நீங்கள் தொலைபேசியில் பேசும் முறை எவ்வாறுள்ளது?
“குடும்பப் பாசம், உடல்நலம், வேலையின்மீது பற்று ஆகியவற்றோடுகூட, வாழ்க்கை இன்பம், நம் சுயமரியாதையை நிலைநாட்டுவது மற்றும் வளர்ப்பது ஆகியவற்றுக்கு, தயவான உரையாடல்களைப் போல் வேறு எதுவாகிலும் மிக அதிகமாய் உதவுமா?”
அக் கேள்வியைக் கேட்பதன் மூலம், மனிதனைப் படைத்த சமயத்தில் அவனுக்குக் கொடுக்கப்பட்ட ஒரு திறமையாகிய, வாய்மொழி பேச்சுத்தொடர்பிலிருந்து பெறக்கூடிய தனிப்பட்ட இன்பம் மற்றும் திருப்தி ஆகியவற்றின்மீது அமெரிக்காவைச் சேர்ந்த சமீப காலத்திய ஆசிரியர் மற்றும் கல்வியாளர் லூசி எலியட் கீலர் உயர் மதிப்பை வைத்தார்.—யாத்திராகமம் 4:11, 12.
கடந்த 12 பத்தாண்டுகளுக்கும் மேலாக, சரளமான மனிதப் பேச்சில் அதிகரிப்புக்கு மிகவும் உறுதுணையாய் இருந்துவருவது அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்லின் கண்டுபிடிப்பாகிய தொலைபேசியாகும். இன்று, பூமியில் வாழும் நூறுகோடிக்கணக்கானோருக்கு, தொழிலுக்காகப் பயன்படுத்தப்படுகிறதோ, அல்லது இன்பத்துக்காகப் பயன்படுத்தப்படுகிறதோ, மனிதருக்கிடையே ஒரு முக்கியமான இணைப்பைத் தொலைபேசி அளிக்கிறது.
தொலைபேசியும் நீங்களும்
தொலைபேசியைப் பயன்படுத்துவது எந்தளவுக்கு உங்கள் வாழ்க்கையின் தன்மையை உயர்த்துகிறது? அக் கேள்விக்கு நீங்கள் அளிக்கும் விடையானது அக்கருவியைவிட அதைக் கையாளும் மக்களின்மீது அதிகம் சார்ந்துள்ளது என்பதை நீங்கள் ஒத்துக்கொள்ள மாட்டீர்களா? உண்மையிலேயே, நீங்கள் தொலைபேசியில் பேசும் முறை (manners) எவ்வாறுள்ளது என்ற கேள்வியைக் கேட்பது காலத்துக்குப் பொருத்தமானதாக உள்ளது.
மனப்பான்மை, பேச்சின் தன்மை, செவிகொடுக்கும் திறன் போன்றவற்றைத் தொலைபேசியில் பேசும் முறை உட்படுத்துகிறது. ஒரு தொலைபேசியைப் பயன்படுத்துவது எவ்வாறு என்பதும், தொல்லைதரும் அழைப்புகளைக் கையாளும் வழிகளைப் பற்றிய விஷயமும்கூட பொருத்தமானதாயிருக்கும்.
பிறரைப் பற்றிய சிந்தனையுடன்கூடிய கரிசனை
எல்லா மனிதப் பரிமாற்றத்தைப் பற்றியதில் உண்மையாய் இருப்பதைப்போலவே, நல்ல விதத்தில் தொலைபேசியில் பேசும் முறை பிறருக்கான அக்கறையுணர்விலிருந்து தோன்றுகிறது. அப்போஸ்தலன் பவுல் எழுதினார்: “உனக்கானவைகளை மட்டுமல்லாமல், பிறருக்கான அக்கறைகளையும் நோக்குவாயாக.”—பிலிப்பியர் 2:4, தி நியூ இங்லிஷ் பைபிள்.
