நத்தை கய்ச்சல்—விரைவில் ஒழித்துக்கட்டப்படுமா?
நைஜீரியாவிலிருந்து விழித்தெழு! நிருபர்
மருத்துவம் மற்றும் அறிவியல் துறைகளில் மலைக்க வைக்கும் வளர்ச்சிகள் ஏற்பட்டிருக்கிற போதிலும், வெகுகாலமாய் இருந்துவரும் பிரச்சினைகள் பலவற்றை மனிதவர்க்கம் தீர்த்துக்கொள்ள முடியவில்லை. நத்தை காய்ச்சலின் தீவிரத்தை தணிப்பதற்கான முயற்சிகளைக் குறித்ததிலும் இதுவே உண்மையாக இருந்திருக்கிறது.
சிகிச்சைக்குத் தேவையான அனைத்தும் இருப்பதுபோல்தான் தோன்றுகிறது. அதில் உட்பட்டுள்ள ஒட்டுண்ணியின் வாழ்க்கை சுழற்சியை மருத்துவர்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள். நோயும் எளிதில் கண்டறியப்படுகிறது. அதைக் குணப்படுத்துவதற்கு நல்ல மருந்துகளும் இருக்கின்றன. அதைத் தடுப்பதற்கான முயற்சிகளை முன்னேற்றுவிக்க அரசாங்க தலைவர்கள் ஆவலாக உள்ளனர். இருப்பினும், ஆப்பிரிக்கா, ஆசியா, கரிபியன், மத்திய கிழக்கு, தென் அமெரிக்கா ஆகிய நாடுகளில் கோடிக்கணக்கானோரைத் தாக்கும் இந்த நோய்க்கு ஒரு முடிவு வரும் என்பது கண்ணுக்கெட்டும் தூரத்தில் இல்லை.
நத்தை காய்ச்சல் (பில்ஹார்சியாஸிஸ் அல்லது சிஸ்டோஸோமியாஸிஸ் என்றும் அழைக்கப்படுவது) ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதனைத் தாக்கிவந்திருக்கிறது. பார்வோன்களின் நாட்களில் எகிப்தியர்களை இந்நோய் பாதித்தது என்பதற்கு எகிப்திய மம்மிகளில் காணப்பட்ட சுண்ணாம்பு படிந்த ஒட்டுண்ணியின் முட்டைகள் சான்றளிக்கின்றன. முப்பது நூற்றாண்டுகள் கழித்து, அதே நோய் எகிப்தை தொடர்ந்து தாக்கிக்கொண்டு, அந்நாட்டில் குடியிருக்கும் லட்சக்கணக்கானோரின் உடல் நலத்தை பலவீனப்படுத்தி வருகிறது. நைல் நதியின் கழிமுகப் பகுதியிலுள்ள சில கிராமங்களில், ஒவ்வொரு 10 பேரிலும் 9 பேர் இந்த நோய் தொற்றப்பட்டிருக்கின்றனர்.
நத்தை காய்ச்சல் பரவியுள்ள 74 அல்லது அதற்கதிகமான நாடுகளில் எகிப்து ஒரே ஒரு நாடுதான். உலக சுகாதார அமைப்பின் (WHO) கணக்குகளின்படி, உலகளாவ 20 கோடி மக்கள் இந்த நோய் தொற்றப்பட்டிருக்கின்றனர். நாள்பட்ட நோயாளிகளாக அவதிப்படும் 2 கோடி பேரில் சுமார் 2,00,000 பேர் ஒவ்வொரு வருடமும் சாகின்றனர். வெப்பமண்டல பகுதிகளுக்குரிய ஒட்டுண்ணி சார்ந்த நோய்களில், அவை பாதிக்கும் மக்களின் எண்ணிக்கை மற்றும் அவை ஏற்படுத்தும் சமூக பொருளாதார சேதத்தின் அடிப்படையில் பார்த்தால், மலேரியாவுக்கு அடுத்து நத்தை காய்ச்சல் இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கிறது என்பதாக சொல்லப்படுகிறது.
