ஆஸ்திரேலியாவின் “பாடும் கோபுரம்”
ஆஸ்திரேலியாவிலிருந்து விழித்தெழு! நிருபர்
தலைசிறந்த தரமுள்ள பலவகையான இசைக்கருவிகளை உண்டாக்க, கலையும் தொழில்நுட்பமும் அறிவியலும் இசைத்துறையில் அடிக்கடி இணைந்திருக்கின்றன. ஆனால், அன்டோனியஸ் ஸ்ட்ராடிவேரியஸின் வயலின்களும், டேயோபால்ட் போய்மின் புல்லாங்குழல்களும் நன்கு அறியப்பட்டவையாக ஒருவேளை இருந்தாலும், கம்பீரமான கார்ரிலோன் பொதுவில் அவ்வளவாக அறியப்பட்டில்லை.
ஆனால் கார்ரிலோன் என்பது என்ன, அது எவ்வாறு இசைக்கப்படுகிறது? உலகத்தில் இருக்கும் மிகப் பெரிய கார்ரிலோன்களில் ஒன்றை சென்று பார்ப்பதுதானே அறிவொளியூட்டுவதாய் இருக்கும், மேலும் அதன் தனித்தன்மையுடைய இசையின்பேரில் நம் போற்றுதலை ஒருவேளை அதிகரிக்கும்.
பிரமாண்டமான ஒரு கருவி
கார்ரிலோன் உலகத்தில் இருக்கும் மிகப் பெரிய இசைக்கருவிகளில் ஒன்று, அது தொன்மை வாய்ந்தது. அது பொதுவாக ஒரு மணிக்கோபுரத்தில் பொருத்தப்படுகிறது, ஆகவே ஒரு “பாடும் கோபுரம்” என்பதாக பொருத்தமாகவே அழைக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தலைநகரமான கேன்பராவில் உள்ள கார்ரிலோனும் மணிக்கோபுரமும், 1963-ல் கிரேட் பிரிட்டன் அரசாங்கத்திடமிருந்து வந்த ஒரு நிறைவுவிழா பரிசாக இருந்தது. 50 வருடங்களுக்கு முன்பு அந்த நகரம் நிறுவப்பட்டு பெயரிடப்பட்டதை நினைவுகூருவதற்காக அது அளிக்கப்பட்டது. ஆஸ்பன் தீவில் கண்கவரும் லேக் பர்லி ஜிரிஃபினின் நடுவில் இந்தக் கார்ரிலோன் உள்ளது.
இந்த 50-மீட்டர் உயரமுள்ள மணிக்கோபுரம் மூன்று முக்கோண வடிவுள்ள உட்குழித் தூண்களின் (shafts) ஒரு தொகுதியைக் கொண்டுள்ளது, ஒவ்வொன்றும் சமப்பங்குள்ள நடு முக்கோணம் ஒன்றின் பக்கத்தில் வரிசைப்படுத்தப்பட்டிருக்கிறது. உச்சியிலும் மூன்று தூண்களுக்கு இடையேயும் கார்ரிலோனை தாங்கக்கூடிய தளங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
கோபுரத்தில் உள்ள எலிவேட்டர், நம்மை முதல் தளத்திற்கு கொண்டு செல்கிறது. அங்கே ஆர்கன்களுக்கு ஒத்த இரண்டு பெரிய க்ளேவியர்களை அல்லது கீபோர்டுகளை நாம் பார்க்கிறோம். முதலாவது, கார்ரிலோனியர் என்று அழைக்கப்படும் இசைப்பவர் இசைத்துப் பழகுவதற்கென்றே உள்ளது. இந்தக் கீபோர்டுகளில் உள்ள குமிழ் நுனியுடைய கோல்கள் (Hammers) சுருதிகூட்டும் கட்டைகளை (Tuning bars) வெறுமனே தட்டுகின்றன.
பழகுவதற்கான இந்தக் கீபோர்டுக்கு கிட்டத்தட்ட பின்புறத்தில் இருப்பதுதான் உண்மையான கார்ரிலோன் க்ளேவியர். இது சாதாரண கீபோர்டு அல்ல, ஏனெனில் கிட்டத்தட்ட இரண்டு சென்டிமீட்டர் விட்டத்தை உடைய பெரிய வட்டமான செந்தூர மரத்தினால் செய்யப்பட்ட சுருதிக்கட்டைகளை அது கொண்டிருக்கிறது. சுருதிக்கட்டைகளின் மேல்வரிசை ஒரு பியானோ அல்லது ஆர்கனின் யாவரறிந்த கருப்புநிற சுருதிக்கட்டைகளைப் பிரதிநிதித்துவம் செய்கின்றன. அவை சுமார் ஒன்பது சென்டிமீட்டருக்கு நீண்டிருக்கின்றன, ஆனால் கீழ்வரிசை (பியானோவின் வெள்ளைநிற சுருதிக் கட்டைகளைப் பிரதிநிதித்துவம் செய்வது) சுமார் 17 சென்டிமீட்டருக்கு நீண்டிருக்கின்றன. எனினும், பியானோவை அல்லது ஆர்கனை வாசிப்பவருக்கு நேரெதிர்மாறாக, கார்ரிலோனை வாசிப்பவர் தன் விரல்களைப் பயன்படுத்தாமல் மூடிய கரங்களால் வாசிக்கிறார். ஆகவேதான், வாசிக்கும்போது மற்ற சுருதிக்கட்டைகளைத் தொடுவதை வாசிப்பவர் தவிர்ப்பதற்கு ஏதுவாக அதிக இடைவெளிகளில் சுருதிக்கட்டைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
உண்மையிலேயே கவரும் ஓர் இயங்குமுறை
பிரதான க்ளேவியரின் மேற்புறத்திலிருந்து, மேல்தளத்திற்கு கம்பிகள் செல்கின்றன, நாலரை ஆக்டேவுகளின் ஒவ்வொரு சுருதிக்கட்டையும் தனித்தன்மைவாய்ந்த இழுவிசை சரிப்படுத்துதலைக் கொண்டுள்ள ஒரு தனி ஸ்டீல் கம்பியுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. இந்த எல்லா கம்பிகளும் எங்கே செல்கின்றன என்பதைக் கண்டுபிடிப்பதற்காக, அடுத்த தளத்திற்கு நாம் எலிவேட்டரில் செல்கிறோம். இங்கே இரண்டு மிகப் பெரிய மணிகள், ஒவ்வொன்றும் சுமார் ஆறு டன் எடையுள்ளவை, கம்பீரமாகத் தொங்குகின்றன. பின்பு, இந்த மணிகளுக்கு இடையே மேலே பார்க்கும்போது, அவற்றுக்கு மேலே இன்னும் 51 மணிகள் தொங்கவிடப்பட்டிருப்பதை நாம் பார்க்கிறோம். இவை பெரிய மணியிலிருந்து வெறுமனே ஏழு கிலோகிராம் எடையுள்ள மிகச் சிறிய மணிவரையாக ஏறுவரிசையில் மேலே தொங்கவிடப்பட்டிருக்கின்றன.