“தொலைபேசியில் பேசும் முறை சரியல்லாததற்கு மிகவும் பொதுவாயுள்ள என்ன உதாரணங்களை நீங்கள் கண்டிருக்கிறீர்கள்?” என்ற கேள்வியைக் கேட்டபோது, தன் பட்டியலில் முதலில் இருப்பது, “ ‘மேரி பேசுகிறேன்’ (உங்களுக்கு எத்தனை மேரிகளைத் தெரியும்?) என்று, அல்லது இன்னும் மோசமாக, ‘நான் பேசுகிறேன்,’ அல்லது, ‘யாரென்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்’ என்றெல்லாம் தொலைபேசியில் சொல்லும் அழைப்பவர்கள்” என்று ஓர் அனுபவம் வாய்ந்த தொலைபேசி சுவிட்ச்போர்டு இயக்குநர் பதில் கூறினார். அத்தகைய சிந்திக்காத, ஒருவேளை நல்லெண்ணமுடைய அணுகுமுறைகள் தர்மசங்கடத்துக்கும் பொறுமையின்மைக்கும் காரணமாகலாம். அவ்வியக்குநர் தொடர்ந்தார்: “உங்களைத் தெளிவாக அடையாளப்படுத்துவதன் மூலமாகவும், அதோடு, அழைக்கப்பட்டவருக்குக் கரிசனை காட்டும் வகையில், பேசுவதற்கு வசதிப்படும் நேரம்தானா என்று கேட்பதன் மூலமாகவும், மகிழ்ச்சியான விதத்தில் ஏன் ஒரு தொலைபேசி உரையாடலைத் தொடங்கக்கூடாது?”
நினைவிருக்கட்டும், உங்கள் முகபாவனை காணப்படாதபோதிலும், உங்கள் மனப்பான்மை தெளிவாகத் தெரியும். அது எப்படி? உங்கள் குரல் தொனியின் மூலம். பொறுமையின்மை, சலிப்பு, கோபம், அசட்டை மனப்பான்மை, உள்ளார்ந்த தன்மை, மகிழ்ச்சியான மனநிலை, உதவும் மனப்பான்மை, இதமான உணர்வு—இவையனைத்தும் வெளிக்காட்டப்படுகின்றன. ஒருவர் தடங்கல் செய்யப்படுகையில் கோபப்படுவது ஓர் இயல்பான பிரதிபலிப்பாய் இருக்கலாம் என்பது மெய்தான். நல்ல பேசும் முறையைக் காட்ட வேண்டி, இச் சூழ்நிலையில் பதில் கூறுவதற்குமுன் சற்று நிறுத்தி, உங்கள் குரலுக்குள்ளேயே ஒரு “புன்னகை” சிந்த முயலுங்கள். ஒத்துக்கொள்ளாத ஒரு தொனியைப் பயன்படுத்தாமலே ஒத்துக்கொள்ளாதிருப்பது கூடிய காரியம்.
சிந்தனையோடுகூடிய கரிசனையுடன் ஓர் இனிய குரல் தொனி சேருவது, “பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால்,” “கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி” தெரிவிப்பதற்கு வழி வகுக்கலாம்.—எபேசியர் 4:29.
பேச்சின் தன்மை
ஆம், நாம் பயன்படுத்தும் பேச்சின் தன்மை முக்கியமானது. நீங்கள் பின்வரும் விதிகளை ஒத்துக்கொண்டு அதைப் பின்பற்றுவீர்களா? இயல்பாக, தெளிவாக, விளங்கும் வகையில் பேசுங்கள். முணுமுணுக்காதீர்கள். நெடுந்தொலைவு-அழைப்பில் பேசினாலும்—உரக்கப் பேசாதீர்கள். உங்கள் வார்த்தைகளைத் தெளிவற்ற வகையில் உச்சரிக்காதீர்கள். சுருக்கிக்கூறும் அல்லது எழுத்தின் அசைகளைக் குறைத்துக்கூறும் சீரற்ற பேச்சைத் தவிருங்கள்; அதோடு, “மேலுமாக” அல்லது அதுபோன்ற ‘தேவையற்ற வார்த்தைகளை’ உட்புகுத்தும் பழக்கத்தையும், பின்னால் சென்று பேசும் பழக்கமாகிய, ஒரு வாக்கியத்தை ஆரம்பித்து, இடையில் நிறுத்தி பின்னர் மறுபடியுமாக முதலிலிருந்து பேசும் பழக்கத்தையும் தவிருங்கள், அவை அமைதியைக் குலைப்பதாய் இருந்து எரிச்சலை உண்டாக்கலாம். தொடர்ச்சியாக அசைகளைச் சேர்த்துப் பேசும் மந்தப்பேச்சை விலக்குங்கள். சரியான கருத்து அழுத்தமும் ஏற்ற இறக்கமும் பேச்சை அர்த்தமுள்ளதாக, நயமானதாக, புத்துணர்ச்சியளிப்பதாக ஆக்குகிறது. ஒரு தொலைபேசி உரையாடலின்போது, உண்ணுவது பேச்சுத்தரத்தை உயர்த்தாது, அல்லது நல்ல பேசும் முறையைப் பிரதிபலிக்காது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
