இளைஞர் கேட்கின்றனர்
மற்ற இளைஞர் ஏன் எல்லா விதமான கேளிக்கைகளையும் அனுபவிக்கின்றனர்?
“ஜாலியா இருக்கணுங்கறதுதான் எங்களுக்கு விருப்பம், ஆனா அது அவ்வளவு சுலபம் இல்லை,” என்பதாக 15 வயதான ஜாஸன் புகார் செய்தான்.
முக்கியமாக நீங்கள் இளைஞராக இருக்கும்போது ஜாலியாக இருக்க வேண்டுமென்று விரும்புவது இயல்பான ஒன்றுதான்! பெரும்பாலான இளைஞர்களுக்கு, ஜாலியாக இருப்பது சாப்பிடுவதைப் போலவும் தூங்குவதைப் போலவும் அவ்வளவு முக்கியமானது. தங்கள் சகாக்களாலும் மக்கள் தொடர்பு சாதனத்தாலும் உந்துவிக்கப்பட்டவர்களாய், பல்வகைப்பட்ட இன்பக்கேளிக்கை நடவடிக்கைகளை இளைஞர் ஆர்வத்தோடு நாடுகின்றனர். ஒரு சுற்றாய்வின்படி, நண்பர்களை சந்திப்பது, டிவி பார்ப்பது, சினிமாக்களுக்குச் செல்வது, பார்ட்டிகளை நடத்துவது, நடனமாடுவது ஆகியவை பருவவயதினரின் பிரியமான அந்திநேர பொழுதுபோக்குப் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றிருந்தன. வாசிப்பது, ஆட்டங்கள் மற்றும் போட்டி விளையாட்டுகளில் பங்கேற்பது, பாட்டுகளைக் கேட்பது ஆகியவையும்கூட பொதுவில் விரும்பப்பட்டவையாய் இருந்தன.
இவ்வளவதிகமான கேளிக்கை செயல்களை வைத்துக்கொண்டு, ஜாஸனைப் போன்ற சில இளைஞர் ஏன் போதுமான கேளிக்கையைப் பெறுவதில்லை என்று உணருகிறார்கள் என்பதை ஒருவேளை வயதுவந்தவர்கள் புரிந்துகொள்ள முடியாதவர்களாய் இருக்கலாம். ஆனால் சரியாகவே அதைத்தான் சில கிறிஸ்தவ இளைஞர் வலியுறுத்துகின்றனர்! யெகோவாவின் சாட்சிகளில் ஒருவனான கேசி என்ற இளைஞன் இவ்வாறு தெரியப்படுத்தினான்: “ஸ்கூல்ல இருக்கிற உங்க ஃப்ரென்ட்ஸ் எல்லாரும் பார்ட்டிகள் வெக்கிறதையும் காரியங்களைச் செய்யறதையும் நீங்கள் பாக்கும்போது உண்மையிலேயே தனித்துவிடப்பட்டதுபோல தோனும்.” ஆனால் சூழ்நிலை உண்மையிலேயே அந்தளவுக்கு மோசமானதாக இருக்கிறதா?
சந்தோஷமாக நேரம் கழிப்பதை பைபிள் தடைசெய்கிறதா? நிச்சயமாகவே இல்லை. பைபிள் யெகோவாவை ‘நித்தியானந்த தேவன்’ என்பதாக அழைக்கிறது. (1 தீமோத்தேயு 1:11) ஆகவே, “ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு; . . . அழ ஒரு காலமுண்டு, நகைக்க ஒரு காலமுண்டு; புலம்ப ஒரு காலமுண்டு, நடனம்பண்ண ஒரு காலமுண்டு” என்று சாலொமோன் ராஜா சொன்னது உங்களுக்கு ஆச்சரியமாய் இருக்கக்கூடாது. (பிரசங்கி 3:1, 4) “நகைக்க” என்று இங்கே சொல்லப்பட்டிருக்கும் வார்த்தைக்கும் அதற்கு தொடர்பான வார்த்தைகளுக்குமான மூல எபிரெய வார்த்தை, ‘ஆடிப்பாடுவது,’ ‘விளையாடுவது,’ ‘கேளிக்கை செய்வது,’ ‘வேடிக்கை காட்டுவது,’ ‘இன்பமாய் பொழுதைக் கழிப்பது’ ஆகியவற்றையும் குறிக்கக்கூடும்.—2 சாமுவேல் 6:21; யோபு 41:5; நியாயாதிபதிகள் 16:25; யாத்திராகமம் 32:6, NW; ஆதியாகமம் 26:8, NW.