சில மணிகளின் உரத்த மேற்சுரத்தினால் (dominant harmonics) எப்போதாவது உண்டாகக்கூடிய எந்த ஒலியியல் தொந்தரவுகளையும் தவிர்ப்பதற்காக எல்லா மணிகளும் கவனமாக அமைக்கப்பட்டிருக்கின்றன. உட்புறத்தில் மென்மையான உலோக நாவுடனுள்ள ஒவ்வொரு மணியும், கீழே உள்ள க்ளேவியரின் ஒவ்வொரு சுருதிக்கட்டையுடனும் இணைக்கப்பட்டிருக்கும் ஸ்டீல் கம்பியினால் செயற்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு கார்ரிலோனியரின் தனிப்பட்ட தொடுதலுக்கும் அப்போதிருக்கும் வானிலைக்கும் பொருத்தமாயிருக்கும்படி இழுவிசை துல்லியமாக சரிசெய்யப்பட்டிருக்கிறது.
ஆர்வத்தைத்தூண்டும் சில உண்மைகள்
கேன்பரா கார்ரிலோனில் உள்ள மணிகள், இங்கிலாந்தைச் சேர்ந்த ஜான் டேலர் அண்ட் கம்பெனியின் வார்ப்படச்சாலையில் வார்த்து உருவாக்கப்பட்டவை, 20-வது நூற்றாண்டில் பழமையான கலையின் மிகச் சிறந்த உதாரணங்களாக இவை இருக்கின்றன. ஏரியின் தண்ணீரைத் தாண்டியும் அருகாமையிலிருக்கும் தோட்டங்கள் மற்றும் பூங்காக்களினூடேயும் இம்மணிகள் அவற்றின் இன்னிசையை ஒலிக்கச்செய்ய முடியும்.
இந்தக் கார்ரிலோன் உலகத்திலேயே மிகப் பெரியதல்ல, ஆனால் அதன் 53 மணிகளுடன் மிகப் பெரிய கார்ரிலோன்களில் ஒன்றாக கருதப்படுகிறது, ஏனெனில் பெரும்பான்மையான கார்ரிலோன்கள் 23-லிருந்து 48 மணிகளைக் கொண்டிருக்கின்றன. எனினும், மிகப் பெரிய கார்ரிலோன் நியூ யார்க் நகரத்தில் உள்ளது. அது 74 மணிகளைக் கொண்டிருக்கிறது. உலகத்திலேயே மிகப் பெரிய சுருதிகூட்டப்பட்ட மணியையும் அது பெற்றிருக்கிறது. இந்த மணி 18 டன்களுக்கும் மேலான எடையுள்ளதாய் இருக்கிறது. லோ F ஷார்ப் சுரத்தில் ஒலிக்கும் கேன்பரா கார்ரிலோனோடு ஒப்பிடும்போது, இது லோ C சுரத்தில் ஒலிக்கிறது.
ஆக இப்போது கார்ரிலோனியர் ஒருவரால் அளிக்கப்படும் கச்சேரி ஒன்றை நாம் அனுபவிப்போமாக. கோபுரத்தைச் சுற்றியுள்ள தோட்டத்தில் நாம் அமரலாமா? இங்கே நாம் “பாடும் கோபுரத்தின்” அற்புதமான இசையைக் கேட்பது மாத்திரம் அல்லாமல் அதே சமயத்தில் நம்மைச் சுற்றியிருக்கும் சிருஷ்டிப்பின் அற்புதங்களையும் கண்டு களிக்கலாம். சாயங்கால காற்றின் அமைதியும் மணிகளின் மலைப்புண்டாக்கும் உயரமும் ஒன்று சேர்ந்து மென்னயம் வாய்ந்ததாகத் தோன்றும் இசையை உருவாக்கி, கடவுளுடைய பரிசாகிய இசைக்காக நன்றியுணர்ச்சியால் நம் இருதயங்களை நிரப்புகிறது.
[பக்கம் 25-ன் படம்]
கோபுரத்தில் உள்ள மணிகள்