நீங்கள் தெரிவுசெய்யும் வார்த்தையைப் பற்றி சிந்தித்துப் பார்ப்பதும் தகுதியானது. பகுத்துணர்வு தேவை. எளிதில் புரிந்துகொள்ளத்தக்க நேரடியான, எளிய வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள். வார்த்தைகளுக்கு மறைபொருட்கள் உள்ளன. அவை தயவான அல்லது கொடிதான, தேற்றுகிற அல்லது கொடூரமான, உற்சாகமூட்டுகிற அல்லது உற்சாகமிழக்கச் செய்கிற தன்மையுடையனவாய் இருக்கலாம். மேலுமாக, ஒருவர் புண்படுத்துபவராய் இராமலே நகைச்சுவையுணர்வுள்ளவராயும், உணர்ச்சியற்று அல்லது கடுகடுப்பாகப் பேசுபவராய் இராமலே உள்ளார்ந்த நேர்மையுடையவராயும், தட்டிக்கழிக்கிறவராய் இராமலே சாதுரியமானவராயும் இருக்கலாம். “தயவுசெய்து” மற்றும் “நன்றி” போன்ற மரியாதையான கூற்றுகள் எப்போதுமே வரவேற்கப்படுபவை. “அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவு சொல்லவேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினபோது, தயவான, கரிசனையான, சாதுரியமான வார்த்தைகளையே மனதில் கொண்டிருந்தார்.—கொலோசெயர் 4:6.
நன்கு செவிகொடுப்பவராயிருங்கள்
நன்கு உரையாடுபவனாய் இருப்பதற்கான வழியென்ன என்பதாக ஓர் இளைஞன் தன் தகப்பனிடம் கேட்டது பற்றிய ஒரு கதை இருக்கிறது. “செவிகொடு, என் மகனே,” என்பதுதான் பதிலாக இருந்தது. “நான் செவிகொடுக்கத்தானே செய்கிறேன்,” “இன்னும் சொல்லுங்கள்” என்றான் அவ்விளைஞன். “சொல்வதற்கு இனி ஒன்றும் இல்லை” என்று தகப்பனார் பதிலுரைத்தார். ஓர் அக்கறையுள்ள, இரக்கமுள்ள செவிகொடுப்போராயிருப்பது நல்ல விதத்தில் தொலைபேசியில் பேசும் முறைக்குத் தேவையான கூட்டுப்பொருளாகும் என்றால் அது மிகையாகாது.
ஓர் எளிய விதியைக் கடைப்பிடிக்கத் தவறுவதானது, தொலைபேசியில் சலிப்பூட்டும் ஓர் ஆளாக உங்களை நோக்குவதில் விளைவடையக்கூடும். அது என்ன? உங்களுக்குத்தான் தனியுரிமை உண்டு என்பதுபோல உரையாடாதீர்கள். ஒரேயடியாக மூழ்கிவிடாதீர்கள், உதாரணமாக, நீங்கள் உரையாடிக்கொண்டிருக்கும் ஏதோ ஒரு சிறிய விஷயத்தில், நிறுத்தாமல் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு விளக்கத்தைச் சொல்லிக்கொண்டே பேசிக்கொண்டிராதீர்கள், அல்லது சாதாரணமான வலி மற்றும் சிறிய உடல்நல பிரச்சினைக்காக ஒரு நீண்ட தனிப்பட்ட வரலாற்றைக் கூற முயலாதீர்கள். மறுபடியும், இது தொடர்பாக, சீஷன் யாக்கோபு கூறின ஒரு பொருத்தமான, சுருக்கமான பைபிள் விதி நமக்கிருக்கிறது. “கேட்பதற்குத் தீவிரியுங்கள் ஆனால் பேசுவதற்குத் தாமதியுங்கள்.”—யாக்கோபு 1:19, ஜெருசலம் பைபிள்.