ஒட்டுண்ணியின் வாழ்க்கை சுழற்சி
நத்தை காய்ச்சலைப் பற்றி புரிந்துகொண்டு, அதன் மூலமாக அதைத் தடுப்பதும் குணப்படுத்துவதும் எப்படி என்று அறிந்துகொள்வது, அதை ஏற்படுத்தும் ஒட்டுண்ணியைப் புரிந்துகொள்வதை அர்த்தப்படுத்துகிறது. இதுவே ஒரு முக்கியமான குறிப்பு: தலைமுறை தலைமுறையாக பிழைத்திருந்து செழிப்பதற்கு, இந்த ஒட்டுண்ணிக்கு இரு விருந்தோம்பிகள் தேவை; அதாவது தான் அதனுள்ளிருந்து உணவு உட்கொண்டு வளர்ச்சி அடைவதற்கு இடமளிக்கும் இரு உயிர் ஜீவிகள் தேவை. ஒன்று, மனிதனைப் போன்ற ஒரு பாலூட்டி; மற்றது ஒரு நன்னீர் நத்தை.
இதுதான் சம்பவிக்கிறது. ஒட்டுண்ணியால் தொற்றப்பட்ட ஒருவர், ஒரு குளம், ஏரி, ஓடை, அல்லது நதியில் சிறுநீர் அல்லது மலம் கழிக்கும்போது, அந்த ஒட்டுண்ணியின் முட்டைகளை—ஒரு நாளைக்கு ஒரு லட்சம் முட்டைகள் வரையாக—அவர் வெளியேற்றுகிறார். ஒரு மைக்ரோஸ்கோப்பின் உதவியின்றி பார்க்க முடியாத அளவுக்கு இந்த முட்டைகள் அவ்வளவு சிறியவை. அந்த முட்டைகள் தண்ணீர் பட்டவுடன் பொரித்து, ஒட்டுண்ணிகள் வெளிவருகின்றன. அந்த ஒட்டுண்ணிகள் தங்கள் உடல்களிலுள்ள சிறிய முடிகளைப் பயன்படுத்தி ஒரு நன்னீர் நத்தையினிடமாக நீந்திச் சென்று, அதைத் துளைத்து அதனுள் செல்கின்றன. நத்தைக்குள், அடுத்த நான்கிலிருந்து ஏழு வாரங்களுக்கு அவை பெருகுகின்றன.
அவை நத்தையை விட்டு வெளியேறியதும், ஒரு மனிதனை அல்லது வேறொரு பாலூட்டியைக் கண்டுபிடித்து நுழைவதற்கு 48 மணிநேரமே இருக்கிறது. அதற்குள் நுழைய முடியாவிட்டால், அவை சாகும். தண்ணீருக்குள் வந்திருக்கும் அப்படிப்பட்ட ஒரு விருந்தோம்பியைக் கண்டடைந்ததும், அந்த ஒட்டுண்ணி, தோலைத் துளைத்துக்கொண்டு இரத்த ஓட்டத்தில் கலந்துவிடுகிறது. இது அந்த நபருக்கு கொஞ்சம் அரிப்பை ஏற்படுத்தும்; ஆனாலும், இப்படி ஒரு ஆக்கிரமிப்பு நடந்திருக்கிறது என்பதற்கான எவ்வித அறிகுறியும் பெரும்பாலும் அவருக்கு இருப்பதில்லை. இரத்த ஓட்டத்திற்குள், அதன் இனத்தைப் பொறுத்து, சிறுநீர்ப்பை அல்லது குடல்களின் இரத்த நாளங்களுக்குள் அந்த ஒட்டுண்ணி சென்றுவிடுகிறது. சில வாரங்களுக்குள் அந்த ஒட்டுண்ணிகள், 25 மில்லிமீட்டர் நீளமுள்ள பெரிய ஆண் மற்றும் பெண் புழுக்களாக வளர்ச்சி அடைகின்றன. அவை இணைசேர்ந்தபின், விருந்தோம்பியின் இரத்த ஓட்டத்திற்குள் பெண் புழு முட்டைகளை இட ஆரம்பித்து, இவ்வாறாக அந்தச் சுழற்சியை நிறைவு செய்கிறது.