பைபிள் காலங்களில், இசைக் கருவிகளை வாசிப்பது, பாடுவது, நடனமாடுவது, சம்பாஷிப்பது மற்றும் விளையாடுவது போன்ற பல விதமான கட்டியெழுப்பும் செயல்களை கடவுளுடைய ஜனங்கள் மகிழ்ந்தனுபவித்தார்கள். விருந்துகளுக்கும் மகிழ்ச்சிகரமான கூட்டுறவிற்குமான விசேஷ சமயங்களும் அவர்களுக்கு இருந்தன. (எரேமியா 7:34; 16:9; 25:30; லூக்கா 15:25) ஏன், இயேசு கிறிஸ்துதானே திருமண விழா ஒன்றிற்கு சென்றிருந்தார்!—யோவான் 2:1-10.
ஆகவே, கட்டியெழுப்பும் கேளிக்கை கிறிஸ்தவ இளைஞர்களுக்கிடையே இன்று தடை செய்யப்படுவதில்லை. உண்மையில் பைபிள் இவ்வாறு சொல்கிறது: “வாலிபனே! உன் இளமையிலே சந்தோஷப்படு, உன் வாலிப நாட்களிலே உன் இருதயம் உன்னைப் பூரிப்பாக்கட்டும்.” எனினும் சாலொமோன் இந்த வார்த்தைகளைப் பின்தொடர்ந்து ஓர் எச்சரிக்கையைக் கொடுக்கிறார்: “ஆனாலும் இவையெல்லாவற்றினிமித்தமும் தேவன் உன்னை நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறி.” (பிரசங்கி 11:9) ஆம், நீங்கள் தெரிவு செய்யும் காரியங்களுக்காக கடவுளுக்கு முன்பாக பொறுப்பாளிகளாக இருக்கிறீர்கள். ஆகையால் பொழுதுபோக்கைக் குறித்ததில் நீங்கள் ‘ஞானமற்றவர்களைப்போல் நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடக்க வேண்டும்.’ (எபேசியர் 5:15, 16) காரணம்? அநேக இளைஞர் இந்த விஷயத்தில் மிகவும் தரம்குறைந்த தெரிவுகளைச் செய்கிறார்கள்.
கேளிக்கை கட்டுப்பாட்டை மீறிச் செல்லும்போது
பைபிள் காலங்களில் என்ன நடந்தது என்பதை எண்ணிப்பாருங்கள். பொழுதுபோக்கு என்று வந்தபோது இஸ்ரவேலர்களில் சிலர் சமநிலையைக் குறித்த உணர்வனைத்தையும் இழந்துவிட்டனர்; முழு இரவும் நடந்த கட்டுப்பாடற்ற விருந்துகளைக் கொண்டாடினர்! தீர்க்கதரிசியாகிய ஏசாயா இவ்வாறு சொன்னார்: “சாராயத்தை நாடி அதிகாலமே எழுந்து, மதுபானம் தங்களைச் சூடாக்கும்படி தரித்திருந்து, இருட்டிப்போகுமளவும் குடித்துக்கொண்டேயிருக்கிறவர்களுக்கு ஐயோ! அவர்கள் சுரமண்டலத்தையும், தம்புருவையும், மேளத்தையும், நாகசுரத்தையும், மதுபானத்தையும் வைத்து விருந்துகொண்டாடுகிறார்கள்.” ஒன்றாக சேர்ந்து உணவையும் இசையையும் நடனத்தையும் அனுபவிப்பது தவறாக இருந்தது என்பதில்லை. ஆனால் இப்படிப்பட்ட களியாட்டுக்காரர்களைக் குறித்து ஏசாயா இவ்வாறு சொல்கிறார்: ‘கர்த்தரின் கிரியையை அவர்கள் நோக்குகிறதில்லை.’—ஏசாயா 5:11, 12.
