கம்புகள்மீது ஒரு சமுதாயம்
பெனினிலிருந்து விழித்தெழு! நிருபர்
“பெனினில், சுற்றுலா பயணிகளைக் கவரும் முக்கிய இடங்களில் ஒன்றாக கான்வியே உள்ளது,” என்பதாக மேற்கு ஆப்பிரிக்காவில் பிரயாணிகளுக்கு வழிகாட்டுபவரான ஒருவர் குறிப்பிடுகிறார். மற்றொருவர் இவ்வாறு சொல்கிறார்: “ஆப்பிரிக்கர்கள்தாமே கான்வியேவால் கவரப்படுகின்றனர்; எவ்வளவு மேற்கத்தியர்களைப் பார்க்கிறீர்களோ அவ்வளவு ஆப்பிரிக்க சுற்றுலா பயணிகளையும் நீங்கள் பார்ப்பீர்கள்.”
கான்வியே உண்மையிலேயே தனித்தன்மை வாய்ந்தது. இது, பெனினிலுள்ள கோடனூவுக்கு வடக்கே அமைந்துள்ள நாகூயே ஏரியின் தண்ணீருக்கு மேலே கம்புகளின்மீது கட்டப்பட்டுள்ள ஒரு கிராமம்; இது 15,000 குடிமக்களை கொண்டுள்ளது. கான்வியேவில், சைக்கிள்களும் இல்லை, கார்களும் இல்லை, நடைபாதைகளும் இல்லை, சாலைகளும் இல்லை. அங்கே வசிப்போர் பள்ளிக்கோ, மார்க்கெட்டுக்கோ, க்ளினிக்குகளுக்கோ, அயலகத்தாரின் வீட்டிற்கோ அல்லது வேறு எங்காவதோ செல்ல விரும்பினால், ஐரோகா மரத்தினால் செதுக்கப்பட்ட ஒரு சிறு படகுக்குள் ஏறுகின்றனர்.
பெரும்பாலான குடும்பங்கள் அநேக சிறு படகுகளை வைத்திருக்கின்றனர்—ஒன்று அப்பாவிற்கு, ஒன்று அம்மாவிற்கு, சிலசமயங்களில் ஒன்று பிள்ளைகளுக்கு. சிறு வயதிலேயே பிள்ளைகள் படகோட்ட கற்றுக்கொள்கின்றனர். ஐந்து வயதுக்குள்ளாக, ஒரு படகை ஒரு பிள்ளையால் தனியாக சமாளிக்க முடியும். விரைவில் ஒரு சிறிய மீன்பிடிக்கும் வலையை படகில் நின்றுகொண்டு வீசுமளவுக்கு அவனோ அவளோ நம்பிக்கை பெறக்கூடும். சில இளைஞர்கள் தங்களது சிறு படகுகளில் தலைகீழாக நின்று வருகையாளர்களின் கவனத்தைக் கவருவதை அனுபவித்து மகிழ்கின்றனர்.
கான்வியேவின் மிதக்கும் மார்க்கெட்டில், வியாபாரிகள், பெரும்பாலும் பெண்கள், தங்களது சிறுபடகுகளில் தங்களுக்கு முன்பாக விற்பனைப் பொருட்களை—வாசனைத் திரவியங்கள், பழவகைகள், மீன், மருந்து, விறகு, பீர் மற்றும் ரேடியோக்களைக்கூட—குவித்து வைத்துக்கொண்டு உட்கார்ந்திருக்கின்றனர். உஷ்ணப் பிரதேச சூரிய ஒளி படாமலிருக்க பெரிய விளிம்புகளுள்ள வைக்கோல் தொப்பிகளை அணிந்துகொண்டு, வாங்குவதற்கு தங்களது சிறுபடகுகளை ஓட்டிவரும் மற்றவர்களுக்கு விற்பனை செய்கின்றனர். சிலசமயங்களில் விற்பனை செய்வோர் இளம் பெண்களாக இருக்கின்றனர். அவர்களது வயதால் வஞ்சிக்கப்படாமலிருங்கள்! வியாபாரிகளுக்குரிய புத்திசாலித்தனமான பேரப் பேச்சின் கலையை சிறு வயதிலேயே அவர்கள் கற்றுக்கொள்கின்றனர்.