சுமார் பாதியளவான முட்டைகள் மலத்தின் மூலமாக (குடல்சார்ந்த நத்தை காய்ச்சலில்) அல்லது சிறுநீர் மூலமாக (சிறுநீர்ப்பை நத்தை காய்ச்சலில்) விருந்தோம்பியின் உடலைவிட்டு வெளியேறுகின்றன. மீதமுள்ள முட்டைகள் உடலில் தங்கியிருந்து முக்கியமான உறுப்புகளை சேதப்படுத்துகின்றன. நோய் கடுமையாகையில், பாதிக்கப்பட்டவருக்கு காய்ச்சலும், வயிற்றுப்பகுதியில் வீக்கமும், இரத்த உட்கசிவும் ஏற்படக்கூடும். முடிவில் இந்த நோய் சிறுநீர்ப்பை புற்றுநோய்க்கோ ஈரல் அல்லது சிறுநீரகத்தின் செயலிழப்பிற்கோ வழிநடத்தலாம். பாதிக்கப்பட்டவர்கள் சிலர் மலட்டுத் தன்மை உள்ளவர்களாக அல்லது முடக்குவாதத்தால் தாக்கப்பட்டவர்களாக ஆகின்றனர். மற்றவர்கள் சாகின்றனர்.
தீர்வுகளும் பிரச்சினைகளும்
நோய் பரவுவதைத் தடுப்பதற்காக, குறைந்தது நான்கு காரியங்களாவது செய்யப்படலாம். இந்தப் படிகளில் ஏதாவது ஒன்று உலகளாவிய ரீதியில் செயல்படுத்தப்படுமானால் இந்த நோய் துடைத்தழிக்கப்படும்.
முதல் படி என்னவென்றால் நீர்நிலைகளில் நத்தைகளை அழிப்பது. அந்த ஒட்டுண்ணியின் வளர்ச்சிக்கு நத்தைகள் அத்தியாவசியமானவை. நத்தைகள் இல்லையென்றால் நத்தை காய்ச்சலும் இல்லை.
நத்தைகளைக் கொல்லுமளவிற்கு சக்திவாய்ந்ததும், ஆனால் அதே சமயத்தில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் இருப்பதுமான ஒரு விஷத்தை உற்பத்தி செய்வதற்கே பிரதான முயற்சி எடுக்கப்பட்டு வந்திருக்கிறது. 1960-களிலும் 1970-களிலும் நத்தைகளை ஒழிப்பதற்கான முயற்சிகள் பேரளவான நீர்நிலைகளில் உள்ள எல்லா உயிர்களையும் கொல்லுவதில் விளைவடைந்தன. வேறு உயிர் வகைகளைப் பாதிக்காத மெல்லுடலி கொல்லி (நத்தைகளைக் கொல்லும் மருந்து) ஒன்றைக் கண்டுபிடிக்க எகிப்திலுள்ள டேயோடோர் பில்ஹார்ஸ் ஆராய்ச்சி நிறுவனம் முயற்சிகளை எடுத்திருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு மருந்தைக் குறித்து இந்த நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ஆலி ஸேன் எல் ஆப்டின் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “அந்த மருந்து தண்ணீரில் கலக்கப்படும்; அந்தத் தண்ணீர் பயிர்களுக்கும், மனிதர்களும் மிருகங்களும் குடிப்பதற்கும், மீன்கள் வாழ்வதற்கும் பயன்படுத்தப்படுவதால், இவையனைத்தும் பாதிக்கப்படாது என்பதைக் குறித்து நாம் முழு நிச்சயத்துடன் இருக்க வேண்டும்.”