இன்றுள்ள அநேக இளைஞர் இதைத்தான் செய்கிறார்கள்—பொழுதுபோக்கை நாடும்போது அவர்கள் கடவுளைப் பொருட்படுத்துவதே இல்லை. “கேளிக்கைக்காக” சிலர், திருமணத்திற்கு முன்பு பாலுறவு, நாசச்செயல், போதைப்பொருள் துர்ப்பிரயோகம் மற்றும் பிற அஜாக்கிரதையான நடத்தை ஆகியவற்றில் ஈடுபட்டு, தெய்வீக தராதரங்களை துணிச்சலுடன் அவமதித்து மீறுகின்றனர். எனினும், மற்ற இளைஞர்களின் விஷயத்தில், அவர்கள் உண்மையிலேயே துன்மார்க்கராய் இருக்க முயற்சி செய்வதில்லை. ஆனால் காரியங்களை மிதமாய் செய்யவும் மிதமிஞ்சியதைத் தவிர்க்கவும் தவறுகின்றனர். (நீதிமொழிகள் 23:20; 1 தீமோத்தேயு 3:11, NW) ஆகவே இன்பமாய் பொழுதைக் கழிப்பதற்காக அவர்கள் ஒன்றுசேரும்போது காரியங்கள் அவர்களது கட்டுப்பாட்டைமீறி சென்றுவிடுகின்றன.—ஒப்பிடுக: 1 கொரிந்தியர் 10:6-8.
சமீபத்தில் சில இளைஞர்களிடம் “இன்று உலகப்பிரகாரமான பார்ட்டிகளில் என்ன நடக்கிறது?” என்பதாக விழித்தெழு! கேட்டது. ஒரு பருவவயது பெண் இவ்வாறு பதிலளித்தாள்: “போதைப்பொருள், குடிவெறி. அதுதான் உண்மையிலேயே நடக்கிறது.” தன் பள்ளியில் படிக்கும், பார்ட்டிகளுக்கு செல்லும் பையன்கள் சிலரைக் குறித்து ஆன்ட்ரூ என்ற இளைஞன் இவ்வாறு சொன்னான்: “அவர்கள் பெருமிதங்கொள்வதெல்லாம் எவ்வளவு குடித்தார்கள் என்பதைப்பற்றிதான்.” “ஓர் உலகப்பிரகாரமான பார்ட்டி ஏறத்தாழ எப்போதுமே மோசமான காரியங்களைக் கொண்டிருக்கிறது” என்று சொல்லும் அளவிற்கு ஜாஸன் சென்றான். “களியாட்டுகள்” அல்லது “கட்டுப்பாடற்ற விருந்துகள்” பைபிளில் கண்டனம் செய்யப்படுவதன் காரணமாக, அப்படிப்பட்ட நடத்தைகளைக் கொண்டிருக்கும் சமூக விருந்துகளை தேவபயமுள்ள இளைஞர் தவிர்க்கின்றனர்.—கலாத்தியர் 5:21; பயிங்டன்.
