னாள். அந்தப் பெண் அவளுடைய தொலைபேசி எண்ணையும் தெரிவித்தாள்.
தொலைபேசி அழைப்பும் சந்திப்பும்
ட்ரீனா அந்த எண்ணுக்கு ஃபோன் செய்தபோது, பதிலளித்த அந்தப் பெண் தன்னை யார் என்று அடையாளங்காட்ட மறுத்துவிட்டாள். முடிவில், ட்ரீனா இவ்வாறு நேரடியாக சொன்னாள்: “என் கணவர் அலாஸ்காவிலுள்ள கெச்சிகன் என்னுமிடத்தில் ஆகஸ்ட் 1, 1966-ல் பிறந்தார். நான் தேடிக்கொண்டிருக்கும் ஆள் நீங்கள்தானா என்று எனக்குத் தெரிய வேண்டும்.” நீண்டநேரம் அமைதி நிலவியது. அதன் பிறகு, அந்தப் பெண் நடுங்கிய குரலில், ட்ரீனாவின் பெயரையும் தொலைபேசி எண்ணையும் கேட்டுத் தெரிந்துகொண்டு, தான் திரும்ப அழைப்பதாக சொன்னாள். உடனடியாக அவர்கள் திரும்பவும் தொலைபேசியில் அழைப்பார்கள் என்று நான் நினைக்காததால், கொஞ்சம் பொருட்களை வாங்கிவருவதற்காக ஸ்டோருக்குப் போகத் தீர்மானித்தேன்.
நான் திரும்பிவந்தபோது, ட்ரீனா தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தாள், அவள் கண்கள் கண்ணீரால் நிறைந்திருந்தன. அவள் தொலைபேசியை என் கைகளில் கொடுத்துவிட்டாள். நானும் என் தாயும் ஒருவருக்கொருவர் வாழ்த்துதல் சொன்ன பிறகு, எங்கள் சுகநலன்களை விசாரித்துக்கொண்டோம். ட்ரீனா குறுக்கிட்டு முணுமுணுத்தாள், “உங்களை தத்துக்கொடுக்க உண்மையில் அவர்களுக்கு விருப்பமில்லாதிருந்திருக்கிறது.” அவர்கள் தன்னைப் பற்றி சொல்ல ஆரம்பித்தபோது, எனக்குப் பரிதாபமாய் இருந்தது. “நீங்கள் எனக்கு உயிரளித்ததற்காக உங்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்,” என்று நான் சொன்னேன். “எனக்கு நல்ல வாழ்வு அமைந்துவிட்டது, எனக்குத் தேவையான எல்லாம் எனக்கு இருந்திருக்கிறது. எனக்கு நல்ல பெற்றோர் இருந்திருக்கின்றனர், மிகுந்த பாசம் கிடைத்திருக்கிறது, இப்போதும் ஓர் அருமையான மனைவியும் இரண்டு அழகிய மகள்களும் இருக்கிறார்கள். நான் மிகவும் சந்தோஷமாய் இருக்கிறேன்.”
அவர்கள் அழ ஆரம்பித்தார்கள். நாங்கள் பேசிக்கொண்டேயிருந்தபோது, தான் கற்பழிக்கப்பட்டதையும், அதனால் கர்ப்பமுற்றதையும், அழுத்தத்தை எதிர்ப்பட்டதால் என்னைத் தத்தாகக் கொடுத்துவிட்டதையும் பற்றி சொன்னார்கள்; அதன்பிறகு அவர்கள் திருமணம் செய்துகொண்டு கொஞ்சக்காலம் கழித்து, ஆஸ்பத்திரியில் அறுவை மருத்துவத்திலிருந்து குணமாகிவந்தபோது, அவர்களுடைய பெண்குழந்தையும் அவர்களுடைய அம்மாவும் தீயில் அகப்பட்டு இறந்துவிட்டதாகவும் பிறகு என்னிடம் சொன்னார்கள். அது சம்பவித்தபோது, அவர்கள், அந்த மகனைத் தத்தாக கொடுத்துவிட்டதற்குத் தண்டனையாகத்தான் கடவுளே இந்த அருமையானவர்களை தன்னிடமிருந்து பறித்துக்கொண்டதாய் அவர்கள் நினைத்ததாக சொன்னார்கள். “இல்லை, கடவுள் அப்படியெல்லாம் செய்பவரல்ல!” என்று நான் உடனடியாக பதிலளித்தேன். அது இப்போது தனக்குத் தெரியும் என்றும், எப்படியென்றால், அந்தக் கோர சம்பவத்துக்குப் பிறகு, “பைபிள் சத்தியத்தைத் தேட” ஆரம்பித்திருந்ததாகவும், இப்போது “ஒரு பைபிள் மாணாக்கராக” இருப்பதாகவும் அவர்கள் சொன்னார்கள்.
