பைபிளின் கருத்து
யாருடைய வழிநடத்துதலை நீங்கள் நம்பலாம்?
“போவதற்கு நேரமாச்சு!” அத் தகப்பன் தன்னுடைய ஐந்து-வயது மகனிடம் கூறுகிறார். அத் தகப்பன் ஒரு கையை நீட்டுகிறார், தயக்கமின்றி அந்த மகன், எட்டி தன் சிறிய கையால் தன் தகப்பனின் விரல்களைச் சுற்றிப் பிடித்துக்கொள்கிறான். எங்கெல்லாம் அப்பயணம் வழிநடத்துவதாய் இருந்தாலும், அப் பிள்ளை அவனுடைய பெற்றோரின் வழிநடத்துதலில் நம்பிக்கை வைத்து, நம்பிக்கையோடு பின்செல்கிறான். என்ன நடந்தாலும், அப் பிள்ளையின் உறுதியான பிடிப்பு முறிக்கப்படாததாய் நிலைத்திருக்கிறது.
பொருளாதார ரீதியில், அரசியல் ரீதியில், தனிப்பட்ட ரீதியில் நிச்சயமற்ற இக் காலங்களில் நாம் வாழ்ந்துவருகையில், நீங்கள் முற்றிலும் நம்பக்கூடிய ஓர் ஊற்றுமூலத்திலிருந்து வரும் வழிநடத்தும் கரத்தை நீங்கள் வரவேற்க மாட்டீர்களா? ஆனாலும், பழிபாவத்திற்கு அஞ்சாதவர்கள் அனுபவமற்றவர்களைத் தன்னலத்துக்காக பயன்படுத்திக்கொள்ளும் ஒரு காலத்தில் நாம் வாழ்கிறோம். ஆகவே, நாம் யாரிடம் நம்பிக்கை வைத்திருக்கிறோம் என்பதைப் பற்றி எச்சரிப்புடன் இருப்பதற்கு நல்ல காரணம் இருக்கிறது. ஒருவேளை கடந்த காலத்தில் வழிநடத்துதலுக்காக நீங்கள் நம்பியிருந்த எவரோ ஒருவரால் வேதனைதரும் வகையில் ஏமாற்றப்பட்டிருக்கலாம்.
இருந்தபோதிலும், நம்முடைய நம்பிக்கையைக் கடவுளில் வைக்கும்படி பைபிள் நம்மை உற்சாகப்படுத்துகிறது. “உன் தேவனாயிருக்கிற யெகோவாவாகிய நான் உன் வலதுகையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறேன்” என்பதாக ஏசாயா தீர்க்கதரிசி பதிவு செய்தார். (ஏசாயா 41:13, NW) மேலும் அப்போஸ்தலன் பேதுரு இவ்வாறு ஆலோசனை கூறினார்: “ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள். அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.”—1 பேதுரு 5:6, 7.
என்றாலும், நீங்கள் சரியாகவே இவ்வாறு கேட்கலாம், ‘வழிநடத்துதலுக்காக நான் கடவுளில் என் நம்பிக்கையை வைப்பதற்கு என்ன காரணம் இருக்கிறது?’ பண்டைய இஸ்ரவேலர்களின் பதிவில் பின்வரும் நல்ல காரணங்கள் காணப்படுகின்றன.
கடவுளின் கரம் அவருடைய ஜனங்களை வழிநடத்துகிறது
பொ.ச.மு. 1513, நிசான் 14 அன்று இரவில் உச்சக்கட்டத்துக்கு வந்த தொடர்நிகழ்ச்சிகள், கடினமாய் வேலைவாங்கிய கொடுங்கோல் அரசன் பார்வோனின் தீர்மானத்தையும் எகிப்தியரின் தீர்மானத்தையும் முறித்ததால், அவர்கள் கடவுளுடைய ஜனமான இஸ்ரவேலரை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்தனர். (யாத்திராகமம் 1:11-13; 12:29-32) நிசான் 15-ல், வெற்றிக்களிப்புற்ற இஸ்ரவேல் தேசத்தினர் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்துக்குப் போகும் தங்கள் வழியில் வனாந்தரத்தின் திசையில் பயணம் செய்தனர். மிகவும் நேரடியான வழி, மத்தியதரைக்கடலின் கடற்கரைக்கு இணையாக, மெம்ப்ஃபஸுக்கு வடக்கே இருந்த, திகிலை ஏற்படுத்திய பெலிஸ்தியர்களால் குடியேற்றப்பட்டிருந்த நிலத்துக்கு அருகிலேயும், வாக்குப்பண்ணப்பட்ட தேசத்துக்குள்ளேயுமாய் இருந்தது. என்றபோதிலும், மற்றொரு வழியைக் கடவுள் மனதில் வைத்திருந்தார்.—யாத்திராகமம் 13:17, 18; எண்ணாகமம் 33:1-6.