தீங்கற்றதாக தோன்றும் பொழுதுபோக்கு வகைகளிலும்கூட ஆபத்துகள் பதுங்கியிருக்கலாம். உதாரணத்திற்கு, இன்றுள்ள மிகப் பிரபலமான சினிமாக்களில் பெரும்பான்மையானவை, நிர்வாணம், ஒளிவுமறைவற்ற பாலுறவு, வெறுப்பூட்டும் வன்முறை ஆகியவற்றை சிறப்பித்துக் காண்பிக்கின்றன. பிரபலமான பாட்டுகள் அடிக்கடி ஆபாச வார்த்தைகளைக் கொண்டுள்ளன. ராக் இசைநிகழ்ச்சிகள், போதைப்பொருள் துர்ப்பிரயோகமும் அமளியும் வன்முறையும் காணப்படும் இடங்களாய் பொதுவாக இருக்கின்றன. a
கூடாது என்று பெற்றோர்கள் சொல்லும்போது
உண்மையைச் சொன்னால்? நீங்கள் ஒரு கிறிஸ்தவராக இருந்தால், உங்கள் சகாக்கள் மகிழ்ந்தனுபவித்துச் செய்யும் காரியங்கள் எல்லாவற்றையும் நீங்கள் நிச்சயமாகவே செய்ய முடியாது. என்னயிருந்தாலும், இயேசு தம் சீஷர்கள் ‘உலகத்தாராயிருக்க மாட்டார்கள்’ என்பதாக சொன்னார்; மற்ற ஜனங்களிலிருந்து வித்தியாசமாய் இருப்பதை அது அர்த்தப்படுத்துகிறது. (யோவான் 15:19) உங்கள் பெற்றோர் தேவபயமுள்ளவர்களாக இருந்தால், இந்த உண்மையை தெளிவாகவே அறிந்திருக்கிறார்கள். ஆகவே சில சமயங்களில், உங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற ஆர்வத்தினால், சில காரியங்களை—மற்ற இளைஞர் செய்வதற்கு அனுமதிக்கப்படும் காரியங்களை—நீங்கள் செய்வதை உற்சாகப்படுத்தாமல் இருக்கலாம் அல்லது கண்டிப்புடன் தடை செய்யலாம். இது ஏற்றுக்கொள்வதற்கு எப்போதுமே சுலபமானதல்ல. “ஜனங்கள் ஜாலியாக இருக்கவே விரும்புகின்றனர்!” என்பதாக ஒரு பருவவயது பெண் அழுத்திச் சொன்னாள். “நம் பெற்றோர் இளைஞர்களாய் இருந்தபோது கேளிக்கையை அனுபவித்தனர், ஆனால் எங்களைப் பூட்டிவைக்க அவர்கள் விரும்புவதாக சில சமயங்களில் தோன்றுகிறது.”
அடிப்படையில் உங்கள் பெற்றோரது கருத்துக்களை நீங்கள் பகிர்ந்துகொண்டாலும்கூட, இப்படிப்பட்ட காரியங்களில் அவர்களது ஆலோசனையைப் பின்பற்றுவது ஒருவேளை சுலபமானதாக இருக்காது. விளையாட்டுவீரன்போல் தோற்றமளித்த இளைஞன் ஒருவன், நாம் அவனை ஜாரட் என்று அழைப்போம், இவ்வாறு நினைவுகூருகிறான்: “பள்ளி அணியிலே கூடைப்பந்து விளையாட விரும்பினேன். அநேகம்பேர் விளையாடச் சொல்லி என்னை வற்புறுத்திக்கொண்டிருந்தார்கள், அது ஏதோவொரு விதத்தில் என்னை சங்கடப்படுத்தியது. ஆனால் என் பெற்றோருடன் நான் பேசினேன்.” ‘கெட்ட கூட்டுறவின்’ ஆபத்துக்களை ஜாரட்டின் பெற்றோர் சுட்டிக்காண்பித்து, அவனது விளையாட்டு நடவடிக்கைகள் எந்தளவு நேரமெடுப்பவையாய் இருக்கும் என்பதை நினைவுபடுத்தினர். (1 கொரிந்தியர் 15:33, NW) “அதோடு முடிந்தது கதை” என்று ஜாரட் வருத்தத்துடன் சொன்னான். அவன் தன் பெற்றோரின் ஆலோசனைக்குக் கீழ்ப்படிந்தான், ஆனால் தன்னால் பந்து விளையாட முடியவில்லை என்பதைக் குறித்து இன்னும் வருத்தமாக உணர்ந்தான்.