கரிசனையுடன் முடிப்பது
தொலைபேசியில் பேசும் முறை சம்பந்தப்பட்டதற்குள் வரும் இரு முடிவான கேள்விகளுக்குக் கவனம் செலுத்துவோம். தொலைபேசி உபயோகத்தைக் கையாளும் முறையைப் பற்றி என்ன சொல்லப்படலாம்? வேண்டாத அழைப்பைக் கையாளுவதில் ஆலோசனையாகக் கூறவிருக்கும் வழிகாட்டும் குறிப்புகள் எவையேனும் உள்ளனவா?
தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்கையில், இணைப்பின் மறுபக்கம், தொலைதூரத்திலிருந்து பேசுவதுபோல் விட்டுவிட்டு ஒலி வருகிறதாக எப்போதாவது நீங்கள் கண்டிருக்கிறீர்களா? இது வாய்க்கருகில் வைக்கப்படும் பாகத்துக்குள் பேசும்படியாக, அதாவது உங்கள் உதடுகளிலிருந்து இரண்டு சென்டிமீட்டர் தூரத்தில் அதை வைத்திருக்கும்படியாக உங்களை நினைப்பூட்டவேண்டும். அதோடு, பின்னணி ஓசையைக் கட்டுப்படுத்துவது மரியாதையானது. நீங்கள் ஒருவரை அழைக்கையில், தவறான எண்ணைப் பெற்றுவிடுவதைத் தவிர்க்கும்படியாக கவனமாக டயல் செய்யுங்கள்; உங்கள் அழைப்பை முடிக்கையில், ரிஸிவரை அதன் இடத்தில் மெதுவாக வையுங்கள்.
உங்களுக்குத் தொல்லை தரும் அழைப்புகள் வந்திருக்கின்றனவா? விசனகரமாக, அத்தகைய அழைப்புகள் அதிகரித்துவருகின்றன. கண்ணியமற்ற, பாலுறவு சிந்தனையைத் தூண்டுகிற, அல்லது அசிங்கமான வார்த்தைகளைப் பேசக் கேட்கையில், அதற்குத் தகுந்த பதிலானது—அவ்வழைப்பைத் துண்டித்துவிடுவதுதான். (எபேசியர் 5:3, 4-ஐ ஒப்பிடுக.) அழைப்பவர் தன்னை அடையாளம் காட்ட மறுக்கையிலும் அவ்வாறு செய்வதே தகுதியானதாகும். ஓர் அழைப்பைக் குறித்து உங்களுக்குச் சந்தேகமிருந்தால், “ ‘யார் பேசுவது?’ என்று முன்னொருபோதும் அறிந்திராத ஒரு குரல் கேட்டால், பதில் கூறாதீர்கள்” என்றும், முன்னறிமுகம் இல்லாத ஒருவருடன் உங்கள் திட்டங்களைக் கலந்தாலோசிக்காதீர்கள் என்றும் ஹௌ டு ரைட் அண்ட் ஸ்பீக் பெட்டர் என்ற புத்தகம் சிபாரிசு செய்கிறது.
முடிவாக, நல்ல விதத்தில் தொலைபேசியில் பேசும் முறையைப் பழகிக்கொள்வதற்கு சட்டங்கள் மற்றும் ஒழுங்குகள் அடங்கிய ஒரு நீண்ட பட்டியல் அவசியமில்லை என்பதை அறிவது எவ்வளவு நன்றாயிருக்கிறது! மக்களோடு தொடர்புகொள்ளும் எல்லா விஷயத்திலும் உள்ளதைப்போன்றே, பொதுவாக பொன்விதி என்றழைக்கப்படுவதைப் பொருத்துவதிலிருந்தே இன்பமூட்டும், பலனுள்ள உறவுகள் தோன்றுகின்றன. இயேசு கிறிஸ்து கூறினார்: “ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.” (மத்தேயு 7:12) கிறிஸ்தவர்களுக்கு, பேச்சாகிய பரிசை அளித்தவரை மகிழ்விக்கும் ஆவலும் உள்ளது. சங்கீதக்காரன் ஜெபித்தார்: “என் கன்மலையும் என் மீட்பருமாகிய கர்த்தாவே, என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்தில் பிரீதியாயிருப்பதாக.”—சங்கீதம் 19:14.