இரண்டாவது படி என்னவென்றால், மனிதரில் இருக்கும் இந்த ஒட்டுண்ணிகளைக் கொல்லுவது. மத்திப 1970-கள் வரையாக, அநேக பக்க விளைவுகளையும் கோளாறுகளையும் ஏற்படுத்திய மருந்துகள் சிகிச்சையில் பயன்படுத்தப்பட்டன. வேதனைமிக்க ஊசிகளை தொடர்ச்சியாக போட்டுக்கொள்வதை அந்தச் சிகிச்சை பெரும்பாலும் உட்படுத்தியது. நோயைவிட நிவாரணம் வேதனைமிக்கதாய் இருந்ததாக சிலர் தெரிவித்தனர்! அப்போது முதற்கொண்டு, நத்தை காய்ச்சலுக்கு நிவாரணமளிப்பதில் பலனுள்ளவையாக இருக்கும் ப்ரேஸிக்வான்டெல் போன்ற புதிய மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன; இவற்றை வாய்மூலம் உட்கொள்ள முடியும்.
ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் நடைமுறையில் இந்த மருந்துகள் வெற்றிகரமாக நிரூபித்திருக்கிறபோதிலும், அநேக நாடுகளுக்கு அதன் விலையே பெரிய பிரச்சினையாக இருக்கிறது. 1991-ல் WHO இவ்வாறு வருத்தம் தெரிவித்தது: “சிகிச்சைக்கு அதிகளவு செலவாவதன் காரணமாக, பேரளவிலான [நத்தை காய்ச்சல்] கட்டுப்பாட்டுத் திட்டங்களை நோய் பரவியுள்ள நாடுகளால் தொடர முடியவில்லை; ஆப்பிரிக்காவின் பெரும்பாலான உடல்நல அமைச்சகங்களின் வரவு செலவு திட்டத்தில் ஒரு ஆளுக்கு ஒதுக்கப்பட்ட மொத்த தொகையைவிட அந்த மருந்தை வாங்குவதற்கான நிலையான மதிப்புள்ள விலை வழக்கமாக அதிகமாய் இருக்கிறது.”
நோயாளிக்கு அந்த மருந்து இலவசமாக கிடைக்கும் இடங்களில்கூட அநேக மக்கள் சிகிச்சை பெற செல்வதில்லை. ஏன்? ஒரு காரணமென்னவென்றால், அந்த நோயால் ஏற்படும் மரண வீதம் ஓரளவுக்குக் குறைவாக இருக்கிறது; ஆகையால் சில மக்கள் இதை ஒரு பெரிய பிரச்சினையாகவே கருதுவதில்லை. மற்றொரு காரணம், இந்த நோயின் அறிகுறிகளை மக்கள் எப்போதும் கண்டுணர்ந்து கொள்வதில்லை. ஆப்பிரிக்காவின் சில பாகங்களில், சிறுநீரில் இரத்தம் வருவது (இந்த நோயின் தொடக்க அறிகுறிகளில் ஒன்று) சர்வ சாதாரணமாக இருப்பதால், வயது வந்தவருக்கு சகஜமாக ஏற்படுவதுதான் என கருதப்படுகிறது.
மூன்றாவது படியானது, முட்டைகளை நீர்நிலைகளில் சேர விடாமல் பார்த்துக்கொள்வது. உள்ளூர் நீரோடைகளும் குளங்களும் மாசுபடுத்தப்படுவதைத் தவிர்க்கும்படி கழிப்பிடங்கள் கட்டப்பட்டு, பின்னர் அனைவரும் அவற்றைப் பயன்படுத்தினால், நத்தை காய்ச்சல் தொற்றிக்கொள்ளும் அபாயம் குறைக்கப்படலாம்.