‘என்னால் அனுபவிக்க முடியவில்லையே!’
அதேபோல், உங்கள் சூழ்நிலை என்னவாக இருந்தாலும், உங்கள் பள்ளித் தோழர்கள் தாங்கள் ஜாலியாக இருந்த சமயங்களைக் குறித்து உங்களிடம் பெருமையாக சொல்வதைக் கேட்கும்போது நீங்களும் ஒருவேளை எப்போதாவது உற்சாகமிழந்து போவீர்கள். ‘ஏன் மற்ற இளைஞர் மாத்திரம் எல்லா விதமான கேளிக்கைகளையும் அனுபவிக்கின்றனர்?’ என்பதாக நீங்கள் ஒருவேளை கேட்கலாம். ஆம், உங்களால் அவற்றை அனுபவிக்க முடியவில்லை என்ற உணர்ச்சியை நீங்கள் எவ்வாறு மேற்கொள்ளலாம்?
சங்கீதம் 73-ஐ நீங்கள் வாசித்து, பைபிள் எழுத்தாளரான ஆசாபின் அனுபவத்தைத் தியானிப்பது ஒருவேளை உதவலாம். வசனங்கள் 2, 3-ல் அவர் இவ்வாறு அறிக்கையிடுகிறார்: “ஆனாலும் என் கால்கள் தள்ளாடுதலுக்கும், என் அடிகள் சறுக்குதலுக்கும் சற்றே தப்பிற்று. துன்மார்க்கரின் வாழ்வை நான் காண்கையில், வீம்புக்காரராகிய அவர்கள்மேல் பொறாமைகொண்டேன்.” ஆம் ஆசாப் கட்டுப்பாட்டுடன் வாழ்ந்துவந்த அதே சமயத்தில், மற்றவர்கள் தாங்கள் செய்ய விரும்பிய அனைத்தையுமே—தெளிவாகவே எந்த மோசமான விளைவுகளுமின்றி—செய்ய முடியும் என்பதாக பெருமைபாராட்டினர். அவர்களுக்கு ஏராளமான ஆஸ்தி இருந்ததாகவும் அது எப்போதுமே பெருகிவந்ததாகவும் தோன்றியது. (வசனம் 12) ஆகவே ஆசாப் அந்தளவுக்கு உற்சாகமிழந்துபோனதன் காரணமாக அவர் இவ்வாறு கூறினார்: “நான் விருதாவாகவா என்னையே தூய்மையாக வைத்து, பாவம் செய்யாமல் இருந்திருக்கிறேன்?”—சங்கீதம் 73:13, டுடேஸ் இங்லிஷ் வர்ஷன்.
நல்லவேளையாக, ஆசாப் யோசனையின்றி மூடத்தனமாக ஏதோவொன்றை செய்வதற்கு முன்பாக தன் உணர்வுகளுக்கு வந்தார். ‘தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்திற்கு’ அவர் விஜயம் செய்தார், கட்டியெழுப்பும் அச்சுற்றுப்புறங்களில் காரியங்களை மிகவும் ஆழ்ந்து சிந்தித்தார். சீக்கிரத்தில், தேவபக்தியற்ற இன்பப்பிரியர்களைக் குறித்து குறிப்பிடத்தக்க இந்த முடிவுக்கு அவர் வந்தார்: “நிச்சயமாகவே நீர் அவர்களைச் சறுக்கலான இடங்களில் நிறுத்தி, பாழான இடங்களில் விழப்பண்ணுகிறீர்.”—சங்கீதம் 73:17, 18.