பண்டைய இஸ்ரவேல் தேசத்தாருக்கு ஒரு காணக்கூடிய வழிகாட்டியை, பகலிலே மேகஸ்தம்பம் போலவும் இரவிலே அக்கினிஸ்தம்பம் போலவும் தோன்றியதைக் கடவுள் அளித்தார். (யாத்திராகமம் 13:21, 22) இயற்கைக்கு அப்பாற்பட்ட இந் நிகழ்ச்சியோடு, உண்மையுள்ள மனிதனாகிய மோசேயை யெகோவா தம் பூமிக்குரிய பிரதிநிதியாக பயன்படுத்தினார். (யாத்திராகமம் 4:28-31) ஆகவே, இஸ்ரவேலரைக் கடவுளின் கரம் வழிநடத்தி வந்தது என்பதற்கு சந்தேகமில்லாத நிரூபணம் இருந்தது.
அவர்கள் இரண்டாவதாக பாளயமிறங்கின இடமான ஏத்தாமில், “வனாந்தரத்தின் ஓரமாய்,” திரும்பிச் சென்று செங்கடலின் கரையிலே, ஈரோத்தில் பாளயமிறங்கும்படி யெகோவா மோசேயை வழிநடத்தினார். (யாத்திராகமம் 13:20) விளக்க முடியாததாய்த் தோன்றிய இந்த யாத்திரையானது, இஸ்ரவேலர் “தேசத்திலே திகைத்துத் திரிகிறார்கள்” என்று முடிவு செய்யும்படி பார்வோனைத் தூண்டுவித்தது. தைரியமூட்டப்பட்டவனாக, பார்வோன் தன் இருதயத்தை மாற்றிவிட்டிருந்தான். இஸ்ரவேலரை மீண்டும் அடிமைப்படுத்த தீர்மானமுள்ளவனாய், தன் சேனையைக் கூட்டிச் சேர்த்து அவர்களைப் பின்தொடரும்படி புறப்பட்டான்—யாத்திராகமம் 14:1-9.
தெளிவாகவே, செங்கடலுக்கு வழிநடத்தும் ஒரு பள்ளத்தாக்குக்குள் வேறொரு திசையில் மோசே அத் தேசத்தினரை அழைத்துச் செல்வதன் மூலம், ஈரோத்திலிருந்த பாளயத்துக்கு இரு புறங்களிலுமிருந்த மலைகளாலும், செங்கடல் மற்றும் நெருங்கிவந்துகொண்டிருந்த பார்வோனின் சேனைகளாலும் இஸ்ரவேலரை சிக்கவைத்திருந்தது போலத் தோன்றியது. இஸ்ரவேலர் விரைவில் அடிபணிவுக்கு அல்லது அழிவுக்கு எளிதில் இலக்காகிவிட்டதாகவே தோன்றியது.
அவர்கள்மீது இது என்ன பாதிப்பை ஏற்படுத்தியது? யெகோவாவின் வழிநடத்துதலில் நம்பிக்கை வைப்பார்களா? வெளிப்படையாய்ப் பார்க்கையில், அச் சூழ்நிலை நம்பிக்கைக்கு இடமளிக்கவில்லை. ஆகவே, சிலர் திகிலடைந்தனர். இன்னும் மற்றவர்கள் மோசேக்கு எதிராக முறுமுறுக்க ஆரம்பித்தனர். சிலர் பின்வாங்கிச் சென்று எகிப்திய அடிமைத்தனத்துக்குத் திரும்பிச் செல்லவும் தயாராயினர்!—யாத்திராகமம் 14:10-12.
யெகோவாவின் கரத்தை உறுதியாகப் பற்றிக்கொள்ளுங்கள்!