பெண்கள் மார்க்கெட்டில் வாங்கிக்கொண்டும் விற்பனை செய்துகொண்டும் இருக்கும் சமயத்தில், ஆண்கள் மீன் பிடிக்கும் வேலையில், அல்லது இன்னும் சரியாக சொன்னால் மீன் வளர்ப்பில் ஈடுபடுகின்றனர். மீன் பிடிக்க அவர்கள் பயன்படுத்தும் முறை, சேறு நிறைந்த குளத்தின் படுகைக்குள் நூற்றுக்கணக்கான கிளைகளை குத்துவதை உட்படுத்துகிறது; இது அடர்த்தியான குச்சிகள் நிரம்பிய காட்டை உண்டாக்குகிறது. அழுகும் கிளைகளை சாப்பிட மீன் கூட்டமாக வருகிறது. சில நாட்களுக்குப் பின் அந்த ஆட்கள் மீன்களைப் பிடிப்பதற்காக தங்கள் வலைகளுடன் திரும்புகின்றனர்.
மறைவிடமாக இருந்தது சுற்றுலா பயணிகளைக் கவரும் இடமாக இருக்கிறது
கான்வியேவைச் சேர்ந்த டாஃபினூ மக்கள், “தண்ணீரின் ஜனங்கள்” என்பதாக இப்போது அழைக்கப்படும் விதமாகவே எப்போதும் இருந்ததில்லை. 18-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், அண்டை ஆப்பிரிக்க ராஜ்யத்தின் துன்புறுத்துதலிலிருந்து தப்பிப்பதற்காக ஏரிக்கும் சதுப்பு நிலங்களுக்கும் அவர்கள் தப்பி ஓடினர். கான்வியே என்ற பெயர்தானே இந்தச் சரித்திரத்தை வெளிப்படுத்துகிறது என்பதாக கல்விமான்கள் சொல்கின்றனர்; ஏனெனில், டாஃபின் மொழியில் கான் என்ற வார்த்தை “நாங்கள் காப்பாற்றப்பட்டிருப்போர்” என்பதாக மொழிபெயர்க்கப்படலாம்; வியே என்ற வார்த்தை “சமுதாயம்” என்பதை அர்த்தப்படுத்துகிறது. இவ்வாறு, ஏரி நகரியங்களின் தலைநகரான இதனுடைய பெயர் இந்த விதமாக தோராயமாக மொழிபெயர்க்கப்படலாம்: “சமாதானத்தை கண்டடைந்திருக்கும் ஜனங்களடங்கிய சமுதாயம்.”
நாகூயே ஏரியைச் சுற்றி உள்ள சதுப்பு நிலப்பகுதியில் தப்பித்துக்கொள்வதற்காக சென்றது திறம்பெற்ற தந்திரமாக இருந்தது; ஏனெனில், எதிராளி ராஜ்யத்தின் மத நம்பிக்கைகள், தண்ணீருக்குள்ளோ வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்படும் நிலையிலுள்ள இடங்களிலோ துணிந்துசெல்ல எந்த வீரரையும் அனுமதிக்கவில்லை. ஆகவே ஏரி ஜீவாதாரத்தையும் அளித்தது, எதிராளியிடமிருந்து பாதுகாக்கும் ஓர் இடமாகவும் இருந்தது. இப்போது பிரபலமாயிருக்கும், அநேக சுற்றுலா பயணிகள் தங்கள் மோட்டார் படகுகளில் சென்று பார்க்கும் இந்தச் சமுதாயம், ஒரு காலத்தில் பதுங்குவதற்கான இடமாக இருந்ததென்பது பொருத்தமற்று இருக்கிறது.