குழாய் அமைப்புகள் மூலமாக தண்ணீர் வழங்கும் ஏற்பாடுகளும் கழிப்பிடங்களும் கட்டப்பட்ட பிறகு இந்த நோய் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்திருப்பதாக உலகளாவிய ஆய்வுகள் காண்பிக்கின்றன; ஆனால் இந்த ஏற்பாடுகள்தாமே தடுப்பிற்கு உறுதி அளிப்பதில்லை. “அந்தச் சுழற்சி தொடர்ந்திருக்க கால்வாயில் ஒருவர் மலம் கழித்தால் அதுவே போதும்,” என்று குறிப்பிடுகிறார், 20-க்கும் மேலான வருடங்கள் நத்தை காய்ச்சலைக் குறித்து ஆய்வுகள் செய்திருக்கும் அறிவியலாளர் ஆலன் ஃபென்விக். நோய் தொற்றப்பட்ட மலம், உடைந்திருக்கும் கழிவுநீர் குழாய்களிலிருந்து நீர்நிலைகளுக்குள் கசிந்தொழுகும் அபாயமும் இருக்கிறது.
நான்காவது படி என்னவென்றால், அந்த ஒட்டுண்ணி தொற்றப்பட்ட தண்ணீரை விட்டு மக்களை விலகியிருக்க வைப்பது. இதுவும் நினைப்பதுபோல் அவ்வளவு சுலபமானதல்ல. பல நாடுகளில் குடிநீர் வழங்கும் ஏரிகள், ஓடைகள், மற்றும் நதிகள், குளிப்பதற்கும், பயிர் பாசனத்திற்கும், துணி துவைப்பதற்கும்கூட பயன்படுத்தப்படுகின்றன. மீன்பிடிப்பவர்கள் தினசரி தண்ணீரில் வேலை செய்கின்றனர். மேலும் வெப்ப மண்டலத்தின் பொசுக்கும் வெயிலில், தண்ணீர் தென்படும் எந்த இடமும் பிள்ளைகளுக்கு தவிர்க்கமுடியாத நீச்சல் குளமாகிவிடலாம்.
எதிர்காலத்திற்கு என்ன நம்பிக்கை?
உண்மையான அக்கறையுள்ள ஆட்களும் அமைப்புகளும் நத்தை காய்ச்சலை ஒழித்துக்கட்ட கடுமையாக உழைக்கிறார்கள் என்பதிலும் அதிகப்படியான முன்னேற்றம் இருந்து வருகிறது என்பதிலும் எவ்வித சந்தேகமுமில்லை. அதற்கு எதிராக ஒரு நோய் தடுப்பு மருந்தை உண்டாக்கவும்கூட ஆய்வாளர்கள் முயலுகிறார்கள்.
என்றபோதிலும், இந்த நோயை ஒழிப்பதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவானதென்றே தோன்றுகிறது. பிரெஞ்சு மருத்துவ பத்திரிகையாகிய ல ரவ்யு ட்யு ப்ராட்டிஸியான் என்பதில் டாக்டர் எம். லாரிவ்யர் இவ்வாறு கூறுகிறார்: “வெற்றிகள் இருக்கிறபோதிலும் . . . , இந்த நோய் நிச்சயமாகவே மறைந்து வரவில்லை.” தனி நபர்களின் விஷயத்தில் தடுப்பும் நிவாரணமும் நிஜமாக இருக்கலாம் என்றாலும், உலகளாவிய ரீதியில், கடவுளின் புதிய உலகம் இங்கு வரும் வரையாக நத்தை காய்ச்சல் பிரச்சினைக்கான தீர்வு காணமுடியாமல் போகக்கூடும். அங்கு “வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்வதில்லை,” என்பதாக பைபிள் வாக்களிக்கிறது.—ஏசாயா 33:24.
[பக்கம் 15-ன் படம்]
மாசுபடுத்தப்பட்ட தண்ணீருக்குள் செல்லும்போது, நத்தை காய்ச்சலை ஏற்படுத்தும் ஒட்டுண்ணிகளால் மனிதருக்கு தொற்றப்படலாம்