நான் சிந்திக்க ஆரம்பித்தேன். ‘இது உண்மையாய் இருக்க முடியாது,’ என்று நினைத்துக்கொண்டு, “யாருடன் படித்தீர்கள்?” என்று கேட்டேன். ஒரு நீண்ட அமைதி நிலவியது. பிறகு அவர்கள் சொன்னார்கள்: “யெகோவாவின் சாட்சிகள்.” நான் அவ்வளவாய் உணர்ச்சிப் பரவசமடைந்ததால் என்னால் பேசவும் முடியவில்லை. கண்ணீருடன், “நானும் ஒரு சாட்சிதான்” என்று போராட்டத்துடன் சொல்லி முடித்தேன். நான் அதைத் தெளிவாக திரும்பவும் சொன்னபோது, மகிழ்ச்சியினால் அவர்களும் உணர்ச்சிப் பரவசமடைந்தார்கள். இவை யாவும் மிகவும் ஆச்சரியமூட்டுபவையாய் இருந்தன!
என் தாய் 1975-ல் ஒரு சாட்சியானார்கள். அதாவது, அவர்களுடைய பெண்குழந்தை இறந்து கொஞ்சக்காலத்துக்குப் பிறகு. அவர்களுடைய கணவர் ஆவிக்குரிய பிரகாரமாய் முன்னேற்றமடைய ஆரம்பிக்கையில், என்னைப் பற்றி அவரிடம் சொன்னார்கள். அவர் அவர்களைத் தேற்றினதோடு, என்னைத் தேடிப்பார்க்கச் செல்வோமென்றும் கூறினார். ஆனால் அதற்குப் பிறகு சீக்கிரத்திலேயே, மூன்று சிறிய பிள்ளைகளையும் என் அம்மாவையும் விட்டுவிட்டு, ஒரு கார் விபத்தில் அவர் இறந்துவிட்டார். அதற்குப் பிறகு பல மாலை வேளைகளில், மணிக்கணக்கில் நாங்கள் பேசினோம். கடைசியில், அரிஜோனாவில், ஃபோனிக்ஸில் பிப்ரவரி 1996-ன் இரண்டாவது வாரத்தில் நாங்கள் சந்திக்கத் தீர்மானித்தோம். மற்றொரு கிறிஸ்தவ சகோதரியுடன் அவ்விடத்தில் சந்திப்பதாக என் தாய் ஏற்கெனவே தீர்மானித்திருந்தார்கள்.
நினைவில் நிற்கும் மறு இணைவு
இந்த முறை பயணம் சென்றபோது, பிள்ளைகளை வீட்டில் விட்டுவிட்டு நானும் ட்ரீனாவும் மட்டும் சென்றோம். விமானத்தைவிட்டு இறங்கி நடந்தபோதே என் தாயை நான் பார்த்துவிட்டேன், முடிவில் அவர்களைக் கட்டித்தழுவ முடிந்தது. நாங்கள் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்துக்கொண்டபோது, அவர்கள் என்னைக் கட்டித்தழுவுவதற்காக 29 ஆண்டுகள் காத்திருந்ததாகக் கூறிக்கொண்டே நீண்ட நேரம் வரை என்னை விடாமல் தழுவிய நிலையிலேயே இருந்தார்கள். அது ஓர் அருமையான சந்திப்பாக இருந்தது, சேர்ந்து படமெடுத்துக்கொண்டோம், கதைகளையும் பேசினோம். என்றபோதிலும், அக்கறைக்குரிய விஷயம் என்னவென்றால், ஃபோனிக்ஸ் ராஜ்ய மன்றத்தில் என் தாய்க்கு அருகில் உட்கார்ந்திருந்ததே! நாங்கள் ஒன்றுசேர்ந்து கூட்டத்தைக் கவனித்துக் கேட்டோம், ராஜ்யப் பாடல்கள் பாடும்போது, அடுத்தடுத்து நின்றுகொண்டோம். அது நான் எப்போதுமே நினைவில் வைத்திருக்கும் ஓர் அருமையான உணர்வாய் இருந்தது.
ஏப்ரல் 1996-ல், என் தங்கை லாரா அயோவாவிலிருந்த தன் வீட்டிலிருந்து எங்களைச் சந்திப்பதற்காக வந்தாள். அவளுடன் கிறிஸ்தவ கூட்டுறவை அனுபவித்தது எவ்வளவு அற்புதகரமாய் இருந்தது! நான் புதிதாகக் கண்டுபிடித்த இரண்டு தம்பிமார்களுடனும்கூட தொலைபேசியில் பேசியிருக்கிறேன். என் குடும்பத்துடன் இணைக்கப்பட்டிருப்பது அற்புதகரமானது, ஆனால் யெகோவாவின் அமைப்பிற்குள் அன்பில் இணைக்கப்பட்டிருப்பது, நம் மகத்தான கடவுளான, யெகோவா மட்டுமே தரவல்ல ஒரு பரிசாய் இருக்கிறது.—டேணா ஃபால்ட்ஸ் சொன்னபடி.
[பக்கம் 23-ன் படம்]
என்னைப் பெற்ற தாயோடு