இச் சூழ்நிலையில் இஸ்ரவேலர், சர்வவல்லவரில் ஒரு பிள்ளையைப் போன்ற நம்பிக்கையைக் காட்டவேண்டியவர்களாய் இருந்தனர். முழு தேசத்துக்கும் தெரியாத வகையில், ஈரோத்தில் செங்கடலைக் கடக்கும்படி மோசேக்கு அறிவுரை கூறுவதற்கான நல்ல காரணத்தை யெகோவா கொண்டிருந்தார். பெலிஸ்தியருடைய தேசத்துக்குத் தெற்கே உள்ள வாக்குப்பண்ணப்பட்ட தேசத்துக்குள் இஸ்ரவேலரின் பாதையை ஆரம்பித்து வைப்பதன் மூலம், யெகோவா அன்பான உட்பார்வையைக் காட்டினார். எகிப்தில் 215 ஆண்டுகள் இருந்ததற்குப் பிறகு, பயங்கரமான போர்வீரர்களைக் கொண்ட ஒரு தேசத்தாருடன் போரிட இஸ்ரவேலர் தயாரற்ற நிலையில் இருந்தனர் என்பதில் சிறிதும் சந்தேகமில்லாதிருந்தது. ஆகவே, அப்படிப்பட்ட ஒரு சண்டையைத் தவிர்க்கும் ஒரு வழியை யெகோவா தெரிந்தெடுத்தார். a—யாத்திராகமம் 13:17, 18.
அத் தேசத்தாரை விடுவித்ததும் பார்வோனையும் அவனுடைய சேனையையும் செங்கடலில் தோற்கடித்ததும், கடவுளின் காக்கும் வல்லமைக்கு வியக்கத்தக்க நிரூபணம் அளிக்கின்றன. மேலுமாக, இஸ்ரவேலரை ஒரு குறிப்பிட்ட வகையில் கடவுள் வழிநடத்துவதற்கான காரணத்தைப் புரிந்துகொள்ளாதபோதிலும், கடவுளுடைய கரத்தை விட்டுவிடாமல் இருந்ததற்காக இஸ்ரவேலர் எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருந்தனர்! அவர்கள் உறுதியுடன் நிலைத்திருந்து செங்கடல் அற்புதமாய்ப் பிரிந்ததையும், அவர்களுடைய எதிரிகளின் அழிவையும் கண்டனர். யெகோவாவின் வழிநடத்துதலில் அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கை பலனளித்தது.—யாத்திராகமம் 14:19-31.
மீண்டும், ஒரு பெற்றோரின் கையை ஒரு பிள்ளை பற்றியிருக்கும் உதாரணத்தை எண்ணிப்பார்ப்போம். ஒரு பிள்ளைக்குப் பயம் ஏற்படும்போது, அவன் எவ்வாறு பிரதிபலிக்கிறான்? அவனுடைய பிடியை விட்டுவிடுவதற்கு அல்லது தளர்த்துவதற்குப் பதிலாக, அப் பிள்ளை தன்னுடைய சிறிய கையால் அவனுடைய பெற்றோரின் விரல்களை இறுக பிடித்துக்கொள்வான். அவ்வாறு செய்வதன் மூலம் சிரமங்கள் ஏற்படும்போது, நிச்சயமான வழிநடத்துதலையும் பலத்தையும் அப் பெற்றோர் அளிப்பார் என்ற அசையாத நம்பிக்கையை அவன் காட்டுகிறான்.
அதைப்போலவே, நம்முடைய வாழ்க்கையில் நாம் துன்பங்களை அனுபவிக்கையில், கடவுளுடைய வழிநடத்துதலில் இன்னும் அதிகமாய் நம்பிக்கை வைப்பவர்களாய், நம் பிடியை இறுக்கிக் கொள்ள வேண்டும்! அவருடைய வார்த்தையாகிய பைபிள் நமக்கு வழிகாட்டும் தீபமாகலாம். (சங்கீதம் 119:105) மேலும், நம்பிக்கையோடு பொறுமையும் தேவை என்பதை நினைவில் வையுங்கள். ஆகவே, ஒரு குறிப்பிட்ட வழியில் யெகோவா நம்மை ஏன் வழிநடத்துகிறார் என்பதை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நாம் முற்றிலும் புரிந்துகொள்ளாமல் இருந்தாலும்கூட, பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கென யெகோவாவுக்கு நாம் நேரம் அளிக்க வேண்டும். ஆம், கடவுளுடைய வழிநடத்துதலை நாம் நம்பலாம்.—யாத்திராகமம் 15:2, 6; உபாகமம் 13:4; ஏசாயா 41:13.
[அடிக்குறிப்பு]
a ஈரோத்தைப் பற்றிய கூடுதலான தகவலுக்கு, உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்ட வேதவசனத்தின் மீது உட்பார்வை (ஆங்கிலம்), தொகுதி 2, பக்கங்கள் 638-9-ஐக் காண்க.