இதையேதான் இன்பத்தை நாடித்தேடும் உங்கள் சகாக்களில் அநேகரை குறித்தும் சொல்லலாம். அவர்கள் ஜாலியாக இருப்பதாய் இப்போது ஒருவேளை நினைக்கலாம். ஆனால் பாவத்தினால் வரும் சந்தோஷம் அநித்தியமானது! (எபிரெயர் 11:25) பைபிள் தராதரங்களைப் பின்பற்றாததன் காரணமாக, அவர்கள் “சறுக்கலான இடங்களில்” நின்றுகொண்டிருக்கிறார்கள், திடீரென்று எச்சரிக்கையில்லாமல் படுமோசமாக நொறுக்கப்படும் அபாயத்திலும் தொடர்ந்து இருக்கிறார்கள். கடவுளுடைய வார்த்தை இவ்வாறு அறிவிக்கிறது: “மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.” (கலாத்தியர் 6:7) ஏன், “கேளிக்கை” துடுக்குச் செயல்களின் காரணமாக அகால மரணம், பால்வினைநோய், வேண்டப்படாத கர்ப்பம் அல்லது சிறைவாசம் ஆகியவற்றை ஏற்கெனவே எதிர்ப்பட்டிருக்கும், உங்களுக்கு ஒத்த வயதுள்ள இளைஞர்களைக் குறித்து நீங்கள் நிச்சயமாகவே கேள்விப்பட்டிருக்கிறீர்கள். அப்படிப்பட்ட காரியங்களில் ஈடுபடாமல் இருப்பதற்கு உங்களுக்கு இது பயனளிப்பதாய் இருக்கிறதல்லவா?—ஏசாயா 48:17.
“உன் மனதைப் பாவிகள்மேல் பொறாமைகொள்ள விடாதே; நீ நாடோறும் கர்த்தரைப் பற்றும் பயத்தோடிரு. நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண்போகாது” என்று சொல்லும்போது சாலொமோன் நல்ல அறிவுரையை வழங்குகிறார். (நீதிமொழிகள் 23:17, 18) ஆம், பூமியிலே பரதீஸில் என்றென்றும் வாழ்வதற்கான ஒருவருடைய நம்பிக்கையை இழக்கவைக்கும் எந்த “ஜாலியான” சமயத்தையும் அனுபவிக்காமல் இருப்பதே மேலானது.
இதற்கிடையில், எப்போதாவது உண்மையிலேயே ஜாலியாக இருப்பதற்கான உங்களது இயல்பான ஆசையை நீங்கள் எவ்வாறு தீர்த்துக்கொள்ளலாம்? அதைச் செய்வதற்கு பாதுகாப்பான கட்டியெழுப்பும் வழிகள் இருக்கின்றனவா? பணமும் மற்ற வள ஆதாரங்களும் குறைவாக இருந்தால் அப்போது என்ன? உலகெங்கிலுமுள்ள இளைஞர்களிடம் சில ஆலோசனைகளையும் கருத்துகளையும் விழித்தெழு! கேட்டது. இந்தத் தொடரின் இனிவரும் கட்டுரையில் இவை கலந்தாலோசிக்கப்படும்.
[அடிக்குறிப்பு]
a டிசம்பர் 22, 1995 பிரதியில் இடம்பெற்றுள்ள “இளைஞர் கேட்கின்றனர் . . . ராக் இசைநிகழ்ச்சிகளுக்கு நான் போகலாமா?” என்ற கட்டுரையைக் காண்க.
[பக்கம் 26-ன் படம்]
கேளிக்கை என்பதாக உலகம் அழைக்கும் ஒன்றில் உங்களால் பங்குகொள்ள முடியவில்லை என்பதன் காரணமாக நீங்கள் ஒதுக்கப்பட்டதுபோல் உணர வேண்டுமா?